The dialogue between Indrajit and Vibhishana | Yuddha-Kanda-Sarga-087 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இந்திரஜித் வேள்வி செய்யும் இடத்திற்கு லக்ஷ்மணனை அழைத்துச் சென்று, அவனை அழிக்குமாறு கூறிய விபீஷணன்; இந்திரஜித்துக்கும், விபீஷணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
இவ்வாறு சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம்} சொல்லி மகிழ்ச்சியடைந்த அந்த விபீஷணன், தனுஷ்பாணியான அவனை {கையில் வில்லுடன் கூடிய லக்ஷ்மணனை} அழைத்துக் கொண்டு விரைந்து சென்றான்.(1) அங்கிருந்து சிறிது தூரம் சென்ற விபீஷணன், மஹத்தான வனத்திற்குள் பிரவேசித்து, அந்தக் கர்மத்தை {இந்திரஜித் செய்யும் ஹோமத்தை} லக்ஷ்மணனிடம் காட்டினான்.(2)
தேஜஸ்வியான ராவணபிராதா {ராவணனுடன் பிறந்த விபீஷணன்}, நீல மேகம் போலத் தெரிவதும், பயங்கர தரிசனம் தருவதுமான ஆலமரம் ஒன்றை லக்ஷ்மணனிடம் காட்டினான்.(3) "பலவானான ராவணாத்மஜன் {ராவணனின் மகனான இந்திரஜித்} இங்கே பூதங்களுக்கான உபஹாரத்தை காணிக்கையளித்த பிறகு, போருக்குப் புறப்பட்டுச் செல்வான்.(4) அதன்பிறகு இந்த ராக்ஷசன் சர்வ பூதங்களுக்கும் {உயிரினங்கள் அனைத்திற்கும்} புலப்படாதவனாகி, போரில் உத்தம சரங்களால் சத்ருக்களைக் கட்டவும், கொல்லவும் செய்வான்.(5) பலவானான அந்த ராவணாத்மஜன் ஆலமரத்தை அடையும் முன்பே, ஒளிமிக்க உமது சரங்களால், அஷ்வங்கள் சாரதியுடன் {குதிரைகள், தேரோட்டியுடன்} கூடிய ரதத்துடன் அவனை அழிப்பீராக" {என்றான் விபீஷணன்}.(6)
மித்ரானந்தனும் {நண்பர்களுக்கு ஆனந்தம் அளிப்பவனும்}, மஹாதேஜஸ்வியுமான சௌமித்ரி, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, அங்கேயே நிலை கொண்டு, சித்திரமான தனுசை வளைத்து நாணொலி செய்தான்.(7) இராவணாத்மஜனான அந்த பலவான் இந்திரஜித், கவசம் பூண்டவனாக, கட்கம், துவஜம் ஆகியவற்றுடன் கூடியதும், அக்னியின் வர்ணத்துடன் கூடியதுமான ரதத்தில் ஏறியவனாக எதிரில் தோன்றினான்.(8)
மஹாதேஜஸ்வி {ஒளிமிக்கவனான லக்ஷ்மணன்}, அபராஜிதனான அந்தப் பௌலஸ்தியனிடம் {இதுவரை வெல்லப்படாதவனும், புலஸ்தியரின் வழித்தோன்றலுமான அந்த இந்திரஜித்திடம் பின்வருமாறு} சொன்னான், "நான் உன்னை சமருக்கு {போருக்கு அறைகூவி} அழைக்கிறேன். {மாயை செய்யாமல்} எனக்கு சரியான யுத்தத்தை வழங்குவாயாக" {என்றான் லக்ஷ்மணன்}.(9)
இவ்வாறு சொல்லப்பட்டதும், மஹாதேஜஸ்வியும், மனஸ்வியுமான ராவணாத்மஜன் {உயர்ந்த மனம் கொண்டவனும், ராவணனின் மகனுமான இந்திரஜித்}, அங்கே விபீஷணனைக் கண்டு, {பின்வரும்} கடும் வாக்கியத்தைக் கூறினான்:(10) "இராக்ஷசரே, நீர் இங்கேயே பிறந்தீர், வளர்க்கப்பட்டீர். சாக்ஷாத் என் பிதாவின் பிராதாவும், எனக்குப் பித்ருவ்யருமாக இருக்கிறீர் {என் தந்தைக்கு நேரே உடன் பிறந்தவராகவும், எனக்கு சிறிய தந்தையாகவும் இருக்கிறீர்}. புத்திரனுக்கு எவ்வாறு துரோகம் செய்கிறீர்?(11) துர்மதியைக் கொண்டவரே, தர்மதூஷணரே, ஞாதித்வம் உமக்குப் பிரமாணம் இல்லை {ரத்த உறவுமுறை உமக்கு ஒரு விதிமுறை இல்லை}; நட்புமுறை இல்லை, ஜாதிமுறை {பிறவியினம்} இல்லை, சௌகர்யமும் {சகோதரமுறையும்} இல்லை; தர்மமும் இல்லை {இவை யாவும் உமக்கு விதிமுறைகள் இல்லை}.(12) துர்ப்புத்தியைக் கொண்டவரே, நீர் பரிதாபத்திற்குரியவர். சொந்த ஜனத்தைக் கைவிட்டு, பகைவருக்கு குற்றேவல் புரியும் நீர் சாதுக்களால் {நல்லோரால்} நிந்திக்கத்தகுந்தவர்.(13) தன் ஜனத்துடன் வசிப்பது எங்கே? நீசர்களான பிறரிடம் அடைக்கலம் அடைந்திருப்பது எங்கே? தடுமாறும் புத்தியால் இவற்றில் உள்ள மஹத்தான வேறுபாட்டை நீர் அறிந்தீரில்லை.(14) பரஜனங்கள் குணவான்களாகவும் தன் ஜனங்கள் குணமற்றவர்களாகவும் இருக்கலாம். குணமற்றிருந்தாலும் தன் ஜனங்களே சிறந்தவர்கள். பிறன் {பகைவன்} எவனாக இருந்தாலும் அவன் பகைவனே ஆவான்.(15) எவன் தன் பக்ஷத்தை {தரப்பைக்} கைவிட்டு, பரபக்ஷத்தை சேவிக்கிறானோ {வேறு தரப்புக்குத் தொண்டாற்றுகிறானோ}, அவன் தன் பக்ஷத்தவர் {தரப்பினர்} அழிந்தபிறகு, அவர்களாலேயே {அவன் சேவித்த பிற தரப்பினராலேயே} கொல்லப்படுவான்[1].(16) இராவணானுஜரே {இராவணரின் தம்பியே}, நிசாசரரே {இரவுலாவியே}, சொந்த ஜனத்திடம் நீர் காட்டும் இந்த ஈவிரக்கமில்லாத பௌருஷம் {கடுமை}, உம் ஒருவருக்கே சாத்தியப்படும்[2]" {என்றான் இந்திரஜித்}.(17)
[1] தர்மாலயப் பதிப்பில், இதற்குப் பிறகு, "துன்மதியே, அரக்கரது குலப்பதரே, ஆகையால் பின்வருவதற்குச் செவி கொடு. அறிவாளிகளுள் சிறந்த ரகுகுலத்தவனாகிய அந்த ராமன் நம்மை ஜயிக்க உன்னை பந்து போன்றவனாய் முதலில் கொண்டு, உன்னைக் கொண்டு உபாயத்தை அறிந்து கொண்டு, போரில் திறமையிருப்பின் எம்மை ஜயித்து பின்னர் உன்னையும் கொல்வான். நீ ராவணனது தம்பியாய் இருக்கின்றாய் என்ற காரணத்தால் ராமனுக்கு சத்ருவாய் ஆகின்றனை" என்றிருக்கிறது.
[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "ராக்ஷசனே, ராவணன் தம்பீ, என் ஹோமம் விக்னமடையும்படி லக்ஷ்மணனை ஆலமரத்தின் கீழ் கொண்டு போய்ச் சேர்த்தனையே. இப்படிப்பட்ட தயையில்லாமை உனக்கு மாத்ரமேயன்றி மற்றெவனுக்கும் உண்டாகாது. பந்துவினத்தில் நீயொருவனே இங்ஙனம் கடினமாகச் செய்யத் துணிந்தாயன்றி மற்றொரு பந்துவும் துணிந்து இங்ஙனஞ் செய்யவல்லனாகமாட்டான்" என்றிருக்கிறது.
இவ்வாறு சொன்ன பிராதாவின் புத்ரனிடம் விபீஷணன் {தன்னுடன் பிறந்தானான ராவணனின் மகன் இந்திரஜித்திடம் விபீஷணன் பின்வரும்} பதிலைச் சொன்னான், "இராக்ஷசா, என் சீலத்தை {ஒழுக்கத்தை / இயல்பை} சற்றும் அறியாதவனைப் போல, ஏன் விகர்த்தமாகப் பேசுகிறாய் {ஏன் பிதற்றுகிறாய்}?(18) அசாதோ, ராக்ஷசேந்திரசுதா {தீயவனே, ராக்ஷசர்களின் தலைவர் ராவணரின் மகனான இந்திரஜித்தே}, கௌரவத்திற்காகவாவது, பௌருஷ்யத்தைக் கைவிடுவாயாக {பெரியவர்களிடம் கொள்ளும் மதிப்புக்காவது, இந்தக் கடுமையைக் கைவிடுவாயாக}. குரூர கர்மங்களைச் செய்பவர்களான ராக்ஷசர்களின் குலத்தில் நான் பிறந்திருந்தாலும்,{19} மனிதர்களின் பிரதம குணம் எதுவோ, அந்த அராக்ஷசமே என் சீலம் {ராக்ஷசத் தன்மை இல்லாததே என் இயல்பாகும்}.(19,20அ) கொடுமையில் நான் இன்புறுவதில்லை; அதர்மத்திலும் இன்புறுவதில்லை. ஒரு பிராதா, விஷம சீலனேயானாலும், மற்றொரு பிராதாவை {உடன்பிறந்தான் ஒருவன், தீய ஒழுக்கம் கொண்டவனாகவே இருப்பினும், தன்னுடன் பிறந்த மற்றொருவனை எப்படி நிராகரிக்கலாம் {விரட்டலாம்}?(20ஆ,21அ)
கையிலிருக்கும் விஷமிக்கப் பாம்பைப் போல, தர்மத்திலிருந்து சீலம் பிறழ்ந்தவனும், பாப நிச்சயம் கொண்டவனுமான {ஒழுக்கநெறி பிறழ்ந்தவனும், பாபத்தைச் செய்வதையே தீர்மானமாகக் கொண்டவனுமான} ஒரு புருஷனைக் கைவிடுவதால், ஒருவன் சுகத்தையே அடைகிறான்[3].(21ஆ,22அ) பிறருக்குச் சொந்தமானதை அபகரிக்கும் நோக்கம் கொண்டவரும், பரதாரங்களை {பிறன் மனைவியரை} ஆசையுடன் தீண்டுபவருமான துராத்மாக்கள், எரியும் வேஷ்மங்களை {வீடுகளைப்} போலக் கைவிடத் தகுந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.(22ஆ,23அ) பிறருக்குச் சொந்தமானவற்றை அபகரிப்பது, பரதாரங்களை {பிறர் மனைவியரை} ஆசையுடன் தீண்டுவது, நண்பர்களிடம் அதிக சந்தேகங்கொள்வது ஆகியன அழிவை உண்டாக்கும் மூன்று தோஷங்களாகும்.(23ஆ,24அ) மஹரிஷிகளை கோரமாக வதம் செய்வது, சர்வ தேவர்களிடமும் கலகஞ் செய்வது ஆகியனவும்,{24ஆ} அபிமானமும் {முன்கோபமும்}, ரோஷமும் {எளிதில் கோபமடைவதும்}, வைரித்வமும் {பகைமை பாராட்டுவதும்}, பிரதிகூலம் செய்வதும் {கெடுதி செய்வதும்} என ஜீவிதத்தையும், ஐஷ்வர்யத்தையும் நாசமாக்கும் இந்த தோஷங்கள், பர்வதத்தை {மலையை மறைக்கும்} மேகங்கள் போல, என் பிராதாவின் {என்னுடன் பிறந்தவரான ராவணரின்} குணங்களை மறைக்கின்றன.(24ஆ-26அ)
[3] அறம் துணை ஆவது அல்லால்அரு நரகு அமைய நல்கும்மறம் துணை ஆக மாயாப்பழியொடும் வாழ மாட்டேன்துறந்திலேன் மெய்ம்மை, எய்தும்பொய்ம்மையே துறப்பது அல்லால்பிறந்திலேன் இலங்கை வேந்தன்பின்னவன் பிழைத்த போதே- கம்பராமாயணம் 9105ம் பாடல், யுத்த காண்டம், நிகும்பலை யாகப் படலம்பொருள்: "தர்மத்தையே துணையாகக் கொள்வேனேயன்றி, அடைதற்கரிய நரகத்தினைத் தரும் அதர்மத்தைத் துணையாகக் கொண்டு, நீங்காத பழியோடு உயிர் வாழ மாட்டேன். வந்தடையும் பொய்ம்மையினைத் துறப்பது அல்லால், மெய்ம்மையைத் துறந்திலேன். இலங்கை வேந்தன் பிழை செய்த போதே, அவன் பின் பிறழ்ந்தவன் ஆகினேன்" {என்றான் விபீஷணன்}.
உன் பிதாவான என் பிராதாவை {உன் தந்தையும், என்னுடன் பிறந்தவருமான ராவணரை}, இந்த தோஷங்களாலேயே நான் கைவிட்டேன். இந்த லங்காபுரியும் இருக்காது. உன் பிதாவும் இருக்க மாட்டார்.(26ஆ,27அ) இராக்ஷசா, அதிமானசனும், பாலனும், துர்வினீதனும் {ஆணவக்காரனும், சிறுவனும், ஒழுக்கமற்றவனும்}, காலபாசத்தில் கட்டப்பட்டவனுமான நீ எதை விரும்புகிறாயோ, அதை என்னிடம் சொல்லலாம்.(27ஆ,இ) இராக்ஷசாதமா {ராக்ஷசர்களில் இழிந்தவனே}, என்னைக் குறித்து நீ எதற்காகக் கடுமையாகப் பேசினாயோ, அதற்காவே இங்கே இந்த விசனத்தை அடைந்தாய். ஆலமரம் பிரவேசிக்க சாத்தியமற்றது.(28) காகுத்ஸ்தரை {லக்ஷ்மணரைத்} தாக்கி நீ ஜீவிப்பது சாத்தியமில்லை. நரதேவரான லக்ஷ்மணருடன் ரணத்தில் யுத்தம் செய்வாயாக {போர்க்களத்தில் போரிடுவாயாக}. கொல்லப்பட்ட பிறகு, நீ யமக்ஷயத்தில் தேவதா காரியத்தைச் செய்வாயாக {யமனின் வசிப்பிடத்தில் தெய்வ காரியங்களைச் செய்வாயாக}.(29,30அ) வளரும் உன் ஆத்மபலத்தைக் காட்டும் வகையில், சர்வ ஆயுதங்களையும், சாயகங்களையும் {கணைகளையும்} செலவிடுவாயாக. இலக்ஷ்மணரின் பாண கோசரத்தை அடைந்தால் {கணைகளின் எல்லைக்குள் வந்தால்}, படையுடன் கூடிய நீ, இன்று ஜீவனுடன் திரும்பிச் செல்ல மாட்டாய்" {என்றான் விபீஷணன்}.(30ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 087ல் உள்ள சுலோகங்கள்: 30
Previous | | Sanskrit | | English | | Next |