Angada’s aspersions on Sugreeva | Kishkindha-Kanda-Sarga-55 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனைப் பழித்துவிட்டு, கிஷ்கிந்தைக்குத் திரும்பிச் செல்வதில்லை எனத் தீர்மானித்த அங்கதன்; சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்த வானரர்கள்...
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படங்களின் தொகுப்பு |
பணிவானதும், தர்மத்திற்கு இணக்கமானதும், ஸ்வாமியிடம் {தலைவனிடம்} கொண்ட முழுமையான அர்ப்பணிப்பிற்குப் பொருத்தமானதுமான ஹனுமதனின் வாக்கியத்தைக் கேட்ட அங்கதன், {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(1) “உறுதி, ஆத்ம மன சுத்தம் {அகப்புறத்தூய்மை}, இரக்கம், நேர்மை, விக்ரமம், தைரியம் ஆகியவை சுக்ரீவரிடம் காணப்படுவதில்லை.(2) இகழத்தக்கவரான எவர், தன்னுடன் பிறந்த ஜியேஷ்டர் {அண்ணன் வாலி} ஜீவித்திருக்கும்போதே, தர்மத்தின்படி மாதாவைப் போன்ற அவரது பாரியையை {தன் அண்ணனின் மனைவியும், என் தாயுமான தாரையை} பிரியமஹிஷியாக ஸ்வீகரித்தாரோ {உரிமை கற்பித்தாரோ}[1],{3} எந்த துராத்மா, உடன்பிறந்தவர் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும்போது, பிலத்தின் முகத்தை அடைத்தாரோ, அத்தகையவர் {சுக்ரீவர்} தர்மத்தை அறிவது எங்ஙனம்?(3,4)
[1] கிஷ்கிந்தா காண்டம் 9ம் சர்க்கத்தில் சுக்ரீவன் வாலியுடன் உண்டான பகையை ராமனிடம் சொன்னபோது, மாயாவியுடனான யுத்தத்தில் அண்ணன் மாண்டுவிட்டான் என்று நினைத்து பிலத்தை அடைத்து வந்ததையும், ராஜ்ஜியம் தன் மேல் திணிக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறானேயன்றி, தாரையைத் தன்னவளாக்கிக் கொண்டதைச் சொல்கிறானில்லை {4:9:21,22}. இது வாலி கொல்லப்படுவதற்கு முன் நடந்தது. ஆனால் வாலி கொல்லப்பட்டு நாட்கள் பலவும் கடந்த பின்னர் கிஷ்கிந்தா காண்டம் 46ம் சர்க்கத்தில் ராஜ்ஜியத்துடன் தாரையையும் அடைந்ததை ராமனிடம் சுக்ரீவன் சொல்கிறான் {4:46:8,9}. இதோ இப்போது இங்கே அங்கதன் தன் மாதாவை சுக்ரீவன் அபகரித்துக் கொண்டதை ஹனுமானிடம் வருத்தத்துடன் பதிவு செய்கிறான்.
கைகளைப் பற்றி சத்தியம் செய்து, செய்ய வேண்டிய கர்மத்தைச் செய்தவரும், பெரும்புகழ்பெற்றவருமான ராகவரை {ராமரை} எவர் மறந்தாரோ, அத்தகையவர் எவ்வாறு நற்செயல்களை நினைவில் கொள்வார்?[2](5) இங்கே லக்ஷ்மணரிடம் கொண்ட பயத்தாலேயே சீதையைத் தேட நமக்கு ஆணையிட்டார் {நம்மை அனுப்பி வைத்தார்}. அதர்மம் செய்வதில் பயமில்லாத கோழையான அவரிடம் தர்மம் இருப்பது எங்ஙனம்?(6) பாபியும், கிருதக்னரும் {நன்றிமறந்தவரும்}, ஸ்மிருதிபின்னரும் {மரபுகளைச் சிதைப்பவரும்}, சலன ஆத்மாவுமான அவரிடம் {நிலையில்லாதவருமான சுக்ரீவரிடம்} ஆரியன் {எவன்தான்}, அதிலும் விசேஷமாக அவர் குலத்தவன் எவன்தான் நம்பிக்கை வைப்பான்?(7) குணமுள்ளவனாக இருந்தாலும், குணமில்லாதவனாக இருந்தாலும், ஒரு புத்திரனே ராஜ்ஜியத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவான். சுக்ரீவர் சத்ரு குலத்தவனான என்னை எவ்வாறு ஜீவிக்கவிடுவார்?[3](8)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “ஹனுமான் இதற்கு, “சுக்ரீவர் ராமரை மறக்கவில்லை, சுகத்தில் மூழ்கிவிட்டார். இராமர் செய்த உதவிக்குக் கைம்மாறு செய்வதற்காகவே சீதையைத் தேட நம் அனைவரையும் அனுப்பி வைத்தார். இது சுக்ரீவரின் நன்னடத்தை இல்லையா?” என்று பதில் கேள்வி கேட்கக்கூடும். அதற்காகவே அங்கதன் பின் வரும் பதிலைத் தயாராக வைத்திருக்கிறான்” என்றிருக்கிறது.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “4-54-20ல், “முன்பு போலவே சுக்ரீவர் உன்னை ராஜ்ஜியத்தில் ஸ்தாபிப்பார்” என்று ஹனுமான் அறிவுறுத்தியதற்கான பதிலே இது. முந்தைய சர்க்கத்தில் அறிவுறுத்தியது போல, “அங்கதனிடம் சுக்ரீவன் நல்ல முறையில் நடந்து கொள்வான்” என்பதை நிறுவுவதற்கான எந்த ஆதாரத்தையும் காட்டி ஹனுமானால் அங்கதனுக்கு மறுப்பு கூற முடியாது. எனவே, இங்கே “வாதிடுவதை விட, தலைவனைப் பின்தொடர்வதே சிறந்தது” என்ற ஒரே வழியே எஞ்சியுள்ளது” என்றிருக்கிறது.
பின்னமந்திர அபராதனும் {திட்டத்தை நிறைவேற்றாத குற்றவாளியும்}, ஹீன சக்தி கொண்டவனுமான நான், கிஷ்கிந்தையை அடைந்து, அநாதையைப் போன்றவனாக, துர்பலனாக {பலமில்லாதவனாக} ஜீவித்திருப்பது எங்ஙனம்?(9) வஞ்சகரும், குரூரரும், ஹிம்சிப்பவருமான சுக்ரீவர், ராஜ்ஜிய காரணத்திற்காக என்னை மர்மமாகத் தண்டிக்கும் வகையில் கட்டி வைத்து நசுக்க {அழிக்கப்} போகிறார்.(10) பந்தனத்தையோ {கட்டுக்குள் அகப்படுவதையோ}, உதைக்கப்படுவதையோ விட எனக்குப் பிராயோபவேசனமே {பட்டினி கிடந்து சாவதே} சிறந்தது. சர்வ வானரர்களும் எனக்கு அனுமதி அளித்துவிட்டு, தங்கள் கிருஹங்களுக்குத் திரும்பிச் செல்லட்டும்.(11) நான் உங்களுக்கு மீண்டும் சொல்கிறேன். நான் புரீக்கு {நகருக்குத்} திரும்ப விரும்பவில்லை. இங்கேயே பிராயத்தில் அமர {பட்டினி கிடந்து சாகப்} போகிறேன். எனக்கு மரணம் மட்டுமே சிறந்தது.(12)
முதலில் ராஜாவை வணங்கி, குசலம் விசாரிப்பீராக. அவ்வாறே முதலில் பலசாலிகளான ராகவர்கள் இருவரையும் வணங்குவீராக.{13} அதன்பிறகு, வானரேஷ்வரரும், என் இளைய தாதையுமான {சிறிய தந்தையுமான} ராஜா சுக்ரீவரிடம் பேசுவீராக.(13,14அ) அதன்பிறகு, என் மாதா ருமையிடம் ஆரோக்கியத்தையும், குசலத்தையும் விசாரிப்பீராக.{14} அதேபோல, என் மாதா தாரையையும் ஆசுவாசப்படுத்துவதே உங்களுக்குத் தகும். இயல்பாகவே இரக்கமும், புத்திரனிடம் பிரியமும் கொண்டவளும், தபஸ்வினியுமானவள் {தாரை},{15} இங்கே என் அழிவைக் கேட்டால் நிச்சயம் ஜீவிதத்தைக் கைவிடுவாள்” {என்றான் அங்கதன்}.(14ஆ-16அ)
இத்தகைய வசனத்தைச் சொன்ன அங்கதன், அவர்களில் {வானரர்களில்} முதியவர்களை வணங்கிவிட்டு, துன்ப முகத்துடன் கூடியவனாக {அழுதுகொண்டே} பூமியில், தர்ப்பையில் சாய்ந்தான்.(16ஆ,17அ) அங்கே அவன் சாய்ந்தபோது, துக்கித்து அழுத வானரரிஷபர்கள், தங்கள் நயனங்களில் உஷ்ண நீரைச் {தங்கள் கண்களின் வெண்ணீரைச்} சிந்தினர்.(17ஆ,18அ) சுக்ரீவனை நிந்தித்து, வாலியைப் புகழ்ந்த அனைவரும், அங்கதனைச் சூழ்ந்து கொண்டு பிராயத்தில் அமர {பட்டினி கிடந்து சாகத்} தீர்மானித்தனர்.(18ஆ,19அ) வாலிபுத்திரனின் {அங்கதனின்} அந்த வாக்கியத்தை அறியவந்த பிலவகரிஷபர்களும் {தாவிச் செல்லும் குரங்குகளும்},{19ஆ} சர்வ ஹரிசிரேஷ்டர்களும் {குரங்குகளில் சிறந்தவர்கள் அனைவரும்} “இவை அனைத்தும் தகும்” என்று சாகத்துணிந்து, நீரைத் தீண்டி, வட தீரத்தில் {வடக்குக் கரையில்}, தெற்கை நோக்கிய நுனிகளைக் கொண்ட தர்ப்பையில் கிழக்கு முகமாகக் கிடந்தனர்.(19ஆ-21அ)
இராமனின் வனவாசத்தையும், தசரதனின் மரணத்தையும்,{21ஆ} ஜனஸ்தான வதத்தையும், ஜடாயு வதத்தையும், வைதேஹி ஹரணத்தையும், அவ்வாறே வாலி வதத்தையும், ராமனின் கோபத்தையும் வாதிட்டுக் கொண்டிருந்த ஹரிக்கள் {குரங்குகள், திடீரென} பயத்தை அடைந்தனர்.(21ஆ,22) பெருஞ்சிகரங்களுக்கு ஒப்பான ஏராளமான பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்} இவ்வாறு சாய்ந்திருந்தபோது, அந்த மஹீதரத்தின் {மலையின்} குகையில் இருந்து வெளிப்பட்ட ஒலியானது, இடியுடன் கூடிய மேகங்களுக்கு ஒப்பானதாகத் தோன்றிற்று.(23)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 55ல் உள்ள சுலோகங்கள்: 23
Previous | | Sanskrit | | English | | Next |