The request of Ravana | Yuddha-Kanda-Sarga-062 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன் மீது கொண்ட பயத்தைக் கும்பகர்ணனிடம் வெளிப்படுத்தி, ராமனை அழிக்குமாறு அவனைத் தூண்டிய ராவணன்...
விபுலவிக்கிரமனான அந்த ராக்ஷசசார்தூலன் {பேராற்றல் வாய்ந்தவனும், ராக்ஷசர்களில் புலியுமான கும்பகர்ணன்}, நித்திரையினாலும், மதத்தினாலும் {மதுவெறியினாலும்} ஆட்கொள்ளப்பட்டவனாக, அழகுடன் விளங்கும் ராஜமார்க்கத்தில் நடந்து சென்றான்.(1) பிறகு, அந்தப் பரமதுர்ஜயன் {வெல்வதற்கரிய கும்பகர்ணன்}, கிருஹங்களில் இருந்து புஷ்பவர்ஷம் {மலர்மாரி} பொழிய, ஆயிரக்கணக்கான ராக்ஷசர்களால் சூழப்பட்டவனாகச் சென்றான்.(2) ஹேமஜாலங்களால் {பொற்சாளரங்களால்} நிறைந்ததும், பெரியதும், பானுவை {சூரியனைப்} போன்ற பிரகாசத் தோற்றம் கொண்டதுமான ராக்ஷசேந்திர நிவேசனத்தை அவன் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனின் வசிப்பிடத்தைக் கும்பகர்ணன்} கண்டான்.(3) மேகத்திரளுக்குள் சூரியனைப் போல ரக்ஷோதிபதியின் நிவேசனத்திற்குள் பிரவேசித்தவன், ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்வயம்பூவை சக்ரன் போல {பிரம்மனைக் கண்ட இந்திரனைப் போல} ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தன் ஆக்ரஜனை {அண்ணன் ராவணனை} தூரத்தில் இருந்தே கண்டான்.(4)
பிராதாவின் பவனத்திற்கு {தன்னுடன் பிறந்தானின் வசிப்பிடத்திற்கு} ரக்ஷோகணங்களால் சூழப்பட்டவனாக சென்ற அந்த கும்பகர்ணன், தன் நடையால் மேதினியை நடுங்கச் செய்தான்.(5) பிராதாவின் கிருஹத்தை அடைந்து, வாசற்படியைக் கடந்து சென்று, புஷ்பக விமானத்தில் அமர்ந்து, வருந்திக் கொண்டிருப்பவனை {ராவணனைக்} கண்டான்.(6) கும்பகர்ணன் வந்ததை தசக்ரீவன் கண்டபோது, மகிழ்ச்சியுடன் விரைந்தெழுந்து, {அவனைத்} தன் சமீபத்திற்கு அழைத்துவந்தான்.(7) பிறகு, மஹாபலவானான கும்பகர்ணன், பர்யங்கத்தில் அமர்ந்திருக்கும் தன் பிராதாவின் சரணத்தை {மெத்தையுடன் கூடிய இருக்கையில் அமர்ந்திருப்பவனும், தன்னுடன் பிறந்தானுமான ராவணனின் பாதங்களை} வணங்கி, “செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டான்.(8)
இராவணன், {ஆசனத்தில் இருந்து} எழுந்து, அவனைத் தழுவிக் கொண்டான். இவ்வாறு தன் பிராதாவால் {தன்னுடன் பிறந்தோனால்} கட்டி அணைக்கப்பட்டு மகிழ்ச்சியடைந்த{9} அந்தக் கும்பகர்ணன், சுபமானதும், திவ்யமானதுமான சிறந்த ஆசனத்தை அடைந்தான்.(9,10அ) அந்த ஆசனத்தை அடைந்தவனும், மஹாபலவானுமான அந்தக் கும்பகர்ணன், குரோதத்தால் நயனங்கள் {கண்கள்} சிவக்க, ராவணனிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(10ஆ,11அ) “இராஜரே, முயற்சியுடன் நீர் என்னை எழுப்பியதற்கான அர்த்தம் {காரணம்} என்ன? இங்கே உமக்கு யாரிடம் பயம்? சொல்வீராக. எவன் பிரேதமாக வேண்டும்?[1]” என்று கேட்டான்.(11ஆ,12அ)
[1] தர்மாலயப் பதிப்பில் இதற்குப் பின்னும், “மன்னரே, தேவரீருக்கு ஆபத்து இந்திரனிடமிருந்தாலும் சரி, தேவரீருக்கு பிரம்மதேவனிடமிருந்தாலும் சரி, வீரியத்திலும், பலத்திலும் எனக்கு சமானனொருவன் மூன்று உலகங்களிலும் இல்லை” என்றிருக்கிறது. இந்த அதிக செய்தி இங்கே ஒப்பாயப்படும் வேறெந்த பதிப்பிலும் இல்லை.
இராவணன், கோபத்தால் தன் நேத்திரங்கள் உருள, அங்கே குரோதத்துடன் இருந்த தன் பிராதா {தன்னுடன் பிறந்த} கும்பகர்ணனிடம் {பின்வருமாறு} கூறினான்:(12ஆ,13அ) “மஹாபலவானே, இதோ நீ நெடுங்காலமாக உறங்கிக் கொண்டிருக்கிறாய். உறங்கிக் கொண்டிருந்த நீ, ராமன் என்னில் உண்டாக்கிய பயத்தை அறியமாட்டாய்.(13ஆ,14அ) பலவானும், தாசரதியுமான {தசரதனின் மகனுமான} இந்த ராமன், சுக்ரீவன் சஹிதனாக சமுத்திர லங்கம் செய்து {பெருங்கடலைக் கடந்து வந்து}, நம் குலத்திற்கு நசிவை உண்டாக்குகிறான்.(14ஆ,15அ) ஐயோ, சேதுவை சுகமாகக் கடந்து வந்து, வானர ஆர்ணவமாக {வானரக்கடலாக} ஆக்கப்பட்டிருக்கும் லங்கையின் வனங்களையும், உபவனங்களையும் பார்[2].(15ஆ,16அ)
[2] வானரப் பெருந் தானையர் மானிடர்கோ நகர்ப் புறம் சுற்றினர் கொற்றமும்ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர்போனகத் தொழில் முற்றுதி போய்- கம்பராமாயணம் 7349ம் பாடல், யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்பொருள்: “வானரப் பெருஞ்சேனையுடன் கூடிய மானிடர்கள், நம் நகர்ப்புறத்தைச் சுற்றி வளைத்துவிட்டனர். பிறர் எவரும் பெறாத வெற்றியையும் அடைந்துள்ளனர். நீ போய் அவர்களுடைய உயிரை உண்ணுகிற தொழிலைச் செய்து முடிப்பாயாக”, {என்றான் ராவணன்}.
முக்கிய ராக்ஷசர்கள், யுத்தத்தில் வானரர்களால் கொல்லப்பட்டனர்.{16ஆ} யுத்தத்தில் வானரர்கள் அழிவதை நான் ஒருபோதும் பார்க்கவில்லை. பூர்வ யுத்தத்தில் ஒருபோதும் வானரர்கள் வெல்லப்படவில்லை.(16ஆ,17) மஹாபலவானே, இத்தகைய இந்த பயமே அவர்களால் இங்கே எனக்கு எழுந்திருக்கிறது. {துயிலில் இருந்து} எழுந்து வந்திருக்கும் நீ, இவர்களை அழிப்பாயாக. இந்த அர்த்தத்திற்காகவே நீ எழுப்பப்பட்டாய்.(18) இத்தகைய நீ, கருவூலம் முற்றிலும் வீணான என்னையும், பாலர்கள், விருத்தர்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் இந்த லங்காம்புரீயையும் காப்பாயாக.(19) மஹாபாஹுவே, பிராதாவின் அர்த்தத்திற்காக {உன்னுடன் பிறந்தானுக்காக இந்தச்} செய்வதற்கரிய கர்மத்தைச் செய்வாயாக. பிராதாவே {என்னுடன் பிறந்தவனே}, பரந்தபா {பகைவரை அழிப்பவனே}, பூர்வத்தில் இவ்வாறு எவரையும் நான் வேண்டிக் கொண்டவனல்ல.(20)
எனக்கு உன்னிடம் ஸ்னேகம் இருக்கிறது. இராக்ஷசரிஷபா {ராக்ஷசர்களில் காளையே}, தேவாசுர யுத்தங்களில் ஏராளமான தேவர்களும், அசுரர்களும் உன்னால் தாக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டிருக்கின்றனர்.(21) எனவே, பீமபராக்கிரமா {பயங்கர பராக்கிரமம் கொண்டவனே}, அந்த சர்வ வீரியத்தையும் வெளிப்படுத்துவாயாக. சர்வ பூதங்களிலும் உனக்கு இணையான எந்த பலசாலியும் காணப்படவில்லை.(22) போரில் பிரியமுள்ளவனே, பந்துக்களிடம் பிரியமுள்ளவனே, என் பிரியத்திற்குரியதும், ஹிதத்திற்குரியதுமான {நன்மைக்குமுரிய} இந்த உத்தம காரியத்தை உன் பிரியத்திற்கு ஏற்றபடியே செய்வாயாக. சுழன்றடிக்கும் மஹாபவனன் {பெருங்காற்று} சரத் கால மேகத்தை எப்படியோ, அப்படியே உன் சொந்த தேஜஸ்ஸால் பகைவரின் வாஹினியை {படையை} ஊதித் தள்ளுவாயாக” {என்றான் ராவணன்}.(23)
யுத்த காண்டம் சர்க்கம் – 062ல் உள்ள சுலோகங்கள்: 23
Previous | | Sanskrit | | English | | Next |