Nimi's bloodline | Bala-Kanda-Sarga-71 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஜனகன் தன் குல வரலாற்றைச் சொன்னது; சீதையை ராமனுக்கும், ஊர்மிளையை லக்ஷ்மணனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பியது...
இவ்வாறு சொன்னவரிடம் {வசிஷ்டரிடம்} ஜனகன் தன் கைகளைக் கூப்பி மறுமொழி சொன்னான்: "நீர் மங்கலமாக இருப்பீராக. பெரும்புகழ்வாய்ந்த என் குலத்தைக் குறித்தும் கேட்பதே உங்களுக்குத் தகும்.(1) முனிசிரேஷ்டரே, மஹாமுனியே, நற்குலத்தில் பிறந்தவன் {கன்னியாதானம் செய்து} கொடுக்கும்போது தன் குலத்தைக் குறித்து அறிவிக்க வேண்டியதை மிச்சமில்லாமல் சொல்ல வேண்டும். எனவே, நான் சொல்கிறேன்.(2) ஸ்வகர்மங்களால் {தன் செயல்களால்} மூவுலகங்களிலும் புகழ்பெற்றவனும், பரமதர்மாத்மாவும், சர்வ சத்வ ஆத்மாக்களிலும் சிரேஷ்டனுமான ராஜா நிமி {என்றொருவன்} இருந்தான்.(3) மிதி என்ற பெயர் கொண்ட ஒருவன் அவனுடைய புத்திரனாக இருந்தான். அவனுடைய {மிதியின்} புத்திரன் ஜனகன். பிரதம {முதல்} ஜனகன் என்ற பெயரை அடைந்த ஜனகனுக்கு உதாவசு பிறந்தான்.(4) உதாவசுவுக்கு, தர்மாத்மாவான நந்திவர்த்தனன் பிறந்தான். நந்திவர்த்தனனின் புத்திரன் சுகேது என்ற பெயர் படைத்தவன் ஆவான்.(5) சுகேதுவுக்கு, தர்மாத்மாவும், மஹாபலனுமான தேவராதனும், அந்த தேவராதனுக்கு ராஜரிஷியான பிருஹத்ரதனும் பிறந்தனர்.(6)
பிருஹத்ரதனுக்கு, சூரனும், பிரதாபவானுமான மஹாவீரன் பிறந்தான். மஹாவீரனுக்குத் துணிவுமிக்கவனும், சத்தியவிக்கிரமனுமான {நிச்சயம் வெல்பவனான} ஸுத்ருதி பிறந்தான்.(7) அந்த ஸுத்ருதிக்கு, தர்மாத்மாவும், சுதர்மிகனுமான திருஷ்டகேதுவும், ராஜரிஷியான அந்தத் திருஷ்டகேதுவுக்கு ஹர்யஷ்வனும் பிறந்தனர்.(8) ஹர்யஷ்வனின் புத்திரன் மருவாவான். மருவின் புத்திரன் பிரதீந்தகன் ஆவான். பிரதிந்தகனின் மகன் தர்மாத்மாவான ராஜா கீர்த்திரதனாவான்.(9) கீர்த்திரதனின் புத்திரன் தேவமீடன் என்பது நினைவுகூரத்தக்கது. தேவமீடனுக்கு விபுதனும், விபுதனுக்கு மஹீத்ரகனும் பிறந்தனர்.(10) மஹாபலனான ராஜா கீர்த்திராதன் மஹீத்ரகனின் மகனாவான். ராஜாரிஷியான அந்தக் கீரத்திராதனுக்கு மஹாரோமன் பிறந்தான்.(11) மஹாரோமனுக்குத் தர்மாத்மாவான ஸ்வர்ணரோமனும், ராஜரிஷியான ஸ்வர்ணரோமனுக்கு ஹிரஸ்வரோமனும் பிறந்தனர்.(12) தர்மத்தை அறிந்தவரும், மஹாத்மாவுமான அவருக்கு {ஹிரஸ்வரோமருக்கு} இரண்டு புத்திரர்கள் பிறந்தனர். {அவர்களில்} நான் ஜேஷ்டன் {மூத்தவன்}. வீரனான குசத்வஜன் எனக்குப் பின் பிறந்த என்னுடைய தம்பியாவான்.(13)
நராதிபரான எங்கள் பிதா {ஹிரஸ்வரோமர்} ஜேஷ்டனான என்னை ராஜ்ஜியத்தில் அபிஷேகம் செய்தார். அவர் {ஹிரஸ்வரோமர், வளர்க்க வேண்டிய கடமையென்ற} பாரமாக குசத்வஜனை என்னிடம் ஒப்படைத்துவிட்டு வனத்திற்குச் சென்றார்.(14) விருத்தரான {முதிர்ந்தவரான} எங்கள் பிதா சுவர்க்கத்திற்குச் சென்றதும், என் தம்பியும், தேவனுக்கு ஒப்பானவனுமான குசத்வஜனை நான் ஸ்நேகத்துடனும், பாசத்துடனும் வளர்த்து வந்தேன். {ராஜ்ஜியமெனும்} இந்தச் சுமையையும் தர்மம் தவறாமல் சுமந்து வந்தேன்.(15) சிறிது காலம் கழிந்த பிறகு, வீரியவானான சுதன்வ ராஜன், ஸாங்காஷியாபுரத்தில் இருந்து வந்து மிதிலையை முற்றுகையிட்டான்.(16) அவன் {சுதன்வன்}, "உத்தமமான சைவதனுஸையும் {சிவனின் வில்லையும்}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட கன்னிகை சீதையையும் எனக்குக் கொடுக்க வேண்டும்" என்று சொல்லி அனுப்பினான்.(17)
பிரம்மரிஷியே {வசிஷ்டரே, நான் என் மகளை} தானமளிக்காததால் என்னுடன் யுத்தம் செய்ததில் அந்தச் சுதன்வ ராஜன் என்னால் முடிக்கப்பட்டான்.(18) முனிசிரேஷ்டரே, நராதிபதியான அந்தச் சுதன்வனைக் கொன்று, சூரனான என் தம்பி குசத்வஜனை ஸாங்காஷியத்தில் அபிஷேகம் செய்து வைத்தேன் {குசத்வஜனை ஸாங்காஷ்யாபுரியின் மன்னனாக நிறுவினேன்}.(19) மஹாமுனியே, இவன் என் தம்பி, நான் ஜேஷ்டன். முனிபுங்கவரே, பரமபிரீதியடைந்திருக்கும் நான் சீதையை ராமனுக்கும், ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கும் கொடுக்கிறேன். நீர் மங்கலமாக இருப்பீராக.(20,21அ) வீர்யசுல்கமும், ஸுரசுதைக்கு {தெய்வீக மகளுக்கு} ஒப்பானவளுமான என் மகள் சீதையையும், இரண்டாமவளான ஊர்மிளையையும் திரிகரணங்களில் வேறுபாடின்றி[1] பரமபிரீதியுடன் நான் தத்தம் செய்கிறேன் என்பதில் ஐயமில்லை.(21ஆ,22)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மனம், வாக்கு, காயம் {உடல்} கரணங்கள் என்பன இந்த மூன்று கணங்களாகும். எனவே நான் முழு இதயத்துடனும், வாக்குத் தூய்மையுடனும், தூய்மையான உடலுடனும் மணமகள்களைக் கொடுக்கிறேன் என்பது இங்கே பொருளாகும்" என்றிருக்கிறது. இதுவரை வசிஷ்டரிடம் சொல்லப்படும் வாக்கியம், இதன் பிறகு தசரதனுக்குச் சொல்லப்படுவதாக மாறுகிறது.
இராஜாவே {தசரதா}, ராமலக்ஷ்மணர்களுக்காகக் கோதானம் செய்து முடித்ததும் பித்ருகாரியத்தையும் {தந்தை செய்ய வேண்டிய காரியங்களையும்}, வைவாஹிகத்தையும் {விவாஹ காரியங்களையும்} நீ செய்விப்பாயாக. நீ மங்கலமாக இருப்பாயாக[2].(23) மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்ட தசரதா}, பிரபுவே, இன்று மகம் {நட்சத்திரம் நடைபெறுகிறது}. இராஜாவே, இன்றிலிருந்து மூன்றாம் நாளில் உத்தரப் பல்குனியில் {உத்தர நக்ஷத்திரத்தில்} விவாஹிகத்தைச் செய்விப்பாயாக. இராமலக்ஷ்மணர்களுக்கு நலத்தை விளைவிக்கும் தானங்களை நீ செய்வாயாக" {என்றான் ஜனகன்}.(24)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே சொல்லப்படும் கோதானம் என்பது வேறு பரிமாணத்தை அடைந்து உடல் முடியை மழிப்பது என்ற பொருளைக் கொள்கிறது. மாணவர்கள் தங்கள் குருகுல வாசத்தை முடித்துத் திரும்பி முடி இறக்குதல், எண்ணெய்க் குளியல் உள்ளிட்ட சில சடங்குகளுக்குப் பிறகு இல்லறத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இங்கே மாணவன் முடியை இறக்கும்போது ஆசிரியர் {குரு} பசுக்களைக் கொடையாகப் பெறுவார். தேவையற்ற மயிர் நீங்கிய பின் ஸமாவர்த்தனம் எனும் சடங்கு மேற்கொள்ளப்படும். இங்கே சுட்டிக்காட்டப்படும் சச்சரவு என்னவென்றால், "ராமலக்ஷ்மணர்கள் பிறக்கும்போது தலையைத் தவிர மற்ற இடங்களில் தேவையற்ற மயிர் இன்றிப் பிறந்தவர்கள்" என்பதைப் போலவே நான்கு சகோதரர்களுக்கும் இந்தியத் தொன்மங்கள் அலங்காரம் செய்து காட்டுகிறது. அவ்வாறிருப்பின் ஜனகன் ஏன் இத்தகைய சடங்கைச் செய்யச் சொல்கிறான்? அவர்களிடம் தேவையற்ற மயிர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தச் சடங்கைச் செய்தே ஆக வேண்டும்" என்றிருக்கிறது.
பாலகாண்டம் சர்க்கம் – 71ல் உள்ள சுலோகங்கள் : 24
Previous | | Sanskrit | | English | | Next |