Pampa and Rishyamuka | Aranya-Kanda-Sarga-73 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இரிச்யமூக மலைக்குச் செல்லும் திசையைச் சொன்ன கபந்தன்; பம்பையின் இயற்கை வர்ணனை...
அர்த்தம் அறிந்தவனான கபந்தன், சீதையை மீட்கும் வழியைக் காட்டிவிட்டு, மீண்டும் சரியான அர்த்தங்களைக் கொண்ட {பின்வரும்} வாக்கியங்களை ராமனிடம் சொன்னன்:(1) இராமா, பிரதீசீம் திசையை ஆசரித்து {மேற்குத் திசையைத் தொடர்ந்து}[1] பிரகாசமாகவும், மனோஹரமாகவும், எங்கே புஷ்பித்த மரங்கள் இருக்குமோ, அதுவே சிவ பந்தமாகும் {மங்கலப் பாதையாகும்}.(2) ஜம்பூ {நாவல்}, பிரியாளம் {வேங்கை}, பனசம் {பலா}, பிலக்ஷம் {இரளி}, நியக்ரோதம் {ஆல்}, திந்துகம் {தும்பை}, அஷ்வத்தம் {அரசு}, கர்ணீகாரம் {கோங்கு / சரக்கொன்றை}, சூதம் {ஒட்டுமா}, பாதபம் {வேல்},(3) தன்வம் {மருதம்}, நாக விருக்ஷம், திலகம், நக்தமாலகம் {புங்கு}, நீல அசோகம், கடம்பு, புஷ்பித்த கரவீரம் {அரளி},(4) அக்னிமுகம் {அதிமுத்தம்}, அசோகம், ஸுரக்தம், பரிபத்திரம் ஆகியவை {ஆகிய மரங்கள்} இருக்கும்.(5அ) அவற்றில் ஏறியோ, பலத்தால் அவற்றை பூமிவரை வளைத்தோ, அமிருதத்துக்கு ஒப்பான பழங்களை பக்ஷித்து முன்னேறிச் செல்வீராக.(5ஆ,6அ)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "மேற்கு நோக்கிச் செல்" என்றும், பிறகு மரங்களின் பெயர்கள் அனைத்தையும் சொன்னதன் பிறகு, "அதுவே உனக்கு நம்பிக்கை தரும் பாதையாகும்" என்றும் இருக்கிறது. வி.வி.சுப்பையா-பி.கீர்வானி பதிப்பில், "மேற்குநோக்கிச் செல்லும் இனிய பாதை உனக்கு மங்கலமானது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "எங்கே மேற்கிற்கு அழகூட்டும்..... மரங்கள் இருக்கின்றனவோ அதுவே ரிக்ஷ்யமுக மலைக்கு வழிவகுக்கும் பாதையாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "இந்த மங்கலப் பாதையில் மேற்குத் திசையை நாடிச் செல்வாயாக" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "வேறு மரங்கள் எந்த மேற்கு திக்கை அடைந்து விளங்குகின்றவோ இதுதான் சிரமமின்றி போகும் வழி" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இங்கே மேல்திசையில்...... பற்பல மரங்களடர்ந்து மலர்ந்திருக்கின்றனவே, அவ்வழியாகச் சென்று" என்றிருக்கிறது. கோரக்பூர் பதிப்பில், "கண்ணைக் கவரும் வண்ணம், பூத்துக் குலுங்கும் மரங்கள் காணப்படும் இந்த மேற்கு வழிப்பாதை உங்களுக்குச் சௌகரியமானது" என்றிருக்கிறது.
காகுத்ஸ்தா, புஷ்பித்த மரங்களைக் கொண்ட அந்த வனத்தைக் கடந்து, உத்தர குருவில் இருக்கும் நந்தனத்தைப் போன்ற மற்றொன்றை {மற்றொரு வனத்தை} அடைவீராக.(6ஆ,7அ) எங்கே சர்வ காலமும் பழங்களைத் தரும் மரங்கள் மதுரத்தைப் பொழியுமோ, அந்த வனம் சர்வ ருதுக்களுடன் {பருவ காலங்கள் அனைத்துடன்} கூடிய {குபேரனின்} சைத்ரரதத்தைப் போன்றதாகும்.(7ஆ,8அ) அங்கே பழங்களின் பாரத்தால் வளைந்தவையும், மேகங்களுடன் கூடிய பர்வதத்தைப் போல ஒளிர்பவையும், பெருங்கிளைகளைத் தரித்தவையுமான மரங்கள் எங்கேயும் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.(8ஆ,9அ) இலக்ஷ்மணா, அவற்றில் நீ ஏறினாலோ, சுகமாக பூமியை நோக்கி வளைத்தாலோ, அம்ருதத்திற்கு நிகரான பழங்களை உனக்குக் கொடுக்கும்.(9ஆ,10அ)
வீரர்களே, சிறந்த தேசங்களையும் {இடங்களையும்}, சைலத்திலிருந்து {மற்றொரு} சைலத்தையும், வனத்தில் இருந்து {மற்றொரு} வனத்தையும் கடந்து சென்ற பிறகு பம்பை என்ற பெயரைக் கொண்ட புஷ்கரணியை {குளத்தை} நீங்கள் அடைவீர்கள்.(10ஆ,11அ) இராமா, கற்களற்றதும், வழுக்காததும், சமதீர்த்தங்களைக் கொண்டதும், பாசியற்றதும், மென்மையான மணற்படுகைகளைக் கொண்டதுமான அதில் தாமரைகளும், அல்லிகளும் நிறைந்திருக்கின்றன.(11ஆ,12அ)
அங்கே பம்பையின் நீரில் வசிக்கும் ஹம்சங்களும் {அன்னப்பறவைகளும்}, பிலவங்களும் {வாத்துகளும்}, கிரௌஞ்சங்களும், குரரங்களும் {மீன்கொத்திப் பறவைகளும்} அழகிய ஸ்வரத்தில் கூவிக்கொண்டிருக்கும்.(12ஆ,13அ) வதங் குறித்து அறியாத சுபமானவையும், நரர்களைக் கண்டு பதறாதவையும், நெய்ப்பிண்டத்திற்கு ஒப்பாகக் கொழுத்தவையுமான அந்த துவிஜங்களை {பறவைகளை} நீங்கள் பக்ஷிக்கலாம்.(13ஆ,14அ) இராகவராமா, அங்கே பம்பையில், முட்கள் அதிகம் இல்லாதவையான ரோகிதம் {கெண்டை}, வக்ரதுண்டம் {வளைந்து மழுங்கிய மூக்கைக் கொண்ட மீன்}, நளம் {அயிரை} போன்ற சிறந்த மீனங்களைக் கணையால் கொன்று, செதில்களையும், துடுப்புகளையும் நீக்கி, இரும்பிலிட்டு சுட்டு, லக்ஷ்மணன் பக்தியுடன் உனக்குக் கொடுப்பான்.(14ஆ-16) புஷ்பங்கள் நிறைந்த இடத்தில் அந்த மீன்களை நீ நிறைவாக உண்ணும் வேளையில், பத்ம கந்தம் {தாமரைமணம்} கொண்டதும், தூய்மையானதும், சுகமாகக் குளிர்ந்திருப்பதும், அநாமயமானதும் {ஆரோக்கியமானதும்}, வெள்ளிக்கும், பளிங்குக்கும் ஒப்பாக எப்போதும் தெளிவாக இருப்பதுமான நீரை, லக்ஷ்மணன் புஷ்கரபர்ணத்தில் {தாமரை இலையில்} கொண்டு வந்து உனக்குக் கொடுப்பான்.(17,18அ)
நரோத்தமா {மனிதர்களில் உத்தமனே}, ராமா, ஸ்தூலமானவையும், கிரிகளின் குகைகளில் சயனிப்பவையும், வனத்தில் திரிபவையும், காளைகளைப் போல கத்துபவையும், நீரைப் பருகும் ஆசையில் அங்கே {தடாகத்திற்கு} வருபவையும், அழகிய ரூபத்தைக் கொண்டவையுமான வராகங்கள் {பன்றிகள்} சாயங்காலத்தில் பம்பையில் திரிவதை லக்ஷ்மணன் உனக்குக் காட்ட, நீ பார்ப்பாய்.(18ஆ-20அ) இராமா, சாயங்காலத்தில் திரியும்போது, மாலைகள் தரித்த {பூக்கள் மலர்ந்த} மரங்களையும், பம்பையின் நல்ல நீரையும் கண்டு நீ சோகத்தைக் கைவிடுவாய்.(20ஆ,21அ) இராகவா, அங்கே மனத்தைக் கவரும் வகையில் பரவியிருக்கும் திலகங்களும் {மஞ்சாடி மரங்களும்}, நக்தமாகங்களும் {பவளமல்லி மரங்களும்}, மலர்ந்த உத்பலங்களும் {ஆம்பல்களும்}, பங்கஜங்களும் {தாமரைகளும்} இருக்கின்றன.(21ஆ,22அ) இராகவா, அங்கே அவற்றை மாலையை அணிந்து கொள்ள நரர்கள் யாருமில்லை என்றாலும், அவை வாடி வதங்குவதுமில்லை; உதிர்வதுமில்லை.(22ஆ,23அ)
அங்கே, அமைதிநிலையில் நிலைத்திருந்த மதங்கரின் சிஷ்யர்களான ரிஷிகள், தங்கள் குருவுக்காக வனப்பொருட்களை {மதங்க முனிவரின் சடங்குகளுக்கான விறகுகள், மலர்கள், பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றைக்} கொண்டு வரும்போது, பாரத்தால் அதிகம் களைத்த அவர்களின் சரீரத்தில் இருந்து, ஸ்வேத பிந்துக்கள் துரிதமாக மஹீயில் {வியர்வைத் துளிகள் வேகமாக பூமியில்} விழுந்தன. பிறகு அவை அனைத்தும் முனிவர்களின் தபத்தால் மாலைகளாக மாறின[2]. இராகவா, ஸ்வேத பிந்துகளில் {வியர்வைத் துளிகளில்} இருந்து உண்டானதால், அவை {அந்த மலர்கள்} அழிவடைவதில்லை.(23ஆ-25) காகுத்ஸ்தா, அவர்கள் சென்றதும் பரிசாரிணியும், {பணிப்பெண்ணும்}, சிரஞ்ஜீவினியும் {நீண்ட ஆயுள் கொண்டவளும்}, சபரி என்ற பெயரைக் கொண்டவளுமான சிரமணி {துறவி} இன்றும் அங்கே காணப்படுகிறாள்.(26) இராமா, நித்தியம் தர்மத்தில் நிலைத்திருப்பவளான அவள் {சபரி}, சர்வபூதங்களாலும் நமஸ்கரிக்கப்படுபவனும், தேவனைப் போன்றவனுமான உன்னைக் கண்டதும் ஸ்வர்க்கலோகம் செல்லப்போகிறாள்[3].(27)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மேற்கூறிய வகையில் 'வியர்வைத்துளிகள் மரங்களின் மீது விழுந்தன' என்பது கோவிந்தராஜர் உரை. 'தரையில் விழுந்த அந்த வியர்வைத் துளிகளில் மரங்கள் வளர்ந்து, உதிராத மலர்களை மலரச் செய்தன' என்றும் மற்றொரு வகையில் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது.
[3] ஆயது செய்கை என்பது அறத்துறை நெறியின் எண்ணிதீயவர்ச் சேர்க்கிலாது செவ்வியோர்ச் சேர்த்து செய்தல்தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு அன்னாள்ஏயது ஓர் நெறியின் எய்தி இரலையின் குன்றம் ஏறி- கம்பராமாயணம், 3696ம் பாடல், கபந்தன் படலம்பொருள்: ஆகவேண்டிய நல்ல செய்கை என்பது, அறநெறியை எண்ணி தீயவர்களைச் சேர்த்துக் கொள்ளாமல், செம்மையானவர்களைத் துணைவராகக் கொண்டு செயல்படுவதாகும். உயிரினங்களுக்குத் தாயைவிட அதிக உதவி செய்யும் சபரியைச் சந்தித்து, அவள் சொல்லும் வழியில் சென்று ரிச்யமூக மலையில் ஏறி...
காகுத்ஸ்த ராமா, அதன் பிறகு, பம்பையின் பஷ்சிம தீரத்தை {மேற்குக் கரையை} அடைந்தால், அங்கே ஒப்பற்ற ரகசிய ஆசிரமஸ்தானத்தைப் பார்க்கலாம்.(28) அங்கே நாகங்களாலும் {யானைகளாலும்} அந்த ஆசிரமத்தைத் தாக்க இயலாது. அந்தக் கானகம் {மதங்கவனம்} அவ்வாறே மதங்கரிஷியால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.(29) இரகுநந்தனா, நந்தனத்திற்கு ஒப்பாக நானாவித பறவைகள் நிறைந்ததும், தேவாரண்யத்திற்கு ஒப்பானதுமான அந்த மதங்க வனம் இப்படியே இவ்வாறே புகழ்பெற்றிருக்கிறது. இராமா, அந்த வனத்தில் மனக்கவலையின்றி இன்புற்றிருப்பாயாக.(30,31அ)
பம்பைக்கு எதிரே புஷ்பித்த மரங்களுடன் கூடியதும், எளிதில் ஏற முடியாததும், சிசுநாகங்களால் ரக்ஷிக்கப்பட்டதும் {யானைக்குட்டிகளால் சுற்றிலும் பாதுகாக்கப்பட்டதும்}, வளம் நிறைந்ததும், பூர்வ காலத்தில் பிரம்மனால் நிர்மாணிக்கப்பட்டதுமான ரிச்யமூகம் அங்கே இருக்கிறது[4].(31ஆ,32) இராமா, அந்த சைல மூர்த்தத்தில் சயனிக்கும் புருஷன் ஸ்வப்னத்தில் {அந்த மலையின் உச்சியில் படுத்துறங்கும் மனிதன் கனவில்} எந்த செல்வத்தை ஈட்டுவானோ விழித்ததும் நிச்சயம் அதை அடைவான்.(33) விஷம ஆசாரத்துடன் பாப கர்மத்தைச் செய்யும் எவனும் அதில் ஏறினால், தூங்கிக் கொண்டிருக்கும் அவனை ராக்ஷசர்கள் அங்கேயே தாக்குவார்கள் {கொன்றுவிடுவார்கள்}.(34)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சுக்ரீவனுக்கு மட்டுமே ஆன புகலிடமாக பிரம்மன் அந்த மலையைப் படைத்தான். அங்கே இருக்கும் மலர்கள் எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருக்கும். நாடு கடந்திருக்கும் சுக்ரீவனும், நான்கு வானரங்களும் உண்பதற்காகவே கனிகள் அங்கே விளைந்தன" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.
இராமா, விளையாடும் மதங்க ஆசிரமவாசிகளான சிசுநாகங்களின் {யானைக்குட்டிகளின்} பெரும் பிளிறல் அங்கேயும் {ரிச்யமூக மலையிலும்}, பம்பையிலும் கேட்கப்படும்.(35) மேகவர்ணம் கொண்டவையும், கொழுத்தவையுமான பரம துவீபங்கள் {சிறந்த யானைகள்} ஒன்றோடு ஒன்று மோதி உதிரத்தாரையால் நனைந்து, தனித்தனியே பிரிந்து செல்லும்.(36) அங்கே {பம்பையில்} வனத்தில் திரிபவையான அவை, களங்கமற்றதும், அழகுடன் விளங்குவதும், மிக சுகமான ஸ்பரிசம் கொண்டதும், சர்வ கந்தங்களும் {அனைத்து நறுமணங்களும்} நிறைந்ததுமான தண்ணீரைப் பருகி தாகம் தணிந்து வனத்திற்குள் மீண்டும் செல்லும்.(37,38அ) கரடிகளையும், புலிகளையும், நீலக் கோமள ஒளியுடன் கூடியவையும், தோல்வியை அறியாதவையுமான ருருக்களையும் {மான்களையும்} கண்டு சோகத்திலிருந்து விலகுவாய்.(38ஆ,39அ)
காகுத்ஸ்த ராமா, அந்த சைலத்தில், பாறைகளால் மறைக்கப்பட்ட {சிலாபிதானம் என்ற பெயரைக் கொண்ட} மஹத்தான குகை விளங்குகிறது. அதில் பிரவேசிப்பதும் துக்கமாகும் {அந்தக் குகையில் நுழைவது கஷ்டம்}.(39ஆ,40அ) அந்தக் குகையின் கிழக்கு துவாரத்தில் {வாயிலில்}, குளிர்ந்த நீரையும், ஏராளமான கிழங்குகளையும், பழங்களையும் கொண்டதும், ரம்மியமானதும், நானாவித மரங்களால் நிறைந்ததுமான மஹா ஹ்ரதம் {மடு} ஒன்று இருக்கிறது.(40ஆ,41அ) சுக்ரீவன், நான்கு வானரர்களுடன் சேர்ந்து அங்கேதான் {அந்தக் குகையில்தான்} வசிக்கிறான். சிலநேரங்களில் அவன் {சுக்ரீவன்} அந்த பர்வதத்தின் சிகரத்தில்கூட இருப்பான்" {என்றான் கபந்தன்}.(41ஆ,42அ)
வீரியவானும், மாலை அணிந்தவனுமான கபந்தன், ராமலக்ஷ்மணர்கள் இருவரிடமும் இவ்வாறு சொல்லிவிட்டு, வானத்தில் பாஸ்கர வர்ணத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(42ஆ,43அ) இராமலக்ஷ்மணர்களான அவர்கள் இருவரும், வானத்தில் நின்று கொண்டிருந்தவனும், மஹாபாக்யவானுமான கபந்தனின் அருகில் சென்று, "நீ செல்லலாம்" என்ற வாக்கியத்தைச் சொன்னார்கள்.(43ஆ,44அ) அப்போது புறப்படத் தயாராக இருந்த கபந்தனும், மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, "காரியம் சித்திக்கட்டும். புறப்படுவீராக" என்று சொன்னான்.(44ஆ,45) அந்தக் கபந்தன், அந்த ரூபத்தை மீண்டும் அடைந்து, அழகால் ஒளிர்பவனாக சூரியனுக்கு ஒப்பான ஒளியுடைய தேகத்துடன் வானத்தில் நின்று, ராமனைப் பார்த்து, {ரிச்யமூகம் இருக்கும் திக்கை}[5] சுட்டிக் காட்டி, "நட்பை ஏற்படுத்திக் கொள்வாயாக" என்று மீண்டும் சொன்னான்.(46)
[5] ஜடாயுவைக் கண்ட இடத்தில் கோதாவரியின் கரையில் இருந்து சற்றே மேற்குத் திசையில் சென்று {3:69:1}, உடனே தெற்கு திசைக்குத் திரும்பி {3:69:2} தண்டகாரண்யத்தைக் கடந்தனர். பிறகும் மூன்று குரோச தூரம் {11 கி.மீ.} கடந்து {3:69:5} கிரௌஞ்சாரண்யத்தில் இருந்து கிழக்கு நோக்கி 3 குரோச தூரம் {11 கி.மீ.} சென்று {3:69:8-10} அயோமுகி எனும் ராக்ஷசியைக் கண்டனர். அவளை அங்கபங்கம் செய்துவிட்டு மீண்டும் வனத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்து எவ்வளவு தூரம் சென்று கபந்தனை அடைந்தனர் என்பது சொல்லப்படவில்லை. இந்த சர்க்கத்தில் கபந்தனும் ரிக்ஷ்யமுக மலைக்கு மேற்கு வழியில் செல்லச் சொல்கிறானே ஒழிய தொலைவைச் சொல்கிறானில்லை. கம்பராமாயணத்தில் பஞ்சவடியில் இருந்து கபந்த வனம் ஐஐந்துக்கும் இரட்டிப்பான யோசனை என்று இருக்கிறது. அது 20 யோசனை எனக் கொண்டால் 293 கி.மீ. யிலிருந்து, 50 யோசனை என்று கொண்டால் 731 கி.மீ.வரை வருகிறது.
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 73ல் உள்ள சுலோகங்கள்: 46
Previous | | Sanskrit | | English | | Next |