Curse Redemption | Bala-Kanda-Sarga-49 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இந்திரனின் வீரியத்தை மீட்டெடுத்த தேவர்கள்; அகலிகையை சாபத்தில் இருந்து விடுவித்த ராமன்; தன் மனைவியான அகலிகையை ஏற்றுக் கொள்ள வந்த கௌதமர்...
{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "கனியற்றவனான சக்ரன் {இந்திரன்}, பீதியடைந்த கண்களுடன் அக்னியை முன்னிட்டுக் கொண்டு தேவர்களிடமும், சித்தர்கள், கந்தர்வர்கள், சாரணர்களிடமும் பேசினான்:(1) "மஹாத்மாவான கௌதமரின் குரோதத்தைத் தூண்டி அவரது தவத்திற்கு இடையூறு விளைவித்ததால் உண்மையால் என்னால் ஸுர காரியம் {தேவ காரியம்} ஒன்று நிறைவேறியது[1].(2) அவரது குரோதத்தால் நான் கனியற்றவனானேன். அவளும் {அகலிகையும்} கடுமையாகச் சபிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டாள். அவரது தவம் என்னால் கெடுக்கப்பட்டது.(3) எனவே, ரிஷிசங்கத்தாருடனும், சாரணர்களுடனும் கூடிய ஸுரவரர்கள் {சிறந்த தேவர்கள்} அனைவருக்கும் ஸுர காரியத்தைச் செய்த எனக்குக் கனிகள் கிடைக்கச் செய்வதே தகும்" {என்றான் இந்திரன்}.(4)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்திரன் என்பது ஒரு குறிப்பிட தகுதியை அடைவதால் சில மஹாத்மாக்களுக்கு ஒதுக்கப்படும் பதவியாகும். பருவ காலங்களையும், மழை, நிலநடுக்கம் முதலிய இயற்கையின் ஒவ்வொரு இயல்பையும் பராமரிக்கும் தலைமை அதிகாரியின் நிலை அது. வேள்விகள் நடைபெறும்போது அந்தச் சடங்கில் தங்களுக்கு அவிர்ப்பாகம் கிடைக்கும் என்று தேவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் தவம் செய்யும்போதோ அந்தப் பதவியில் இருப்பவனுக்குத் தன் பதவி பறிபோகும் நிலை ஏற்படும். இதனால் இந்திரன் அப்சரஸ்களை அனுப்புவது, துன்பங்களைத் தருவது எனத் தவம் செய்வோருக்கு இடையூறு விளைவிப்பான். இங்கே கௌதமர் இந்திரனின் நிலையை அடைய தவம் செய்யவில்லை. இருப்பினும் இந்திரனே அவ்வாறு நினைத்துக் கொள்கிறான்" என்றிருக்கிறது.
அக்னி முதலிய தேவர்கள், சதகிரதம் {நூறு வேள்விகளைச்} செய்தவன் {இந்திரன்} சொன்னதைக் கேட்டு, மருத் கணங்கள் அனைவருடன் சேர்ந்து பித்ரு தேவர்களிடம்[2] சென்று பேசினர்:(5) "இந்த மேஷம் {செம்மறியாடு} விருஷணங்களுடன் {விரைகளுடன்} இருக்கிறது, சக்ரனோ விருஷணங்களற்றவனாக இருக்கிறான். மேஷத்தின் விருஷணங்களைக் கொய்து அவற்றைச் சக்ரனுக்குக் கொடுப்பீராக.(6) கனிகளற்றதாகச் செய்யப்படும் இந்த மேஷம், நிச்சயம் உங்களுக்கு முழுமையான நிறைவை அளிக்கும். உங்கள் நிறைவுக்காக இதைச் செய்யும் எந்த மானவருக்கும் {மனிதருக்கும்} குறைவற்ற பலன்களை நீங்கள் அபரிமிதமாக அளிப்பீராக[3]" {என்றான் அக்னி}.(7)
[2] பி.எஸ்.சுப்பிரமண்ய சாஸ்திரி அவர்களின் "வடமொழி நூல்வரலாறு" என்ற நூலில், "தேவர்கள் 'பித்ருதேவர்கள்' என்றும், 'கர்மதேவர்கள்' என்றும், 'தேவர்கள்' என்றும் பலவகையாகப் பிரிக்கப்பட்டனர் என அறியப்படுகிறது. பித்ருதேவர்கள் வசுக்கள், ருத்திரர்கள், ஆதித்யர்கள் என மூவகைப்பட்டனர் என்பதும், அவர்கள் தேவர்களைக் காட்டிலும் குறைந்த பதவியில் இருந்தனர் என்பதும் அறியப்படுகிறது. ரிபுக்கள் ஸுதன்வ ரிஷியின் பிள்ளைகளாய்ப் பிறந்து தங்களின் செயல்களால் இந்திரனின் நட்பை அடைந்து தேவர்கள் ஆயினர்; அவர்கள் கர்மதேவர்களைச் சார்ந்தவர்கள். இந்திரன் முதலியோர் தேவர்கள் ஆவர். இவர்களின் தராதரம் தைத்ரீயோபநிஷத்தில் கூறியது காண்க" என்றிருக்கிறது.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பித்ருக்குள் என்பார் தேவர்களைப் போல மதிக்கப்படும் இறந்து போன மூதாதையரின் ஆன்மாக்களாவர். தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் நிறைவேற்படுத்த சிதைக்கப்படாத விலங்குகளை வேள்விகளில் அளிப்பதே வழக்கமாகும். இப்போதும் சில மனிதர்கள் சிதைக்கப்படாத செம்மறியாட்டையே பித்ருக்களுக்குக் காணிக்கையளித்தனர். பித்ருக்களும் அவற்றைப் புசிக்க இருந்த சமயத்தில், அக்னி முதலிய தேவர்கள் அந்தக் காணிக்கையில் ஒரு பகுதியை இந்திரனுக்காக விட்டுத் தரும்படி பித்ருக்களை வேண்டுகின்றனர். விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படத் தயங்கும் பித்ருக்களிடம், ஒரு வரம் போன்ற அறிவிப்பைச் சொல்லி அக்னிதேவன் விதிகளைத் தளர்த்துகிறான். "இனிமேல் பூமியில் உள்ள மானிடர்கள் விதை நீக்கப்பட்ட ஆட்டைக் காணிக்கை அளித்தாலும் பித்ருக்கள் முழுமையாக நிறைவடையலாம். பதிலுக்குப் பித்ருக்களும் அவர்களுக்கு {ஆட்டைக் காணிக்கையளித்த நபருக்கு} அபரிமிதமான பலன்களை அளிக்கலாம்" என்று விதி மாற்றப்படுகிறது" என்றிருக்கிறது.
கூடியிருந்த பித்ரு தேவர்கள் அக்னியின் வசனத்தைக் கேட்டு மேஷத்தின் விருஷணங்களைக் கொய்து சஹஸ்ராக்ஷனுக்கு அளித்தனர்.(8) காகுத்ஸ்தா {ராமா, காணிக்கையில் தங்கள் பங்கைப் பெற} வரும் பித்ரு தேவர்கள் அதுமுதல் கனிகளற்ற மேஷத்தையே புசிக்கின்றனர். அவற்றின் கனிகள் {இந்திரனைச்} சேர்கின்றன {பலன்கள் காணிக்கை அளிப்பவரைச் சேர்க்கின்றன}[4].(9) இராகவா, மஹாத்மாவான கௌதமரின் பிரபாவத்தாலும், தவத்தாலும் அது முதல் இந்திரன் மேஷவிருஷணன் ஆக்கப்பட்டான்.(10) எனவே மஹாதேஜஸ்வியே, புண்ணியக் கர்மங்களைச் செய்தவரின் {கௌதமரின்} ஆசிரமத்திற்குள் செல்வாயாக. பெரும் நற்பேறு பெற்றவளும், தேவரூபிணியுமான அந்த அஹல்யை {சாபத்திலிருந்து} ஈடேறட்டும்" {என்றார் விசுவாமித்ரர்}.(11)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "விரைகளுடன் கூடிய செம்மறியாடுகள் காணிக்கையளிக்கப்பட்டால் பித்ருக்கள் அவற்றின் விரைகளை நீக்கி மற்றவற்றைப் புசிக்கின்றனர். ஒரு வெள்ளாட்டைக் காணிக்கையளித்தாலும், செம்மறியாடாகக் கருதி அதனையும் அவர்கள் புசிக்கிறார்கள். எனவே, எவ்வாறு காணிக்கை அளித்தாலும் காணிக்கை அளிப்பவன் பலன்களால் அருளப்படுகிறான், இந்திரன் விரைகளைப் பெறுகிறான்" என்றிருக்கிறது.
இலக்ஷ்மணனுடன் கூடிய ராகவன், விஷ்வாமித்ரர் சொன்னதைக் கேட்டு, விஷ்வாமித்ரரை முன்னிட்டுக் கொண்டு அந்த ஆசிரமத்திற்குள் பிரவேசித்தான்.(12) பெரும் நற்பேறு பெற்றவளும், தவ ஒளியால் பிரகாசிப்பவளும், உலக உயிரினங்கள், ஸுரர்கள், அஸுரர்கள் அருகில் வந்தாலும் புலப்படாதவளும்,(13) தாதாவால் {படைப்பாளனால்} கவனமாக வடிவமைக்கப்பட்டவளும், திவ்யமாயமயியும் {தேவ மாயையால் உண்டாக்கப்பட்டவளைப் போன்றவளும்}, பனியாலும், மேகங்களாலும் மறைக்கப்பட்ட பூர்ணச் சந்திரனைப் போல ஒளிர்பவளும், நீரின் மத்தியில் காணப்பட முடியாத சூரிய ஒளியைப் போலப் பிரகாசிப்பவளும், புகையுடன் கூடிய தழல்களால் சூழப்பட்ட அங்கங்களைக் கொண்டவளும், தழல்விட்டெரியும் அக்னியைப் போன்ற நாவைப் பெற்றவளுமான அவளை {அகலிகையை} அவன் {ராமன்} கண்டான்.(14,15)
அவள் கௌதம வாக்கியத்தால் ராம தரிசனம் கிட்டும் வரை மூவுலகத்தினருக்கும் புலப்படாதவளாக இருந்தாள்.(16அ) சாபம் முடிவதற்கான நேரம் வந்ததும் அவளுக்கு அந்தத் தரிசனம் கிடைத்தது. அப்போது ராகவர்கள் இருவரும் மகிழ்ச்சியடைந்து {மதிப்புடன்} அவளது பாதங்களைத் தீண்டினர்.(16ஆ,17) அவளும் கௌதமர் சொன்னதை நினைவுகூர்ந்து, அவ்விருவரை வரவேற்று, சுயநினைவுடன் பாத்யம், அர்க்கியம் ஆகியவற்றை {பாதங்களையும், கைகளையும் கழுவிக் கொள்வதற்கான நீரை} அந்த விருந்தினர்களுக்குக் கொடுத்து, விதிப்படியான கர்மங்களைச் செய்தாள். காகுத்ஸ்தனும் அவற்றை ஏற்றுக் கொண்டான்[5].(18)
[5] இங்கு கம்பராமாயணத்தில் ஒரு பாடலைக் காண்போம்:இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோமைவண்ணத்து அரக்கிபோரில் மழை வண்ணத்து அண்ணலே உன்கைவண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்- கம்பராமாயணம் பாலகாண்டம் 475"இவ்வாறு நிகழந்த வண்ணம் இனி இந்த உலகத்து உயிர்களுக்கெல்லாம் துன்பம் நீங்குமேயன்றி மற்றொரு துன்பமும் நேரக்கூடுமோ? மேக வண்ணம் கொண்ட அண்ணலே, அங்கே மைவண்ண அரக்கியுடனான போரில் உன் கைவண்ணத்தை கண்டேன், இங்கே {அகலிகை துன்பம் நீங்கியதில்} உன் கால்வண்ணம் கண்டேன்" என்று ராமனிடம் விசுவாமித்ரர் சொல்வதாக அமைகிறது இந்தப் பாடல்
தேவதுந்துபிகள் முழங்கின, பூமாரி பொழிந்தது, கந்தர்வர்களும், அப்சரஸ்களும் உற்சவம் போல அதைப் பெரிதும் கொண்டாடினர்.(19) கௌதமருக்குத் தொண்டு செய்பவளும், தபோபலத்தால் சுத்த அங்கங்களைப் பெற்றவளுமான அஹல்யையிடம் தேவர்கள், "சாது, சாது {நன்று, நல்லது}" என்று சொல்லி அவளைப் பூஜித்தனர்.(20) மஹாதபஸ்வியும், மஹாதேஜஸ்வியுமான கௌதமரும், அஹல்யை சகிதராக மகிழ்ச்சியடைந்து ராமனை விதிப்படி பூஜித்துத் தமது தவத்தைத் தொடர்ந்தார்.(21) இராமனும், கௌதம மஹாமுனி வந்து விதிப்படி தனக்குப் பரம பூஜை செய்ததை ஏற்று அங்கிருந்து மிதிலைக்குச் சென்றான்[5].(22)
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அகலிகை ஒரு மனிதப் பெண்ணா, தேவியா, நிலப்பகுதியா என்பது தெளிவில்லை என்பதால் இந்தக் கதை பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. அஹல்யா என்பது உழப்படாத நிலம் என்று பொருள் முதல்வாதிகள் பொருள் கொள்கின்றனர். இதனால் ராமன் அந்நிலத்தை உழுவதற்கேற்ற நிலமாக மாற்றி அமைத்தான் என்ற பொருள் சேர்கிறது. இராமாயணத்தில் பூமியுடன் தொடர்புடைய இதுபோன்ற தொன்மக் கதைகள் பலவும் இருக்கின்றன" என்றும் இன்னும் அதிகமும் இருக்கின்றன.
பாலகாண்டம் சர்க்கம் – 49ல் உள்ள சுலோகங்கள் : 22
Previous | | Sanskrit | | English | | Next |