Condemnation of Indrajith | Yuddha-Kanda-Sarga-015 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விபீஷணனைக் கண்டித்த இந்திரஜித்; இந்திரஜித்துக்கு மறுமொழி கூறிய விபீஷணன்...
மஹாத்மாவும், நைர்ருதயூதமுக்யனுமான {ராக்ஷசத் தலைவர்களில் முக்கியமானவனுமான} இந்திரஜித், அங்கே பிருஹஸ்பதிக்குத் துல்லியமான மதியைக் கொண்ட விபீஷணனின் அந்தச் சொற்களை யத்னத்துடன் கேட்டு, {பின்வரும்} வசனத்தைக் கூறினான்:(1) "கனிஷ்ட தாதா {சிறிய தந்தையே}, என்ன சொன்னீர்? உமது வாக்கியம் அர்த்தமற்றதாகவும், பயங்கரப் பீதியில் சொல்வதாகவும் இருக்கிறது. இந்தக் குலத்தில் பிறவாதவன் கூட இத்தகையனவற்றைப் பேச மாட்டான்; செய்யவும் மாட்டான்.(2) இந்தக் குலத்தில், கனிஷ்டதாதா {சிற்றப்பர்} விபீஷணர் என்ற இந்தப் புருஷர் ஒருவரே, சத்வமும் {பலமும்}, வீரியமும், பராக்கிரமமும், தைரியமும், சௌரியமும் {மன உறுதியும்}, தேஜஸ்ஸும் அற்றவராக இருக்கிறார்.(3)
அந்த மானுஷ ராஜபுத்திரர்கள் இருவரைக் குறித்து என்ன சொன்னீர்? நம்மில் சாதாரண ஏக ராக்ஷசனால் கொல்லப்படக்கூடியவர்களே இவர்கள். பயந்தவரே, ஏன் பீதியடைகிறீர்?(4) அப்போது {ஒருகாலத்தில்}, திரிலோகநாதனும், தேவராஜனுமான சக்ரன் {இந்திரன்} அப்படியே பூமிதளத்தில் {என்னால்} வீழ்த்தப்பட்டான். சர்வ தேவகணங்களும் பயத்தால் பீடிக்கப்பட்டு திசைகளெங்கும் ஓடின.(5) பிளிறிக்கொண்டே ஓடிவந்த {இந்திரனின் யானையான} ஐராவதத்தை நான் பூமியில் வீழ்த்தினேன். மேலும் அதன் தந்தங்களை பிடுங்கி, மொத்த தேவகணங்களையும் நான் விரட்டினேன்.(6) ஸுரர்களின் {தேவர்களின்} செருக்கை அழித்து, உத்தம தைத்தியர்களுக்கே {அசுரர்களுக்கே} சோகத்தை உண்டாக்கிய அத்தகைய வீரியம் கொண்ட நான், பிராக்ருத மனுஷ்யர்களான நரேந்திராத்மஜர்களுக்கு {சாதாரண மனிதர்களும், மனிதர்களின் தலைவனுடைய மகன்களுமான ராமலக்ஷ்மணர்களை எதிர்ப்பதற்கு} சக்தனல்லேன் என்பது எப்படி?" {என்றான் இந்திரஜித்}.(7)
அப்போது, தடுப்பதற்கரியவனும், மஹௌஜஸுமான {அளவில்லா ஆற்றலுடையவனுமான} இந்திரகல்பனின் {இந்திரனுக்கு நிகரான இந்திரஜித்தின்} வசனத்தைக் கேட்டு, சஸ்திரங்கள் ஏந்தியவர்களில் சிறந்தவனான விபீஷணன் இந்த மஹா அர்த்தம் பொருந்திய வசனத்தைச் சொன்னான்:(8) "தாதா {ஐயா}, ஆலோசனைகளை நிச்சயிக்க முடியாத பாலனாகவும், பக்குவப்படாத புத்தியைக் கொண்டவனாகவும் நீ இருக்கிறாய். எனவே, ஆத்மவிநாசத்திற்குரிய {நமக்கு அழிவைத் தரக்கூடிய}, அர்த்தஹீனமான {அர்த்தமில்லாத} சொற்களை முன்பின் தொடர்பில்லாமல் சொல்கிறாய் {பிதற்றுகிறாய்}[1].(9) இந்திரஜித்தே, ராகவரிடமிருந்து இவருக்கு இத்தகைய நாசம் ஏற்படும் எனக் கேட்டும், மோஹத்தால் ஏற்கிறாய். இராவணரின் புத்திரன் என அழைத்துக் கொண்டும், மித்ரனின் முகங்கொண்ட சத்ருவாக நீ இருக்கிறாய்.(10)
[1] நூலினால் நுணுங்கிய அறிவு நோக்கினைபோலுமால் உறு பொருள் புகலும் பூட்சியோய்காலம் மேல் விளை பொருள் உணரும் கற்பு இலாப்பால நீ இனையன பகரற்பாலையோ (6136)கருத்து இலான் கண் இலான் ஒருத்தன் கைக்கொடுதிருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய்விருத்த மேதகையவர் வினைஞர் மந்திரத்துஇருத்தியோ இளமையால் முறைமை எண்ணலாம் (6137)- கம்பராமாயணம், 6136, 6137 பாடல்கள், யுத்த காண்டம், இராவணன் மந்திரப்படலம்பொருள்: "பல நூல்களையும் கற்ற நூலறிவாலும், நுணுக்கமான அறிவாற்றலாலும் {எதிர்காலத்தை} நோக்கினாய் போலும். காலத்தையும், பின்னால் நிகழும் காரியத்தையும் உணர்கின்ற அறிவற்ற சிறுவா, நேர இருப்பதைக் கூறும் மன உறுதியுடன் பேசுகிறாய். நீ இவற்றைப் பேசுதல் தகுமோ?(6136) கருத்து இல்லாதவனும், கண்ணில்லாதவனுமான ஒருவன், சித்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இதனை நன்கு திருத்தி அமைப்பேன் என்பது போல நீ பேசுகிறாய். வயது முதிர்ந்த மேலான அறிஞரும், சிறந்த வினையம் உடையவர்களும் இருக்கத்தகுந்த மந்திராலோசனை சபையில் நீ இருக்கலாமோ? இளமையினால் முறைமைகளை எண்ணி பார்க்காதவனே" {என்றான் விபீஷணன்}.(6137)
நீ வதைக்கப்படத்தகுந்தவனாகவே இருக்கிறாய். துணிகரமுயற்சியை விரும்புகிறவனும், பாலனும் {சிறுவனும்}, துர்மதி படைத்தவனுமான உன்னை, ஆலோசனையை {இந்த ஆலோசனைக்கூட்டத்தைக்} கெடுப்பதற்காக இங்கே பிரவேசிக்கச் செய்தவரும் {ராவணரும்} வதைக்கப்படத் தகுந்தவரே.(11) இந்திரஜித்தே, மூடனும், தற்புகழ்ச்சி செய்து கொள்பவனும், பணிவில்லாதவனும், கொடிய ஸ்வபாவம் கொண்டவனும், அல்ப மதியுடையவனும், துராத்மாவும், மூர்க்கனும், ஆதீத துர்மதி படைத்தவனுமான நீ பாலனைப் போலப் பேசிக் கொண்டிருக்கிறாய்.(12) யுத்தத்தில் ராகவரால் ஏவப்படுபவையும், பிரஹ்மதண்டத்திற்கு ஒப்பாகப் பிரகாசிப்பவையும், தீப்பொறிகளுடன் கூடியவையும், காலனுக்கு ஒப்பான ரூபம் கொண்டவையும், யமதண்டத்தின் வடிவானவையுமான பாணங்களை எவனால் சகித்துக் கொள்ள முடியும்?(13)
இராஜரே {ராவணரே}, தனங்கள், ரத்தினங்கள், பூஷணங்கள் {ஆபரணங்கள்}, திவ்ய வஸ்திரங்கள், சித்திர மணிகள் ஆகியவற்றுடன் சீதா தேவியை ராமரிடம் கொடுத்துவிட்டு, சோகம் நீங்கியவராக இங்கே நிலைத்திருப்பீராக" {என்றான் விபீஷணன்}.(14)
யுத்த காண்டம் சர்க்கம் – 015ல் உள்ள சுலோகங்கள்: 14
Previous | | Sanskrit | | English | | Next |