Friday, 15 December 2023

இலங்கையர் | சுந்தர காண்டம் சர்க்கம் - 05 (27)

Lankans | Sundara-Kanda-Sarga-05 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலங்கையெங்கும் நிறைந்திருந்த ராக்ஷசர்கள்; சீதையைக் காணாமல் வருந்திய ஹனுமான்...

Lord Hanuman enters Lanka
This picture was generated using Artificial Intelligence in Bing website | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கப்பட்ட படம்

அப்போது அந்த மதிமிக்கவன் {ஹனுமான்}, வானத்தில் மத்திம கதியை அடைந்தவனும், மஹத்தான ஜோதியுடன் கதிர்களைப் பரப்பிக் கொண்டிருப்பவனுமான பானுவந்தனை {சந்திரனை}, கோஷ்டத்தின் {தொழுவத்தின்} மத்தியில் மதங்கொண்ட ரிஷபத்தைப் போலக் கண்டான்[1].(1) அப்போது, உலகின் பாபங்களை நாசம் செய்தபடியும், பெரும் நீர்க்கொள்ளிடத்தை {கடலை} பொங்கச் செய்தபடியும், சர்வபூதங்களையும் ஒளிரச் செய்தபடியும் எழுபவனான சீதாம்சுமனை {குளிர்ந்த கதிர்களைக் கொண்ட சந்திரனைக்} கண்டான்.(2) புவியில் மந்தரத்தின் {பூமியில் மந்தர மலையின்} மீதும், அதே போல, பிரதோஷங்களில் {மாலை வேளைகளில்} சாகரத்தின் மீதும், அதே போல நீர்நிலைகளில் தாமரைகளின் மீதும் எப்படி லக்ஷ்மி {ஒளி} ஒளிர்வாளோ, அப்படியே அழகிய நிசாகரனும் {இரவு வானச் சந்திரனும்} ஒளிர்ந்தான்.(3) வெள்ளிக்கூண்டில் உள்ள ஹம்ஸம் {அன்னப்பறவை} எப்படியோ, மந்தரத்தின் குகையிலுள்ள சிம்ஹம் எப்படியோ, கர்வம் கொண்ட குஞ்சரத்தின் {யானையின்} மீதுள்ள வீரன் எப்படியோ, அப்படியே அம்பரத்தில் {வானில்} இருந்த சந்திரனும் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(4)

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “இந்த மொத்த அத்தியாயமும் வேறு வகையிலான சந்தத்தில் அமைந்திருக்கிறது. செயற்கையாக, வலிந்து திணிக்கப்படும் உருவகங்களுடன், உளக்காட்சிகளாலும் {கற்பனைகளாலும்}, வர்ணனைகளாலும் நிறைந்திருக்கிறது” என்றிருக்கிறது.

கூரிய சிருங்கங்களுடன் இருக்கும் ககுத்மானை {உயர்ந்த திமில்களைக் கொண்ட காளையைப்} போலவும்,  உயர்ந்த சிருங்கங்களுடன் {சிகரங்களுடன்} கூடிய வெண்மையான மஹாஅசலத்தை {பெரும் மலையைப்} போலவும், ஜாம்புநதத்தகடு {பொன் தகடு} பூண்ட தந்தங்களுடன் கூடிய ஹஸ்தியை {யானையைப்} போலவும் பரிபூர்ண சிருங்கங்களுடன் சந்திரன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(5) பனி, நீர்த்திவலைகளின் தாக்கம் இல்லாதவனும், மஹாகிரஹத்தின் {சூரியனின்} கதிர்களைப் பெற்று களங்கமற்றிருப்பவனும், லக்ஷ்மி ஆசரிக்கும் நிர்மலமான பிரகாசம் கொண்டவனுமான பகவான் சந்திரன், சசாங்கத்துடன் {முயல் அடையாளத்துடன்} ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(6) சிலாதலத்தை அடைந்த மிருகேந்திரன் {பாறைகள் நிறைந்த பகுதியை அடைந்த விலங்குகளின் தலைவனான சிங்கம்} எப்படியோ,  மஹாரணத்தை அடைந்த கஜேந்திரன் {பெரும்போரை அடைந்த யானைகளின் தலைவன்} எப்படியோ,  ராஜ்ஜியத்தை அடைந்த நரேந்திரன் {அரசை அடைந்த மனிதர்களின் தலைவன்} எப்படியோ, அப்படியே சந்திரனும் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(7) சந்திரோதயத்தால் களங்கமற்றவனும், ராக்ஷசர்களின் பிசிதாசதோஷத்தால் {ஊனுண்ணும் களங்கத்தால்} களங்கமடைந்தவனும், காதலில் மூழ்கியவர்களின் சித்ததோஷத்தால் {காதலர்களைக் காமத்தில் திளைக்கச் செய்யும் களங்கத்தால்} களங்கமடைந்தவனுமான பகவான் பிரதோஷன் {மாலை வேளையானவன்}, ஸ்வர்க்கப் பிரகாசத்துடன் இருந்தான்.(8) 

காதுகளுக்கு சுகமான {வீணை முதலிய} தந்தி ஸ்வனங்கள் {ஒலிக்கத்} தொடங்கின. நன்னடத்தை கொண்ட நாரியைகள் {பெண்கள்}, பதிகளுடன் {தங்கள் கணவர்களுடன்} உறங்கிக் கொண்டிருந்தனர். அதியற்புத ரௌத்திர நடத்தை கொண்ட ராக்ஷசர்களும் திரியத் தொடங்கினர்.(9) வீரனும், மதிமிக்கவனுமான அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, மத்தப்ரமத்தத்தினால் {குடி மயக்கத்தால் உண்டான வெறியால்} நிறைந்த குலங்களையும் {மக்களையும்}, ரதங்கள், அஷ்வங்கள், பத்திராசனங்களின் குலங்களாலும் {தேர்க்கொட்டில், குதிரை பங்தி, யானைக்கூட்டம் / சிறந்த இருக்கைகள் ஆகியவற்றாலும்}, செழிப்பாலும் நிறைந்த குலங்களையும் {வீடுகளையும்} கண்டான்.(10) அவர்கள், பரஸ்பரம் அதிகம் கேலி பேசிக் கொண்டும், கனமான தோள்களை அதிகம் தட்டிக் கொண்டும், வெறியுடன் கூடிய பிதற்றலை அதிகம் பிதற்றிக் கொண்டும், குடிவெறியால் பரஸ்பரம் அதிகம் விரட்டிக் கொண்டும் இருந்தனர்.(11) இராக்ஷசர்கள், மார்பில் அடித்துக் கொண்டும், காந்தைகளின் {பெண்கள்} மீது அங்கங்களைப் போட்டுக் கொண்டும், {நினைத்தபடி பலவிதமான} சித்திர ரூபங்களைப் பரப்பிக் கொண்டும், தங்கள் திடமான விற்களை இழுத்து விளையாடிக் கொண்டும் இருந்தனர்.(12) காந்தைகள் {பெண்கள்} சிலர், தங்கள் உடல்களில் சந்தனம் பூசியிருந்தனர், அப்படியே வேறு சிலர் அங்கே உறங்கிக் கொண்டிருந்தனர், அப்படியே நல்ல ரூபம் கொண்ட சிலர் சிரித்துக் கொண்டிருந்தனர், வேறு சிலர் குரோதத்தில் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தனர்.(13) 

அதேபோல, பிளிறும் மஹாகஜங்களுடனும் {பெரும் யானைகளுடனும்}, அதேபோல, பூஜிக்கப்படத்தக்க நல்லோருடனும், நீண்ட பெருமூச்சுவிடும் வீரர்களுடனும் கூடியது {லங்கையானது}, சீறும் புஜகங்களுடன் {பாம்புகளுடன்} கூடிய மடுவைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(14) புத்திப்பிரதானர்களும் {புத்தியிற்சிறந்தவர்களும்}, ருசிகரமாகப் பேசுபவர்களும், நல்ல அர்ப்பணிப்புடன் கூடியவர்களும், ஜகத்தில் பிரதானர்களும் {உலகத்தின் முக்கியஸ்தர்களும்}, நானாவிதமானவர்களும், அழகிய பெயர்களைக் கொண்டவர்களுமான யாதுதானர்களை {ராக்ஷசர்களை} அந்தப் புரியில் {நகரத்தில்} கண்டான்.(15) நல்ல ரூபம் கொண்டவர்களும், நானாவித குணங்களைக் கொண்டவர்களும், குணத்திற்குத் தகுந்த ரூபங்கொண்டவர்களும், பிரகாசமாக இருப்பவர்களுமான அவர்கள் அனைவரையும் கண்டு அவன் {ஹனுமான்} ஆனந்தமடைந்தான். சிதைந்த ரூபத்துடன் இருந்தாலும், தகுந்த தோற்றம் கொண்ட சிலரையும் அவன் கண்டான்.(16) பிறகு, அங்கே அவர்களின் ஸ்திரீகள், சிறந்த ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மஹானுபாவர்களாகவும் {மகிமை பொருந்தியவர்களாகவும்}, சுத்தபாவர்களாகவும் {தூய்மையானவர்களாகவும்}, பிரியர்களிடமும் {காதலர்களிடமும்}, பானங்களிடமும் {மதுவகைகளிடமும்} பற்றுடைய சக்தபாவர்களாகவும் {இதய விருப்பம் கொண்டவர்களாகவும்}, தாரைகளைப் போன்ற ஸுப்ரபாவர்களுமாக {நட்சத்திரங்களைப் போல நல்ல விளைவுகளை ஏற்படுத்துபவர்களுமாக} இருப்பதைக் கண்டான்[2].(17) 

[2] கோது அறுகுவளை நாட்டம் கொழுநர்கண் வண்ணம் கொள்ள
தூதுளங் கனியைவென்று துவர்த்தவாய் வெண்மை தோன்ற
மாதரும் மைந்தர்தாமும் ஒருவர்பால் ஒருவர் வைத்த
காடல் அம்கள் உண்டார்போல் முறைமுறைகளிக்கின்றாரை

- கம்பராமாயாணம், 4942ம் பாடல், ஊர் தேடு படலம்

பொருள்: களங்கமற்ற குவளை மலரைப் போன்ற கரிய கண்கள், கணவரின் கண் இயல்பைப் பெறவும், தூதுளம் பழத்தை வென்று செந்நிறம் பெற்ற வாயில் வெண்மை வெளிப்பட, மாதரும் ஆடவரும் ஒருவர்மேல் ஒருவர் கொண்டுள்ள காதலெனும் கள்ளை உண்டவர் போல மாறி மாறி களிக்கும் காதலர்களை {கண்டான்}.

செழிப்பால் ஜ்வலித்தபடியும், நாணத்தால் அலங்கரிக்கப்பட்டும், காதலர்களால் தழுவிக் கொள்ளப்பட்டும், நடுநிசிகாலத்தில் இறுக்கமாகத் தழுவிக் கொள்ளப்பட்டும், பறவைகளைப் போல மலர்களால் தழுவப்பட்டும் இருந்த சிலரையும் {சில பெண்களையும்} கண்டான்.(18) அங்கே பிரியர்களின் {காதலர்களின்} மடியில் சுகமாக அமர்ந்திருப்பவர்களும், மாளிகைகளின் உப்பரிகைகளில் அமர்ந்திருப்பவர்களும், பர்த்தாவிற்குப் பிரியைகளும் {கணவனின் அன்பிற்குரியவர்களும்}, தர்மத்தில் விருப்பமுள்ளவர்களும், மதனனால் {காமதேவனால்} பீடிக்கப்பட்டவர்களுமான வேறு சிலரையும் {சில பெண்களையும்} அந்த மதிமிக்கவன் கண்டான்.(19) ஆடைகள் இல்லாத காஞ்சன, வெள்ளி வர்ணத்தினரும், கலவிக்குத் தகுந்த புடம்போட்ட பொன் வர்ணத்தினருமான சிலரையும், சந்திர வர்ணத்தினரும், காந்தர்கள் {காதலர்கள்} இல்லாத அழகிய வர்ணம் கொண்ட அங்கத்தினருமான வேறு சிலரையும் கண்டான்.(20) பிறகு, மனத்திற்கினிய மலர்களில் மனம் ஈர்க்கப்பட்டவர்களும், பேரழகு கொண்டவர்களும், பிரியர்களை அடைந்து பிரீதியுடன் கூடியவர்களும், காதலர்களுடன் தங்கள் கிருஹங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் அந்த ஹரிபிரவீரன் {குரங்குகளில் சிறந்த வீரனான ஹனுமான்} கண்டான்.(21) சந்திரப்பிரகாசத்துடன் கூடிய முகங்களின் வரிசைகளையும், வளைந்த புருவங்களுடன் கூடிய அழகிய நேத்திர {கண்களின்} வரிசைகளையும், மின்னலைப் போன்ற ஆபரணங்களின் அழகிய வரிசைகளையும் கண்டான்[3].(22) 

[3] இயக்கியர் அரக்கிமார்கள் நாகியர் எஞ்சுஇல் விஞ்சை
முயல்கறை இல்லாத்திங்கள் முகத்தியர் முதலினோரை
மயக்குஅற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும்
கயக்கம்இல் துயிற்சிக் கும்பகருணனைக் கண்ணின் கண்டான்.

- கம்பராமாயணம், 4955ம் பாடல், ஊர் தேடு படலம்

பொருள்: யக்ஷிகள், ராக்ஷசிகள், நாகினிகள், குறைவற்றதும், முயல் கறை இல்லாதததுமான சந்திரனைப் போன்ற முகத்தைக் கொண்ட வித்யாதரிகள் முதலியோரை சந்தேகமின்றி ஆராய்ந்து செல்லும் மாருதி, மலைபோல் உள்ளவனும், இடையீடில்லாத் துயில் கொள்பவனுமான கும்பகர்ணனையும் கண்களில் கண்டான்.

பேரழகியும், ராஜகுலத்தில் ஜனித்தவளும், தர்மவழியில் நடப்பவளும், முற்றும் மலர்ந்த கொடியைப் போல நன்கு வளர்க்கப்பட்டவளும், மெலிந்தவளும், மனத்தில் பிறந்தவளுமான சீதையை மட்டும் கண்டானில்லை.(23) இராமனிடம் பார்வையைச் செலுத்தி, சனாதன வழியில் நிலைப்பவளும், மதனனால் பீடிக்கப்பட்டவளும், எப்போதும் பர்த்தாவின் {கணவனின்} மனத்தில் பிரவேசித்திருப்பவளும், சிறந்த ஸ்திரீகளில் சிறந்தவளுமானவளை {கண்டானில்லை}.(24) பிரிவெனும் வெப்பத்தால் வேதனை அடைபவளும், வற்றாத கண்ணீரால் தொண்டை அடைபட்டவளும், பூர்வத்தில் சிறந்த ஹாரங்களைக் கழுத்தில் தரித்திருந்தவளும், அழகிய புருவங்களுடன் பிறந்தவளும், வனத்தில் ஆடும் நீலகண்டீயை {பெண்மயிலைப்} போன்ற இனிய குரலைக் கொண்டவளுமானவளை {கண்டானில்லை}.(25) தெளிவற்ற கோடுகளுடன் கூடிய சந்திரரேகை போன்றவளை, புழுதியால் மறைக்கப்பட்ட ஹேமரேகை போன்றவளை, காயத்தில் மறைந்த பாணரேகை {கணைரேகை} போன்றவளை, வாயுவால் கலைக்கப்பட்ட மேகரேகை போன்றவளை {கண்டானில்லை}.(26) மனுஜேஷ்வரனும் {மனிதர்களின் தலைவனும்}, வாதம்புரிபவர்களில் சிறந்தவனுமான ராமனின் பத்தினி சீதையை நெடுநேரம் காணாத அந்தப் பிலவங்கமன் {தாவிச் செல்பவனான ஹனுமான்}, சிறிது நேரத்தில் துக்கத்தால் பீடிக்கப்பட்ட மந்தனைப் போலானான்.(27)

சுந்தர காண்டம் சர்க்கம் – 05ல் உள்ள சுலோகங்கள்: 27


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை