Ahalya | Bala-Kanda-Sarga-48 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அகலியையின் கதை; அஹல்யையைக் கண்டு மயங்கிய இந்திரன்; இந்திரனையும் அகலிகையையும் சபித்த கௌதமர்...
அவர்கள் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டதும் குசலம் விசாரித்த {மன்னன்} சுமதி, இறுதியில் அந்த மஹாமுனியிடம் {விசுவாமித்ரரிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(1) "முனிவரே, நீர் மங்கலமாக இருப்பீராக. இந்தக் குமாரர்கள், {விஷ்ணு} தேவனின் துல்லிய பராக்கிரமத்தையும், கஜசிம்ம கதியையும் {யானையையும், சிங்கத்தையும் போன்ற நடையைக்} கொண்டவர்களாகவும், வீரர்களாகவும், புலிக்கும், காளைக்கும் ஒப்பானவர்களாகவும்,(2) பத்மபத்ரவிசாலாக்ஷம் {தாமரை இதழ்களைப் போன்ற நீள்விழிகளைக்} கொண்டவர்களாகவும், கட்கம் {வாள்}, தூணி {அம்பறாத்தூணி}, தனு {வில்} ஆகியவற்றைத் தரித்தவர்களாகவும், அஷ்வினிகளைப் போன்ற ரூபத்தைக் கொண்டவர்களாகவும், இளமையின் தொடக்கத்தில் இருப்பவர்களாகவும்,(3) தேவலோகத்தில் இருந்து தன் விருப்பம்போல் பூமிக்கு வந்த அமரர்களைப் போலவும் தெரிகிறார்கள். இவர்கள் இங்கே பாதங்களைப் பதித்தது எவ்வாறு?[1] அதன் காரணமென்ன? இவர்கள் இங்கே வந்தது ஏன்? இவர்கள் யாருடையவர்கள்?(4) இந்த நரசிரேஷ்டர்கள் இருவரும் பிரமாணத்திலும் {உடல் அமைப்பிலும்}, இங்கிதத்திலும் {முகத்தோற்றத்திலும்}, சேஷ்டைகளிலும் {செய்யும் செயல்களிலும்} பரஸ்பரம் {ஒருவரையொருவர்} ஒத்திருக்கின்றனர். சந்திரனாலும், சூரியனாலும் அலங்கரிக்கப்பட்ட அம்பரத்தை {ஆகாயத்தைப்} போல இந்த தேசத்திற்கு இவர்கள் புதுப் பொலிவூட்டுகிறார்கள்.(5) சிறந்த ஆயுதங்களைத் தரித்திருக்கும் இந்த வீரர்களுக்கு, இந்தக் கடினமான பாதையைக் கடப்பதால் உண்டாகும் பயனென்ன? உண்மையில் இவற்றைக் கேட்க நான் விரும்புகிறேன்" {என்று கேட்டான் மன்னன் சுமதி}.(6)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தந்தையைப் போன்ற எந்த மனிதனும் இளைஞர்கள் நெடுந்தொலைவு நடப்பதை ஏற்கமாட்டார்கள். முனிவர்களோ நடந்து கொண்டே இருப்பவர்கள். தசரதன் விஷ்வாமித்ரருடன் ராமனை அனுப்ப மறுத்த காரணங்களில் இதுவும் ஒன்றாகும். தந்தையைப் போன்றவனான மன்னன் சுமதியும் இதையே இங்கே விஷ்வாமித்ரரிடம் கேட்கிறான்" என்றும் இன்னும் அதிகமும் இருக்கிறது.
அவனது {சுமதியின்} இந்த வசனத்தைக் கேட்டதும் அவர் {விசுவாமித்ரர்} சித்தாசிரமவாசத்தையும், ராக்ஷச வதத்தையும், நடந்தவை அனைத்தையும் சொன்னார். அந்த ராஜா {சுமதி}, விஷ்வாமித்ரர் சொன்னதைக் கேட்டு பரம ஆச்சரியமடைந்தான்.(7) அவன், பரம அதிதிகளை {விருந்தினர்களை} அடைந்த பிராப்தத்தைப் பெற்றவனாக மகிழ்ந்து, கௌரவிக்கப்படத் தகுந்தவர்களும், மஹாபலவான்களுமான அந்த தசரதபுத்திரர்கள் இருவரையும் விதிப்படி பூஜித்தான்.(8) சுமதியால் பெரிதும் கௌரவிக்கப்பட்ட ராகவர்கள் இருவரும் ஓரிரவு அங்கே வசித்து மிதிலைக்குப் புறப்பட்டனர்.(9)
முனிவர்கள் அனைவரும் ஜனகனின் மங்கல நகரைக் கண்டதும், "ஸாது, ஸாது {நல்லது, நன்று}" என்று புகழ்ந்து அந்த மிதிலையைப் பூஜித்தனர்[2].(10) இராகவன் மிதிலையின் அருகில் இருந்த வனத்தில் புராதனமானதும், ஜனங்களற்றதும், ரம்மியமானதுமான ஓர் ஆசிரமத்தைக் கண்டு, அந்த முனிபுங்கவரிடம் {விசுவாமித்ரரிடம்}:(11) "பகவானே, ஆசிரமம் போன்று தெரிவதும், முனிவர்களால் விலக்கபட்டதுமான இஃது என்ன? பூர்வத்தில் இந்த ஆசிரமம் யாருடையது? இவைற்றைக் கேட்க விரும்புகிறோம்" {என்று கேட்டான்}.(12)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கோட்டை அமைப்புகளுக்காக அயோத்தி நகரம் பார்வையாளர்களால் போற்றப்பட்டாலும், வழிபடப்படும் அளவுக்கு {அந்தக் காலத்தில்} அதற்கு அதிர்ஷ்டம் இல்லை. ஆனால், மிதிலையோ கோவில் நகரம் என்றும், தங்குதடையில்லாமல் எப்போதும் வேத சடங்குகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் இடம் என்றும் {அப்போதே} புகழப்பட்டும் நகரமாக இருந்திருக்கிறது. சிவனின் வில்லைக் கொண்டிருப்பதால் பழங்காலத்தில் இருந்து வில் வழிபாடு நடைபெறும் அருளப்பட்ட இடமாகவும் அஃது இருந்திருக்கிறது" என்றிருக்கிறது.
வாக்கியவிசாரதரும் {வாக்கியத்தில் நிபுணரும்}, மஹாதேஜஸ்வியும், மஹாமுனியுமான விஷ்வாமித்ரர், ராகவனால் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு மறுமொழியாக:(13) "இராகவா, மகிழ்ச்சியடைகிறேன்[3]. ஒரு மஹாத்மாவால் கோபத்துடன் சபிக்கப்பட்ட இந்த ஆசிரமபதம் யாருடையது என்பதை உள்ளபடியே உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(14) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, திவ்ய ஒளி படைத்ததும், ஸுரர்களால் {தேவர்களாலும்} பெரிதும் பூஜிக்கப்பட்டதுமான இந்த ஆசிரமம் ஒரு காலத்தில் மஹாத்மாவான கௌதமருடையதாக இருந்தது.(15) பெரும்புகழ் பெற்றவனே, ராஜபுத்திரா, ஒரு காலத்தில் அவர் {கௌதமர்} அஹல்யை சகிதராக {அகலிகையுடன்} அநேக வருடங்கள் இங்கே தவத்தில் உறுதியாக அமர்ந்திருந்தார்.(16)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமனின் அருளால் அகலிகை சாபத்தில் இருந்து விடுபடும் நேரம் வாய்த்ததற்காக விசுவாமித்ரர் இங்கே மகிழ்ச்சியடைகிறார்" என்றிருக்கிறது.
சசிபதியான {சசிதேவியின் கணவனான} சஹஸ்ராக்ஷன் {ஆயிரங்கண் இந்திரன்}, அவர் {கௌதமர்} இல்லாத சமயத்தை அறிந்து, முனி வேஷந்தரித்து {கௌதமரின் வடிவை ஏற்று} அஹல்யையிடம் இதைச் சொன்னான்:(17) "தகுந்தவளே, ஆசையாவல் கொண்டவர்கள் ருது காலத்திற்காகக் காத்திருக்க மாட்டார்கள்[4]. நல்ல இடையைக் கொண்டவளே, நான் உன்னுடன் சங்கமிக்க இச்சிக்கிறேன்" {என்றான் இந்திரன்}.(18)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "உன்னிடம் நான் சந்ததியைப் பெற விரும்பவில்லை. எனவே, உரிய வேளை இல்லை என்ற அச்சம் வேண்டாம் என்று இந்திரன் சொல்கிறான்" என்றிருக்கிறது
இரகுநந்தனா, துர்மேதையும், முனிவேஷந்தரித்தவனுமான சஹஸ்ராக்ஷனை {இந்திரனை} அறிந்தும் அவள் {அகல்யை} தேவராஜனின் குதூஹலத்திற்கு மனம் இசைந்தாள்[5].(19) அப்போது அந்தராத்மாவில் நிறைவடைந்தவளாக அவள் {அகலிகை} ஸுரசிரேஷ்டனிடம் {தேவர்களில் சிறந்தவனிடம்} சொன்னாள்: "ஸுரசிரேஷ்டரே, நான் நிறைவடைந்தேன். பிரபுவே, இங்கிருந்து சீக்கிரம் செல்வீராக. தேவேசரே, உம்மையும், என்னையும் எப்போதும் கௌதமரிடம் இருந்து பாதுகாப்பீராக" {என்றாள் அகலிகை}.(20,21அ)
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "என் கணவர் இது போல் கேட்கவும் மாட்டார், வேளைகளை மீறவும் மாட்டார். எனவே இங்கே வந்திருப்பவன் இந்திரனையன்றி வேறில்ல. இந்திரன் நீண்ட காலமாக என்னை விரும்புகிறான் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தேவர்களின் மன்னன் இத்தகைய விருப்பத்தை வெளிப்படுத்தும்போது அதை மறுத்தல் தகாது. எனவே இவன் என்னை அடையட்டும் என்று அவள் நினைத்தாள்" என்றிருக்கிறது.
இந்திரன் சிரித்துக் கொண்டே அஹல்யையிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்: "நல்ல இடையைக் கொண்டவளே, நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் வந்தவாறே செல்வேன்" என்றான்.(21ஆ,22அ)
இராமா, இவ்வாறு அவளுடன் சங்கமித்த அவன், கௌதமரை எண்ணி பதறியபடியே அந்தக் குடிலில் இருந்து விரைந்து வெளியேறியபோது, மஹாமுனிவரான கௌதமர் பிரவேசிப்பதை அவன் கண்டான்.(22ஆ,23), தேவ தானவர்களாலும் தீண்டப்பட முடியாதவரும், தபோபலம் நிறைந்தவரும், தீர்த்தங்களால் தூய்மையானவரும், அநலம் {நெருப்பைப்} போலப் பிரகாசிப்பவருமான அவர்,(24) கையில் சமித்துகளுடனும் {விறகுளுடனும்}, நல்ல குசப்புற்களுடனும் {தர்ப்பைகளுடனும்} இருப்பதைக் கண்டு ஸுரபதி {இந்திரன்} அச்சத்தால் முகம் சிவந்தான்.(25)
நல்லொழுக்கம் பொருந்திய அந்த முனிவர் {கௌதமர்}, முனிவேஷம் தரித்தவனும், துர்நடத்தை கொண்டவனுமான சஹஸ்ராக்ஷனை {இந்திரனைக்} கண்டு சீற்றத்துடன் இந்த வசனத்தைச் சொன்னார்:(26) "துர்மதி கொண்டவனே, என் ரூபத்தை ஏற்று இந்த ஏற்பில்லா காரியத்தைச் செய்ததால், நீ கனிகளற்றவனாவாயாக[6]" {என்றார் கௌதமர்}.(27)
[6] தாதாசாரியரின் பதிப்பில், "நீ உன்மத்தனாகிச் சிறிதும் அறத்தினெறியை யுணராமல் என்னுடைய வேடம்பூண்டு நல்லறிவாளர் செயற்கரிய இத்தீச்செயலை நீ செய்தமையால் காமத்தைப் பெருக்குகைக்குக் காரணமாகிய அண்டங்களிரண்டும் அற்று அலி போலாகக் கடவையென்று சாபமிட, உடனே இந்திரனுடைய அண்டங்களற்று விழுந்தன" என்றிருக்கிறது.
அந்த மஹாத்மா இவ்வாறு சீற்றத்துடன் சொன்ன உடனேயே சஹஸ்ராக்ஷனின் விருஷணங்கள் {விரைகள்} பூமியில் விழுந்தன.(28) சக்ரனை {இந்திரனை} இவ்வாறு சபித்துவிட்டு, தன் பாரியையையும் {மனைவியையும்} சபிக்கும் வகையில், "பல்லாயிரம் வருடங்கள் நீ இங்கேயே இருப்பாயாக.(29) உணவில்லாமல் வாயுபக்ஷணம் செய்து {காற்றை உண்டு}, பஸ்மத்தில் {சம்பலில் / புழுதியில்} புரண்டுருண்டு, பழியுணர்ந்து வருந்தி, உயிரினங்கள் எதனுக்கும் புலப்படாதவளாக இந்த ஆசிரமத்திலேயே வாழ்ந்திருப்பாயாக.(30) தசரதாத்மஜனும் {தசரதனின் மகனும்}, தடுக்கப்பட முடியாதவனுமான ராமன், இந்த கோர வனத்திற்குள் வரும்போது நீ தூய்மையடைவாய்.(31) துர்விருத்தம் {தீய நடத்தை} கொண்டவளே, அவனை {ராமனை} வரவேற்று, லோபத்தையும் {பேராசையையும்}, மோஹத்தையும் {மயக்கத்தையும்} கைவிட்டு மகிழ்ச்சி அடைந்து நீ என் அருகில் உன்னுடலைத் தரிப்பாய்" {என்றார் கௌதமர்}[7].(32)
[7] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "எப்பொழுது, யாவராலும் எதிரிடப்போகாத பராக்ரமம் பொருந்தியவனும், தசரதசக்ரவர்த்தியின் புதல்வனுமாகிய ராமன் பாழடைந்து பயங்கரமாயிருக்கின்ற இவ்வாச்ரமத்துக்கு வருவானோ, அப்பொழுது அவனுடைய பாதாரவிந்தத்தின் பராகம் {தூசி} பட்டுப் பரிசுத்தையாகி லோபமோஹங்களை விட்டு அவனை அதிதி ஸத்காரங் கொண்டு பூஜித்து என்னருகில் ஸந்தோஷத்துடன் மறுபடியும் உனது உருவம் பெறுவாய்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அஹல்யை புத்திபூர்வமாக வியபிசாரம் செய்ததற்காகக் கௌதமமாமுநிவர் சாபரூபமாக ப்ராயச்சித்தம் விதித்தனர். ஆகையால் அஹல்யையைக் கல்லாகச் சபித்தரென்று சொல்லலாகாது. ஆகையாலேயே "உனது உருவம் பெறுவாய்" என்கிறவிடத்தில் முன்போல் எல்லோருக்கும் புலப்படும்படியான உன்னுடைய தேஹத்தைப் பெறுவாயென்று பொருள் கொள்ள வேணும். ஆனாலும் பாத்மபுராணத்தில் அஹல்யைக்குச் சிலாரூபஞ் சொல்லப்பட்டது இது கல்பாந்தரவ்ருத்தாந்தத்தை அநுஸரித்துச் சொல்லப்பட்டதென்று சிலர். மற்றுஞ்ஞிலர் பாத்மபுராணத்தை அநுஸரித்து அஹல்யை சிலையாகச் சபிக்கப்பட்டாளென்று கொண்டு, அதற்கநுகுணமாக "உனது உருவம் பெறுவாய்" என்கிறவிடத்தில் நீ சிலாரூபத்தை விட்டு உனக்கு அஸாதராணமாயுள்ள தேஹத்தைப் பெறுவாயென்று கருத்து கூறுகின்றனர்" என்றிருக்கிறது.
மஹாதேஜஸ்வியும், மஹாதபஸ்வியுமான கௌதமர், அந்த துஷ்டசாரிணியிடம் இவ்வாறு சொல்லி இந்த ஆசிரமத்தை விட்டகன்று சித்தர்களாலும், சாரணர்களாலும் துதிக்கப்படுபவராக ரம்மியமான இமய சிகரத்தில் தவம் பயின்று வருகிறார்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(33)
பாலகாண்டம் சர்க்கம் – 48ல் உள்ள சுலோகங்கள் : 33
Previous | | Sanskrit | | English | | Next |