Hanuman captured | Sundara-Kanda-Sarga-48 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமானுக்கும், ராவணனின் மகனான இந்திரஜித்துக்கும் இடையில் உண்டான மோதல்; இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட ஹனுமான்; ராவணனிடம் இழுத்துச் செல்லப்பட்டது...
பிறகு, மஹாத்மாவான அந்த ரக்ஷோதிபதி {ராவணன்}, குமாரன் அக்ஷன் ஹனூமதனால் கொல்லப்பட்டதால் கோபத்தில் நிறைந்தாலும், தன் மனத்தை ஒருநிலைப்படுத்திக் கொண்டு, தேவகல்பனான {தேவர்களின் குணங்களைக் கொண்டவனான} இந்திரஜித்துக்கு {பின்வருமாறு} ஆணையிட்டான்:(1) "நீ அஸ்திரவித்தாகவும் {அஸ்திரங்களில் பயிற்சி உள்ளவனாகவும்}, சஸ்திரங்களை அறிந்தவர்களில் முதன்மையானவனாகவும், ஸுராஸுரர்களுக்கும் {தேவர்களுக்கும், அசுரர்களுக்கும்} சோகத்தைத் தரக்கூடியவனாகவும் இருக்கிறாய். பிதாமஹனை {பிரம்மனை} ஆராதனை செய்து பெற்ற அஸ்திரங்களைக் கொண்டு, நீ செய்த கர்மங்களை {செயல்களை} இந்திரனுடன் கூடிய ஸுரர்களும் {தேவர்களும்} கண்டிருக்கின்றனர்.(2) ஸுரர்களுடன் கூடிய மருத்கணங்கள் ஸுரேஷ்வரனுடன் {தேவர்களும், வாயுக்களும் இந்திரனுடன்} சேர்ந்து வந்தாலும், சமரில் உன் அஸ்திரபலத்தைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.(3) போரில் {உன்னை எதிர்த்தும்} சிரமமடையாமல் இருப்பதற்கு மூவுலகங்களிலும் யாருமில்லை. மதிசத்தமனான நீயே உன்னைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடியவன். புஜவீரியத்தாலும், தபத்தாலும் பாதுகாக்கப்படுகிறாய். தேசகாலங்களுக்கு ஏற்ப நடந்து கொள்வது குறித்து அறிந்திருக்கிறாய்.(4)
போர் கர்மங்களில் உன்னால் சாத்தியமாகாதது எதுவுமில்லை. முன் ஆலோசனையில் மதிமிக்க உன்னால் செய்ய முடியாத காரியம் ஏதுமில்லை. மூவுலகங்களிலும் உன் பலத்தையும், உன் அஸ்திர பலத்தையும் அறியாதவர்கள் எவருமில்லை.(5) உன் தபத்தின் பலமும், போரில் பராக்கிரம பலமும் எனக்கு ஈடானது. நிச்சயம் அர்த்தம் நிறைவேறும் என்பதால், போர் அழுத்தத்தில் உன்னை ஈடுபடுத்துவதில் என் மனம் சிரமம் அடைவதில்லை.(6) சர்வ கிங்கரர்களும், ராக்ஷசன் ஜம்புமாலியும், வீரர்களான அமாத்யபுத்திரர்களும் {மந்திரிகுமாரர்கள் எழுவரும்}, அஷ்வங்கள், நாகங்கள், ரதங்கள் நிறைந்த பலத்துடன் {குதிரைகள், யானைகள், தேர்கள் நிறைந்த படையுடன்} கூடிய பஞ்ச சேனாக்ரர்களும் {சேனாபதிகள் ஐவரும்} கொல்லப்பட்டனர்.(7,8அ) உன் அன்பிற்குரிய சஹோதரன் அக்ஷகுமாரனும் கொல்லப்பட்டான்[1]. அரிசூதனா {பகைவரை அழிப்பவனே}, எந்த சாரம் {வலு} என்னிடமும், உன்னிடமும் உள்ளதோ, அஃது அவர்கள் அனைவரிடமும் இல்லை[2].(8ஆ,9அ)
[1] சென்ற சர்க்கத்தின் முதல் அடிக்குறிப்பில், "அக்ஷன் என்பவன் இந்திரஜித்தின் தம்பி என்ற குறிப்பு கம்பராமாயணத்தில் காணக்கிடைக்கிறது" என்று சொல்லப்பட்டது. வால்மீகி ராமாயணம், சுந்தரகாண்டம் 58ம் சர்க்கம் 126ம் சுலோகத்தில் இந்திரஜித்தை ராவணனின் இரண்டாம் மகன் என ஹனுமான் குறிப்பிடுகிறான்.
[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மற்றொரு உரையின்படி, "ஓ போர்வீரர்களில் சிறந்தவனே, உன் பலத்தையும், பகைவனின் பலத்தையும் கருத்தில் கொண்டு, இதற்கு மேலும் அவனால் நமது படைக்குப் பயங்கர இழப்பு ஏற்பட்டுவிடாதபடி முயற்சி செய்வாயாக" என்ற பொருள் இந்த சுலோகத்திற்கு வரும்" என்றிருக்கிறது.
மதிமானே, இந்தக் கபியின் {குரங்கின்} மஹத்தான பலத்தையும், பிரபாவத்தையும் கண்டு, உன் ஆத்மசாரத்தையும் {ஆத்மபலத்தையும்} கருத்தில் கொண்டு உன் பலத்தின் ரூபத்தையும், வேகத்தையும் வெளிப்படுத்துவாயாக.(9ஆ,இ) அஸ்திரவித்துகளில் வரிஷ்டனே {அஸ்திரப் பயிற்சியுள்ளவர்களில் முதன்மையானவனே}, உன் பலத்தையும், பகைவனின் பலத்தையும் கருத்தில் கொண்டு, அவனை {ஹனுமானை} நெருங்கி, படையின் அழிவைத் தடுப்பது எப்படியோ, அப்படியே சத்ருவை சாந்தமடையச் செய்பவனாக உன்னை வெளிப்படுத்திக் கொள்வாயாக.(10) வீரா, விசாலசாரம் கொண்ட அவனிடம் சேனாகணங்களுடன் {பெருஞ்சக்தி கொண்ட அந்தக் குரங்கிடம் பெரும்படையுடன்} செல்லாதே. வஜ்ரமும் பயன்படாது. ஒப்பற்ற கதியைக் கொண்ட மாருதனை {வாயுதேவனை} போலவும், எந்த ஆயுதத்தாலும் அழிக்கப்பட முடியாத அக்னிகல்பத்தை {வேள்வி நெருப்பைப்} போலவும் அவன் இருக்கிறான்.(11)
இவ்வாறு அர்த்தத்தைப் புரிந்து கொண்டும், சொந்த கர்மத்தை நிறைவேற்றும் ஆத்ம சமாஹிதத்துடன், அஸ்திரவீரியத்தையும், திவ்ய தனுசையும் நினைவில் கொண்டும் சென்று தடையில்லாமல் கர்மத்தைத் தொடங்குவாயாக.(12) நான் உன்னை இவ்வாறு அனுப்பும் இந்த மதி {எண்ணம்} சிறந்ததல்ல. இஃது ராஜதர்மங்களின் அடிப்படையிலான க்ஷத்திரிய மதியாகும்.(13) அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, போரில் நானாவித சஸ்திரங்களில் நிபுணத்துவத்தை அவசியம் வெளிப்படுத்த வேண்டும். போரில் ஜயமே விரும்பத்தக்கது" {என்றான் ராவணன்}.(14)
தக்ஷனின் மகன்களுடைய {தேவர்களின்} பிரபாவத்தைக் கொண்ட வீரன் {இந்திரஜித்}, தளர்வில்லா மனத்துடனும், போரில் தீர்மானமான புத்தியுடனும் தலைவனை {ராவணனை} பிரதக்ஷிணம் செய்தான் {வலம்வந்தான்}.(15) யுத்தத்தில் செருக்குடைய இந்திரஜித், இஷ்டர்களான தன் கணங்களால் பிரதிபூஜை செய்யப்பட்டவனாக {விருப்பத்திற்குரிய தன் மக்களால் வணங்கப்பட்டவனாக}, பெரும் உற்சாகத்துடன் போருக்குப் புறப்பட்டான்.(16) பத்மங்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், மஹாதேஜஸ்வியும், ஸ்ரீமானுமான ராக்ஷசாதிபதிசுதன் {ராவணனின் மகன் இந்திரஜித்}, பர்வகால சமுத்திரத்தை {பௌர்ணமி காலக் கடலைப்} போல வெளிப்பட்டான்.(17) இந்திரனுக்கு நிகரானவனான அந்த இந்திரஜித், கோரைப் பற்களுடன் கூடியவையும், பக்ஷிராஜனுக்கு {கருடனுக்குத்} துல்லியமான வேகம் கொண்டவையுமான நான்கு வியாளங்கள் {புலிகள்} பூட்டப்பட்டதும்[3], தடையில்லா வேகம் கொண்டதுமான ரதத்தில் ஏறினான்.(18)
[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்திரஜித்தின் தேரில் இருந்த வியாளங்கள் என்ற சொல், புலிகள் என்றே பொதுவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனினும், வியாளம் என்பது புலி, சிறுத்தை, சிங்கம், யானை, பாம்பு என எந்தக் கொடும் விலங்காகவும் இருக்கலாம்" என்றிருக்கிறது.
தன்விகளில் {வில்லாளிகளில்} சிறந்தவனும், சஸ்திரங்களை அறிந்தவனும், சஸ்திரங்களில் திறம்பெற்றவர்களில் சிறந்தவனுமான அந்த ரதீ {தேர்வீரனான இந்திரஜித்}, எங்கே ஹனுமான் இருந்தானோ, அங்கே சீக்கிரமாகச் சென்றான்.(19) அந்த ரதத்தின் கோஷத்தையும், கார்முகத்தின் {வில்லின்} நாணொலியையும் கேட்ட அந்த ஹரிவீரன் {குரங்குகளில் வீரனான ஹனுமான்}, உற்சாகத்துடன் கூடிய மகிழ்ச்சியை அடைந்தான்.(20) இரணபண்டிதன் {போர்க்கலையில் நிபுணனான இந்திரஜித்}, கல்லில் கூர்த்தீட்டப்பட்ட சாயகங்களுடன் {அம்புகளுடன்} கூடிய மஹத்தான வில்லை எடுத்துக்கொண்டு, ஹனுமந்தனை நோக்கிச் சென்றான்.(21) போரில் மகிழ்ச்சி அடைபவனான அவன் {இந்திரஜித்}, கையில் வில்லுடன் போரிடச் சென்றபோது, சர்வதிசைகளும் கலக்கமுற்றன; ரௌத்திரமான மிருகங்கள் பலவிதங்களில் கூச்சலிட்டன.(22) நாகர்களும், யக்ஷர்களும், சக்ரசாரர்களான {வானத்தில் திரிபவர்களான} மஹரிஷிகளும், சித்தர்களும், பக்ஷிகணங்களும் {பறவைக்கூட்டங்களும்}, வானத்தில் சூழ்ந்து வந்து, ஒன்றுகூடி, பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியவர்களாக உரக்கக் கூச்சலிட்டனர்.(23)
இரதத்தில் துரிதமாக வரும் இந்திரஜித்தைக் கண்ட கபி {குரங்கான ஹனுமான்}, மஹாநாதத்துடன் முழங்கி, வேகமாக வளர்ந்தான் {தன்னுடலைப் பெருக்கிக் கொண்டான்}.(24) திவ்ய ரதத்தில் ஏறி, சித்திரக் கார்முகத்துடன் {அழகிய வில்லுடன்} வந்த இந்திரஜித், தனுவை {தன் வில்லை} வளைத்து இடிமுழக்கம் போன்ற ஒலியை எழுப்பினான்.(25) அப்போது, அதிவேகம் கொண்டவர்களும், மஹாபலம் பொருந்தியவர்களும், போரில் அச்சமற்றவர்களுமான கபியும் {குரங்கான ஹனுமானும்}, ரக்ஷோபதியின் மகனும் {ராவணனின் மகன் இந்திரஜித்தும்} என அவ்விருவரும், ஸுராஸுரேந்திரர்களைப் போல வைரத்துடன் {தேவர்களின் இந்திரனும், அசுரர்களின் இந்திரனும் மோதிக் கொள்வதைப் போல பகையுடன்} மோதிக் கொண்டனர்.(26) தன் உடலைப் பெருகச் செய்த அளவிடமுடியாத பலம் கொண்டவன் {ஹனுமான்}, மஹாரதனும், தனுவைத் தரித்தவனுமான அந்த வீரனின் {இந்திரஜித்தின்} சர வேகத்தைத் தடுத்து, தன் பிதாவின் மார்க்கத்தில் {வாயுமார்க்கத்தில்} திரிந்து கொண்டிருந்தான்.(27)
பிறகு, பலமிக்க வீரர்களை அழிப்பவனான வீரன் {இந்திரஜித்}, நீளமானவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், அழகிய இறகுகளைக் கொண்டவையும், காஞ்சன சித்திர {பொன்னாலான அழகிய} புங்கங்களைக் கொண்டவையும், நுனி வளைந்தவையுமான சரங்களை வஜ்ரத்தின் வேகத்தில் ஏவினான்.(28) அப்போது, அந்த சியந்தனத்தின் {தேரின்} ஸ்வனத்தையும், மிருதங்கங்கள், பேரிகள், படஹங்கள் ஆகியவற்றின் ஸ்வனத்தையும், கார்முகத்தை {வில்லைச்} சுண்டும் கோஷத்தையும் கேட்டவன் {ஹனுமான்}, மீண்டும் குதித்தெழுந்தான்.(29) ஹரியும், மஹாகபியுமானவன் {ஹனுமான்}, லக்ஷியத்தை {இலக்கை} எட்டுபவனான அவனது லக்ஷியத்தை {இந்திரஜித்தின் இலக்கை / நோக்கத்தை} முழுமையாக வீணாகச் செய்தபடியே சரங்களின் அந்தரத்தில் {இடையே} வேகமாகத் திரிந்து கொண்டிருந்தான்.(30) அநிலாத்மஜனான ஹனுமான், அவனது சரங்களின் எதிரே நின்று, கைகளை விரித்தபடியே குதித்தெழுந்தான்.(31) வேகசம்பன்னர்களும், ரணகர்மவிசாரதர்களுமான {போரில் திறமைசாலிகளுமான} அவ்விருவரும், சர்வ பூதங்களின் மனத்தையும் கவரும் வகையில் உத்தம யுத்தம் புரிந்தனர்.(32)
ராக்ஷஸனால் ஹனூமதனின் அந்தரத்தையும் {ஏமாறும் சமயத்தையும்}, மாருதியால் அந்த மஹாத்மாவினுடையதையும் {இந்திரஜித்தின் அந்தரத்தையும்} அறியமுடியவில்லை. தேவர்களுக்கு சமமான விக்கிரமம் கொண்ட அவ்விருவரும் பரஸ்பரம் மோதிக் கொண்டதில், பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாக இருந்தார்கள்.(33) இலக்கை அடிப்பதில் நன்கு அறியப்பட்ட மஹாத்மாவான அவன் {இந்திரஜித்}, தவறாத சரங்களும், லக்ஷியம் திரும்பியதில் {இலக்கு தவறியதில்} மஹத்தான சிந்தனையில் ஆழ்ந்தான்.(34) அந்த கபி வதைக்க இயலாதவனாக இருப்பதைக் கருத்தில் கொண்ட ராக்ஷசராஜசுதன் {ராவணனின் மகன் இந்திரஜித்}, அந்த ஹரிவீர முக்கியனை {ஹனுமானை} எவ்வாறு நிக்கிரகம் செய்வது {அடக்குவது} என்பதற்கான ஒரு தீர்மானத்தை அடைந்தான்.(35) பிறகு, அஸ்திரங்களை அறிந்தவர்களில் சிறந்தவனும், மஹாதேஜஸ்வியுமான அந்த வீரன் {இந்திரஜித்}, ஹரிபிரவீரனை {ஹனுமானை} நோக்கி பிதாமஹனின் அஸ்திரத்தை {பிரம்மாஸ்திரத்தை} ஏவினான்.(36)
அஸ்திரங்களின் தத்துவத்தை அறிந்தவனும், மஹாபாஹுவுமான இந்திரஜித், அவனை வதைக்கப்பட இயலாதவனாக அறிந்து, அந்த அஸ்திரத்தால் மாருதாத்மஜனை {வாயு மைந்தன் ஹனுமானைக்} கட்டினான்.(37) அந்த வானரன் {ஹனுமான்}, ராக்ஷசனின் அஸ்திரத்தால் கட்டப்பட்டபோது அசைவற்றவனானான். அவன் மஹீதலத்தில் {தரையில்} விழுந்தான்[4].(38) அந்த ஹரிபிரவீரன் {ஹனுமான்}, அந்த அஸ்திரத்தால் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தபோது, பிரபுவின் {பிரம்மனின்} பிரபாவத்தால் தன் வேகம் குறையப்பெற்றவனாக, பிதாமஹனின் {பிரம்மனின்} அனுக்கிரகத்தை சிந்தனையில் கொண்டான்.(39) ஸ்வயம்பூவின் {பிரம்மனின்} மந்திரங்களால் மந்திரிக்கப்பட்ட பிரம்மாஸ்திரத்தையும், பிதாமஹனின் {பிரம்மன் தனக்களித்த} வரதானத்தையும் ஹனுமான் சிந்தனையில் கொண்டான்.(40) "லோககுருவின் {பிரம்மனின்} பிரபாவத்தால் அஸ்திரத்தின் கட்டில் இருந்து விடுபடும் சக்தி எனக்குக் கிடையாது என்று நினைத்தே இவ்வாறு ஆத்மயோனியின் அஸ்திரபந்தத்தை {தன்னையே தன் பிறப்பிடமாகக் கொண்ட பிரம்மனின் அஸ்திரத்தில் கட்ட பகைவன்} விதித்திருக்கிறான். இதற்கு நான் கீழ்ப்படிய வேண்டும்" {என்று நினைத்தான் ஹனுமான்}.(41)
[4] திண்ணென்யாக்கையைத் திசைமுகன் படை சென்று திருகஅண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின்கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடைநாள்தண்ணென் மாமதிகோளொடும் சாய்ந்தென சாய்ந்தான்- கம்பராமாயணம் 5799ம் பாடல், பாசப்படலம்பொருள்: வலிமைவாய்ந்த அனுமனின் உடலை பிரம்மனின் ஆயுதம் கட்ட, அண்ணல் மாருதி யுக முடிவில் குளிர்ந்த பூரணச் சந்திரன் பாம்புடன் வானத்தில் இருந்து விழுந்தது போல முன்பு தன் பின்னே வந்த தர்ம தேவன் கண்ணீரோடும், பொன்மயமான தோரண வாயிலோடும் கீழே சாய்ந்து விழுந்தான்.
அஸ்திரத்தின் வீரியத்தை நினைத்த அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, பிதாமஹனின் அனுக்கிரகத்தால் அதிலிருந்து விடுபடும் சக்தி தனக்கு இருப்பதையும் சிந்தித்து, பிதாமஹனின் ஆணைக்குக் கட்டுப்பட்டான்.(42) "அஸ்திரத்தால் கட்டப்பட்டவனாக இருந்தாலும், பிதாமஹன், மஹேந்திரன், அநிலன் {பிரம்மன், இந்திரன், வாயு} ஆகியோரால் ரக்ஷிக்கப்படும் எனக்கு பயம் உண்டாகவில்லை.(43) இராக்ஷசர்களால் கைப்பற்றப்பட்டாலும், எனக்கு மஹத்தான குணதரிசனமே புலப்படுகிறது {பெரும் பலனே தெரிகிறது}. இராக்ஷசேந்திரனுடன் {ராவணனுடன்} வாதிடலாம். எனவே, பகைவர்கள் என்னைக் கைப்பற்றட்டும்" {என்று நினைத்தான் ஹனுமான்}[5].(44)
[5] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஹனுமான் அங்ஙனம் ப்ரஹ்மாஸ்த்ரத்தின் வீர்யத்தை விசாரித்துத் தனக்கு முன்பு ப்ரஹ்மதேவன் முஹூர்த்த காலம் கடந்தவுடன் அவ்வஸ்த்ர பந்தம் விட்டுப்போகும்படி அனுக்ரஹித்திருந்த சக்தியையும் நன்காராய்ந்து ப்ரஹ்மதேவனது ஆஜ்ஞையை அனுசரித்துக் கட்டுண்டிருந்தனன். நான் ஸூர்யனை விழுங்கப் போனதுமுதல் என்னை ப்ரஹ்மதேவனும், தேவேந்திரனும், வாயுதேவனும் ரக்ஷித்துக் கொண்டிருப்பவராகையால் இவ்வஸ்த்ரத்தால் கட்டப்படினும் எனக்குப் பயம் யாதும் உண்டாகாது. ஒரு கால் ராக்ஷஸர்கள் என்னைப் பிடித்துக் கொள்ளினும் எனக்கு அது பெரிய குணத்தில் வந்து முடியும். அது யாதெனில் எனக்கு ராக்ஷஸேந்த்ரனாகிய ராவணனோடு ஸம்பாஷிக்க நேரும். ஆகையால் என்னைப் பகைவர் பிடித்துக் கொள்ளிலும் பிடித்துக் கொள்வார்களாக" என்றிருக்கிறது.
பரவீரஹந்தனும் {பகைவரின் வீரத்தை அழிப்பவனும்}, காரியத்தின் தன்மையை அறிந்தவனுமான அவன் {ஹனுமான்}, அர்த்தத்தை {நோக்கத்தை} நிச்சயித்துக் கொண்டு, அசைவற்றவனாகக் கிடந்து, பகைவர் பலரால் அணுகப்பட்டு, வலுக்கட்டாயமாகக் கைப்பற்றப்பட்டு, அவர்களால் அச்சுறுத்தப்பட்டவனாக நாதம் செய்தான் {முழங்கினான்}.(45) பிறகு, அந்த அரிந்தமன் அசைவற்றவனாகக் கிடப்பதைக் கண்ட ராக்ஷசர்கள், சணல் நார்களாலும், மரப்பட்டைகளாலும் அவனைக் கட்டினார்கள்.(46) "இராக்ஷசேந்திரன் {ராவணன்}, குதூஹலத்துடன் என்னைக் காண முயற்சிப்பான்" என்ற அர்த்தத்தை நிச்சயித்துக் கொண்டு, பகைவர்கள் பலவந்தமாகக் கட்டுவதையும், தூற்றுவதையும் அவன் {ஹனுமான்} ஏற்றுக் கொண்டான்.(47) சணலாலும், மரப்பட்டைகளாலும் கட்டப்பட்டிருந்த அந்த வீரியவான், வேறு பந்தனத்துடன் அந்த அஸ்திரபந்தனம் நிலைத்திருக்காது என்பதால் அஸ்திரத்தில் இருந்து விடுபட்டான்.(48)
வீரனான இந்திரஜித், மரப்பட்டைகளால் கட்டப்பட்டிருந்த அந்த கபிசத்தமன் {ஹனுமான்} அஸ்திரத்திலிருந்து விடுபட்டதை அறிந்தபோது, {பின்வரும்} சிந்தனையில் ஆழ்ந்தான், "வேறொன்றால் கட்டப்படுவதை அஸ்திரம் ஏற்காது.(49) அஹோ, நிறைவேறிய மஹத்தான கர்மம் அர்த்தமற்றுப் போகிறது. மந்திரகதியை ராக்ஷசர்கள் கருத்தில் கொள்ளவில்லை. மந்திரம் செயலற்றுப்போனால், மற்றொரு அஸ்திரம் இயக்கத்தக்கதல்ல. இனி அனைவரின் நிலையும் சந்தேகத்திற்கிடமானதே" {என்று நினைத்தான் இந்திரஜித்}.(50)
ஹனுமான், ராக்ஷசர்களால் இழுத்துச் செல்லப்பட்ட போதும், பந்தனத்தால் பீடிக்கப்பட்டபோதும், தான் அஸ்திரத்தில் இருந்து விடுபட்டதை அறிந்தானில்லை.(51) அப்போது, அந்த வானரன், கட்டைகளையும், முஷ்டிகளையும் கொண்டு குரூர ராக்ஷசர்களால் தாக்கப்பட்டு, ராக்ஷசேந்திரனின் சமீபத்திற்கு {ராவணனின் அருகில்} இழுத்துச் செல்லப்பட்டான்.(52) அஸ்திரத்திலிருந்து விடுபட்டாலும், மரப்பட்டைகளாலும், சூத்திரங்களாலும் {கயிறுகளாலும்} அவன் கட்டப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்ட இந்திரஜித், அதன்பிறகு, அந்த மஹாபலம்பொருந்திய ஹரிபிரவீரனை {ஹனுமானை}, கணங்களுடன் கூடிய ராஜனிடம் {பரிவாரத்துடன் கூடிய ராவணனிடம்} காட்டினான்.(53) மத்தமாதங்கத்தை போன்ற அந்த கபிவரோத்தமன் {மதம் கொண்ட யானையைப் போன்றவனும், சிறந்த குரங்குகளில் உத்தமனுமான அந்த ஹனுமான்} கட்டப்பட்டிருப்பதை ராக்ஷசேந்திரனான ராவணனிடம் ராக்ஷசர்கள் தெரிவித்தனர்.(54)
இராக்ஷசவீரர்கள், "யார் இவன்? யாருடையவன்? எங்கிருந்து வந்தவன்? இங்கு என்ன காரியம்? யாருக்காக வந்தான்?" என்ற கேள்விகளை அங்கே எழுப்பினர்.(55) பிறகு, பெருங்குரோதமடைந்த சில ராக்ஷசர்கள், பரஸ்பரம் தங்களுக்குள், "கொல்லப்பட வேண்டும்", "எரிக்கப்பட வேண்டும்", "பக்ஷிக்கப்பட {உண்ணப்பட} வேண்டும்" என்று சொல்லிக் கொண்டனர்.(56) அந்த மஹாத்மா {ஹனுமான்}, வேகமாக மார்க்கத்தைக் கடந்ததும், மஹாரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜனின் கிருஹத்தையும், ரக்ஷோதிபனின் பாதமூலத்தில் {ராவணனுடைய கால்களின் அருகில்} அமர்ந்திருக்கும் விருத்த பரிசாரகர்களையும் {முதிர்ந்த பணியாட்களையும்} அங்கே கண்டான்.(57)
மஹாதேஜஸ்வியான அந்த ராவணன், விகார முகங்களைக் கொண்ட ராக்ஷசர்களால் அங்கேயும் இங்கேயும் இழுத்து வரப்படும் கபிசத்தமனை {குரங்குகளில் முதன்மையான ஹனுமானைக்} கண்டான்.(58) பாஸ்கரனைப் போல ஒளிர்பவனும், தேஜோ பலம் பொருந்தியவனுமான ராக்ஷசாதிபனை கபிசத்தமனும் {ராவணனை ஹனுமானும்} கண்டான்.(59) அந்த தசானனன் {பத்து முகம் கொண்ட ராவணன்}, சினத்தால் சிவந்த கண்களை உருட்டியபடியே அந்தக் கபியை {குரங்கான ஹனுமானைக்} கண்டு, குலத்தாலும், சீலத்தாலும் {ஒழுக்கத்தாலும்} முதிர்ந்த முக்கிய மந்திரிகளிடம் அவனைக் குறித்து ஆணையிட்டான்.(60) காரியத்தின் அர்த்தம் குறித்தும், அர்த்தத்தின் மூலம் குறித்தும் கிரமப்படி அவர்களால் கேட்கப்பட்டபோது, அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, "நான் ஹரீஷ்வரரின் {சுக்ரீவரின்} முன்னிலையில் இருந்து வந்த தூதனாவேன்" என்று உடனே சொன்னான்.(61)
சுந்தர காண்டம் சர்க்கம் – 48ல் உள்ள சுலோகங்கள்: 61
Previous | | Sanskrit | | English | | Next |