Rambha | Bala-Kanda-Sarga-64 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அரம்பையைச் சபித்த விஷ்வாமித்ரர்; புலன்களை வென்று பிராமண நிலையை அடைய மீண்டும் ஆயிரமாண்டு கடுந்தவம் இருந்தது...
{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார் [இந்திரன் ரம்பையிடம்]}, "அரம்பையே, ஸுர {தேவ} காரியமிது. இந்த மகத்தான பணியை நீ செய்வாயாக. கௌசிகரை லோபமடையச் செய்து {மயக்கி} காம மோஹத்தில் ஆழ்த்துவாயாக" {என்றான் இந்திரன்}.(1)
இராமா, மதிமிக்கவனான சஹஸ்ராக்ஷனால் {ஆயிரங்கண் இந்திரனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும் அந்த அப்சரஸ் கூச்சத்துடன் கைகளைக் கூப்பி ஸுரேஷ்வரனிடம் {தேவர்களின் தலைவனிடம்} இந்த வாக்கியத்தை மறுமொழியாகக் கூறினாள்:(2) "ஸுரபதியே, அந்த விஷ்வாமித்ர மஹாமுனி பயங்கரமானவர். தேவா, என் மேல் அவர் கோரமான குரோதங் கொள்வார் {கோபமடைந்து சபித்துவிடுவார்}. இதில் ஐயமில்லை. எனவே, எனக்குப் பயமாக இருக்கிறது. தேவா, பொறுமை காப்பதே உமக்குத் தகும்" {என்றாள் ரம்பை}.(3,4அ)
இராமா, அச்சத்துடன் கூடிய அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட சஹஸ்ராக்ஷன், பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவளும், கைகளைக் கூப்பி நின்றவளுமான அவளிடம் சொன்னான்:(4ஆ,5அ) "அரம்பையே, அஞ்சாதே. நீ மங்கலமாக இருப்பாயாக. என் சாசனத்தை {ஆணையை} நிறைவேற்றுவாயாக. பூத்துக் குலுங்கும் மரங்களைக் கொண்ட {வசந்த} காலத்தில் இதயங்கவரும் கோகிலமாகி {குயிலாகி} கந்தர்பனுடன் {காமனுடன்} சேர்ந்து உன் அருகில் நான் துணையிருப்பேன். (5ஆ,6) அரம்பையே, உன் பரமபாஸ்வரரூபத்தை {பளபளப்பான சாயலைப்} பன்மடங்காக்குவாயாக. கௌசிக ரிஷியின் தவத்தைக் கெடுப்பாயாக" {என்றான் இந்திரன்}.(7)
அவள் இந்த வசனத்தைக் கேட்டு உத்தம ரூபம் தரித்த லலிதையாகி {அழகிய பெண்ணாகி} முகத்தில் புன்னகை தோன்ற விஷ்வாமித்ரரை வசீகரிக்கத் தொடங்கினாள்.(8) அவர் அழகாகக் கூவும் கோகிலத்தின் ஒலியைக் கேட்டு மனம் மகிழ்ந்தவராக அவளை {ரம்பையைக்} கண்டார்.(9)
அப்போது அந்த ஒலியைக் கேட்டும், ஒப்பில்லாத கீதத்தைக் கேட்டும் ரம்பையைப் பார்த்தும் அந்த முனிவர் சந்தேகம் அடைந்தார்.(10) முனிபுங்கவரான குசிகாத்மஜர் {குசிகனின் மகனான விஷ்வாமித்ரர்} இது சஹஸ்ராக்ஷனின் {ஆயிரங்கண் இந்திரனின்} செயல் என்பதை அறிந்து, பெருங்குரோதமடைந்து ரம்பையைச் சபித்தார்:(11) "துர்பாக்கியம் கொண்ட ரம்பையே, காமக்ரோதங்களை வெல்ல தவம் செய்து கொண்டிருக்கும் என்னை மயக்கினாய். பத்தாயிரம் வருடங்கள் நீ கல்லாகக் கிடப்பாயாக.(12) பளபளப்பான ரம்பையே, என் குரோதத்தால் பீடிக்கப்பட்ட உன்னை, தபோபலமிக்க ஒரு பிராமணர் விடுவிப்பார்[1]" {என்றார் விசுவாமித்ரர்}.(13)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த ரம்பையை விடுவிக்கப்போகிறவர் பிரம்மனின் மானஸபுத்திரரான வசிஷ்டரைத் தவிர வேறு யாருமில்லை. விஷ்வாமித்ரருக்கு வசிஷ்டரிடம் விரோதம் இருந்தாலும் அவர் மீது பெரும் மதிப்புக் கொண்டிருந்தார்" என்றிருக்கிறது.
மஹாதேஜஸ்வியும், மஹாமுனியுமான விஷ்வாமித்ரர், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இவ்வாறு சொல்லிவிட்டு மனம் சோர்ந்தார்[2].(14) அப்போதே அவரிடம் பெருஞ்சாபம் பெற்ற ரம்பையும் கல்லாகிவிட்டாள். அந்த மஹரிஷியின் சொற்களைக் கேட்ட கந்தர்பனும் {மன்மதனும்}, உடனிருந்தவனும் {இந்திரனும் அங்கிருந்து} தப்பிச் சென்றனர்.(15) இராமா, அந்த மஹாதேஜஸ்வி கோபத்தால் தம் தவம் அபகரிக்கப்பட்டதையும், இந்திரியங்கள் வெல்லப்படாதததையும் கண்டு ஆத்மசாந்தி அடையாதிருந்தார்.(16)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அற்பமான காரணங்களுக்காகவோ, பலவீனர்களின் மீதோ கோபம் கொள்வது தவ சக்தியையும், புண்ணியத்தையும் இழக்கச் செய்யும். கட்டுக்கடங்காத மனோபாவம் தவச் சக்தியை அழிப்பதோடல்லாமல் நீடித்த மனச்சோர்வையும் அளிக்கும். "கேட்டல், தீண்டல், காண்தல், உண்தல், நுகர்தல் ஆகியவற்றால் மகிழ்ச்சியோ, துயரோ கொள்ளாதவனே ஜிதேந்திரியன் {புலன்களை வென்றவன்} ஆவான்" என்று மனு சொல்கிறார். பகவத்கீதையின் கர்மயோகம் முழுவதும் இதையே சொல்கிறது. "பாரதரிஷபா, முதலில் உனது புலன்களை வென்று இந்தப் பாவத்தை அழிப்பாயாக. ஏனெனில், இது கல்வியாலும், தியானத்தாலும் அடையப்பட்ட அறிவை அழிக்கிறது" என்று பகவத்கீதை 3:41 சொல்கிறது" என்றிருக்கிறது.
தவம் கெட்டுப் போனதைக் கண்ட அவர் தமது மனத்தில், "இனி நான் குரோதங் கொள்ளாதிருக்க வேண்டும். எவ்வகையிலும் பேசாதிருக்க வேண்டும்.(17) அல்லது ஆயிரம் வருடங்கள் மூச்சு விடாமல் இருப்பேன். இந்திரியங்களை வெல்லும் வரை நான் என் சரீரத்தை மெலிந்து வற்றச் செய்வேன்.(18) தவத்தின் மூலம் பிரஹ்மண்யத்தை {பிராமண நிலையை} அடையும் வரையில் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் அதுவரையிலும் மூச்சுவிடாமலும், உண்ணாமலும் இருப்பேன். நான் தவம் செய்யும்போது என் உடல் உறுப்புகள் சிதையாதிருக்கட்டும்" என்று தீர்மானித்தார்.(19,20அ)
இரகுநந்தனா, இவ்வாறே அந்த முனிபுங்கவர் ஆயிரமாண்டுகளுக்கு உலகில் ஒப்பில்லாத நோன்பை நோற்றார்" {என்றார் சதாநந்தர்}.(20ஆ)
பாலகாண்டம் சர்க்கம் – 64ல் உள்ள சுலோகங்கள் : 20
Previous | | Sanskrit | | English | | Next |