Death of Vali | Kishkindha-Kanda-Sarga-22 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அங்கதனையும், தாரையையும் பார்த்துக் கொள்ளும்படி சுக்ரீவனைக் கேட்டுக் கொண்ட வாலி; பொன்னாரத்தை ஒப்படைத்தது; அங்கதனுக்கு உபதேசித்தது; வாலி மாண்டது...
மந்தமான உயிருடன், மந்தமாக சுவாசித்தபடியே எங்கும் தன் பார்வையைச் செலுத்தியவன் {வாலி}, தன் முன் இருந்தவனும், அனுஜனுமான {தம்பியுமான} சுக்ரீவனை முதலில் கண்டான்.(1) வாலி, பிராப்த விஜயமடைந்தவனும் {வெற்றி வாய்த்தவனும்}, பிலவகேஷ்வரனும் {தாவிச் செல்லும் குரங்குகளின் தலைவனும்}, உரையாடத்தகுந்தவனுமான அந்த சுக்ரீவனிடம், சினேகத்துடன் கூடிய தெளிவான சொற்களில் இதைச் சொன்னான்:(2) "சுக்ரீவா, பலத்தால் நேரும் புத்தி மோஹத்தினால் இழுக்கப்பட்டு கில்பிஷம் {தவறு} செய்த என்னை எதிர்காலத்தில் தோஷங்களால் {குற்றங்களால்} அறிவது உனக்குத் தகாது.(3) தாதா {குழந்தாய்}, நாம் இருவரும் ஒரே நேரத்தில் சுகமாக இருக்க விதிக்கப்பட்டவர்களென நான் கருதவில்லை. எனவே, உடன் பிறந்தவர்களிடம் காணப்படும் ஸௌஹார்தத்திற்கு {நல்லுறவுக்கு} மாறான இந்த நிலை உண்டானது.(4)
நீ இப்போதே இந்த வனௌகசர்களின் {வனவாசிகளின்} ராஜ்ஜியத்தை ஏற்பாயாக. நானும் வைவஸ்வதனின் {மரணதேவனின்} வசிப்பிடத்தை இதோ அடையப்போகிறேன் என்பதை அறிவாயாக[1].(5) இவ்வாறு ஜீவிதத்தையும், ராஜ்ஜியத்தையும் ஏராளமான செல்வத்தையும், பழிக்கத்தகாத புகழையும் விட்டு இதோ நான் துரிதமாக விலகப் போகிறேன்.(6) வீரா, ராஜாவே, இந்த அவஸ்தையில் நான் எந்த சொல்லைச் சொல்லப்போகிறேனோ, அது செய்வதற்கரிதாக இருந்தாலும், அதைச் செய்வதே உனக்குத் தகும்.(7)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாலியின் மேன்மை அவனோடு அழியப்போவதில்லை. இங்கேயும் அவன் ஓர் உயர் நிலையை அடைகிறான். வெறுப்போ, கோபமோ இன்றி இரண்டு காரியங்களுக்காக அவனே சுக்ரீவனுக்கு அரசபதவியைக் கொடுக்கிறான். ஒன்று, சுக்ரீவனே வெற்றி பெற்றவன் என்பதால் அவனே ராஜ்ஜியத்தை அடைவானேயன்றி, ஹனுமான் முன்மொழிந்ததுபோல அங்கதனல்ல. அடுத்தது, சுக்ரீவன் தன் தம்பியாக இருப்பதாலும், ஒருகாலத்தில் இளவரசனாக இருந்தவன் என்பதாலும் அவனே அரசபதவிக்கு அங்கதனைவிட சிறந்த தேர்வாக இருக்க முடியும். எவ்வாறிருப்பினும், இறந்து கொண்டிருக்கும் வாலி, நிகரற்ற வெற்றியாளனாகவும், மூத்த சகோதரனாகவும் தன் உயர்ந்த பண்பை இங்கே மேலும் அதிகரித்துக் கொள்கிறான்" என்றிருக்கிறது.
சுகத்திற்குத் தகுந்தவனும், நன்கு சுகமாக வளர்க்கப்பட்டவனும், பாலனாக இருப்பினும் பாலனல்லாதவனும் {சிறுவனாக இருப்பினும் முதிர்ச்சியடைந்தவனும்}, கண்ணீர் நிறைந்த முகத்துடன், பூமியில் கிடப்பவனுமான இந்த அங்கதனைப் பார்.(8) என் பிராணன்களைவிடப் பிரியமான புத்திரன் என்னை இழந்ததும் ஓர் ஔரசப் புத்திரனைப் போல எவ்வகையிலும் அர்த்தங்குறையாமல் இவனை பரிபாலிப்பாயாக {உன் மடியில் பிறந்த மகனைப் போல ஒரு குறையும் இல்லாதபடி இவனைக் காப்பாயாக}.(9) பிலவகேஷ்வரா {தாவிச்செல்லும் குரங்குகளின் தலைவா}, நான் எப்படியோ அப்படியே நீயும் இவன் பிதாவாக, தாதையாக {கொடுப்பவனாக}, பயத்தில் இருந்து அபயமளித்து, அனைத்து வகையிலும் முழுமையாகப் பாதுகாப்பாயாக.(10) ஸ்ரீமானும், உனக்கு நிகரான பராக்கிரமம் கொண்டவனுமான இந்த தாராத்மஜன் {தாரையின் மகன் அங்கதன்}, அந்த ராக்ஷசர்களை வதைப்பதில் உனக்கு முன் நிற்பான்.(11) பலவானும், தாரேயனும் {தாரையின் மகனும்}, வேகமுள்ள இளைஞனுமான இந்த அங்கதன், ரணங்களில் விக்கிரமத்துடன் {போர்களில் வெற்றிநடையுடன்} ஒப்பற்ற கர்மங்களைச் செய்வான்.(12)
ஸுஷேணனின் மகளான இவளும் {இந்தத் தாரையும்}, சூக்ஷ்ம அர்த்தங்களை நிச்சயிப்பதிலும், விதவிதமான உத்பாதங்களிலும் {ஆபத்துகளிலும்}, அனைத்துவகை ஆராய்ச்சிகளிலும் திறன்மிக்கவள்[2].(13) இவள் எதை நல்லது என்று சொன்னாலும், சந்தேகமில்லாமல் அந்தக் காரியத்தைச் செய்யலாம். தாரையின் மதம் {தாரையின் அனுமதி பெற்ற கருத்து} கிஞ்சித்தும் முரண்பட்டு வேறாக நடப்பதில்லை.(14) இராகவனுக்கான உனது காரியத்தையும் எந்த சந்தேகமும் இல்லாமல் நிறைவேற்றுவாயாக. அதைச் செய்யாமல் இருப்பது அதர்மமாகும்; மதிக்காத உனக்கு ஹிம்சையும் நேரும்[3].(15) சுக்ரீவா, காஞ்சனத்தாலான இந்த மாலையையும் {இப்போதே} சூடிக் கொள்வாயாக. {ஏனெனில்} இதிலுள்ள உதாராஸ்ரீ {பெருஞ்செழிப்பின் தேவி / வெற்றியின் தேவி / பேரொளி}, நான் மரித்துவிட்டால் இதைவிட்டு முற்றிலும் அகன்றுவிடுவாள்[4]" {என்றான் வாலி}.(16)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தாரையின் தந்தை என்று அழைக்கப்படும் சுஷேணனைக் குறித்து ஓர் உவமை இங்கே கூறப்படுகிறது. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்ததன் விளைவாக உதித்தவள் தாரை என்று கூறப்படுகிறது. அப்போது அந்தப் பாற்கடலில் இருந்து உண்டான பலவற்றில் ஒருத்தியாக தாரையும் வெளிப்பட்டாள். வாலியும், சுஷேணனும் அவளைக் கண்டதும், அவள் வியாழன் கிரகமான பிருஹஸ்பதியின் வழித்தோன்றல் என்பதை அறிந்து அவளது கரங்களைப் பற்றினர். வாலி அவளது வலது கையையும், சுஷேணன் அவளது இடது கையையும் பற்றிக் கொண்டு, அவள் யாருக்கு உரியவள் என்பதில் சச்சரவு செய்யத் தொடங்கினர். அப்போது முதிர்ந்த முனிவர்களும், தேவர்களும் தலையிட்டு, வலது கையைப் பிடித்தவன் கணவன் என்றும், இடது கையைப் பிடித்தவன் தந்தை என்றும் தீர்மானித்தனர். இவ்வாறே சுஷேணன் தாரையின் தந்தையானதாகச் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.
[3] அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது ஐயன்மரைமலர்ப் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார்எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும்புரிதி சிற்றடிமை குற்றம் பொறுப்பர் என்று எண்ணவேண்டா- கம்பராமாயணம் 4078ம் பாடல், வாலி வதைப்படலம்பொருள்: ஆட்சிப் பொறுப்பில் ஏற்படும் மனங்களிப்பால் அறிவு மயங்கி இகழாமல், ஐயனின் {ராமனின்} தாமரை மலர்ப் பாதங்களை விட்டு நீங்காமல் வாழ்வாயாக. மன்னர்கள் என்போர் பற்றி எரியும் நெருப்புக்கு உவமையானவர்கள் என்றே நினைத்துக் கொள்வாயாக. {மன்னர்கள் [ராமன்]} எண்ணிய எண்ணம் யாவும் {அரசர்கள் விரும்பும் காரியங்கள் யாவற்றையும்} செய்வாயாக. தொண்டு புரிபவர்கள் செய்யும் குற்றங்களைப் {மன்னர்கள் [ராமன்]} பொறுத்துக் கொள்வார்கள் என்று எண்ணாதே.
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வெற்றியைத் தரும் இந்த மாலையில் இருந்து சுக்ரீவனுக்கு வெல்லப்பட முடியாதவனாகும் அதிர்ஷ்டம் கிடைக்காமல் போகலாம். ஆனால் வாலி, தன் சடலத்தைத் தீண்டும் அவமானத்தில், அதாவது சவ ஸ்பரிச தோஷத்தில் சிக்காமல் அந்தக் காஞ்சன மாலையைப் பாதுகாக்க வேண்டும். அங்கதனுக்கே முன்னுரிமை என்றாலும், சுக்ரீவனுக்கு அதைக் கொடுக்கிறான் வாலி" என்றிருக்கிறது.
உடன்பிறந்த வாஞ்சையுடன் வாலி இவ்வாறு சொன்னபோது, சுக்ரீவன், மகிழ்ச்சியைக் கைவிட்டு, {ராகு} கிரகத்தால் உண்ணப்படும் உடுராட்டை {நட்சத்திரங்களின் தலைவனான சந்திரனைப்} போல மீண்டும் தீனமடைந்தான் {பரிதாப நிலையை அடைந்தான்}.(17) அவன் {சுக்ரீவன்}, வாலியின் சொற்களால் சாந்தமடைந்து, அக்கறையுடன் முறையான காரியத்தைச் செய்யும் வகையில், {வாலியால்} அனுமதிக்கப்பட்டதும், காஞ்சனத்தாலானதுமான அந்த மாலையை எடுத்துக் கொண்டான்.(18)
காஞ்சனத்தாலான அந்த மாலையை தத்தம் செய்துவிட்டு, பிரேத பாவமடைவதற்கு சித்தம் அடைந்த {உயிரைவிட ஆயத்தமான} வாலி, அங்கே நின்று கொண்டிருந்த ஆத்மஜனை {தன் மகனைக்} கண்டான். சினேகத்துடன் அங்கதனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(19) "இனி பிரியாபிரியங்களை {விருப்பு, வெறுப்புகளைப்} பொறுத்துக் கொண்டும், தேசகாலங்களை {இடம், காலம் ஆகியவற்றைக்} கருத்தில் கொண்டும், காலத்திற்கேற்ப நேரும் சுகதுக்கங்களை {சமமென எண்ணி அவற்றைத்} தாங்கிக் கொண்டும் சுக்ரீவனின் வசத்தை அடைந்திருப்பாயாக {சுக்ரீவனுக்குக் கீழ்ப்படிந்திருப்பாயாக}[5].(20) மஹாபாஹுவே, நீ எப்படி நடந்து கொண்டாலும், நான் எவ்வாறு சதா சீராட்டி வளர்த்தேனோ அவ்வாறு உன்னை சுக்ரீவன் மதிப்பான் என்று நினைக்காதே.(21) அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, இவனது அமித்ரர்களிடம் {நண்பர்களல்லாதவர்களிடம்} சேராதே, சத்ருக்களிடமும் செல்லாதே. தலைவனின் அர்த்தங்களை {சுக்ரீவனின் நோக்கங்களைக்} கருத்தில் கொண்டு, தற்கட்டுப்பாட்டுடன் சுக்ரீவனின் வசத்தை அடைந்திருப்பாயாக.(22) அதிகமான பற்றுடனோ, பற்றின்மையுடனோ செயல்படாதே. இவ்விரண்டும் மஹாதோஷங்களாகும். எனவே, இவற்றுக்கு இடைப்பட்ட நிலையில் நடந்து கொள்வாயாக" {என்றான் வாலி}.(23)
[5] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தப் பிரியாவிடை சொல்லும் தெளிவான செய்தி பின்வருவது: "இனி நீ சுக்ரீவனின் வசத்தை அடைந்திருக்கும்போது, சுதந்திரமானவன் அல்ல என்பதாலும், உன் தலையீட்டுரிமையில் காலத்திற்கும், இடத்திற்கும் தகுந்தபடி நீ நடந்து கொள்ள வேண்டும் என்பதாலும், அவனது ஆணைகள் உனக்கு விருப்பத்திற்குரியனவாகவோ, வெறுப்புக்குரியனவாகவோ இருந்தாலும் பொறுத்துக் கொண்டு அவற்றை நீ செய்து முடிக்கவே வேண்டும்; அவனது உத்தரவின் பேரில் ஏற்படும் சுகதுக்கங்களையும் நீ தாங்கிக் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "நான் போனபின்பு நீ தேசத்தையும் காலத்தையும் அறிந்து ப்ரியத்தையாவது அப்ரியத்தையாவது ப்ரபு சொல்வானாயின் ப்ரியத்தைப்போலவே அப்ரியத்தையும் துக்ககாலத்தில் ஸுகத்தையும் ஸுககாலத்தில் துக்கத்தையும் பொறுத்துக் கொண்டு ஸுக்ரீவனுக்கு உட்பட்டு வர்த்திப்பாயாக" என்றிருக்கிறது.
பெருஞ்சரத்தால் பெரிதாகப் பீடிக்கப்பட்டவன் {வாலி}, இவ்வாறு சொன்ன பிறகு, கண்கள் சுழல, திறந்த வாயுடன் பற்கள் வெளியே தெரிய, பயங்கர நிலையில் அவனது ஜீவிதம் சிறகுகளை அடைந்தது {உயிர் பறந்து சென்றது}.(24) பிலவகசத்தமர்களும் {தாவிச்செல்லும் குரங்குகளில் சிறந்தவர்களும்}, கொல்லப்பட்ட யூதபனுடன் கூடியவர்களுமான அந்த வானரர்கள் அனைவரும், {பின்வருமாறு} புலம்பத் தொடங்கி கதறி அழுதனர்:(25) "வானரேஷ்வரன் {வானரர்களின் தலைவனான வாலி} ஸ்வர்கத்திற்குச் சென்றதால் கிஷ்கிந்தை இப்போது சூன்யமாகிவிட்டது {வெறுமையடைந்தது}. உத்யானங்களும் {சோலைகளும்}, பர்வதங்களும் {மலைகளும்}, கானகங்களும் சூன்யமாகிவிட்டன. பிலவகசார்தூலன் கொல்லப்பட்டதும் வானரர்கள் தங்கள் பிரபையை இழந்துவிட்டனர்.(26,27அ) எவனது மகத்தான வேகத்தால் கானகங்களும், வனங்களும் புஷ்பகணங்களுடன் பின்தொடர்ந்து செல்லுமோ அதை இனி எவன் செய்யப் போகிறான்?[6](27ஆ,28அ) மஹாத்மா {வாலி}, மஹாபாஹுவான கோலபன் எனும் கந்தர்வனுடன் தசபஞ்ச வருஷங்கள் {பதினைந்து ஆண்டுகள்} எந்த மஹத்தான யுத்தம் செய்தானோ, அந்த யுத்தம் ராத்திரிகளிலும், பகலிலும் நடைபெறாமல் இருக்கவில்லை.(28ஆ,29) அதன்பிறகு, பதினாறாவது வருஷத்தில் கோலபன் கீழே வீழ்த்தப்பட்டான். கோரைப் பற்களுடன் கூடிய வாலி, தீய மனம் கொண்ட அவனை {கோலபனைக்} கொன்றுவிட்டு, நமக்கு அனைத்து வகையிலும் அபயமளித்தான். அப்படிப்பட்ட வாலி எவ்விதம் வீழ்ந்தான்?" {என்று புலம்பினர்}.(30)
[6] வனங்களும், மரங்களும், மலர்களும் வாலியின் பின்னே செல்வது போல தோற்றமளிப்பதாகச் சொல்லப்படுவது, வாலியின் பெரும் வேகத்தை காட்சிரூபமாக எடுத்துக்காட்டுவதற்காகச் சொல்லப்படுகிறது
வீரனான பிலவகாதிபதி {தாவிச் செல்லும் குரங்குகளின் தலைவனான வாலி} கொல்லப்பட்டதும், வனசரர்களான அந்த பிலவங்கமர்கள் {வனத்தில் திரிபவர்களும், தாவிச் செல்பவர்களுமான அந்தக் குரங்குகள்}, மஹாவனத்தில் சிம்மத்தை எதிர்த்த கவாம்பதி {காளை} மாண்டதும் {கலவரமடையும்} பசுக்களைப் போல அமைதியை இழந்தனர்.(31) அப்போது தாரையானவளோ, விசன ஆர்ணவத்தில் {சோகக் கடலில்} மூழ்கியவளாக, மரித்த பர்த்தாவின் வதனத்தையே {முகத்தையே} பார்த்துக் கொண்டிருப்பவளாக, வெட்டி வீழ்த்தப்பட்ட பெரும் மரத்தைச் சுற்றியிருக்கும் லதையை {கொடியைப்} போல வாலியைத் தழுவியபடி பூமியில் விழுந்தாள்.(32)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 22ல் உள்ள சுலோகங்கள்: 32
Previous | | Sanskrit | | English | | Next |