Kumbhakarna set out | Yuddha-Kanda-Sarga-065 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மஹோதரனின் திட்டங்களைக் கண்டித்து, தீய சகுனங்களைப் பொருட்படுத்தாமல் போருக்குப் புறப்பட்ட கும்பகர்ணன்; அவனைக் கண்டு அஞ்சிய வானரர்கள்...
இவ்வாறு சொன்ன மஹோதரனை {அவ்வாறு சொல்லக்கூடாது என்று} கண்டித்த கும்பகர்ணன், தன்னுடன் பிறந்தவனும், ராக்ஷசசிரேஷ்டனுமான ராவணனிடம் {ராக்ஷசர்களில் சிறந்தவனுமான ராவணனிடம் பின்வருமாறு} பேசினான்:(1) “துராத்மாவான அந்த ராமனை வதம் செய்வதன் மூலம், கோரமான உமது பயத்தை இன்று போக்குவேன். வைரம் {பகைமை} இன்றி சுகமாக இருப்பீராக.(2) ஜலமற்ற மேகத்தைப் போல, சூரர்கள் வீணாக கர்ஜிப்பதில்லை. யுத்தத்தில் கர்மத்தை நிறைவேற்றும்போது என் கர்ஜனையைப் பார்ப்பீர்.(3) தன்னைத் தானே உயர்வாக நினைத்துக் கொள்வதில் சூரர்கள் ஈடுபடமாட்டார்கள்; அதைப் பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். எதையும் காட்டிக் கொள்ளாமல் செய்வதற்கரிய கர்மத்தை அவர்கள் செய்வார்கள்.(4)
மஹோதரா, பண்டிதனாகத் தன்னை நினைத்துக் கொள்பவனும், புத்தியற்றவனுமான நீ சொல்லும் சொற்கள், குழம்பிப் போயிருக்கும் மன்னர்களுக்கு நித்யம் ஏற்புடையனவாகவே இருக்கும்.(5) யுத்தம் செய்வதில் கோழையான நீ, நித்யம் ராஜரைப் பின்தொடர்ந்து, பிரியவாதம் பேசிக்கொண்டு, செயல்பாடுகள் அனைத்தையும் நாசம் செய்கிறாய்.(6) பெயரளவுக்கே நண்பர்களான அமித்ரகர்கள் {நண்பர்கள் என்ற போர்வையில் இருக்கும் பகைவர்கள்}, இந்த ராஜரை அண்டி, கருவூலத்தை வற்றச் செய்து, படைகளை அழித்து, லங்கையைச் செழிப்பிழந்ததாகச் செய்திருக்கிறார்கள்.(7) உங்கள் துர்நயத்தை சரி செய்வதற்காகவும், சத்ருக்களை ஜயங்கொள்ளும் நோக்குடனும் நான் இதோ யுத்தத்திற்குப் புறப்படுகிறேன்[1]” {என்றான் கும்பகர்ணன்}.(8)
[1] வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன் விதிநின்றது பிடர் பிடித்து உந்த நின்றதுபொன்றுவென் பொன்றினால் பொலன் கொள் தோளியைநன்று என நாயக விடுதி நன்று அரோகம்பராமாயணம் 7366ம் பாடல், யுத்தகாண்டம், கும்பகருணன் வதைப் படலம்பொருள்: “இங்கு வென்று வருவேன் என்று சொல்லவில்லை. வெல்வதற்கரியதாக நிற்கும் விதியானது, கழுத்தின் புறத்தைப் பிடித்துத் தள்ளுவதால் நான் இறப்பேன்; அப்படி இறந்தால், அழகான தோள்களைக் கொண்டவளை {சீதையை} நன்மை எனக் கருதி நாயகனே விடுவாயாக. அதுவே நன்மை பயக்கும்” {என்றான் கும்பகர்ணன்}.
மதிமிக்கவனான கும்பகர்ணன் இவ்வாறான வாக்கியத்தைச் சொன்ன போது, புன்னகையுடன் கூடிய ராக்ஷசாதிபன் {ராக்ஷசர்களின் தலைவன் ராவணன் பின்வரும்} வாக்கியத்தை மறுமொழியாகச் சொன்னான்:(9) “தாதா {ஐயா}, யுத்தவிசாரதா {போர்க்கலையில் திறன்மிக்கவனே}, யுத்தத்தை விரும்பாத மஹோதரன் ராமனுக்கு அஞ்சுகிறான் என்பதில் சந்தேகமில்லை.(10) கும்பகர்ணா, நட்பிலும், பலத்திலும் உனக்கு சமமான எவரும் எனக்கு இல்லை. நீ சத்ருக்களை வதம் செய்து ஜயமடையச் செல்வாயாக.(11) அரிந்தமா, சயனித்துக் கொண்டிருந்த நீ, சத்ருக்களை நாசம் செய்யும் அர்த்தத்திற்காகவே என்னால் எழுப்பப்பட்டாய். இராக்ஷசர்களுக்கு இது மஹத்தான காலமாகும்.(12) எனவே, சூலத்தை எடுத்துக் கொண்டு, பாசத்தை {பாசக்கயிற்றைக்} கையிலேந்திய அந்தகனை {யமனைப்} போலச் செல்வாயாக. வானரர்களையும், ஆதித்யனின் தேஜஸ்ஸுடன் கூடிய ராஜபுத்திரர்களையும் பக்ஷிப்பாயாக {உண்பாயாக}.(13) உன் ரூபத்தைக் கண்டதும் வானரர்கள் ஓடிவிடுவார்கள்; இராமலக்ஷ்மணர்களின் ஹிருதயங்களும் வெடித்துவிடும்” {என்றான் ராவணன்}.(14)
மஹாதேஜஸ்வியான ராக்ஷசபுங்கவன் {ராக்ஷசர்களில் முதன்மையான ராவணன்}, மஹாபலம் கொண்டவனான கும்பகர்ணனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, மீண்டும் {புதிதாகப்} பிறந்ததாக நினைத்துக் கொண்டான்.(15) கும்பகர்ணனின் பலத்தை அறிந்தும், அவனது பராக்ரமத்தை உணர்ந்தும் மகிழ்ச்சியடைந்த ராஜா {ராவணன்}, சஷாங்கனை {சந்திரனைப்} போல நிர்மலமாக {களங்கம் நீங்கி} பிரகாசித்தான்.(16) இவ்வாறு சொல்லப்பட்டதும், ராஜனின் வசனத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த மஹாபலவான் {கும்பகர்ணன்}, யுத்தத்திற்குப் புறப்படத் தயாரானான்.(17) சத்ருநிபர்ஹணன் {பகைவரை அழிப்பவனான கும்பகர்ணன்}, முழுமையாக இரும்பால் செய்யப்பட்டதும், தப்த காஞ்சனத்தால் {புடம்போட்ட பொன்னால்} அலங்கரிக்கப்பட்டு ஒளிர்வதுமான கூரிய சூலத்தை வேகமாக எடுத்துக் கொண்டான்.(18) இந்திரனின் அசனியை {இடியைப்} போலப் பிரகாசிப்பதும், பயங்கரமானதும், வஜ்ரத்திற்கு ஒப்பான கௌரவம் கொண்டதும் {எடைமிக்கதும்}, தேவ, தானவ, கந்தர்வ, யக்ஷ, பன்னகர்களைப் பீடிக்க வல்லதும்,{19} பெருங்காந்தியுடன் கூடிய சிவந்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், இயல்பாகவே நெருப்பைக் கக்குவதும், சத்ருக்களின் சோணிதக் கறை {ரத்தக்கறை} படிந்ததுமான அந்தப் பெரும் சூலத்தை எடுத்துக் கொண்டு,{20} மஹாதேஜஸ்வியான கும்பகர்ணன், ராவணனிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(19-21அ) “இந்த மஹத்தான பலம் {படை} இங்கேயே இருக்கட்டும். நான் ஏகனாகவே {தனியொருவனாகவே} செல்கிறேன். குரோதத்துடனும், பசியுடனும் இருக்கும் நான், இதோ அந்த வானரர்களை பக்ஷிக்கப் போகிறேன்” {என்றான் கும்பகர்ணன்}.(21ஆ,22அ)
கும்பகர்ணனின் சொற்களைக் கேட்ட ராவணன், {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான், “சூலங்கள், முத்கரங்கள் ஆகியவற்றைக் கைகளில் கொண்ட சைனியத்தால் சூழப்பட்டவனாகச் செல்வாயாக.(22ஆ,23அ) மஹாத்மாக்களும், சீக்கிரம் செயல்படக்கூடியவர்களும், திடமான தீர்மானம் கொண்டவர்களுமான வானரர்கள், தனியாகவோ, கவனமற்றோ இருப்பவனை தங்கள் பற்களைக் கொண்டு அழிவுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்.(23ஆ,24அ) எனவே, வெல்வதற்கு மிக அரியவனாக சைனியம் சூழச் சென்று, ராக்ஷசர்களுக்கு அஹிதர்களான மொத்த சத்ருபக்ஷத்தை {ராக்ஷசர்களுக்கு இதமற்றவர்களான / தீமை செய்பவர்களான பகைவரின் தரப்பிலுள்ள அனைவரையும்} அழிப்பாயாக” {என்றான் ராவணன்}.(24ஆ,25அ)
பிறகு தன் ஆசனத்தில் இருந்து எழுந்த மஹாதேஜஸ்வியான ராவணன், கும்பகர்ணனின் கழுத்தில் மணிகள் {ரத்தினங்கள்} பதிக்கப்பெற்ற மாலையைப் பூட்டினான்.(25ஆ,26அ) பிறகு, அங்கதங்களையும், ஆபரணங்களில் சிறந்த மோதிரங்களையும், சசியின் {சந்திரனின்} பிரகாசாத்தைக் கொண்ட ஹாரத்தையும் அந்த மஹாத்மாவுக்கு அணிவித்தான்.(26ஆ,27அ) இராவணன், காதுகளுக்கு குண்டலங்களையும், திவ்ய சுகந்தம் கொண்ட மாலைகளையும் கொண்டு அவனது காத்திரங்களை {கும்பகர்ணனின் உடல் உறுப்புகளை} அலங்கரிக்க ஏற்பாடு செய்தான்.(27ஆ,28அ) பெரும் காதுகளைக் கொண்ட கும்பகர்ணன், காஞ்சன அங்கத, கேயூரங்கள் போன்ற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, நன்கு மூட்டப்பட்ட அக்னியைப் போல ஒளிர்ந்தான்.(28ஆ,29அ) இடையில் கரிய, பெரிய அரைஞாணுடன் கூடிய அவன் {கும்பகர்ணன்}, அமுதம் கடையப்பட்டபோது புஜங்கத்தால் {பாம்பினால்} சூழப்பட்ட மந்தரத்தை {மந்தர மலையைப்} போல ஒளிர்ந்தான்.(29ஆ,30அ) அவன் தாக்குதலைத் தாங்கக்கூடியதும், வாதம் {காற்றும்} புக முடியாததும், தன்னொளியால் மின்னலைப் போல ஒளிர்வதுமான காஞ்சன கவசத்தை {பொற்கவசத்தைத்} தரித்துக் கொண்டு, சந்தியா கால {மாலைவேளை} மேகத்தால் சூழப்பெற்ற அத்ரிராஜனை {மலை ராஜனான இமய மலையைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(30ஆ,இ) சர்வ அங்கங்களிலும், சர்வ ஆபரணங்களுடன் கூடியவனும், கையில் சூலத்துடன் கூடியவனுமான அந்த ராக்ஷசன் {கும்பகர்ணன்}, உற்சாகத்துடன் கூடிய திரிவிக்ரமனான {மூன்று அடிகளை வைத்த வாமனனான} நாராயணனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(31) பிராதாவை {தன்னுடன் பிறந்தானைத்} தழுவிப் பிரதக்ஷிணஞ்செய்த {வலம் வந்த} அந்த மஹாபலவான், சிரஸால் அவனை வணங்கி {ராவணனுக்குத் தலைவணங்கிப்} புறப்பட்டான்.(32)
இராவணன், மஹாபலம்வாய்ந்தவனும், மஹாகாயனும், மஹாநாதத்துடன் புறப்பட்டவனுமான கும்பகர்ணனை, போற்றத்தக்க ஆசிகளுடன் அனுப்பி வைத்தான்.(33) சங்கு, துந்துபி கோஷங்களுடன் கூடியதும், சிறந்த ஆயுதங்கள், கஜங்கள், துரகங்கள் {யானைகள், குதிரைகள்}, மேகங்களைப் போல ஒலியெழுப்பும் சியந்தனங்கள் {தேர்கள்} ஆகியவற்றுடனும், மஹாத்மாக்களான ரதிகர்களுடனும் கூடிய சைனியத்தால் அந்த ரதிகர்களில் சிறந்தவன் {தேர்வீரர்களில் சிறந்தவனான கும்பகர்ணன்} பின்தொடரப்பட்டான்.(34) கோரனும், மஹாபலம்வாய்ந்தவனுமான அந்தக் கும்பகர்ணன், சர்ப்பங்கள், ஒட்டகங்கள், கழுதைகள், சிம்ஹங்கள், துவீபங்கள் {யானைகள்}, மிருகங்கள், துவிஜங்களால் {விலங்குகள், பறவைகள் ஆகியவற்றில் ஏறி வரும் ராக்ஷசர்களால்} பின்தொடரப்பட்டான்.(35) தானவ, தேவ சத்ருவான அவன், கைகளில் கூரிய சூலத்தை ஏந்தியபடி புறப்பட்டுச் சென்றான். மதுவெறி கொண்டவனும், சோணித கந்த {ரத்த மண} வெறி கொண்டவனுமான அவனது தலைக்கு மேலே புஷ்ப மழையால் மறைக்கப்பட்ட குடை பிடிக்கப்பட்டது.(36) மஹாநாதம் செய்பவர்கள், மஹாபலவான்களும், பயங்கரர்களும், பயங்கரக் கண்களைக் கொண்டவர்களும், பல்வேறு சஸ்திரங்களைக் கையில் ஏந்தியவர்களுமான ராக்ஷசர்கள் பாதநடையாக {காலாட்படை வீரர்களாக} அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(37) சிவந்த கண்களைக் கொண்டவர்களும், பேருடல் படைத்தவர்களும், நீல அஞ்சன {கரிய மைக்} குவியலுக்கு ஒப்பானவர்களுமான அவர்கள், சூலங்கள், கட்கங்கள் {வாள்கள்} கூரிய பரசுகள் {கோடரிகள்},{38} பலவகையான பரிகங்கள் {உழல்தடிகள்}, கதைகள் {கதாயுதங்கள்}, முசலங்கள் {உலக்கைகள்} ஆகியவற்றையும், வீசினால் வெல்வதற்கரிய பெரும் பனைமரத் தண்டுகளையும் {பனைமரங்களின் அடிபாகங்களையும்} கைகளில் கொண்டிருந்தனர்.(38,39)
மஹாதேஜஸ்வியும், மஹாபலவானுமான அந்தக் கும்பகர்ணன், பயங்கரமானதும், கோர தரிசனந்தருவதுமான மற்றொரு உடலை {உருவத்தை} ஏற்றுக் கொண்டு புறப்பட்டான்.{40} நூறு தனுக்களின் அளவு {வில்லளவு} அகன்றவனாகவும், அறுநூறு அளவு {வில்லளவு} உயர்ந்தவனாகவும், சகடச் சக்கரங்கள் {வண்டிச் சக்கரங்கள்} போன்ற கண்களைக் கொண்டவனாகவும், மஹாபர்வதத்திற்கு ஒப்பானவனாகவும் ரௌத்திரத் தோற்றமளித்தான்.(40,41) பேருடல் கொண்டவனும், பெரும் வாயுடையவனும், எரியும் சைலத்திற்கு ஒப்பானவனுமான கும்பகர்ணன், ராக்ஷசர்களை அணுகி, சிரித்துக் கொண்டே {பின்வரும் சொற்களைக்} கூறினான்:(42) “குரோதத்தால் தூண்டப்பட்ட நான், பாவகனில் பதங்கங்களை {நெருப்பில் விட்டிற்பூச்சிகளைப்} போல வானரமுக்கியர்களின் அந்த ஏராளமான யூதங்களை {வானரக்குழுக்களை} இன்று எரிக்கப் போகிறேன்.(43) வனசாரிகளான வானரர்கள், எனக்குத் தீங்கிழைக்க விரும்புகிறவர்களல்ல. அந்த ஜாதி {இனம்}, நம் போன்றவர்களின் புர, உத்யானவனங்களை {நகர, தோட்டங்களை} அலங்கரிக்கிறது.(44) இலக்ஷ்மணனுடன் கூடிய ராமனே, புரம் {லங்காபுரி} முற்றுகையிடப்படுவதற்கான மூலமாகத் திகழ்கிறான். அவன் ஹதம் செய்யப்பட்டால் {அழிந்தால்}, அனைத்தும் ஹதம் செய்யப்பட்டதாகும் {அழிந்ததாகும்}. போரில் அவனை நான் வதம் செய்வேன்” {என்றான் கும்பகர்ணன்}.(45)
அந்தக் கும்பகர்ணன் இவ்வாறு சொன்னதும், ஆர்ணவம் {பெருங்கடல்} கலங்குவதைப் போன்ற மஹாகோரமான நாதத்தை ராக்ஷசர்கள் எழுப்பினர்.(46) மதிமிக்கவனான அந்தக் கும்பகர்ணன் புறப்பட்ட உடனேயே, எங்கும் கோர ரூபங்களிலான நிமித்தங்கள் {தீய சகுனங்கள்} தென்பட்டன.(47) மேகங்கள், உல்கங்கள் {எரிகொள்ளிகள்}, அசனிகளுடன் {இடிகளுடன்} இணைந்து கழுதைகளைப் போன்ற சாம்பல் நிறத்தை அடைந்தன. சாகர, வனங்களுடன் கூடிய வசுதையும் {கடல்கள், காடுகளுடன் கூடிய பூமியும்} நடுங்கினாள்.(48) கோர ரூபம் கொண்ட நரிகள், ஜுவாலைகளைக் கக்கும் முகங்களுடன் {வாய்களுடன்} ஊளையிட்டன. பறவைகள் அபசவ்ய மண்டலங்களிட்டன {வலமிருந்து இடமாக வட்டமிட்டன}.(49) பாதையில் செல்லும்போது அவனது சூலத்தில், கிருத்ரம் {கழுகு} அமர்ந்தது. அவனது இடது கை நடுங்கியது; {இடது} நயனமும் துடித்தது.(50) பிறகு, ஜுவலிக்கும் உல்கம் {எரிகொள்ளி} ஒன்று பயங்கர ஸ்வனத்துடன் விழுந்தது. ஆதித்யனும் {சூரியனும்} பிரபையிழந்தான், அனிலனும் சுகமாக {காற்றும் இனிமையாக} வீசவில்லை.(51)
கும்பகர்ணன், ரோமஹர்ஷணத்தை {மயிர்ச்சிலிர்ப்பை} உண்டாக்கும் இந்த மஹா உத்பாதங்களைக் குறித்துச் சிந்திக்காமல் கிருதாந்தத்தின் {வினைப்பயனின் / விதியின்} பலத்தால் இழுக்கப்பட்டவனாகப் புறப்பட்டுச் சென்றான்.(52) பர்வதத்தைப் போன்ற அவன், தன் பாதங்களால் பிராகாரத்தை லங்கனம் செய்து {மதிற்சுவற்றைக் கடந்து சென்று}, அடர் மேகங்களுக்கு ஒப்பானதும், அற்புதமானதுமான வானர அனீகத்தை {படையைக்} கண்டான்.(53) பர்வதத்திற்கு ஒப்பானவனாகத் தெரிந்த ராக்ஷசசிரேஷ்டனை {ராக்ஷசர்களில் சிறந்த கும்பகர்ணனை} அந்த வானரர்கள் கண்டபோது, வாயுவால் அடித்துச் செல்லப்பட்ட மேகங்களைப் போல, சர்வ திசைகளிலும் {சிதறி} ஓடினர்.(54) கரிய மேகத்தின் நிறம் கொண்டவனான அந்தக் கும்பகர்ணன், அதிபிரசண்டமானதும் {சீற்றம் மிக்கதும்}, கலைந்த மேக ஜாலங்களை {கூட்டங்களைப்} போல எல்லா திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்ததுமான அந்த வானர அனீகத்தைக் கண்டு, மகிழ்ச்சியடைந்து, மேகத்தைப் போல மீண்டும் மீண்டும் நாதம் செய்தான்.(55) திவியில் {வானத்தில்} மழைமேகத்தின் முழக்கத்திற்கு ஒப்பான அந்த கோரமான நாதத்தைக் கேட்ட அந்தப் பிலவங்கர்கள் {தாவிச் செல்பவர்களான வானரர்கள்} பலரும், மூலம் {வேர்} அறுந்த சால விருக்ஷங்களைப் போல, தரணியில் விழுந்தனர்.(56) யுகாந்தத்தில் {யுகத்தின் முடிவில்} கிங்கரர்களைத் தண்டிக்கும் பிரபுவை {யமனைப்} போல, பகைவரை அழிப்பதற்காகப் பெரும் பரிகத்தைத் தரித்துச் சென்ற மஹாத்மாவான அந்த கும்பகர்ணன், கபிகணங்களிடம் {குரங்குக் கூட்டத்தினரிடம்} பயங்கர பயத்தை ஏற்படுத்தினான்.(57)
யுத்த காண்டம் சர்க்கம் – 065ல் உள்ள சுலோகங்கள்: 57
Previous | | Sanskrit | | English | | Next |