Mahodhara | Yuddha-Kanda-Sarga-064 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: போரிடாமல் ராமனை வெல்வதற்கான ஓர் உத்தியை ராவணனிடம் சொன்ன மஹோதரன்...
மஹோதரன்[1], அதிகாயனும், பாஹுசாலியும் {பேருடல் படைத்தவனும், பெருங்கரங்களைக் கொண்டவனும்}, பலம்வாய்ந்தவனுமான கும்பகர்ணன் சொன்ன அந்த வசனத்தைக் கேட்டு, {பின்வருமாறு} சொன்னான்:(1) “கும்பகர்ணரே, நற்குலத்தில் பிறந்தும், சாதாரணத் தோற்றம் கொண்டவன் திமிருடன் பேசுவதைப் போலத் துடுக்காகப் பேசுகிறீர். எங்கும் செய்யப்படுவனவற்றை நீர் அறியவில்லை.(2) கும்பகர்ணரே, நியாயாநியாயங்களை ராஜர் அறியமாட்டாரா {நியாயங்களையும், அநியாயங்களையும் ராஜா ராவணர் அறியமாட்டாரா}? கேவலம் குழந்தைத்தனமான துடுக்குடன் பேச விரும்புகிறீர்[2].(3) தேசகாலங்களை {ஏற்ற இடம், நேரம் ஆகியவற்றை} அறிந்தவரான ராக்ஷசரிஷபர் {ராக்ஷசர்களில் காளை ராவணர்}, தன்னுடைய, பகைவருடைய விருத்தி {ஆதிக்கம்}, குறை, ஸ்தானங்களை {நிலை ஆகியவற்றைச் சரியாகப்} புரிந்து வைத்திருக்கிறார்.(4)
[1] பெரும் வயிற்றைக் கொண்டவன் என்பது பொருள்
[2] கம்பராமாயணத்தில் மஹோதரன், மாலியவானை இப்படிக் கண்டிப்பதாக வருகிறதே ஒழிய கும்பகர்ணனைக் கண்டிப்பதாக வரவில்லை. அது பின்வருமாறுஆயவன் உரைத்தலோடும் அப்புறத்து இருந்தான் ஆன்றமாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்துதீ எழ நோக்கி என் இச்சிறுமை நீ செப்பிற்று என்னாஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான் (7306)நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறுவென்றியே ஆக மற்றுத் தோற்று உயிர்விடுதல் ஆகஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியதுஒல்கிப் பின்று மேல் அவனுக்கு அன்றோ பழியொடு நரகம் பின்னே (7307)- கம்பராமாயணம் 7306, 7307ம் பாடல்கள், யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்பொருள்: {மாலியவான்} அவ்வாறு சொன்னதும், அப்புறத்தில் இருந்தவனும், பெரும் மாயைகள் பலவற்றைச் செய்வதில் வல்லவனுமான மகோதரன் விரைந்து வந்து, தீ எழும் வகையில் {சினத்துடன் மாலியவானை} நோக்கி, “என் தலைவனைச் சிறுமையாகச் சொன்னது என்ன?” {என்று அதட்டி}, தோல்வியால் துவண்ட மனத்தைக் கொண்டவனுக்கு {ராவணனுக்கு} நன்மை தராத பெரிய உறுதிமொழிகளைச் சொன்னான்.(7306) “இனியதை விரும்பி, “இது நல்லது” என்று ஒரு செயலைக் கொண்டால், தோல்விக்கு வேறுபட்ட வெற்றியே விளையட்டும். அல்லது தோற்று உயிர்விடும் நிலையே விளையட்டும். இது உத்தமர்க்கு உரியது. இவை ஒன்றில் மட்டும் ஊன்றி நிற்கலாம். மனம் தளர்ந்து பின்வாங்குபவனுக்கு அவ்வாறான பழியோடு நரகமும் கிட்டும்” {என்றான் கும்பகர்ணன்}.(7307) இதன்பிறகு, மஹோதரனே கும்பகர்ணனை துயிலெழுப்பச் சொல்கிறான். இது கம்பராமாயணத்தில் வருவது. வால்மீகியில் யுத்த காண்டம் 35ம் சர்க்கத்தில் மால்யவான், “சீதையை ராமனிடம் திருப்பிக் கொடுத்துவிடு” என்று ராவணனிடம் சொல்கிறான். அதற்கு ராவணனே அவனை நேரடியாகக் கண்டிக்கிறான்.
பலவானாக இருந்தாலும், பெரியோருக்குத் தொண்டாற்றாத சாதாரண புத்தியுடையவனால் எதைச் செய்ய முடியாதோ, அத்தகையதை எந்த நரன் {மனிதன்} செய்வான்?(5) தர்ம, அர்த்த, காமங்கள் தனித்தனியாக இருப்பதாக {அறம், பொருள், இன்பங்கள் வெவ்வேறு காலத்தில் செய்யப்படுவன என்று} நீர் சொல்கிறீர். அவற்றைப் புரிந்து கொள்வதற்கான எந்த லக்ஷணமும் உமது ஸ்வபாவத்தில் {இயல்பிலேயே} இல்லை.(6) கர்மம் மட்டுமே காரணங்கள் அனைத்தின் நோக்கமாகும் {செயலே காரணத்தை அடைவதற்கான வழிமுறையாகும்}. பாபம் நிறைந்த கர்மங்களும் செழிப்பின் பலனை {நற்பலனை} அளிக்கின்றன.(7) தர்ம, அர்த்தங்களும், இதரவையும் {அதர்மமும், அனர்த்தமும்} செழிப்பின் பலனையே கொடுக்கின்றன. அதர்ம, அனர்த்தங்களோ புறக்கணித்த குற்றத்திற்கான பலனைக் கொடுக்கும்.(8) உயிரினங்கள், இகத்திலும், பரத்திலும் கர்மங்களின் {இம்மையிலும், மறுமையிலும் செயல்களுக்கான} நற்பலனை அறுவடை செய்கின்றன. காமத்தினால் கர்மத்தைச் செய்பவனும் அவற்றை அனுபவிக்கிறான் {ஆசைவயப்பட்டு செயலாற்றுபவனும் இம்மையில் நற்பலனை அனுபவிக்கிறான்}.(9)
இங்கே ராஜரின் ஹிருதயத்தில் கொள்ளப்பட்ட காரியம் நம்மாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சத்ருவுக்கு எதிரான இந்த சாஹசத்தில் என்ன குறைவேற்பட்டது?(10) எதை ஹேதுவாகக் கொண்டு ஏகனாக {தனியொருவனாகச்} செல்ல நீர் முடிவெடுத்தீரோ, அதில் எது பொருத்தமற்றது, எது நல்லதல்ல என்பதை நான் உமக்குச் சொல்கிறேன்.(11) பூர்வத்தில் ஜனஸ்தானத்தில் பலம் மிக்க ராக்ஷசர்கள் ஏராளமானோரைக் கொன்ற அந்த ராகவனை எப்படி ஏகனாக நீர் ஜயங்கொள்வீர் {அந்த ராமனை எப்படி உம்மால் தனியொருவராக வெற்றி கொள்ள முடியும்}?(12) பூர்வத்தில் ஜனஸ்தானத்தில் எந்த மஹௌஜசர்கள் {பேராற்றல் படைத்தவர்கள்} வெல்லப்பட்டனரோ, அந்த சர்வ ராக்ஷசர்களும் புரத்தில் {லங்காபுரி நகரத்தில்} பீதியுடன் இருப்பதை நீர் காணவில்லையா?(13)
தசரதாத்மஜனான அந்த ராமன், கோபம் கொண்ட சிம்ஹத்தைப் போன்றவன் என்பதை அறிந்திருக்கிறீர். உறங்கிக் கொண்டிருக்கும் சர்ப்பத்தை விழிப்படையச் செய்ய விரும்புகிறீர்.(14) நித்யம் தேஜஸ்ஸில் ஜுவலிப்பவனும், அணுகுதற்கரியவனும், மிருத்யுவைப் போல சகித்துக் கொள்ள முடியாதவனுமான அவனை {ராமனை} அணுகத் தகுந்தவன் எவன்?(15) இந்தச் சத்ருவை நேருக்கு நேர் சந்திப்பதில் அனைத்தும் சந்தேகத்திற்குரியவையே. அங்கே நீர் ஏகனாக {தனியொருவராகச்} செல்வது நிச்சயம் எனக்குப் பிடிக்கவில்லை.(16) அர்த்தம் தொலைந்தவன் எவனோ, அவன் ஜீவிதத்தைத் தியாகம் செய்ய நிச்சயித்துக் கொண்டு, அர்த்தம் நிறைந்த பகைவனை, பிராக்ருதனை {சாதாரணனைப்} போல கட்டுக்குள் கொண்டு வர விரும்புகிறான்.(17) இராக்ஷசோத்தமரே, எவனுக்கு நிகரானவன் மனுஷ்யர்களில் இல்லையோ, அத்தகையவனும், இந்திரனுக்கும், விவஸ்வதனுக்கும் {சூரியனுக்கும்} துல்லியனுமான அவனுடன் எப்படி யுத்தம் செய்ய விரும்புகிறீர்?” {என்று கேட்டான் மஹோதரன்}.(18)
சினங்கொண்ட மஹோதரன், கும்பகர்ணனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, ராக்ஷசர்கள் மத்தியில் இருப்பவனும், லோகராவணனுமான {உலகத்தைக் கதற வைப்பவனுமான} ராவணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(19) “ஏற்கனவே வைதேஹியைக் கைப்பற்றிவிட்டு ஏன் நீர் {இப்படிப்} பேசிக் கொண்டிருக்கிறீர்? நீர் விரும்பினால் சீதை உமக்கு வசப்பட்டு விடுவாள்.(20) இராக்ஷசேந்திரரே, சீதையை வழிக்குக் கொண்டு வர நான் ஓர் உபாயத்தைக் கண்டிருக்கிறேன். சொந்த புத்தியுடன் கூடிய உமக்கு ஏற்புடையதாக இருந்தால் கேட்பீராக.(21) நான், துவிஜிஹ்வன், சம்ஹ்ராதி, கும்பகர்ணர், விதர்த்தனன் ஆகிய ஐவரும் ராமனை வதைக்கப் போகிறோம் என்று அறிவிப்பீராக.(22) பிறகு, யத்னத்துடன் கூடிய நாங்கள் அவனுடன் {ராமனுடன்} யுத்தம் செய்வோம். உமது சத்ருக்களை நாங்கள் வென்றால், வேறு உபாயங்களால் நமக்கு ஆக வேண்டிய காரியம் ஏதுமில்லை.(23) நாங்கள் நன்கு போரிட்டாலும் நமது சத்ரு ஜீவித்திருந்தால், மனத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதைச் செயல்படுத்துவோம்.(24)
இராமனின் நாமம் {பெயர்} பொறிக்கப்பட்ட பாணங்களால் துளைக்கப்பட்டு, உதிரத்தால் நனைந்த உடல்களுடன் யுத்தத்தில் இருந்து இங்கே நாங்கள் திரும்பி வருவோம்.(25) “இராமனையும், லக்ஷ்மணனையும் நாங்கள் பக்ஷித்துவிட்டோம்” என்று சொல்லிக் கொண்டே உமது பாதங்களைப் பற்றுவோம். நீர் எங்கள் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்.(26) பார்த்திபரே {பூமியை ஆள்பவரே}, பிறகு புரத்தில் கஜத்தில் {நகரத்தில் யானையின் மீது} ஏறிய ஒருவனைக் கொண்டு, “இராமன், தன்னுடன் பிறந்தானுடனும் {லக்ஷ்மணனுடனும்}, சைனியத்துடனும் கொல்லப்பட்டான்” என்று எங்கும் பிரகடனப்படுத்த வேண்டும்.(27) அரிந்தமரே {பகைவரை அடக்குபவரே}, பெயரளவில் பிரீதியடைந்தவர் போலாகி, உமது பணியாட்களுக்கு போகங்களையும், விரும்பிய பொருட்களையும், வசுவையும் {தங்கத்தையும்} நீர் கொடுக்க வேண்டும்.(28) பிறகு மாலைகள், வஸ்திரங்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை வீரர்களுக்கு ஏராளமாகக் கொடுத்து விட்டு, போர்வீரர்கள் பிறருடன் சேர்ந்து {மது} குடித்து நீர் திளைத்திருப்பீராக.(29)
பிறகு, “இராமன், தன் நண்பர்களுடன் சேர்த்து ராக்ஷசர்களால் பக்ஷிக்கப்பட்டான்” என்ற வதந்தி எங்கும் பரவி, பெரிதும் கேட்கப்பட்டதும்,{30} தனிமையில் சீதையை நெருங்கி, ஆசுவாசப்படுத்தி, சாந்தமடையச் செய்து, தன, தானியங்கள், விருப்பத்திற்குரிய பொருட்கள் ரத்னங்கள் ஆகியவற்றைக் கொண்டு நீர் அவளை மயக்குவீராக.(30,31) இராஜரே, இந்தக் கபடத்தால், பயத்திலும், சோகத்திலும் மூழ்கும் சீதை, ஆதரவற்றவளாக, நாதனை இழந்தவளாக, ஆசை ஒழிந்தவளாக உமது வசத்தை அடைவாள்.(32) இரமணீயனான தன் பர்த்தா {தன் காதல் கணவன்} அழிந்ததாக நம்பும் அவள், விரக்தி அடைவதாலும், ஸ்திரீலகுவாசத்தாலும் {பெண்களுக்கே உரிய மெல்லியல்பினாலும்} உமது வசத்தை அடைவாள்.(33) சுகமாக வளர்ந்தவளும், சுகத்திற்குத் தகுந்தவளுமான அவள், துக்கத்தில் மெலிந்து, சுகம் உமது ஆதீனம் என்பதை அறிந்ததும் அனைத்து வகையிலும் உம்மை அடைவாள்.(34) இதுவே நல்லதென எனக்குத் தோன்றுகிறது. இராமனைக் கண்டால் உமக்கு அனர்த்தம் விளையும். யுத்தம் செய்யாமலேயே சுகம் எனும் மஹாலாபம் இங்கேயே கிடைக்கும். உற்சாகம் இழக்க வேண்டாம்.(35) ஜனாதிபரே {மக்களின் தலைவரே}, சைனியத்தை இழக்காமலும், ஆபத்தைச் சந்திக்காமலும் யுத்தமின்றி தன் பகைவரை ஜயங்கொள்ளும் மஹீபதி {பூமியின் தலைவன்}, மகத்தான புகழ், புண்ணியம், செழிப்பு, கீர்த்தி ஆகியவற்றை நீண்டகாலம் அனுபவிப்பான்” {என்றான் மஹோதரன்}.(36)
யுத்த காண்டம் சர்க்கம் – 064ல் உள்ள சுலோகங்கள்: 36
Previous | | Sanskrit | | English | | Next |