The heart of Athiti's son, the sun-god Surya | Yuddha-Kanda-Sarga-105 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வெற்றியை அடைவதற்கு, சூரிய தேவனைத் துதிக்கும் ஆதித்ய ஹிருதய சுலோகங்களை உரைக்கும்படி ராமனை அறிவுறுத்திய அகஸ்தியர்...
அப்போது, யுத்தத்தில் சோர்வடைந்து, சமர்க்களத்தில் சிந்தனையுடன் நின்றிருந்த ராவணனைத் தன் முன்னால் கண்டு, யுத்தத்திற்கு ஆயத்தமானான் {ராமன்}.{1} தைவதங்களுடன் சேர்ந்து, ரணத்தை {போரைக்} காண வந்திருந்த பகவான் {வணக்கத்திற்குரிய} அகஸ்திய ரிஷி, ராமனை அணுகி {பின்வருமாறு} கூறினார்:(1,2) "வத்ஸா {குழந்தாய்}, ராமராமா {விருப்பத்திற்குரிய ராமா}, மஹாபாஹோ, சமரில் எதனால் சர்வ அரீக்களையும் அழித்து, விஜயமடைவாயோ, அந்த ஸநாதனமான குஹ்யத்தைக் கேட்பாயாக {பகைவர் அனைவரையும் அழித்து, வெற்றியை அளிக்கும் தொன்மையான ரகசியத்தைக் கேட்பாயாக}[1].(3) ஆதித்யஹ்ருதயம் புண்ணியமானது; சர்வசத்ருக்களை நாசமடையச் செய்வது; ஜயத்தை விளைவிப்பது; நித்யம் ஜபிக்க வேண்டியது; அக்ஷயமானது {வற்றாமல் தருவது}; பரமமானது {மேன்மையானது}; சிவமானது {மங்கலமானது};{4} சர்வ மங்கல மாங்கல்யமானது {மங்கலங்கள் அனைத்திலும் மங்கலமானது}; சர்வ பாபங்களையும் நாசம் செய்வது; சிந்தனை, சோகங்களை {கவலையையும், துக்கத்தையும்} போக்கவல்லது; ஆயுள் வளர்ப்பதில் உத்தமமானது.(4,5)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு ஆதித்யசப்தம் ஸூர்யமயமண்டலத்தைச் சொல்லுகிறது. அதன் ஹ்ருதயமாவது அதன் மத்யப்ரதேசம். 'ய ஏஷோந்த ராதித்யே ஹிரண்மய: புருஷோ உருசியதே' என்னும் சுருதியின்படி ஸூர்யமண்டலத்தினிடையிலிருக்கும் பரமபுருஷனைச் சொல்லுகிறது. அல்லது ஆதித்யனென்றால் ஸூர்யன். ஹ்ருத் என்று ஹ்ருதயத்தைச் சொல்லுகிறது. அயம் என்று அதிலுள்ள வஸ்துவைச் சொல்லுகிறது. 'அய பயமதௌ' என்று தாது. 'ய ஆதித்யேதிஷ்ந்ய ஆதித்யாமந்த்ரோ யமயதி' என்ற சுருதியின்படி ஸூர்யஹ்ருதயத்திலிருப்பவன் பரமபுருஷனாகையால், ஆதித்யஹ்ருதயமென்றால் பரமபுருஷனைச் சொல்லும் ஸ்தோத்ரமென்று பொருள்" என்றிருக்கிறது.
அந்த ரஸ்மீமந்தனை {கதிர்களால் மகுடம் சூட்டப்பட்டவனை}, ஸமுத்யந்தனை {அடிவானில் உதிப்பவனை}, தேவாஸுரநமஸ்க்ருதனை {தேவ, அசுரர்களால் நமஸ்கரிக்கப்படுபவனை}, விவஸ்வந்தனை {பேரொளிமிக்கவனை}, புவனேஷ்வரனை {உலகின் தலைவனை} பாஸ்கரனை {ஒளியூட்டுபவனை} பூஜிப்பாயாக {வணங்குவாயாக}.(6) சர்வ தேவாத்மகனும் {தேவர்கள் அனைவரின் ஆத்மாவாக விளங்குபவனும்}, தேஜஸ்வியும் {மகிமைமிக்கவனும்} இவனே. தேவாசுரகணங்களையும், லோகங்களையும் {தன் கதிர்களால்} பாதுகாப்பவன் ரஸ்மீபாவனான இவனே {கதிர்களை அளிப்பவனான இவனே}.(7) பிரம்மனும், விஷ்ணுவும், சிவனும், ஸ்கந்தன், {பத்துப்} பிரஜாபதிகள், மஹேந்திரன், தனதன் {குபேரன்}, காலன், யமன், சோமன் {சந்திரன்}, அபாம்பதி {வருணன்} ஆகியோரும் இவனே.(8)
பித்ருகள், {எட்டு} வசுக்கள், {பனிரெண்டு} சாத்யர்கள், {இரண்டு} அஸ்வினிகள், {நாற்பத்தொன்பது} மருத்துகள், மனு, வாயு, வஹ்னி {அக்னி}, பிரஜைகள் {உயிரினங்கள்}, பிராணன்கள் {உயிர்கள்}, ருதுகர்த்தர்கள் {பருவகாலங்களின் தேவர்கள்}, பிரபாகரன் {பிரபைகளின் கொள்ளிடம் நீயே}.(9) ஆதித்யன் {அதிதியின் மகன்}, ஸவிதன் {அனைத்தையும் படைப்பவன்}, ஸூர்யன் {செயல்களைத் தூண்டுபவன்}, ககன் {வானில் திரிபவன்}, பூஷன் {மழை கொடுத்து அனைத்தையும் வளர்ப்பவன்}, கபஸ்திமான் {கதிர்களைக் கொண்டவன்}, ஸுவர்ணஸத்ருஷன் {பொன்மயமாகக் காணப்படுபவன்}, பானு {ஒளிமயமானவன்}, ஹிரண்யரேதஸ் {பொன்வித்து கொண்டவன்}, திவாகரன் {பகலை உண்டாக்குபவன் நீயே}.(10) ஹரிதஷ்வன் {பச்சைக் குதிரைகளைக் கொண்டவன்}, சஹஸ்ரார்சி {ஆயிரங்கதிரோன்}, ஸப்தஸப்தி {ஏழு ஒளிகளைக் கொண்ட சப்தம் என்ற குதிரையைக் கொண்டவன்}, மரீசிமான் {கதிர்களால் நிறைந்தவன்}, திமிரோன்மதனன் {இருளை அழிப்பவன்}, ஷம்பு {நலம் தருபவன் / மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்}, துவஷ்டா {பெயர்களையும், வடிவங்களையும் அழிப்பவன் / அனைத்தையும் அழிப்பவன்}, மார்த்தாண்டகன் {அண்டமெனும் முட்டையில் உயிரை ஊட்டுபவன் / அழிந்ததை மீண்டும் படைப்பவன்}, அம்ஷுமான் {நீக்கமற நிறைந்த கதிர்களைக் கொண்டு பிரகாசிப்பவன் நீயே}.(11) ஹிரண்யகர்பன் {தங்கத்தைக் கருவாகக் கொண்டவன்}, சிசிரன் {குளிரச் செய்பவன்}, தபநன் {வெப்பத்தைப் படைப்பவன்}, அஹஸ்கரன் {ஒளியை உண்டாக்குபவன்}, ரவி {யாவராலும் துதிக்கப்படுபவன்}, அக்நிகர்பன் {அக்னியைக் கருவாகக் கொண்டவன்}, அதிதிபுத்ரன் {அதிதியின் மகன்}, சங்கன் {சாயங்காலங்களில் தாமாகவே தணிபவன்}, சிசிரநாசனன் {பனியை அழிப்பவன் நீயே}.(12)
வியோமநாதன் {வானத்தின் தலைவன்}, தமோபேதீ {இருளைப் பிளப்பவன்}, ரிக்யஜுஸாமபராகன் {ரிக், யஜுர், சாம வேதங்களின் கரைகண்ட தலைவன்}, கனவிருஷ்டி {அடர்ந்த மழையை உண்டாக்குபவன்}, அபாம் மித்ரன் {தண்ணீருக்கு நண்பன்}, விந்தியவிதீப்லவங்கமன் {தெற்கு நோக்கிப் பயணிக்கும் தக்ஷிணாயன காலத்தில் விந்திய மலையை வழியாகக் கொண்டு, ஆகாயத்தில் விரைந்து செல்பவன் நீயே}.(13) ஆதபீ {வெயிலைத் தருபவன்}, மண்டலன் {கதிர்களுடன் வட்டமாக இருப்பவன்}, மிருத்யு {மரணமாக இருப்பவன்}, பிங்களன் {பொன்னிறம் கொண்டவன்}, சர்வதாபனன் {அனைத்தையும் எரிப்பவன்}, கவி {படைப்பவன்}, விஷ்வன் {எங்கும் நிறைந்தவன்}, மஹாதேஜஸ்வி {பெருங்காந்தி பொருந்தியவன்}, ரக்தன் {அனைவரிடமும் அன்பு கொண்டவன்}, சர்வபவோத்பவன் {இருக்கும் அனைத்தையும் உற்பத்தி செய்தவன் நீயே}.(14) நக்ஷத்ரக்ரஹதாராணாமதிபன் {நட்சத்திரங்கள், கிரஹங்கள், தாரைகள் ஆகியவற்றின் தலைவன்}, விஷ்வபாவநன் {எங்கும் எதையும் நிலைநிறுத்துபவன்}, தேஜஸாமபிதேஜஸ்வி {அக்னி முதலிய ஒளிபொருந்தியவற்றுள் மிக்க ஒளிபொருந்தியவன்}, துவாதசாத்மனன் {பனிரெண்டு வடிவங்களில் இருப்பவன் நீயே}, நமோஸ்துதே {உனக்கு என் வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன் / உன்னை வணங்குகிறேன்}.(15)
பூர்வாயகிரயே நமஹ {கிழக்கு மலையில் உதிப்பவனே உன்னை வணங்குகிறேன்}, பஷ்சிமாய அத்ரயே நமஹ {மேற்கு மலையில் மறைபவனே உன்னை வணங்குகிறேன்}, ஜ்யோதிர்கணங்களின் பதயே {ஒளிக்கூட்டங்களின் தலைவா}, தினாதிபதயே நமஹ {பகலின் தலைவா உன்னை வணங்குகிறேன்}.(16) ஜயாய {வெற்றியைத் தருபவனே}, ஜயபத்ராய {வெற்றியில் பிறக்கும் இன்பத்தைத் தருபவனே}, ஹர்யஷ்வாய நமோநமஹ {பச்சைக் குதிரைகளைக் கொண்டவனே உன்னைப் பணிந்து வணங்குகிறேன்}, சஹஸ்ராம்சோ {ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே}, ஆதித்யாய நமோநமஹ {அதிதியின் மகனே உன்னைப் பணிந்து வணங்குகிறேன்}.(17) நம உக்ராய {உக்கிரமானவனே உன்னை வணங்குகிறேன்}, வீராய {வீரமிக்கவனே}, சாரங்காய நமோநமஹ {பலவண்ண அங்கங்களைக் கொண்டவனே, உன்னைப் பணிந்து வணங்குகிறேன்}, நம பத்மப்ரபோதாய {தாமரையை மலரச் செய்பவனே உன்னை வணங்குகிறேன்}, பிரசண்டாய நமோஸ்துதே {சீற்றமிக்கவனே உனக்கு என் வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்}.(18)
பிரம்ம, ஈச, அச்யுத ஈசாய {பிரம்மன், ஈசன், அச்யுதன் ஆகியோரின் ஈசனே}, சூர்யாய {சூர்யனே / செயலைச் செய்யத் தூண்டுபவனே}, ஆதித்யவர்சஸே {ஆதித்யனின் வடிவில் ஒளிர்பவனே}, பாஸ்வதே சர்வபக்ஷாயனே {ஒளிரும் அனைத்தையும் விழுங்குபவனே}, ரௌத்ராயவபுஷே நமஹ {ருத்ர வடிவில் தோன்றுபவனே உன்னை வணங்குகிறேன்}.(19) தமோக்நாய {இருளை அழிப்பவனே}, ஹிமக்நாய {பனியை அழிப்பவனே}, சத்ருக்நாய {பகைவரை அழிப்பவனே}, அமிதாத்மநே {அளவிட முடியாத ஆத்மாவே}, கிருதக்நக்நாய {நன்றி மறந்தவர்களை அழிப்பவனே}, தேவாய {தேவனே}, ஜ்யோதிஷாம்பதயே நமஹ {ஒளிகளின் தலைவனே உன்னை வணங்குகிறேன்}.(20) தப்தசாமீகராபாய {உருக்கிய தங்கத்தின் நிறத்தைக் கொண்டவனே}, ஹரயே {அறியாமையை அழிப்பவனே}, விஷ்வகர்மனே {அனைத்தையும் படைப்பவனே}, தமோபிநிக்நாய {இருளை அழிப்பவனே}, ருசயே {ஒளி வடிவமானவனே}, லோகஸாக்ஷியே நமஹ {உலகங்களின் சாட்சியாக இருப்பவனே உன்னை வணங்குகிறேன்}.(21)
இந்தப் பிரபுவே பூதங்களை அழிக்கிறான். இந்த தேவனே அவற்றை உருவாக்குகிறான். இவனே தன் கதிர்களால் உலரச் செய்து வெப்பமூட்டுகிறான். இவனே மழையைப் பொழிகிறான்.(22) இவனே பூதங்களின் {உயிரினங்களின்} உறக்கத்தில் ஊடுருவி விழித்திருக்கிறான். இவனே அக்னிஹோத்ரமாகவும் இருக்கிறான், அக்னிஹோத்ரங்கள் செய்பவர்களுக்கான பலனாகவும் இருக்கிறான்.(23) வேதங்களும், வேள்விகளும், வேள்விகளின் பலன்களும், உலகங்களில் செய்யப்பட்ட செயல்கள் யாவும் பரமபிரபுவான இவனே.(24)
இராகவா, ஆபத்துகள், சிரமங்களிலும், காந்தாரங்களிலும் {காடுகளிலும்}, பயங்களிலும் {பயங்கள் விளைகையிலும்} இதை கீர்த்தனை செய்யும் {இந்த ஆதித்யஹிருதயத்தை ஓதும்} எந்தப் புருஷனும் துன்பத்தில் வீழ்வதில்லை.(25) ஜகத்பதியும், தேவதேவனுமான இவனை ஒருமுகப்படுத்தி {சிதறாமல் குவிந்த ஒரே கவனத்துடன்} பூஜிப்பாயாக. இதை மூன்று முறை ஜபிப்பதன் மூலம் யுத்தங்களில் விஜயமடைவாய்.(26) மஹாபாஹோ, இந்த க்ஷணத்திலேயே நீ ராவணனை வதம் செய்வாய்" என்று இதைச் சொல்லிவிட்டு, அகஸ்தியர் வந்தவழியே சென்றுவிட்டார்[2].(27)
[2] செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில், இந்த சர்க்கம் முழுமையும் இல்லை.
இதைக் கேட்டபோது, அந்த மஹாதேஜஸ்வி சோகத்தில் இருந்து விடுபட்டான். பிரீதியடைந்த ராகவன், அதை நினைவில் கொண்டு பெரும் மகிழ்ச்சியுடன் கடைப்பிடித்தான்.(28) அந்த வீரியவான், மும்முறை ஆசமனஞ்செய்து {நீர் உறிஞ்சி}, தூய்மையடைந்து, தனுவை எடுத்து, ஆதித்யனைப் பார்த்து ஜபித்தபோது, பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(29) மகிழ்ச்சி நிறைந்த ஆத்மாவுடன் ராவணனைப் பார்த்து, யுத்த அர்த்தத்திற்காக நெருங்கிச் சென்றான். மஹத்தான சர்வ யத்னத்துடன் அவனை வதம் செய்வதில் திடமாக இருந்தான்.(30)
அப்போது, இராமனைக் கண்ட ரவி {சூரியன்} மனம்மகிழ்ந்து, நிசிசரபதியின் க்ஷயத்தை {இரவுலாவிகளின் தலைவனான ராவணனின் அழிவை} முன்கண்டு, பரம மகிழ்ச்சியான மனத்துடன், ஸுரகணங்களின் {தேவர்க்கூட்டத்தின்} மத்தியில் நின்று, "துரிதப்படுவாயாக" என்று சொன்னான்.(31)
யுத்த காண்டம் சர்க்கம் – 105ல் உள்ள சுலோகங்கள்: 31
Previous | | Sanskrit | | English | | Next |