Vasishta's denial | Bala-Kanda-Sarga-53 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விஷ்வாமித்ரரையும் அவரது படையையும் மகிழ்வித்த வசிஷ்டர்; வசிஷ்டரிடம் காமதேனுவை வேண்டிய விஷ்வாமித்ரர்; வசிஷ்டர் மறுத்தது...
{சதாநந்தர் தொடர்ந்தார்}, "சத்ருசூதனா {ராமா}, வசிஷ்டரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், காமதேனுவான சபளை, எவரெவர் எப்படி விரும்பினரோ, அவரவருக்கு அப்படியே அனைத்தையும் கொடுத்தாள்.(1) கரும்பு, தேன், பொரி, வராஸவாம் {மலர்களில் எடுக்கப்பட்ட உயர்ந்த கள்}, மைரேயம் {உயர்ந்த வகை மது}, பணியாரங்கள், உயர்ந்த பானங்கள், பல்வேறு வகைப் பக்ஷணங்கள் ஆகியவற்றைக் கொடுத்தாள்.(2) பர்வதங்களுக்கு ஒப்பான சூடான அன்னக்குவியல்கள், பாயஸம் முதலியவை, பருப்பு வகைகள், தயிர், நானாவித பானங்கள், இனிப்பு வகைகள், பலவித உணவுப் பொருட்கள் ஆகியவை ஆயிரக்கணக்கில் அங்கே தோன்றின.(3,4) இராமா, விஷ்வாமித்ரரின் படைகள் அனைத்தும் வசிஷ்டரின் விருந்துண்ட மகிழ்ச்சியில் நிறைந்திருந்தன.(5) அந்தப்புரவாசிகள் {மங்கையர்}, பிராமணர்கள், புரோஹிதர்கள் ஆகியோரும், ராஜரிஷியான விஷ்வாமித்ரரும் உற்சாகத்தையும், ஆற்றலையும் அடைந்தனர்.(6)
இவ்வாறு {வசிஷ்டரால்} பூஜிக்கப்பட்ட விஷ்வாமித்ரர், ஆலோசனைகள் கூறும் தன் மந்திரிகள், பணியாட்கள் சஹிதராகப் பெரும் மகிழ்ச்சியுடன் வசிஷ்டரிடம் பேசினார்:(7) "பிராமணரே, பூஜிக்கத்தகுந்தவரான உம்மால் நான் பூஜிக்கப்பட்டேன். நல்ல காரியம் செய்தீர். வாக்கியங்களில் திறன்மிக்கவரே, நான் ஒரு வாக்கியத்தைச் சொல்கிறேன் கேட்பீராக.(8) பகவானே, நூறாயிரம் பசுக்களுக்கு மாற்றாக எனக்கு சபளையைக் கொடுப்பீராக. இவள் {இந்தப் பசு} உண்மையில் ரத்தினமாகும். பார்த்திபர்களே ரத்தினங்களைக் கொள்பவர்கள் ஆவர். எனவே, துவிஜரே, சபளையை எனக்குத் தருவீராக. தர்மப்படி இவள் எனதாவாள்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(9,10அ)
விஷ்வாமித்ரர் இவ்வாறு சொன்னதும் பகவானும், முனிசத்தமரும், தர்மாத்மாவுமான வசிஷ்டர் அந்த மஹீபதியிடம் {பூமியின் ஆட்சியாளரிடம்} மறுமொழியாக,(10ஆ,11அ) "ராஜாவே, நூறாயிரம் பசுக்களும் சபளைக்கு மாற்றாகாது. நூறுகோடியே {நூறு கோடி பசுக்களையே} கொடுத்தாலும் {காமதேனுவான இந்த சபளையை} நான் தரமாட்டேன். ஏராளமான வெள்ளியைக் கொடுத்தாலும் நான் {இவளைத்} தரமாட்டேன்.(11ஆ,12அ) அரிந்தமா {பகைவரை ஒடுக்குபவனே}, என் அருகில் இருக்கும் இவள் {உன்னால் அச்சுறுத்தப்பட்டாலும்} என்னால் கைவிடப்படத்தகாதவள். ஆத்மவானான ஒருவனுக்கு {சுயமதிப்புக் கொண்ட ஒருவனுக்கு} கீர்த்தியை {புகழைப்} போல, சபளை எப்போதும் என்னுடன் இருப்பவள்.(12ஆ,13அ) ஹவ்யம் {தேவர்களுக்கான ஆகுதிகள்}, கவ்யம் {பித்ருக்களுக்கான ஆகுதிகள்}, அக்னிஹோத்ரம், பலி, ஹோமம் ஆகியவை என் பிராண யாத்திரையான {என் வாழ்க்கைப் பயணத்தைச் சாத்தியமாக்கும் பசுவான} இவளைச் சார்ந்தே நடக்கின்றன.(13ஆ,14அ) ராஜரிஷியே, ஸ்வாஹாகாரம், வஷட்காரம்,[1] விதவிதமான பல்வேறு போதனைகள் அனைத்தும் இவளைச் சார்ந்தே நடைபெறுகின்றன என்பதில் ஐயமில்லை.(14ஆ,15அ) சத்தியமாக இவளே எனக்கு அனைத்துமாகவும், அனைத்தையும் நிறைவேற்றுபவளாகவும் இருக்கிறாள். இராஜாவே, இவ்வகையிலும், இன்னும் பல காரணங்களாலும் சபளையை என்னால் உனக்குக் கொடுக்க முடியாது" என்றார் {வசிஷ்டர்}.(15ஆ,16அ)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஹோமம் செய்யும்போது, வேத மந்திரங்களுடன் தீக்குண்டத்தில் நீர்க்காணிக்கையோ, திடப்பொருள் காணிக்கையோ அளிக்கப்படும்போது, அந்தக் காணிக்கையைப் பெறும் தேவனின் பெயருடன் ஸ்வாஹாகாரம் சொல்லப்படும். உதாரணத்திற்கு, "இந்த்ராய ஸ்வாஹா, இந்த்ராய இதம் ந மம... வருணாய ஸ்வாஹா, வருணாய இதம் ந மம", அஃதாவது, "இந்திரனுக்கே இது வேட்கப்படுகிறது, இஃது இந்திரனுக்கன்றி எனக்கில்லை. மழை தேவனுக்கே இது வேட்கப்படுகிறது. இது வருணனுக்கன்றி எனக்கில்லை" என்ற பொருளில் மந்திரங்கள் சொல்லப்படும். வஷட்காரம் பித்ருக்களுக்கான மந்திரங்களில் சொல்லப்படும். ஹோமம் செய்யும் தகுதியுடையவர் வேதங்களைக் கற்கலாம். ஹோமம் செய்பவர் சில அடிப்படை வேத மந்திரங்களைக் கற்க வேண்டும். இவை அனைத்தும் அதிகப் பொருள்கள் தேவைப்படும் ஒரு சுழற்சி முறையாகும். {இங்கே சொல்லப்படும் சபளை என்ற} இந்தப் பசு, ஆசிரியருக்காயினும், சீடருக்காயினும், அவர்கள் விரும்பிய அனைத்தையும் தாமதமின்றித் தரக்கூடியவள்" என்றிருக்கிறது.
வசிஷ்டர் இவ்வாறு பேசினாலும், வாக்கியவிஷாரதரான {வாக்கியங்களை அமைப்பதில் திறன்மிக்கவரான} விஷ்வாமித்ரர், பிடிவாதத்துடனும், படபடப்புடனும் இந்த வாக்கியத்தைப் பேசினார்:(16ஆ,17அ) "பொன்னாலான கழுத்தணிகளுடனும், பொன்னாலான காதணிகளுடனும் கூடிய பதினாலாயிரம் குஞ்சரங்களை {யானைகளை} நான் உமக்கு அளிப்பேன்.(17ஆ,18அ) வெள்ளைக் குதிரைகள் நான்கு பூட்டப்பட்டவையும், அழகிய சிறுமணிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பொன்னாலானவையுமான எண்ணூறு தேர்களை நான் உமக்குத் தருவேன்.(18ஆ,19அ) நல்ல விரதங்களை நோற்பவரே, புகழ்பெற்ற நாடுகளில் பிறந்தவையும், உயர்ந்த வகைகளைச் சேர்ந்தவையும், பெருவேகம் கொண்டவையுமான பதினோராயிரம் ஹயங்களை {குதிரைகளை} நான் உமக்குத் தருகிறேன்.(19ஆ,இ) நானாவித வண்ணங்களைக் கொண்டவையும், பல்வேறு வகைகளைச் சார்ந்தவையுமான ஒரு கோடி இளம்பசுக்களையும் நான் கொடுக்கிறேன். சபளையை எனக்குக் கொடுப்பீராக.(20) துவிஜோத்தமரே, ரத்தினங்களையோ, ஹிரண்யத்தையோ {தங்கத்தையோ} நீர் எவ்வளவு வேண்டினாலும், அவ்வளவையும் நான் கொடையளிப்பேன். சபளையை எனக்குக் கொடுப்பீராக" {என்றார் விஷ்வாமித்ரர்}.(21)
மதிமிக்கவரான விஷ்வாமித்ரர் இவ்வாறு பேசியதும், அந்த பகவான் {வசிஷ்டர்}, தெளிவாகச் சொல்லும் வகையில், "இராஜாவே, என்ன நடந்தாலும் சபளையை நான் கொடுக்கமாட்டேன்.(22) இவளே எனக்கு உண்மையில் ரத்தினம், இவளே உண்மையில் எனக்கு தனம் {செல்வம்}, இவளே உண்மையில் எனக்கு அனைத்துமாக இருக்கிறாள். இவளே உண்மையில் என் ஜீவிதம் {என் வாழ்க்கை}.(23) இராஜாவே, {வேத சடங்குகளான} தர்ஷத்திற்கும், பூர்ணமாஸங்களுக்கும் தகுந்த தக்ஷிணைகளையும், யஜ்ஞங்களில் பல்வேறு கிரியைகளையும் {காரியங்களையும்} உண்மையில் இவளால் மட்டுமே செய்ய முடியும்.(24) இராஜாவே, என் கிரியைகள் அனைத்திற்கும் இவளே மூலமாக இருக்கிறாள் என்பதில் ஐயமில்லை. பலவிதமான வீண்விவாதங்களால் ஆவதென்ன? {என்ன பிரயோஜனம்}. {விரும்பியவற்றைத் தருபவளான} இந்தக் காமதோஹினியை நான் கொடுக்க மாட்டேன்" என்றார் {வசிஷ்டர்}"[2].(25)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தியாவில் பசுக்கள் புனிதமானவையாகக் கருதப்படுவதைப் போலவே உலகமெங்கிலும் விலைமதிப்பற்றவையாகவே கருதப்படுகின்றன. பசு கொடுக்கும் பாலில் இருந்து சாணம் வரை அனைத்தும் பயன்படுகின்றன. மருத்தவத்தில் மருந்துகளாகவும் பயன்படுகின்றன. மஹாபாரதம் அனுசாஸன பர்வத்தில் {76 முதல் 83ம் பகுதிவரை} கோ மஹாத்மியம் {பசுவின் புனிதம்} குறித்துப் பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு நீண்ட விளக்கம் கொடுக்கிறார்" என்றிருக்கிறது.
பாலகாண்டம் சர்க்கம் – 53ல் உள்ள சுலோகங்கள் : 25
Previous | | Sanskrit | | English | | Next |