Prahasta killed | Yuddha-Kanda-Sarga-058 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பிரஹஸ்தனின் ஆற்றல்; பிரஹஸ்தனுடன் போரிட்டு அவனைக் கொன்ற நீலன்...
அரிந்தமனான {பகைவரை அடக்குபவனான} ராமன், போருக்குரிய ஆவலுடன் புறப்பட்டு வந்த பிரஹஸ்தனைக் கண்டு, புன்னகையுடன் விபீஷணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(1) “மஹத்தான பலம் {படை} சூழ மஹாவேகத்துடன் வரும் இந்த மஹாகாயன் {பேருடல் படைத்தவன்} யார்?{2} மஹாபாஹுவே, வீரியவந்தனான இந்த நிசாசரனை {இரவுலாவியைக்} குறித்து எனக்குச் சொல்வாயாக” {என்று கேட்டான் ராமன்}.(2,3அ)
இராகவனின் சொற்களைக் கேட்ட விபீஷணன் {பின்வருமாறு} பதிலைச் சொன்னான்,{3ஆ} “சேனாபதியும், பிரஹஸ்தர் என்ற பெயரைக் கொண்டவருமான இந்த ராக்ஷசர், லங்கையின் ராக்ஷசேந்திரருடைய திரிபாக பலத்தால் {ராவணனின் மூன்றிலொரு பங்கு படையால்} சூழப்பட்டவர்;{4} வீரியவான்; அஸ்திரவித் {அஸ்திரங்களைப் பயன்படுத்துவதில் திறன்மிக்கவர்}; சூரர்; மிக உயர்ந்த பராக்கிரமம் கொண்டவர்” {என்றான் விபீஷணன்}.(3ஆ-5அ)
அப்போது, பயங்கரனும், பயங்கரமான பராக்கிரமம் கொண்டவனுமான பிரஹஸ்தன் வெளிப்பட்டான்.{5ஆ} அவனைச் சூழ்ந்திருந்த பேருடல் படைத்த ராக்ஷசர்கள் கர்ஜித்தனர். அதைக் கண்டதும், பலசாலிகளான வானரர்களின் மஹத்தான சேனை,{6} பெருங்கோபத்துடன் பிரஹஸ்தனை நோக்கிப் பெரும் கர்ஜனை செய்தது.(5ஆ-7அ) கட்கம், சக்தி, ரிஷ்டி {வாள், வேல், இருபக்கம் கூருள்ள கத்தி} பாணங்களுடனும், சூலங்கள், முசலங்களுடனும் {உலக்கைகள்},{7ஆ} கதைகள், பரிகங்கள் {உழல்தடிகள்}, பராசங்கள் {ஈட்டிகள்}, விதவிதமான பரசுகள் {கோடரிகள்}, விசித்திரமான தனுசுகளுடனும் {விற்களுடனும்} கூடியவர்களும், வெற்றியில் விருப்பம் கொண்டவர்களுமான ராக்ஷசர்கள்,{8} கையில் பிடித்திருந்தவற்றால் ஒளிர்பவர்களாக வானரர்களை நோக்கி விரைந்து சென்றனர்.(7ஆ-9அ)
யுத்தத்தில் விருப்பமுள்ள பிலவங்கமர்கள் {தாவிச்செல்பவர்களான வானரர்கள்}, புஷ்பித்த மரங்களையும், அதே போல உயர்ந்த கிரிகளையும், பெரும் பாறைகளையும் எடுத்துக் கொண்டனர்.(9ஆ,10அ) அன்யோன்யம் நெருங்கியபோது, ஏராளமான சரமழையைப் பொழிந்தவர்களும், கற்களைப் பொழிந்தவர்களுமான அவ்விரு தரப்புகளுக்குமிடையில் மஹத்தான போர் மூண்டது.(10ஆ,11அ) யுத்தத்தில் பல ராக்ஷசர்கள், பல வானர புங்கவர்களையும், பல வானரர்கள், பல ராக்ஷசர்களையும் கொன்றனர்.(11ஆ,12அ)
சிலர் சூலங்களாலும், சிலர் பரம ஆயுதங்களாலும் துளைக்கப்பட்டனர். சிலர் பரிகங்களாலும் {உழல்தடிகளாலும்}, சிலர் பரசுகளாலும் சிதைக்கப்பட்டனர்.(12ஆ,13அ) சிலர் மீண்டும் மீண்டும் ஜகத்தின் தலத்தில் மூச்சற்றவர்களாக விழுந்தனர். சிலர் இக்ஷுக்களால் {கணைகளால்} ஹிருதயம் பிளக்கப்பட்டு அழிந்தனர்.(13ஆ,14அ) சிலர் கட்கங்களால் {வாள்களால்} இரண்டாக வெட்டப்பட்டனர். சில வானரர்கள் பக்கவாட்டில் {விலாப்புறங்களில்} குத்தப்பட்டுத் துடித்தபடியே புவியில் விழுந்தனர்.(14ஆ,15அ)
மரங்களுடனும், கிரி சிருங்கங்களுடனும் அனைத்துப் பக்கங்களிலும் குரோதத்துடன் இருந்த வானரர்களால், ராக்ஷசர்களும் வசுதாதலத்தில் {தரையில்} நசுக்கப்பட்டனர்.(15ஆ,16அ) வஜ்ர ஸ்பரிசத்துடன் கூடிய {வஜ்ரத்தின் தீண்டலைக் கொண்ட} உள்ளங்கைகளாலும், முஷ்டிகளாலும் தாக்கப்பட்டு, வதனங்களிலும், கண்களிலும் காயமடைந்தவர்கள், தங்கள் வாய்களில் இருந்து ஏராளமான சோணிதத்தை {ரத்தத்தைக்} கக்கினர்.(16ஆ,17அ) வலியால் துடித்த ஹரீக்களுக்கும் {குரங்குகளுக்கும்}, ராக்ஷசர்களுக்கும் மத்தியில் ஆரவார சப்தம் எழுந்தது; சிம்ஹநாதமும் முழங்கப்பட்டது.(17ஆ,18அ) குரோதமடைந்த வானரர்களும், ராக்ஷசர்களும் வீரமார்கத்தைப் பின்பற்றி, குரூரத்துடன் கூடிய பகையான நயனங்களுடனும், பெருந்துணிவுடனும் தங்கள் கர்மங்களை ஆற்றினர்.(18ஆ,19அ)
பிரஹஸ்தனின் ஆலோசகர்களான {அமைச்சர்களான} நராந்தகன், கும்பஹனு, மஹாநாதன், சமுந்நதன் ஆகியோர் அனைவரும் வனௌகஸர்களை {வனத்தில் வசிப்பவர்களான வானரர்களைக்} கொன்றனர்.(19ஆ,20அ) துவிவிதன், வானரர்களைக் கொன்று சீக்கிரமாக விரைந்து வருபவர்களில் ஒருவனான நராந்தகனை ஒரு கிரிசிருங்கத்தை {மலைச் சிகரத்தைக்} கொண்டு கொன்றான்.(20ஆ,21அ) கபியான {குரங்கான} துர்முகனும், தன் கையில் தயாராகப் பிடுங்கி வைத்திருந்த பெரும் மரம் ஒன்றைக்கொண்டு ராக்ஷசன் சமுந்நதனைத் தாக்கினான் {கொன்றான்}.(21ஆ,22அ) தேஜஸ்வியான ஜாம்பவான், பெருங்குரோதத்துடன் மஹத்தான பாறை ஒன்றை எடுத்து, மஹாநாதனின் மார்பில் வீசினான்.(22ஆ,23அ) பிறகு, வீரியவானான கும்பஹனு, அங்கே ரணத்தில் {போர்க்களத்தில்} தாரனால் மஹத்தான விருக்ஷம் ஒன்றைக் கொண்டு தலையில் தாக்கப்பட்ட உடனேயே தன் பிராணன்களை விட்டான்.(23ஆ,24அ)
அந்தக் கர்மத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரஹஸ்தன், தனுஷ்பாணியாகத் தன் ரதத்தில் ஏறி {கையில் வில்லுடன் தேரில் ஏறி}, வனௌகசர்களுக்கு கோரமான பேரழிவை ஏற்படுத்தினான்.(24ஆ,25அ) அப்போது அவ்விரு சேனைகளின் விரைவான இயக்கத்தால் எழுந்த ஸ்வனம், அளவிடற்கரிய பிரளயகால சாகரத்தின் கொந்தளிப்பைப் போலிருந்தது.(25ஆ,26அ) போர்க்களத்தில் வெல்வதற்கரியவனான ராக்ஷசன் {பிரஹஸ்தன்}, குரோதத்தால் நிறைந்து, மஹத்தான சரத்தாரைகளால் {கணை மழையால்} பெரும்போரில் வானரர்களைத் துன்புறுத்தினான்.(26ஆ,27அ) பர்வதங்களைப் போலக் குவிந்து கிடக்கும் வானரர்கள், ராக்ஷசர்கள் ஆகியோரின் கோரமான சரீரங்களால் மேதினியின் {உடல்களால் பூமியின்} பெரும்பரப்பு மறைக்கப்பட்டிருந்தது.(27ஆ,28அ) உதிர ஓடையால் நனைக்கப்படிருந்த அந்த மஹி {பூமி}, புஷ்பிக்கும் பலாசங்களால் {மலர்ந்த பலாச மரங்களால்} மறைக்கப்படும் மாதவ {தை}[1] மாசத்தைப் போல ஒளிர்ந்தது.(28ஆ,29அ)
[1] “மாதவ மாசம்” என்ற சொற்கள் நேரடியாக மூலத்தில் இருந்து எடுத்தாளப்பட்டவை. சில பதிப்புகளில், “மக மாதம் {தை மாதம்}” என்றும், சில பதிப்புகளில் “வசந்த ருது” என்றும் இருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், “வைகாசி மாதம்” என்றிருக்கிறது. விவேக்தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “மாதவம் என்பது மக மாதத்தின் பெயராகும். அப்போது பலாச மரங்கள் சிவப்புப் பூக்களைக் கொண்டிருக்கும்” என்றிருக்கிறது.
கொல்லப்பட்ட வீரர்களின் குவியல்களையே கரையாகவும், பங்கமடைந்த ஆயுதங்களையே பெரும் மரங்களாகவும்,{29ஆ} சோணித ஓடைகளையே மஹத்தான அலைகளாகவும் கொண்டதும், யமனைப் போன்ற சாகரத்தை நோக்கிச் செல்வதும், கல்லீரல்களையும், மண்ணீரல்களையும் சேறாகக் கொண்டதும், சிதறிக் கிடக்கும் நரம்புகளையே பாசிகளாகக் கொண்டதும்,{30} வெட்டப்பட்ட காயங்களையும், சிரங்களையும் {உடல்களையும், தலைகளையும்} மீன்களாகக் கொண்டதும், உள்ளுறுப்புகளையே புற்களாகக் கொண்டதும், எண்ணற்ற கழுகுகளையே அழகான ஹம்சங்களாக {அன்னப்பறவைகளாகக்} கொண்டதும், சாரசங்களைப் போல கங்கங்களால் {அன்றில்களைப் போல பருந்துகளால்} சேவிக்கப்படுவதும்,{31} கொழுப்பெனும் நுரையால் மறைக்கப்படுவதும், தவிப்பவர்களின் அழுகையையே ஸ்வனமாகக் கொண்டதும், கோழைகளால் கடக்க முடியாததுமான நதியைப் போலிருந்தது அந்த யுத்தபூமி.{32} மழைக்கால முடிவில் ஹம்ச சாரசங்களால் {அன்னங்களாலும், அன்றில்களாலும்} சேவிக்கப்படுவது எப்படியோ, மகரந்தங்களால் மறைக்கப்பட்ட பத்மங்கள் நிறைந்த மாலினியில் கஜயூதபர்கள் {தாமரைகள் நிறைந்த தடாகங்களைத் தலைமை யானைகளை} எப்படியோ, அப்படியே அந்த ராக்ஷசர்களும், கபிமுக்கியர்களும் கடப்பதற்கரிய அந்த நதியை {யுத்தபூமியைக்} கடந்தனர்.(29ஆ-34அ)
அப்போது நீலன், சியந்தனத்தில் {தேரில்} இருந்து கொண்டு, பாணங்களை ஏவி பிலவங்கமர்களை {தாவிச் செல்பவர்களான வானரர்களை} வேகமாக அழித்துக் கொண்டிருக்கும் பிரஹஸ்தனைக் கண்டான்.(34ஆ,35அ) வானத்தில் கடும் புயல்காற்று, மஹத்தான மேகத்திரள்களை நோக்கிப் பாய்வைத் போல,{35ஆ} யுத்தத்தில் எதிர்த்து வரும் நீலனைக் கண்ட வாஹினிபதியான பிரஹஸ்தன், ஆதித்ய வர்ணமுடைய ரதத்தில் {சூரியனின் நிறம் கொண்ட தேரில்} நீலனை நோக்கி விரைந்தான்.(35ஆ,36) தன்விகளில் சிரேஷ்டனும் {வில்லாளிகளில் சிறந்தவனும்}, வாஹினிபதியுமான அந்த பிரஹஸ்தன், பெரும் போரில் தன் தனுவை வளைத்து, நீலனை நோக்கி பாணங்களை ஏவினான்.(37,38அ) கோபங்கொண்ட பன்னகங்களை {பாம்புகளைப்} போன்றவையும், மஹாவேகத்தில் ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள், நீலனைத் துளைத்துச் சென்று மஹீயில் {பூமியில்} விழுந்தன.(38ஆ,39அ) ஜுவாலைக்கு ஒப்பான கூரிய சரங்களால் தாக்கப்பட்டவனும், வீரியவானும், மஹாகபியுமான {பெருங்குரங்குமான} அந்த நீலன், ஒரு விருக்ஷத்தை {மரத்தை} வேருடன் பிடுங்கி, வெல்வதற்கு மிக அரியவனான அந்தப் பிரஹஸ்தனைப் புடைத்தான்.(39ஆ,40)
அதனால் {அந்த மரத்தால்} தாக்கப்பட்ட அந்த ராக்ஷசபுங்கவன் {பிரஹஸ்தன்}, குரோதமடைந்து, நாதம் செய்தபடியே, பிலவங்கமர்களுடைய சம்முபதிகளின் {தாவிச் செல்பவர்களான வானரப் படைப்பிரிவுகளுடைய தலைவர்களின்} மீது சர மழையைப் பொழிந்தான்[2].(41) துராத்மாவான அந்த ராக்ஷசனின் பாணகணங்களை எதிர்கொள்ள முடியாமல் கண்களை மூடிக்கொண்டு அவற்றை ஏற்றுக்கொண்டான் {நீலன்}.(42) சீக்கிரமாக விழும் சரத்கால மழையில் ரிஷபத்தை {காளையைப்} போலத் திடீரென பொழியும் பிரஹஸ்தனின் தடுப்பதற்கரிய சரமழை பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தாலும்,{43} நீலன் கண்களை மூடிக் கொண்டு {அவற்றைப்} பொறுத்துக் கொண்டான்.(43,44அ) சரமழையால் கோபமடைந்த மஹாபலவானும், மஹானுமான நீலன், மஹத்தான சாலத்தை {சாலமரத்தைக்} கொண்டு, பிரஹஸ்தனின் ஹயங்களை {குதிரைகளைக்} கொன்றான்.(44ஆ,இ) அதன்பிறகும், கோபத்தால் நிறைந்த ஆத்மாவுடன் கூடிய நீலன், அந்த துராத்மாவின் {பிரஹஸ்தனின்} தனுவை விரைவாக முறித்து மீண்டும் மீண்டும் நாதம் செய்தான்.(45) அவனால் {நீலனால்} தனுவை இழந்தவனும், வாஹினிபதியுமான அந்தப் பிரஹஸ்தன், கோரமான முசலம் {உலக்கை} ஒன்றை எடுத்துக் கொண்டு சியந்தனத்திலிருந்து {தேரிலிருந்து} கீழே குதித்தான்[3].(46)
[2] இந்த சுலோகம் தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில் இல்லை.
[3] தேர் இழந்து, சிலையும் இழந்திடகார் இழிந்த உரும் எனக் காந்துவான்பார் இழிந்து பரு வலி தண்டொடும்ஊர் இழந்த கதிர் என ஓடினான்.- கம்பராமாயணம் 7089ம் பாடல், யுத்த காண்டம், முதற் போர் புரி படலம்பொருள்: தேரை இழந்து, வில்லையும் இழந்ததால், மேகத்தை விட்டு வந்த இடிபோன்று கொதிப்பவனாகி, மண்ணில் இறங்கி, பருத்த வலிமையுள்ள தண்டு எனும் ஆயுதத்தோடு ஊர்தியான தேரை இழந்த கதிரவனைப் போல {நீலனை நோக்கி} ஓடினான் {பிரஹஸ்தன்}.
துணிவுமிக்கவர்களும், வைரம் {பகைமை} முதிர்ந்தவர்களுமான அந்த வாஹினி முக்கியர்கள் இருவரும் {படைத்தலைவர்களான பிரஹஸ்தனும், நீலனும்}, ரத்தத்தால் நனைந்த அங்கங்களுடன், மதங்கொண்ட குஞ்சரங்கள் {யானைகள்} இரண்டைப் போல நின்றனர்.(47) சிம்ம சார்தூலங்களின் {சிங்கம், புலிகளின்} நடையைக் கொண்டவர்களும், சிம்ம சார்தூலங்களின் சேஷ்டைகளை {செயல்பாடுகளைக்} கொண்டவர்களுமான அவ்விருவரும், தங்கள் கூரிய பற்களால் ஒருவரையொருவர் கிழித்துக் கொண்டனர்.{48} விக்ராந்த விஜயர்களும் {வெற்றியாளர்களை வெற்றி கொள்பவர்களும்}, சமர்களில் பின்வாங்காதவர்களுமான அவ்விரு வீரர்களும், விருத்திர வாசவர்களை {விருத்திரனையும், இந்திரனையும்} போல புகழை அடைய விரும்பினார்கள்.(48,49)
அந்தப் பிரஹஸ்தன், பரம ஆயத்தத்துடன், முசலத்தை {உலக்கையைக்} கொண்டு நீலனின் நெற்றியில் தாக்கியபோது, அதிலிருந்து சோணிதம் {ரத்தம்} பெருகியது.(50) பிறகு, சோணிதத்தால் நனைந்த அங்கங்களுடன் கூடிய மஹாகபி {பெருங்குரங்கான நீலன்}, குரோதமடைந்து, பெரும் மரம் ஒன்றை எடுத்துப் பிரஹஸ்தனின் மார்பில் எறிந்தான்.(51) அந்தத் தாக்குதலைக் குறித்துச் சிந்திக்காமல், மஹத்தான முசலத்தை எடுத்துக் கொண்டு, பலம் மிக்க பிலவங்கமனான நீலனை நோக்கி வேகமாக ஓடினான் {பிரஹஸ்தன்}.(52) உக்கிர வேகத்துடனும், ஆர்வத்துடனும் தன்னை நோக்கி அவன் {பிரஹஸ்தன்} வருவதைக் கண்ட மஹாகபி {பெருங்குரங்கான நீலன்}, மஹாவேகத்துடன் {செயல்பட்டு} பெரும்பாறை ஒன்றை எடுத்துக் கொண்டான்.(53) நீலன், போரில் முசலத்துடன் போரிட்டுக் கொண்டிருந்தவனும், யுத்தத்தில் விருப்பங்கொண்டவனுமான அந்தப் பிரஹஸ்தனின் மூர்த்தத்தில் {தலையில்} கற்பாறையை விரைவாக எறிந்தான்.(54) அப்போது, மஹத்தானதும், கோரமானதும், கபிமுக்கியனான நீலனால் வீசப்பட்டதுமான பாறை பிரஹஸ்தனின் சிரத்தை {தலையை} பல துண்டுகளாக நொறுக்கியது.(55)
உயிரொழிந்து, ஒளியொழிந்து, வலிமையொழிந்து, இந்திரியங்களும் ஒழிந்த அவன் {பிரஹஸ்தன்}, வேருடன் வெட்டப்பட்ட மரத்தைப் போலத் திடீரென பூமியில் விழுந்தான்.(56) சிதறிய அவனது சிரத்திலிருந்து ஏராளமான சோணிதம் {ரத்தம்} பெருகி, கிரியில் பிரஸ்ரவணத்தை {மலையில் இருந்து பாயும் அருவியைப்} போல சரீரமெங்கும் பாய்ந்தது.(57) நீலனால் பிரஹஸ்தன் கொல்லப்பட்டதும், உற்சாகமிழந்த ராக்ஷசர்களின், அசைக்கப்பட முடியாத அந்த பலம் {படை} லங்கை நோக்கித் திரும்பிச் சென்றது.(58) வாஹினிபதி {படைத்தலைவனான பிரஹஸ்தன்} கொல்லப்பட்டதும், உடைந்த சேதுபந்தத்தை {பாலத்தை / அணையை} அடைந்த வெள்ளம் போலவே {ராக்ஷசர்களுக்கு} போரில் நிற்க இயலாத நிலை ஏற்பட்டது.(59) சம்முமுக்கியனான அவன் {படைத் தலைவனான பிரஹஸ்தன்} கொல்லப்பட்டதும் அந்த ராக்ஷசர்கள், சோர்வடைந்து, செயலற்றவர்களாக ராக்ஷசபதியின் கிருஹத்தை {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனின் அரண்மனையை} அடைந்தனர்.{60} தீவிரமான சோகார்ணவத்தில் {சோகப் பெருங்கடலில்} மூழ்கிய அவர்கள், நனவிழந்தவர்களைப் போலானார்கள்[4].(60,61அ)
[4] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “பஞ்சமியினன்று ப்ரஹஸ்தவதம்” என்றிருக்கிறது.
பின்னர், வெற்றியாளனும், மஹாபலவானுமான நீலன், தன் கர்மத்திற்காகப் பாராட்டப்பட்டு, நிறைவடைந்தான். லக்ஷ்மணனுடன் கூடிய ராமனுடன் சேர்ந்த அந்த யூதபன் {குழுத்தலைவன் நீலன்} மகிழ்ச்சி ரூபமடைந்தான் {மகிழ்ச்சியின் வடிவாகத் திகழ்ந்தான்}.(61ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 058ல் உள்ள சுலோகங்கள்: 61
Previous | | Sanskrit | | English | | Next |