Friday 3 March 2023

அகஸ்தியரின் மகிமை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 11 (94)

The Glory of Agastya | Aranya-Kanda-Sarga-11 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தர்மபிருத முனிவர்; மாண்டகர்ணி முனிவரும் பஞ்சாப்சரஸ் தடாகமும்; வனவாசத்தில் பத்து வருடங்கள் கடந்தது; மீண்டும் சுதீக்ஷ்ணர்; அகஸ்தியரின் தம்பி; இல்வலன் வாதாபி; அகஸ்தியர் மஹிமை...

Mandakarni and Five apsaras

இராமன் முன்னே செல்ல, நடுவில் அழகிய இடையுடைய சீதையும், அவர்களுக்குப் பின்னால் தனுஷ்பாணியான {கையில் வில்லுடன் கூடிய} லக்ஷ்மணனும் பின்தொடர்ந்து சென்றனர்.(1) சீதை சகிதராகச் சென்ற அவர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும், விதவிதமான சைல வரிசைகளையும் {மலை வரிசைகளையும்}, விதவிதமான வனங்களையும், ரம்மியமான நதிகளையும் கண்டபடியே சென்றனர்.(2) நதிகளின் கரைகளில் திரியும் சாரஸங்களையும் {கொக்குகளையும்}, சக்கரவாகங்களையும், பத்மங்களுடனும் {தாமரைகளுடனும்}, ஜலத்தில் ஜனித்த பறவைகளுடனும் கூடிய சரஸ்களையும் {ஓடைகளையும்},(3) மான் கூட்டங்களையும், கொம்புகளுடன் கூடிய மதங்கொண்ட மஹிஷங்களையும் {எருமைக்கடாக்களையும்}, வராஹங்களையும் {பன்றிகளையும்}, மரங்களின் வைரிகளான நாகங்களையும் {மரங்களை அழிக்கும் யானைகளையும்} கண்டனர்.(4) 

ஒருங்கே வெகு தூரம் கடந்த அவர்கள், திவாகரன் {சூரியன் மேற்கில்} சாயும்போது, ஒரு யோஜனை அகலமுடையதும், சிவப்பு, வெள்ளை பத்மங்களால் {செந்தாமரைகளாலும், வெண்தாமரைகளாலும்} அலங்கரிக்கப்பட்டதும், கஜ மந்தைகள் {யானைகள்} விளையாடிக் கொண்டிருப்பதும், சாரஸங்கள் {கொக்குகள்}, ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்}, காதம்பங்கள் {வாத்துகள்} போன்ற நீர்ப்பறவைகளால் நிறைந்ததுமான ரம்மியமான தடாகம் ஒன்றைக் கண்டனர்.(5,6) தெளிந்த நீரைக் கொண்ட அந்த ரம்மியமான ஸரஸில், கீத வாத்திய கோஷங்கள் கேட்டனவென்றாலும் எவரும் காணப்படவில்லை.(7)

அப்போது, மஹாரதனான லக்ஷ்மணனுடன் கூடிய ராமன், தர்மபிருதர் என்ற பெயருடைய முனிவரிடம் இது குறித்து ஆர்வமுடன் {பின்வருமாறு} கேட்கத் தொடங்கினான்:(8) "மஹாமுனிவரே, இந்த அதி அற்புதத்தைக் கேட்கும் எங்கள் அனைவருக்கும் மஹத்தான குதூஹலம் உண்டாகிறது. இஃது ஏன் என்பதைச் சொல்வீராக. {பிரபுவே, விப்ரரே, இதுகுறித்து பெரும் ரகசியமேதுமில்லையென்றால் வெளிப்படுத்துவீராக[1]" என்று கேட்டான் ராமன்}.(9)

[1] { } என்ற அடைக்குறிக்குள் உள்ள செய்தி தேசிராஜு ஹனுமந்தராவ், மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் ஆங்கிலப் பதிப்புகளிலும், பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயம்} தமிழ்ப் பதிப்பிலும் இல்லை. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி ஆங்கிலப் பதிப்பிலும், தாதாசாரியரின் தமிழ்ப் பதிப்பிலும் இருக்கிறது.

இராகவன் {இராமன்} இவ்வாறு கேட்டபோது, தர்மாத்மாவான அந்த முனிவர், அந்த ஸரஸின் பிரபாவத்தை {அந்தத் தடாகத்தின் மேன்மையைச்} சொல்லத் தொடங்கினார்:(10) "பஞ்சாப்ஸரஸ் என்ற பெயருடையதும், சர்வகாலத்திற்கானதுமான {எப்போதும் நீர் நிறைந்ததுமான} இந்தத் தடாகம், மாண்டகர்ணி முனிவரின் தபத்தால் நிர்மாணிக்கப்பட்டது.(11) மஹாமுனிவரான அந்த மாண்டகர்ணி, வாயுபக்ஷணம் செய்து {காற்றை மட்டுமே உண்டு}, ஜலத்தில் நின்று பத்தாயிரம் வருடங்கள் தீவிர தபம் செய்தார்.(12)  அப்போது, அக்னியை முதன்மையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும் பெரிதும் குழப்பமடைந்தனர். ஓரிடத்தில் ஒன்றுகூடிய அவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் {பின்வரும்} சொற்களைச் சொன்னார்கள்:(13) அந்த திரிதிவவாசிகள் {சொர்க்கவாசிகள்} அனைவரும், "இந்த முனி {மாண்டகர்ணி}, நம்மில் எவரோ ஒருவருடைய ஸ்தானத்திற்காகவே இவ்வாறு பிரார்த்திக்கிறான்" என்று சொல்லி மனம் கலங்கினர்.(14) 

எனவே அந்த சர்வதேவர்களும், அவரது தபத்திற்கு விக்னம் விளைவிப்பதற்காக, ஒளியில் மின்னலைப் போன்று பிரகாசிக்கும் பிரதான அப்சரஸ்களை நியமித்தனர்(15). பராபரங்களை {இம்மையும், மறுமையும்} அறிந்தவரான அந்த முனிவரை {மாண்டகர்ணி}, தேவர்களின் காரியத்தை நிறைவேற்ற வந்த அந்த அப்ரசஸ்கள் மதன வசியம் செய்தனர்.(16) இவ்வாறே அந்த பஞ்ச {ஐந்து} அப்சரஸ்களும் முனிவரின் பத்தினிகளானார்கள். அவர் இந்தத் தடாகத்தின் உள்ளே {மறைவாக} அவர்களுக்கான கிருஹத்தை நிர்மாணித்தார்.(17) அங்கே சுகமாக வசிக்கும் பஞ்ச அப்சரஸ்களும், தப யோகத்தால் யௌவனத்தை {இளமையை} அடைந்த அந்த முனிவருடன் இன்புற்றிருக்கின்றனர்.(18) அங்கே விளையாடும் அவர்களின் ஆபரண ஒலியும், வாத்தியங்களின் ஒலியும் கலந்து வெளிப்படும் கீதத்தின் சப்தமே இப்படி மனோஹரமாகக் கேட்கிறது" {என்றார் தர்மபிருதர்}.(19) 

பெரும்புகழ்பெற்றவனும்,  உடன்பிறந்தானுடன் கூடியவனுமான ராகவன் {ராமன்}, "இஃது ஆச்சரியம்தான்" என்று சொல்லித் தன்னை உணர்ந்த அந்த ஆத்மாவின் {தர்மபிருதரின்} சொற்களை,  ஏற்றுக் கொண்டான்.(20) இவ்வாறு சொன்ன ராமன், பிறகு, குசப்புற்களாலும் {தர்ப்பைகளாலும்}, மரவுரிகளாலும் சூழப்பட்டவையும், எங்கும் பிரம்ம அருளால் நிறைந்திருந்தவையுமான ஆசிரம மண்டலத்தை {ஆசிரமங்களின் வரிசையைக்} கண்டு, வைதேஹி, லக்ஷ்மணன் சஹிதனாக அங்கே பிரவேசித்தான்.(21,22அ) அந்தக் காகுத்ஸ்தன், செழிப்பான அந்த ஆசிரம மண்டலத்தில், மஹரிஷிகளால் பூஜிக்கப்பட்டவனாக சுகமாக வசித்திருந்தான். மஹா அஸ்திரவித்தான {பெரும் அஸ்திரங்களைப் பயன்படுத்துவதில் நிபுணனான} அவன், அருகருகே வசித்த தபஸ்விகளின் ஆசிரமங்களுக்கு பூர்வத்திலும் {ஒருமுறையும்}, மறுமுறையும் {என மாறிமாறிச்} சென்றான்.(22ஆ-24அ) 

இராகவன், சிலவற்றில் {சில ஆசிரமங்களில்} சுமார் பத்து மாசங்களும், சிலவற்றில் ஒரு வருடமும், சிலவற்றில் நான்கு மாசங்களும், சிலவற்றில் ஐந்து மாசங்களும், வேறு சிலவற்றில் ஆறு மாசங்களும், சிலவற்றில் ஒரு மாசம் அதிகமாகவும் {ஏழு மாதங்களும்}, சிலவற்றில் ஒன்றரை மாசத்திற்கு அதிகமாகவும் {ஏழரை மாதம் / ஒன்றரை மாதம்}, சிலவற்றில் மூன்று மாசங்களோ, எட்டு மாசங்களோவென சுகமாக வாழ்ந்துவந்தான்.(24ஆ-26அ) அந்த முனிவர்களின் ஆசிரமங்களில் இவ்வாறு மகிழ்ச்சியாக வசித்து வந்த அந்தப் பத்து வருடங்களும் அவனுக்கு அனுகூலமாகவே கடந்து சென்றன[2].(26ஆ,27அ) தர்மஜ்ஞனான ஸ்ரீமான் ராகவன், சீதை சஹிதனாக இவ்வாறே மீண்டும் சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்திற்குச் சென்றான்.(27ஆ,28அ) அரிந்தமனான {பகைவரை அழிப்பவனான} அந்த ராமன், அந்த ஆசிரமத்தை அடைந்ததும், முனிவர்களால் பூஜிக்கப்பட்டவனாக சிறிது காலம் அங்கேயே வசித்திருந்தான்.(28ஆ,29அ)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மேற்சொன்ன கணக்கின்படி 60 மாதங்கள், அதாவது ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இங்கே பத்து வருடங்கள் சுகமாகக் கழிந்ததாகச் சொல்லப்படுகிறது. மேற்சொன்ன மாதங்களில் எண்ணிக்கையைக் கூட்டுவதில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் பத்து வருடங்கள் என்பது தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்த வனவாச காலம் பதினான்கு ஆண்டுகளாகும். அதில் இங்கே பத்து வருடங்கள் கழிந்ததாகச் சொல்லப்படுகிறது. சித்திரகூடத்தில் இரண்டு வருடங்கள் கழிந்தன. சீதையைத் தேடுவதற்கும், இறுதிப் போருக்கும் இரு வருடங்கள் ஆகும்" என்றிருக்கிறது. மேலே அதிகமெனச் சொல்லுமிடங்களிலெல்லாம் 15 நாட்களைக் கூட்டினாலும் 58 மாதங்கள்தான் வருகின்றன. மீண்டும் சுதீக்ஷ்ணரிடம் 2 மாதங்கள் என்று கொண்டால் 60 மாதங்கள் வருகின்றன. ஒவ்வொரு முனிவரின் ஆசிரமத்திலும் இருமுறை சென்றான் என்ற பொருளில் 22-24ம் சுலோகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, அந்த ஆசிரம வரிசையில் ஒவ்வொரு ஆசிரமமாக வசித்துச் சென்று, மீண்டும் அதே வரிசைக்கிரமத்தில் ஒவ்வொரு ஆசிரமமாக மீண்டும் வசித்து வருகிறான். அதை உறுதி செய்வது போல் பின்வரும் 27ம் சுலோகத்தில் மீண்டும் சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்திற்குத் திரும்பும் செய்தி இருக்கிறது. அவ்வாறு கொண்டால் "எந்தத் தொல்லையுமின்றி பத்துவருடங்கள் கடந்த சென்றன" என்பது சரியாகவே வரும். 
 ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு அவண்
மைந்தர் தீது இலர் வைகினர் மாதவர்
சிந்தை எண்ணி அகத்தியற் சேர்க என
இந்து நன்னுதல் தன்னொடும் ஏகினார்.

- கம்பராமாயாணம் 2656ம் பாடல், அகத்தியப்படலம்

பொருள்: இராமலக்ஷ்மணர்கள் அவ்விடத்தில் பத்து ஆண்டுகள் துன்பமேதும் இல்லாமல் அமைதியாக வசித்திருந்தனர். பெருந்தபஸ்விகளான முனிவர்கள், ஆலோசித்து, "அகத்தியரிடம் செல்க" எனச் சொல்லவும், சந்திரனைப் போன்ற நெற்றியுடையவளுடன் {சீதையுடன்} சேர்ந்து அவர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} புறப்பட்டனர்.

அந்த ஆசிரமத்தில் காகுத்ஸ்தன் தங்கியிருந்தபோது, ஒருநாள் தன்னருகில் அமர்ந்திருந்த மஹாமுனிவரான சுதீக்ஷ்ணரிடம் வினயத்துடன் {பணிவுடன்} இதைச் சொன்னான்:(29ஆ,30அ) "பகவானே, முனிசத்தமரான அகஸ்தியர் இந்த அரண்யத்தில் வசிப்பது குறித்த கதைகள் சொல்லப்படுவதை நித்தியம் கேள்விப்படுகிறேன்.(30ஆ,31அ) ஆனால் இந்த மஹத்தான வனத்தில், மதிமிக்கவரான அந்த மஹரிஷியின் புண்ணிய ஆசிரமபதம் இருக்கும் அந்த தேசத்தை {இடத்தை} நான் அறியமாட்டேன்.(31ஆ,32அ) பகவானே, உமது அருளால், தம்பியுடனும் {லக்ஷ்மணனுடனும்}, சீதையுடனும் அங்கே சென்று அகஸ்திய முனிவரை வணங்க விரும்புகிறேன்.(32ஆ,33அ) "அந்த முனிவரரை {சிறந்த முனிவரை} நானே நேரடியாக சேவிக்க முடியுமா?" என்ற இந்த மஹத்தான மனோரதம் என் ஹிருதயத்தில் மீண்டும் மீண்டும் எழுகிறது" {என்று கேட்டான்}.(33ஆ,34அ) 

அந்த சுதீக்ஷ்ண முனிவர், தர்மாத்மாவான ராமனின் இந்தச் சொற்களைக் கேட்டுப் பிரீதியடைந்து, அந்த தசரதாத்மஜனிடம் இதைச் சொன்னார்:(34ஆ,35அ) "இராகவா, நானுங்கூட, இவ்வாறு லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் அகஸ்தியரிடம் நீ செல்ல வேண்டுமென்பதையே சொல்ல விரும்பினேன்.(35ஆ,36அ) நல்லவேளையாக அதே அர்த்தத்தில் நீயே இப்போது என்னிடம் சொல்லிவிட்டாய். இராமா, அகஸ்திய மஹாமுனிவர் எங்கே இருக்கிறார் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்[3].(36ஆ,37அ) தாதா {ஐயா}, இந்த ஆசிரமத்தில் இருந்து தெற்கு நோக்கி நான்கு யோஜனைகள்[4] சென்றால், அகஸ்தியருடன் பிறந்த மஹானின் {அகஸ்தியருடைய தம்பியின்} அழகிய ஆசிரமம் இருக்கும்.(37ஆ,இ) புஷ்பங்கள், பழங்கள் பலவற்றுடன் கூடிய அடர்ந்த பிப்பலிகளால் {அத்திமரங்களால்} அலங்கரிக்கப்பட்டதும், நானாவித பறவைகளால் ஒலிக்கப்பெற்றதுமான அந்த வனத்தின் மேட்டு ஸ்தலத்தில்,(38) தெளிந்த நீர் கொண்டவையும், புண்ணியமானவையும், ஹம்ஸங்களாலும் {அன்னப்பறவைகளாலும்}, காரண்டவங்களாலும் {நீர்க்காக்கைகளாலும்} நிரம்பியவையும், சக்கிரவாகங்களால் சோபிப்பவையுமான {பிரகாசிப்பவையுமான} விதவிதமான பத்மின்யங்கள் {தாமரையோடைகள்} இருக்கும். இராமா, அங்கேயே {அகஸ்தியருடைய தம்பியின் ஆசிரமத்திலேயே} ஓரிரவைக் கழித்துவிட்டு விடியலில் புறப்படுவாயாக.(39,40அ) தக்ஷிண {தென்} திசையை நோக்கி ஒரு யோஜனை தொலைவு {9.09 மைல் / 14.63 கி.மீ} சென்றால், அங்கே அடர்ந்த வனத்துடன் கூடிய அகஸ்தியரின் ஆசிரமபதம் இருக்கும்.(40ஆ,41அ) இரமணீயமான மரங்களால் சோபிக்கும் அந்த வனதேசத்தில் {வனப்பகுதியில்} வைதேஹியுடனும், லக்ஷ்மணனுடனும் நீ இன்புற்றிருப்பாயாக. பல்வேறு மரங்கள் நிறைந்த அந்த வனதேசம் உண்மையில் ரம்மியமானதாகும்.(41ஆ,42) மஹாமதிமிக்கவனே, அகஸ்திய மஹாமுனிவரை தரிசிக்கும் புத்தி ஏற்பட்டால், இன்றே செல்லும் தீர்மானமான புத்தியை அடைவாயாக" {என்றார் சுதீக்ஷ்ணர்}.(43)

[3] நல்லதே நினைத்தாய் அது நானும் முன் 
சொல்லுவான் துணிகின்றது தோன்றல் நீ
செல்தி ஆண்டு அவற் சேருதி சேர்ந்தபின்
இல்லை நின்வயின் எய்தகில்லாதவே
அன்றியும் நின் வரவினை ஆதரித்து
இன்றுகாறும் நின்று ஏமுறுமால் அவற்
சென்று சேருதி சேருதல் செவ்வியோய்
நன்று தேவர்க்கும் யாவர்க்கும் நன்று எனா

- கம்பராமாயணம் 2664, 2665ம் பாடல்கள், அகத்தியப்படலம்

பொருள்: "சிறந்தவனே, நீ நல்லதே நினைத்தாய். அதையே நானும் முன்பே சொல்லத் துணிந்தேன். அங்கே சென்று அம்முனிவரைச் சேர்ந்தபின் நீ அடைய முடியாத பேறுகள் ஏதும் இருக்காது.(2664) அன்றியும், உன் வரவை விரும்பி இன்றுவரை எதிர்பார்த்து இருந்தவர் {அகஸ்தியர்} மகிழ்வாராதலால் நீ அவரிடம் போய்ச் சேர்வாயாக. சிறந்தவனே, அவரைச் சேர்வது தேவருக்கும் நல்லது, மற்ற யாவருக்கும் நன்று" என்றார் {சுதீக்ஷ்ணர்}.

[4] கௌடில்யரின் அர்த்தசாஸ்திரப்படி, 1 யோஜனை 9.09 மைல்கள் என்றால், நான்கு யோஜனைகள் 36.36 மைல்களாகும், அதாவது சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்தில் இருந்து அகஸ்தியரின் தம்பியுடைய ஆசிரமம் வரைக்குமான தொலைவு 58.51 கி.மீ. ஆகும்.

முனிவர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட ராமன், தன்னுடன் பிறந்தானுடன் சேர்ந்து அவரை வணங்கி, அகஸ்தியரை உத்தேசித்து தன்னைப் பின்தொடர்வானுடனும் {லக்ஷ்மணனுடனும்}, சீதையுடனும் புறப்பட்டான்.(44) அந்தப் பாதை மார்க்கமாகச் செல்லும்போது சித்திரவனங்களையும், மேகங்களைப் போன்ற பர்வதங்களையும், சரஸ்களையும் {தடாகங்களையும்}, ஆறுகளையும் கண்டு,{45} சுதீக்ஷ்ணர் சுட்டிக்காட்டிய பாதையைப் பின்பற்றியே சுகமாகச் சென்று, பரம மகிழ்ச்சியுடன் லக்ஷ்மணனிடம் இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(45,46) "புண்ணிய கர்மங்கள் செய்த மஹாத்மாவும், அகஸ்தியருடன் பிறந்தவருமான அந்த முனிவரின் {அகஸ்தியர் தம்பியின்} ஆசிரமபதம் இதுவே என்பது நிச்சயம் தெரிகிறது.(47) ஏராளமான பழங்கள், புஷ்பங்கள் ஆகியவற்றின் பாரத்தால் இந்த வனத்தின் பாதையில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்திருப்பது என்னிடம் {சுதீக்ஷ்ணரால்} சொல்லப்பட்டது போலவே தெரிகிறது.(48) பக்குவமான பிப்பலிகளின் {கனிந்த அத்திப்பழங்களின்} புளித்தமணம் காற்றில் திடீரென எழுகிறது. இந்த கந்தம் {மணம்} இந்த வனத்தில் இருந்தே வருகிறது.(49) அடுக்கிவைக்கப்பட்ட விறகுகளின் குவியல்கள் ஆங்காங்கே தெரிகின்றன. வைடூரியம் {மரகதம்} போலப் பிரகாசிக்கும் தர்ப்பைகள் எங்கும் காணப்படுகின்றன.(50) ஆசிரமத்தில் இருந்து வெளிப்படும் பாவகனுடைய தூமத்தின் நுனி {வேள்வி நெருப்பின் புகை நுனி}, கருத்த மேகத்திற்கும், சிகரத்திற்கும் நிகராக வனத்தின் மத்தியில் எழுவது தெரிகிறது.(51) புனித தீர்த்தத்தில் நீராடிய துவிஜர்கள் {இருபிறப்பாளர்கள்}, தாங்களே கொணர்ந்த மலர்களைக் கொண்டு,[5] புஷ்ப உபகாரம் {மலர் அர்ச்சனை} செய்து கொண்டிருக்கின்றனர்.(52) எனவே, சௌம்யா {மென்மையானவனே லக்ஷ்மணா}, இவை சுதீக்ஷ்ணரின் சொற்களில் நான் கேட்டது போலவே இருக்கிறது. இது நிச்சயம் அகஸ்தியருடன் பிறந்தவரின் {அகஸ்தியர் தம்பியின்} ஆசிரமமாகவே இருக்க வேண்டும்.(53) அந்தப் புண்ணிய கர்மங்களைச் செய்தவருடன் பிறந்தவரே {அகஸ்தியரே}, உலக நன்மையை விரும்பி, மரணத்தைத் தம் மஹிமையால் {தவசக்தியால்} தடுத்து, இந்தத் திக்கை  சரண்யமாக {தென்திசையை வாழத்தகுந்ததாகச்} செய்தார்.(54)

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வழிபாட்டுக்கான மலர்களை வேறு எவரிடம் இருந்து பெற்றாலும், அந்த வழிபாட்டால் கிட்டும் புண்ணியத்தில் பாதியை அந்த மலர்களைக் கொடுத்தவரே அடைவர். எனவே, மலர்களை வழிபாட்டாளர்களே பறிக்க வேண்டும், அதிலும் குறிப்பாகத் தங்கள் பூந்தோட்டத்தில் இருந்து கொணர வேண்டும். அவற்றை களவு செய்தோ, பிச்சையெடுத்தோ, கைகளில் சுமந்தோ, மேலாடையில் சுமந்தோ கொண்டு வராமல் பெரிய இலையில் வைத்துக் கொண்டு வர வேண்டும். புஷ்பங்களைத் தாங்களே கொண்டு வருவது சிறந்தது, காட்டில் பறிப்பது மத்திமம், விலை கொடுத்து வாங்குவது இழிந்தது, பிறரால் கொடுக்கப்படுவது மிக இழிந்தது" என்றிருக்கிறது.

ஒரு காலத்தில் குரூரமானவர்களான வாதாபியும், இல்வலனும் ஒன்றாக இருந்தனர். உடன்பிறந்த மஹா அசுரர்களான அவர்கள், பிராமணர்களை இங்கே கொன்று வந்தனர் என்று சொல்கிறார்கள்.(55) கருணையற்றவனான இல்வலன், பிராமண ரூபம் தரித்து, சிராத்தக் காணிக்கை அளிப்பவன் போல் சம்ஸ்கிருதம் {நயமாகப்} பேசி[6] விப்ரர்களை அழைத்து வருவான் {கல்விமான்களான பிராமணர்களிடம், சிராத்தம் செய்து உணவளிப்பவன் போல் நயமாகப் பேசி அழைத்து வருவான்}.(56) பிறகு, தன்னுடன் பிறந்தானை மேஷ ரூபமாக்கி சம்ஸ்கிருதமாகச் செய்து, சிராத்த சடங்கு கர்மங்களின்படி அந்த துவிஜர்களுக்கு போஜனமாகக் கொடுப்பான் {தன் சகோதரன் வாதாபியை ஆட்டுக்கடாவின் வடிவிலாக்கி, அந்த இறைச்சியை நன்றாகச் சமைத்து, சிராத்த சடங்கு விதிகளின்படி அந்த இருபிறப்பாளர்களுக்கு உணவாகக் கொடுப்பான்}.(57) அந்த விப்ரர்கள் அதனை உண்டபிறகு, இல்வலன் மஹத்தான ஸ்வரத்தில் கதறியபடியே, "வாதாபே {வாதாபியே}, வெளியே வா" என்று கூறுவான்.(58) அப்போது, தன்னுடன் பிறந்தானின் {இல்வலனின்} சொற்களைக் கேட்கும் வாதாபி, மேஷம் போல கத்திக் கொண்டே அந்தப் பிராமணர்களின் சரீரங்களைக் கிழித்தபடியே வெளியே வருவான்.(59) பரந்தபா {பகைவரை அடக்குபவனே}, பிசிதாசனர்களும், காமரூபிகளுமான {பச்சை மாமிசம் உண்பவர்களும், விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான} அவர்கள் இருவரும், இவ்வாறே நித்தியம் ஆயிரக்கணக்கான பிராமணர்களைக் கொன்று வந்தனர் {என்று சொல்லப்படுகிறது}.(60)

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "இங்கே சம்ஸ்கிருதம் என்ற சொல், "இல்வலன், தூய்மையான சம்ஸ்கிருத மொழி பேசினான்" என்ற பெருளில் ஏற்கப்படும்போது, உரையாசிரியர்களின் விவாதத்திற்குரிய ஓர் அம்சமாகிறது. இஃது ஒரு கோணம். மற்றொன்று, "அதிநவீன மொழியில் பேசினான்" என்ற கோணமாகும். ஆனால், ராக்ஷசர்கள் அனைவரும் வேத பண்டிதர்களாகவே காணப்படுவதால், அவர்கள் பேசும் தூய சம்ஸ்கிருதத்தில் எந்த முரணும் தெரியவில்லை. எனவே, அவர்கள் பிராமணர்களைக் கவர்ந்திருக்க, கவர்ச்சியான, அதிநவீன மொழியில் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதே. "சம்ஸ்கிருதம்" என்ற சொல்லுக்கு "தூய்மையானது" என்ற பொருளும் உண்டு" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதற்கு மெருகூட்டப்பட்ட சொற்கள் என்று பொருள். சம்ஸ்கிருத மொழியில் பேசுவது என்றும் பொருள் கொள்ளலாம். எனினும், சம்ஸ்கிருதம் என்ற சொல் மொழிக்கு பயன்படுவது மிகப் பிற்காலத்தில்தான் என்பதால் இதற்கு வாய்ப்பு மிகக் குறைவே. முற்காலத்தில் அந்த மொழி வெறுமனே பாஷா {பாஷை} என்றே குறிப்பிடப்பட்டது" என்றிருக்கிறது. "சம்ஸ்கிருதம்" என்றால் "நன்றாகச் செய்யப்பட்டது" என்பதே பொருள். எனவே, இங்கே "இல்வலன் நன்றாகப் பேசி பிராமணர்களை அழைத்தான்" எனப் பொருள்கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்ததாக வரும் 57ம் சுலோகத்திலும் ஆடு "நன்றாகச் சமைக்கப்பட்டது" என்பது, "சம்ஸ்கிருதமாகச் செய்யப்பட்டது" என்று வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Ilvala Vatapi as sheep and Agastya

பிறகு, தேவர்களால் பிரார்த்திக்கப்பட்ட அகஸ்திய மஹரிஷி, சிராத்தத்தின் அனுகூலத்தால் அந்த மஹா அசுரனை பக்ஷித்தார் {உண்டார்} என்று சொல்கின்றனர்.(61) இல்வலன், கைக்கழுவுவதற்கான நீரைக் கொடுத்தபோது, {அகஸ்தியரிடம்} "முடிந்ததா?" என்று கேட்டுவிட்டு, தன்னுடன் பிறந்தானிடம் {வாதாபியிடம்}, "வெளியே வா" என்று சொன்னான்.(62) மதிமிக்க முனிசத்தமரான அகஸ்தியர், தன்னுடன் பிறந்தானிடம் {வாதாபியிடம்} இவ்வாறு பேசிக் கொண்டிருந்த அந்த விப்ரகாதியை {கல்விமான்களான பிராமணர்களைக் கொல்லும் இல்வலனை} பரிகசிக்கும் வகையில் {சிரித்துக் கொண்டே பின்வருமாறு} சொன்னார்:(63) "மேஷரூப ராக்ஷசனை நான் ஜீரணித்துவிட்டேன் {ஆட்டுக்கடாவின் வடிவில் இருந்த ராக்ஷசன் வாதாபியை நான் உண்டு செரித்துவிட்டேன்}. யமனின் வசிப்பிடத்திற்குச் சென்றுவிட்ட உன்னுடன் பிறந்தானுக்கு வெளியே வரும் சக்தியேது?" {என்று கேட்டார் அகஸ்தியர்}[7].(64)

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அகஸ்தியரின் இந்த வாசகம் இன்று வரை {சுருங்கச் சொல்லும்} ஒரு குறுமொழியாக நீடிக்கிறது. இராக்ஷசன் இல்வலன், "வாதாபே" என்று அழைத்தான். அதற்கு அகஸ்தியர், "ஜீர்ணம்" என்று சொன்னார். இப்படியே சிறிது நேரம் மாற்றி மாற்றிச் சொல்லப்பட்டதால், அந்தக் கேள்வி பதில்களே, "வாதாபி செரிக்கப்பட்டான்" என்ற பொருளில், "ஜீர்ணம், ஜீர்ணம், வாதாபி ஜீர்ணம்" என்ற வாக்கியமாக அமைந்தது. தாய்மாரின் பாரம்பரிய வளர்ப்பில், குழந்தைகளுக்குப் பாலோ, வேறு ஊட்டப்பொருள்களோ கொடுத்த பிறகு, மென்மையான உடற்பயிற்சியைக் கொடுத்தவாறே, "ஜீர்ணம், ஜீர்ணம், வாதாபி ஜீர்ணம்" என்று பலமுறை சொல்வார்கள். செரிக்கப்படாத உணவையோ, உடல்நலத்தைக் கெடுக்கும் உணவையோ அந்தக் குழந்தைகள், அகஸ்தியரைப் போலச் செரிக்க வேண்டும் என்றுவிரும்பியே அந்தத் தாய்மார்கள் அவ்வாறு சொல்வார்கள். அதுமுதல் பிராமணர்களுக்கு எந்த வகையான இறைச்சியையும் அகஸ்தியர் தடை செய்தார் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இறைச்சி உணவு பிராமணர்களின் வயிற்றை ஆட்டின் கொம்புகளைப் போல வெட்டும் என்று சபிக்கும் பொருளில் அவ்வாறு சொன்னார். பிராமணர்கள் பலதரப்பட்டவர்களாக இருக்குமாறு, "ப்³ராஹ்மணாநாம் அநேகத்வம்", அதாவது "பிராமணர்கள் எவரும் மற்ற பிராமணருடன் ஒத்துப் போகமாட்டார்கள்" என்று சபித்ததாகவும் சொல்லப்படுகிறது. அகஸ்தியர் வாதாபியைச் செரித்த கதை மஹாபாரதம், வனபர்வம் பகுதி 99ல் விரிவாகச் சொல்லப்படுகிறது. மஹாபாரதத்தில், வனபர்வம் 95ம் பகுதி முதல் 99ம் பகுதி வரையும், பிறகு, 103ம் பகுதி முதல் 105ம் பகுதி வரையும் ராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் இந்த சர்க்கத்தில் வரும் அகஸ்தியரின் கதை விரிவாகச் சொல்லப்படுகிறது. 

அந்தச் சொற்களைக் கேட்டு தன்னுடன் பிறந்தவன் இறந்ததை உறுதி செய்த அந்த நிசாசரன் {இரவுலாவி}, குரோதமடைந்தவனாக அந்த முனிவரைத் தாக்க ஆரம்பித்தான்.(65) அவன், அந்த துவிஜேந்திரரை {இருபிறப்பாளர்களின் தலைவரான அகஸ்தியரை} நோக்கிப் பாய்ந்த போது, தேஜஸ்ஸுடன் ஒளிர்ந்த அந்த முனிவரின், அனலனுக்கு {நெருப்புக்கு} ஒப்பான கண்களால் எரிக்கப்பட்டு இறந்தான்.(66) தடாகங்களாலும், வனத்தாலும் சோபிக்கும் இதுவே, விப்ரர்கள் மீது கொண்ட கருணையால் சாத்தியமற்ற இந்தச் சாதனையைச் செய்தவருடன் பிறந்தவரின் {அகஸ்தியருடைய சகோதரரின்} ஆசிரமமாகும்" {என்றான் ராமன்}.(67)

இராமன் இவ்வாறு சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம்} சொல்லிக் கொண்டிருந்தபோது, சூரியன் அஸ்த கதி அடைந்து, சந்தியா காலமும் நெருங்கி வந்தது.(68) அவன் தன்னுடன் பிறந்தானுடன் விதிப்படி மேற்கு சந்தியை உபாசித்து, ஆசிரமபதத்திற்குள் பிரவேசித்து, அந்த ரிஷியை {அகஸ்தியரின் தம்பியை} வணங்கினான்.(69) இராகவன், அந்த முனிவரின் முறையான வரவேற்பை ஏற்று, பழங்களையும், கிழங்குகளையும் உண்டு, அன்றைய ஓரிரவு அங்கேயே வசித்திருந்தான்.(70) அந்த ராத்திரியும் கடந்து, ரவி மண்டலம் {சூரியன்} உதித்ததும், அந்த அகஸ்தியருடன் பிறந்தவரிடம் {அகஸ்தியரின் தம்பியிடம்} ராகவன் விடைபெற்றுக் கொள்ளும் வகையில்,(71) "பகவானே, இரவில் நாங்கள் சுகமாக வசித்தோம். குருவான உமது அண்ணனை {அகஸ்தியரைக்} காணச் செல்வதால், நான் உம்மை வணங்கி விடைபெற்றுக் கொள்கிறேன்" {என்றான் ராமன்}.(72)

அவர் {அகஸ்தியரின் தம்பி}[8], "அவ்வாறே செல்வாயாக" என்று சொன்னதும், ரகுனந்தனன், அந்த வனத்தைக் கண்டு, தனக்குச் சொல்லப்பட்ட மார்க்கத்தில் பயணித்தான்.(73) காட்டு தானியப் புற்களையும் {விளைவிக்காத நெல்வயல்களையும்}, பலா, சாலம், அசோகம், வஞ்சி, தவம், சிறிவில்வம், மதூகம் {இருப்பை}, வில்வம், திந்துகம் போன்றவற்றையும் {போன்ற மரங்களையும்},(74) யானைகளின் துதிக்கைகளால் நொறுங்கியவையும், வானரங்களால் {குரங்குகளால்} நன்கு சோபிப்பவையும், மதங்கொண்ட நூற்றுக்கணக்கான பறவைக்கூட்டங்களால் எதிரொலிப்பவையும், புஷ்பித்த நுனிகளுடன் கூடிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், தானே புஷ்பித்தவையுமான நூற்றுக்கணக்கான காட்டுமரங்களை ராமன் கண்டான்.(75,76)

[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே சொல்லப்படும் அகஸ்தியரின் தம்பி சுதர்சனராவார். ஆனால் எவரும் அவரை அப்பெயரில் அழைக்காமல், அகஸ்தியருடன் பிறந்தவர் என்ற வகையில் "அகஸ்தியபிராதா" என்றே அழைக்கின்றனர்" என்றிருக்கிறது. இணையத்தில் அகஸ்தியரின் தம்பி குறித்த விவாதம் எழுந்த ஓர் ஆய்வுத் தளத்தில் {https://hinduism.stackexchange.com/questions/7979/who-is-agastyas-brother-in-the-ramayana}, "அகஸ்தியரும், வசிஷ்டரும், நட்பின் தேவனான மித்ரனுக்கும், கடலின் தேவனான வருணனுக்கும் பிறந்த மகன்கள் என்று ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடுகிறது. அவ்வாறெனில், அகஸ்தியருடன் பிறந்தவர் வசிஷ்டரே ஆவார். நிச்சயம் ராமன் இங்கே சந்திப்பது வசிஷ்டரை அல்ல. அவ்வாறெனில் அகஸ்தியருக்கு மற்றொரு தம்பி எப்படி இருக்க முடியும்? ஸ்கந்த புராணம், சேது மஹாத்மியத்தில், அகஸ்தியரின் தம்பி ஒருவரின் இறப்பு சொல்லப்படுகிறது. அகஸ்தியரின் தம்பி சிவனிடம் மோக்ஷம் வேண்டுகிறார். சிவன் அவர் முன்பு தோன்றி, ராமேசுவரத்தின் அருகில் உள்ள, தற்போது ஏகாந்தராமர் கோவிலில் உள்ள அம்ருதவாபி தீர்த்தத்தில் நீராடச் சொல்கிறான். இவ்வாறே அவர் மோக்ஷம் அடைகிறார். ஆனால் ஸ்கந்த புராணத்திலும் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை. "குடத்தில் பிறந்த முனிவரின் தம்பி" என்றே அங்கும் அழைக்கப்படுகிறார். ஸ்ரீமத் பாகவதம் 4:1:36ல், "புலஸ்தியர், தமது மனைவியான ஹவிர்புவியிடம் அகஸ்தியரைப் பெற்றார், அவர் அடுத்த ஜன்மத்தில் தஹ்ராக்னி என்ற பெயருடையவரானார். அப்போது அவரைத் தவிர புலஸ்தியருக்கு விஸ்ரவஸ் என்ற பெயரில் ஒரு மஹாதபஸ்வி மற்றொரு மகனாக இருந்தார் என்றிருக்கிறது. ஒருவேளை இந்த விஸ்ரவஸ்தான் ராமன் சந்தித்த அகஸ்தியரின் தம்பியாக இருந்தால், அவன் தன் எதிரியான ராவணனின் தந்தையைச் சந்தித்திருக்கிறான் என்று பொருளாகிறது. விஸ்ரவஸின் மகன்களே குபேரனும், ராவணனுமாவர்" என்றிருக்கிறது. புலஸ்தியர், பத்து பிரஜாபதிகளிலும், பிரம்மனின் மானஸ புத்திரர்களிலும், சப்தரிஷிகளுள்ளும் ஒருவராவார். உத்திரகாண்டத்தில், "புலஸ்தியருக்கும் மனினிக்கும் பிறந்தவர் விச்ரவஸ், விச்ரவஸுக்கு இளவிதை மூலம் பிறந்தவன் வைச்ரவணன் {குபேரன்}. விச்ரவஸின் இரண்டாம் மனைவியான கைகேசிக்குப் பிறந்தவர்கள், இராவணன், சூர்ப்பணகை, கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோராவர்" என்று அகஸ்தியரே ராமனிடம் சொல்கிறார். உத்தரகாண்டத்தைத் தவிர்த்துப் பார்த்தாலும், மஹாபாரதம், வனபர்வம் 273ம் அத்தியாயத்தில், "புஷ்போத்கதை, ராகை, மாலினி என்ற ராக்ஷசப் பெண்கள் மூவரையும் குபேரன் தன் தந்தையான விஸ்வரஸின் பணிவிடைக்காக அனுப்பி வைத்தான். இராவணன், கும்பகர்ணன்  ஆகிய இருவரும் புஷ்போத்கதைக்குப் பிறந்தனர். விபீஷணன் மாலினிக்குப் பிறந்தான். கரனும், சூர்ப்பனகையும்  இரட்டைப் பிள்ளைகளாக ராகைக்குப் பிறந்தனர்" என்றிருக்கிறது. அவ்வாறெனில், மேற்கண்ட வலைத்தளத்தில் எழுந்தது போல் ராமன் கண்ட அகஸ்தியரின் தம்பி அந்த விச்வரஸாக இருந்தால், ராமன் இங்கே ராவணனின் தந்தையைக் காண்கிறான் என்றே பொருளாகிறது. இருப்பினும் பல்வேறு புராணங்களில் கிட்டும் இதுபோன்ற தரவுகள் வெவ்வேறு காலங்களில் பல்வேறு அகஸ்தியர்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்துக்கு வலு சேர்க்கின்றன. அவ்வாறெனில், இங்கே ராமன் சந்திப்பது எந்த அகத்தியரை என்ற கேள்வியும், எந்த அகத்தியரின் தம்பியை அவன் சந்திக்கிறான் என்ற கேள்வியும் சேர்ந்தே எழும். 

அப்போது ராஜீவலோசனனான {தாமரைக் கண்ணனான} ராமன், தன்னைப் பின்தொடர்பவனும், வீரனும், லக்ஷ்மிவர்தனனுமான {செழிப்பை அதிகரிப்பவனுமான} லக்ஷ்மணனின் அருகில் சென்று {பின்வருமாறு} சொன்னான்:(77) "இங்கே மரங்கள் பளபளவென்று தழைத்திருப்பதாலும், மிருகங்களும், பறவைகளும் சாந்தமாக இருப்பதாலும் ஆத்மஞானியான அந்த மஹரிஷியின் {அகஸ்தியரின்} ஆசிரமம் அதிக தூரத்தில் இல்லையெனத் தோன்றுகிறது.(78) உலகத்தில் தம் செயலால் அகஸ்தியர் {விந்திய மலையின் வளர்ச்சியைத் தடுத்தவர்} என்று நன்கறியப்படுபவரின் ஆசிரமம், சிரமப்படுவோரின் களைப்பைப் போக்குவதாகத் தோன்றுகிறது.(79) இந்த வனம் வேள்விப்பீடத்தில் இருந்து எழும் புகையால் சூழப்பட்டிருக்கிறது; இங்கே மரவுரிகள் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன; சாந்தமான மான்கூட்டங்களால் நிறைந்தும், நானாவித பறவைகளின் ஒலியை எதிரொலித்துக் கொண்டும் இருக்கிறது.(80) 

எவர் புண்ணிய கர்மங்களைச் செய்து, உலக நன்மையை விரும்பி, மரணத்தைத் தம் மஹிமையால் {தவசக்தியால்} தடுத்து[9], தக்ஷிண திக்கை சரண்யமாக {தென்திசையை வாழத்தகுந்ததாகச்} செய்தாரோ[10].(81) எவருடைய பிரபாவத்தால் {மேன்மையால்} ராக்ஷசர்கள் அச்சத்துடன் {தொலைவில் இருந்து} பார்த்தாலும் இந்த தென் திக்கை அனுபவிக்காமல் இருக்கிறார்களோ அவருடைய {அந்த அகஸ்தியரின்} ஆசிரமபதம் இது.(82) அந்த புண்ணிய கர்மத்தைச் செய்தவர், இந்த திக்கை எப்போது அடைந்தாரோ அப்போதிருந்தே ரஜனிசரர்கள் வைரமற்றவர்களாகி சாந்தமடைந்தனர் {அந்த இரவுலாவிகள் பகையற்று அமைதியடைந்தனர்}.(83) {அகஸ்திய} பகவானின் நாமத்திற்கு மிகத் தகுந்த இந்த தக்ஷிண திக்கு, மூன்று உலகங்களிலும் குரூர கர்மங்களைச் செய்பவர்களால் அணுகப்படமுடியாததாக புகழ்பெற்றிருக்கிறது[11].(84)

[9] முனிவர்களின் மரணத்தைத் தடுத்த அகஸ்தியரின் கதை மஹாபாரதம், வனபர்வம் பகுதி 103ல் விரிவாகச் சொல்லப்படுகிறது.

[10] கிட்டத்தட்ட இந்த சர்க்கத்தின் 54ம் சுலோகத்தையே இஃது ஒத்திருக்கிறது.

[11] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "தென்திசை தக்ஷிணம் என்று அறியப்படுகிறது. தக்ஷ /தக்ஷிண என்ற சொல்லுக்கு சாதித்தவர் எனப் பொருள்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இம்மஹா முனிவரால் இத்தென்திசை பீடையற்றிருக்கின்றமையின், இது அகஸ்திய திசையென்றே கூறப்படுகின்றது" என்றிருக்கிறது.

எவருடைய ஆணைக்கிணங்க உத்தம அசலமான {மலையான} விந்திய சைலம், ஒருபோதும் பாஸ்கரனின் {சூரியனின்} மார்க்கத்தை தடுக்காதவாறு தன் வளர்ச்சியை நிறுத்தியதோ[12], தம் செயல்களால் உலகில் புகழ்பெற்றவரும், தீர்க்க ஆயுள் கொண்டவருமான அந்த ஸ்ரீமான் அகஸ்தியரின் ஆசிரமமான இது, நன்னடத்தை கொண்ட மிருகங்களாலும், ஜனங்களாலும் நன்கு சேவிக்கப்படுகிறது.(85,86) உலகத்தால் அர்ச்சிக்கப்படுபவரும், நித்தியம் நல்லவர்களுக்கு நன்மை செய்ய விரும்புகிறவருமான அந்த சாது {அகஸ்தியர்}, அங்கே செல்லும் நமக்கான நன்மையை நம்மிடம் சேர்ப்பார்.(87) பிரபுவே, சௌம்யா {மென்மையானவனே}, நான் மஹாமுனிவரான அந்த அகஸ்தியரை ஆராதிக்கவும், எஞ்சிய வனவாசத்தை அங்கேயே கழிக்கவும் விரும்புகிறேன்.(88) 

[12] விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியரின் கதை மஹாபாரதம் வன பர்வம் பகுதி 104ல்  விரிவாகச் சொல்லப்படுகிறது.

தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரமரிஷிகளும், நியதமான ஆஹாரத்துடன் {உணவுக்கட்டுப்பாட்டுடன்} கூடிய அகஸ்தியரிடம் சென்று, அங்கேயே அவரை உபாசித்துக் கொண்டிருக்கின்றனர்.(89) பொய்யனோ, குரூரனோ, வேறு எந்த வஞ்சகனோ, மனிதரைத் துன்புறுத்துபவனோ, பாபநடத்தை கொண்டவனோ அங்கே ஜீவிக்க {வாழ} இயலாது. இதுவே அந்த முனிவரின் விதமாகும் {இயல்பாகும்}.(90) தேவர்களும், யக்ஷர்களும், நாகங்களும், பறவைகளும் நியதமான ஆஹாரத்துடன், தர்மத்தையே ஆராதித்தபடி அங்கே வசித்து வருகின்றனர்.(91) சித்தியடைந்த மஹாத்மாக்களான பரமரிஷிகள், அங்கே தங்கள் தேகங்களைக் கைவிட்டு, நவ தேகங்களுடன் {புதிய உடல்களுடன்} சூரியப் பிரகாசம் கொண்ட விமானங்களில் ஏறி ஸ்வர்க்கத்தில் திரிகிறார்கள்.(92) அங்கே சுப பூதங்களால் {நல்ல உயிரினங்களால்} வழிபடப்படும் தேவர்கள், யக்ஷத்வம் {யக்ஷரெனும் தெய்வீகநிலை}, அமரத்வம் {சாகாநிலை}, விதவிதமான ராஜ்ஜியங்கள் ஆகியவற்றைக் கொடுக்கிறார்கள்.(93) சௌமித்ரியே, {அகஸ்தியருடைய} ஆசிரமபதத்தின் அருகில் வந்துவிட்டோம். முதலில் பிரவேசித்து, சீதை சஹிதனாக நான் இங்கே வந்திருப்பதை அந்த ரிஷியிடம் {அகஸ்தியரிடம்} சொல்வாயாக[13]" {என்றான் ராமன்}.(94)

[13] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "எப்போதும் {மூவரும்} ஒன்றாக நுழையும் வழக்கம் இங்கே கைவிடப்படுகிறது. இது கவனத்தில் கொள்ளத்தக்கது" என்றிருக்கிறது. இராமன் இங்கே ஒரு ராஜாவைப் போல் நடந்து கொள்வதாகத் தெரிகிறது. இதற்கு முன் முனிவர்களின் ஆசிரமங்களுக்குள் நுழையும்போது இந்த ராஜநடைமுறை கடைப்பிடிக்கப்பட்டதாக முந்தைய சர்க்கங்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 11ல் உள்ள சுலோகங்கள்: 94

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை