Divine Dessert | Bala-Kanda-Sarga-16 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தசரதனின் புத்ரகாமேஷ்டி யஜ்ஞம்; யஜ்ஞ புருஷன் கொடுத்த பாயஸத்தை தசரதன் தன் மனைவிகளுக்குக் கொடுத்தது...
பின்னர் ஸுரஸத்தமர்களால் {சூரர்களில்/தேவர்களில் சிறந்தவர்களால் தெய்வீகப் பணியில்} நியமிக்கப்பட்டவனும், நாராயணனுமான விஷ்ணு, நடக்க இருப்பதை அறிந்தவனாக இருந்தாலும் ஸுரர்களிடம் இவ்வாறான மென்மையான வசனத்தில் பேசினான்:(1) "ஸுரர்களே, அந்த ராக்ஷஸாதிபதியை {ராட்சசர்களின் அதிபதியை/ ராவணனை} வதைக்கும் உபாயமென்ன? ரிஷிகளுக்கு முள்ளாய் இருப்பவனை அதைப் பின்பற்றியே நான் அழிப்பேன்" {என்றான்}.(2)
அழிவற்றவனான விஷ்ணு இவ்வாறு சொன்னதும், ஸுரர்கள் {தேவர்கள்} அனைவரும் அவனிடம் மறுமொழியாக, "மனித வடிவை ஏற்று, போரில் ராவணனைக் கொல்வாயாக.(3) அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, நெடுங்காலம் அவன் {ராவணன்} தீவிர தவம் மேற்கொண்டான். உலகத்தைப் படைத்தவனும், உலகத்தில் முதலில் பிறந்தவனுமான பிரம்மன் அதனால் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(4) அந்தப்பிரபு {பிரம்மன்}, அந்த ராக்ஷசனுக்கு நிறைவுடன் வரமளித்ததன் மூலம், அவனுக்கு மானிடரைத் தவிர நானாவித உயிரினங்களிடமும் பயமில்லை.(5) {ஏனெனில்} முன்னர் வரம் அளிக்கப்பட்டபோது மானிடரை அவன் அலட்சியம் செய்தான் {கீழாகக் கருதினான்}. இவ்வாறு பிதாமஹரிடம் இருந்து வரதானம் பெற்ற கர்வத்தில்,(6) அவன் மூவுலகங்களையும் கொடுமைப்படுத்தவும், ஸ்திரீகளை அபகரிக்கவும் செய்கிறான். எனவே பரந்தபா {பகைவரை அழிப்பவனே}, மானிடர்களாலேயே அவனது வதம் நேரும் எனக் கருதுகிறோம்" என்றனர் {தேவர்கள்}.(7)
ஆத்மவானான விஷ்ணு, இவ்வாறான ஸுரர்களின் {தேவர்களின்} வசனத்தைக் கேட்டு, அந்த தசரத மன்னனைத் தன் தந்தையாகத் தேர்ந்தெடுத்தான்.(8) பேரொளி படைத்தவனும், ஸுரரிசூதனனுமான {தேவர்களின் பகைவரைக் கொல்பவனுமான} அந்த மன்னன் {தசரதன்}, புத்திரரற்றவனாக இருந்ததால் புத்திரர்களைப் பெற விரும்பி அந்த நேரத்தில் புத்ரீயாம் இஷ்டி {புத்திரகாமேஷ்டி} எனும் யஜ்ஞத்தைச் செய்து கொண்டிருந்தான்.(9) தீர்மானத்தை உறுதிசெய்து கொண்ட விஷ்ணு, பிதாமஹனிடம் {பிரம்மனிடம்} இருந்து விடைபெற்றுக் கொண்டு, தேவர்களாலும், மஹரிஷிகளாலும் பூஜிக்கப்பட்ட நிலையில் அங்கேயே அப்போதே மறைந்தான்.(10)
அப்போது யஜமானனின் {யஜ்ஞம் செய்பவனான தசரதனின்} வேள்வி நெருப்பில் {அக்னிக்குண்டத்தில்} இருந்து ஒப்பற்ற பிரகாசத்துடனும், மஹாவீரியத்துடனும், மஹாபலத்துடனும் கூடிய மஹாபூதமானவன் {யஜ்ஞ புருஷன்} வெளிப்பட்டான்.(11) அவன் கருப்பு, சிவப்பு ஆடைகளை உடுத்தியவனாகவும், முகம் சிவந்தவனாகவும், துந்துபி போன்ற குரலுடையவனாகவும், சிங்கத்தின் பிடரிமயிரைப் போலவே மென்மையான தலைமுடி, மீசை ஆகியவற்றைக் கொண்டவனாகவும் இருந்தான்.(12) அவன் சுபலக்ஷணங்களுடன் கூடியவனாகவும், திவ்யாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாகவும், மலைச் சிகரத்தின் உயரத்தையும், செருக்குமிக்கப் புலியின் பராக்கிரமத்தையும் கொண்டவனாகவும் இருந்தான்.(13) சூரியனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டதும், தழலின் நாவுகளைப் போலப் பிரகாசிப்பதும், புடம்போட்ட பொன்னாலானதும், வெள்ளி மூடியால் மறைக்கப்பட்டதும்,(14) திவ்ய பாயஸத்தால் நிறைந்ததும், மாயாமயமானதுமான ஒரு பாத்திரத்தைத் தன் அன்புக்குரிய மனைவியைப் போலத் தன்னிரு பெருங்கைகளில் அவன் சுமந்து வந்தான்.(15)
அவன் {அந்த பூதமானவன்} தசரதனைக் கண்டு, இந்த வாக்கியத்தைச் சொன்னான்: "நிருபா {மன்னா}, நான் பிரஜாபதியிடம் இருந்து இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக" {என்றான்}.(16)
இவ்வாறானதும் அந்த ராஜன் {தசரதன்}, பதிலுக்குக் கைகளைக் கூப்பி, "பகவானே, உனக்கு நல்வரவு. நான் உனக்குச் செய்ய வேண்டியதென்ன?" என்று கேட்டான்.(17)
அப்போது பிரஜாபதியால் அனுப்பப்பட்டவன், பதிலுக்கு இந்த வாக்கியத்தைச் சொன்னான்: "ராஜா, நீ தேவர்களை அர்ச்சித்ததால் இப்போது இதை அடைந்திருக்கிறாய்.(18) மன்னர்களில் புலியே, தேவர்களால் தயாரிக்கப்பட்டதும், பிரஜைகளை {மக்களை} உண்டாக்குவதும், தன்யமானதும் {அருள் நிறைந்ததும்}, ஆரோக்கியத்தைப் பெருகச் செய்வதுமான இந்தப் பாயஸத்தை நீ பெற்றுக் கொள்வாயாக.(19) நிருபா {மன்னா}, இது பருகப்படட்டும்" என்று சொல்லிவிட்டு மேலும், "உண்மையில், உனக்குத் தகுந்த பாரியைகளிடம் {மனைவிகளிடம்} இதைக் கொடுப்பாயாக. எந்த நோக்கத்திற்காக இந்த யாகத்தை நீ செய்தாயோ அந்தப் புத்திரர்களை இதன் மூலம் நீ அடைவாய்" {என்றான் அந்த யஜ்ஞ புருஷன்}.(20)
"அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்ன அந்த நிருபதி {மன்னன் தசரதன்}, தேவர்களால் கொடுக்கப்பட்டதும், ஹிரண்யமயமானதும் {பொன்மயமானதும்}, தேவ அன்னத்தால் நிறைந்ததுமான அந்தப் பாத்திரத்தை சிரஸில் {தலையில்} பெற்றுக் கொண்டு மகிழ்ந்தான்.(21) பரவசத்தில் மெய்மறந்திருந்தவன் {தசரதன்}, அற்புதமான இனிய தோற்றம் கொண்ட அந்த பூதத்தை {யஜ்ஞ புருஷனை} வணங்கி வலம் வந்தான்.(22) தேவர்களால் தயாரிக்கப்பட்ட பாயஸத்தைப் பெற்றுக் கொண்டதும், செல்வத்தைப் பெற்ற வறியவனைப் போல, தசரதன் பரம மகிழ்ச்சியடைந்தான்.(23) அற்புத வடிவங்கொண்டவனும், பேரொளி படைத்தவனுமான அந்த பூதமானவன், தான் வந்த பணி நிறைவடைந்ததும் அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(24)
மகிழ்ச்சி பிரகாசத்தால் ஒளியூட்டப்பட்டவனது {தசரதனின்} அந்தப்புரமானது, சந்திரக்கதிர்களில் பிரகாசிக்கும் கூதிர் கால வானைப் போல இதயத்திற்கு இனிமையானதாகத் திகழ்ந்தது.(25) அவன் அந்தப்புரத்திற்குள் பிரவேசித்துக் கௌசல்யையிடம் இதைச் சொன்னான்: "உனக்குப் புத்திரனைத் தரும் இந்தப் பாயஸத்தைப் பெற்றுக் கொள்வாயாக" {என்றான்}.(26)
அந்த நரபதி {மனிதர்களின் தலைவன்}, புத்திரர்களைப் பெறும் காரணத்திற்காக அந்தப் பாயஸத்தில் பாதியைக் கௌசல்யைக்குக் கொடுத்தான். அந்த நரபதி மறு பாதியில் பாதியை {கால் பகுதியை} சுமித்திரைக்கும், மேலும் எஞ்சியிருப்பதில் பாதியை {எட்டில் ஒரு பகுதியை} கைகேயிக்கும் கொடுத்தான். அமுதத்திற்கு நிகரான அந்தப் பாயஸத்தில் இன்னும் எஞ்சியிருந்ததை {எட்டில் ஒரு பகுதியைக்}(27,28) குறித்துச் சிந்தித்த அந்த மஹீபதி {பூமியின் தலைவனான தசரதன்}, மீண்டும் சுமித்திரைக்கே அதைக் கொடுத்தான். இவ்வாறே அந்த ராஜா, பாயஸத்தைத் தன் பாரியைகளுக்கு வெவ்வேறு அளவுகளில் பகிர்ந்து கொடுத்தான்.(29) நரேந்திரனின் உத்தம ஸ்திரீகள் {தசரதனின் மனைவியர்} அனைவரும் இவ்வாறு பாயஸத்தைப் பெற்று, சன்மானம் அடைந்ததாகக் கருதி உற்சாகமும், பேருவகையும் கொண்டனர்.(30)
அந்த மஹீபதியின் உத்தம ஸ்திரீகள், அந்த உத்தம பாயஸத்தைப் பருகி, ஹுதாசனனுக்கும் {அக்னிக்கும்}, ஆதித்யனுக்கும் {சூரியனுக்கும்} நிகரான தேஜஸ் {பிரகாசம்} பொருந்தியவர்களாக மிக விரைவில் கர்ப்பந்தரித்தனர்.(31) அப்போது ராஜா {தசரதன்}, அந்த ஸ்திரீகளைக் கண்டு, அவர்களின் கர்ப்பத்தை உறுதி செய்து, மனக்கவலையில் இருந்து மீண்டவனாக, ஸுரேந்திரனாலும், சித்த, ரிஷி கணங்களாலும் சொர்க்கத்தில் பூஜிக்கப்படும் ஹரியை {விஷ்ணுவைப்} போலப் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(32)
பாலகாண்டம் சர்க்கம் –16ல் உள்ள சுலோகங்கள்: 32
Previous | | Sanskrit | | English | | Next |