The sanctuary of Nikumbhila | Yuddha-Kanda-Sarga-082 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரர்களைத் தடுத்து, ராமனிருக்கும் இடத்தை நோக்கி அழைத்துச் சென்ற ஹனுமான்; நிகும்பிலைக்குச் சென்று வேள்வி நெருப்பில் காணிக்கைகள் செலுத்திய இந்திரஜித்...
சக்ரனின் அசனிக்கு சமமான ஸ்வனத்துடன் கூடிய {இந்திரனின் இடிக்கு இணையான ஒலியுடன் கூடிய} அந்த பயங்கர முழக்கத்தைக் கேட்ட வானரரிஷபர்கள் {குரங்குகளில் காளைகள்} ஏராளமானோர் {அங்கேயும், இங்கேயும்} பார்த்தபடியே சர்வ திசைகளிலும் ஓடினர்.(1) அப்போது மாருதாத்மஜனான {வாயுவின் மைந்தனான} ஹனுமான், தீனமடைந்தவர்களாக, விசன வதனத்துடன் தீனமடைந்து அச்சத்துடன் {தனித்தனியாக} சிதறி ஓடும் அவர்கள் அனைவரிடமும் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பிலவங்கமர்களே {தாவிச் செல்பவர்களே}, யுத்தத்தில் உற்சாகத்தைக் கைவிட்டு தீனவதனங்களுடன் ஏன் ஓடுகிறீர்கள்? உங்கள் சூரத்தனம் எங்கே போனது?(3) நான் போரில் முன்னேறிச் செல்கையில், என்னைப் பின்தொடர்வீராக. பின்வாங்குவது, நற்குலத்தில் பிறந்த சூரர்களுக்குப் பொருத்தமானதல்ல" {என்றான் ஹனுமான்}.(4)
மதிமிக்கவனான வாயுபுத்திரன் இவ்வாறு கூறியதும், மனம் மகிழ்ந்தவர்கள், பெருங்குரோதத்துடன் கூடியவர்களாக சைலசிருங்கங்களையும், மரங்களையும் எடுத்துக் கொண்டனர்.(5) கர்ஜித்தபடியே ராக்ஷசர்களைத் தாக்கிய வானரரிஷபர்கள், ஹனுமானைச் சூழ்ந்து கொண்டு, பெரும்போரில் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(6) எங்கும் அந்த வானரமுக்கியர்களால் சூழப்பட்ட அந்த ஹனுமான், தழல்களுடன் கூடிய ஹுதாசனனை {அக்னியைப்} போல சத்ரு வாஹினியை {பகைவரின் படையை} எரித்தான்.(7) வானர சைனியத்துடன் கூடிய அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, காலாந்தக யமனுக்கு ஒப்பாக ராக்ஷசர்களுக்கு அழிவை ஏற்படுத்தினான்.(8)
மஹாகபியான அந்த ஹனுமான், மஹா சோகத்துடனும், கோபத்தில் நிறைந்தும், ராவணியுடைய ரதத்தின் {ராவணனின் மகனான இந்திரஜித்துடைய தேரின்} மீது மஹத்தான பாறை ஒன்றை வீசினான்.(9) விரைந்து வரும் அதைக் கண்டதும், கீழ்ப்படியும் அஷ்வங்கள் பூட்டப்பட்ட ரதம் {குதிரைகள் பூட்டப்பட்ட தேர்} சாரதியால் வெகு தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.(10) வீசப்பட்ட பாறை, ரதத்தில் சாரதியுடன் அமர்ந்திருந்த அந்த இந்திரஜித்தை அடையாமல் வீணாகி, தரணியைப் பிளந்து புகுந்தது.(11) பாறை விழுந்ததில் ஏராளமான ராக்ஷசர்கள் காயமடைந்தனர். ராக்ஷசர்களின் சம்மு {படை}, அப்படி விழுந்த பாறையால் கலக்கமடைந்தது.(12)
பேருடல் படைத்த அந்த வனௌகசர்கள் நூற்றுக்கணக்கானோர், மரங்களையும், கிரிசிருங்கங்களையும் எடுத்துக் கொண்டு நாதம் செய்தபடியே அவனை {இந்திரஜித்தை} நோக்கி விரைந்தனர்.(13) பீமவிக்ரமர்களான வானரர்கள் போரில் இந்திரஜித்தை நோக்கி அவற்றை வீசினர். பிலவங்கமர்கள், விருக்ஷங்கள், பாறைகளாலான மஹாவர்ஷத்தை {பெரும் மழையைப்} பொழிந்து சத்ருக்களை அழித்து விதவிதமான ஸ்வனங்களில் நாதம் செய்தனர்.(14,15அ) கோர ரூபம் கொண்ட நிசாசரர்கள் {இரவுலாவிகள்}, மஹாபயங்கரர்களும், வீரியம் மிக்கவர்களுமான அந்த வானரர்களின் விருக்ஷங்களால் தாக்கப்பட்டவர்களாக போர்க்களத்தில் புரண்டு கொண்டிருந்தனர்.(15ஆ,16அ)
தன் சைனியம் வானரர்களால் பீடிக்கப்படுவதைக் கண்ட அந்த இந்திரஜித் குரோதமடைந்த போது, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பகைவர்களை எதிர்த்துச் சென்றான்.(16ஆ,17அ) சைனியத்தால் சூழப்பட்டிருந்த அந்த திட விக்ரமன் {இந்திரஜித்}, சர ஓகங்களை {கணை வெள்ளத்தை} ஏவி ஏராளமான கபிசார்ந்தூலர்களை {குரங்குகளில் புலிகளைக்} கொன்றான்.(17ஆ,18அ) போரில் அவனைப் பின்தொடர்ந்து சென்றவர்களும், சூலங்கள், அசனிகள், கட்கங்கள், பட்டிசங்கள், கூடமுத்கரங்கள் ஆகியவற்றால் வானரர்களைக் கொன்றனர்.(18ஆ,19அ) மஹாபலவானான ஹனூமான், தண்டுகள், கிளைகளுடன் கூடிய சாலங்களையும் {சால மரங்களையும்}, பாறைகளையும் கொண்டு, பீம கர்மர்களான ராக்ஷசர்களுக்கு அழிவை ஏற்படுத்தினான்.(19ஆ,20அ)
அந்த ஹனுமான், பகைவரின் அனீகத்தை {படையைப்} பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த வனௌகசர்களிடம் {வனத்தில் வசிப்பவர்களான வானரர்களிடம் பின்வருமாறு} கூறினான், "பின்வாங்குங்கள். இந்த பலத்திடம் {படையிடம்} நாம் சாதிக்க வேண்டியது ஏதுமில்லை.(20ஆ,21அ) எவளின் நிமித்தம் ராமருக்குப் பிரியத்தைச் செய்ய விரும்பி, பிராணன்களைக் கைவிடும் அளவு விசேஷ முயற்சியுடன் யுத்தம் செய்கிறோமோ, அந்த ஜனகாத்மஜை {சீதை} கொல்லப்பட்டாள்.(21ஆ,22அ) இந்த அர்த்தத்தை {இச்செய்தியை} ராமருக்கும், சுக்ரீவருக்கும் தெரிவிப்போம். அவ்விருவரும் எதைச் செய்ய ஆயத்தமாகிறார்களோ, அதை நாம் செய்வோம்" {என்றான் ஹனுமான்}[1].(22ஆ,23அ) இவ்வாறு கூறிவிட்டு, சர்வ வானரர்களையும் அச்சமின்றி திரும்பி வரச் செய்த வானரசிரேஷ்டன் {ஹனுமான்}, தன் பலத்துடன் {படையுடன்} மெதுமெதுவாகத் திரும்பிச் சென்றான்.(23ஆ,24அ)
[1] உற்றதை உணர்த்தி பின்னைஉலகுடை ஒருவனோடும்இற்று உறின் இற்று மாள்வென்அன்று எனின் எண்ணன் எண்ணிசொற்றது செய்வென் வேறு ஓர் பிறிதுஇலன் துணிவிற்றி என்னாபொன் தண்டந்தோளன் வீரன்பொன் அடி மருங்கில் போனான்- கம்பராமாயணம் 8892ம் பாடல், யுத்த காண்டம், மாயா சீதைப் படலம்பொருள்: "நடந்ததைத் தெரிவித்த பிறகு {ராமன்} உயிர் நீங்கினால் உலகுடைய அவனோடு யானும் மாள்வேன். இல்லையாயின் {ராமனின்} கருத்தை அறிந்து அவன் சொன்னதைச் செய்வேன். வேறு ஒரு செயலும் நான் செய்யமாட்டேன் இதுவே என் துணிவு" என்று பொன்னிறமான பெரிய தோளை உடைவன் {ஹனுமான்}, வீரனின் {ராமனின்} அழகிய திருவடிகளை நெருங்கினான்.
அந்த துஷ்டாத்மா {இந்திரஜித்}, எங்கே ராகவன் இருக்கிறானோ அங்கே திரும்பிச் செல்லும் ஹனூமந்தனைக் கண்டபோது, ஹோமம் செய்ய {பலி / காணிக்கை செலுத்த} விரும்பி நிகும்பிலை எனும் சைத்தியத்திற்கு {கோவிலுக்குச்} சென்றான்[2].(24ஆ,25அ) நிகும்பிலையில் அமர்ந்திருந்த இந்திரஜித் பாவகனின் ஹோமம் செய்தான் {வேள்வி நெருப்பில் பலி / காணிக்கை செலுத்தினான்}.{25ஆ} யஜ்ஞ பூமியை அடைந்து அந்த ராக்ஷசனால் ஹோமம் செய்யப்பட்டபோது, மாமிசத்தையும், சோணிதத்தையும் உண்டு வேள்வி நெருப்பும் ஜுவலித்தது.(25ஆ,26) ஹோமத்தில் சோணிதத்தால் ஆகுதி செய்யப்பட்ட அந்த அக்னியில் தீவிரமான தழல்கள் உதித்து, மாலை சந்தியை அடைந்த ஆதித்யனைப் போன்று காணப்பட்டது.(27)
[2] கம்பன் கழகத்தின் கம்பராமாயணத்தில் உள்ள நிகும்பலை யாகப் படலத்தின் முன்னுரையில், "இந்திரசித்து போரில் வெற்றி பெறுதல் குறித்து 'நிகும்பலை' என்ற விடத்தில் அமைந்த கோயிலில் சென்று வேள்வி செய்தமையைப் பற்றிக் கூறும் படலம், "நிகும்பலை யாகப்படலம்" எனப் பெயர் பெற்றது. இது சில ஏடுகளில் நிகும்பலைப் படலம் எனவும், "நிகும்பலையாகப் படலம்" எனவும் குறிக்கப்பெற்றுள்ளது. முதல் நூலில், "நிகும்பிலை" என்றே உள்ளது. இச்சொல் இலங்கையின் மேற்குத் திசையிலுள்ள குகையினையும் அங்குள்ள பத்திரகாளியையும் குறிக்கும் என வாசஸ்பதிய நிகண்டு கூறும்.
விதானவித்தான {செய்வனவற்றை நன்கு அறிந்தவனான} இந்திரஜித், அப்போது, ராக்ஷசர்களின் நலனுக்காக ஹவ்யத்தை விதிப்படி ஹோமம் செய்தான். நயாநயங்களை அறிந்தவர்களான {செய்யத்தக்கவற்றையும், செய்யத்தகாதவற்றையும் அறிந்த} அந்த ராக்ஷசர்களும் பார்த்தபடியே காத்து நின்றனர்.(28)
யுத்த காண்டம் சர்க்கம் – 082ல் உள்ள சுலோகங்கள்: 28
Previous | | Sanskrit | | English | | Next |