Killing of illusionary Sita | Yuddha-Kanda-Sarga-081 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையின் மாயத் தோற்றத்துடன் போர்க்களம் புகுந்த இந்திரஜித்; இந்திரஜித்துக்கும் ஹனுமானுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம்; மாய சீதையைக் கொன்ற இந்திரஜித்...
அவன் {இந்திரஜித்}, மஹாத்மாவான அந்த ராகவனின் மனத்தைப் புரிந்து கொண்டபோது, அந்தப் போரில் இருந்து விலகிச்சென்று, புரத்திற்குள் {லங்காபுரிக்குள்} பிரவேசித்தான்.(1) பிறகு, சூரனான அந்த ராவணி {ராவணனின் மகனான இந்திரஜித்}, வலிமைமிக்க ராக்ஷசர்களின் வதத்தை நினைத்து, அந்தக் குரோதத்தால் கண்கள் சிவந்தவனாக வெளிப்பட்டான்.(2) மஹாவீரியனும், தேவகண்டகனும் {தேவர்களுக்கு முள் போன்றவனும்}, பௌலஸ்தியனுமான {புலஸ்தியரின் வழி வந்தவனுமான} அந்த இந்திரஜித், ராக்ஷசர்களால் சூழப்பட்டவனாக பஷ்சிம துவாரத்தில் {மேற்கு வாயிலில்} வெளிப்பட்டான்.(3)
போருக்கு ஆயத்தமாக இருந்த வீர பிராதாக்களான {வீரர்களும், உடன்பிறந்தோருமான} ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் கண்டபோது, இந்திரஜித் மாயையை வெளிப்படுத்தினான்.(4) மஹத்தான பலம் சூழ வந்த இந்திரஜித், ரதத்தில் மாயாமயமான சீதையை இருத்திக் கொண்டு, அவளை வதம் செய்ய {கொல்ல} விரும்பினான்.(5) யாவரையும் மோஹமடையச் செய்யும் அர்த்தத்தில் புத்தியை அமைத்துக் கொண்ட துர்மதியாளன் {அனைவரையும் ஏமாற்ற நினைத்தவனும், தீய எண்ணம் கொண்டவனுமான இந்திரஜித், அந்த மாயா} சீதையைக் கொல்லும் தீர்மானத்துடன், வானரர்களை நோக்கிச் சென்றான்.(6) அவன் தங்களை எதிர்த்து வருவதைக் கண்ட சர்வ கானனௌகசர்களும் {கானகங்களில் வசிப்பவர்களான வானரர்கள் அனைவரும்}, பெருங்குரோதமடைந்து, யுத்தம் செய்யும் ஆவலுடன் கைகளில் பாறைகளை எடுத்துக் கொண்டு {அவனை நோக்கிப்} பாய்ந்தனர்.(7)
கபிகுஞ்சரனான {குரங்குகளில் யானையான} ஹனூமான், அடைவதற்கரிய மகத்தான பர்வத சிருங்கத்தை {மலைச்சிகரத்தை} எடுத்துக் கொண்டு அவர்களுக்கு முன்னால் சென்றான்.(8) ஒற்றை ஜடை {பின்னல்} தரித்தவளும், தீனமானவளும், பட்டினியால் வாடி மெலிந்த முகத்தைக் கொண்டவளும், ஆனந்தம் இழந்தவளுமான சீதையை இந்திரஜித்தின் ரதத்தில் அவன் {ஹனுமான்} கண்டான்.{9} ஸ்திரீகளில் சிறந்த ராகவனின் பிரியை {ராமனின் காதலியான சீதை}, அழுக்கடைந்த ஒற்றை ஆடையுடன், ஆபரணங்கள் பூணாமல், சர்வகாத்திரங்களிலும் {உடல் உறுப்புகள் அனைத்திலும்} புழுதியும், அழுக்கும் படிந்தவளாக இருந்தாள்.(9,10) ஹனூமான், அவளைக் கண்ட ஒரு முஹூர்த்தத்தில் மைதிலியென உறுதி செய்து கொண்டு விசனமடைந்தான். அவளை சிறிது காலத்திற்கு முன்புதான் கண்டிருந்தான்.(11) சோகத்தால் பீடிக்கப்பட்டவளும், ஆனந்தமற்றவளும், தீனமானவளும், பரிதாபத்திற்குரியவளுமான அந்த சீதை ராக்ஷசேந்திரசுதனின் {ராவணனுடைய மகனான இந்திரஜித்தின்} ரதத்தில் இருப்பதைக் கண்டு,{12} "இவனது நோக்கம் என்ன?" என்று சிந்தித்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, அந்த வானரசிரேஷ்டர்கள் சகிதனாக ராவணியை {ராவணனின் மகனான இந்திரஜித்தை} நோக்கி விரைந்து சென்றான்.(12,13)
அந்த வானர பலத்தை {படையைக்} கண்ட ராவணி, குரோதத்தில் மூர்ச்சித்து, உறையில் இருந்து வாளை உருவி, சீதையின் தலையைப் பிடித்து இழுத்தான்.(14) மாயையால் ரதத்தில் இருத்தப்பட்டவளும், "ராமரே, ராமரே" என்று கூச்சலிடுபவளுமான அந்த ஸ்திரீயை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ராவணி {இந்திரஜித்} அடித்தான்.(15) மாருதாத்மஜன் ஹனூமான், அவளது தலை பற்றப்பட்டிருப்பதைக் கண்டு, துக்கமடைந்து, நேத்திரங்களில் சோக நீர் {கண்களில் துயரக் கண்ணீர்} வடித்தான்[1].(16)
[1] சானகி ஆம்வகை கொண்டு சமைத்தமான் அனையாளை வடிக் குழல் பற்றாஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான்ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான். (8868)வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர்எந்தை இகழ்ந்தனன் யான் இவள் ஆவிசிந்துவென் என்று செறுத்து உரை செய்தான்அந்தம் இல் மாருதி அஞ்சி அயர்ந்தான்.(8869)- கம்பராமாயணம் யுத்தகாண்டம், மாயா சீதைப் படலம்பொருள்: ஜானகி போன்ற வடிவில் {மாயையால்} உண்டாக்கப்பட்ட மான் போன்ற பெண் ஒருத்தியின் திருந்திய கூந்தலைப் பற்றியவனாக, சினத்துடன் மற்றொரு கையால் வாளைப் பற்றியவனாக இருந்தவன் தன் எண்ணத்தை இத்தகைய சொற்களால் சொல்லத் தொடங்கினான்.(8868) "இவளைக் காரணமாகக் கொண்டு இங்கே வந்து போரிட்டீர்கள். என் தந்தை இகந்தான். நான் இவளுடைய உயிரை எடுப்பேன்" என்று கோபத்துடன் சொன்னான். முடிவில்லாதவனாகிய அனுமன் அஞ்சி சோர்ந்தான்.(8869)
சர்வ அங்கங்களிலும் அழகு பொருந்தியவளும், ராமனின் பிரிய மஹிஷியுமான {ராமனின் அன்புக்குரிய ராணியுமான} அவளைக் கண்டவன் {ஹனுமான்}, ராக்ஷோதிபாத்மஜனிடம் {ராக்ஷசர்களின் அதிபனான ராவணனின் மகன் இந்திரஜித்திடம் பின்வரும்} கடும் வாக்கியத்தைக் கூறினான்:(17) "துராத்மாவே, பிரம்மரிஷிகளின் குலத்தில் பிறந்தும், ராக்ஷசி யோனியை ஆசரித்ததால், {ராக்ஷஸ பிறவியை அடைந்து}, ஆத்மநாசத்திற்காக {உன் அழிவுக்காக} கேசத்தைத் தீண்டுகிறாய்.(18) கொடூரனே, அநாரியனே {அற்பனே}, துர்விருத்தனே {நடத்தை கெட்டவனே}, இழிந்தவனே, பாப பராக்கிரமனே {பாபம் செய்வதில் பராக்கிரமத்தைக் காட்டுபவனே}, கருணையற்றவனே, எவனிடம் இத்தகைய மதி {எண்ணம்} இருக்கிறதோ, அத்தகைய பாப நடத்தை கொண்டவனான உனக்கு ஐயோ.{19} இத்தகைய கர்மம் அநாரியனுக்குரியது {அற்பனுக்குரியது}. உன்னிடம் கருணை இல்லை.(19,20அ) மைதிலி, தன் கிருஹத்திலிருந்தும் {வீட்டிலிருந்தும்}, ராஜ்ஜியத்திலிருந்தும், ராமரின் கைகளில் {பாதுகாப்பில்} இருந்தும் பிரிந்தவள். தயை இல்லாமல் இப்படி அடிக்கிறாய்? இவள் உனக்கு செய்த அபராதம் {குற்றம்} என்ன? (20ஆ,21அ) எவ்வாறெனினும், சீதையைக் கொன்றபிறகு, நீண்ட காலம் நீ ஜீவித்திருக்க மாட்டாய். வதத்திற்குத் தகுந்த உன் கர்மத்துக்காகவே நீ என் கைகளில் விழுந்திருக்கிறாய்.(21ஆ,22அ) இஹத்தில் ஜீவிதத்தை {இம்மையில் உயிரை} விட்டுவிட்டு, பிரேதமாகி, ஸ்திரீகளைக் கொன்றவர்களும், கொல்லப்படத் தகுந்தவர்களும், உலகத்தாரின் நிந்தனைக்குரியவர்களும் எந்த லோகங்களை அடைவார்களோ, அவற்றை நீ அடைவாய்" {என்றான் ஹனுமான்}.(22ஆ,23அ)
இதைச் சொன்ன ஹனுமான், ஆயுதங்களுடன் கூடிய ஹரிக்களால் {குரங்குகளால்} சூழப்பட்டவனாக, பெருங்குரோதத்துடன் ராக்ஷசேந்திரசுதனை {இந்திரஜித்தை} நோக்கி விரைந்தான்.(23ஆ,24அ) பயங்கரக் கோபத்துடன் கூடிய ராக்ஷசர்களின் அனீகம் {படை}, தங்களை நோக்கிப் பாயும் மஹாவீரியம் பொருந்திய வனௌகசர்களின் ஆனீகத்தைத் தடுத்தது.(24ஆ,25அ) அந்த ஹரிவாஹினியை {குரங்குப் படையை} ஆயிரக்கணக்கான பாணங்களால் கலங்கடித்த அந்த இந்திரஜித், ஹரிசிரேஷ்டனான ஹனூமந்தனுக்குப் {பின்வருமாறு} பதிலளித்தான்:(25ஆ,26அ) "எவளின் நிமித்தம் சுக்ரீவனும், நீயும், ராமனும் இங்கே வந்தீர்களோ, அந்த வைதேஹியை இதோ நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே வதைக்கப் போகிறேன்.(26ஆ,27அ) இவளைக் கொன்றுவிட்டு, அந்த ராமனையும், லக்ஷ்மணனையும், வானரா, உன்னையும், சுக்ரீவனையும், அநாரியனான அந்த விபீஷணனையும் வதைக்கப் போகிறேன்.(27ஆ,28அ) பிலவங்கமா {தாவிச் செல்பவனே}, ஸ்திரீகள் கொல்லத்தகாதவர்கள் என்று ஏதோ சொன்னாய். எது அமித்ரர்களைப் பீடிக்குமோ, {பகைவரைப் பீடிக்குமோ}, அத்தகைய கர்மத்தையே செய்ய வேண்டும்[2]" {என்றான் இந்திரஜித்}.(28ஆ,29அ)
[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பல உரைகளில் இல்லாத ஒரு சுலோகம் இங்கே சில உரைகளில் வருகிறது. "{பெண்ணைக் கொல்லக்கூடாது என்றால்} முன்பு ராமன் ஏன் தாடகையைக் கொன்றான்? எனவே அவனது மனைவியான ஜனகனின் மகளை நான் கொல்லப் போகிறேன்" என்பது அதன் பொருள். இங்கே இந்திரஜித் தன்னனை நியாயப்படுத்திக் கொள்ளவும், ராமனும் இணையாக குற்றம் செய்திருக்கிறான் என்று நிறுவவும் முயல்கிறான்" என்றிருக்கிறது. நாம் ஒப்பிடும் எந்தப் பதிப்பிலும் இந்த சுலோகம் இல்லை.
இதை அவனிடம் சொன்னதும், அழுது கொண்டிருந்த அந்த மாயாமயமான சீதையைக் கூர்முனை கொண்ட கட்கத்தால் {வாளால்} இந்திரஜித் ஸ்வயமாக {தானே} வெட்டினான்.(29ஆ,30அ) பருத்த இடையைக் கொண்டவளும், காண்பதற்கு இனியவளுமான அந்த தபஸ்வினி, யஜ்ஞோபவீத மார்கத்தில் அவனால் {பூணூல் பூண்டதுபோல் இடது தோளில் இருந்து வலமாக இந்திரஜித்தால்} வெட்டப்பட்டவளாக பூமியில் விழுந்தாள்[3].(30ஆ,31அ)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "இந்திரஜித் நிகும்பிலை யென்னும் தேவாலயத்தில் பிறர்க்கு வெல்லமுடியாத அஸ்த்ரங்களைப் பெறுதற்காக ஹோமஞ்செய்ய விரும்பி அதுவரையில் ராமலக்ஷ்மணர்கள் யுத்த ப்ரயத்தனம் அற்றிருக்கும்படி செய்ய மாயையைக் காட்ட முயன்று மாயா ஸீதையை ஏற்படுத்தி, ராமலக்ஷ்மணர்கள் கோபித்திருக்கையால் அவர்களை அணுகுவது வருத்த மாகையால் அவர்களுக்கு அந்த ஸீதையைக் காட்ட நேராமையாலும் ஹனுமான் தவிர மற்றை வானரர்கள் ஸீதையைக் கண்டறியார்களாகையால் அவர்கட்கு ஸீதையைக் காண்பிப்பினும் ஸீதையென்று தெரிந்து கொள்ள மாட்டாரகையாலும் மேற்கு வாசலில் ஹனுமானுக்கு அந்த ஸீதையைக் காட்டிச் சேதித்தனன். இங்ஙனம் மாயாஸீதையைச் சேதித்தமை கண்டு ஹனுமான் போய் இந்த ஸங்கதியை ராமாதிகளுக்கு அறிவிப்பானென்றும், அவர்கள் வருத்தத்தினால் ஸ்வாதீனமற்று யுத்த ப்ரயத்னம் குறையப் பெற்றிருப்பார்களென்றும், அதனால் தன் ஹோமம் நிர்விக்னமாக நிறைவேறுமென்றும் இந்த்ரஜித்தின் கருத்து" என்றிருக்கிறது.
இந்திரஜித் அந்த ஸ்திரீயைக் கொன்றுவிட்டு ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} சொன்னான்,{31ஆ} "சஸ்திரத்தால் வெட்டப்பட்ட இந்த ராமனின் பிரியையை {ராமனின் காதலியைப்} பார். இந்த வைதேஹியை நான் கொன்றுவிட்டேன். உன் முயற்சிகள் வீணாகின".(31ஆ,32)
அந்த இந்திரஜித், மஹத்தான கட்கத்தால் ஸ்வயமாக {தானே} அவளைக் கொன்றுவிட்டு, ரதத்தில் அமர்ந்து மஹாஸ்வனத்துடன் மகிழ்ச்சி நாதம் செய்தான்.(33) அருகில் நின்று கொண்டிருந்த வானரர்கள், அந்த துர்கத்தில் {கோட்டைவாயிலில்} வசதியாக அமர்ந்து, வாயை அகல விரித்து, நாதம் செய்யும் அவனது சப்தத்தைக் கேட்டனர்.(34) துர்மதி படைத்தவனான அந்த ராவணி {ராவணனின் மகனான இந்திரஜித்}, இவ்வாறே {மாயா} சீதையைக் கொன்றுவிட்டுப் பெரும் மகிழ்ச்சியடைந்தான். வானரர்கள், அவனது மகிழ்ச்சி ரூபத்தைக் கண்ட உடனேயே, விசன ரூபமடைந்தவர்களாக {சோக வடிவம் பூண்டவர்களாக} ஓடிச் சென்றனர்.(35)
யுத்த காண்டம் சர்க்கம் – 081ல் உள்ள சுலோகங்கள்: 35
Previous | | Sanskrit | | English | | Next |