Seetha in Pushpaka | Yuddha-Kanda-Sarga-047 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமலக்ஷ்மணர்களைக் காத்த வானரர்கள்; சீதையை அழைத்துச் சென்று போர்க்களத்தைக் காட்டுமாறு ஆணையிட்ட ராவணன்; இராமன் தரையில் கிடப்பதைக் கண்டு அழுத சீதை...
அந்த ராவணாத்மஜன் {இந்திரஜித்}, தன் அர்த்தத்தை நிறைவேற்றிவிட்டு, லங்கைக்குள் நுழைந்த போது, வானரரிஷபர்கள் ராகவனைச் சூழ்ந்து கொண்டு ரக்ஷித்தனர்.(1) ஹனுமான், அங்கதன், நீலன், சுஷேணன், குமுதன், கஜன், கவாக்ஷன், சரபன், கந்தமாதனன்,{2} ஜாம்பவான், ரிஷபன், சுந்தன், ரம்பன், சதபலி, பிருது உள்ளிட்டோர் அனைத்து இடங்களில் இருந்தும் மரங்களை எடுத்துக் கொண்டனர்.{3} திசைகள் எங்கும் கிடைமட்டமாகவும், மேல்நோக்கியும் விழிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த வானரர்கள், ஒரு புல் அசைந்தாலும் ராக்ஷசர்கள் நடமாடுகின்றனர் என்று நினைத்தனர்.(2-4)
இராவணனும், பெரும் மகிழ்ச்சியடைந்தவனாகத் தன் மகன் இந்திரஜித்தை அனுப்பி வைத்தான். பிறகு, சீதையை காவல் காக்கும் ராக்ஷசிகளை அழைத்தான்.(5) சாசனத்தின்படியே {ராவணனின் ஆணைப்படியே} ராக்ஷசிகளும், திரிஜடையும் வந்து சேர்ந்தனர். அப்போது அந்த ராக்ஷசாதிபன் மகிழ்ச்சியுடன் அந்த ராக்ஷசிகளிடம் {பின்வருமாறு} சொன்னான்:(6) “இராமலக்ஷ்மணர்கள் இந்திரஜித்தால் கொல்லப்பட்டனர் என்பதை வைதேஹியிடம் சொல்வீராக. அந்தப் புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} ஏற்றிச் சென்று, போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்களை {அவளுக்குக்} காட்டுவீராக.(7) எவனை ஆசரிப்பதில் {சார்ந்திருப்பதில்} செருக்குற்று என்னை நெருங்காதிருக்கிறாளோ, அத்தகையவளுடைய பர்த்தா {கணவன் ராமன்}, ரணமூர்த்தத்தில் {போர்க்களத்தில்} தன் சகோதரனுடன் {லக்ஷ்மணனுடன்} சேர்த்து கொல்லப்பட்டான்.(8) மைதிலியான சீதையும், கவலை மறந்து, எதிலும் ஆசையற்று சர்வ ஆபரண பூஷிதையாக {சகல ஆபரணங்களையும் அணிந்தவளாக} என்னை அணுகுவாள்.(9) இராமனும், லக்ஷ்மணனும் இந்தப் போர்க்களத்தில் காலனின் வசப்பட்டதைக் கண்டு, வேறு கதியில்லாத அந்த விசாலாக்ஷி {நீள்விழியாள்}, வேறு எதையும் எதிர்பார்க்காமல் தானாகவே என்னை அடைவாள்” {என்றான் ராவணன்}.(10,11அ)
துராத்மாவான அந்த ராவணனின் அந்த வசனத்தைக் கேட்ட ராக்ஷசிகள், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டுப் புஷ்பகம் {புஷ்பக விமானம்} இருந்த இடத்திற்குச் சென்றனர்.(11ஆ,12அ) அந்த ராக்ஷசிகள், ராவணனின் ஆணைப்படி புஷ்பகத்தை எடுத்துக் கொண்டு, அசோக வனிகையில் இருந்த மைதிலியை நெருங்கினர்.(12ஆ,13அ) அந்த ராக்ஷசிகள், பர்த்தா {கணவன் ராமன்} குறித்த சோகத்தில் மூழ்கியிருந்த அந்த சீதையை நெருங்கி அவளை புஷ்பக விமானத்தில் ஏற்றினர்.(13ஆ,14அ) பிறகு, திரிஜடையோடு கூடிய ராக்ஷசிகள், சீதையைப் புஷ்பகத்தில் ஏறச் செய்து, அந்த ராமலக்ஷ்மணர்களைக் காட்டச் சென்றனர்.(14ஆ,15அ) இராக்ஷசேஷ்வரன் ராவணன், மகிழ்ச்சியுடன் பதாகை, துவஜ மாலைகளால் லங்கையை அலங்கரித்து, ராகவனும், லக்ஷ்மணனும் ரணத்தில் {போர்க்களத்தில்}இந்திரஜித்தால் கொல்லப்பட்டனர் என்று அறிவித்தான்[1].(15ஆ,16)
[1] கம்பராமாயணத்தில் மறைந்திருந்து தாக்கிய இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் ராமலக்ஷ்மணர்கள் வீழ்கிறார்கள். அவர்கள் வீழ்ந்த செய்தியை தூதர்கள் ராவணனிடம் அறிவிக்கிறார்கள். இராவணன் மகிழ்ச்சியடைந்து, நகரத்தை அலங்கரிக்கச் சொல்லிவிட்டு, ராக்ஷசிகளிடம் சீதையை புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்று அந்த வீரர்கள் இருவரும் வீழ்ந்து கிடப்பதைக் காட்டச் சொல்கிறான்.தெய்வ மானத்திடை ஏற்றிமனிசர்க்கு உற்ற செயல் எல்லாம்தய்யல் காணக் காட்டுமின்கள்கண்டால் அன்றி தனது உள்ளத்துஐயம் நீங்காள் என்று உரைக்கஅரக்கர் மகளிர் இரைத்து ஈண்டிஉய்யும் உணர்வு நீத்தாளைநெடும் போர்க்களத்தின் மிசை உய்த்தார்- கம்பராமாயாணம் 8673ம் பாடல், யுத்த காண்டம், சீதை களம் காண் படலம்பொருள்: தெய்வத்தன்மை வாய்ந்ததில் {புஷ்பக விமானத்தில் சீதையை} ஏற்றி, மனிதர்களுக்கு {ராமலக்ஷ்மணர்களுக்கு} நேர்ந்த கதி அனைத்தையும் அந்தப் பெண் காணுமாறு காட்டுங்கள். கண்டாலன்றி அவளது உள்ளத்தில் உள்ள ஐயம் நீங்காது” என்று {ராவணன்} சொன்னதும், ராக்ஷசிகள் ஆரவாரம் செய்தபடியே நெருங்கி, {இவ்வுலகில்} உயர்ந்திருக்க வேண்டும் என்ற உணர்ச்சியற்றவளை {சீதையை} பெரும்போர்க்களத்தின் மேலாக அழைத்துச் சென்றனர்.
திரிஜடையுடன் விமானத்தில் சென்ற சீதை, சர்வ வானர சைனியமும் வீழ்ந்து கிடப்பதைக் கண்டாள்.(17) பிஷிதாசனர்கள் {ராக்ஷசர்கள்} பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பதையும், வானரர்கள் அதிதுக்கத்துடன் ராமலக்ஷ்மணர்களின் அருகில் இருப்பதையும் கண்டாள்.(18) பிறகு சீதை, ராமனும், லக்ஷ்மணனும் சரங்களால் பீடிக்கப்பட்டு, நனவிழந்து, சரதல்ப சயனத்தில் கிடப்பதைக் கண்டாள்.{19} அந்த வீரர்கள் இருவரும், கவசங்கள் அற்று, விற்கள் நழுவி, சர்வ அங்கங்களும் சாயகங்களால் துளைக்கப்பட்டு, சரஸ்தம்பத்தில் தரையில் கிடந்தனர்.(19,20)
உடன்பிறந்தோரும், பெரும் வீரர்களும், புருஷ ரிஷபர்களும் {மனிதர்களில் காளைகளும்}, புண்டரீகாக்ஷர்களுமான {தாமரைக் கண்களைக் கொண்டவர்களுமான} அவ்விருவரும், பாவகீயின் குமாரர்கள் {அக்னியின் மகன்களான சகன், விசாகன் என்ற} இருவரைப் போல சயனத்தில் கிடப்பதைக் கண்டாள்.{21} நரரிஷபர்களான {மனிதர்களில் காளைகளான} அவ்விருவரும் சரதல்பத்தில் பரிதாப நிலையில் கிடப்பதால் துக்கத்தில் மூழ்கி கருணைக்குரிய வகையில் சீதை அழுது புலம்பினாள்.(21,22) களங்கமில்லா அங்கங்களைக் கொண்டவளும், கருவிழியாளுமான ஜனகாத்மஜை {ஜனகனின் மகளுமான சீதை}, பர்த்தாவும் {தன் கணவனும்}, லக்ஷ்மணனும் புழுதியில் கிடப்பதைக் கண்டு கதறி அழுதாள்.(23) அவள் {சீதை}, தேவர்களின் மகன்களுடைய பிரபாவத்தைக் கொண்டவர்களும், உடன்பிறந்தோருமான அவர்களைக் கண்டு, கண்ணீருடன் சோகத்தால் பீடிக்கப்பட்டு, அவர்கள் மாண்டனர் என்று நினைத்து துக்கத்தில் மூழ்கியவளாக இந்த வாக்கியத்தைக் கூறினாள்.(24)
யுத்த காண்டம் சர்க்கம் – 047ல் உள்ள சுலோகங்கள்: 24
Previous | | Sanskrit | | English | | Next |