Ravana faints | Yuddha-Kanda-Sarga-068 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன் கும்பகர்ணனைக் கொன்றானென்பதைக் கேட்டு மயங்கி விழுந்த ராவணன்; நனவு மீண்டதும், விபீஷணனின் ஆலோசனைகளைக் கேட்காததற்காக வருந்தியது...
கும்பகர்ணன், மஹாத்மாவான ராகவனால் கொல்லப்பட்டதைக் கண்ட ராக்ஷசர்கள், ராக்ஷசேந்திரனான ராவணனிடம் {பின்வருமாறு} அறிவித்தனர்:(1) “இராஜரே, காலனுக்கு ஒப்பாக வானர சேனையை விரட்டி, வானரர்களை பக்ஷித்தவர் {கும்பகர்ணர்}, காலனின் கர்மத்தை எதிர்கொண்டார் {யமனின் செயல்பாட்டால் உண்டாகும் மரணத்தை அடைந்தார்}.(2) ஒரு முஹூர்த்தத்திற்கு தன் பிரபாவத்தைக் காட்டிவிட்டு, ராமனின் தேஜஸ்ஸில் அவர் சாந்தமடைந்தார். அவரது காயம் {உடல்} சமுத்திரத்திற்குள் பாதி பிரவேசித்த நிலையில் பயங்கரமாகத் தெரிந்தது.{3} நாசியும், காதுகளும் துண்டிக்கப்பட்டு, உதிரம் சொட்டச் சொட்ட பர்வதத்திற்கு ஒப்பான சரீரத்துடன் லங்கையின் துவாரத்தை {வாயிலை} அடைத்துக் கொண்டார்.{4} உமது பிராதாவான {உம்முடன் பிறந்தவரான} கும்பகர்ணர், காகுத்ஸ்தனின் சரத்தால் பீடிக்கப்பட்டுக் காட்டுத் தீயால் எரிக்கப்படும் மரத்தைப் போலச் சிதைந்து விகாரமான லகண்டபூதமானார் {கழுத்தும், தாடையும் அடங்கிய சதைக் குவியலானார்” என்றனர்}.(3-5)
மஹாபலவானான கும்பகர்ணன் போரில் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், சோக சந்தாபத்தில் மூர்ச்சித்து விழுந்தான்.(6) தங்கள் பித்ருவ்யன் {தந்தையைப் போன்ற கும்பகர்ணன்} கொல்லப்பட்டதைக் கேட்ட தேவாந்தகன், நராந்தகர், திரிசிரன், அதிகாயன் ஆகியோரும் சோகத்தால் பீடிக்கப்பட்டு அழுதனர்.(7) அக்லிஷ்ட கர்மனான ராமனால் {சிரமமின்றி செயல்களைச் செய்பவனான ராமனால்} தங்கள் பிராதா {தங்களுடன் பிறந்தவன்} கொல்லப்பட்டதைக் கேட்ட மஹோதரனும், மஹாபார்ஷ்வனும் சோகத்தில் மூழ்கினார்கள்.(8)
கும்பகர்ண வதத்தால் தீனனானவனும், கலங்கிய இந்திரியங்களைக் கொண்டவனுமான ராக்ஷசபுங்கவன் {ராக்ஷசர்களில் முதன்மையான ராவணன்}, பெருஞ்சிரமத்திற்கிடையில் நனவு மீண்டவனாக {பின்வருமாறு} அழுது புலம்பினான்:(9) “ஹா, வீரா, ரிபு தர்பக்னா {பகைவரின் செருக்கை அழிப்பவனே}, மஹாபலவானே, கும்பகர்ணா, தைவத்தால் {தெய்வத்தின் விருப்பத்தால்} என்னைவிட்டுவிட்டு யம சாதனத்தை {யமனின் வசிப்பிடத்தை} நீ அடைந்துவிட்டாய்.(10) மஹாபலவானே, சத்ரு சைனியத்தைப் பீடித்தும், என் பந்துக்களின் வேதனைமுள்ளை அகற்றாமல் என்னைவிட்டுவிட்டு நீ எங்கே சென்றுவிட்டாய்?(11) எவனை ஆசரித்து {பின்தொடர்ந்து} ஸுராஸுரர்களிடம் பீதியின்றி இருந்தேனோ, எவன் எனது வலது புஜமாக {கையாக} இருந்தானோ, அத்தகையவன் வீழ்ந்தபிறகு நானும் இல்லாமல் ஆகிவிட்டேன் {இனி உயிருடன் இருக்க மாட்டேன்}.(12)
தேவ, தானவர்களின் செருக்கை அடக்கியவனும், காலாக்னிக்கு ஒப்பானவனுமான இந்த விதமான {இத்தகைய} வீரன் இன்று ரணத்தில் ராகவனால் {ராமனால்} எப்படி ஹதம் செய்யப்பட்டான் {கொல்லப்பட்டான்}?(13) எவனை வஜ்ரத்தின் தாக்குதலும் தீங்கைச் செய்யாதோ, அத்தகைய நீ எப்படி ராமபாணத்தால் பீடிக்கப்பட்டு மஹீதலத்தில் உணர்வின்றிக் கிடந்தாய் {பூமியில் நெடுந்துயில் கொண்டாய்}?(14) இரணத்தில் கொல்லப்பட்ட உன்னைக் கண்டு தேவகணங்களும், ரிஷிகளும் ககனத்தில் {வானத்தில்} நின்று மகிழ்ச்சிக் கூச்சலிடுகின்றனர்.(15) தங்கள் லக்ஷியத்தை அடைந்து பெரும் மகிழ்ச்சியில் திளைக்கும் பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான குரங்குகள்}, எங்குமிருந்து அடைதற்கரிய இந்த லங்காதுவாரங்களில் {வாயில்களில்} இப்போதே நிச்சயம் ஏறுவார்கள்.(16)
எனக்கு ராஜ்ஜியத்தைக் கொண்டு காரியமேதும் இல்லை. சீதையைக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்? கும்பகர்ணனை இழந்த எனக்கு, ஜீவிக்கும் மதி ஒன்றுமில்லை {உயிர் வாழ்வதில் மன விருப்பமேதும் இல்லை}.(17) யுத்தத்தில் என் பிராதாவை {என்னுடன் பிறந்த கும்பகர்ணனைக்} கொன்ற ராகவனை நான் கொல்லவில்லையென்றால், மரணமே சிறந்தது. இங்கே நான் ஜீவிப்பதில் அர்த்தமேதும் இல்லை.(18) என் அனுஜன் {தம்பி} எங்கிருக்கிறானோ அந்த தேசத்திற்கு {இடத்திற்கு} இப்போதே செல்வேன். பிராதாக்களை {என் உடன் பிறந்தாரைக்} கைவிட்டு ஒரு க்ஷணமும் ஜீவிப்பதில் எனக்கு உற்சாகமில்லை.(19)
தேவர்கள், பூர்வத்தில் தீங்கிழைத்தவனான என்னைக் கண்டு பரிகசிப்பார்கள். கும்பகர்ணா, நீ கொல்லப்பட்ட பிறகு, இந்திரனை எப்படி நான் ஜயிப்பேன் {வெல்வேன்}?(20) எந்த மஹாத்மா சொன்ன எவற்றை நான் அஞ்ஞானத்தால் ஏற்கவில்லையோ, அத்தகையவையான இந்த சுபமான விபீஷணனின் சொற்கள் இதோ என்னிடம் வந்திருக்கின்றன {விபீஷணனின் சொற்கள் இதோ பலித்துவிட்டன}.(21) கும்பகர்ணன், பிரஹஸ்தன் ஆகியோரின் இந்தக் கொடூர நாசம் நடைபெற்றதிலிருந்து, விபீஷணன் சொன்ன சொற்கள் யாவும் என்னை சங்கடப்படுத்துகின்றன.(22) தார்மிகனும், ஸ்ரீமானுமான அந்த விபீஷணனை நான் நிராகரித்த, அந்தக் கர்மத்தின் சோக விளைவுகள் {வேதனை} இதோ என்னை அடைந்துவிட்டன” {என்றான் ராவணன்}.(23)
இந்திரரிபுவான தன் அனுஜன் ஹதம் செய்யப்பட்டதை {கொல்லப்பட்டதை} அறிந்த தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, அந்தராத்மா கலங்கிப் பெரிதும் கலக்கமடைந்தவனாக இவ்வாறும், இன்னும் கிருபைக்குரிய பலவிதங்களிலும் அழுது புலம்பினான்.(24)
யுத்த காண்டம் சர்க்கம் – 068ல் உள்ள சுலோகங்கள்: 24
Previous | | Sanskrit | | English | | Next |