The ariel chariot Pushpaka | Sundara-Kanda-Sarga-07 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: புஷ்பக விமானத்தைக் குறித்த வர்ணனை...
அந்த பலவான் {ஹனுமான்}, மின்னலுடனும், விஹங்கம ஜாலத்துடனும் {பறவைக்கூட்டங்களுடனும்} கூடிய மஹத்தான மழைக்காலத்து மேகஜாலத்தை {மேகங்களின் வரிசையைப்} போல, வைடூரியம் பதிக்கப்பட்ட ஸ்வர்ணஜாலத்தாலான {பொன் வரிசைகளிலான} சாளரங்களுடன் கூடிய வேஷ்மஜாலத்தை {வீடுகளின் வரிசையைக்} கண்டான்[1].(1) அந்த நிவேசனங்களில் {இல்லங்களில்} விதவிதமான சாலைகளையும் {உள்ளறைகளையும்}, சங்குகள், விற்கள், ஆயுதங்களை வைக்கும் பிரதான சாலைகளையும் {கண்டான்}, மேலும், மலைபோல் தெரிந்த வேஷ்மங்களின் மேல் மனோஹரமான, விசாலமான சந்திரசாலைகளையும் {நிலா முற்றங்களையும்} கண்டான்.(2)
அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, நானாவித செல்வங்களால் ஒளிர்பவையும், தேவாசுரர்களால் பூஜிக்கப்படுபவையும், சர்வதோஷங்களில் இருந்து விடுபட்டவையும், தங்கள் தங்கள் பலத்தால் அடையப்பட்டவையுமான கிருஹங்களைக் கண்டான்.(3) பெருமுயற்சி எடுத்துக் கட்டப்பட்டவையும், சாக்ஷாத் மயனாலேயே நிர்மாணிக்கப்பட்டன போல் இருப்பவையும், மஹீதலத்தில் உள்ள சர்வ உத்தம குணங்களுடன் கூடியவையுமான லங்காதிபதியின் அந்த கிருஹங்களைக் கண்டான்.(4) தோற்றத்தில் மேகரூபம் கொண்டதும், மனோஹரமான {மனத்தைக் கொள்ளை கொள்ளும்} காஞ்சன சாருரூபம் {பொன்னாலான அழகிய வடிவம்} கொண்டதும், ராக்ஷசாதிபனின் ஆத்மபல அனுரூபம் கொண்டதுமான {ராவணனின் ஆத்மபலத்துக்குத் தகுந்ததுமான} உத்தம கிருஹத்தின் ஒப்பற்ற ரூபத்தை அப்போது கண்டான்.(5)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “இந்த அத்தியாயத்திலும், இன்னும் சிலவற்றிலும் உள்ள கவி சாதுரியமும், வார்த்தை விளையாட்டுகளும் அழகுவாய்ந்தவை. {மூல மொழியில் இருந்து} மொழிபெயர்க்கப்படும் உள்ளடக்கம், சில சமயங்களில் செயற்கையாகவும், வலிந்து திணிக்கப்பட்டதாவும் ஒலிக்கிறது. மொழிபெயர்ப்பில் {கவிநயத்திற்குப் பொருந்தாத சொற்களைப் பயன்படுத்த வேண்டி வருவதால்} உவமைகளையும், உருவகங்களையும் {மூலமொழியின் அதே கவிநயத்துடனும், வார்த்தை விளையாட்டுகளுடனும்} சரியாகப் பொதிந்து தருவது சாத்தியமில்லாதது” என்றிருக்கிறது.
மஹீதலத்தில் {தரையில்} வீசப்பட்ட ஸ்வர்க்கத்தைப் போன்றதும், ஏராளமான ரத்தினங்கள் பதிக்கப்பட்டு மகிமையில் ஜ்வலிப்பதும், நானாவித மரங்களின் மலர்களால் நிறைந்து, மகரந்தங்களால் மறைக்கப்பட்ட கிரியின் உச்சியைப் போன்றதும்,(6) பெண்களில் சிறந்தவர்களைப் போல ஒளிர்வதும், மின்னல்களால் {அர்ச்சிக்கப்படும்} மேகத்தைப் போல அர்ச்சிக்கப்படுவதும், வானத்தில், நற்செயல்செய்தோரின் விமானத்தைப் போல செழிப்பால் ஒளிரும் சிறந்த ஹம்சங்களால் {அன்னப்பறவைகளால்} சுமக்கப்படுவதும்,(7) சித்திரமான தாதுக்கள் ஏராளமானவற்றுடன் கூடிய மலையுச்சியைப் போன்றதும், சித்திரமான சந்திரன் உள்ளிட்ட கிரகங்களுடன் கூடிய வானத்தைப் போன்றதும், சித்திரமான மேகங்களுடன் பலவண்ணங்களில் சித்தரிக்கப்பட்டதும், ரத்தினங்கள் ஏராளமானவற்றால் சித்தரிக்கப்பட்டதுமான விமானரத்தினத்தை {சிறந்த விமானம் ஒன்றைக்} கண்டான்.(8)
மஹீயானது, பர்வதராஜ்ஜியங்களால் {மலைத்தொடர்களால்} பூர்ணமடைந்து இருந்தது; சைலங்கள், விருக்ஷங்களால் மறைக்கப்பட்டுப் பூர்ணமடைந்து இருந்தன; விருக்ஷங்கள், புஷ்பங்களால் மறைக்கப்பட்டுப் பூர்ணமடைந்து இருந்தன; புஷ்பங்கள், மகரந்தங்களுடனும், இதழ்களுடனும் பூர்ணமடைந்து இருந்தன.(9) கட்டப்பட்டிருந்த வேஷ்மங்கள் வெண்மையாக இருந்தன; அப்படியே அழகிய புஷ்பங்களுடன் புஷ்கரங்கள் {தடாகங்கள்} இருந்தன; மேலும், பத்மங்களில் {தாமரைகளில்} மகரந்தங்கள் இருந்தன; அப்படியே சிறந்தவையாகவும், அழகானவையாகவும் வனங்கள் இருந்தன.(10) புஷ்பகம் என்ற பெயர் ஒளிர்வதும், ரத்தின பிரபைகளுடன் கூடியதும், வெகுதூரம் பயணிக்கவல்லதும், உத்தம வேஷ்மங்களிலும் {வீடுகளிலும்} உயர்ந்ததுமான ஒரு மஹாவிமானத்தை அங்கே அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்} கண்டான்.(11)
வைடூரியமயமான செயற்கை விஹங்கமங்களும் {பறவைகளும்}, அப்படியே வெள்ளி, பவளங்களாலான விஹங்கமங்களும் {பறவைகளும்}, நானாவித செல்வங்களாலான சித்திரமான புஜகங்களும் {பாம்புகளும்}, அதில் தகுந்த ஜாதி துரகங்களும் {குதிரைகளும்} சுப அங்கங்களுடன் இருந்தன.(12) பவளம், ஜாம்பூநதத்தாலான புஷ்பங்களுடன் கூடிய பக்ஷங்களுடனும் {சிறகுகளுடனும்}, விளையாட்டாக வளைந்து, நெளியும் பக்ஷங்களுடனும் {இறகுகளுடனும்}, சாக்ஷாத் காமதேவனுக்கு உதவும் பக்ஷங்களை {தோழர்களைப்} போல, நல்ல முகங்களையும் கொண்டிருந்த விஹங்கமங்களுக்கு {பறவைகளுக்கு} நல்ல பக்ஷங்களும் {சிறகுகளும்} இருந்தன.(13) நல்ல ஹஸ்தங்களுடன் {துதிக்கைகளுடன்} கூடிய கஜங்கள், நீராடும் அர்ப்பணிப்பில் ஹஸ்தங்களில் {துதிக்கைகளில்} உத்பல இதழ்களுடனும் {கருநெய்தல் இலைகளுடனும்}, மேனியில் அவற்றின் மகரந்தத்துடனும் இருந்தன. நல்ஹஸ்தங்களுடன் {மங்கலக் கைகளுடன்} ஏற்படுத்தப்பட்ட தேவி லக்ஷ்மியும், பத்மஹஸ்தத்துடன் {கையில் தாமரையுடன்} அப்படியே பத்மினியில் {தாமரைத் தடாகத்தில்} இருந்தாள்[2].(14)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், “மேலும் அதில் ஏற்படுத்தப்பட்ட பறவைகள் அழகான முகமும், சிறந்த சிறகுகளும் அமைந்து, அந்தச் சிறகுகளின் மேல் பவழங்களாலும், பொன்னாலுஞ் செய்யப்பட்ட புஷ்பங்கள் நிரம்பத் திகழ்வுற்றிருந்தன மேலும், அவை லீலையாகத் தம் சிறகுகளை மடக்கிக் கொண்டிருப்பதைக் கண்டால் மன்மதனுக்கு ஸஹாயஞ் செய்யும்பொருட்டு ப்ரத்யக்ஷமாக இவ்வாறு வடிவங்கொண்டு வந்தனவோ என்னும்படி மேன்மேலும் மன்மதவிகாரத்தை விளைவித்துக் கொண்டிருந்தன. மேலும், தாமரைக் குளங்களில் இழிந்து தம்மைத் தாமே அபிஷேகஞ் செய்ய முயன்று தாமரைப் பூக்களைக் கொண்டு விளையாடுகையால் அவற்றின் தாதுகள் சரீரமெங்கும் துலங்கப்பெற்று, அழகான துதிக்கைகள் அமைந்து அத்துதிக்கைகளில் நெய்தலின் இதழ்களைக் கொண்டிருக்கின்ற யானைகளும், அந்த யானைகளால் அபிஷேகஞ் செய்யப்பெற்று ஸுந்தரமான ஹஸ்தாரவிந்தங்கள் அமைந்து அந்த ஹஸ்தங்களில் கமலங்களைத் தரித்துத் திகழ்கின்ற லக்ஷ்மீதேவியும் சித்ரத்தில் எழுதப்பெற்றிருந்தமையால் அவ்விமானம் மிகவும் அழகாயிருந்தது” என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், “பறவைகளின் சிறகுகள் பவளத்தாலும், புடம்போட்ட தங்கத்தாலும், மலர்களாலும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. சிறகுகள் நீரின்றி செதுக்கப்பட்டிருந்தன. அந்தச் சிறகுகள் காமனைப் போலவே ஒளிமிக்கவையாக இருந்தன. நல்ல முகங்களுடனும், நல்ல சிறகுகளுடன் கூடிய இந்தப் பறவைகள் அமைக்கப்பட்டிருந்தன. நல்ல கைகளுடனும், ஒரு கையில் தாமரையுடனும், தாமரையில் அமர்ந்திருப்பவளாக லக்ஷ்மிதேவி ஏற்படுத்தப்பட்டிருந்தாள். தந்தங்களில் தாமரை இதழ்களைப் பற்றியிருந்த சிறந்த தந்தங்களுடன் கூடிய யானைகள் அவளை வழிபட்டன” என்றிருக்கிறது.
இவ்வாறே சோபித்துக் கொண்டிருந்த அந்த கிருஹத்தை நெருங்கி, அழகில் சோபிக்கும் மலையைப் போல் கண்டு ஆச்சரியமடைந்து, மீண்டும் சுந்தரமானதும், பரம சுகந்தமானதுமான அதை {அந்த கிருஹத்தை}, அழகிய கந்தரத்துடன் {குகைகளுடன்} கூடிய வசந்தகால மலையைப் போலக் கண்டான்.(15) பிறகு, அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, பூஜிக்கத்தகுந்ததும், தசமுகனின் கைகளால் பாலிதம் செய்யப்படுவதுமான புரியை {லங்காபுரியை} நெருங்கித் திரிந்தும், பூஜிக்கத்தகுந்தவளும், பதியின் {கணவன் ராமனின்} குணவேகத்தால் பெரிதும் வெல்லப்பட்டவளுமான அந்த ஜனகசுதையை {ஜானகியைக்} காணாமல் துக்கித்தான்.(16) பிறகு, ஏராளமான விதங்களில் பாவிக்கும் {சிந்திக்கும்} ஆத்மாவைக் கொண்டவளும், ஆத்ம நிறைவுடன் கூடியவளும், நன்னடை கொண்டவளுமான ஜனகசுதையைக் காணாதபோது, அந்த மஹாத்மா {ஹனுமான்}, அதிதுக்கம் கொண்ட மனத்துடனும், {அவளைத் தேடும்} நல்ல கண்களுடனும் திரிந்து கொண்டிருந்தான்.(17)
சுந்தர காண்டம் சர்க்கம் – 07ல் உள்ள சுலோகங்கள்: 17
Previous | | Sanskrit | | English | | Next |