Friday, 12 November 2021

பிரம்மரிஷி | பால காண்டம் சர்க்கம் - 65 (40)

Brahmarishi | Bala-Kanda-Sarga-65 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விஷ்வாமித்ரர் பிரம்மரிஷி நிலையை அடைந்த கதையை சொல்லி முடித்த சதாநந்தர்...

Rajarshi Janaka meets Viswamitra and Rama Lakshmana

{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "இராமா, பிறகு அந்த மஹாமுனி {விசுவாமித்ரர்} ஹைமவதீ திசையை[1] விட்டுக் கிழக்குத் திசைக்குச் சென்று அங்கே கடும் தவம் செய்தார்.(1) இராமா, ஆயிரம் வருடங்கள் உத்தமமான மௌன விரதம் நோற்ற அவர், ஒப்பற்றதும், எவராலும் செய்ய முடியாததுமான கடுந்தவத்தைச் செய்து வந்தார்.(2) இராமா, கட்டை போலிருந்த அந்த மஹாமுனிக்குப் பல்வேறு இடையூறுகள் நேரினும் அவருக்குள் கோபம் நுழையவில்லை. இவ்வாறு உறுதியாக நிச்சயித்துக் கொண்டு தவத்தில் திடமாக நிலைத்திருந்தார்.(3,4அ) இரகோத்தமா {ரகு குலத்தில் பிறந்தவர்களில் உத்தமனான ராமா}, ஆயிரமாண்டுகள் விரதம் பூர்ணமடைந்ததும் அந்த மஹாவிரதர் அன்னம் உண்ணத் தொடங்கினார். அந்நேரத்தில் இந்திரன் ஒரு துவிஜனாகி அந்த அன்னத்தை யாசித்தான்[2].(4ஆ,5)

[1] இமயமலை இருக்கும் வடக்குத் திசையை விட்டுக் கிழக்கே செல்கிறார். தொடக்கத்தில் விஷ்வாமித்ரர் தெற்கே செல்கிறார், பிறகு மேற்கே செல்கிறார், அதன்பிறகு வடக்கே செல்கிறார், இப்போதோ கிழக்கே செல்கிறார்.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த அன்னமானது, ஆயிரம் வருடங்கள் தவம் செய்த பிறகு விஷ்வாமித்ரரால் தமக்காகச் சமைக்கப்பட்டது. தவசிகள் தங்களுக்காக சுயமாகச் சமைத்துக் கொள்ளும் உணவு பவித்ரமானது என்பதால் அது "வைஷ்வதேவம்" என்றழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது.

மஹாதபஸ்வியும், மௌன விரதம் இருந்தவருமான அந்த பகவான் {விஷ்வாமித்ரர்} விருப்பத்துடன் தமக்குச் சமைத்துக் கொண்ட உணவனைத்தையும் அந்த விப்ரனுக்கே {இந்திரனுக்கே} தத்தம் செய்தார். இதில் அன்னமேதும் எஞ்சவில்லை. அவர் உணவும் உண்ணாமல், விப்ரனிடமும் எதுவும் சொல்லாமல், மீண்டும் மூச்சை அடக்கி மௌனவிரதத்தைத் தொடர்ந்தார்.(6,7) அந்த முனிபுங்கவர் மேலும் ஆயிரம் வருடங்கள் மூச்சை அடக்கியபோது அவரது தலையில் இருந்து புகை எழுந்தது. இதனால் மூவுலகங்களும் பரிதவிப்பது போல நடுங்கின.(8,9அ)

அப்போது தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், பன்னகர்கள், உரகர்கள், ராக்ஷசர்கள் ஆகியோர் அவரது தேஜஸ்ஸால் மோஹமடைந்தனர். அவரது தவத்தால் ஒளிமங்கி களங்கத்தால் சிதைந்த அவர்கள் அனைவரும் பிதாமஹனிடம் {பிரம்மனிடம்} சென்று பேசினர்:(9ஆ,10) "தேவா, மஹாமுனி விஷ்வாமித்ரர் லோபமடையவும் {ஆசையில் மயங்கவும்}, குரோதமடையவும் {கோபமடையவும்} அனைத்து வகையிலும் நாங்கள் முயன்றும்கூட அவரிடம் தவம் பெருகி வருகிறது.(11) அவரிடம் சிறு குற்றமும் தென்படவில்லை. அவர் மனத்தில் விரும்புவது கொடுக்கப்படாவிட்டால் தம் தவத்தால் சராசரங்களுடன் {அசைவன, அசையாதனவற்றுடன்} கூடிய திரிலோகத்தையும் அவர் நாசம் செய்து விடுவார்.(12,13அ) திசைகள் யாவும் கொந்தளிக்கின்றன, எதுவும் பிரகாசிக்கவில்லை. சாகரங்கள் {பெருங்கடல்கள்} யாவும் கலக்கமடைகின்றன, பர்வதங்கள் {மலைகள்} யாவும் வெடித்துச் சிதறுகின்றன.(13ஆ,14அ) பிரம்மாவே, வசுதை {பூமி} பெரிதும் நடுங்குகிறாள். வாயுவும் கொந்தளித்து வீசுகிறான். என்ன செய்ய வேண்டுமெனன எங்களுக்குத் தெரியவில்லை. மக்கள் {இறை} நம்பிக்கை அற்றவர்களாகிறார்கள். (14ஆ,15அ) திரிலோகங்களும் {மூவுலகங்களில் உள்ள உயிரினங்கள் அனைத்தும்} புலன்கள் குழம்பி மயக்கமடைந்தவை போலிருக்கின்றன. அந்த மஹாரிஷியின் தேஜஸிற்கு முன் பாஸ்கரன் {சூரியன்} ஒளி குன்றியிருக்கிறான்.(15ஆ,16அ) தேவா, அந்த மஹாமுனி {உலகங்கள் அனைத்தையும்} நாசம் செய்யும் புத்தியை அடைவதற்கு முன் அக்னி ரூபமானவரும், பெரும் பிரகாசம் கொண்டவருமான அந்த பகவான் {விஷ்வாமித்ரர்} சமாதானப்படுத்தப்பட வேண்டும்.(16ஆ,17அ) அகிலத் திரிலோகங்களும் பூர்வத்தில் காலாக்னியால் எவ்வாறு எரிக்கப்பட்டதோ அவ்வாறே இப்போதும் எரியும். அவர் தேவராஜ்ஜியத்தையும் வேண்டக்கூடும். எனவே, அவர் வேண்டுவது எதுவானாலும் அது கொடுக்கப்படட்டும்" {என்றனர் தேவர்கள்}.(17ஆ,18அ)

ஸுரகணங்கள் அனைத்தும் பிதாமஹனை முன்னிட்டுக் கொண்டு மஹாத்மாவான விஷ்வாமித்ரரிடம் சென்று, இந்த மதுர வாக்கியத்தைச் சொன்னார்கள்:(18ஆ,19அ) "பிரம்மரிஷியே, உமக்கு ஸ்வாகதம் {நல்வரவு}. உமது தவத்தால் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். {என்று தேவர்கள் சொன்னதும், பிரம்மன் அந்த முனிவரிடம்} கௌசிகா, உக்கிர தவத்தால் நீ பிராஹ்மண்யத்தை அடைந்துவிட்டாய்.(19ஆ,20அ) பிராமணா, மருத்கணங்களுடன் கூடிய நான் உனக்கு தீர்க்காயுளைக் கொடுக்கிறேன். பேரின்ப அருள்நிலை உன்னைத் தழுவட்டும். நீ மங்கலமாக இருப்பாயாக. சௌம்யனே {மென்மையானவனே}, நீ விரும்பியவாறு செல்வாயாக" {என்றான் பிரம்மன்}.(20ஆ,21அ)

பிதாமஹனும், திரிதிவவாசிகள் {தேவலோகவாசிகள்} அனைவரும் சொன்னதைக் கேட்ட அந்த மஹாமுனிவர் மகிழ்ச்சியுடன் வணங்கி இவ்வாறு சொன்னார்:(21ஆ,22அ) "எனக்குப் பிராஹ்மண்யமும், தீர்க்காயுளும் கொடுக்கப்பட்டால், ஓங்காரமும், வஷட்காரமும், வேதங்களும் தாமே வந்து என்னை ஆதரிக்கட்டும்.(22ஆ,23அ) க்ஷத்ரவேதத்தை {அதர்வணம்} அறிந்தவர்களிலும், பிரம்மவேதத்தை {ரிக், சாம, யஜுர்} அறிந்தவர்களிலும் சிரேஷ்டரும் {சிறந்தவரும்}, பிரம்மபுத்திரருமான வசிஷ்டர் என்னை இவ்வாறே {பிரம்மரிஷி என்று} அழைக்க வேண்டும். இதுவே என் பெரும் விருப்பமாகும். ஸுரரிஷபர்களே {தேவர்களில் சிறந்தவர்களே}, இதைச் செய்துவிட்டால் நீங்கள் செல்லலாம்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(23ஆ,24அ)

ஜபவரரான வசிஷ்டரும், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கே வந்து, {விஷ்வாமித்ரரிடம்} நட்பை ஏற்படுத்திக் கொண்டு, "நீர் பிரம்மரிஷி ஆகிவிட்டீர்.(25)" என்று சொன்னார்.(25) மேலும், "இதில் சந்தேகம் வேண்டாம். நீர் பிரம்மரிஷியே. அனைத்தும் உமக்குக் கைகூடும்" என்று சொல்லிவிட்டு தேவர்கள் அனைவரும் வந்தவாறே சென்றனர்.(26)

தர்மாத்மாவான விஷ்வாமித்ரர், உத்தமமான பிராஹ்மண்யத்தை அடைந்ததும் பிரம்மரிஷியும், ஜபவரருமான வசிஷ்டரைப் பூஜித்தார்.(27) பிறகு அவர் இலக்கை அடைந்தவராக தவம் செய்தபடியே மஹீ {பூமி} முழுவதும் திரிந்து வந்தார். இராமா, இந்த மஹாத்மாவால் இவ்வாறே பிராஹ்மண்யம் அடையப்பட்டது.(28) இராமா, இந்த முனிசிரேஷ்டர், தவமே வடிவமானவர். எப்போதும் தர்மத்தில் ஊக்கம் உள்ளவர். இவர் வீரியத்தின் பிறப்பிடமாகத் திகழ்பவர்" {என்றார் சதாநந்தர்}.(29)

மஹாதேஜஸ்வியான அந்த த்விஜோத்தமர் {இருபிறப்பாளர்களில் சிறந்த சதாநந்தர்} இவ்வாறு சொல்லிவிட்டு ஓய்ந்தார். இராமன், லக்ஷ்மணன் ஆகியோரின் முன்னிலையில் சதானந்தரின் சொற்களைக் கேட்ட ஜனகன், தன் கைகளைக் கூப்பியபடியே குசிகாத்மஜரிடம் {விஷ்வாமித்ரரிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(30,31அ) "கௌசிகரே, முனிபுங்கவரே, காகுத்ஸ்தர்களுடன் {ராமலக்ஷ்மணர்களுடன்} என்னுடைய யஜ்ஞத்திற்குத் தாம் வந்திருப்பதால் நான் தன்யனும் ஆனேன், உமது அனுக்கிரகத்தையும் அடைந்தேன்.(31ஆ,32அ) மஹாமுனிவரே, பிராமணரே, உமது தரிசனம் பெற்ற நான் பவித்ரமடைந்தேன். உம்மைக் கண்டதனால் பல வகை குணங்களும் {வரங்களும்} என்னால் அடையப்பட்டன.(32ஆ,33அ) மஹாதேஜஸ் பொருந்திய பிராமணரே, உம்முடைய விஸ்தாரமான கீர்த்தியும், மஹாதவமும் என்னாலும், மஹாத்மாவான ராமனாலும் கேட்கப்பட்டன.(33ஆ,34அ) இந்தச் சபைக்கு வந்திருக்கும் சபை உறுப்பினர்களும் உமது எண்ணற்ற குணங்களைக் கேட்டறிந்தனர். உமது தவமும், பலமும் அளவிடப்படமுடியாதவையாகும். குசிகாத்மஜரே, உமது குணங்களும் {புகழும்} இவ்வாறே எப்போதும் நிலைத்திருக்கும்.(34ஆ,35அ) விபுவே, ஆச்சரியப்படத்தக்க இந்தக் கதைகளைக் கேட்டும் எனக்கு நிறைவேற்படவில்லை. முனிசிரேஷ்டரே, ரவிமண்டலம் சாய்கிறது {சூரியன் அஸ்தமிக்கப் போகிறான்}. கர்மகாலமும் {மாலைக் கடனைச் செய்யும் தருணமும்} நெருங்கிவிட்டது.(36) மஹாதேஜஸ்வியே, நாளை விடியலில் என்னைக் காண்பதே உமக்குத் தகும். ஜபசிரேஷ்டரே, ஸ்வாகதம் {உமக்கு நல்வரவு}. எனக்கு விடை கொடுத்து அனுப்புவீராக" {என்றான் ஜனகன்}.(37)

இவ்வாறு சொல்லப்பட்டதும் அந்த முனிவரர் {விஷ்வாமித்ரர்} பிரீதியடைந்தார். மகிழ்ச்சியுடன் செல்லும் புருஷரிஷபனான ஜனகனைப் புகழ்ந்து உடனே விடைகொடுத்தார்.(38) வைதேஹனான {விதேஹ நாட்டின் வழித்தோன்றலான} மிதிலாதிபன் {மிதிலையின் மன்னன்} அந்த முனிசிரேஷ்டரிடம் இவ்வாறு சொல்லிவிட்டு உபாத்யாயர்கள் {ஆசிரியர்கள்}, உறவினர்கள் ஆகியோருடன் அவரைப் பிரதக்ஷிணம் செய்தான் {வலம் வந்தான்}.(39) தர்மாத்மாவான விஷ்வாமித்ரரும், ராம, லக்ஷ்மணனுடன் மஹாரிஷிகளால் பூஜிக்கப்பட்டவராகத் தமது வசிப்பிடத்தை நோக்கிச் சென்றார்.(40)

பாலகாண்டம் சர்க்கம் – 65ல் உள்ள சுலோகங்கள் : 40

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்