Vanaras | Bala-Kanda-Sarga-17 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம் : பிரம்மனின் அறிவுரை; ராவணனைக் கொல்வதில் ராமனுக்கு உதவி செய்யும் வானரங்களாக அவதரித்த தேவர்கள்...
விஷ்ணு, மஹாத்மாவான அந்த ராஜனனின் {தசரதனின்} புத்திரத்வத்தை அடைந்தபோது {மகனாக அவதரிக்க எண்ணியிருந்த போது}, ஸ்வயம்பூ பகவான் {பிரம்மன்}, தேவர்கள் அனைவரிடமும் இவ்வாறு பேசினான்:(1) "ஸத்யஸந்தனும், வீரனும், நம் அனைவரின் நன்மையை விரும்புகிறவனுமான விஷ்ணுவுக்கு, பலவான்களாகவும், காமரூபர்களாகவும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களாகவும்} ஸஹாயர்களை {சகா/ துணை புரிபவர்களை} உண்டாக்குவீராக.(2) மாயாவிகளும், சூரர்களும், வாயு வேகம் கொண்டவர்களும், நியாயமறிந்தவர்களும், புத்திசாலிகளும், விஷ்ணுவுக்கு நிகரான பராக்கிரமம் வாய்ந்தவர்களும்,(3) அழிக்கப்பட முடியாதவர்களும், உபாயம் அறிந்தவர்களும், தேவ சம்பந்தம் உடையவர்களும் {தெய்வீகத் தொடர்புகளுடன் கூடியவர்களும்}, அஸ்திரங்கள் அனைத்தின் குணங்களை அறிந்தவர்களும், அமுதம் பருகுபவர்களுமான உங்களைப் போன்ற,(4) துல்லிய பராக்கிரமம் கொண்ட புத்திரர்களை முக்கிய அப்சரஸ்கள், கந்தர்விகள் ஆகியோரின் உடல்களில் இருந்தும், யக்ஷ, பன்னக {நாகக்} கன்னிகைகள், ரிக்ஷிகள் {பெண்கரடிகள்}, வித்யாதரிகள், கிங்கரிகளின் உடல்களில் இருந்தும், வானரிகளின் உடல்களில் இருந்தும் ஹரி ரூபத்தில் {குரங்கு வடிவங்களில்} உண்டாக்குவீராக.(5,6) பூர்வத்தில் என்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ரிக்ஷபுங்கவனான {கரடிகளில் சிறந்த} ஜாம்பவான், நான் கொட்டாவி விட்டபோது என் முகத்தில் இருந்து தீடிரென வெளிப்பட்டவன் ஆவான்" {என்றான் பிரம்மன்}[1].(7)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதன் மூலம், தேவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான மாதிரி படைப்பாக பிரம்மன் ஏற்கனவே ஜாம்பவானைப் படைத்துவிட்டான் என்று தெரிகிறது" என்றிருக்கிறது.
பகவான் {பிரம்மன்} இவ்வாறு சொன்னதும் அவர்கள் {தேவர்கள்} அந்த சாசனத்தை {உத்தரவை} ஏற்றுக் கொண்டு, அதன்படியே வானர ரூபங்கொண்ட புத்திரர்களைப் பிறக்கச் செய்தனர்[2].(8) மஹாத்மாக்களான ரிஷிகளும், சித்தர், வித்யாதரர், சாரணர்கள் ஆகியோரும், வீரியவான்களும், வனசாரிகளுமான {காட்டில் திரிபவர்களுமான} சுதன்களை {மகன்களை} உண்டாக்கினர்.(9) இந்திரன், மஹேந்திர மலையைப் போன்ற உடற்கட்டைக் கொண்ட வானரேந்திரன் வாலியையும், ஈரப்பதமூட்டுவர்களில் பெரியவனான தபனன் {சூரியன்}, சுக்ரீவனையும் பிறக்கச் செய்தனர்.(10) பிருஹஸ்பதி, வானரர்கள் அனைவரிலும் முக்கியனும், மிகச் சிறந்தவனும், புத்திமானும், தாரன் என்ற பெயரைக் கொண்டவனுமான மஹாகபியை {பெருங்குரங்கைப்}[3] பிறக்கச் செய்தான்.(11)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த மரபுவழிக்கு இன்னும் குரங்கு எனும் முத்திரை கொடுக்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் குரங்குகளைப் போன்றவர்கள்; குரங்குகள் அல்ல. வானர ரூபிணாம் என்ற ஸ்லோக வரி, குரங்குகளை ஒத்தவர்கள் என்ற பொருளையே தருகிறது. பரந்த வனத்தில் திரிபவர்கள் என்ற பொருளில் {வநே சரதி இதி வநர:} அவர்கள் வானரர்கள் என்று அழைக்கப்பட்டார்களேயன்றி இவர்கள் உண்மையில் குரங்கினம் அல்ல" என்றிருக்கிறது.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே குறிப்பிடப்படுவது வாலியின் மனைவியான தாரையல்ல; இவன் வானர வீரன். இங்கே முதல் முறையாகக் பெருங்குரங்குக்கான மஹாகபி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது" என்றிருக்கிறது.
ஸ்ரீமான் கந்தமாதனன் என்ற வானரன் தனதஸ்யனின் {குபேரனின்} சுதனாவான் {மகனாவான்}. விஷ்வகர்மன், நளன் என்ற பெயரைக் கொண்ட மஹாகபியை {பெருங்குரங்கைப்} பிறக்கச் செய்தான்.(12) பாவகசுதன் {அக்னியின் மகன்}, அக்னி போன்று சுடர்விடுபவனான நீலனாவான். அந்த வீரியவான், தான் கொண்ட தேஜஸிலும், புகழிலும் வானரர்கள் அனைவரிலும் மேலானவனாக இருந்தான்.(13) ரூபமெனும் திரவியத்தை {அழகெனும் செல்வத்தைக்} கொண்ட அஷ்வினிகள், அழகால் அருளப்பட்ட மைந்தன், துவிவிதன் ஆகியோரைப் பிறக்கச் செய்தனர்.(14) வருணன், சுஷேணன் என்ற பெயர் கொண்ட வானரனைப் பிறக்கச் செய்தான். பர்ஜன்யன், மஹாபலம் பொருந்திய சரபனைப் பிறக்கச் செய்தான்.(15) ஸ்ரீமானும், வீரியவானும், வஜ்ரம் போன்ற உடல் கொண்டவனும், வைனதேயனுக்கு {கருடனுக்கு} இணையான வேகத்துடன் கூடியவனும், ஹனுமான் என்ற பெயரைக் கொண்டவனுமான வானரன், மாருதனின் {வாயுவின்} மகனாவான்.(16) அவன் {ஹனுமான்}, வானரர்கள் அனைவரில் முக்கியமானவனும், புத்திமானும், பலவானும் ஆவான்.(17அ)
தசக்ரீவனின் {ராவணனின்} வதத்திற்காக வெளிப்பட்டவர்களில் இன்னும் பரமபலம் பொருந்தியவர்களும், துணிவுமிக்கவர்களும், விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான பல்லாயிரம் வீரர்கள் சிருஷ்டிக்கப்பட்டனர்.(17ஆ,18அ) கஜங்களையும் {யானைகளையும்}, மலைகளையும் போன்றவர்களும், மஹாபலவான்களும், பேருடல் படைத்தவர்களுமான ரிக்ஷர்களும் {கரடிகளும்}, வானரர்களும், கோபுசங்களும் {கருங்குரங்கு வகையைச் சேர்ந்த முசுக்களும்} விரைவில் பிறந்தனர்.(18ஆ,19அ) எந்த தேவன் எந்த வடிவில் இருப்பானோ அதே வேஷமும், பராக்கிரமும் கொண்டவர்களாகவும், அவனவனுக்கு {அந்தந்த தேவனுக்கு} இணையானவர்களாகவும் அவர்களைப் பிறக்கச் செய்தனர்.(19ஆ,20அ)
உன்னதப் பராக்கிரமம் கொண்ட சில வானரர்கள், கோலாங்கூலிகளிடமும் {பெண் லங்கூர்களிடமும்}, மேலும் சிலர் ரிக்ஷிகள் {பெண் கரடிகள்}, கின்னரிகளிடமும் {தெய்வீகப் பெண் இசைக்கலைஞர்களிடமும்} பிறந்தனர்.(20ஆ,21அ) தேவர்கள், மஹாரிஷிகள், கந்தர்வர்கள், தார்க்ஷ்யர்கள் {கழுகுகள்}, கொண்டாடப்பட்ட நாகர்கள், கிம்புருஷர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், உரகர்கள், சாரணர்கள் பலர் அந்த நேரத்தில் மகிழ்ச்சியாக முக்கிய அப்சரஸ் கன்னிகைகள், வித்யாதரிகள், நாககன்னிகைகள், கந்தர்விகள் ஆகியோரின் உடல்களில் இருந்து, வனங்களில் சஞ்சரிக்கவல்லவர்களும், பேருடல் படைத்தவர்களும், வீரியவான்களுமான வானர சுதன்கள் {மகன்கள்} பலரை ஆயிரக்கணக்கில் பிறக்கச் செய்தனர்.(21ஆ-24ஆ) விரும்பியவடிவம் ஏற்கவல்லவர்களும், பலங்கொண்டவர்களும், தங்கள் விருப்பம் போல் சுதந்திரமாகத் திரியவல்லவர்களுமான அவர்கள், வலிமையிலும், செருக்கிலும், புலிக்கும், சிங்கத்திற்கும் ஒப்பானவர்களாகத் திகழ்ந்தனர்.(24இ,25அ)
அவர்கள் அனைவரும் கற்களைக் கொண்டு தாக்குபவர்கள், அவர்கள் அனைவரும் மரங்களைக் கொண்டு தாக்குபவர்கள், அவர்கள் அனைவரும் நகங்களையும், பற்களையும் ஆயுதங்களாகக் கொண்டவர்கள், இருப்பினும் அவர்கள் அனைவரும் அனைத்து அஸ்திரங்களிலும் திறன்வாய்ந்தவர்கள்.(25ஆ,26அ) அவர்கள், பெரிய மலைகளையே அசைக்கவல்லவர்கள், ஸ்திரமான மரங்களை வேருடன் பிடுங்கக்கூடியவர்கள், தங்கள் வேகத்தால் ஸரிதாம்பதியான சமுத்திரத்தை {ஆறுகளின் கணவனான பெருங்கடலை} கலங்கடிக்கக்கூடியவர்கள்.(26ஆ,27அ) அவர்கள், தங்கள் பாதங்களால் தரையைப் பிளக்கவல்லவர்கள், பெருங்கடலையே குதித்துத் தாண்டக் கூடியவர்கள், ஆகாயத்தில் எழுந்து மேகங்களையும் பிடிக்கவல்லவர்கள்.(27ஆ,28அ) அவர்கள் வனத்தில் ஆரவாரத்துடன் திரிந்து, மதங்கொண்ட யானைகளையும் பிடிக்கவல்லவர்கள், தங்கள் குரலொலி முழக்கத்தால் {ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும்} பறவைகளையும் விழச் செய்பவர்கள்.(28ஆ,29அ) விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும், போரில் வீரத்தலைவர்களும், மஹாத்மாக்களுமான அவர்கள், இவ்வகையில் நூறு லட்சம் குரங்குகளைப் பிறக்கச் செய்தனர்.(29ஆ,30அ) பிரதானக் குரங்குக் கூட்டத்தின் குரங்குத் தலைவர்களான அவர்கள் துணிச்சல்மிக்கக் குரங்குகளைப் பிறக்கச் செய்தனர்,(30ஆ,31அ)
சில ஆயிரக்கணக்கானோர் ரிக்ஷவான் மலையின் முகடுகளில் இருந்தனர், வேறு சிலர் நானாவித மலைகளையும், கானகங்களையும் அடைந்தனர்.(31ஆ,32அ) அவர்கள் அனைவரும் சூரியபுத்திரனான சுக்ரீவனும், சக்ரபுத்திரனான வாலியுமாகிய சகோதரர்களை அண்டி அவர்களின் தலைமையில் இருந்தனர். குரங்குத் தலைவர்களான நளன், நீலன், ஹனுமான் ஆகியோரும், இன்னும் பிற குரங்குத் தலைவர்களும் கூட அவர்களை {வாலி, சுக்ரீவன் ஆகியோரைப்} புகழ்ந்திருந்தனர்.(32ஆ,33) தார்க்ஷ்ய {கருடனைப் போன்ற} பலம் கொண்டவர்களும், யுத்தம் செய்வதை நன்கறிந்தவர்களுமான அவர்கள் அனைவரும் சிங்கங்கள், புலிகள், பெரும்பாம்புகள் ஆகியவற்றின் செருக்கை அழித்துத் திரிந்திருந்தனர்.(34) பெருந்தோள்களைக் கொண்டவனும், பெரும் வலிமைமிக்கவனும், மஹாபலவானுமான வாலி, ரிக்ஷர்களையும் {கரடிகளையும்}, கோபுசர்களையும் {முசுக்களையும்}, வானரர்களையும் காத்துவந்தான்.(35)
மலைகள், வனங்கள், கடல்களுடன் கூடிய இந்தப் பூமியானது, சூரர்களும், பல்வேறு வகை உடலமைப்புகளையும், உடல் தோற்றங்களையும் {அடையாளங்களையும்} கொண்டவர்களுமான அவர்களால் நிறைந்திருந்தது.(36) பூமியானது, ராமனுக்கு ஸஹாயம் செய்யும் காரணத்திற்காக உண்டானவர்களும், மேகக்கூட்டங்களையும், மலைச்சிகரங்களையும் போன்றவர்களும், மஹாபலசாலிகளும், பீமசரீரரூபங் {பயங்கர உடற்தோற்றம்} கொண்டவர்களுமான அவர்களாலும், வானரப்படைத்தலைவர்களாலும் நிறைந்திருந்தது.(37)
பாலகாண்டம் சர்க்கம் –17ல் உள்ள சுலோகங்கள்: 37
Previous | | Sanskrit | | English | | Next |