Rishyamuka | Kishkindha-Kanda-Sarga-01 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் புலம்பல்; இலக்ஷ்மணனின் தூண்டல்; இராமலக்ஷ்மணர்கள் ரிச்யமூகம் நோக்கிச் சென்றது; அவர்களைக் கண்டு அஞ்சிய சுக்ரீவன்...
சௌமித்ரி {லக்ஷ்மணன்} சஹிதனான அந்த ராமன், பத்மங்கள் {தாமரைகள்}, உத்பலங்கள் {குவளைகள்}, மீன்கள் நிறைந்த அந்த புஷ்கரிணிக்குச் சென்று, இந்திரியங்கள் கலங்கியவனாகப் புலம்பினான்.(1) அதைக் கண்டதனால் உண்டான மகிழ்ச்சியாலும், இந்திரியங்களின் நடுக்கத்தாலும் காமவசப்பட்டவனாக அவன், சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம்} இவ்வாறு சொன்னான்:(2) "சௌமித்ரியே, வைடூரியம் போன்றத் தெளிந்த நீருடனும், மலர்ந்த பத்மங்கள், உத்பலங்களுடனும், விதவிதமான மரங்களுடனும் பம்பை சோபித்து விளங்குகிறது.(3) சௌமித்ரியே, சிகரங்களுடன் கூடிய மலைகளைப் போன்ற அழகிய மரங்களுடன் சுப தரிசனந்தரும் பம்பையின் கானகத்தைப் பார்.(4) பரதனின் துக்கத்திலும், வைதேஹி கடத்தப்பட்டதிலும் சோகத்தால் நன்கு பீடிக்கப்பட்ட உணர்வுகளுடன் துயரத்தில் வேதனையடைகிறேன்[1].(5)
[1] வி.வி.சுப்பாராவ், பி.கீர்வானி பதிப்பில், "பரதனின் துக்கத்திலும், வைதேஹி கடத்தப்பட்டதிலும் சோகத்தால் நன்கு பீடிக்கப்பட்ட என்னை வசந்த ருது மேலும் வருத்துகிறது" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பைத் தவிர கிட்டத்தட்ட அனைத்துப் பதிப்புகளிலும் இவ்வாறான பொருளிலேயே இந்த சுலோகம் அமைந்திருக்கிறது.
நான் சோகத்தில் இருந்தாலும், பலவிதமான புஷ்பங்கள் சிதறிக் கிடப்பதும், குளிர்ந்த நீரைக் கொண்டதும், சித்திரக் கானகங்களுடன் கூடியதுமான மங்கலப் பம்பை அழகாகத் தெரிகிறது.(6) சர்ப்பங்களும் {பாம்புகளும்}, வியாலங்களும் {மலைப்பாம்புகளும்} திரிவதும், மிருக, துவிஜங்கள் {விலங்குகளும், பறவைகளும்} நிறைந்ததுமான இது நளினங்களால் {தாமரைகளால்} மறைக்கப்பட்டு மங்கலமிக்கதாகக் காட்சியளிக்கிறது.(7) நீலமும், மஞ்சளுமாக இந்தப் பசும்புல் தரை அனைத்தும், மரங்களின் விதவிதமான புஷ்பங்களால் கம்பளம் போல மறைக்கப்பட்டு அதிகம் பிரகாசிக்கிறது.(8) சுற்றிலும் புஷ்பபாரம் நிறைந்த நுனிகளுடன் கூடிய மரங்களில் புஷ்பித்த லதைகள் {கொடிகள்} எங்கும் படர்ந்திருக்கின்றன.(9) சௌமித்ரியே, இந்த அநிலன் {காற்று} சுகமாக இருக்கிறான். இந்தக் காலம் {வசந்த ருது} மன்மதனால் கவர்ச்சியுற்றிருக்கிறது. நறுமணமிக்க இந்த ஸுரபி {சித்திரை} மாசத்தில் புஷ்பங்களும், பழங்களும் மரங்களில் நிறைந்திருக்கின்றன.(10)
இலக்ஷ்மணா, நீரைப் பொழியும் மழைமேகங்களைப் போல புஷ்ப வர்ஷம் {மலர்மாரி} பொழிகிறது. புஷ்பங்களால் நிறைந்திருக்கும் வனங்களின் ரூபங்களைப் பார்.(11) விதவிதமான காட்டு மரங்களுடன் மலைச்சாரல்கள் ரம்மியமாகத் திகழ்கின்றன. புஷ்பங்கள் வாயு வேகத்தால் நன்கு அசைந்து தரையில் பொழிகின்றன.(12) விழுந்தவையும், விழப்போகிறவையும், இன்னும் மரங்களில் இருப்பவையுமான மலர்களில் விளையாடுபவனைப் போல எங்கும் திரியும் மாருதனை{காற்றைப்} பார்.(13) பூத்துக் குலுங்கும் மரங்களின் விதவிதமான சாகைகளை {கிளைகளை} அசைக்கும் மாருதன், தான் அசைத்த ஸ்தானங்களிலுள்ள சட்பதங்களால் {ஆறு பாதங்களைக் கொண்ட வண்டுகளின் ரீங்காரத்தால்} பாடப்படுகிறான்.(14) மலைக்குகைகளில் இருந்து வெளிப்படும் அனிலன் {காற்று}, மதங்கொண்ட கோகிலங்களின் {குயில்களின்} கூவல்களால் பாடப்பெற்றவன் போலவும், மரங்களை ஆடச் செய்பவன் போலவும் தெரிகிறான்.(15)
எங்கும் வீசும் பவனனால் {காற்றால்} நன்கு அசைக்கப்படும் மரங்களின் இந்த சாகை நுனிகள் {கிளை நுனிகள்} ஒன்றாகப் பின்னப்பட்டவை போலிருக்கின்றன.(16) சுகமான ஸ்பரிசத்துடன், சந்தனம் போல் குளிர்ந்து வீசும் புண்ணியமான அநிலன் {காற்று}, நறுமணத்தைச் சுமந்து வந்து, சிரமத்தைக் களைகிறான்.(17) பவனனால் {காற்றால்} அசையும் இந்த மரங்கள், ஆனந்தமடைந்ததைப் போல சட்பதங்களின் {ஆறுபாதங்களைக் கொண்ட வண்டுகளின்} ரீங்காரத்துடன் வனத்தை மது கந்தங் கொள்ள {தேன்மணக்கச்} செய்கின்றன.(18) மனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் புஷ்பித்து, சிகரங்களால் பின்னப்பட்ட சைலங்களை {மலைகளைப்} போல, உண்மையில் பெரும் மரங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரிபிரஸ்தங்கள் {மலைச்சாரல்கள்} ரம்மியமாக இருக்கின்றன.(19) புஷ்பங்களால் மறைக்கப்பட்ட சிகரங்களுடன் {உச்சிகளுடன்} கூடியவையும், மாருதனால் அசைக்கப்பட்டு ஆடுபவையுமான இவை {இந்த மரங்கள்}, மகுடங்கள் போன்ற மதுகரங்களால் {தேனீக்களால்} நன்கு பாடப்பெற்றவை போல இருக்கின்றன {ஆடுகின்றன}.(20)
தங்க ஆபரணங்கள் அணிந்து, பீதாம்பரங்களைத் தரித்த நரர்களை {மனிதர்களைப்} போல, நன்கு புஷ்பித்த இந்தக் கர்ணிகாரங்கள் {கோங்கு மரங்கள்} எங்குமிருப்பதைப் பார்.(21) சௌமித்ரி {லக்ஷ்மணா}, பறவைகள் பலவும் ஒலிக்கும் இந்த வசந்தம், சீதையைப் பிரிந்த என் சோகத்தை மேலும் அதிகரிக்கிறது.(22) கோகிலம் மகிழ்ச்சியாகக் கூவி {சோகத்தில் இருக்கும்} என்னை வரவேற்கிறது {பரிகசிக்கிறது}. சோகத்தால் பீடிக்கப்பட்ட என்னை மன்மதன் துன்புறுத்துகிறான்.(23) மன்மதனால் பீடிக்கப்பட்டு வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும் என்னை, ரம்மியமான வனத்தின் நீரோடையில் உள்ள நீர்க்கோழி மகிழ்ச்சியுடன் அழைக்கிறது.(24) பூர்வத்தில், ஆசிரமத்தில் இருந்தபோது, என் பிரியை {காதலியான சீதை} இந்த சப்தத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து, என்னை அழைத்து, பரம ஆனந்தம் அடைந்தாள்.(25)
அவ்வகையிலான விசித்திர பறவைகள், பலவிதமான ஒலிகளை வெளியிட்டபடியே விருக்ஷங்கள், குல்மங்கள், லதைகள் {மரங்கள், செடிகள், கொடிகள்} என எங்கும் இறங்குவதை {வந்தமர்வதைப்} பார்.(26) பெண்பறவைகள், ஆண் பறவைகளுடன் கலந்து தங்கள் இனத்துடன் ஆனந்தமாக இருக்கின்றன. சௌமித்ரி {லக்ஷ்மணா}, பிருங்கராஜங்கள் {ராஜவண்டுகள்} மகிழ்ச்சியடைந்து மதுர சுவரம் இசைக்கின்றன.(27) இங்கே இதன் {பம்பையின்} கரையில் மகிழ்ச்சியுடன் கூடும் பறவைக் கூட்டங்களும், நீர்க்கோழிகளும் ஒலிக்கும் ஒலியும், இந்த மரங்களில் ஆண் கோகிலங்களின் கூவல்களும் என்னில் அனங்கனைத் {மன்மதனைத்} தூண்டும் வகையில் ஒலிக்கின்றன[2].(28,29அ) வசந்தாக்னி {வசந்த காலமெனும் நெருப்பானது}, அசோகப் பூங்கொத்துகளெனும் தணல்களையும், தளிர்களெனும் ஜுவாலைகளையும், சட்பதங்களின் {ஆறுபாதங்களைக் கொண்ட வண்டுகளின்} ரீங்காரமெனும் கொதிப்பையுங் கொண்டு என்னை தஹிக்கிறது {எரிக்கிறது}.(29ஆ,30அ)
[2] ஆரியம் முதலிய பதினெண் பாடையில்பூரியர் ஒரு வழிப் புகுந்தது ஆம் எனஓர்கில கிளவிகள் ஒன்றோடு ஒப்பு இலசோர்வு இல விளம்பு புள் துவன்றுகின்றது- கம்பராமாயணம் 3721ம் பாடல், பம்பை வாவிப் படலம்பொருள்: ஆரியம் முதலிய பதினெட்டு மொழிகளில் புலமை இல்லா புல்லறிவாளர் ஓரிடத்தில் கூடி ஆரவரிப்பது போல ஆராய்ந்து அறிதற்கியலாத ஒலிகள் ஒன்றோடொன்று தொடர்பு இல்லாதனவாக ஓய்தலின்றி ஒலிக்கும் பறவைகள் நெருங்கியிருக்கப் பெற்றது {அந்த பம்பை பொய்கை}.
இலக்ஷ்மணா, மெல்லிய இமைகளுடன் கூடிய கண்களையும், அழகிய கேசத்தையும் கொண்டவளும், மிருதுபாஷிணியுமான {மென்மையாகப் பேசுபவளுமான} அவளைக் காணாமல் நான் ஜீவிப்பதில் எந்தப் பயனும் இல்லை.(30ஆ,31அ) அனகா {களங்கமற்றவனே}, எங்கும் கோகிலங்களால் நிறைந்து, கானகங்கள் அழகுற்று விளங்கும் இந்தக் காலமே {வசந்த காலமே} என் அன்புக்குரியவளுக்கு மிகப் பிடித்தமானது.(31ஆ,32அ) மன்மதனின் ஆயாசங்களில் பிறக்கும் இந்த சோகாக்னி, வசந்தத்தின் குணத்தால் வளர்ந்து, என்னை சீக்கிரமாகவே எரிக்கப் போகிறது.(32ஆ,33அ) அந்த வனிதையைப் பார்க்க முடியாமல், அழகிய மரங்களைப் பார்க்கும் என்னில் ஒளிரும் இந்த துன்பம் {மன்மதப்பீடை} தீவிரம் அடையப் போகிறது.(33ஆ,34அ) இப்போது வைதேஹி புலப்படாததும், வியர்வையின் ஸ்பரிசத்தை விலக்கும் வசந்த காலம் புலப்படுவதும் என் சோகத்தை அதிகரிக்கின்றன.(34ஆ,35அ) சௌமித்ரியே, அந்த மான்விழியாளைச் சிந்தித்து, சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் என்னை, உண்மையில் சைத்ர வன அநிலன் {சித்திர மாதம் காட்டில் வீசும் காற்றானவன்} குரூரமாக வாட்டுகிறான்.(35ஆ,36அ)
ஆங்காங்கே அழகாக ஆடும் இந்த மயூரங்கள் {மயில்கள்}, பவனனால் {காற்றால்} அசைக்கப்படும் தங்கள் சிறகுகளுடன் ஸ்படிகச் சாளரங்களைப் போல பிரகாசிக்கின்றன.(36ஆ,37அ) சிகினிகளால் {பெண்மயில்களால்} சூழப்பட்டு, மதத்தில் மூர்ச்சித்திருக்கும் {உற்சாகத்தில் மெய்மறந்திருக்கும்} இவை, மன்மதனால் பரிதவிக்கும் {பிரிவாற்றாமையில் தவிக்கும்} என்னில் மேலும் மன்மதனை {பிரிவாற்றாமையை} வளர்க்கின்றன.(37ஆ,38அ) இலக்ஷ்மணா, கிரியின் உச்சியில் மன்மத ஏக்கத்துடன் இருக்கும் இந்த சிகினி {பெண் மயில்}, தன் பர்த்தாவான மயூரம் ஆடுவதைக் கண்டு தானும் ஆடுவதைப் பார்.(38ஆ,39அ) மயூரமும், தன் அழகிய சிறகுகளை விரித்துச் சிரிப்பது போல அகவல் செய்து, ஏக்கத்துடன் அவளை நோக்கி ஓடுகிறது.(39ஆ,40அ) நிச்சயம் மயூரத்தின் காதலியை ராக்ஷசன் அபகரிக்கவில்லை. எனவேதான், ரம்மியமான வனத்தில் பேடு {பெண்மயில்} சகிதமாக அஃது ஆடிக் கொண்டிருக்கிறது.(40ஆ,41அ) புஷ்பிக்கும் மாசத்தில் அவளில்லாமல் இருப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இலக்ஷ்மணா, சிகினி {பெண்மயில்} காமத்துடன் பர்த்தாவைப் பின்தொடர்ந்து செல்கிறது. திர்யக் யோனியை அடைந்தவற்றிலும் {விலங்குகளிலும் / பறவைகளிலும்} உண்டாகும் பற்றை {காதலைப்} பார்.(41ஆ,42) விசாலாக்ஷியான ஜானகி அபகரிக்கப்படாதிருந்தால் மதனனால் உண்டாகும் பரவசத்தால் அவளும் இவ்வாறே என்னை அணுகியிருப்பாள்.(43)
இலக்ஷ்மணா, சிசிரத்தின் முடிவில் {குளிர்காலம் முடிந்த இந்த வசந்த காலத்தில்}, அபரிமிதமான புஷ்ப பாரத்துடன் கூடியவையாக வனங்கள் இருந்தும், அதன் புஷ்பங்கள் எனக்குப் பலனற்றுப் போகின்றன.(44) மரங்களில் புஷ்பங்கள் மிக அழகாக இருந்தாலும், அவற்றை மொய்க்கும் மதுகரங்களுடன் {தேனீக்களுடன்} சேர்ந்து பலனற்றவையாக மஹீயை {பூமியை} அடைகின்றன.(45) களிப்படையும் பறவைகள், அன்யோன்யம் அழைப்பதைப் போல கூட்டமாக காமத்துடன் கூவி, என்னில் காம உன்மத்தத்தை {பித்தை} விளைவிக்கின்றன.(46) என் பிரியை {காதலி} எங்கே வசிக்கிறாளோ, அங்கேயும் வசந்தம் இருந்தால், நிச்சயம் சீதையும் என்னைப் போல் பரவசத்தையும், சோகத்தையும் அடைவாள்.(47) எங்கே அவள் இருக்கிறாளோ, அந்த தேசத்தை வசந்தம் நிச்சயம் ஸ்பரிசிக்காது. கரியவையும், பத்மம் போன்றவையுமான கண்களைக் கொண்டவள் நான் இல்லாமல் எவ்வாறு பிழைத்திருப்பாள்?(48) அல்லது என் பிரியை எங்கே இருக்கிறாளோ அங்கே வசந்தமும் இருந்தால், பிறரால் அச்சுறுத்தப்படும் அந்த மெல்லிடையாள் என்ன செய்வாள்?(49) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், மிருதுவானவளும், பேசுவதற்கு ஆவல் கொண்டவளுமான அந்த சியாமை {இளமையின் நடுப்பருவத்தைக் கொண்டவள்}, வசந்தத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் நிச்சயம் ஜீவிதத்தைத் துறந்துவிடுவாள்.(50)
சாத்வியான {புனிதவதியான / பதிவிரதையான} சீதை, என்னை விட்டுப் பிரிந்து சென்று பிழைத்திருக்க மாட்டாள் என்ற திடமான கருத்தே என் ஹிருதயத்தில் இருக்கிறது.(51) வைதேஹியைக் குறித்த எண்ணங்கள் மட்டுமே என்னில் இருக்கின்றன. என்னைக் குறித்த எண்ணங்களே சீதையிடமும் இருக்கும்.(52) இந்த புஷ்பங்களை {மலர்களின் நறுமணத்தைச்} சுமந்து வரும் வாயு, பனியையும் {குளுமையையும்} சுமந்து வந்து சுகமான ஸ்பரிசத்தை அளித்தாலும், அந்த காந்தையை {சீதையைச்} சிந்தித்துக் கொண்டிருக்கும் எனக்கு பாவகனை {அக்னியைப்} போலிருக்கிறது.(53) பூர்வத்தில் சீதையுடன் நான் இருந்தபோது, சதா சுகமாக வீசிய அதே மாருதம் {இப்போது} சீதையில்லாமல் சோகத்தையே என்னில் வளர்க்கிறது.(54) அப்போது வானத்திற்குச் சென்று {சீதையைப் பிரியப்போவதை உணர்த்தும் வகையில்} கரைந்த அதே காகம், இதோ அவளில்லாத போது மரத்திற்குச் சென்று {அவள் சீக்கிரமே வரப்போவதை அறிவிப்பதைப் போல} மகிழ்ச்சியுடன் நன்றாகக் கரைகிறது[3].(55) அப்போது வைதேஹி அபகரிக்கப்படப் போவதை அறிவித்த அதே பக்ஷிதான் என்னை அந்த விசாலாக்ஷியின் {நீள்விழியாளான சீதையிடம்} அழைத்துச் செல்லப் போகிறது.(56)
[3] காக்கை கரைதலில் இஃது ஒரு சகுனம். ஆகாயத்தில் இருந்து கரைந்தால் அபசகுனம். மரத்தில் இருந்து கரைந்தால் சுபசகுனம்.
இலக்ஷ்மணா, வனத்தில் புஷ்பித்த மரங்களின் உச்சிகளில், மதத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் கூவும் பறவைகளைப் பார்.(57) அந்த சட்பதம் {ஆறு கால்களைக் கொண்ட வண்டு}, பவனனால் {காற்றால்} அசையும் இந்த திலக மஞ்சரியை {பூங்கொத்தை}, பிரியையை {காதலியைப்} போல் மதம் பெருக திடீரென அணைக்கிறது.(58) காமிகளின் {காதலர்களின்} பெருஞ்சோகத்தை அதிகரிக்கும் அந்த அசோகம், பவனனால் அசைக்கப்படும் பூங்கொத்துகளுடன் என்னை மிரட்டுவது போல நிற்கிறது.(59) இலக்ஷ்மணா, மலர்களைச் சுமக்கும் இந்த மாமரங்கள், காதலால் தூண்டப்பட்ட மனத்துடன், {சந்தனக்} குழம்பு பூசிக் கொண்ட நரர்களைப் போல் காணப்படுகின்றன.(60)
நரசார்தூலா, சௌமித்ரியே, பம்பையின் சித்திர வனப்பகுதிகளில் கின்னரர்கள் ஆங்காங்கே திரிவதைப் பார்.(61) இலக்ஷ்மணா, சுபகந்தம் {நறுமணம்} கொண்ட இந்த நளினங்கள் {தாமரைகள்} ஜலம் எங்கிலும் இளஞ்சூரியனைப் போலப் பிரகாசிப்பதைப் பார்.(62) பம்பையில், பத்மங்களும், நீலோத்பலங்களும் நிறைந்த தெளிந்த நீரில், இதோ ஹம்சங்களும், காரண்டவங்களும், சௌகந்திகங்களும் இருக்கின்றன {பிரகாசிக்கின்றன}.(63) தேனீக்கள் மொய்க்கும் பூந்தாதுக்களுடன் கூடிய பங்கஜங்கள் {தாமரைகள்}, இளஞ்சூரியனின் பிரகாசத்துடன் பம்பையின் ஜலத்தில் பிரகாசிக்கின்றன.(64) நித்தியம் சக்கரவாகங்களுடன் கூடிய சித்திர வனாந்தர பிரஸ்தங்கள் {பகுதிகள்}, நீரைத் தேடி வரும் மாதங்கங்கள் {யானைகள்}, மிருகங்களின் {மான்களின்} கூட்டங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன[4].(65)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பம்பை ஒரு தடாகமா, ஆறா என்ற ஒரு விவாதம் இருக்கிறது. இந்தியாவின் கர்னாடக மாநிலத்தில் துங்கம், பத்திரை என்ற இரண்டு ஆறுகள் சங்கமித்த பிறகு துங்கபத்திரை என்று அழைக்கப்படுகிறது. விஜயநகர சாம்ராஜ்ஜியம் இந்த இடத்தில் தான் தலைநகரான ஹம்பியை நிர்மாணித்தது. வட்டார மொழியான கன்னடத்தில் "ஹ" என்று வரும் எழுத்து சம்ஸ்கிருதத்தில் "ப" என்று மாறுகிறது. எனவே பம்பை ஹம்பி ஆனது. விஜயநகர சாம்ராஜ்யம் நிறுவப்படுவதற்கு முன்பு குரங்கு மன்னர்களின் தலைநகரான கிஷ்கிந்தை இருந்த இவ்விடம் பம்பை என்றே அழைக்கப்பட்டது. "மைசூருக்கு வடக்கிலும், மேற்கிலும் இருந்த வானரர் அல்லது குரங்கு ராஜ்ஜியத்தின் தலைநகரான கிஷ்கிந்தை துங்கபத்திரையில் உள்ள ஹம்பி கிராமத்தின் அருகே இருந்தது" என்று பந்தார்க்கரின் (Bhandarkar) Mysore and Conty Vol.I, பக்கம் 178, Reie Vol.I பக்கம் 146, Bombay Gazetteer Vol.I பக்கம் 142 ஆகியவற்றில் இருக்கிறது. பரீக்ஷித்தின் மகனான ஜனமேஜயன், தன் பாட்டனான மஹாபாரத கால யுதிஷ்டிரன், துங்கபத்திரை நதிக்கரையில் ஓய்வெடுத்த பம்பை பகுதிக்குச் சில மானியங்களை அளித்ததைத் தெரிவிப்பவையும், பொ.ஆ.மு.3012 காலத்திற்குரியவையுமான நான்கு செப்புத் தகடுகள் கர்னாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில் இருக்கின்றன. {ஆதரம்: https://gazetteer.karnataka.gov.in/storage/pdf-files/SHIMOGA%20DISTRICT.pdf பக்கம் 427 [இந்த பிடிஎஃப் கோப்பில் 14ம் பக்கம்]} தற்போது கர்னாடக மாநிலத்தில் உள்ள ஹோஸ்பேட், ஹம்பி ஆகிய இடங்களில் துங்கபத்திரை, வரதை, ஹகாரி மற்றும் அவற்றின் கிளைகள் ஆறுகள் சங்கமித்துச் செல்கின்றன" என்றிருக்கிறது.
இலக்ஷ்மணா, தெளிந்த நீரில் பவனனின் {காற்றின்} வேகத்தால் உண்டாகும் அலைகளின் மூலம் {ஒன்றோடொன்று} மோதிக்கொள்ளும் பங்கஜங்கள் {தாமரைகள்} பிரகாசிக்கின்றன.(66) பத்ம இதழைப் போன்ற நீள்விழிகளைக் கொண்டவளும், சதா பங்கஜங்களை விரும்புகிறவளுமான வைதேஹியைக் காணாமல் என் ஜீவிதத்தை நான் விரும்பவில்லை.(67) அஹோ, காமனின் வாமத்வம் {வஞ்சகம்} இது. தொலைந்து போனவளை மீட்க முடியாமல் போனாலும், மங்கலமானவற்றைச் சொல்லும் அந்தக் கல்யாணியைப் பற்றிய நினைவுகளை {காமன்} ஏற்படுத்துகிறான்.(68) புஷ்பித்த மரங்களுடன் கூடிய வசந்தம் {வசந்த ருது} என்னைக் கொல்லாதிருந்தால், இப்போது பலவந்தமாக என்னை அடைந்திருக்கும் காமனை பொறுத்துக் கொள்வது எனக்கு சாத்தியம்.(69) அவள் என்னுடன் இருந்தபோது மகிழ்ச்சியளித்தவையே {மகிழ்ச்சி அளித்த இடங்கள் / பொருள்களே} அவள் இல்லாமல் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை.(70)
இந்தப் பத்ம மொட்டுகளின் இதழ்களைப் பார்த்து சொக்கிப் போகிறேன். இலக்ஷ்மணா, இவை சீதையின் இரு நேத்திரகோஷங்களை {கண் இமைகளைப்} போலிருக்கின்றன.(71) பத்ம மகரந்தங்களுடன் {மகரந்தங்களின் மணத்துடன்} கூடிய அடர்ந்த விருக்ஷங்களின் மத்தியிலிருந்து வெளிவரும் இதமான வாயு, சீதையின் சுவாசத்தைப் போல மனோஹரமாக இருக்கிறது {மனத்தைக் கொள்ளை கொள்கிறது}.(72) சௌமித்ரி, பம்பையின் தெற்கே கிரிகளின் உச்சிகளில் புஷ்பித்த கர்ணிகாரங்கள் கிளைகளுடன் அழகாகப் பிரகாசிப்பதைப் பார்.(73) தாதுக்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த சைலராஜன் {மலைராஜன்}, வாயுவேகத்தால் இழுக்கப்பட்டு விசித்திரமான புழுதியை அதிகமாக உண்டாக்குகிறான்.(74) சௌம்திரி, கிரிபிரஸ்தங்கள் எங்கும் முற்றுமுழுதாகப் புஷ்பித்து, இலைகள் உதிர்ந்து, எங்கும் ரம்மியமாக கிம்சுகங்களுடன் {பலாச மரங்களுடன்} பிரகாசிப்பதைப் போலத் தெரிகின்றன.(75)
பம்பையின் தீரத்தில் அடர்ந்து முளைத்திருப்பவையும், மதுகந்தம் {தேன்மணம்} நிறைந்திருப்பவையுமான மாலதி {ஜாதிமல்லி}, மல்லிகை, பத்மங்கள், புஷ்பித்த கரவீரங்கள் {அலரிகள்},(76) தாழைகள், நீர் நொச்சிகள், நன்கு புஷ்பித்த வாசந்திகள் {முல்லைகள்}, கந்தம் நிறைந்த மரமல்லிகள் ஆகியன எங்குமிருக்கின்றன.(77) சிறிவில்வங்கள், மதூகங்கள் {இலுப்பை மரங்கள்}, மஞ்சுளங்கள் {வஞ்சிகள்}, வகுளங்கள் {மகிழ மரங்கள்}, சம்பகங்கள் {சண்பகங்கள்}, திலகங்கள், புஷ்பித்த நாகவிருக்ஷங்கள்,(78) பிரகாசிக்கும் பத்மகங்கள், புஷ்பித்த நீல அசோகங்கள், லோத்ரங்கள் {வெள்ளொலுத்தி} ஆகியவையும் சிங்கத்தின் பிடரி மயிர் போல் பழுப்பாக {பொன்னிறமாக} கிரிப்பிரஸ்தங்களில் இருக்கின்றன.(79) அங்கோலங்கள் {அமுஞ்சிகள்}, குரண்டங்கள் {மஞ்சள் மருதாணிகள்}, பூர்ணகங்கள், பாரிபத்ரகங்கள் {தேவதாரு}, மாமரங்கள், பாடலயங்கள் {பாதிரிகள்}, புஷ்பித்த கோவிதாரங்கள்,(80) முசுகுந்தங்கள், அர்ஜுனங்கள் {மருதமரங்கள்} ஆகியவையும் கிரிகளில் காணப்படுகின்றன. கேதகம் {பேரீச்சை மரம்}, உத்தாலகம், சிரீஷத், சிம்சுபம், தவம்,(81) இலவு, கிம்சுகம் {புரசு}, சிவந்த மருதாணி, தினிசம், நக்தமாலம், சந்தனம், சியந்தனம்,(82) ஹிந்தாலம், திலகம் ஆகியவையும், புஷ்பித்த நாகவிருக்ஷங்களும், புஷ்பித்த செடிகொடிகளும் சூழ்ந்திருக்கின்றன.(83) சௌமித்ரி, அருகில் இருப்பவையும், புஷ்பங்கள் நிறைந்தவையும், காற்றால் அசைக்கப்பட்ட கிளைகளைக் கொண்டவையுமான இந்த விருக்ஷங்களும், மதங்கொண்ட சிறந்த ஸ்திரீகளைப் போல, நன்கு புஷ்பித்த நுனிகளைக் கொண்ட கொடிகளால் சுற்றிக் கொள்ளப்பட்ட அழகிய மரங்கள் பலவற்றையும் இதோ பம்பையில் பார்.(84,85அ)
அநிலன் {காற்றானவன்}, பலவகை நறுமணங்களை உட்கொண்டவனாக ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கும், ஒரு வனத்திலிருந்து மற்றொரு வனத்திற்கும், ஒரு சைலத்திலிருந்து {மலையிலிருந்து} மற்றொரு சைலத்திற்கும் சுகமாக வீசி பயணிக்கிறான்.(85ஆ,86அ) மதுகந்தங் கொண்ட மரங்களில் சில மலர்கள் நிறைந்தவையாகவும், சில கரிய வண்ண மொட்டுக்கள் நிறைந்தவையாகவும் விளங்குகின்றன.(86ஆ,87அ) மதுகரங்கள் {தேனீக்கள்}, "இது தூய்மையானது. இது சுவையானது. இது நன்றாக மலர்ந்திருக்கிறது" என்று எண்ணி {உற்சாகம் தலைக்கேறி} புஷ்பங்களில் மூழ்குகின்றன.(87ஆ,88அ) இவ்வாறு மூழ்கி, மீண்டும் வெளியே வரும் அந்த மதுகரங்கள் {தேனீக்கள்}, மதுவில் ஆசை தீராதவையாக, உடனே வேறிடங்களில் பம்பைத் தீரத்தின் மரங்களில் திரிகின்றன.(88ஆ,இ) தானாகவே விழுந்து கிடக்கும் மலர்க் குவியல்கள், சயனம் {படுக்கை} விரித்ததைப் போல சுகம் பொருந்தியதாக இந்தப் பூமியில் பரவிக் கிடக்கின்றன.(89) சௌமித்ரி, மலைச் சரிவுகளில் இறைந்து கிடக்கின்ற விதவிதமான புஷ்பங்களுடன் அவை மஞ்சள், சிவப்பு நிறங்களாலான விதவிதமான பாளங்களாக {கற்களாக} விளங்குகின்றன.(90)
சௌமித்ரி, குளிர்கால முடிவில், புஷ்ப {சித்திரை} மாசத்தில், விருக்ஷங்களில் புஷ்பங்கள் நிறைந்திருப்பதையும், மரங்கள் புஷ்பிப்பதில் போட்டியிடுவதைப் போலத் தென்படுவதையும் பார்.(91) சட்பதங்களின் {வண்டுகளின்} நாதத்தால் அன்யோன்யம் {ஒன்றையொன்று} அழைப்பதைப் போலிருக்கும் மரங்களின் உச்சிகள் மலர்கள் நிறைந்தவையாகப் பெரிதும் பிரகாசிக்கின்றன.(92) இந்தக் காரண்டவ பக்ஷி {நீர்க்கோழி}, தெளிந்த நீரில் பேடுடன் {பெண்பறவையுடன்} சேர்ந்து, இன்புற்றிருப்பது என்னில் காமத்தை {ஆசையை} மூட்டுகிறது.(93) மனத்தைக் கவரவல்ல குணங்களைக் கொண்ட மந்தாகினியின் {பம்பையின்} இவ்வகையான மனோஹரமான ரூபம் இந்த ஜகத்தில் பிரபலமாகவே இருக்கிறது.(94)
இரகோத்தமா {லக்ஷ்மணா}, சாத்வியானவளும் {அர்ப்பணிப்புள்ள சீதை} காணப்பட்டு, நாமும் இவ்விடத்திலேயே வசித்திருந்தால் சக்ரனையோ {இந்திரனின் அரியணையையோ}, அயோத்தியையோ {அயோத்தியின் அரியணையையோ} நான் நினைக்கமாட்டேன்.(95) அவளுடன் இந்த ரமணீயமான பசும்புல்தரைகளில் மகிழ்ச்சியாக இருந்தால், வேறெதையும் நான் சிந்திக்கவோ, விரும்பவோ மாட்டேன்.(96) இந்தக் கானகத்தில், அழகிய இலைகளுடனும், விதவிதமான மலர்களுடனும் கூடிய இந்த மரங்கள், அந்த காந்தை {சீதை} இல்லாத என்னுடைய மனத்தை உன்மத்தங் கொள்ள செய்கின்றன {பித்தாக்குகின்றன}.(97) சௌமித்ரி, புஷ்கரங்கள் {தாமரைகள்} நிறைந்ததும், சக்கரவாகங்கள் திரிவதும், காரண்டங்களால் சேவிக்கப்படுவதுமான இந்தக் குளிர்ந்த ஜலத்தைப் பார்.(98) நீர்க்காக்கைகளும், கிரௌஞ்சங்களும் நிறைந்ததும், மஹாமிருகங்களால் சேவிக்கப்படுவதும், அதிகம் பிரகாசிப்பதுமான இந்த பம்பையில் விஹங்கமங்கள் {பறவைகள்} இனிமையாகக் கூவிக் கொண்டிருக்கின்றன.(99) மதங்கொண்ட விதவிதமான துவிஜங்கள் {பறவைகள்}, என்னில் காமத்தை {ஆசையைத்} தூண்டுவது போல, சியாமையும், சந்திரமுகியும் {இளமையின் மத்திய பருவத்தில் இருப்பவளும், சந்திரனைப் போன்ற முகத்தைக் கொண்டவளும்}, பத்மங்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவளுமான என் பிரியையை {காதலியை} நினைக்கத் தூண்டுகின்றன.(100)
சித்திரமான மலைத்தாழ்வரைகளில் மிருகிகள் சகிதம் மிருகங்கள் {பெண்மான்களுடன் ஆண்மான்கள்} ஆங்காங்கே திரிவதைப் பார். மான்போன்ற கண்களைக் கொண்ட வைதேஹியை விட்டுப் பிரிந்து சோகத்தால் என் மனம் பீடிக்கப்படுகிறது.(101) மதங்கொண்ட துவிஜகணங்களுடன் {பறவைக் கூட்டங்களுடன்} கூடிய இந்த ரம்மியமான மலைச்சாரல்களில் அந்த காந்தையைக் கண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.(102) சௌமித்ரி, நுண்ணிடை கொண்ட வைதேஹி, என்னுடன் சேர்ந்து பம்பையின் சுபமான பவனனை {அருள் தெரும் தென்றலை} சேவித்தால், நான் நீண்ட காலம் ஜீவித்திருப்பேன்.(103) இலக்ஷ்மணா, சௌகந்திகத்தை {தாமரையின் நறுமணத்தைச்} சுமப்பதும், மங்கலமானதும், சோகத்தை அழிப்பதுமான பம்பையின் உபவனங்களில் உள்ள மாருதத்தை சேவிப்பவர்கள் தன்னியர்கள் {பாக்கியவான்கள்} ஆவர்.(104) சியாமையும் {இளமையின் மத்திய பருவத்தில் இருப்பவளும்}, பத்ம இதழ் கண்களைக் கொண்டவளும், ஆதரவற்றவளும், ஜனகாத்மஜையுமான என் பிரியை நான் இல்லாமல் எவ்வாறு பிராணனைத் தரித்திருப்பாள்?(105)
ஜனக்கூட்டத்திற்கு மத்தியில் சீதையைக் குறித்துக் கேட்கும் தர்மஜ்ஞரும், சத்தியவாதியுமான ஜனக ராஜரிடம், குசலம் {சீதையின் நலம்} குறித்து நான் என்ன சொல்வேன்?(106) பிதாவால் வனத்திற்கு அனுப்பப்பட்ட மந்தனான என்னை, எவள் தர்மத்தைப் பின்பற்றிப் பின் தொடர்ந்து வந்தாளோ, அந்தப் பிரியை {என் காதலியான சீதை} எங்கே இருக்கிறாள்?(107) இலக்ஷ்மணா, ராஜ்ஜியத்தில் இருந்து விரட்டப்பட்டு, உற்சாகம் இழந்திருந்த என்னை, எவள் பின்தொடர்ந்து வந்தாளோ, அவள் இல்லாமல் ஆதரவற்றவனாக எவ்வாறு நான் இருப்பேன் {வாழ்வேன்}?(108) அழகில் பிரகாசிப்பதும், பத்மங்களைப் போன்ற கண்களைக் கொண்டதும், சுகந்தமானதும், சுபமானதும், வடுக்கள் இல்லாததுமான அவளுடைய முகத்தைப் பார்க்காமல் என் மதி வருத்தம் அடைகிறது.(109) இலக்ஷ்மணா, புன்னகைக்கும், சிரிப்புக்கும் இடையில் வெளிவருவதும், குணமிக்கதும் {நலம் பயப்பதும்}, மதுரமானதும், ஹிதமானதும், ஒப்பற்றதுமான வைதேஹியின் வாக்கியத்தை எப்போது கேட்கப் போகிறேன்?(110) சியாமையான அந்த சாத்வி {இளமையின் மத்திய பருவத்தில் உள்ள அந்தப் புனிதவதி}, வனத்தில் துக்கத்தை அடைந்தாலும், துக்கமில்லாததைப் போலவும், மகிழ்ச்சியுடன் இருப்பதைப் போலவும் மன்மதனால் பீடிக்கப்பட்ட என்னிடம் சாதுவாகப் பேசுவாள்.(111) நிருபாத்மஜா {ராஜகுமாரா}, அயோத்தியில் "என் மருமகள் எங்கே? அவள் எவ்வாறு இருக்கிறாள்?" என்று கேட்கும் மனஸ்வினியான கௌசல்யையிடம் நான் என்ன சொல்வேன்?(112) இலக்ஷ்மணா, நீ போய் உடன்பிறந்தோரிடம் அன்பு பாராட்டும் பரதனைப் பார். ஜனகாத்மஜையை விட்டு ஜீவித்திருப்பது எனக்கு சாத்தியமில்லை" {என்றான் ராமன்}.(113)
இலக்ஷ்மணன், இவ்வாறு அநாதையைப் போல அழுது புலம்பியவனும், உடன் பிறந்தவனும், மஹாத்மாவுமான ராமனிடம், தகுந்த பொருத்தமான சொற்களை {பின்வருமாறு} சொன்னான்:(114) "புருஷோத்தமரே, ராமரே, அமைதியடைவீராக. மங்கலமாக இருப்பீராக. வருந்தாதீர். இத்தகைய மாசற்ற ஆத்மாக்கள், மந்த மதியுடன் இருப்பதில்லை {உம்மைப் போன்ற மாசற்றவர்கள், அறிவு குன்றியவர்களாய் ஆவதில்லை}.(115) பிரிவால் உண்டாகும் துக்கத்தை நினைவுகூர்ந்து, பிரிய ஜனங்களிடம் சினேகத்தைத் துறப்பீராக. நனைந்த வர்த்தியுங் கூட அதிசினேகத்தை {எண்ணெய்யைத்} தழுவினால் எரிந்துவிடும்.(116) இராகவரே, ராவணன் பாதாளத்திற்கோ, இன்னும் அதிக ஆழத்திற்கோ சென்றாலுங்கூட எல்லா வகையிலும் அவன் {உயிருடன்} இருக்கமாட்டான்.(117) பாபியான அந்த ராக்ஷசனின் முன்னேற்றம் {நமக்குத்} தெரியவரும்போது, சீதையைக் கைவிடுவான் அல்லது அவன் அழிவை அடைவான்.(118) இராவணன், சீதையுடன் திதியின் கர்பத்திற்குள் {கருவறைக்கே} சென்றாலும், மைதிலியைக் கொடுக்கவில்லையெனில், அங்கேயே அவனை நான் கொல்ல விரும்புகிறேன்.(119) ஆரியரே, புத்துணர்ச்சியையும், பாதுகாப்பையும் அடைவீராக. கிருபைக்குரிய மதியை {பரிதாப நிலையைக்} கைவிடுவீராக. இழப்பை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபடாதவர்களுக்கு எவ்விதத்திலும் காரியம் நிறைவேறாது.(120)
ஆரியரே, உற்சாகம் பலமானது {வலிமைமிக்கது}. உற்சாகத்தைவிட பரமபலம் வேறேதும் இல்லை. உற்சாகத்துடன் கூடியவனுக்கு உலகத்தில் சாத்தியமில்லாதது எதுவுமில்லை.(121) உத்சாஹவந்தனான புருஷன் {உற்சாகத்துடன் கூடிய மனிதன்}, கர்மங்களில் பின்னடைவதில்லை. உற்சாகத்தை மாத்திரம் கைக்கொண்டால் ஜானகியை மீட்டுவிடலாம்.(122) காமவிருத்தத்வத்தைக் கைவிட்டு {ஆசையைத் தூண்டும் எண்ணத்தை வென்று}, சோகத்தைப் பின் தள்ளுவீராக. மஹாத்மாவான நீர், கிருதாத்மாவும் {புலனடக்கம் கொண்டவரும்} ஆவீர் என்பதை உணராமல் இருக்கிறீர்" {என்றான் லக்ஷ்மணன்}.(123)
சோகம் மேலிட்ட நனவுடன் கூடியவன் {ராமன்}, இவ்வாறு {லக்ஷ்மணனால்} சொல்லப்பட்டதும், சோகத்தையும், மோஹத்தையும் கைவிட்டுவிட்டு தைரியத்தை அடைந்தான்.(124) சிந்தனைக்கு அப்பாற்பட்ட பராக்கிரம் கொண்ட அந்த ராமன், காண்பதற்கினியவையும், ரம்மியமானவையும், பரப்பளவில் பரந்திருப்பவையுமான மரங்களுடன் கூடிய பம்பையைக் கலக்கமில்லாமல் கடந்து சென்றான்.(125) அந்த மஹாத்மா {ராமன்}, அருவிகளுடனும், குகைகளுடனும் கூடிய வனம் முழுவதையும் கண்டு, கவலை நிறைந்த மனம் கொண்டவனாகத் தன்னுடன் வரும் லக்ஷ்மணனுடன் சேர்ந்து, துக்கத்துடன் வேகமாகக் கடந்து சென்றான்.(126) மத்த மாதங்க {மதவெறி கொண்ட யானையின்} நடையுடன் கூடியவனும், மஹாத்மாவும், {ராமனின்} இஷ்டத்திற்குரிய செயல்களைச் செய்பவனுமான லக்ஷ்மணன், மனக்குழப்பமின்றி, விழிப்புடனும், தர்ம பலத்துடனும் தன் முன்னே நடந்து செல்லும் ராகவனைப் பாதுகாத்தான்.(127)
இரிச்யமூகத்தின்[5] சமீபத்தில் திரிபவனும், வலிமைமிக்கவனும், சாகை மிருகங்களுக்கு அதிபனுமானவன் {கிளையில் வசிக்கும் விலங்குகளான குரங்குகளின் தலைவனுமான சுக்ரீவன்}, அங்கே வந்து அற்புத தரிசனம் தந்த அவ்விருவரையும் {ராமலக்ஷ்மணர்களைக்} கண்டு அச்சமடைந்து, நனவு குழம்பியவனானான்.(128) அங்கே கஜத்தின் நடையுடன் திரிந்தவனும், சாகை மிருகமுமான {மரக்கிளையில் வசிக்கும் விலங்குமான} அந்த மஹாத்மா {சுக்ரீவன்}, அங்கே திரியும் அவ்விருவரையும் கண்டு, பயபாரத்தில் மூழ்கி, ஆழ்ந்த வேதனையை அடைந்தான்[6].(129) மஹா ஔஜசர்களான {வலிமைமிக்கவர்களான} ராகவ லக்ஷ்மணர்கள் இருவரையும் கண்ட மற்ற ஹரயங்கள் {குரங்குகள்} அனைத்தும் அச்சமடைந்து, புண்ணியமானதும், சுகமானதும், எப்போதும் {அடைக்கலம் நாடுவோருக்குப்} புகலிடமாகத் திகழ்வதும், சாகை மிருகங்களால் {குரங்குகளால்} சேவிக்கப்படுவதுமான அத்தகைய {மதங்க} ஆசிரமத்தை நோக்கி ஓடின.(130)
[5] கம்பராமாயணத்தில், "உருசியமுகம்" என்று இம்மலை அழைக்கப்படுகிறது. சம்ஸ்கிருத மூலத்தில், "ருʼஷ்யமூகம்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில் ரிச்யமூகம் என்றும், நரசிம்மாசாரியர் பதிப்பில், "ருஷ்யமூகம்" என்றும், தாதாசாரியர் பதிப்பில், "ரிசியமூகம்" என்றும் இருக்கிறது.
[6] எய்தினர் சவரி நெடிது ஏய மால் வரை எளிதின்நொய்தின் ஏறினர் அதனின் நோன்மை சால் கவி அரசுசெய்வது ஓர்கிலன் அனையர் தெவ்வர் ஆம் என வெருவிஉய்தும் நாம் என விரைவின் ஓடினான் மலை முழையின்- கம்பராமாயணம் 3751ம் பாடல், அனுமப் படலம்பொருள்: சபரி விரிவாக சொல்லி அனுப்பிய வழியில் சென்றவர்கள் {ராமலக்ஷ்மணர்கள்}, மலைமீது எளிதாக விரைவாக ஏறினர். அதில் இருந்த வலிமைமிக்க குரங்கினத்து அரசன் {சுக்ரீவன்}, வருகின்ற இவர்கள் நம் பகைவர் என்று அஞ்சி செய்வது இன்னதென்று அறியாமல், "நாம் தப்பிப் பிழைப்போம்" என்று அம்மலையின் குகைக்குள் விரைந்து ஓடினான்.
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 01ல் உள்ள சுலோகங்கள்: 130
Previous | | Sanskrit | | English | | Next |