Shabala, the Kamadhenu | Bala-Kanda-Sarga-52 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மன்னர் விஷ்வாமித்ரரின் விருந்தோம்பலுக்குரிய பொருட்களைப் படைக்குமாறு காமதேனுவுக்கு ஆணையிட்ட வசிஷ்டர்...
{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "மஹாபலம்வாய்ந்தவரும், வீரரும், ஜபம் செய்பவர்களில் சிறந்தவருமான விஷ்வாமித்ரர் வசிஷ்டரைக் கண்டு, பரமபிரீதியடைந்து, பணிவுடன் அவரை வணங்கினார்.(1) மஹாத்மாவான வசிஷ்டர், "ஸ்வாகதம் {நல்வரவு}" என்று சொன்னார். பகவான் வசிஷ்டர் அவரை {விஷ்வாமித்ரரை} ஆசனத்தில் அமரச் சொன்னார்.(2) அந்த முனிவரர் {வசிஷ்டர்}, துணிவுமிக்கவரும், அமர்ந்திருப்பவருமான விஷ்வாமித்ரருக்கு முறைப்படி கனிகளையும், கிழங்குகளையும் கொடுத்தார்.(3) ராஜசத்தமரும் {எவராலும் விஞ்சப்பட முடியாத மன்னரும்}, மஹாதேஜஸ்வியுமான விஷ்வாமித்ரர், வசிஷ்டரின் பூஜையை ஏற்றுக் கொண்டு தவம், அக்னிஹோத்ரம், சீடர்கள், வனஸ்பதி கணங்கள் {வனத்தில் இருக்கும் மரஞ்செடி கொடிகள்} குறித்து குசலம் {நலம்} விசாரித்ததும், பதிலுக்கு வசிஷ்டரும் சுற்றிலும் உள்ள அனைத்தின் குசலத்தையும் அந்த ராஜசத்தமரிடம் {விஷ்வாமித்ரரிடம்} விசாரித்தார்.(4,5)
ஜபசிரேஷ்டரும், மஹாதபஸ்வியும், பிரம்மசுதருமான {பிரம்மனின் மகனுமான} வசிஷ்டர் சுகமாக அமர்ந்திருக்கும் ராஜாவான விஷ்வாமித்ரரிடம்,(6) "ராஜாவே, நீ நலமாக இருக்கிறாய் என நம்புகிறேன். ராஜாவே, தார்மீகனாகவும், ராஜமார்க்கத்தின்[1] துணைகொண்டு பிரஜா தர்மத்தை {குடிமக்களுக்கான நீதியை} நிறைவேற்றுபவனாகவும் நீ பரிபாலிக்கிறாய் {ஆட்சி செய்கிறாய்} என நம்புகிறேன்.(7) உனது பணியாட்கள் நல்ல முறையில் கவனிக்கப்படுகிறார்கள் என நம்புகிறேன். உன் சாசனத்தை அவர்கள் {அந்தப் பணியாட்கள்} பின்பற்றுகிறார்கள் என நம்புகிறேன். ருபுசூதனா {பகைவரை அழிப்பவனே}, உன்னுடைய பகைவர்கள் அனைவரும் நிச்சயம் வெல்லப்பட்டார்கள் என நம்புகிறேன்.(8) பரந்தபா {பகைவரை வாட்டுபவனே}, அநகா {குறையற்றவனே}, நரவியாகரா {மனிதர்களில் புலியே}, பலம் {படைகள்}, கோஷம் {கருவூலம்} ஆகியவையும், மித்ரர்கள் {நண்பர்கள்}, புத்திரர்கள் {மகன்கள்}, பௌத்திரர்கள் {பேரர்கள்} ஆகியோரும் நலமென நம்புகிறேன்" {என்று கேட்டார் வசிஷ்டர்}.(9)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆட்சித்திறனின் நான்கு முதன்மையான கூறுகள் பின்வருவனவாகும், "ந்யாயேந ஆர்ஜநம் அர்தஸ்ய வர்தநம் பாலநம் ததா | ஸத்பாத்ரே ப்ரதிபத்தி꞉ ச ராஜவ்ருத்தம் சதுர்விதம் ||" என்றிருக்கின்றன. அதாவது, "செல்வம் நேர்மையாக ஈட்டப்பட வேண்டும். அது நீதியுடன் பெருக்கப்பட வேண்டும். நீதியுடன் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் நலனுக்காகவோ, அறச்செயல்களுக்காகவோ, தனிப்பட்ட நல்ல மனிதர்களுக்காகவோ அது வழங்கப்பட வேண்டும்" என்றிருக்கிறது.
மஹாதேஜஸ்வியான ராஜா விஷ்வாமித்ரர் வசிஷ்டரை வணங்கி, "அனைத்தும் நலம்" என மறுமொழி கூறினார்.(10) அந்த தர்மிஷ்டர்கள் இருவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக நீண்ட காலம் கதைகள் பேசிக் கொண்டு, பரஸ்பரம் இன்புற்றிருந்தனர்.(11)
இரகுநந்தனா {ராமா}, அதன் முடிவில் பகவான் வசிஷ்டர் புன்னகைத்தவரே விஷ்வாமித்ரரிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னார்:(12) "மஹாபலம்வாய்ந்தவனே, இந்தப் படைகளுக்கும், ஒப்பற்றவனான உனக்கும் தகுந்த விருந்தோம்பலைச் செய்ய நான் விரும்புகிறேன். அதை நீ ஏற்றுக் கொள்வாயாக.(13) என்னால் செய்யப்படும் நற்பணிகளை நீ ஏற்பாயாக. ராஜாவே, முனைப்புடன் பூஜிக்கப்படத்தகுந்தவனான நீ அதிதிசிரேஷ்டனாவாய் {விருந்தினர்களில் சிறந்தவனாவாய்}"[2] {என்றார் வசிஷ்டர்}.(14)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மன்னர் விஷ்வாமித்ரர், "காட்டின் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு வாழும் இந்த முனிவர் {வசிஷ்டர்} அரசனுக்கு விருந்தையோ, குதிரைகள், யானைகளுடன் கூடிய படைகளுக்கு உணவையோ அளிப்பதற்கு வாய்ப்பே இல்லை" என்று கருதுகிறார். அதற்கு அந்த முனிவர், "முனைப்புடன்" ஒரு ராஜா மதிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் விஷ்வாமித்ரரோ ஓர் ஏழைத்துறவியிடம் இருந்து ஒரு ராஜவிருந்தையோ, படைகளுக்கான விருந்தையோ தயக்கத்துடன் தவிர்க்கிறார்" என்றிருக்கிறது.
வசிஷ்டரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மஹாமதியாளரான ராஜா விஷ்வாமித்ரர், "உம்மால் பூஜாவாக்கியம் {மதிப்புமிக்கச் சொற்கள்} சொல்லப்பட்டது {இதுவே போதும், வேறேதும் வேண்டியதில்லை}.(15) பகவானே, உமது ஆசிரமத்தில் இருந்து பெறப்பட்ட கனிகள், கிழங்குகள், பாத்தியம் {பாதங்களைக் கழுவிக் கொள்வதற்கான நீர்}, ஆசமநீயம் {வாயைக் கழுவிக் கொள்வதற்கான நீர்}, பகவத் தரிசனம் {தேவரைப் போன்ற உமது தரிசனம்} ஆகியன பூஜிக்கத்தகுந்தன. அனைத்தையும் அறிந்தவரே, நான் விடைபெறுகிறேன். உம்மை வணங்குகிறேன்[3]. எப்போதும் {எங்களை} நண்பர்களாகக் காண்பீராக" என்றார்.(16,17)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "{உம்மை வணங்குகிறேன்} "நமஸ் தே அஸ்து" என்ற மதிப்புமிக்க வணக்கம் {இந்த சர்க்கத்தின்} இறுதிக்குறிப்பில் [5ம் அடிக்குறிப்பில்] விவாதிக்கப்படுகிறது.
ராஜா இவ்வாறு பேசினாலும், தர்மாத்மாவும், உதாரதீயுமான {கருணையால் மனம் நிறைந்தவருமான} வசிஷ்டர், மீண்டும் மீண்டும் விருந்தளிக்க முன்வந்தார்.(18) அப்போது காதேயர் {காதியின் மகனான விஷ்வாமித்ரர்}, வசிஷ்டரிடம், "முனிசத்தமரே {முனிவர்களில் உயர்ந்தவரே}, ஏற்றுக் கொள்கிறேன். பகவனான நீர் விரும்பியவாறே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினார்.(19)
அவர் இவ்வாறு சொன்னதும், ஜபவரரும் {ஜபம் செய்பவர்களில் சிறந்தவரும்}, கலக்கம் விலகியவருமான வசிஷ்டர் மகிழ்ச்சியடைந்து கல்மாஷியை {காமதேனுவான சபளையை} அழைத்தார்:(20) "சபளையே {ஆச்சரியகரமான நிறம் கொண்டவளே}, சீக்கிரமாக வா, நீ வருவாயாக. என் சொற்களைக் கேட்பாயாக. மிகச்சிறப்பானதும், மேலானதுமான போஜனத்தை இந்த ராஜரிஷிக்கும், இந்தப் படைகளுக்கும் விருந்தாக அளிக்க நான் ஆயத்தமாகிறேன். அதை எனக்காக நீ ஏற்பாடு செய்வாயாக.(21) திவ்யமான காமதேனுவே, விருப்பத்துடன் சுவைக்கும் ஒவ்வொருவருக்கும் ஆறு சுவைகளில் {ருசிகளில்} ஒவ்வொன்றையும் என் பொருட்டு ஏராளமாகப் பொழிவாயாக[4].(22) சபளையே {சபலையே}, ரசம் {சுவைக்கதக்கன}, அன்னம் {உண்ணத்தக்கன}, பானம் {பருகத்தக்கன}, லேஹியம் {நாவால் நனைக்க [அ] நக்கத் தக்க தேன் முதலியன}, சியேணம் {உறிஞ்சத்தக்க தயிர் முதலியன} ஆகிய அனைத்துவகை உணவுகளையும் குவியல் குவியலாக விரைந்து உண்டாக்குவாயாக" {என்றார் வசிஷடர்}"[5].(23)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்திய உணவு முறையில் ஆறு சுவைகள் என்பன, 1) கார்ப்பு, 2) துவர்ப்பு, 3) இனிப்பு, 4) புளிப்பு, 5) கசப்பு, 6) உவர்ப்பு ஆகியனவாகும்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், "அனதுபற்றி ஆறுவகை ரஸங்களில் எவனுக்கு எது இஷ்டமோ, அதையெல்லாம் அவர்களுக்கு நீ என்னைப் பற்றி அளிக்க வேண்டும்" என்றிருக்கிறது.
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் [மேலே 3ம் அடிக்குறிப்பில் சுட்டப்பட்ட படி] இந்த சர்க்கத்தின் இறுதிக்குறிப்பில், "நமஸ்தே என்ற மதிப்புக்குரிய வணக்கமொழி "நம்" என்ற வேர்ச்சொல்லில் இருந்து "உயர்நிலைக்கு முன்" என்ற பொருள் கொண்டுவரும் சொல்லாகும், பொதுவாக "சற்றே பணிவுடன் வணங்குவது" என்று அது மொழிபெயர்க்கப்படும். நமஸ்காரம் என்பது அவ்வாறு செயல்படும் செயலைக் குறிப்பதாகும். நமஹ என்ற இந்தச் சொல் "நான் அல்ல", "நீயே" என்ற பொருளைக் கொண்டதாகும். "நான், ’நான்’ என்ற அகங்காரத்தை இழந்து உயர்ந்த ஞானம் கொண்ட உன் முன் பணிகிறேன். நான் செய்வது ஏதுமில்லை அனைத்தும் நீ செய்வதே என்பது என்மேல் நிலைத்திருக்கட்டும். நான் உன்னை விடச் சிறியவன்" என்பதே நமஹ என்பதன் உட்பொருளாகும். குரலுடன் சொன்னால் நமஹ என்ற சொல்லும், செயலுடன் சொன்னால் அஞ்சலி {கைக்கூப்பி வணங்குதல்} என்ற செயலும் மேற்சொன்ன பொருளுக்கு உதாரணங்களாகும்" என்றும் இன்னும் அதிகமும் இருக்கின்றன. மேலதிகம் அறிய விரும்புவோர் https://valmikiramayan.net/utf8/baala/sarga52/bala_52_frame.htm என்ற சுட்டிக்குச் செல்லவும்.
பாலகாண்டம் சர்க்கம் – 52ல் உள்ள சுலோகங்கள் : 23
Previous | | Sanskrit | | English | | Next |