Kabandha's acts done before | Aranya-Kanda-Sarga-71 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கபந்தன் தன் கதையைச் சொல்லிவிட்டு, சீதையைக் கண்டுபிடிப்பதில் ராமனுக்கு உதவுவதாக உறுதி அளித்தது; தன்னை தகனம் செய்யுமாறு ராமனிடம் வேண்டிய கபந்தன்...
{கபந்தன் தொடர்ந்தான்}, "மஹாபாஹுவே, மஹாபலவானே, பராக்கிரமனே, ராமா, பூர்வத்தில் சூரியனுக்கும், சோமனுக்கும் {சந்திரனுக்கும்}, சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} எப்படிப்பட்ட வபு {உடல்} உண்டோ, அப்படியே சிந்தனைக்கு எட்டாத வகையில் திரிலோகங்களிலும் புகழ்பெற்றதாக என் ரூபம் இருந்தது.(1,2அ) இராமா, அத்தகைய நான், உலகத்தை அச்சுறுத்தும் வகையில் மஹத்தான இந்த ரூபத்தை ஏற்று, ஆங்காங்கே வனத்தில் திரியும் ரிஷிகளை அச்சுறுத்திக் கொண்டிருந்தேன்.(2ஆ,3அ) அப்போது {ஒரு நாள்}, விதவிதமான வனப்பொருட்களை {கனிகளையும், கிழங்குகளையும், விறகுகளையும்} திரட்டுவதற்காக வந்த ஸ்தூலசிரர் என்ற பெயரைக் கொண்ட மஹரிஷி, என்னுடைய இந்த ரூபத்தை தரிசித்து {அச்சமடைந்து} என்னிடம் கோபமடைந்தார்.(3ஆ,4அ) என்னைக் கண்டதும், அவர் என்னிடம் இவ்வாறு சொன்னார், "மிகக் கொடூரமான, அருவருக்கத்தக்க இந்த ரூபமே {உன்னில்} நிலைத்திருக்கட்டும்" என்று கோரமாக சபித்தார் {ஸ்தூலசிரஸ்}.(4ஆ,5அ)
குரோதத்தால் அவர் சபித்துவிட்டாலும், இந்த சாபத்திற்கான அந்தத்தை {முடிவை} நான் யாசித்தபோது, அவர் {ஸ்தூலசிரஸ்} இந்தச் சொற்களைச் சொன்னார்:(5ஆ,6அ) "இராமன், உன் கைகளை வெட்டி, உன்னை ஜனங்களற்ற வனத்தில் தகனம் செய்யும்போது, நீ உனக்குரிய விபுல சுப ரூபத்தை {மகத்தான மங்கல வடிவை} மீண்டும் அடைவாய்" {என்றார் ஸ்தூலசிரஸ்}.(6ஆ,7அ)
இலக்ஷ்மணா, அழகுடன் செழித்திருந்த, தனுவின் புத்திரனான எனக்கு, போர்க்களத்தில் இந்திரனின் கோபத்தால் இந்த ரூபம் வாய்த்தது என்பதை நீ அறிவாயாக[1].(7ஆ,8அ) உக்கிர தபத்தால் நான் பிதாமஹரை {பிரம்மதேவனை} நிறைவடையச் செய்தேன். அவர் எனக்கு தீர்காயுளை {வரமாக} அளித்தார். பிறகு என்னை மாயம் {குழப்பம்} பற்றியது[2].(8ஆ,9அ) "எனக்கு தீர்க்க ஆயுள் வாய்த்திருக்கும்போது, சக்ரன் {இந்திரன்} என்னை என்ன செய்துவிடுவான்" என்று அடைந்த புத்தியை நம்பி ரணத்தில் சக்ரனை {போரில் இந்திரனைத்} தாக்கினேன்.(9ஆ,10அ) அவனது {இந்திரனின்} கையில் இருந்து ஏவப்பட்ட, நூறு கணுக்களுள்ள வஜ்ரத்தால் தொடைகளும், சிரமும் சரீரத்திற்குள் பிரவேசித்தன.(10ஆ,11அ)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதற்கு முன்பு, சாபத்திற்கான காரணம் சொல்லப்பட்டது. இப்போது அந்த சாபத்தின் விளைவு எப்படி வாய்த்தது என்பது சொல்லப்படுகிறது.
[2] தர்மாலயப் பதிப்பில், "அப்பொழுது முதல் என்னை மனதுக்கு வந்தபடி எதையும் செய்தலென்பது பற்றிற்று" என்றிருக்கிறது. கோரக்பூர் பதிப்பில், "எனக்கு வரமாக நீண்ட ஆயுளைத் தந்தார். அதைப் பெற்றவுடன் என் மனம் பேதலித்தது" என்றிருக்கிறது.
நான் யாசித்தபோதும், யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பாதவன் {இந்திரன்}, "அந்தப் பிதாமஹரின் {பிரம்மரின்} சொற்கள் சத்தியமாகட்டும்" என்று என்னிடம் சொன்னான்[3].(11ஆ,12அ) "வஜ்ரத்தால் தாக்கப்பட்டு, தொடைகளும், சிரமும், முகமும் {வாயும்} முறிந்த நிலையில், ஆஹாரமேதும் இல்லாமல் மிக நீண்ட காலம் ஜீவிப்பது எப்படி சாத்தியம்?" {என்று கேட்டேன்}.(12ஆ,13அ)
[3] இந்திரனின் வஜ்ரம் என் தொடைகளையும், தலையையும் என் உடலுக்குள் செருகியது.
நான் இதைச் சொன்னபோது, சக்ரன் {இந்திரன்}, யோஜனை நீளக் கைகளைப் படைத்து, கூரிய பற்களையுடைய வாயையும் என் தொந்தியில் உண்டாக்கினான்.(13ஆ,14அ) அத்தகைய மிக நீண்ட கைகளுடன் கூடிய நான், இந்த வனத்தில் எங்கும் திரிந்து, சிம்ஹங்கள், துவீபங்கள் {யானைகள்}, மிருகங்கள் {மான்கள்}, வியாகரங்கள் {புலிகள்} ஆகியவற்றைப் பிடித்திழுத்து பக்ஷித்துவருகிறேன்.(14ஆ,15அ) அந்த இந்திரன் என்னிடம் சொன்னான், "எப்போது ராமனும், லக்ஷ்மணனும் சமரில் உன் கைகளை வெட்டுகிறார்களோ, அப்போது ஸ்வர்க்கம் செல்வாய்" {என்று சொன்னான்}.(15ஆ,16அ)
இராஜசத்தமா {வலிமைமிக்க மன்னா}, தாதா {ஐயா}, இந்த வபுவுடன் {உடலுடன்} கூடிய நான், {அதுமுதல்} இந்த வனத்தில் எதையெதை பார்க்கிறேனோ, அவை அனைத்தையும் பிடித்து இழுப்பதையே முறையாக விரும்பினேன்.(16ஆ,17அ) 'இராமன் அவசியம் கிரஹணத்தை நெருங்குவான் {நம் கைகளில் அகப்படுவான்}' என்று நான் நினைத்தேன். இந்த புத்தியில் நம்பிக்கை வைத்தே தேஹத்தை ஒழிப்பதற்காக {அவ்வாறு} சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன்.(17ஆ,18அ) இராகவா, அத்தகைய ராமனான நீ, நலமாக இருப்பாயாக. "என்னை அந்நியன் {வேறு ஒருவன்} கொல்வது சாத்தியமில்லை" என்று மஹரிஷி சொன்னபடியே நடந்துள்ளது.(18ஆ,19அ) நரரிஷபா, நான் உங்கள் இருவராலும் அக்னியில் சம்ஸ்கிருதமடைந்தால் {நெருப்பில் தூய்மையடைந்தால் / சிதையில் தகனம் செய்யப்பட்டால்}[4], என் மதியின் உதவியையும், மித்ரனையும் {நண்பனையும்} அடைவதற்கு ஆலோசனை சொல்வேன்" {என்றான் கபந்தன்}.(19ஆ,20அ)
[4] கபந்தன் தன்னை எரிக்கச் சொல்வதும், ராகவர்கள் அவனை எரிப்பதும் கம்பராமாயணத்தில் இல்லை.
தனுவின் மகனானவன்[5] இவ்வாறு சொன்னதும், தர்மாத்மாவான ராகவன், லக்ஷ்மணன் அருகில் கேட்டுக் கொண்டிருக்க, இந்தச் சொற்களைச் சொன்னான்:(20ஆ,21அ) "என் பாரியையும் {மனைவியும்}, புகழ்பெற்றவளுமான சீதையை ராவணன் சுகமாகக் கடத்திச் சென்ற பிறகு, நான் என்னுடன்பிறந்தானுடன் ஜனஸ்தானத்தைவிட்டு வெளியே வந்தேன்.(21ஆ,22அ) அந்த ராக்ஷசனின் பெயரை மாத்திரமே நான் அறிவேன். அவனது ரூபத்தையோ, வசிப்பிடத்தையோ, பிரபாவத்தையோ நாங்கள் அறியமாட்டோம்.(22ஆ,23அ) சோகத்தால் பீடிக்கப்பட்ட அநாதைகளாக இவ்வாறு எங்கும் அலைந்து திரிந்தும், பிறருக்கு உபகாரம் {உனக்கு உதவி} செய்பவர்களிடம் காருண்யம் {கருணை} காட்டுவதே உனக்குத் தகும்.(23ஆ,24அ) வீரா, காலத்தில் குஞ்சரங்களால் {எப்போதோ யானைகளால்} பிளக்கப்பட்ட உலர்ந்த கட்டைகளைக் கொண்டு வந்து, பெரிய குழியை ஏற்பாடு செய்து, நாங்கள் உன்னை எரித்து சாம்பலாக்குவோம்.(24ஆ,25அ) இத்தகைய நீ, எவன், எங்கே சீதையைக் கடத்திச் சென்றான் என்பதை உள்ளபடியே அறிந்தால் தெளிவாகச் சொல்வாயாக. நீ அதிக நன்மையை {பேருதவியைச்} செய்தவனாவாய்" {என்றான் ராமன்}[6].(25ஆ,26அ)
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தக் கபந்தன் குறித்தும், அவனது குலம் குறித்தும் பல்வேறு இடங்களில், பலவாறாக ஓரிரு சொல் மாறுபாடுகளுடன் சொல்லப்படுகின்றன. இலக்கணவாதிகளுக்கே புதிராக இருப்பவை அவை. இவன் கந்தர்வத் தன்மை அருளப்பட்ட ராக்ஷசன் என்பதையும், பிறகு ராக்ஷசத் தன்மையை அடைந்தான் என்பதையும், பிறகு ராமனின் அருளால் மீண்டும் கந்தர்வனாகி சொர்க்கத்தை அடைந்தான் என்பதையும் மட்டும் நாம் அறிவோம்" என்றிருக்கிறது.
[6] "நாங்கள் நிச்சயம் உன்னை தகனம் செய்வோம். நீ எரிந்து விட்டால் உனக்குத் தெரிந்ததை எப்படிச் சொல்வாய்? எனவே, இப்போதே சொல்" என்று கேட்கிறான் ராமன்.
இராமன் இவ்வாறு சொன்னதும், நன்கு பேசக்கூடியவனான தனு {தனுவின் மகன் கபந்தன்}, நன்கு பேசக்கூடிய ராகவனிடம் {பின்வரும்} உத்தம வாக்கியங்களை மறுமொழியாகச் சொன்னான்:(26ஆ,27அ) "எனக்கு திவ்ய ஞானம் கிடையாது. மைதிலியையும் நான் அறியமாட்டேன். எரிந்த பிறகு, சுயரூபத்தை அடைந்ததும், எவன் அவளை {சீதை கடத்தப்பட்டதை} அறிவானோ, அவனை வெளிப்படுத்துவேன்.(27ஆ,28அ) பிரபுவே, எவன் உன்னுடைய சீதையைக் களவாடினானோ, அந்த வீரியமிக்க ராக்ஷசனை அறிவது, எரிக்கப்படாத எனக்கு சாத்தியமில்லை. இராமா, உண்மையில் அதன் {எரித்த} பிறகே, எவனால் அந்த ராக்ஷசனை அறியச் செய்ய முடியுமோ, அவனை நான் வெளிப்படுத்துவேன்.(28ஆ,29) இராகவா, சாபதோஷத்தால் விஜ்ஞானத்தை {நல்லறிவை} இழந்துவிட்டேன். என் வினையால், உலகத்தால் வெறுக்கப்படும் ரூபத்தை நான் அடைந்தேன்.(30) ஆனால், ராமா, சவிதன் {சூரியனின்} களைத்த வாஹனத்துடன் அஸ்தம் {களைத்துப் போன குதிரைகளுடன் அஸ்த மலையை} அடைவதற்கு முன், விரைவாக என்னைக் குழிக்குள் தள்ளி, விதிப்படி தஹனம் செய்வாயாக[7].(31) மஹாவீரா, ரகுநந்தனா, என்னை நீ நியாயப்படி குழிக்குள் இட்டு, தஹனம் செய்த பிறகு, எவன் அந்த ராக்ஷசனை அறிவானோ, அவனைக் குறித்துத் தெரியப்படுத்துவேன்.(32) இராகவா, நியாய விருத்தம் {நியாயமான நடத்தை} கொண்ட அவனிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்வாயாக. அந்த லகுவிக்கிரமன் {வேகமும், வலிமையும் கொண்டவனான அவன்} பிரீதியுடன் உனக்கு சகாயத்தைச் செய்வான்.(33) இராகவா, பூர்வத்தில் ஒரு காரணத்தால் சர்வலோகங்களையும் சுற்றிவந்தவனாதலால், திரிலோகங்களிலும் அவனறியாதது ஏதுமில்லை[8]" {என்றான் கபந்தன்}.(34)
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பிலுள்ள சாரம் பின்வருவது, "கபந்தன், எனக்கு அறிவில்லை... நான் பகுத்தறிவை இழந்துவிட்டேன்... போன்ற வசனங்களைச் சொல்லிக் கொண்டிருந்தாலும், ராமனுக்கு உதவி செய்ய யாரோ இருக்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் மறைக்கிறான். சூரியனின் குதிரைகள் ஒருபோதும் களைப்பதில்லை. ஆனால், ராமனுக்கு ஏதோ செய்தியைச் சொல்ல விதிக்கப்பட்ட கபந்தனின் கோரவுடல்தான் களைத்திருக்கிறது. மறையும் சூரியனைக் குறிப்பிடப்படுகையில், உதிக்கும் சூரியனும் மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது. அதே போல, கபந்தன் தகனத்திற்குப் பிறகு, ராமனுக்கு செய்தியைச் சொல்லும் வாஹனமாக மீண்டெழுவான் என்பது இங்கே உவமை. இதை ராமன் புரிந்து கொள்கிறான்".
[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பின் சுருக்கம் பின்வருமாறு, "இறுதிவரை அது சுக்ரீவன் என்பதைச் சொல்ல மறுக்கிறான் கபந்தன். ஒருவேளை சொல்லியிருந்தால் ராமன் கபந்தனை எரிக்காமல் விடவும் வாய்ப்புண்டு என்பதால் இவ்வாறு செய்கிறான். இறக்காத உயிரினங்களை எரிப்பது மனிதவழக்கமல்ல".
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 71ல் உள்ள சுலோகங்கள்: 34
Previous | | Sanskrit | | English | | Next |