Wednesday, 26 February 2025

கும்பகர்ண நித்திரை | யுத்த காண்டம் சர்க்கம் - 060 (97)

Slumber of Kumbhakarna | Yuddha-Kanda-Sarga-060 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனை எழுப்பச் சொல்லி ராக்ஷசர்களிடம் கேட்ட ராவணன்; இராட்சசர்களின் பெரும்முயற்சியால், உறக்கத்திலிருந்து எழுந்த கும்பகர்ணன்...

Kumbakarna sleeping

இராமபாணங்களால் பீடிக்கப்பட்ட அந்த ராஜா {ராவணன்}, லங்காம்புரீக்குள் பிரவேசித்த பிறகு, தன் செருக்கு பங்கமடைந்து, இந்திரியங்கள் கலங்கியவனானான்.(1) சிம்ஹத்தால் மாதங்கத்தை {யானையைப்} போலவும், கருடனால் பன்னகத்தை {பாம்பைப் போலவும்} மஹாத்மாவான ராகவனால் அந்த ராஜா சிறுமையை அடைந்தான் {வெற்றிகொள்ளப்பட்டான்}.(2) இராக்ஷசேஷ்வரன் {ராவணன்}, மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவையும், பிரம்ம தண்டத்திற்கு ஒப்பானவையுமான ராகவ பாணங்களை நினைத்து வேதனையடைந்தான்.(3) 

திவ்ய காஞ்சனமயமான பரமாசனத்தில் அமர்ந்திருந்த ராவணன், ராக்ஷசர்களைப் பார்த்து {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(4) “எவை என்னால் செய்யப்பட்டனவோ, அந்தப் பரம தபங்கள் அனைத்தும் வீணாகின. எனவேதான், மஹேந்திரனுக்கு சமானனான நான் மானுஷனால் வெற்றிகொள்ளப்பட்டேன்.(5) “மானுஷர்களிடம் பயத்தை நீ அறிவாய் {மானுஷர்களால் உனக்கு பயம் ஏற்படும்}என்ற பிரம்மனின் இந்த கோரமான வாக்கியம் எனக்கு அப்படியே நடந்ததாகத் தெரிகிறது.(6) தேவ, தானவ, கந்தர்வர்களாலும், யக்ஷ, ராக்ஷச, பன்னகங்களாலும் வதைக்கப்படாதிருத்தல் என்னால் {வரமாக} அடையப்பட்டது. மானுஷர்களிடமிருந்து {வதைக்கப்படாமை} வேண்டப்படவில்லை.(7) 

பூர்வத்தில் எவனை, இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த அனரண்யன் {எனக்குப்} புரிய வைத்தானோ, அந்த மானுஷனே தசரதாத்மஜனான ராமன் என்று நினைக்கிறேன்.{8} “இராக்ஷசாதமா {ராக்ஷசர்களில் இழிந்தவனே}, புத்திரர்களுடனும், அமைச்சர்கள், அஷ்வங்கள் {குதிரைகள்}, ரதங்களுடன் கூடிய பலத்துடனும் {படையுடனும்} கூடிய உனக்காக, என் வம்சத்தில் ஒரு புருஷன் உற்பத்தியாவான்.{9} குலாதமா {உன் குலத்தில் இழிந்தவனே}, துர்மதியாளனே, சங்கிரமத்தில் {போரில்} அவனே உன்னைக் கொல்வான்” {என்றான் அந்த அனரண்யன்}.(8-10அ) பூர்வத்தில் வேதவதி {என்னால்} அவமதிக்கப்பட்டபோது, அவள் என்னை சபித்தாள். மஹாபாக்கியவதியும், ஜனகநந்தினியுமான இந்த சீதையாக அவளே பிறந்திருக்கிறாள்.(10ஆ,11அ) 

{சிவனின் மனைவியான} உமை, நந்தீஷ்வரர், ரம்பை, வருணகன்னிகை {புஞ்சிகஸ்தலை}[1] ஆகியோரால் எவை சொல்லப்பட்டனவோ, அவையே எனக்குப் பிராப்தமாகியிருக்கின்றன {என்னை வந்தடைந்திருக்கின்றன}. ரிஷிமொழி {முனிவர்களின் வாக்கு ஒருபோதும்} பொய்யாவதில்லை.(11ஆ,12அ) நான் சொன்ன இவற்றை உள்ளபடியே அறிந்து விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். இராக்ஷசர்கள் காவற்கோட்டங்கள், கோபுரங்களின் உச்சிகளில் நிலைப்பீராக.(12ஆ,13அ) ஒப்பற்ற கம்பீரம் கொண்டவனும், தேவ, தானவர்களின் செருக்கை அடக்கியவனும், பிரம்ம சாபத்தால் சிறுமையை அடைந்தவனுமான அந்தக் கும்பகர்ணன் விழித்தெழட்டும்” {என்றான் ராவணன்}.(13ஆ,14அ)

[1] வேதவதி உள்ளிட்ட இந்த ஐவரில், புஞ்ஜிகஸ்தலை கதை மட்டும் ஏற்கனவே யுத்த காண்டம் சர்க்கம் 13ல் சொல்லப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “புஞ்ஜிகஸ்தலை, தன் விருப்பத்திற்கு எதிராக வலுக்கட்டாயமாக ஒரு பெண் அடையப்பட்டால் அவன் மரணத்தைச் சந்திப்பான் என்று ராவணனைச் சபித்தாள். {பிரம்மனே அவனை அவ்வாறு சபித்தான்}. இராவணனை ரம்பை சபிக்கவில்லை; அவளுக்காக நலகூபரனே, “விருப்பமில்லாத பெண்ணை பலவந்தப்படுத்தினால் உன் தலை ஏழு துண்டுகளாகப் பிளக்கும்” என்று சபித்தான். அவன் கைலாச சிகரத்தை அசைத்ததால் ஒரு பெண்ணால் அவனுக்கு மரணம் நேரும் என்று ராவணனை உமை சபித்தாள். நந்தீஸ்வரன், தன்னை அவன் அவமதித்து ஏளனம் செய்த போது, தன்னைப் போன்ற வானரர்களின் கைகளால் அவன் விதியை அடைவான் என்று அவனை சபித்திருந்தான்” என்றிருக்கிறது.

பிரஹஸ்தன் கொல்லப்பட்டதும், மஹாபலவானான அவன் {ராவணன்}, தானே சமரில் வெல்லப்பட்டதாக அறிந்து,[2] தன் பயங்கரப் படைக்கு {பின்வருமாறு} ஆணையிட்டான்:(14ஆ,15அ) “யத்னத்துடன் துவாரங்களை {வாயில்களைக்} காப்பீராக. பிராகாரங்களில் {மதிற்சுவர்களில்} ஏறுவீராக. நித்திரையின் வசமடைந்திருக்கும் கும்பகர்ணனை விழித்தெழச் செய்வீராக.(15ஆ,16அ) காலத்தால் அழிக்கப்பட்ட நனவைக் கொண்ட ராக்ஷசன் {கும்பகர்ணன்}, சிந்தனையேதும் இல்லாமல் {தான் உறங்க சபிக்கப்பட்ட ஆறு மாதங்கள் மட்டுமல்லாமல்} ஒன்பது, ஏழு, பத்து, எட்டு மாசங்களென சுகமாக உறங்குகிறான்[3].(16ஆ,17அ) {என்னுடன்} ஆலோசனை செய்துவிட்டு ஒன்பது நாட்களுக்கு முன் உறங்கச் சென்றவனும், மஹாபலவானுமான அந்தக் கும்பகர்ணனை சீக்கிரம் விழித்தெழச் செய்வீராக.(17ஆ,18அ) சர்வ ராக்ஷசர்களிலும் முதன்மையானவனும், மஹாபாஹுவுமான அவன், போரில் சீக்கிரமே வானரர்களையும், ராஜபுத்திரர்களையும் கொன்றுவிடுவான்.(18ஆ,19அ) போரில் பரமகேதுவை {உயரும் வெற்றிக் கொடியைப்} போன்றவனும், சர்வராக்ஷசர்களிலும் முக்கியனுமான இந்தக் கும்பகர்ணன், கிராம்ய சுகத்தில் {புலன் இன்பங்களில்}[4] விருப்பம் கொண்ட மூடனாக சதா உறங்கிக் கொண்டிருக்கிறான்.(19ஆ,20அ) கும்பகர்ணன் விழித்தெழுந்தால், இந்தப் பயங்கரப் போரில் ராமனால் விரட்டப்பட்ட எனக்கு சோகமேதும் இருக்காது.(20ஆ,21அ) சக்ரனுக்கு துல்லியமானவன் எவனோ, அத்தகையவன் இந்த கோரமான விசனத்தில் சஹாயம் செய்யாமல் {இந்திரனுக்கு நிகரான கும்பகர்ணனின் உதவி இல்லாமல்} போனால் நான் என்ன செய்வேன்?” {என்றான் ராவணன்}.(21ஆ,22அ)

[2] இதற்கு முந்தைய சர்க்கம் முழுமையும், இந்த சர்க்கத்தில் இந்த சுலோகத்ததிற்கு முந்தைய சுலோகங்களும் கூட இடைச்செருகலாக இருக்கக்கூடும் என்பதையே இந்த சுலோகம் உணர்த்துகிறது.

[3] வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "ஒன்பது, ஏழு, ஆறு, எட்டு மாசங்கள் சுகமாக உறங்குகிறான்" என்றிருக்கிறது.

[4] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “இது கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்குரிய இன்பங்களைக் குறிக்கிறது” என்றிருக்கிறது.

Kumbhakarnas breath

இராக்ஷசேந்திரனின் {ராவணனின்} அந்த வசனத்தைக் கேட்ட அந்த ராக்ஷசர்கள், பெருங்குழப்பத்துடன் கும்பகர்ணனின் நிவேசனத்திற்கு {வசிப்பிடத்திற்குச்} சென்றனர்.(22ஆ,23அ) மொத்தமாக ஒரு யோஜனை பரப்பளவு கொண்ட இடத்திற்கான மஹாதுவாரத்திற்கு {பெரும் வாயிலுக்குள்} அவர்கள் பிரவேசித்தனர்,{23ஆ} மஹாபலவான்களான அவர்கள், புஷ்பகந்தம் {மலர்களின் மணம்} கமழப்பெற்ற, ரம்மியமான கும்பகர்ண குகைக்குள், கும்பகர்ணனின் சுவாசத்தால் நிலைநிற்க முடியாதவர்கள் ஆனார்கள் {தடுமாறினார்கள்}[5].{24} கொஞ்சம் சிரமத்துடன் யத்னம் {முயற்சி} செய்தே குகைக்குள் சென்று அவர்கள் நிலைத்தனர்[6].(23ஆ-25அ) இரத்தினங்களும், காஞ்சனமும் {பொன்னும்} பதிக்கப்பெற்ற அந்த ரம்மியமான குகைக்குள் பிரவேசித்த நைர்ருதவியாகரர்கள் {ராக்ஷசர்களில் புலிகள்}, அங்கே சயனித்துக் கொண்டிருக்கும் பீமவிக்கிரமனை {கும்பகர்ணனைக்} கண்டனர்.(25ஆ,26அ) 

[5] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “அனைத்து இலக்கியங்களிலும் விஞ்ச முடியாத சிறப்பை அளிக்கும் வர்ணனைக்கான ஓர் எடுத்துக்காட்டு இது. இராமன் வகைப்படுத்தப்படும் ஆன்மிகத்திற்கு மாறான மூலப்பொருளின் சின்னம் கும்பகர்ணன்” என்றிருக்கிறது.

[6] திண்திறல் வீரன் வாயில் திறத்தலும் சுவாத வாதம்
மண்டுற வீரர் எல்லாம் வருவது போவதாக
கொண்டுறு தடக் கை பற்றி குலமுடை வலியினாலே
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார்

- கம்பராமாயணம் 7320ம் பாடல், யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்

பொருள்: வலிமைமிக்க வீரனின் {கும்பகர்ணனின்} வாயிலைத் திறந்தவுடன், மூச்சுக்காற்றானது மிகுதியாக வீசியதால் அதன் வேகத்தில் இருந்து தப்புவதற்காக வீரர்கள் அனைவரும் அலைக்கழிக்கப்படுவதைக் கண்டு, வலிமைமிக்க தங்கள் கைகளை ஒருவருக்கொருவர் பற்றிக் கொண்டு ஒன்று திரண்ட தங்கள் வலிமையினாலே வேறொரு வாயில் வழியாகப் புகுந்து அவனை {கும்பகர்ணனை} உறக்கத்தில் இருந்து எழுப்ப எண்ணினார்கள்.

மஹாநித்திரையில் பரந்து, விரிந்து கிடக்கும் பர்வதத்தைப் போல விகாரமாக உறங்கிக் கொண்டிருக்கும் கும்பகர்ணனை அவர்கள் ஒன்று சேர்ந்து எழுப்பினர்.(26ஆ,27அ) நேராக வளர்ந்த மயிர்களால் அங்கங்கள் மறைந்தவனும், பன்னகத்தை {பாம்பைப்} போல சுவாசிப்பவனும்,{27ஆ} தரையில் சயனிப்பவனும், பயங்கர நாசியாலும் {மூக்காலும்}, பாதாளம் போன்ற அகன்ற வாயாலும், பெரும் குறட்டையிட்டு அச்சுறுத்தும் பீமவிக்கிரமனும்,{28} சர்வ அங்கங்களையும் விரித்து சயனிப்பவனும், மேதம் {கொழுப்பு}, உதிரம் ஆகியவற்றின் கந்தம் கொண்டவனும், காஞ்சன அங்கதங்களால் அங்கங்கள் அலங்கரிக்கப்பட்டவனும், அர்க்கனை {சூரியனைப்} போல் ஒளிரும் கிரீடம் தரித்தவனும்,{29} அரிந்தமனும் {பகைவரை அழிப்பவனும்}, நைர்ருதவியாகரனுமான {ராக்ஷசசர்களில் புலியுமான} அந்தக் கும்பகர்ணனைக் கண்டனர்.(27ஆ-30அ)

Meat and blood for Kumbhakarna

அந்த மஹாத்மாக்கள், கும்பகர்ணனுக்கு பரம திருப்தி அளிப்பதற்காக அவன் முன்னே மேருவுக்கு ஒப்பான பூதங்களின் குவியலை {வேட்டையாடப்பட்ட உயிரினங்களின் குவியலைக்} குவித்து வைத்தனர்.(30ஆ,31அ) அந்த நைர்ருதசார்தூலர்கள் {ராக்ஷசர்களில் சிங்கங்கள்}, மிருகங்கள் {மான்கள்}, மஹிஷங்கள் {எருமைகள்}, வராஹங்கள் {பன்றிகள்} ஆகியவற்றையும், அற்புதமான அன்னத்தையும் குவியலாகக் குவித்து வைத்தனர்.(31ஆ,32அ) பிறகு அந்த திரிதசச்சத்ருக்கள், சோணிதம் நிறைந்த கும்பங்களையும் {ரத்தம் நிறைந்த குடங்களையும்}, விதவிதமான மாமிசங்களையும் கும்பகர்ணனின் முன்பு வைத்தனர்.(32ஆ,33அ) 

அந்தப் பரந்தபனுக்கு {பகைவரை அடக்கும் கும்பகர்ணனுக்கு} மிக அரிதான சந்தனத்தைப் பூசினர். அவர்கள், திவ்யமான கந்தங்களைக் கொண்டும், மணம் மிகுந்த மாலைகளைக் கொண்டும் அவனை ஆசுவாசப்படுத்தினர்.(33ஆ,34அ) யாதுதானர்கள், தூபகந்தங்களை உண்டாக்கி, அனைத்துப் பக்கங்களிலும் நின்று மேகங்களைப் போன்ற உரத்த குரலில் அந்தப் பரந்தபனைத் துதித்தனர்.(34ஆ,35அ) சஷாங்கனுக்கு {சந்திரனுக்கு} ஒப்பான பிரபையுடன் கூடிய சங்குகளை ஆங்காங்கே முழக்கி, ஒரே நேரத்தில் ஆரவார சப்தமெழுப்பினர்.(35ஆ,36அ) அந்த நிசாசரர்கள் {இரவுலாவிகள்}, கும்பகர்ணனை விழித்தெழச் செய்வதற்காகத் தங்கள் கைகளைத் தட்டி நாதம் செய்து, அவனை உலுப்பிப் பெருங்கூச்சலிட்டனர்.(36ஆ,37அ) வானத்தில் பறந்த பறவைகள், சங்கு, பேரி, பணவங்களின் ஒலிகளையும், கைத்தட்டல் ஒலியையும், சிம்ஹநாதத்தையும் கேட்ட உடனேயே திசைகள் அனைத்திற்கும் பறந்து சென்று கீழே விழுந்தன.(37ஆ,இ) 

மஹாத்மாவான கும்பகர்ணன், அந்தப் பயங்கர ஒலிகளாலும் உறக்கத்தில் இருந்து எழும்பாத போது, சர்வ ரக்ஷோகணங்களும் புசுண்டிகளையும், முசலங்களையும், கதைகளையும் எடுத்துக் கொண்டு அவனை நோக்கிச் சென்றனர்.(38) பிறகு, பயங்கர ராக்ஷசர்கள், புவியில் சுகமாக உறங்கும் அந்தக் கும்பகர்ணனின் மார்பில் சைல சிருங்கங்களையும், முசலங்களையும், கதாயுதங்களையும், முத்கரங்களையும், முஷ்டிகளையும் கொண்டு தாக்கினார்கள்.(39) பலவான்களாக இருந்தும் அந்த ராக்ஷசர்களால், ராக்ஷசன் கும்பகர்ணனின் சுவாசக்காற்றுக்கு முன்பு நிலையாக நிற்க முடியவில்லை.(40) பிறகு, பீம விக்ரமர்களான ராக்ஷசர்கள், அவனைச் சுற்றிலும் உறுதியாக நிலைத்து, மிருதங்கங்கள், பணவங்கள், பேரிகள், சங்குகள், கும்பகணங்களை {கடம் ஆகியவற்றை} இசைத்தனர்.(41) ஒரே நேரத்தில் பத்தாயிரம் ராக்ஷசர்கள், நீல அஞ்சனக் குவியலுக்கு ஒப்பான அவனைச் சூழ்ந்து கொண்டு, தாக்கி,{42} அவனை எழுப்புவதற்குப் பெரும் நாதமெழுப்பினாலும் அவன் விழித்தானில்லை.(42,43அ)

அவனை விழித்தெழச் செய்ய இயலாதபோது அவர்கள் இன்னும் அதிக சக்தியுடனும், பயங்கரத்துடனும் கூடிய யத்னங்களை {முயற்சிகளைச்} செய்தனர்.(43ஆ,44அ) அஷ்வங்கள், உஷ்டிரங்கள், கரங்கள், நாகங்கள் {குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள், யானைகள்} உள்ளிட்ட சர்வ பிராணிகளையும் {உயிரினங்களையும்} தண்டங்களாலும், சாட்டைகளாலும், அங்குசங்களாலும் அடித்து {கும்பகர்ணன் மீது} ஓட்டி, பேரிகள், சங்குகள், மிருதங்கங்களையும் முழக்கினர்.(44ஆ,45அ) முழு பலத்தையும் கொண்டு அவனது காத்திரங்களை {உடல் உறுப்புகளை} உயர்த்தி, பெரும் கட்டைகளாலும், தடிகளாலும், உலக்கைகளாலும் அவற்றை அடித்தனர்.(45ஆ,46அ) அந்த மஹத்தான நாதம், பர்வத, வனங்களுடன் கூடிய சர்வ லங்கையையும் நிறைத்தாலும், அவனோ விழித்தானில்லை.(46ஆ,47அ) பிறகு சுற்றிலும் குவியலாக வைக்கப்பட்டவையும், நல்ல காஞ்சனத்தாலான குணில்களுடன் {பொன் தடிகளுடன்} கூடியவையுமான ஆயிரம் பேரிகள் ஒரே நேரத்தில் முழக்கப்பட்டன.(47ஆ,48அ) இருப்பினும், சாபத்தின் வசமடைந்து, அதிநித்திரையால் பீடிக்கப்பட்டிருந்த அவன் விழித்தெழாதபோது, அந்த நிசாசரர்கள் பெருங்குரோதம் அடைந்தனர்.(48ஆ,49அ) 

பீம பராக்கிரமம் கொண்டவர்களான அவர்கள் அனைவரும் மஹாகுரோதத்தில் நிறைந்தனர். வேறு சிலர் தங்கள் பராக்கிரமத்தைக் கொண்டு அந்த ராக்ஷசனை எழுப்புவதற்காக அங்கே ஒன்றுதிரண்டனர்.(49ஆ,50அ) இன்னும் சிலர், பேரிகளை முழக்கினர், வேறு சிலர் பெருங்குரல் எழுப்பினர், இன்னும் சிலர், அவனது கேசத்தை {தலைமயிரை} இழுத்தனர். வேறு சிலர் அவனது காதுகளைக் கடித்தனர்.(50ஆ,51அ) சிலர் நூறு கும்பங்களில் உள்ள நீரை அவனது காதுகளில் ஊற்றினர். இருப்பினும் மஹா நித்திரையின் வசமடைந்த கும்பகர்ணன் அசைந்தானில்லை.(51ஆ,52அ) கைகளில் கூடம், முத்கரம் ஆகியவற்றுடன் கூடிய பலவான்கள் சிலர், அந்தக் கூடங்களையும் {சம்மட்டிகளையும்}, முத்கரங்களையும் {இரும்பத் தடிகளையும்} கொண்டு அவனது, தலையிலும், மார்பிலும், காத்திரங்களிலும் {உடல் உறுப்புகளிலும்} அடித்தனர்.(52ஆ,53அ) எங்கும் கயிறுகளால் உறுதியாகக் கட்டப்பட்டு, சதக்னிகளால் தாக்கப்பட்ட போதும், மஹாகாயனான {பேருடல் படைத்தவனான} அந்த ராக்ஷசன் {கும்பகர்ணன்}  விழித்தானில்லை.(53ஆ,54அ) அவனது சரீரத்தில் வாரணமாயிரம் {உடலில் ஆயிரம் யானைகள்} ஓட்டப்பட்டபோதே பாரத்தின் ஸ்பரிசத்தை உணர்ந்து, சற்றே விழித்தான் கும்பகர்ணன்.(54ஆ,55அ)

கிரிசிருங்கங்களும் {மலைச்சிகரங்களும்}, விருக்ஷங்களும் {மரங்களும்} வீசப்பட்டும், அந்தப் பெரும் தாக்குதல்களைக் குறித்து சிந்திக்காதவன், திடீரெனப் பயங்கரப் பசியில் பீடிக்கப்பட்டு நித்திரை கலைந்து, கொட்டாவியிட்டவாறே உறக்கத்தில் இருந்து எழுந்தான்.(55ஆ,இ) நாகபோகங்களுக்கோ, அசல சிருங்கங்களுக்கோ {பெரும்பாம்புகளின் உடல்களுக்கோ, மலைச்சிகரங்களுக்கோ} ஒப்பானவையும், வஜ்ரத்தின் சாரத்தைக் கொண்டவையுமான தன் கைகளை உதறிய அந்த நிசாசரன், வடவாமுகத்திற்கு {கடலில் உள்ள அக்னிக்கு} ஒப்பான தன் விகாரமான வாயைத் திறந்து கொட்டாவி விட்டான்.(56) பாதாளத்திற்கு ஒப்பாகப் பயங்கரமாகக் கொட்டாவி விட்ட அவனது வாயானது, மேரு சிருங்கத்தில் உதிக்கும் திவாகரனை {சூரியனைப்} போலத் தெரிந்தது.(57) விழித்தெழுந்து கொட்டாவி விட்டவனும், அதிபலவானுமான அந்த நிசாசரன் {இரவுலாவியான கும்பகர்ணன்}, பர்வதத்தில் இருந்து வெளிவரும் மாருதத்தை {மலையில் இருந்து வெளிப்படும் காற்றைப்} போலப் பெருமூச்சுவிட்டான்.(58) அந்தக் கும்பகர்ணனின் அந்த ரூபம், யுகாந்தத்தில் சர்வபூதங்களையும் {யுகத்தின் முடிவில் அனைத்து உயிரினங்களையும்} விழுங்கப் போகும் காலனைப் போலவும், பெரும் மழையைப் பொழியப்போகும் கரிய மேகத்தைப் போலவும் எழுந்து நின்றது.(59) எரியும் அக்னிக்கு ஒப்பானவையும், மின்னலுக்கு ஒப்பான பிரகாசத்தைக் கொண்டவையுமான அவனது மஹா நேத்திரங்கள் {பெருங்கண்கள்}, ஒளிரும் மஹா கிரகங்களை {பெருங்கோள்களைப்} போலத் தெரிந்தன.(60)

அந்த மஹாபலவான், வராஹங்கள், மஹிஷங்கள் {பன்றிகள், எருமைகள்} உள்ளிட்ட விதவிதமானவையும், ஏராளமானவையுமான உண்ணத்தக்க அனைத்தும் சுட்டிக் காட்டப்பட்டபோது அவற்றை பக்ஷித்தான்.(61) அந்த சக்ரரிபு {இந்திரனின் பகைவனான கும்பகர்ணன்}, பசியுடன் மாமிசத்தை உண்டு, தாகத்துடன் சோணிதத்தை {ரத்தத்தைப்} பருகி, கும்பங்கள் {குடங்கள்} நிறைந்த மேதத்தையும் {கொழுப்பையும்}, மத்யத்தையும் {மதுவையும்} விழுங்கினான்.(62) அவன் திருப்தி அடைந்ததை அறிந்த நிசாசரர்கள், குதித்துச் சென்று தங்கள் சிரங்களால் அவனை வணங்கி, சுற்றிலும் அவனைச் சூழ்ந்து நின்றனர்.(63) அவன் {கும்பகர்ணன்}, நித்திரை வசப்பட்ட நேத்திரங்களை உயர்த்தி, முற்றிலும் திறவா கண்களுடன் அந்த நிசாசரர்களை நோக்கினான்[7].(64)

[7] உறக்கம் அவ்வழி நீங்கி உணத்தகும்
வறைக்கு அமைந்தன ஊனொடு வாக்கிய
நறைக் குடங்கள் பெறான் கடை நக்குவான்
இறக்க நின்ற முகத்தினை எய்துவான் (7330)
அறுநூறு சகடத்து அடிசிலும்
நூறுநூறு குடம் களும் நுங்கினான்
ஏறுகின்ற பசியை எழுப்பினான்
சீறுகின்ற முகத்து இரு சங்கணான். (7331)

- கம்பராமாயணம் 7330, 7331ம் பாடல்கள், யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்

பொருள்: அவ்வாறு உறக்கம் கலைந்து உண்ணத்தகுந்த, வறுத்தெடுத்த இறைச்சியுடன், குடிப்பதற்குரிய குடங்கள் நிறைந்த கள்ளும் கிடைக்கப்பெறாமல் சோர்ந்து தாழ்ந்த முகத்தினை உடையவனாகத் தன் கடைவாயை நக்கினான்.(7330) அறுநூறு  வண்டிகள் நிறைந்த சோற்றையும், பல நூறு குடங்கள் கள்ளையும் விரைந்து உண்டு, பருகினான். இவ்வாறு மேலும் மேலும் பசியை அதிகமாக்கினான் சீறுகின்ற முகத்தில் சிவந்த இருந்து கண்களைக் கொண்டவன் {கும்பகர்ணன்}.(7331)

அந்த நைர்ருத ரிஷபன் {ராக்ஷசர்களில் காளையான கும்பகர்ணன்}, சர்வ நைர்ருதர்களிடமும் {ராக்ஷசர்களிடமும்} சாந்தமாகப் பேசி, தான் எழுப்பப்பட்டதில் வியப்படைந்து அந்த ராக்ஷசர்களிடம் இதைக் கூறினான்:(65) “திடீரென நீங்கள் என்னை எழுப்புவதற்கான அர்த்தமென்ன? இராஜர் குசலம்தானே {ராவணர் நலம்தானே}? அல்லது இங்கே பயம் ஏதும் எழுந்திருக்கிறதா?(66) இல்லையென்றால், வேறு எவரிடம் இருந்தோ பரம பயம் எழுந்திருக்கிறது என்பது திண்ணம். எதன்காரணமாக உங்களால் துரிதமாக நான் எழுப்பப்பட்டேன் என்பதை எனக்குச் சொல்வீராக.(67) இராக்ஷச ராஜரின் பயத்தை இப்போதே நான் போக்குவேன்; மஹேந்திரனே ஆனாலும் வீழ்த்துவேன், அதேபோல அனலனே {அக்னியே} ஆனாலும் குளிர வைப்பேன்.(68) உறங்கிக் கொண்டிருக்கும் என்னை அல்ப காரணத்திற்காக அவர் எழுப்பமாட்டார். எனவே, எதற்காக என்னை எழுப்பினீர்கள் என்பதன் அர்த்த தத்துவத்தை {என்பதற்கான காரணத்தை உள்ளபடியே} என்னிடம் சொல்வீராக” {என்றான் கும்பகர்ணன்}.(69)

Yupaksha speaking to Kumbhakarna

அரிந்தமனான {பகைவரை அழிப்பவனான} கும்பகர்ணன், இவ்வாறு கோபத்துடன் பேசும்போது, ராஜனின் அமைச்சனான யூபாக்ஷன், கைகளைக் கூப்பிக் கொண்டே {பின்வருமாறு} சொன்னான்:(70) “தேவர்களிடம் ஒருபோதும் நமக்கு பயமேதும் இல்லை; இராஜாவே, மானுஷர்களைக் குறித்த பயமே கொந்தளிக்கச் செய்கிறது.(71) மானுஷரிடம் உண்டான பயம் எப்படிப்பட்டதோ, இராஜாவே, அப்படிப்பட்ட பயம் தைத்திய தானவர்களிடம் இருந்தும் நமக்கு உண்டானதில்லை.(72) பர்வதங்களுக்கு ஒப்பான வானரர்களால் இந்த லங்கை சூழப்பட்டுள்ளது {முற்றுகையிடப்பட்டிருக்கிறது}. சீதா ஹரணத்தால் சந்தாபத்திலிருக்கும் {சீதை கடத்தப்பட்ட சோகத்தில் இருக்கும்} ராமனிடம் கொள்ளும் பயம் நம்மை கொந்தளிக்கச் செய்கிறது.(73) பூர்வத்தில் ஏக வானரனால் இந்த மஹாபுரி எரிக்கப்பட்டது. குமாரன் அக்ஷன்[8], தன்னைப் பின்தொடர்ந்தவர்களுடனும், குஞ்சரங்களுடனும் {யானைகளுடனும்} கொல்லப்பட்டான்.(74) ஆதித்யனின் தேஜஸ்ஸை கொண்ட ராமன், தேவகண்டகரும், ரக்ஷோதிபருமான பௌலஸ்தியரிடம் {தேவர்களுக்கு முள்ளாய் திகழ்பவரும், ராக்ஷசர்களின் அதிபரும், புலஸ்தியரின் வம்சத்தில் பிறந்தவருமான ராவணரிடம்} நேரடியாக, “போய் வருவாயாக” என்றான்.(75) எதை இந்த ராஜாவிடம், தேவர்களாலோ, தைத்தியர்களாலோ, தானவர்களாலோ செய்ய முடியவில்லையோ, அதைப் பிராண சந்தேகத்தில் இருந்து அவரை {ராவணரை} விடுவித்து, ராமன் செய்திருக்கிறான்” {என்றான் யூபாக்ஷன்}.(76)

[8] சுந்தர காண்டம், 47ம் சர்க்கத்தில் அக்ஷகுமாரன் வதம் சொல்லப்பட்டிருக்கிறது. 

யுத்தத்தில் தன் பிராதாவின் {உடன்பிறந்தானின்} வீழ்ச்சியை யூபாக்ஷனின் சொற்கள் மூலம் கேட்ட கும்பகர்ணன், தன் விழிகளை உருட்டியபடியே யூபாக்ஷனிடம் {பின்வருமாறு} கூறினான்:(77) “யூபாக்ஷா, இப்போதே ரணத்தில் ராகவனையும், லக்ஷ்மணனையும், சர்வ ஹரிசைனியத்தையும் {குரங்குப் படையையும்} வென்றுவிட்டு, பிறகு, ராவணரை நான் தரிசிக்க விரும்புகிறேன்.(78) ஹரிக்களின் மாமிச, சோணிதத்தால் {குரங்குங்களின் மாமிசத்தையும், ரத்தத்தையும் கொண்டு} ராக்ஷசர்களைத் திருப்தியடையச் செய்து, ராமலக்ஷ்மணர்களின் சோணிதத்தை {ரத்தத்தை} நானே பருகப் போகிறேன்” {என்றான் கும்பகர்ணன்}.(79)

கர்வத்துடன் பேசப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு எவன் கோபத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தானோ, அத்தகையவனும், நைர்ருதயோதமுக்கியனுமான {ராக்ஷசப்படைவீரர்களில் முக்கியனுமான} மஹோதரன், தன் கைகளைக் கூப்பியபடியே இந்த வாக்கியத்தை மொழிந்தான்:(80) “மஹாபாஹுவே, ராவணரின் சொற்களை கேட்டுவிட்டு, குண தோஷங்களை {நன்மை தீமைகளைக்} கருத்தில் கொண்ட பிறகு, யுத்தத்தில் சத்ருக்களை நீர் வெற்றி கொள்வீராக” {என்றான்}.(81)

மஹாபலவானும், மஹாதேஜஸ்வியுமான கும்பகர்ணன், மஹோதரனின் சொற்களைக் கேட்டுவிட்டு, ராக்ஷசர்கள் சூழப் புறப்பட்டுச் சென்றான்.(82) பயங்கரக் கண்களைக் கொண்ட பீமரூப பராக்கிரமனை {பயங்கர வடிவத்தையும், பராக்கிரமத்தையும் கொண்ட கும்பகர்ணனை} உறக்கத்தில் இருந்து எழுப்பிய ராக்ஷசர்கள், தசக்ரீவனின் நிவேசனத்திற்கு {ராவணனின் வசிப்பிடத்திற்குத்} துரிதமாகச் சென்றனர்.(83) பரமாசனத்தில் அமர்ந்திருந்த தசக்ரீவனை அணுகிய அந்த சர்வ நிசாசரர்களும், கூப்பிய கைகளுடன் அவனிடம் {பின்வருமாறு} கூறினர்:(84) “இராக்ஷசேஷ்வரரே, உமது பிராதாவான {உம்முடன் பிறந்தவரான} அந்தக் கும்பகர்ணர் விழித்தெழுந்து விட்டார். அவர் அங்கிருந்தே செல்லட்டுமா? அல்லது இங்கு வரச்சொல்லிப் பார்க்கிறீரா? என்பதைச் சொல்வீராக” {என்றனர்}.(85)

மகிழ்ச்சியடைந்த ராவணன், தன் முன் நின்ற அந்த ராக்ஷசர்களிடம், “அவனை இங்கேயே காண விரும்புகிறேன். நியாயப்படி {அவனை} பூஜிப்பீராக” என்று கூறினான்.(86)

இராவணனால் ஆணையிடப்பட்ட அந்த சர்வ ராக்ஷசர்களும், “அப்படியே ஆகட்டும்” என்று கூறி, மீண்டும் கும்பகர்ணனிடம் வந்து, இந்த வாக்கியத்தைச் சொன்னார்கள்:(87) “சர்வ ராக்ஷசபுங்கவரான ராஜா உம்மைக் காண விரும்புகிறார். வழியில் உமது புத்தியை திடப்படுத்திக் கொண்டு, உமது பிராதாவை {உம்முடன் பிறந்தவரை} உற்சாகப்படுத்துவீராக” {என்றனர்}.(88)

வெல்வதற்கரிய மஹாவீரியனான கும்பகர்ணன், பிராதாவின் சாசனத்தை {தன்னுடன் பிறந்தானின் ஆணையை} அறிந்து கொண்டு, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி தன் சயனத்தில் இருந்து எழுந்தான்.(89) அவன், தன் வதனத்தை {முகத்தைக்} கழுவி, ஸ்நானம் செய்து {குளித்துவிட்டு}, புத்துணர்வு பெற்று, மகிழ்ச்சியடைந்து, தன்னை உயர்வாக அலங்கரித்துக் கொண்டு, தாகத்துடன், தன் பலத்தை அதிகரிக்கும் பானத்தைத் துரிதமாகக் கேட்டான்.(90) பிறகு அந்த ராக்ஷசர்கள், ராவணனின் ஆணையைத் துரிதமாக நிறைவேற்றுவதற்காக, சீக்கிரமே மத்யத்துடனும் {மதுவுடனும்}, விதவிதமான பக்ஷணங்களுடனும் {உணவுப் பொருட்களுடனும்} அங்கே சென்றனர்.(91) இரண்டாயிரம் கடங்கள் {பானைகள்} பருகிவிட்டு, சற்றே போதையால் கிளர்ச்சியடைந்து, தேஜோ பலம் பெருகப்பெற்றவனாக அவன் புறப்பட்டுச் சென்றான்.(92) இராக்ஷசப்படையுடன், தன் பிராதாவின் பவனத்திற்குள் {தன்னுடன் பிறந்தானின் வசிப்பிடத்திற்குள்} நுழைந்த கும்பகர்ணன், தன் பாத அடிகளால் மேதினியை நடுங்கச் செய்தபடியே காலாந்தக யமனுக்கு ஒப்பானவனாகத் தோன்றினான்.(93) அவன், தரணியை ஒளிரச் செய்யும் ஆயிரம் கதிரோனை {சூரியனைப்} போலத் தன்னுடலால் ராஜமார்க்கத்தைப் பிரகாசிக்கச் செய்தபடி, அஞ்சலிமாலையால் சூழப்பட்ட {கூப்பிய கைகளின் வரிசையால் கௌரவிக்கப்பட்ட} சதக்ரது  ஸ்வயம்பூவின் கிருஹத்திற்கு {இந்திரன் பிரம்மனின் வசிப்பிடத்திற்கு சென்றது} எப்படியோ, அப்படியே அங்கே சென்றான்.(94) 

ஒப்பற்ற கிரிசிருங்கத்திற்கு நிகராக ராஜமார்க்கத்தில் செல்லும் அந்த அமித்ரக்னனைக் கண்ட உடனேயே {பகைவரை அழிக்கும் கும்பகர்ணனைக் கண்ட உடனேயே நகருக்கு} வெளியிலிருந்த வனௌகஸர்களும், அவர்களின் யூதபாலர்களும் {வானரர்களும், அவர்களின் குழுத்தலைவர்களும்} அச்சமடைந்தனர்.(95) சிலர் சரண்யனான ராமனிடம் சரணடைந்தனர். சிலர் துயரத்துடன் கீழே விழுந்தனர். சிலர் கலக்கமடைந்து திசைகள் அனைத்திலும் ஓடிச் சென்றனர். சிலர் பயத்தால் குழம்பி புவியில் கிடந்தனர்.(96) பெரும் சிருங்கத்திற்கு {சிகரத்திற்கு} ஒப்பான கிரீடத்தைக் கொண்டவனும், ஆத்ம தேஜஸ்ஸால் ஆதித்யனை ஸ்பரிசிப்பவனுமான அந்த அற்புதமானவனை {கும்பகர்ணனைக்} கண்ட வனௌகஸர்கள் {வனத்தில் வசிப்பவர்களான வானரர்கள்}, பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாக, உடல் அளவைப் பெருக்கிக் கொண்டு அங்கேயும், இங்கேயும் ஓடினர்.(97) 

யுத்த காண்டம் சர்க்கம் – 060ல் உள்ள சுலோகங்கள்: 97

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை