Tuesday, 30 July 2024

கும்பகர்ணன் | யுத்த காண்டம் சர்க்கம் - 012 (40)

Kumbhakarna | Yuddha-Kanda-Sarga-012 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நகரத்தைப் பாதுகாக்குமாறு பிரஹஸ்தனுக்கு ஆணையிட்ட ராவணன்; கும்பகர்ணன், ராவணனின் தகாத செயலைக் கண்டித்தாலும், அவனது எதிரிகளைக் கொல்வதாக உறுதியளித்தது...

Kumbhakarna speaking to Ravana

அப்போது, சமிதிஞ்ஜயனான அவன் {ராவணன்}, அந்த பரிஷதத்தின் அனைத்துப் பக்கங்களையும் பார்த்துவிட்டு, வாஹினிபதியான பிரஹஸ்தனிடம் {சபைகளில் / போர்களில் வெற்றி பெறுபவனான ராவணன், அந்த சபையின் அனைத்துப் பக்கங்களையும் பார்த்துவிட்டு, படைத்தலைவனான பிரஹஸ்தனிடம் பின்வருமாறு} ஆணையிட்டான்:(1) "சேனாபதே, வித்தைகளில் தேர்ந்தவர்களும், {யானைப்படை / குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகிய நான்கு படைப்பிரிவுகளில் உள்ள} நான்கு விதமானவர்களுமான அந்தப் போர்வீரர்கள் நகரத்தை ரக்ஷிக்க எப்படி நிறுத்தப்பட வேண்டுமோ அப்படியே நியமிப்பாயாக" என்றான்.(2)

பிரதீதாத்மனான {ராவணனின் ஆணையை உணர்ந்த} அந்தப் பிரஹஸ்தன், ராஜசாசனத்தைப் பின்பற்ற விரும்பி, சர்வ பலத்தையும் மந்திரத்தின் {மொத்த படையையும் அரண்மனைக்கு} வெளியேயும், உள்ளேயும் நிறுத்தினான்.(3) சர்வ பலத்தையும் நகரக் காவலில் நியமித்தபிறகு, பிரஹஸ்தன், ராஜனின் முன் அமர்ந்து {பின்வருமாறு} பேசினான்:(4) "பலவானே, உமது பலம் {படை} வெளியேயும், உள்ளேயும் நிறுத்தப்பட்டிருக்கிறது. மனத்தில் கவலையேதுமின்றி, உமது விருப்பம் எப்படியோ, அப்படியே சீக்கிரம் செயல்படுவீராக" {என்றான் பிரஹஸ்தன்}.(5)

இராஜாவான அந்த ராவணன், ராஜ்ஜியத்தின் ஹிதத்தை விரும்பும் பிரஹஸ்தனின் சொற்களைக் கேட்டு, சுகமடையும் விருப்பத்துடன் நண்பர்களின் மத்தியில் {பின்வருமாறு} கூறினான்:(6) வெவ்வேறு சூழ்நிலையில் தர்மம், காமம், அர்த்தங்களால் விளையும் பிரியாபிரியங்களையும், சுகதுக்கங்களையும், லாபாலாபங்களையும், ஹிதாஹிதங்களையும் {வெவ்வேறு சூழ்நிலைகளில் அறம், பொருள், இன்பத்தால் விளையும் விரும்பத்தக்கன, விரும்பத்தகாதன, சுகம் விளைவிப்பன, துக்கம் விளைவிப்பன, லாபம் தருவன, நஷ்டம் ஏற்படுத்துவன, நன்மை தருவன, தீமை விளைவிப்பன ஆகியவற்றை} நீங்கள் அறியவல்லவர்களாக இருக்கிறீர்கள்.(7) உங்கள் ஆலோசனையின் பேரில் செய்யப்பட்ட என் பணிகள் ஒருபோதும் பலனளிக்காமல் போனதில்லை.(8)

சோமன் {சந்திரன்}, கிரஹங்கள், நக்ஷத்திரங்கள், மருத்துக்கள் ஆகியோருடன் கூடிய வாசவனை {இந்திரனைப்} போல உங்களால் சூழப்பட்ட நான், பெருஞ்செழிப்பையே அடைவேன்.(9) நான் முன்பே உங்கள் அனைவருக்கும் சொல்ல விரும்பினாலும், கும்பகர்ணன் உறக்கத்தில் இருந்ததால், இந்த அர்த்தத்தைத் தெரிவிக்கவில்லை.(10) சர்வ அஸ்திரங்களைத் தரிப்போர் அனைவரிலும் முக்கியமானவனும், மஹாபலவானுமான இந்தக் கும்பகர்ணன், ஆறு மாசங்கள் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் இப்போதுதான் விழித்திருக்கிறான்.(11) 

இராக்ஷசர்கள் திரியும் தேசமான {இடமான} தண்டகாரண்யத்தில் இருந்து, ராமனின் மஹிஷியான இந்த ஜனகாத்மஜையை {பட்டத்துராணியும், ஜனகனின் மகளுமான இந்த சீதையை} நான் கொண்டுவந்தேன்.(12) அலஸகாமினியான அவள் {மெல்ல நடப்பவளான சீதை} என் சயனத்தில் {படுக்கையில்} ஏற விரும்பவில்லை. மூன்று உலகங்களிலும் சீதைக்கு ஒப்பாக வேறு எவரையும் நான் நினைக்கவில்லை.(13) மெல்லிடையாளும், பருத்த பின்புறத்தைக் கொண்டவளும், சரத் கால இந்துவுக்கு {சந்திரனுக்கு} ஒப்பான முகம் படைத்தவளும், ஹேமபிம்பத்தை போன்றவளுமான சௌம்யை {பொற்பதுமை போன்ற அழகியான சீதை}, மயனால் நிர்மிதம் செய்யப்பட்ட மாயையைப் போன்றவளாவாள்.(14) சிவந்த மென்மையான உள்ளங்கால்களையும், சிவந்த நகங்களுடன் அழகாக அமைந்திருக்கும் அவளது சரணங்களையும் {பாதங்களையும்} கண்டால் என் சரீரஜம் {காதல் / காமம்} தூண்டப்படுகிறது.(15) ஹுதாக்னியின் {வேள்வித்தீயின்} தழல்களுக்கு ஒப்பானதும், சௌரியின் {சூரியனின்} பிரபையைப் போன்றதும், உயர்ந்த நாசி, விமலமான {களங்கமற்ற}, வசீகரமான, அழகிய கண்கள் ஆகியவற்றுடன் கூடியதுமான அவளுடைய அந்த வதனத்தைக் கண்டதாலேயே, நிச்சயம் நான் காமனின் வசத்தில் விழுந்தேன்.(16,17அ)

குரோதத்திலும், மகிழ்ச்சியிலும் சமமாக இருப்பதும், சோகசந்தாபங்களில் ஒருவனை வர்ணமிழக்கச் செய்வதுமான காமத்தால் நான் களங்கமடைந்திருக்கிறேன்.(17ஆ,18அ) அந்த பாமினி {அழகிய சீதை}, சம்வத்சரகாலம் {ஒருவருட காலம்} என்னிடம் அவகாசம் கேட்டாள்.{18ஆ} அந்த நீள்விழியாள் பர்த்தாவான {கணவனான} ராமனின் வரவை எதிர்பார்க்கிறாள். அழகிய நேத்திரங்களைக் கொண்ட அவளுடைய அந்த சுபமான சொற்களை நான் ஏற்றுக் கொண்டேன்.{19} சதா நீண்ட வழியில் சென்ற ஹயத்தை {குதிரையைப்} போல காமத்தால் நான் களைத்திருக்கிறேன்.(18ஆ-20அ)

கலக்க முடியாததும், ஏராளமான சத்வங்களால் {உயிரினங்களால்} நிறைந்ததுமான சமுத்திரத்தை அந்த வனௌகசர்களோ {வானரர்களோ}, தசரதாத்மஜர்களோ {தசரதனின் மகன்களான ராமலக்ஷ்மணர்களோ} எப்படிக் கடப்பார்கள்?(20ஆ,21அ) ஒற்றைக் குரங்கால் நமக்கு மஹத்தான அழிவு ஏற்பட்டது என்பதல்ல. காரியத்தின் விளைவுகள் அறியமுடியாதனவாக இருக்கின்றன. நீங்கள் உங்கள் மதி {எண்ணம்} என்னவோ, அதைச் சொல்லுங்கள்.(21ஆ,22அ) மானுஷர்களிடம் எனக்கு பயம் கிடையாது என்பதைக் கருத்தில் கொள்வீராக.{22ஆ} அதேபோல, தேவாசுர யுத்தத்தின்போது, உங்கள் சஹிதனாகவே நான் வெற்றியடைந்தேன். அப்படிப்பட்டவர்களான நீங்கள் அதேபோலவே {இப்போதும் என்னுடன்} இருக்கிறீர்கள். சுக்ரீவன் முதலிய ஹரிக்களை {குரங்குகளை},{23} முன்னிட்டுக் கொண்டு, நிருபாத்மஜர்கள் இருவரும் {ராஜகுமாரர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரும்} சமுத்திரத்தின் மறுகரையில் இருக்கின்றர். சீதையின் இருப்பிடத்தை அறிந்து கொண்டு, வருணாலயத்தை {பெருங்கடலை} அடைந்திருக்கின்றனர்.(22ஆ-24) சீதையைக் கொடுக்காமல், தசரதாத்மஜர்களை {தசரதனின் மகன்களான ராமலக்ஷ்மணர்களை} எப்படி வதைப்பது, என்பதை நீங்கள் ஆலோசிப்பீராக. நல்ல திட்டத்தைக் குறிப்பிடுவீராக.(25) வானரர்களுடன் சாகரத்தைக் கடக்கும் சக்தியை வேறு எவரிடமும் நான் பார்க்கவில்லை. ஜயம் {வெற்றி} நிச்சயம் எனதே" {என்றான் ராவணன்}.(26)

Kumbakarna speaking to Ravana

காமத்தால் கவரப்பட்ட அவனுடைய {ராவணனின்} புலம்பலைக் கேட்ட கும்பகர்ணன், குரோதமடைந்தவனாக இந்த வசனத்தைச் சொன்னான்:(27) "இலக்ஷ்மணனுடன் கூடிய ராமனின் சீதை எப்போது வலுக்கட்டாயமாக இங்கே கொண்டுவரப்பட்டாளோ, அப்போதே உடனடியாக சித்தத்தில் நன்கு பரிசீலித்து, யமுனை யாமுனத்தை {யமுனையாறு யாமுன மலையை அடைவதைப்} போல நல்ல தீர்மானத்தை அடைந்திருக்க வேண்டும்[1].(28) மஹாராஜாவே, ஒப்பில்லாத இந்தக் கர்மத்தை {இழிதொழிலைச்} செய்திருக்கிறீர். ஆரம்பத்திலேயே நீர் செய்த இவை அனைத்தையும் எங்களுடன் பரிசீலித்திருக்க வேண்டும்.(29) தசானனரே {பத்து முகங்களைக் கொண்டவரே}, மதியால் அர்த்தங்களை நிச்சயம் செய்து, நியாயப்படி ராஜகாரியங்களைச் செய்யும் நிருபன் {மன்னன்} எவனோ, அவன் பின்னர் வருத்தமடையமாட்டான்.(30) சரியாகத் திட்டமிடாமல் செய்யப்படும் விபரீதமான கர்மங்கள், மங்கலமற்றதும், தகாததுமான ஹவிஸ்ஸை {ஆகுதியைப்} போலக் கெட்டுப் போகும்.(31) எவன் பூர்வத்தில் செய்ய வேண்டிய கர்மங்களைப் பின்னும், பின் செய்ய வேண்டிய காரியங்களைப் பூர்வத்திலும் செய்ய விரும்புகிறானோ, அவன் நியாயாநியாயங்களை {நியாயத்தையும், அநியாயத்தையும் பகுத்து} அறியமாட்டான்.(32) {பகைவரின்} அதிக பலத்தை நினைக்காத சபலனானவன், கிரௌஞ்சத்தின் பிளவில் {கிரௌஞ்ச மலையின் பிளவில் செல்லும்} துவிஜங்களை {பறவைகளைப்} போல,  {பகைவரிடம்} பலவீனத்தைத் தேடுகிறான்[2].(33) 

[1] ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன்
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ

- கம்பராமாயணம் 6119ம் பாடல், யுத்த காண்டம், இராவணன் மந்திரப்படலம்

பொருள்:  ஓவியம் போல் அமைந்த நகரம் தீ உண்டமைக்கு, ஆட்சியின் தன்மை அழிந்துவிட்டது என மனம் வருந்தினாய். வேறு ஒரு குலத்தைச் சேர்ந்தவனின்  மனைவியை விரும்பி, {கவர்ந்து வந்து} சிறை வைத்த செயல் நன்றோ? பாவிகள் அடையும் பழிகளிலே இதைவிடவும் கொடிய பழி வேறு உண்டோ?

[2] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "தேவன் கார்த்திகேயன் (தலைவன் சிவனின் மகன்), தன் வேலால் கிரௌஞ்ச மலையில் ஒரு பிளவை உண்டாக்கினான். (மஹாபாரதம், சல்லிய பர்வம் 46-84 {89})" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஷண்முக எம்பிரானால் வேற்கணைக் கொண்டு துளைக்கப்பட்ட க்ரௌஞ்சகிரியின் வளைவழியே அன்னப்பறவைகள் மானஸப் பொய்கைக்குச் செல்லுகின்றன என்று ஸ்காந்தபுராணக் கதை" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஹம்சங்கள் தமக்குக் கிளம்பித் தாண்டமுடியாத க்ரௌஞ்ச பர்வதத்தை ஸுப்ரஹ்மண்யன் செய்த ரந்த்ரத்தின் வழியாய் நுழைந்து தாண்டிப் போவது போல், சத்ருக்கள் தம்மைக் காட்டிலும் மேலான பலமுடைய பகைவனை எதிர்த்து வெல்லமுடியாதென்று விசாரித்து அவன் கார்யங்களை ஆலோசித்துச் செய்யாத சபலனாயின், அங்ஙனம் ஆலோசித்துச் செய்யாத ஸமயம் பார்த்துத் திடீரென்று அவன்மேல் விழுந்து அவனைப் பரிபவிப்பார்கள்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதாபிரஸ் பதிப்பில், "எதிரிகள் நம்மைக் காட்டிலும் அதிக பலமுடையவர்கள் என்பதை அறிந்திருந்தும், செய்ய வேண்டிய காரியத்தில் ஒரு நிச்சய முடிவை எடுக்காமல் சஞ்சலத்தில் ஆழ்ந்திருப்பவனை, கிரௌஞ்சமலையின் உயரே பறந்து செல்ல முடியாத அன்னப்பறவைகள், அதன் இடையிலுள்ள சுரங்கத் துவாரத்தின் வழியாகச் சுலபமாக எதிர்ப்பக்கத்தை அடைந்து விடுவதைப் போல, பகைவர்கள் எளிதில் வெற்றி கொண்டு விடுகிறார்கள். (முருகப் பெருமான், கிரௌஞ்சமலையின் கர்வத்தை அடக்குவதற்காக, தன்னுடைய சக்தி ஆயுதத்தினால் அந்த மலையைப் பிளந்தார் - மஹாபாரதம், சல்ய பர்வம்)" என்றிருக்கிறது.

நீர் சிந்திக்காமல் இந்த மஹத்தான காரியத்தை செய்துவிட்டீர். விஷங்கலந்த மாமிசத்தைப் போல, அதிர்ஷ்டவசத்தால் ராமன் உம்மைக் கொல்லாமல் விட்டிருக்கிறான்.(34) எனவே, அனகரே {பாவமற்றவரை}, பிறரிடம் {பகைவரிடம்} நீர் மேற்கொண்ட ஒப்பிடமுடியாத கர்மத்தை, உமது சத்ருக்களைக் கொல்வதன் மூலம் நான் நேராக்குவேன்.(35) நிசாசரரே {இரவுலாவியே}, உமது சத்ருக்கள், சக்ர விவஸ்வான்களானாலும் {இந்திரனும், சூரியனும் ஆனாலும்}, பாவகமாருதனானாலும் {அக்னியும், வாயுவும் ஆனாலும்}, குபேரவருணனானாலும் அவ்விருவருடனும் நான் போரிடுவேன்.(36,37அ) கிரி அளவு சரீரமும், கூரிய பற்களும் கொண்டவனாக, மஹாபரிகத்தை ஏந்தி நான் கர்ஜித்தால், புரந்தரனே {இந்திரனே} அச்சத்தால் ஓடிவிடுவான்.(37ஆ,38அ) அவன் {ராமன்}, இரண்டாம் சரத்தால் மீண்டும் என்னைத் தாக்கும் முன்பே, நான் அவனது உதிரத்தைப் பருகிவிடுவேன். விரும்பியபடி ஆசுவாசமாக இருப்பீராக.(38ஆ,39அ) உமக்கு சுகத்தை விளைவிக்கும் தாசரதியின் {ராமனின்} வதத்தைச் செய்து, ஜயத்தை அடைய நான் யத்னம் செய்வேன். இராமனையும், லக்ஷ்மணனையும், சர்வ ஹரியூதபர்களில் முக்கியர்களையும் நான் உண்ணப் போகிறேன்.(39ஆ,இ) விரும்பியபடி இன்புற்றிருப்பீராக.  சிறந்த வாருணியை {மதுவைக்} கவலையின்றி பருகுவீராக. யமனின் வசிப்பிடத்திற்கு ராமனை நான் அனுப்பிவிட்டால், சீதை எப்போதும் உமது வசமாவாள்" {என்றான் கும்பகர்ணன்}.(40)

யுத்த காண்டம் சர்க்கம் – 012ல் உள்ள சுலோகங்கள்: 40

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை