The affection of Kumbhakarna | Yuddha-Kanda-Sarga-063 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனின் தவறுகளைச் சுட்டிக்காட்டிய கும்பகர்ணன்; ராவணனின் கடுஞ்சொற்கள்; ராமனுடன் போரிடுவதாக உறுதியளித்த கும்பகர்ணன்...
அந்த ராக்ஷசராஜனின் புலம்பலைக் கேட்டு உரக்கச் சிரித்த கும்பகர்ணன், இந்த வசனத்தை மொழிந்தான்:(1) “உமது ஹிதத்தை விரும்புகிறவர்களை அலட்சியம் செய்தீர். பூர்வத்தில் நடந்த மந்திரநிர்ணயத்தில் {ஆலோசனைக்கூட்டத்தில்} எந்த தோஷம் எங்களால் காணப்பட்டதோ, அதையே நீர் அடைந்திருக்கிறீர்.(2) எப்படி தீய கர்மங்களைச் செய்பவன் நரகங்களில் வீழ்வானோ, அப்படியே பாப கர்மத்தின் பலன் சீக்கிரமே உம்மை அடைந்திருக்கிறது.(3) மஹாராஜாவே, இந்தச் செயல்பாட்டைக் குறித்து நீர் பிரதமமாக சிந்திக்கவில்லை; கேவலம் வீரியத்தில் செருக்கு கொண்டதால் விளைவைக் குறித்துச் சிந்திக்கவில்லை.(4) ஐஷ்வரியத்தில் நிலைபெற்ற எவன் ஒருவன், பூர்வத்தில் செய்ய வேண்டிய காரியங்களைப் பின்னரும், பின்னர் செய்ய வேண்டிய காரியங்களை பூர்வத்திலும் செய்வானோ, அவன் நியாயாநியாங்களை {நியாய அநியாயங்களை} அறியமாட்டான்.(5)
தேச காலங்களை {ஏற்ற இடம், ஏற்ற காலம் ஆகியவற்றைக்} கருத்தில் கொள்ளாமல் விபரீதமாகச் செய்யப்பட்ட கர்மங்கள், {மந்திரங்கள் சொல்லி} புனிதப்படுத்தப்படாமல் {வேள்வி} நெருப்பில் இடப்படும் ஹவிஸைப் போல வீணாகும்.(6) எவன் அமைச்சர்களுடன் நிச்சயித்தவற்றைச் செய்து மூவகை கர்மங்களுக்கும் {வினைகளுக்கும்}, ஐவகை யோகத்தை {சம்பந்தத்தைக்} கடைப்பிடிக்கிறானோ[1], அவன் நற்பாதையில் நன்றாகத் தொடர்ந்து செல்வான்.(7) எந்த ராஜா, அமைச்சர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து புத்தியால் சிந்தித்து, நீதியின்படி சரியான சமயத்தில் செயல்படுகிறானோ, அவனே சரியான புத்திசாலியாவான்.(8) இராக்ஷசாம்பதே, ஒரு புருஷன் {மனிதன்}, தர்மத்தையோ, அர்த்தத்தையோ, காமத்தையோ, அனைத்தையுமோ, இவை மூன்றில் இரண்டையோ காலத்திற்குத் தக்க பின்பற்ற வேண்டும்[2].(9) இராஜாவோ, ராஜாவைச் சார்ந்தவனோ இந்த மூன்றில் எது சிறந்ததோ அதைக் கேட்டும், கருத்தில் கொள்ளவில்லையென்றால் அவனது கேள்வி {கல்வி} அனைத்தும் வீணாகிவிடும்.(10)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், “1) சமரசம் மூலம் சமாதானத்தை ஏற்படுத்துவது. 2) பரிசின் மூலம் நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்வது. 3) அச்சுறுத்தும் வழிமுறையாகப் படையெடுத்துச் செல்லுதல் {ஆகியன மூன்று கர்மங்கள்}. 1) ஒரு செயலைத் தொடங்கும் முறை. 2) தேவையான ஆளுமையும், செயலுக்கு வேண்டிய பொருட்களும். 3) செயல்பட வேண்டிய நேரமும், இடமும். 4) தவறு நேர்வதற்கான வாய்ப்பைத் தடுப்பது. 5) வெற்றிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது {ஆகியன ஐவகை யோகங்களாகும்}” என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பின் அடிக்குறிப்பில், “அதாவது, 1) தனது வல்லமை மேலிட்டிருக்கையில் தனது சத்ருவுடன் சண்டைக்குச் செல்லுதல். 2. தனது வல்லமையும் சத்ரு வல்லமையும் ஒத்திருக்கையில் அவனுடன் சமாதானம் செய்து கொள்ளுதல். 3. தனது வல்லமை சத்ரு வல்லமைக்குக் கீழ்ப்பட்டிருக்கையில் சத்ருவுக்கு ஏதாவது கொடுத்து வணங்கிப் போதல் {ஆகியன மூன்று கர்மங்கள்}. 1. ஒரு காரியத்திலிறங்குமுன் அதை எப்படி ஆரம்பிக்கிறதென்று பார்த்தல்; இது ஆரம்போபாயம். 2. அக்காரியத்தை நடத்தத் தன்னிடம் ஆட்களும், பொருளும் போதுமானவையாக இருக்கின்றனவா என்று ஆலோசித்தல்; இது புருஷதிரவிய சம்பத்து. 3. தான் ஆரம்பிக்கும் காரியம் இடத்திற்கும், காலத்திற்கும் ஒத்திருக்கிறதாவென்று ஆராய்ந்து பார்த்தல்; இது காலதேச விபாகம். 4. ஆரம்பித்து நடத்துங்கால் ஏதாவது நடுவில் வழுவுண்டானால் அதைச் சரிப்படுத்தும் வகை பார்த்தல்; இது வினிபாதப் பிரதீகாரம். 5. காரியத்தை முடித்துக் கொள்ளும் வகை பார்த்தல்; இது காரியசித்தி {ஆகியன ஐவகை யோகங்களாகும்}” என்றிருக்கிறது.
[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், “புருஷன் சாஸ்த்ரத்தில் விதித்தபடி விடியற்காலத்தில் தர்மத்தையும், மத்யாஹ்னத்தில் அர்த்தத்ததையும், ஸாயங்காலத்தில் காமத்தையும் பணிந்து வர வேண்டும்., அல்லது விடியற்காலத்தில் தர்ம அர்த்தங்களையும், மத்யாஹ்னத்தில் அர்த்த தர்மங்களையும், ஸாயங்காலத்தில் காமதர்மங்களையும் ஆக இப்படி ஒவ்வொரு காலத்திலும் இரண்டிரண்டாக நடத்திக் கொண்டு வர வேண்டும். அல்லது ஸாயங்காலத்தில் காமத்தையும் தர்ம அர்த்தங்களையும் ஆக மூன்றையும் பணியலாம். இதுவன்றி இவற்றை அகாலத்தில் பணியலாகாது” என்றிருக்கிறது.
இராக்ஷசர்களில் சிறந்தவரே, எவன் அமைச்சர்களுடன் ஆலோசித்து, காலத்திற்குத் தகுந்த முறையில் தானம் செய்வானோ, அல்லது சாந்தமடைவானோ, அல்லது பேதம் விளைவிப்பானோ, அல்லது விக்ரமத்தை வெளிப்படுத்துவானோ, அல்லது யோகத்தில் ஈடுபடுவானோ, அல்லது நியாயாநியாயத்தின்படி {தர்மார்த்தகாமங்களில்} இரண்டைச் செய்வானோ, அல்லது உரிய காலத்தில் தர்ம, அர்த்த, காமங்களில் ஈடுபடுவானோ அந்த ஆத்மவான், லோகத்தில் விசனத்தை அடைவதே இல்லை.(11,12) ஒரு ராஜா, புத்திஜீவிகளான அமைச்சர்கள் சஹிதனாக, அர்த்த தத்துவங்களை {உள்ளபடியே உள்ளவற்றை} அறிந்து கொண்டு, தன் ஹிதத்தை {நன்மையை} கருத்தில் கொண்டே இங்கே காரியமாற்ற வேண்டும்.(13) மிருகத்தனமான புத்தியைக் கொண்ட புருஷர்கள், ஆலோசனைகளைத் தொடங்கி, சாஸ்திர அர்த்தங்களை அறியாமல் செருக்குடன் பேச விரும்புகிறார்கள்.(14) சாஸ்திரங்களை அறியாதவர்களும், அர்த்த சாஸ்திரத்தை நினைவில் கொள்ளாதவர்களும், ஏராளமான செல்வத்தை விரும்புகிறவர்களுமான அவர்களால் சொல்லப்படும் சொற்களைக் கொண்டு காரியமாற்றக் கூடாது.(15)
எந்த நரர்கள், ஹிதம் {நன்மை} செய்யும் போர்வையில் அஹிதமானவற்றை {தீமையானவற்றைத்} துடுக்குடன் பிதற்றி காரியம் நிறைவேறுவதைக் கெடுப்பார்களோ, அவர்களை முன்பே நோக்கி மந்திரங்களில் {கண்டுகொண்டு ஆலோசனைகளில்} ஒதுக்கி வைப்பது கர்தவ்யமாகும் {கடமையாகும்}.(16) தலைவனின் நாசத்தை விரும்பும் சில மந்திரிகள், புத்திசாலியான சத்ருக்களுடன் சேர்ந்து கொண்டு விபரீத காரியங்களைச் செய்வார்கள்.(17) தலைவன், மந்திர நிர்ணய வியவஹாரங்களில் {ஆலோசனைகளைச் செய்து தீர்மானிக்கும் காரியங்களில்} அப்படி மாறியிருக்கும் அமைச்சர்களை மித்ரர்களாக {நண்பர்களாகத்} தெரியும் அமித்ரர்களாக {பகைவர்களாகக்} கண்டு கொள்ள வேண்டும்.(18) போலித் தோற்றங்களால் கவரப்பெற்று சபலத்துடன் இருப்பவனைக் காணும் அன்னியர்கள், கிரௌஞ்சத்து துவிஜங்களை {கிரௌஞ்ச மலையில் உள்ள துளைகளை அறிந்த பறவைகளைப்} போல உடனே செயலாற்றுவார்கள்.(19) எவன் சத்ருக்களை அலட்சியம் செய்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவில்லையோ, அவன் அனர்த்தங்களையே சந்தித்து தன் ஸ்தானத்தில் இருந்து அகற்றப்படுவான்.(20) பூர்வத்தில் அனுஜன் {முன்பு தம்பி விபீஷணன்} என்ன சொன்னானோ, அந்த வாக்கியேமே செய்வதற்கு நமக்கு ஹிதமானது {நமக்கான நன்மையை விளைவிக்கும்}. எதை இச்சிப்பீரோ அதைச் செய்வீராக” {என்றான் கும்பகர்ணன்}.(21)
கும்பகர்ணனின் அந்தச் சொற்களைக் கேட்ட தசக்ரீவனும் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணனும்}, தன் புருவத்தை நெறித்து, குரோதத்துடன் இதைச் சொன்னான்:(22) “மதிப்பிற்குரிய குரு ஆசாரியரைப் போல எனக்கு நீ ஏன் அறிவுரை கூறுகிறாய்? வாக்கின் சிரமத்தால் அடையப்போவது என்ன? காலத்தில் செய்ய வேண்டியதே தகுந்தது.(23) தவறுதலாகவோ, சித்த மோஹத்தாலோ, பலத்திலும், வீரியத்திலும் நம்பிக்கை கொண்டோ {முன்பு} செய்த தவறை இப்போது மீண்டும் சுட்டிக்காட்டுவது வீணே.(24) இந்தக் காலத்திற்கு எது தகுந்ததோ, அதையே இப்போது சிந்திக்க வேண்டும். நடந்து முடிந்ததற்காக வருத்தப்பட முடியாது. கதம் கதமே {முடிந்தது முடிந்ததுதான்}.(25) என்னிடம் உனக்கு சினேஹம் இருப்பது உண்மையானால், அல்லது உன் விக்ரமத்தை நீ அறிந்து கொண்டால், என் காரியம் செய்யப்பட வேண்டியதுதான் என இதயப்பூர்வமாக நீ நினைத்தால், என் தீய நடத்தையால் உண்டான இந்த துக்கத்தை உன் விக்ரமத்தால் நேர் செய்வாயாக.(26,27அ) எவன் அர்த்தம் தொலைந்த தீனனை மீட்பானோ, அவனே நண்பன். எவன் சரியான நேரத்தில் தவறாமல் சஹாயத்திற்குத் தயாராக இருக்கிறானோ அவனே பந்து” {உறவினன் என்றான் ராவணன்}.(27ஆ,28அ)
அவன் {ராவணன்}, இத்தகைய பயங்கரமான கடும் வசனத்தைச் சொன்னதும், அவனது கோபத்தை அறிந்து கொண்டவன் {கும்பகர்ணன்}, மெதுவாகவும், மென்மையாகவும் பேசத் தொடங்கினான்.(28ஆ,29அ) தலைவன் {ராவணன்} பெரிதும் இந்திரியம் கலங்கியிருப்பதைக் கண்ட கும்பகர்ணன், அவனை சாந்தப்படுத்துவதற்காக, மெதுவாக {இந்த} வாக்கியத்தைக் கூறினான்:(29ஆ,30அ) “இராஜரே, அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, என் வாக்கியத்தைக் கவனமாகக் கேட்பீராக.{30ஆ} இராக்ஷசேந்திரரே, சந்தாபம் அடைந்தது போதும். கோபத்தைக் கைவிடுவீராக. ஸ்வஸ்தமாக {நலமாக} இருப்பதே} உமக்குத் தகும்.(30ஆ,31) பார்த்திபரே {பூமியின் தலைவரே}, நான் ஜீவித்திருக்கும் வரை, இவ்வாறாக மனத்தை அமைத்துக் கொள்ளாதீர். எவனால் நீர் பரிதபிக்கிறீரோ அவனை நான் அழிப்பேன்.(32) நீர் அடைந்த சர்வ அவஸ்தைகளிலும் பந்து பாவத்தினாலும் {உறவுமுறையாலும்}, பிராதா மீது கொண்ட ஸ்னேகத்தாலும் {உடன்பிறந்தான் மீது கொண்ட அன்பினாலும்}, பார்த்திபரே, அவசியம் ஹிதத்தையே {நிச்சயம் உமக்கான நன்மையையே} நான் சொன்னேன்.(33)
இதுபோன்ற காலத்தில் சினேகமிக்க பந்து ரணத்தில் {அன்புள்ள உறவினன் போரில்} எதைச் செய்வது சரியோ, அதை நான் செய்வதையும், சத்ருகள் அழிவதையும் நீர் பார்ப்பீர்.(34) மஹாபாஹுவே, நான் ரணமூர்த்தத்தில் {போர்க்களத்தில்} ராமனையும், அவனுடன் பிறந்தவனையும் கொல்வதையும், ஹரிவாஹினி {குரங்குப்படை} தப்பி ஓடுவதையும் நீர் பார்ப்பீர்.(35) மஹாபாஹுவே, இப்போதே ரணத்தில் இருந்து அந்த ராமனின் சிரத்தைக் கொண்டு வருவேன். நீர் சுகமாக இருப்பீர். சீதை துக்கமடைவாள்.(36) எந்த ராக்ஷசர்கள் லங்கையில் கொல்லப்பட்டனரோ அவர்களுடைய பந்துக்கள் அனைவரும் இதோ ராமனின் மரணத்தை வரவேற்பதை நீர் பார்ப்பீர்.(37) இன்று யுத்தத்தில் சத்ருக்களை நாசம் செய்து, தங்கள் பந்துவதத்தை {உறவினர்கள் கொல்லப்பட்டதை} எண்ணி சோகத்தில் பரிதபிக்கிறவர்களின் கண்ணீரைத் துடைக்கப் போகிறேன்.(38) இன்று சமரில் பர்வதத்திற்கு ஒப்பானவனும், சூரியனால் ஒளியூட்டப்பட்ட மேகத்தைப் போன்றவனுமான பிலவகேஷ்வரன் {தாவிச் செல்பவர்களின் தலைவன்} சுக்ரீவன் சிதைக்கப்படுவதை நீர் பார்ப்பீர்.(39) அனகரே {களங்கமற்றவரே}, தாசரதியை {தசரதனின் மகனான ராமனைக்} கொல்ல ஆவலுடன் இருப்பவர்களான இந்த ராக்ஷசர்களாலும் என்னாலும் ஆறுதல் கூறப்பெற்றும் ஏன் நீர் வேதனையடைகிறீர்?(40)
இராக்ஷசாதிபரே, என்னைக் கொன்ற பிறகுதான் ராகவனால் உம்மைக் கொல்ல முடியும். நான் என் காரியத்தில் சந்தாபத்திற்கு இடமளிக்க மாட்டேன்.(41) பரந்தபரே, ஒப்பற்ற விக்ரமம் கொண்டவரே, இப்போதும் நீர் விரும்பியபடி எனக்கு ஆணையிடலாம். யுத்தத்திற்காக வேறு எவரும் நாடப்பட வேண்டியதில்லை.(42) மஹாபலம் மிக்க உமது சத்ருக்களை என்னால் அழிக்க முடியும். சக்ரனாக {இந்திரனாக} இருந்தாலும், யமனாக இருந்தாலும், பாவக, மாருதனாக {அக்னி, வாயு தேவர்களாக} இருந்தாலும், குபேர, வருணனாக இருந்தாலும் அவர்களுடன் நான் யுத்தம் செய்வேன்.(43,44அ) கிரிமாத்ரம் சரீரத்துடன் கூடியவனும் {மலையளவு உடல் படைத்தவனும்}, கூரிய சூலம் தரித்தவனும், கூரிய பற்களைக் கொண்டவனுமான நான் முழங்கினால் புரந்தரனேயானாலும் {இந்திரனே ஆனாலும்} பீதியடைவான்.(44ஆ,45அ) அல்லதும், சஸ்திரங்களைக் கைவிட்டு, வேகத்துடன் எதிரிகளை நொறுக்கும் எனக்கு முன் ஜீவனுடன் நிற்கும் சக்தர்கள் எவருமில்லை.(45ஆ,46அ) சக்தியால் அல்ல; கதையால் அல்ல; வாளால் அல்ல; கூரிய சரங்களால் அல்ல; கோபம் அடைந்தால் வஜ்ரியை {இந்திரனைக்} கூட வெறுங்கைகளாலேயே நான் கொன்றுவிடுவேன்.(46ஆ,47அ) என் முஷ்டியின் வேகத்தை ராகவனால் இன்று சஹித்துக் கொள்ள முடிந்தால், பிறகு என் பாண ஓகங்கள் {கணைவெள்ளம்} ராகவனின் உதிரத்தைப் பருகும்.(47ஆ,48அ)
இராஜரே, நான் இருக்கும்போது இத்தகைய {சோக} சிந்தனையில் தவித்தால் என்ன அர்த்தம்? நான் உமது சத்ருக்களை நாசம் செய்யப் புறப்படத் தயாராக இருக்கிறேன்.(48ஆ,49அ) இராமன் மீது கொண்ட கோர பயத்தில் இருந்து விடுபடுவீராக. போரில் நான் அவனைக் கொல்வேன்.{49ஆ} இராகவனையும், லக்ஷ்மணனையும், மஹாபலவானான சுக்ரீவனையும், எவன் லங்கையை எரித்து ராக்ஷசர்களைக் கொன்றானோ, அந்த ஹனூமந்தனையும் {நான் கொல்வேன்}.(49ஆ,50) இதோ வரும் போரில் ஹரிக்களை பக்ஷிக்க {குரங்குகளை உண்ண} விரும்புகிறேன். உமக்கு மஹத்தான, அசாதாரணப் புகழைக் கொடுக்க விரும்புகிறேன்.(51)
இராஜரே, இந்திரனிடமோ, ஸ்வயம்புவிடமோ {பிரம்மனிடமோ} உமக்கு பயம் இருந்தால், நிசியின் இருளை {அகற்றும்} அம்சுமானை {சூரியனைப்} போல, அதை நான் நாசம் செய்வேன்.{52} நான் குரோதமடைந்தால் தேவர்களும் மஹீதலத்தில் {தரையில்} கிடப்பார்கள்.(52,53அ) எமனின் கொட்டமடக்குவேன். பாவகனை பக்ஷிப்பேன் {அக்னியை விழுங்குவேன்}. ஆதித்யனையும் {சூரியனையும்}, நக்ஷத்திரங்களையும் மஹீதலத்தில் வீழ்த்துவேன்.(53ஆ,54அ) சதக்ரதுவை {இந்திரனை} வதைப்பேன். வருணாலயத்தை {பெருங்கடலைப்} பருகிவிடுவேன். பர்வதங்களை சூர்ணமாக்கிவிடுவேன் {மலைகளைப் பொடியாக்கிவிடுவேன்}. மேதினியைப் பிளந்துவிடுவேன்.(54ஆ,55அ) இத்தனை தீர்க்க காலம் தூங்கிக் கொண்டிருந்த கும்பகர்ணனின் விக்ரமத்தை,{55ஆ} எங்கும் பக்ஷிக்கப்படும் பூதங்கள் {உயிரினங்கள்} இன்று பார்க்கட்டும். சர்வ திரிதிவமும் கூட {மூவுலகங்கள் அனைத்தும் கூட} என் ஆஹாரத்தைப் பூர்த்தி செய்யாது.(55ஆ,56) தாசரதியை வதம் செய்து உமக்கு சுகத்தை அளிக்கப்போகிறேன். இராமனையும், லக்ஷ்மணனையும் கொன்று, சர்வ ஹரியூத முக்கியர்களையும் {குரங்குக் குழுத்தலைவர்களையும்} நான் விழுங்கப்போகிறேன்.(57) இராஜரே, இன்று வாருணியை {மதுவைப்} பருகி மகிழ்ச்சியடைவீராக. துக்கத்தைவிட்டு செய்ய வேண்டியவற்றைச் செய்வீராக. இராமன் யமக்ஷயத்திற்கு {யமனின் வசிப்பிடத்திற்கு} அனுப்பப்பட்டால், நீண்ட காலம் சீதை வசப்பட்டு {அடங்கிக்} கிடப்பாள்” {என்றான் கும்பகர்ணன்}.(58)
யுத்த காண்டம் சர்க்கம் – 063ல் உள்ள சுலோகங்கள்: 58
Previous | | Sanskrit | | English | | Next |