Dasharatha in Mithila | Bala-Kanda-Sarga-69 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தசரதன் மிதிலை அடைந்தது; ஜனகன் அவனை மதிப்புடன் வரவேற்றது; மிதிலையில் சுகமாக வசித்தது...
அந்த ராத்திரி கடந்ததும் ராஜா தசரதன் உபாத்யாயர்களுடனும் {ஆசிரியர்களுடனும்}, பந்துக்களுடனும் {உறவினர்களுடனும்} சேர்ந்தவனாக மகிழ்ச்சியாக சுமந்திரனிடம் இதைச் சொன்னான்:(1) "இப்போது தனாதிகாரிகள் அனைவரும் ஏராளமான தனத்தையும், நானாவித ரத்தினங்களையும் எடுத்துக் கொண்டும் நல்ல ஏற்பாடுகளைச் செய்து கொண்டும் முன்பே புறப்பட்டுச் செல்லட்டும்.(2) என் ஆஜ்ஞையின் சம காலத்தில் {நான் ஆணையிட்ட உடனேயே} எங்குமுள்ள சதுரங்க பலமும், உத்தமமான வாகனப் பல்லக்குகளும் சீக்கிரமாகப் புறப்படட்டும்[1].(3) வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காசியபர், தீர்க்காயுளுடைய மார்க்கண்டேயர், காத்யாயன ரிஷி(4) உள்ளிட்ட துவிஜர்கள் {இருபிறப்பாளர்கள்} முன்னே செல்லட்டும். என்னுடைய சியந்தனம் {ராஜரதத்தில் குதிரைகள்} பூட்டப்படட்டும். காலதாமதம் செய்ய வேண்டாம். {ஜனகனின்} தூதர்கள் என்னை அவசரப்படுத்துகின்றனர்" {என்றான் தசரதன்}.(5)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "நால்வகைப் படைகளான குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகியவையே சதுரங்க பலம் என்று இங்கே சொல்லப்படுகிறது. அதே வேளையில் வேறு சிலரோ, இவ்வளவு பெரிய படைகள் போருக்கான தேவை ஏற்படும்போது மட்டுமே நகர்த்தப்படும், திருமணங்களுக்குப் படைகள் அனைத்தையும் அழைத்துச் செல்லாமல் சொற்ப எண்ணிக்கையே அழைத்துச் செல்லப்படும் என்று சொல்கிறார்கள். சதுரங்கபலம் என்ற இந்தச் சொல், தனம் {செல்வம்}, கனகம் {தங்கம்}, வஸ்து {ஆடை அணிமணிகள்}, வாஹன சம்பாதி {வண்டி வாகனங்கள்} என்ற நால்வகைச் செல்வங்களைக் குறிக்கும்; எனவே, திருமண நிகழ்வுகளில் செல்வமே பிரதானமாகக் காட்சிப்படுத்தப்படும் என்றும் சொல்கிறார்கள்" என்றிருக்கிறது. அடுத்த ஸ்லோகத்திலேயே சதுரங்க சேனை என்று படைகளைக் குறிக்கும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது
அந்த நரேந்திரனின் {தசரதனின்} வசனத்தால், அந்தச் சதுரங்க சேனைகளும், ரிஷிகளுடன் புறப்பட்டுச் சென்ற ராஜனை {தசரதனைப்} பின்தொடர்ந்து சென்றன.(6) அவன் {தசரதன்} நான்கு நாட்கள் மார்க்கத்தில் {வழியில்} சென்று, விதேஹத்தை நெருங்கினான். ஸ்ரீமான் ஜனகராஜா இதைக் கேள்விப்பட்டுப் பூஜைக்கான {வரவேற்பு விழாவுக்கான} ஏற்பாடுகளைச் செய்தான்[2].(7) பிறகு, மகிழ்ச்சியுடன் கூடிய அந்த ஜனக ராஜா, நிருபனும், ராஜனும், விருத்தனுமான {முதிர்ந்தவனுமான} தசரதனை அடைந்து {"இனி சீதைக்குத் திருமணம் செய்யலாம்" என்ற எண்ணத்தில்} பரம ஆனந்தப் பரவசமடைந்தான்.(8)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தச் சம்பிரதாயங்கள், திருமண விழாக்களில் இன்றும் ஏதோவொரு வகையில் தொடர்கின்றன. அதிலும் குறிப்பாகக் கிராமப்புற இந்தியாவில் இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கின்றன. மணமகள் இல்லம் இருக்கும் இடத்தின் எல்லையில் மணமகன் தரப்பினர் வரவேற்கப்படுவர். அஃது ஒரு கிராமமாக இருந்தால் அந்தக் கிராமத்தின் எல்லையில் மணமகனுக்கு விழாவெடுத்து மணமகளின் வீட்டிற்கு அவன் அழைத்துச் செல்லப்படுவான். விருந்தினரை பாதி வழியில் எதிர்கொண்டு அழைப்பது ஒருவகை நெறிமுறையாகும்" என்றிருகிறது.
பெரும் மகிழ்ச்சியடைந்த அந்த நரசிரேஷ்டன் {மனிதர்களில் சிறந்த ஜனகன்}, இந்த நரசிரேஷ்டனிடம் {மனிதர்களில் சிறந்த தசரதனிடம்} இந்தச் சிரேஷ்ட வசனத்தை {சிறந்த சொற்களைச்} சொன்னான்: "இராகவா {ரகு குலத்தில் பிறந்த தசரதா}, உனக்கு ஸ்வாகதம் {நல்வரவு}, என் பிராப்த வசத்தால் {நற்பேற்றால் / பாக்கியத்தால்} நீ இங்கு வந்தாய். உன் புத்திரர்கள் இருவரின் வீர காரியங்களில்[3] நீ பிரீதியடைவாய்.(9,10அ) மஹாதேஜஸ்வியான பகவான் வசிஷ்ட ரிஷியும், துவிஜ சிரேஷ்டர்கள் அனைவரின் துணையுடன் தேவர்களுடன் கூடிய சதக்ரதுவை {இந்திரனைப்} போல என் பிராப்த வசத்தாலேயே இங்கே வந்திருக்கிறார்.(10ஆ,11அ) வீரியசிரேஷ்டர்களான இவர்களுடனும், மஹாத்மாக்களான ராகவர்களுடனும் ஏற்பட்ட சம்பந்தத்தால் விக்னங்கள் {இடையூறுகள் / தொல்லைகள்} அனைத்தும் என் வசம் அற்றுப்போயின. இந்தப் பாக்கியத்தால் என் குலமும் பூஜிக்கப்பட்டதானது {மேன்மை பெற்றது}.(11ஆ,12அ) நரசிரேஷ்டா, நரேந்திரா நாளை விடியலில் யஜ்ஞ முடிவில் ரிஷி சத்தமர்களுடன் சேர்ந்து {ஆலோசித்து}[4] விவாஹ காரியங்களைத் தொடங்கி வைப்பதே உனக்குத் தகும்" {என்றான் ஜனகன்}.(12ஆ,13அ)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சிவனின் வில்லை முறித்தது ராமனே என்றாலும், இங்கே ராமனும், லக்ஷ்மணனும் அதை முறித்ததாகச் சொல்லப்படுகிறது. இஃது அவர்கள் இருவருக்கும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பாராட்டாகும். உதாராணத்திற்கு சூர்ப்பனகையின் வடிவத்தைச் சிதைத்தது லக்ஷ்மணனே என்றாலும், ராமன் அதைச் செய்ததாகவும், அல்லது இருவரும் அதைச் செய்ததாகவும் சொல்லப்படும். ஒப்பற்ற சகோதரர்கள் என்ற நோக்கில் இவ்வாறு இருவரும் இணைத்தே புகழப்படுகிறார்கள்" என்றிருக்கிறது
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சீதாராமத் திருமணமானது அதன் வகைப்பாட்டைப் பொறுத்தளவில் சர்ச்சைக்குரியது. எட்டு வகைத் திருமண முறைகளில் இந்தத் திருமணம் எந்த வகை என்பதில் சர்ச்சை எழுகிறது. பிராமம், தைவம், பிராஜாபத்யம், ஆர்ஷம், ஆசுரம், காந்தர்வம், ராக்ஷசம், பைசாசம் என்பன எட்டு வகைத் திருமண முறைகளாகும். இது குறித்துப் பின்னர் விவாதிப்போம்" என்றிருக்கிறது.
வாக்கியங்களில் சிறந்த வாக்கியத்தை அறியும் நராதிபன் {வாக்கியங்களின் உட்கருத்தை அறிவதில் வல்லமையுள்ளவனும், மனிதர்களின் தலைவனுமான தசரதன்} அந்த வசனத்தைக் கேட்டு ரிஷிகளின் மத்தியில் அந்த மஹீபதிக்கு {பூமியின் தலைவனான ஜனகனுக்கு} மறுமொழி கூறினான்:(13ஆ,14அ) "பிரதிக்ரஹம் தாதாவின் வசமானது {தானம் பெறும் முறை கொடுப்பவன் உரிமையாகும்} என்பது {தொடர்பான} அனைத்தையும் நான் கேட்டிருக்கிறேன். எனவே, தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, நீ சொல்வதைப் போலவே செயல்படுவோம்" {என்றான் தசரதன்}[5].(14ஆ,15அ)
[5] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "கொடுக்கிறவன் எப்பொழுது கொடுப்பனோ, அப்பொழுதே வாங்கிக்கொள்ளுகிறவன் வாங்கிக்கொள்ளவேண்டுமேயன்றி வேறில்லை. ஆகையால் ப்ரதிக்ரஹமென்பது தாதாவின் அதீதத்தில் இருக்கின்றது. நீ வீர்ய சுல்கமாக ஏற்படுத்தின இந்தக் கந்யாப்ரதாநத்தை முன்னமே கேட்டிருக்கின்றோம். மஹாராஜனே! தாதாவாகிய நீ எப்படிச் சொல்லுகின்றாயோ? அப்படியே வாங்கிக்கொள்ளுகிற நாங்கள் நடக்க ஸித்தமாயிருக்கின்றோம். நீ தர்மங்களையெல்லாம் அறிந்தவன். ஆகையால் உனக்குத் தெரியாத தர்மம் ஒன்றுமில்லை" என்றிருக்கிறது. தாதா என்பதன் அடிக்குறிப்பில் "கொடுப்பவன்" என்றிருக்கிறது.
தர்மத்திற்கும், குடும்ப மகிமைக்கும் இணக்கமான சத்தியவாதியின் {தசரதனின்} வசனத்தைக் கேட்ட விதேஹாதிபன் {விதேஹ நாட்டு மன்னன் ஜனகன்} மகிழ்ச்சியுடன் கூடிய பரம ஆச்சரியம் அடைந்தான்[6].(15ஆ,16அ) அப்போது முனிகணங்கள் அனைத்தும் ஒருவருக்கொருவர் இணக்கமாகப் பெரும் மகிழ்ச்சியுடன் அந்த இருளில் {அன்றைய இரவில், மிதிலையில்} சுகமாக வசித்தனர்.(16ஆ,17அ) மஹாதேஜஸ்வியான ராமன் அப்போது விஷ்வாமித்ரரை முன்னிட்டுக் கொண்டு, லக்ஷ்மணனுடன் சீராகச் சென்று பிதாவின் {தசரதனின்} பாதங்களைத் தீண்டினான்.(17ஆ,18அ) அந்த ராஜாவும் {தசரதனும்} தன் புத்திரர்களான ராகவர்களைக் கண்டதில் பெரும் மகிழ்ச்சியடைந்து, ஜனகனைப் பூஜித்து, பரமபிரீதியுடன் அங்கே {மிதிலையில்} வசித்திருந்தான்.(18ஆ,19அ) மஹாதேஜஸ்வியான ஜனகனும் யஜ்ஞ காரியங்களை தர்மத்திற்கு இணக்கமாகச் செய்து, மகள்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களையும் தொடங்கி வைத்து[7] அந்த ராத்திரியில் வசித்திருந்தான் {மார்பில் கைவைத்து உறங்கினான்}[8].(19ஆ,இ)
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பொதுவாகத் திருமணம் முடியும் வரையுமாவது மணமகன் தரப்பு விறைப்பாக இருப்பது வழக்கம். இங்கே தசரதன் அதற்கு நேர்மாறாகச் சொல்கிறான். திருமணம் முதலிய காரியங்களில் நீதிக்கு இணக்கமாக அவன் சொற்கள் இருப்பதால் ஜனகன் ஆச்சரியம் அடைகிறான்" என்றிருக்கிறது.
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "திருமண காரியங்கள் தடையில்லாமல் நடைபெறவும், புதுமணத் தம்பதிகள் இணக்கமான குடும்ப வாழ்வைப் பயிலவும் "அங்குரார்ப்பணாதி கிரியை" என்றழைக்கப்படும் சடங்குகளுடன் திருமணம் தொடங்கும்" என்றிருக்கிறது. எனவே, அங்குரார்ப்பணாதி கிரியைகளைத் தொடங்கி வைத்து என்று இங்கே பொருள் கொள்ள வேண்டும்.
[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் "இராமாயணத்தில் அடைமொழிகள்" என்ற தலைப்பில் அமைந்த இறுதி அடிக்குறிப்பில், "இராமாயணத்தில், மிகவும் சலிப்பூட்டுபவையாகவும், திரும்பத் திரும்பக் கூறப்படும் அலுப்பூட்டும் வாக்கியங்களாகவும் "அடைமொழிகள்" அமைந்து வரும். அப்போதெல்லாம் நாம் அவற்றைச் சொற்களஞ்சியப் பார்வையில் ஒட்டுமொத்தமாகவோ, மேலோட்டமாகவோ பார்க்கிறோம். ஆனால் இலக்கணவாதிகள், யாப்பிலக்கண அறிஞர்கள், அழகியல் வல்லுனர்கள் ஆகியோருக்கோ இது தலையைப் பிளக்கும் தலைவலியாகத் தெரியும். ஒரு கூற்றில் {வெளிப்பாட்டில் / சொல் பயன்பாட்டில்} ஒரே நேரத்தில் பலவகைச் சொற்போர்கள் நடந்து கொண்டிருக்கும். இப்போதும் கூட {இந்த சர்க்கத்தில்} அது நடைபெறுகிறது. ஓர் உதாரணத்தை மேற்கோளாகக் காட்ட இங்கே 1:69:18ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். இராமனையும், லக்ஷ்மணனையும் குறிக்க "ராகவௌ {ராகவர்கள்}" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கத்திற்கு மாறாகவும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் இங்கே அந்தச் சொல் திடீரென வேறு பரிணாமத்தை ஏற்கிறது. அழகியல் வல்லுனர்கள், "சிவனின் வில்லை முறிக்கும் அளவுக்குத் துணிவு மிக்கவர்கள் என்பதாலும், துணிச்சல் மிக்கச் சாதனையால் வெற்றிக்கனியை அடைந்தவர்கள் என்பதாலும் அவர்கள் ரகுவம்சத்தின் அலங்காரமாகத் திகழும் இரு சகோதரர்களாவர்" என்று இந்த வாக்கியத்திற்குப் பொருள் கொள்கின்றனர். இரகுவம்சத்தின் முன்னோர்கள் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வரும் காரியத்திலும், இன்னும் பிற காரியங்களிலும் தேவர்களுக்கு ஆதரவானவர்களாக இருந்தனர். இந்தச் சிறுவன் ராமனோ தேவர்களுக்கு எதிராக சிவனின் வில்லை உடைக்கிறான். கீதா பிரஸ் வெளியிட்ட ஆங்கிலப்பதிப்பில் இந்தச் சொல்லுக்கு "ரகு குலத்தின் ஆபரணங்கள்" என்று பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆர்.சி.தத்தின் பதிப்பில், "துணிவுமிக்கச் சிறுவர்கள்" என்று பொருள் கொள்ளப்படுகிறது. அதிகப்படியான இந்த அடைமொழிகளைக் கண்டு பலர் குழப்பமும், சலிப்பும் அடைகிறார்கள். அயோத்தியா காண்டத்துடன் ஒப்பிடுகையில் ஆரண்ய காண்டத்தில் அடைமொழிகள் இன்னும் அதிகரிக்கிறது என்பதற்கான பட்டியல்களும் உண்டு. ஆரண்ய காண்டத்தில் சீதையானவள், ஜானகி என்றும், வைதேகி என்றும், மைதிலி என்றும் பல்வேறு வகைகளில் அழைக்கப்படுகிறாள். மாற்றுப் பெயருக்கும், அடைமொழிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்வதில் இந்தச் சர்க்கம் நிச்சயம் ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சும். ஆரண்ய காண்டத்தில் உள்ள சில அடைமொழிகள், இங்கே பாலகாண்டத்தின் இந்த சர்க்கங்கள் சிலவற்றில் வரும் செய்தியுடன் தொடர்புடையன. இருப்பினும், இந்த அடைமொழிகளோ, அவற்றின் மறைகுறிப்புகளோ அதனதன் உண்மையான பொருளில் எங்கும் சுட்டப்படுவதில்லை என்பதால் {சலிப்பூட்டுவதில்} முடிவிலியாக இவை தொடர்ந்து கொண்டிருக்கும். சம்ஸ்கிருதம் அறியாதவர்களாலும், ஏன் இந்திய மொழிகள் வேறெதனையும் தாய்மொழியாகக் கொண்டவர்களாலும் கூட, இந்த அடைமொழிகள் அத்தனையையும் பழங்கால உரைகளின் துணையின்றி முழுமையாக மொழிபெயர்த்து அறிந்து கொள்ள முடியாது. அந்த உரைகளிலும் கூட, சில அடைமொழிகள் விடுபட்டிருக்கும், முக்கியமான அடைமொழிகளைவிட "ராமன் கடவுளாவான்", "ராமன் மனிதனாவான்", "ராமன் தர்மத்தின் வடிவமாவான்", "ராமனே சிவன்" என்ற உரையாசிரியர்களின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும். திரட்ட முடிந்த வரையில் அந்த அடைமொழிகளின் பொருள்களை நாம் விளக்க முயல்கிறோம். எனவே, சம்ஸ்கிருத இலக்கண அறிஞர்களும், அழகியல் வல்லுனர்களும் மொத்தமாக இல்லாமல் போகும் முன் ராமாயணத்தில் உள்ள இந்த அடைமொழிகளின் பொருட்பூட்டவிழ்ப்பது மிக அவசியம் என்றே பணிவுடன் நாங்கள் உணர்கிறோம்" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் உள்ள அடிக்குறிப்புகள் அனைத்தும் இங்கே வழங்கப்படுவதில்லை. மிக முக்கியமெனக் கருதுவனவற்றையே இங்கே தந்து வருகிறேன். இருப்பினும் மேற்கண்டது போல அடைமொழிகள் வரும் இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழங்க முயல்வேன்.
பாலகாண்டம் சர்க்கம் – 69ல் உள்ள சுலோகங்கள் : 19
Previous | | Sanskrit | | English | | Next |