Thursday, 27 February 2025

ஆறுமாத நித்திரை | யுத்த காண்டம் சர்க்கம் - 061 (40)

Six months of sleep | Yuddha-Kanda-Sarga-061 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனைக் குறித்து ராமனிடம் சொன்ன விபீஷணன்; இராமனின் ஆணையின் பேரில் லங்கையின் நுழைவாயில்களில் நிலைநின்ற வானரர்கள்...

Brahma curses Kumbhakarna

அப்போது, மஹாதேஜஸ்வியும், வீரியவானுமான ராமன், தன் தனுவை {வில்லை} எடுத்துக் கொண்டு, பேருடலுடனும், கிரீடத்துடனும் கூடியவனான கும்பகர்ணனைக் கண்டான்.(1) 

பர்வதத்தைப் போலத் தோற்றமளித்த அந்த ராக்ஷசசிரேஷ்டனை, {ராக்ஷசர்களில் சிறந்த கும்பகர்ணனை}, பூர்வத்தில் ஆகாசத்தில் அடியெடுத்து வைத்த பிரபு நாராயணனைப் போலக் கண்டும்,(2) காஞ்சன அங்கத பூஷணங்களுடன் கூடிய அவனை, நீருண்ட மேகத்திற்கு ஒப்பானவனாகக் கண்டும் வானரர்களின் மஹாசம்மு {பெரும்படை} மீண்டும் ஓடியது.(3)

Kumbhakarna walks in the bridge near a moat

தப்பி ஓடும் வாஹினியையும் {படையையும்}, ஓங்கி வளரும் ராக்ஷசனையும் கண்ட ராமன், திகைப்புடன் விபீஷணனிடம் இதைச் சொன்னான்:(4) “பர்வதத்திற்கு நிகரானவனும், கிரீடத்துடன் கூடியவனுமான ஹரிலோசனன் {பழுப்பு நிறக் கண்களைக் கொண்டவன்} யார்? இந்த வீரன் மின்னலுடன் கூடிய மேகம் போல லங்கையில் காணப்படுகிறான்.(5) எவனைக் கண்டதும் சர்வ வானரர்களும் அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த மஹான், இங்கே பிருத்வியில் ஏகனாக கேதுபூதம் {புகைக்கொடி / வால்நட்சத்திரம்} போலக் காணப்படுகிறான்.(6) இந்த மஹான் யார்? சொல்வாயாக. இவன் ராக்ஷசனா? அல்லது அசுரனா? இவ்விதமான பூதத்தை {உயிரினத்தைப்} பூர்வத்தில் எப்போதும் நான் கண்டதில்லை” {என்று கேட்டான் ராமன்}[1].(7)

[1] ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி - ஐய 
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன்
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான்.

- கம்பராமாயணம் 7385ம் பாடல், யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்

பொருள்: உன்னதன் {ராமன்} இவ்வாறு கூறு, அவனது பாதங்கள் இரண்டையும் வணங்கி, “ஐயா, இவன் சிறப்புமிக்க இலங்கை வேந்தனுக்கு {ராவணனுக்குப்} பின் பிறந்தவன்; எனக்கு முன் பிறந்தவன். கருமை நிறம் பொருந்திய காலனுக்கு ஒப்பான வீரக்கழல் அணிந்தவன். கும்பகருணன் என்ற பெயரைக் கொண்டவன்; கூர்மையான சூலத்தைக் கையில் கொண்டவன் என்று அவனது தன்மையைக் கூறத் தொடங்கினான் {விபீஷணன்}.

அக்லிஷ்டகர்மனும் {களைப்பின்றி செயல்புரிபவனும்}, ராஜபுத்திரனுமான ராமனால் இவ்வாறு கேட்கப்பட்டதும், மஹாபிராஜ்ஞனான {அனைத்தையும் அறிந்தவனான} விபீஷணன், காகுத்ஸ்தனிடம் {ராமனிடம்} இதைக் கூறினான்:(8) “எவர் வைவஸ்வதனையும் {யமனையும்}, வாசவனையும் {இந்திரனையும்} யுத்தத்தில் வீழ்த்தினாரோ, அத்தகைய இவர் விஷ்ரவஸ்ஸின் புத்திரனும், பிரதாபவானுமான கும்பகர்ணர் ஆவார்.{9} இத்தகைய பரமத் தோற்றத்துடன் கூடிய வேறு ராக்ஷசன் எவனும் இல்லை.(9,10அ) இராகவரே, இவர் ஆயிரக்கணக்கான தேவர்களையும், தானவர்களையும், யக்ஷர்களையும், புஜகங்களையும், பிசிதாசனர்களையும், கந்தர்வ, வித்யாதர, பன்னகர்களையும் யுத்தத்தில் வீழ்த்தியிருக்கிறார்.(10ஆ,இ) சூலபாணியும், விரூபாக்ஷரும் {கையில் சூலத்தைக் கொண்டவரும், விகாரக் கண்களைக் கொண்டவரும்}, மஹாபலவானுமான கும்பகர்ணரைக் கண்டு, “இவன் காலன்” என்ற மோஹிதம் {குழப்பம்} அடைந்த திரிதசர்களால் {தேவர்களால்} இவரைக் கொல்ல இயலவில்லை.(11) இயல்பிலேயே இந்தக் கும்பகர்ணர், மஹாபலம்வாய்ந்த தேஜஸ்வியாவார். மற்ற ராக்ஷசேந்திரர்களின் பலம் வரதானத்தால் விளைந்தன.(12) 

Kumbhakarna fights with Indra

பிறந்த மாத்திரத்திலேயே பசியால் பீடிக்கப்பட்ட இந்த மஹாத்மாவால், ஆயிரக்கணக்கான சத்வங்களும் {உயிரினங்களும்}, இன்னும் ஏராளமானவையும் பக்ஷிக்கப்பட்டன {உண்ணப்பட்டன}.(13) அவ்வாறு பக்ஷிக்கப்படும் பிரஜைகள் {மக்கள்}, பயத்தால் பீடிக்கப்பட்டு, சக்ரனிடம் {இந்திரனிடம்} சரணம் அடைந்து, இவரைக் குறித்துத் தெரிவித்தனர்.(14) வஜ்ரியான அந்த மஹேந்திரன், கோபமடைந்து, கூர்மையான வஜ்ரத்தால் கும்பகர்ணரைத் தாக்கினான். சக்ர வஜ்ரத்தால் தாக்கப்பட்டு நடுக்கமடைந்த இந்த மஹாத்மா, கோபத்துடன் பெரும் நாதம் செய்தார்.(15) அச்சத்திலிருந்த பிரஜைகள், நாதம் செய்யும் ராக்ஷசரான இந்தக் கும்பகர்ணரின் நாதத்தைக் கேட்டு, மேலும் அச்சமடைந்தனர்.(16) மஹாபலவானான கும்பகர்ணர், மஹேந்திரனிடம் குரோதம் அடைந்தபோது, ஐராவதத்தின் தந்தத்தைப் பிடுங்கி, அதைக் கொண்டு வாசவனின் {இந்திரனின்} மார்பைத் தாக்கினார்.(17)

அந்த வாசவன், கும்பகர்ணரின் தாக்குதலால் பீடிக்கப்பட்டுக் கோபத்தில் எரிந்த போது, தேவர்களும், பிரம்மரிஷிகளும், தானவர்களும் வருத்தமடைந்தனர்.{18} சக்ரனும், பிரஜைகளுடன் சேர்ந்து ஸ்வயம்பூவின் ஸ்தானத்திற்கு {பிரம்மரின் வசிப்பிடத்திற்குச்} சென்றான்.(18,19அ) அவர்கள், கும்பகர்ணரின் தௌராத்மியத்தை பிரஜாபதியிடம் {தீய தன்மையைப் மக்களின் தலைவனான பிரம்மரிடம் பின்வருமாறு} தெரிவித்தனர்:{19ஆ} “பிரஜைகளை பக்ஷிக்கிறான்; திவௌகசர்களை {சொர்க்கவாசிகளைத்} தாக்குகிறான்; ஆசிரமங்களை துவம்சம் செய்கிறான்; அதே போல, பரஸ்திரீஹரணம் செய்கிறான் {பிறன் மனைவியரைக் கடத்திச் செல்கிறான்” என்றனர்}.(19ஆ,20) “இப்படி அவன் நித்யம் பிரஜைகளை பக்ஷித்துக் கொண்டிருந்தால், இந்த லோகமே அதிவிரைவான காலத்தில் சூன்யம் ஆகும்” {என்றான் இந்திரன்}.(21)

வாசவனின் சொற்களைக் கேட்ட சர்வலோகப் பிதாமஹர் {உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மர்}, ராக்ஷசர்களை அழைத்து, கும்பகர்ணரைக் கண்டார்.(22) கும்பகர்ணரைக் கண்டதும் பிரஜாபதியே {படைப்பாளனான பிரம்மனே} அஞ்சினார். பிறகு, ஆசுவாசமடைந்த ஸ்வயம்பூ {பிரம்மன்}, கும்பகர்ணரிடம் இதைக் கூறினார்:(23) “நிச்சயமாக நீ லோக நாசத்திற்காக பௌலஸ்தியனால் {புலஸ்தியரின் மகனான விஷ்ரவஸ்ஸால்} நிர்மிதம் செய்யப்பட்டிருக்கிறாய் {படைக்கப்பட்டிருக்கிறாய்}. எனவே, இதுமுதல் மரித்தவனுக்கு ஒப்பாக உறங்குவாயாக” {என்றார் பிரம்மர்}[2].(24)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “இதுவே ப்ரஹ்மசாபம். இது கும்பகர்ணன் தவஞ்செய்த பின்பு உண்டாயிற்று. முதலிலேயே உண்டாயிற்றென்னில், செத்தாற்போல் படுத்து நித்ரிப்பவனுக்குத் தவஞ்செய்வது நேராதாகையால் தவத்திற்குப் பின்பே உண்டாயிற்றென்றுணர்க” என்றிருக்கிறது.

Brahma curses Kumbhakarna

பிறகு, பிரம்ம சாபத்தால் ஆட்கொள்ளப்பட்டவர், தன் பிரபுவின் {தன் தலைவரான ராவணரின்} முன் விழுந்தார். அப்போது, பரம பதற்றமடைந்த ராவணர் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினார்:(25) “பிரஜாபதே {பிரஜைகளின் தலைவரே}, நன்கு வளர்ந்து, பழம் தரும் {பலன் தரும்} காலத்தில் காஞ்சன விருக்ஷத்தை {பொன்மரத்தை} வெட்டிவிட்டீர். உமது நப்தாரனை {கொள்ளுப் பேரனை} இப்படி சபித்திருப்பது நியாயமல்ல.(26) உமது சொற்கள் பொய்யாகாது. ஐயமின்றி இவன் உறங்கட்டும். இவன் சயனிப்பதற்கும், அதேபோல விழித்திருப்பதற்குமான காலம் விதிக்கப்படட்டும்" {நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றார் ராவணர்}.(27) 

இராவணரின் சொற்களைக் கேட்ட ஸ்வயம்பூ {பிரம்மன்}, இதைக் கூறினார், “இவன் ஆறு மாசங்கள் சயனித்து[3], ஒரு நாள் விழித்திருப்பான்.(28) அந்த ஒரே நாளில் இந்த வீரன் பசியுடன் பூமியில் திரிந்து, நன்றாக மூட்டப்பட்ட பாவகனை {நெருப்பைப்} போல லோகத்தை {உலகத்தாரை} பக்ஷிப்பான்” {என்றார் பிரம்மர்}.(29)

[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “’ஷயிதா ஹ்யேஷ ஷண்மாஸானேகாஹம் ஜாகரிஷ்யதி’ என்பது மூலம். இங்கு ஆறு மாதங்களென்று சொல்லினும், ‘நவஷட் ஸப்தசாஷ்டௌசமாஸாந்’ என்று முன்பு ஒன்பது, ஆறு, ஏழு, எட்டு மாதங்கள் நியதியில்லாமல் தூங்குவதாகச் சொல்லியிருக்கையால், ஆறு மாதங்களுக்குக் குறையாதிருக்குமென்று பொருள் கொள்க” என்றிருக்கிறது. தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில் சென்ற சர்க்கத்தில், “நவ ஸப்த தஷாஷ்டௌ ச மாஸான்” என்றிருக்கிறது. அதாவது, “ஒன்பது, ஏழு, பத்து, எட்டு மாசங்களென சுகமாக உறங்குகிறான்” என்றிருக்கிறது. 

Vanaras run agitate with fear seein Kumbhakarna

அத்தகையவரான இந்த ராஜா ராவணர், உமது பராக்கிரமத்தில் கொண்ட அச்சத்தால் விசனமடைந்து, இப்போது கும்பகர்ணரை எழுப்பியிருக்கிறார்.(30) இத்தகைய பீமவிக்கிரமரான அந்த வீரரே {கும்பகர்ணரே}, பெருங்குரோதத்துடன் முகாமிலிருந்து வெளியே வந்து வானரர்களை பக்ஷித்தபடியே {நம்மை நோக்கி} விரைகிறார்.(31) கும்பகர்ணரைப் பார்த்ததற்கே, இதோ ஹரயர்கள் {குரங்குகள்} ஓடுகிறார்கள். இரணத்தில் {போர்க்களத்தில்} குரோதத்துடன் வரும் அவரை வானரர்களால் எப்படித் தடுக்க முடியும்?(32) சர்வ வானரர்களிடமும், “இஃது  ஒருவகையில் எழுப்பப்பட்ட யந்திரம்” என்று சொல்லப்படட்டும். இதை அறிந்தால், இனி அவர்கள் நிர்ப்பயமாக {பயமற்றவர்களாக} இருப்பார்கள்” {என்றான் விபீஷணன்}.(33)

நன்முறையில் சொல்லப்பட்ட விபீஷணனின் சொற்களை ஸுமுகமாக {இன்முகத்துடன்} கேட்ட ராமன், சேனாபதியான நீலனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(34) “பாவகே {அக்னியின் மகனே}, சர்வ சைனியத்தையும் வியூஹத்தில் அமைத்து {அணிவகுத்துச்} செல்வாயாக. இலங்கையின் துவாரங்கள் {நுழைவாயில்கள்}, காவல்கோட்டங்கள், அகழிகளை அடைந்து {ஆயத்தமாக} நிற்பாயாக.(35) சைலசிருங்கங்கள், விருக்ஷங்கள் {மலைச்சிகரங்கள், மரங்கள்}, பாறைகள் ஆகியவற்றைத் திரட்டிக் கொள்வாயாக. சர்வ வானரர்களும், சைலபாணியாகவும் {கைகளில் மலைகளுடன் / பாறைகளுடனும்} தங்கள் ஆயுதங்களுடனும் {ஆயத்தமாக} நிற்கட்டும்” {என்றான் ராமன்}.(36)

இராகவன் ஆணையிட்டபடியே, ஹரிசம்முபதியான {குரங்குப்படைத் தலைவனான} நீலன், கபிகுஞ்சரர்களுடன் கூடிய வானரானிகத்திற்கு {குரங்குகளில் யானைகளுடன் கூடிய வானரப்படைக்குத்} தகுந்த முறையில் ஆணையிட்டான்.(37) அப்போது சைலங்களைப் போன்ற தோற்றமுடைய கவாக்ஷன், சரபன், ஹனூமான், அங்கதன் ஆகியோர், சைல சிருங்கங்களை எடுத்துக் கொண்டு, துவாரத்தை {கோட்டை வாயிலை} அடைந்தனர்.(38)

இராமவாக்கியத்தைக் கேட்ட ஹரயர்கள் அச்சத்தை வென்றனர். வீர வானரர்கள், மரங்களைக் கொண்டு பகைவரின் படையைப் பீடித்தனர்.(39) அப்போது, பாறைகளையும், விருக்ஷங்களையும் கைகளில் தூக்கிய உக்கிர ஹரீக்கள் {குரங்குகள்}, கிரியை நெருங்கிச் சூழ்ந்த மஹத்தான பெரும் மேகத்திரளைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(40) 

யுத்த காண்டம் சர்க்கம் – 061ல் உள்ள சுலோகங்கள்: 40

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை