Mithila | Bala-Kanda-Sarga-50 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விஷ்வாமித்ரர் வழிநடத்த லக்ஷ்மணனுடன் மிதிலையை அடைந்த ராமன்; இளவரசர்கள் இருவரைக் குறித்தும் விசாரித்த ஜனகன்; இராமனையும், லக்ஷ்மணனையும் அறிமுகம் செய்த விஷ்வாமித்ரர்...
பிறகு ராமனும், சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்} விஷ்வாமித்ரரை முன்னிட்டுக் கொண்டு வடகிழக்காகச் சென்று {ஜனகனின்} யஜ்ஞ மண்டபத்தை {யாகசாலையை} அடைந்தனர்.(1) இலக்ஷ்மணனுடன் கூடிய ராமன் அந்த முனிசார்தூலரிடம் {விஷ்வாமித்ரரிடம்}, "மஹாத்மாவான ஜனகரின் யஜ்ஞ ஏற்பாடுகள் உண்மையில் மிகச் சிறப்பாக இருக்கின்றன.(2) பெரும் நற்பேறு பெற்றவரே, இங்கே {இந்த இடத்தில்} பல தேசங்களைச் சேர்ந்தவர்களும், வேத விற்பன்னர்களுமான பிராமணர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர்.(3) {வேள்விக்குரிய பொருட்களைச் சுமக்கும்} நூற்றுக்கணக்கான வண்டிகள் நிறைந்திருக்கும் ரிஷிகளின் குடில்களும் நிறைந்திருக்கின்றன. பிராமணரே, நாம் இருப்பதற்கான ஓரிடத்தைத் தேர்ந்தெடுப்பீராக" என்றான் {ராமன்}.(4)
மஹாமுனி விஷ்வாமித்ரர், ராமனின் வசனத்தைக் கேட்டு {புத்துணர்வூட்டும்} நீர் நிறைந்ததும், கூட்டமற்றதுமான ஓரிடத்தில் விடுதியை ஏற்படுத்தினார்.(5) நிருபவரன் {மன்னர்களில் சிறந்த ஜனகன்}, விஷ்வாமித்ரர் {மிதிலை} வந்திருப்பதைக் கேட்டு, குற்றமற்றவரான தன் புரோஹிதர் சதாநந்தரை முன்னிட்டுக் கொண்டு, வணக்கத்துடன் கூடியவனாக உடனே {விஷ்வாமித்ரரை} எதிர்கொண்டான்.(6,7அ) அந்த மஹாத்மாவின் {ஜனகனின்} ரித்விஜர்களும் அர்க்கியத்தை எடுத்துக் கொண்டு விரைந்து வந்து, {தூய்மைச்சடங்கைச் செய்யும்} தர்மத்தை மனத்தில் கொண்டு {மந்திரங்களுடன்}, தர்மமான முறையில் அதை {அர்க்கியத்தை} விஷ்வாமித்ரருக்குக் கொடுத்தனர்.(7ஆ,8அ) மஹாத்மாவான ஜனகனின் பூஜையை ஏற்றுக் கொண்ட விஷ்வாமித்ரர், அந்த ராஜனிடம் குசலமும், இடையூறின்றி யஜ்ஞம் நடைபெறும் விதமும் விசாரித்தார்.(8ஆ,9அ) பிறகு, உபாத்யாயர்கள் {ஆசிரியர்கள்}, புரோதஸர்கள் {போதகர்கள்}, முனிவர்கள் ஆகியோரின் நலத்தையும் தகுந்த முறையில் விசாரித்த அவர் {விசுவாமித்ரர்} ரிஷிகள் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் இருந்தார்.(9ஆ,10அ)
அப்போது அந்த ராஜா {ஜனகன்}, தன் கைகளைக் கூப்பியபடி அந்த முனிசிரேஷ்டரிடம் {விசுவாமித்ரரிடம்} பேசினான்: "பகவானே, உயர்ந்தவர்களான இந்த முனிவர்களுடன் சேர்ந்து ஆசனத்தில் அமர்வீராக" {என்றான் ஜனகன்}.(10ஆ,11அ) ஜனகனின் சொற்களைக் கேட்ட அந்த மஹாமுனி {இருக்கையில்} அமர்ந்தார். {அரச} புரோஹிதருடனும் {சதாநந்தருடனும்}, ரித்விஜர்களுடனும், மந்திரிகளுடனும் சேர்ந்து ராஜனும் அங்கே அமர்ந்தான்.(11ஆ,12அ)
பிறகு அந்த நிருபதி {ஜனகன்}, அங்கே இருந்த அனைவரும் விதிப்படி ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு விஷ்வாமித்ரரிடம் பேசினான்:(12ஆ,13அ) "இன்று என்னுடைய யஜ்ஞம் தெய்வ செயலால் கனிந்தது. இன்று கிட்டிய பகவத்தரிசனத்தின் மூலம் என்னால் யஜ்ஞ பயன் அடையப்பட்டது.(13ஆ,14அ) முனிபுங்கவரே, பிராமணரே, முனிவர்களுடன் எனது யஜ்ஞசாலைக்கு வந்த உமது கருணையைப் பெற்றதால் நான் தன்யனானேன்.(14ஆ,15அ) பிரம்மரிஷியே, தீக்ஷை முடிய {இந்த வேள்வி முடிய} பன்னிரெண்டு நாட்களே எஞ்சியிருக்கின்றன என்று அறிஞர்கள் சொல்கின்றனர். கௌசிகரே, அதன்பிறகு {அந்த பன்னிரெண்டு நாட்களுக்குப் பிறகு} தங்கள் பாகங்களைப் பெற வரப்போகும் தேவர்களைக் காண்பதே உமக்குத் தகும்" {என்றான் ஜனகன்}.(15ஆ,16அ)
அந்த நிருபன் {ஜனகன்} அந்த முனிசார்தூலரிடம் {விசுவாமித்ரரிடம்} இதைச் சொல்லிவிட்டு, மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் தன் கைகளைக் குவித்துக் கொண்டு மீண்டும் பேசினான்:(16ஆ,17அ) "முனிவரே, நீர் மங்கலமாக இருப்பீராக. இந்தக் குமாரர்கள், {விஷ்ணு} தேவனின் துல்லிய பராக்கிரமத்தையும், கஜசிம்ம கதியையும் {யானையையும், சிங்கத்தையும் போன்ற நடையைக்} கொண்ட வீரர்களாகவும், புலிக்கும், காளைக்கும் ஒப்பானவர்களாகவும், பத்மபத்ரவிசாலாக்ஷம் {தாமரை இதழ்களைப் போன்ற நீள்விழிகளைக்} கொண்டவர்களாகவும், கட்கம் {வாள்}, தூணி {அம்பறாத்தூணி}, தனு {வில்} ஆகியவற்றைத் தரித்தவர்களாகவும், அஷ்வினிகளைப் போன்ற ரூபத்தைக் கொண்டவர்களாகவும், இளமையின் தொடக்கத்தில் இருப்பவர்களாகவும், தேவலோகத்தில் இருந்து தம் விருப்பம்போல் பூமிக்கு வந்த அமரர்களைப் போலவும் தெரிகிறார்கள். இவர்கள் இங்கே பாதங்களைப் பதித்தது எவ்வாறு? அதன் காரணமென்ன? இவர்கள் இங்கே வந்தது ஏன்? இவர்கள் யாருடையவர்கள்?[1](17ஆ-19) மஹாமுனியே, சிறந்த ஆயுதங்களைத் தரித்த இந்த வீரர்கள், சந்திரனாலும், சூரியனாலும் அலங்கரிக்கப்பட்ட அம்பரத்தை {ஆகாயத்தைப்} போல இந்தத் தேசத்திற்குப் புதுப் பொலிவூட்டுகிறார்கள். பிரமாணத்திலும் {உடல் அமைப்பிலும்}, இங்கிதத்திலும் {முகத்தோற்றத்திலும்}, சேஷ்டைகளிலும் {செய்யும் செயல்களிலும்} பரஸ்பரம் {ஒருவரையொருவர்} ஒத்திருக்கின்றனர். காகபக்ஷங்கள்[2] தரித்த இந்த வீரர்கள் யாருடைய புத்திரர்கள்? இவற்றைக் கேட்க நான் விரும்புகிறேன்" {என்றான் ஜனகன்}[3].(20,21)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், இந்தச் சுலோகங்கள் பாலகாண்டம், 48ம் சர்க்கம் 2, 3, 4 சுலோகங்களில் மன்னன் சுமதி சொன்ன அதே வாக்கியங்களைச் சொல்பகுப்பு மாறாமல் கொண்டிருக்கின்றன" என்றிருக்கிறது.
[2] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "ராஜபுத்ரர்கள் வைத்துக் கொள்ளும் முக்குடுமி. இதைப் பக்கக் குடுமியென்றும் சிறு குடுமியென்றும் கன்றுக்குடுமியென்றும் ஜில்பா என்றுஞ் சொல்லுவார்கள்" என்றிருக்கிறது.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், இந்தச் சுலோகங்கள் பாலகாண்டம் 48ம் சர்க்கம் 5, 6 சுலோகங்களில் உள்ள அதே வாக்கியங்களைச் சொல் வேறுபாடுகளுடன் கொண்டிருக்கின்றன" என்றிருக்கிறது.
மஹாத்மாவான ஜனகனின் இந்த வசனத்தைக் கேட்ட அந்த அமேயாத்மா {எல்லையில்லா ஆன்மா கொண்ட விசுவாமித்ரர்}, அவ்விருவரும் தசரதனின் புத்திரர்கள் என்பதைத் தெரிவித்தார்.(22) சித்தாசிரமவாசம், ராக்ஷச வதம், தம்முடன் அவர்கள் செய்த பயணம், விசாலாபுரியைக் கண்டது,(23) அஹல்யை தரிசனம், கௌதமரோடு {அஹல்யை} கலந்தது, மஹாதனுவை {மிதிலையில் உள்ள பெரும் வில்லை} அறிய {கைப்பற்ற} வந்தது(24) என அனைத்தையும் மஹாதேஜஸ்வியும், மஹாமுனியுமான விஷ்வாமித்ரர், மஹாத்மாவான அந்த ஜனகனிடம் சொல்லி நிறுத்தினார்.(25)
பாலகாண்டம் சர்க்கம் – 50ல் உள்ள சுலோகங்கள் : 25
Previous | | Sanskrit | | English | | Next |