Ikshvaku's bloodline | Bala-Kanda-Sarga-70 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஜனகன் தன் தம்பி குசத்வஜனை அழைத்து வரத் தூதர்களை அனுப்பியது; இக்ஷ்வாகு வம்ச பட்டியலையும் அதன் மகிமையையும் சொன்ன வசிஷ்டர்...
வாக்கியங்களை அறிந்தவனான ஜனகன், பொழுது விடிந்ததும் மஹாரிஷிகளின் மூலம் யஜ்ஞ கர்மங்களை முடித்துவிட்டு, புரோஹிதரான சதாநந்தரிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(1) "{கரும்புச் சாற்றைப் போன்ற நீரைக் கொண்ட} இக்ஷுமதி நதியைப் பருகுபவனும், {அந்நதியின்} நீர் சூழ சூலங்களை நாட்டி வைத்திருப்பவனும்[1], அதிதார்மிகனும், மஹாதேஜஸ்வியும், குசத்வஜன் என்று புகழ்பெற்றவனுமான என் தம்பி {குசத்வஜன்}, புஷ்பக விமானத்தைப் போன்றதும், சுபமானதும், புண்ணியமானதுமான ஸாங்காஷ்யாபுரியில் {ஸாங்காஷ்ய நகரத்தில்} இருக்கிறான்[2].(2,3) நான் அவனைக் காண விரும்புகிறேன். அவனும் என்னுடன் சேர்ந்து இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்[3]" {என்றான் ஜனகன்}.(4)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே இருக்கும் மூலச் சொற்களான " வார்யா பலகபர்யந்தாம்" என்பதற்கு "ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் பெயர் பெற்ற திராட்சை {நீர்நெல்லித்} தோட்டத்தால் சூழப்பட்ட" என்றும் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது. இந்த சர்க்கத்தின் மூன்றாம் அடிக்குறிப்பில் வரும் நரசிம்மாசாரியர் பதிப்பின் உரையில் இது குறித்து மேலும் அறியலாம்.
[2] மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதி 3, 141ம் சுலோகத்தில், "தக்ஷகன், அஸ்வசேனன் ஆகிய நீங்கள் இக்ஷுமதி {நதியின்} கரையில் உள்ள குருக்ஷேத்திரத்தில் தங்கியிருப்பவர்கள்" என்று வருகிறது. இக்ஷுமதி என்றால் கரும்புச்சாறு என்று பொருள். சாங்காஷ்யபுரி இன்று உத்திரபிரதேசம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் சங்கிசபசந்தபுரம் என்று நம்பப்படுகிறது.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜனகன் செய்து வரும் யஜ்ஞத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் இந்தக் குசத்வஜனே கொடுத்தானென்பதால் அவனும் இந்த யஜ்ஞ பலனை அனுபவிக்க வேண்டியவனாவான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், "ஸாங்காச்யையென்று பட்டணம் உண்டல்லவா? அது மிகவும் அழகியது. அதைச் சுற்றிலும் அகழிபோல் சூழ்ந்திருக்கிற இக்ஷுமதியென்னும் ஆற்றின் ப்ரவாஹத்தில் பகைவர் அண்டவொண்ணாதபடி காக்கும்பொருட்டுச் சூலங்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. மேலும் அந்நதியைச் சுற்றி நீர் நெல்லி மரங்கள் நெருங்கி விளங்குகின்றன. ஸுக்ருதம் போல அப்பட்டணம் தன்னிடம் வசிப்பவர்களுக்கு ஸகல அபீஷ்டங்களையுங் கொடுத்துக் கொண்டு புஷ்பகவிமாநம் போல் ப்ரகாசிக்கின்றது. மஹாபராக்ரமசாலியும், மிகவும் தர்மஸ்வபாவனும் எனக்குப் பின் பிறந்தவனும் எங்கும் ப்ரஸித்துப் பெற்றவனுமாகிய குசத்வஜனென்பவன் அப்பட்டணத்தில் இக்ஷுமதியென்னும் அந்நதியின் ஜலத்தைப் பாநஞ்செய்து கொண்டு வஸித்திருக்கின்றனன். அவன் அப்பட்டணத்திலிருந்து கொண்டு எனது யாகத்திற்கு வேண்டிய ஸம்பாரங்களை அப்போதைக்கப்போது ஸித்தஞ்செய்து கொடுத்துக் கொண்டிருப்பது பற்றி எனது யாகத்தைக் காப்பவன் அவனேயென்று நான் நினைத்திருக்கின்றனன். ஆகையால் அவனை இப்பொழுது நான் பார்க்க விரும்புகின்றேன். அம்மஹாதேஜஸ்வியும் இந்த விவாகத்தைப் பற்றிய ஸந்தோஷப் பெருக்கை என்னோடு கலந்து அநுபவிக்க வேண்டியவன்" என்றிருக்கிறது.
அவன் {ஜனகன்}, சதாநந்தரின் சந்நிதானத்தில் {எதிரில்} இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது சுறுசுறுப்பான தூதர் சிலர் அங்கே வந்தனர். {குசத்வஜனை அழைத்து வரும்படி} ஜனகன் அவர்களுக்கு ஆணையிட்டான்.(5) இந்திரனின் ஆணையின் பேரில் விஷ்ணுவை அழைத்து வருபவர்களைப் போல அவர்கள் {அந்தத் தூதர்கள்} நரேந்திரனின் {மனிதர்களின் தலைவனான ஜனகனின்} சாசனத்தால் அந்த நரவியாகரனை {மனிதர்களில் புலியான குசத்வஜனை} அழைத்து வருவதற்காகக் குதிரைகளில் சீக்கிரம் சென்றனர்.(6) அவர்கள் ஸங்காஷ்யத்தை {ஸாங்காஷ்யாபுரியை} அடைந்து குசத்வஜனைக் கண்டு நடந்தவற்றைச் சொல்லி ஜனகனின் சிந்தனையையும் {எண்ணத்தையும்}[4] அறிவித்தனர்.(7)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜனகன் தன் தம்பியான குசத்வஜனின் மகள்கள் இருவருக்கும் ஓர் ஏற்பாட்டை எண்ணுகிறான். தசரதனுக்கு நான்கு மகன்கள் இருப்பதால், ஜனகன் தன் இரு மகள்களையும், தன் தம்பியான குசத்வஜனின் இரு மகள்களையும் அவர்களுக்குக் கொடுத்து தசரதனுடன் வலுவான கூட்டணியை அமைக்கும் ஆலோசனையைத் தன் தம்பியிடம் முன்வைக்கிறான்" என்றிருக்கிறது.
நிருபதியான குசத்வஜன், மிக விரைவாக வந்த தூதசிரேஷ்டர்களிடம் {சிறந்த தூதர்களிடம்} இருந்து நிகழ்வுகளை அறிந்து கொண்டு நரேந்திரனின் {ஜனகனின்} ஆஜ்ஞையின் பேரில் புறப்பட்டான்.(8) அவன் {குசத்வஜன்}, தர்மவத்ஸலனும் {கடமையில் கண்ணாயிருப்பவனும்}, மஹாத்மாவுமான ஜனகனைக் கண்டான். அவன் {முதலில்} சதாநந்தரையும், {அடுத்ததாக} அதிதார்மிகனான ஜனகனையும் வணங்கி ராஜனுக்குத் தகுந்த பரம திவ்ய ஆசனத்தில் அமர்ந்தான்.(9,10அ) அமிதௌஜஸ்விகளான {அளவற்ற ஒளி பொருந்தியவர்களான} அந்த வீரச் சகோதரர்கள் இருவரும் {ஜனகனும், குசத்வஜனும்} மந்திரிசிரேஷ்டனான {அமைச்சர்களிற்சிறந்த} சுதாமனை அழைத்து,(10ஆ,11அ) "மந்திரிபதியே {தலைமை அமைச்சனே}, சீக்கிரம் சென்று, அளவற்ற காந்தியுடையவனும், ஐக்ஷ்வாகனுமான துர்தர்ஷனை {இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த, வெல்லப்பட முடியாத தசரதனை}, அவனது மந்திரிகளுடனும், மகன்களுடனும் இங்கே அழைத்து வருவாயாக" {என்றனர்}.(11ஆ,12அ)
அவனும் {அந்த சுதாமனும்} விருந்தினர் மாளிகைக்குச் சென்று ரகுகுலவர்தனனை {தசரதனைக்} கண்டு அவனை சிரசால் வணங்கி {தலைவணங்கி} இதைச் சொன்னான்:(12ஆ,13அ) "வீரரே, அயோத்யாதிபதியே {தசரதரே}, மிதிலாதிபரான வைதேஹர் {ஜனகர்}, உபாத்யாயர்களுடனும், புரோஹிதர்களுடனும் உம்மைக் காண விரும்புகிறார்" {என்றான் சுதாமன்}.(13ஆ,14அ)
அப்போது அந்த ராஜா {தசரதன்}, மந்திரிசிரேஷ்டனின் வசனத்தைக் கேட்டு ரிஷிகணங்களுடனும், பந்துக்களுடனும் {உறவினர்களுடனும்} ஜனகன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(14ஆ,15அ) வாக்கியங்களைச் சிறந்த விதத்தில் அமைப்பவனான அந்த ராஜா {தசரதன்}, மந்திரிகள், உபாத்யாயர்கள், பந்துக்கள் சஹிதனாக இருந்த வைதேஹனிடம் {ஜனகனிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(15ஆ,16அ) "மஹாராஜாவே, பகவானான வசிஷ்ட ரிஷி இக்ஷ்வாகுகுல தெய்வத்தைப் போன்றவர் என்பதையும், காரியங்கள் அனைத்தையும் அறிவிப்பவர் என்பதையும் நீ அறிவாய்.(16ஆ,17அ) தர்மாத்மாவான இந்த வசிஷ்டர், விஷ்வாமித்ரரின் அநுமதி பெற்ற மஹாரிஷிகள் அனைவருடன் கூடியவராக என் வம்சத்தை வரிசைக்ரமமாக விவரிப்பார்" {என்றான் தசரதன்}.
தசரதன் அமைதியடைந்ததும் வாக்கியங்களை அறிந்தவரான பகவான் வசிஷ்ட ரிஷி, தன்னைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து வைதேஹனிடம் {ஜனகனிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னார்:(17ஆ,18,19அ) "அவ்யக்த பிரபாவனும் {அறிவதற்கரியவனும்}, சாஷ்வதனும் {காலமற்றவனும்}, அழிவற்றவனும், நித்தியனுமான பிரம்மனுக்கு[5] மரீசி பிறந்தார். மரீசிக்கு கசியபர் பிறந்தார், கசியபருக்கு விவஸ்வான் {சூரியன்} பிறந்தான். விவஸ்வானுக்கு மனு பிறந்தான்.(19ஆ,20) அந்த மனுவே பூர்வ பிரஜாபதியாவான். இக்ஷ்வாகு மனுவின் சுதனாவான் {மகனாவான்}. இக்ஷ்வாகு பூர்வத்தில் அயோத்தியின் ராஜனாக இருந்தான்.(21) ஸ்ரீமான் குக்ஷி, இக்ஷ்வாகுவின் மகனாக அறியப்படுகிறான். குக்ஷிக்கு புகழ்பெற்ற ஸ்ரீமான் விகுக்ஷி மகனாகப் பிறந்தான்.(22) மஹாதேஜஸ்வியும், பிரதாபவானுமான பாணன் விகுக்ஷியின் புத்திரனாவான். மஹாதேஜஸ்வியும், பிரதாபவானுமான அநரண்யன் பாணனின் புத்திரனாவான்.(23) அநரண்யனுக்குப் பிருது பிறந்தான். திரிசங்கு பிருதுவின் சுதனாவான் {மகனாவான்}. திரிசங்குவுக்குப் பெரும்புகழ்பெற்ற துந்துமாரன் புத்திரனாகப் பிறந்தான்.(24) துந்துமாரனுக்கு மஹாதேஜஸ்வியும், மஹாரதனுமான யுவனாஷ்வனும், அந்த யுவனாஷ்வனுக்குப் பிருதிவீபதியான மாந்தாதாவும் மகன்களாக இருந்தனர்.(25) மாந்தாதவுக்கு ஸ்ரீமான் ஸுஸந்தி மகனாகப் பிறந்தான், ஸுஸந்திக்கு, துருவஸந்தி, பிரஸேநஜித் என்ற இரு புத்திரர்கள் பிறந்தனர்.(26) துருவஸந்திக்கு பரதன் என்ற பெயரையும், பெருங்கீர்த்தியையும் கொண்டவன் பிறந்தான். பரதனுக்கு அஸிதன் என்ற பெயரைக் கொண்ட மஹாதேஜஸ்வி பிறந்தான்.(27)
[5] பிரம்மனின் இந்த அடைமொழிகள் குறித்து நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வெகுகாலமிருப்பவனாகையால் சாச்வதனென்றும், இரண்டு பரார்த்த காலம் {1 பரார்த்தகாலம் = 1014 x 1.5 மனித ஆண்டுகள், அதாவது 2 பரார்த்த காலங்கள் = 31,10,40,00,00,00,000 மனித ஆண்டுகள்} நாசமின்றி இருப்பவனாகையால் நித்யனென்றும், ப்ரவாஹ ரூபமாக இடையின்றிக் கல்பந்தோறும் இருப்பவனாகையால் அவ்யயனென்றும் கண்டுகொள்வது. சாச்வதன் வித்யன், அவ்யயன் என்கிற இம்மூன்று சப்தங்களும் நாசமின்றியிருக்கும் வஸ்துவைச் சொல்லுகின்றன" என்றிருக்கிறது.
அவனுக்கு {அஸிதனுக்கு} ஹைஹயர்கள், தாலஜங்கர்கள், சூரர்களான சசபிந்துக்களின் ராஜாக்கள் பகைவராக இருந்தனர்.(28) அவன் {அஸிதன்} அவர்களுடன் யுத்தமும், பிரதியுத்தமும் செய்து நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டான். அந்த ராஜா தன் பாரியைகள் {மனைவியர்} இருவருடன் ஹிமவந்தம் சென்றான் {இமய மலையை அடைந்தான்}.(29) ராஜா அஸிதன் அல்ப பலத்துடன் {சொற்ப படையுடன் இமயத்தில் வசித்து} காலதர்மத்தில் தன் இறுதி மூச்சை விட்டான். அவனது பாரியைகள் இருவரும் கர்ப்பவதிகளாக இருந்தனர். {அவர்களில்} ஒருத்தி தன் சக்களத்தியின் கர்ப்பத்தைக் கலைப்பதற்காக நஞ்சைக் கொடுத்தாள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(30,31அ)
பிறகு, சியவனர் என்ற பெயரைக் கொண்ட பார்க்கவ {பிருகு வம்ச} முனிவர், சிறந்த மலைகளின் அழகால் கவரப்பட்டு ஹிமவந்தத்தில் தஞ்சமடைந்தார்.(31ஆ,32அ) மஹாபாக்யமும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களும் கொண்ட ஒருத்தி {அஸிதனின் மனைவியரில் ஒருத்தி}, உத்தம சுதனை விரும்பி அங்கே தேவனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த பார்க்கவரை {சியவனரை} வணங்கினாள்.(32ஆ,33அ) {அவளுக்கு நஞ்சூட்டிய சக்களத்தியான} காளிந்தியும் அந்த ரிஷியை அடைந்து வணங்கினாள். அந்த விப்ரர், புத்திரனை விரும்பி வந்தவளிடம் {நஞ்சுண்டவளிடம்}, புத்திரஜனனம் குறித்துச் சொல்லும் வகையில்[6],(33ஆ,34அ) "மஹாபாக்யவதியே, உன் வயிற்றில் பெரும் பலம்வாய்ந்தவனும், மஹாவீரியனும், மஹாதேஜஸ்வியும், ஸ்ரீமானுமான நல்ல புத்திரன் நஞ்சுடன் அதிசீக்கிரத்தில் பிறப்பான். கமலேக்ஷணையே {தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளே}, நீ வருந்த வேண்டாம்" {என்றார் சியவனர்}.(34ஆ,35)
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த வரிகளுக்குப் பொருள் கொள்வதில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. சிலர் காளிந்தியானவள் சக்களத்திக்கு நஞ்சூட்டியவள் என்றும், வேறு சிலர் காளிந்தி நஞ்சுண்டவள் என்றும் சொல்கிறார்கள். "காளிந்தியும்" என்று இங்குச் சொல்லப்படுவதால் நஞ்சூட்டியவளே காளிந்தி என்று இங்கே பொருள் கொள்ளப்படுகிறது. நஞ்சூட்டிய குற்றவுணர்வுடன் கூடிய அவளும் கர்ப்பவதியாக இருந்தாள். இதனால்தான் "அவளும்" வந்தாள் என்று "உம்" விகுதி சேர்க்கப்படுகிறது" என்றிருக்கிறது.
ராஜபுத்திரியும், பதிவிரதையும், பதியற்றவளுமான அந்த தேவி சியவனரை நமஸ்கரித்தாள். அதன்பிறகு {அந்த முனிவரின் வரத்தால்} அவள் புத்திரனைப் பெற்றாள்.(36) கர்ப்பம் கலைய சக்களத்தியால் நஞ்சூட்டப்பட்டு, அந்த நஞ்சுடன் பிறந்ததால் அவன் சகரன் என்று அறியப்பட்டான்.(37) அந்த சகரனுக்கு அசமஞ்சன் பிறந்தான். அசமஞ்சனுக்கு அம்சுமான் பிறந்தான். திலீபன் அம்சுமானின் புத்திரனாகப் பிறந்தான். திலீபனுக்குப் பகீரதன் பிறந்தான்.(38) பகீரதனுக்குக் காகுத்ஸ்தனும், காகுத்ஸ்தனுக்கு ரகுவும் பிறந்தனர். தேஜஸ்வியான பிரவிருத்தன் ரகுவின் புத்திரனாவான். அவனே மனித ஊனுண்ணும் கல்மாஷபாதனானான்[7]. அவனுக்கு {பிரவிருத்தனுக்கு / கல்மாஷபாதனுக்கு} சங்கணன் பிறந்தான்.(39,40அ) சங்கணனுக்குச் சுதர்ஷனனும், சுதர்ஷனனுக்கு அக்னிவர்ணனும், அக்னிவர்ணனுக்குச் சீக்ரகனும், சீக்ரகனுக்கு மருவும் மகன்களாகப் பிறந்தனர். மருவுக்குப் பிரசுஷ்ருகனும், பிரசுஷ்ருகனுக்கு அம்பரீஷனும் பிறந்தனர்.(40ஆ,41) மஹீபதியான நஹுஷன் அம்பரீஷனின் புத்திரனாகப் பிறந்தான். நஹுஷனுக்கு யயாதியும், யயாதிக்கு[8] நாபாகனும் மகன்களாகப் பிறந்தனர்.(42) நாபாகனுக்கு அஜன் பிறந்தான், அஜனுக்குத் தசரதன் பிறந்தான். தசரதனுக்கு ராமலக்ஷ்மண சகோதரர்கள் பிறந்தனர்[9].(43)
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "உண்மையில் பிரவிருத்தன் இந்த வம்சத்தின் பெரும் மன்னனாக இருந்தாலும் திமிர் பிடித்தவனாக இருந்தான். எனவே ஒரு நாள் வசிஷ்டரின் கோபத்துக்கு உள்ளாகி மனிதரை உண்ணும் ராக்ஷசனானான். அவனுக்கும் மாய சக்திகள் இருந்ததால் வசிஷ்டரைச் சபிக்கத் தன் கையில் நீரை எடுத்தான். பதிவிரதையான அவனது மனைவி மதயந்தி அவனைத் தடுத்தாள். மனைவியின் சொற்களைக் கேட்டு நீரை சிந்தியபோது அந்த நீர் அவனது பாதங்களில் விழுந்தது. சபிக்க எடுக்கப்பட்ட அந்த நீர் அவனது பாதத்தில் கறையாக இருந்தது. எனவே அவன் கல்மாஷபாதனான்" என்றிருக்கிறது. இந்தக் கல்மாஷபாதனின் கதை மஹாபாரதத்தில் ஆதிபர்வம் பகுதி 178 முதல் 184 வரை சொல்லப்படுகிறது. கர்ணபர்வத்தில் கல்மாஷபாதனைக் குறித்துக் கர்ணனிடம் சல்லியன் சொல்கிறான். அநுசாஸன பர்வம் 79, 80 பகுதிகளில் சௌதாசன் என்ற பெயரில் இவன் கதை வருகிறது. அஸ்வமேத பர்வம் 57,58ம் பகுதிகளிலும் இவன் கதை சொல்லப்படுகிறது.
[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "நஹுஷன், யயாதி என்ற இந்தப் பெயர்கள் ராமாயணக் காலத்திற்கு முந்தைய யுகத்தில் இருந்தவர்களாக வேறு புராணங்களில் சொல்லப்படுகின்றன" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த நஹுஷ யயாதிகள் சந்த்ரவம்சத்து நஹுஷ யயாதிகளைக் காட்டிலும் வேறுபட்டவர். இதில் முறை வேறுபாடு கல்ப பேதத்தினாலுண்டானதென்று தெரிகின்றது" என்றிருக்கிறது.
நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, நிருபா {ஜனக மன்னா}, ஆதியில் இருந்தே களங்கமற்ற வம்சத்தினரும், பரமதார்மிகர்களும், வீரர்களும், சத்தியவான்களும் இக்ஷ்வாகு குலத்தில் ராஜர்களாகப் பிறந்தனர். இராமலக்ஷ்மணர்களுக்கு உன் மகள்களைத் திருமணம் செய்து கொடுக்குமாறு நான் கேட்கிறேன். உன் மகள்களுக்கு இவர்களே தகுந்தவர்கள். தத்தம் செய்வதே {அவர்களை இவர்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதே} உனக்குத் தகும்" {என்றார் வசிஷ்டர்}.(44,45)
பாலகாண்டம் சர்க்கம் – 70ல் உள்ள சுலோகங்கள் : 45
Previous | | Sanskrit | | English | | Next |