Son of Surya | Aranya-Kanda-Sarga-72 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கபந்தன் தகனம் செய்யப்பட்டது; அவன் மீண்டும் வானில் தோன்றியது; சுக்ரீவனுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுபடி ராமனைக் கேட்டுக் கொண்ட கபந்தன்...
கபந்தன் இவ்வாறு சொன்னதும், நரேஷ்வரர்களான அந்த வீரர்கள் இருவரும், கிரியின் பிளவை அடைந்து, {கபந்தனை அதற்குள் வீசி எறிந்து} பாவகனுக்கு {அக்னிக்குக்} கொடுத்தனர் {கொடுக்க சிதையடுக்கி ஆயத்தம் செய்தனர்}.(1) இலக்ஷ்மணன், மஹா உல்கங்களை {எரிநட்சத்திரங்களைப்} போன்ற {பெரிய} கொள்ளிக் கட்டைகளால் சிதையெங்கும் தீ மூட்டினான். அஃது அனைத்துப் பக்கங்களிலும் {புகையின்றி} எரியத் தொடங்கியது[1].(2) அந்த சரீரம் மஹத்தான நெய்ப்பிண்டத்திற்கு ஒப்பானதாக இருந்தாலும், எரிந்து கொண்டிருந்த கபந்தனின் மேதஸ்ஸை பாவகன் மந்தமாகவே தஹித்தான் {கபந்தனின் கொழுப்பை நெருப்பு மெதுவாகவே எரித்தது}.(3)
[1] தர்மாலயப் பதிப்பில், இங்கே இன்னும் 3 சுலோகங்கள் இருக்கின்றன. "சாமர்த்தியசாலியாகிய தனுஷ்பாணியான லக்ஷ்மணர் அந்த நாற்புறம் பற்றி எரியும் சிதையைப் பார்த்து, ஆச்சரியங்கொண்டவராய் ஸ்ரீராமருக்கு பின்வரும் சொல்லை சொன்னார், "சீதப்பிராட்டியாரை தேடுகின்ற தேவரீரால், முதலில் ஜடாயு தகனஞ்செய்யப்பட்டார். இரண்டாவதாய் இவன் இப்பொழுது தகனஞ்செய்யப்பட்டான். எதை மூன்றவதாய் அருளிச் செய்யப் போகிறீரோ?" பெருங்கொள்ளிக் கட்டைகளால் மூண்ட அந்த அக்னியானது, பெரும் மேகத்தையும், மலைச் சிகரத்தையும் நிகர்த்த கபந்தனையும் ஆகாயத்தையும் மறைத்தது" என்றிருக்கிறது. இந்தச் செய்தியும், வசனங்களும் வேறெந்த பதிப்பிலும் இல்லை.
அந்த மஹாபலன் {கபந்தன்}, களங்கமற்ற வஸ்திரங்களையும், திவ்ய மாலைகளையும் தரித்துக் கொண்டு, சிதையில் அசைந்து, வேகமாக தூமமற்ற அக்னியை {புகையற்ற அக்னியைப்} போல எழுந்தான்.(4) அப்போது பிரகாசித்துக் கொண்டிருந்தவன் {கபந்தன்}, களங்கமற்ற உடைகளை உடுத்தியவனாக, பெரும் மகிழ்ச்சியுடன், ஒவ்வொரு அங்கத்திலும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாக விரைந்து சிதையில் இருந்து வேகமாக {மேலே} உயர்ந்தான்.(5)
அந்தக் கபந்தன், அந்தரிக்ஷத்தை {ஆகாயத்தை} அடைந்து, ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்} பூட்டப்பட்டதும், புகழைத் தருவதும், பிரகாசிப்பதுமான விமானத்தில் அமர்ந்து, மஹாதேஜஸ்ஸுடன் ஒளிர்ந்து, பத்து திசைகளில் ஒளிவீசியபடியே ராமனிடம், {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(6,7அ) "இராகவா, சீதையை எப்படி அடைவாய் என்ற தத்துவத்தை {உண்மையைக்} கேட்பாயாக. இராமா, உலகில் சர்வமும் சோதிக்கப்படும் ஆறு யுக்தங்கள் {தர்க்கங்கள்} இருக்கின்றன[2]. அதனால் தீண்டப்பட்ட தசையின் அந்தத்திலுள்ளவன் {சோதனையான காலக்கட்டத்தின் முடிவில் இருப்பவன்}, அந்த தசையால் பீடிக்கப்பட்ட மற்றொருவனால் சேவிக்கப்படுவான்[3].(7ஆ,8) இராமா, லக்ஷ்மணனுடன் சேர்ந்து நீ தசையின் சோதனையை அடைந்ததாலேயே, {ராஜ்ஜியம், அரச சுகம் போன்ற} இழப்புகளைச் சந்தித்து, உன் தாரம் அவமதிக்கப்பட்டு {கடத்தப்பட்டு}, விசனத்தை {துன்பத்தை} அனுபவிக்கிறாய்.(9) நல்லிதயம் கொண்டோரில் {நண்பர்களில்} சிறந்தவனே, அத்தகையவனான நீ அவசியம் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில், நீ சித்தியடைவதை {காரியம் சாதிப்பதை} நான் சிந்தித்தாலும் உண்மையில் என்னால் அதைப் பார்க்கமுடியவில்லை.(10)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அரசாட்சியில் உள்ள அரசர்களால் பயன்படுத்தப்படும் ஆறு தகுமுறைகள் {கொள்கைகள்} பின்வருவன: 1) சந்தி - பகை மன்னர்களிடம் உடன்படுதல், 2) விக்ரஹம் - பகையைத் தொடர்தல், 3) யானம் - போர்த் தொடுத்தல், 4) ஆசனம் - உரிய காலத்திற்காக காத்திருத்தல், 5) துவைதீ பாவம் - பகை அணியினருள் குழப்பங்களையும், பிளவுகளையும் உண்டாக்குதல், 6) சமாஷ்ரயம் - தனக்குச் சமமானவனிடம் சரணடைதல்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "கூட்டணி, பகை, போர், காத்திருப்பு, பகைவரிடம் பிளவு உண்டாக்கல், சமமானவனிடம் உதவி நாடுதல்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "1) பிரத்யக்ஷம் - நாமே நேரில் காணல், 2) அனுமானம் - தெரிந்த விஷங்களைக் கொண்டு இதர தீர்மானங்களையடைதல் {யூகிப்பது}, 3) உபமானம் - ஸ்திருசமானவைகளால் {உவமைகளால்} அறிதல், 4) சப்தம் - வேதம் முதலிய சப்தங்களைக் கொண்டு அறிதல், 5) அனுபலப்தி - காணாமையால் இல்லையென அறிதல், 6) அர்த்தாபத்தி - பார்த்தவைகள் கேட்டவைகள் இவைகளைக் கொண்டு மற்றவைகளை ஊகித்தல்" என்றும், அதன் பின், "சில வியாக்கியானங்களில்" இப்படி கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று மேற்கண்ட பதிப்புகளின் அடிக்குறிப்புகளில் காணப்படுபவையும் சொல்லப்படுகின்றன.
[3] "சோதனையின் முடிவை அடைந்தவனுக்கு, சோதனையால் வஞ்சிக்கப்பட்டவன் தொண்டு செய்வான்" என்பதே இங்கே பொருளாக இருக்க வேண்டும். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒருவன் சோதனையால் தீண்டப்பட்டால் அவன் அத்தகைய சோதனைக்கு ஆட்பட்ட ஒருவனை வணங்க வேண்டும்" என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "அதிஷ்டம் இல்லாதவர்களால் மட்டுமே ஒரு துரதிருஷ்டசாலிக்கு உதவ முடியும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையால் தீண்டப்பட்ட ஒருவன் துரதிர்ஷ்டத்தால் பாதிக்கப்பட்ட மற்றொருவருடன் நட்பு கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "மிக மோசமான துரதிர்ஷ்டத்தில் வீழ்ந்தவர், தன்னைப் போன்ற யாரிடமாவது ஆறுதல் பெறலாம்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "எவனொருவன் விஷயத்தில் கஷ்டத்தை அனுபவித்து கஷ்டத்தின் அந்திபாகத்தை அடைந்த ஒருவனால் நட்பு பெற்றவன் பேருதவி புரியப்படுவான்" என்றிருக்கிறது.
இராமா, நான் சொல்வதைக் கேட்பாயாக. சுக்ரீவன் என்ற பெயரைக் கொண்ட வானரனானவன், இந்திரனின் மகனும், சினங்கொண்டவனும், உடன்பிறந்தவனுமான வாலியால் விரட்டப்பட்டவன் ஆவான்.(11) ஆத்மவானான அந்த வீரன் {தன்மானம் கொண்ட வீரனான அந்த சுக்ரீவன்}, பம்பை வரை பரந்து விளங்கும், ரிச்யமூகமெனும் சிறந்த கிரியில் நான்கு வானரர்களுடன் இருக்கிறான்.(12) அவன், வானரேந்திரர்களில் {வானரத் தலைவர்களில்} மஹாவீரியன்; தேஜோவான் {ஆற்றல்மிக்கவன்}; அளவில்லா பிரகாசம் கொண்டவன்; சத்தியசந்தன்; வினீதன் {புலனடக்கமுள்ளவன்}; மதிமான்; மஹான்.(13) இராமா, திறனும், துணிவும் மிக்கவனும், வீரனும், மஹாபலவானும், பராக்கிரமமிக்கவனுமான அவன் {சுக்ரீவன்}, உடன்பிறந்தோனால் {வாலியால்} ராஜ்ஜியத்தின் பொருட்டு விரட்டப்பட்டான்.(14) இராமா, அவன் {சுக்ரீவன்} உன் மித்ரனாகவும் {நண்பனாகவும்}, சீதையைத் தேடுவதில் சஹாயனாகவும், ஹிதம் செய்பவனாகவும் {உதவிசெய்பவனாகவும், உனக்கு நன்மை செய்பவனாகவும்} இருப்பான். சோகத்தில் மனத்தைச் செலுத்தாதே.(15)
இக்ஷ்வாகு சார்தூலா {இக்ஷ்வாகுக்களில் புலியே}, எது இங்கே நடக்க வேண்டுமோ, அது வேறாக நடக்க சாத்தியமில்லை. காலத்தை மீறுவது இயலாது.(16) வீரா, இங்கே இருந்து சீக்கிரமாக, மஹாபலம் பொருந்திய அந்த சுக்ரீவனிடம் செல்வாயாக. இராகவா, இப்போதே இங்கிருந்து சீக்கிரமாகச் சென்று, துரோஹமில்லாத தோழமையுடன், ஒளிரும் நெருப்பைப் போன்ற அவனை வயஸ்யனாக {சமகாலத்தவனாக / சமவயதுடையவனாக / நண்பனாக} ஏற்றுக் கொள்வாயாக[4].(17,18அ) கிருதஜ்ஞனும் {நன்றிமறவாதவனும்}, காமரூபியும் {விரும்பிய வடிவத்தை ஏற்கவல்லவனும்}, சஹாயத்தை நாடியிருப்பவனும், வீரியவானும், வானராதிபனுமான அந்த சுக்ரீவனை நீ அவமதிக்கக்கூடாது. (18ஆ,19அ) நீங்கள் இருவரும் அவன் நினைத்திருக்கும் காரியத்தை இப்போதே செய்யவல்லவர்கள். காரியம் நிறைவேறினாலும், காரியம் நிறைவேறாவிட்டாலும் அவன் உன் காரியத்தை நிறைவேற்றுவான்.(19ஆ,20அ)
[4] மன்மதநாததத்தர் பதிப்பில், "விரைவாகப் புறப்பட்டு வலிமையும் ஆற்றலுங் கொண்ட சுக்ரீவனிடம் இன்றே சென்று, "ஒருவருக்கு ஒருவர் துரோஹம் செய்வதில்லை" என்று தழல்விடும் நெருப்பின் முன் உறுதி ஏற்றுக் கொண்டு, நட்பை ஏற்படுத்திக் கொள்வாயாக" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அக்னியை சாட்சியாகக் கொண்டு ஒவ்வொரு புனிதச் சடங்கையும் செய்வது கிழக்கத்திய பழக்கமாகும். இந்துக்கள் தங்கள் ஒவ்வொரு விழாவிலும், நிகழ்விலும், சடங்கிலும் அக்னியைப் பெரும் மதிப்புடன் வணங்குவார்கள்" என்றிருக்கிறது.
இரிக்ஷரஜஸின் புத்திரனும், பாஸ்கரனின் ஔரச {சூரியனின் நேரடி} புத்திரனுமான[5] அவன் {சுக்ரீவன்}, வாலியால் பகைக்கப்பட்டு, {அந்த ஆபத்துக்கஞ்சி} சந்தேகத்துடன் பம்பையில் சுற்றித் திரிந்து வருகிறான்.(20ஆ,21அ) இராகவா, ஆயுதத்தை அருகில் வைத்து விட்டு[6], வனசாரியாக {வனத்தில் திரிபவனாக} ரிச்யமூகத்தை ஆலயமாகக் கொண்ட கபியிடம் {குரங்கிடம்} சென்று, சீக்கிரம் சத்திய வயஸ்யனாக {சமகாலத்தவனாக / சமவயதுடையவனாக / உண்மையான நட்பை} ஏற்படுத்திக் கொள்வாயாக.(21ஆ,22அ) கபிகுஞ்சரனான அவன் {குரங்குகளில் யானை போன்ற சுக்ரீவன்}, உலகில் உள்ள நரமாமிச உண்ணிகள் அனைவரின் ஸ்தானங்களையும் {இருப்பிடங்களையும்} முழுமையான நிபுணத்துவத்துடன் அறிந்திருக்கிறான்.(22ஆ,23அ) அரிந்தமா {பகைவரை அடக்குபவனே}, ராகவா, ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியன் எதுவரை ஒளிவீசுவானோ, அதுவரையுள்ள உலகில் உண்மையில் அவனுக்குத் தெரியாதது யாதொன்றும் இல்லை[7].(23ஆ,24அ)
[5] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாலி, சுக்ரீவன் ஆகியோரின் தந்தை ரிக்ஷரஜஸ் ஆவான். ஆனால் க்ஷேத்ரஜ்ஞ மகன்களை, அதாவது தந்தையின் களம் (தாய்) மூலம், ஆனால் உயிரியல் விதிப்படி வேறு தந்தை மூலம் பிறக்கும் மகன்களைப் பெறுவது வழக்கம். ரிக்ஷரஜஸ் தற்காலிகமாக பெண்ணாக மாறியபோது, பெண்வடிவில் இருந்த அவனுக்கு இந்திரன் மூலம் வாலியும், சூரியன் மூலம் சுக்ரீவனும் பிறந்தனர்" என்றிருக்கிறது.
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "'ஆயுதத்தை அருகில் வைத்துவிட்டு' என்ற கூட்டுச் சொற்களுக்கு, "ஆயுதங்களை ஆயத்தமாக்கிக் கொண்டு" என்றும், "ஆயுதத்தின்மீது உறுதியேற்றுக் கொண்டு" என்றும் வெவ்வேறு பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது.
[7] கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானைஎதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்டவெதிர் பொரும் தோளினாளை நாடுதல் விழுமிது என்றான்அதிர் கழல் வீரர்தாமும் அன்னதே அமைவது ஆனார்- கம்பராமாயணம் 3697ம் பாடல், கவந்தன் படலம்பொருள்: "பொன்போல் ஒளிபொருந்திய நிறம் கொண்ட சூரியனின் மகனை {சுக்ரீவனை} எதிர் எதிர் கொண்டு தழுவி, நட்பில் இனிமையாகப் பொருந்தி, அவன் உதவியால் விரைவாக, மூங்கில் போன்ற தோள் கொண்டவளை {சீதையைத்} தேடுவது சிறந்தது" என்றான் {கபந்தன்}. ஒலிக்கும் வீரக்கழல் {காலணி} அணிந்த வீரர்களும் {ராமலக்ஷ்மணர்களும்} அதற்கு உடன்பட்டார்கள்.
அவன் {சுக்ரீவன்}, வானரர்களுடன் சேர்ந்து விபுலமான {பெரிய} நதிகள், சைலங்கள் {மலைகள்}, கிரிதுர்கங்கள் {மலைக்குகைகள்}, பிலவங்கள் {நிலக்குடைவுகள்} ஆகியவற்றில் தேடித்திரிந்து உன் பத்தினியைக் கண்டுபிடிப்பான்.(24ஆ,25அ) இராகவா, உன்னைப் பிரிந்த சோகத்தில் இருக்கும் சீதையைத் தேட, மஹாகாயம் {பேருடல்} படைத்த வானரர்களை திசைகள் அனைத்திற்கும் அனுப்புவான். இராவணனின் ஆலயத்தையும், அழகிய இடை கொண்ட மைதிலியையும் தேடுவான்.(25ஆ,26) பிலவங்கமர்களில் ரிஷபனான அவன் {குதித்துப் பறக்கும் குரங்குகளில் காளையான சுக்ரீவன்}, நிந்திக்கத்தகாதவளான உன் பிரியை {காதலி சீதை}, மேருசிருங்கத்திற்கே சென்றிருந்தாலும், பாதாளதலத்தையே அடைந்திருந்தாலும், அங்கே பிரவேசித்து, ராக்ஷசர்களை அழித்து, {அவளை} மீட்டுத் தருவான்" {என்றான் கபந்தன்}[8].(27)
[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பின் சுருக்கம் பின்வருமாறு, "'அழுதுபுலம்புகிறவன், அழுதுபுலம்பும் மற்றொருவனை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும்' என்று சொல்லும் கபந்தனின் கருத்து, புராணக் கருத்துகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் அர்த்தமற்றதாகவே தெரிகிறது. கபந்தனுக்கு ராவணனையோ, அவனது செயல்பாடுகளையோ குறித்துத் தெரியவில்லையென்றாலும், அவன் சொல்லும் கதையின்படியே கூட, அவன் வாலியையும், சுக்ரீவனையும் நன்கறிந்திருக்கிறான். எனவே, சுக்ரீவனுக்குப் பதிலாக, அதிக சக்தியுடைய வாலியை நண்பனாக்கிக் கொள்ளவே அவன் ராமனுக்குப் பரிந்துரைத்திருக்க வேண்டும். இதையே பின்னர் வாலியும் ராமனிடம் சொல்கிறான். கபந்தனுக்கு அழியாத ஞானம் வாய்த்திருக்கும்போது, "சரியான பாதையிலேயே ராமன் செல்ல வேண்டும்" என்று கருதுகிறான். இவ்வாறு தர்மகூடத்தில் இருக்கிறது" என்றிருக்கிறது.
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 72ல் உள்ள சுலோகங்கள்: 27
Previous | | Sanskrit | | English | | Next |