The house of the Rakshasa Chief | Sundara-Kanda-Sarga-06 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வீடுவீடாக சீதையைத் தேடிய ஹனுமான்; இலங்கை செல்வத்தால் நிறைந்திருந்தது; இராவணனின் பெரும் மாளிகையில் நுழைந்த ஹனுமான்; அந்த அரண்மனை குறித்த வர்ணனை...
This picture was generated using Artificial Intelligence in Bing website | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கப்பட்ட படம் |
காமரூபந்தரிக்கவல்லவன் {விரும்பிய வடிவை ஏற்கவல்ல ஹனுமான்}, மாடமாளிகைகளில் விசனமடைந்து {சீதையைத் தேடுவதில் மனச்சோர்வடைந்து}, லாகவத்துடன் கூடியவனாக லங்கையில் மீண்டும் திரிந்தான்.(1) பிறகு அந்த லக்ஷ்மீவான், அர்க்கனின் {சூரியனின்} வர்ணத்தில் ஒளிர்வதும், பிராகாரங்களால் {மதிற்சுவர்களால்} சூழப்பட்டதுமான ராக்ஷசேந்திரனின் நிவேசனத்தை {ராவணனின் மாளிகையை} நெருங்கினான்.(2) சிம்ஹங்களால் {பாதுகாக்கப்படும்} மஹாவனத்தைப் போல, பீமர்களான {பயங்கரர்களான} ராக்ஷசர்களால் ரக்ஷிக்கப்படும் பவனத்தை {இல்லத்தை} ஆராய்ந்தபடி அந்தக் கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான ஹனுமான்} ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(3)
அது {ராவணனின் மாளிகை}, வெள்ளியாலானவையும், ஹேமத்தால் {பொன்னால்} சித்திரமாக அலங்கரிக்கப்பட்டவையுமான தோரணங்களுடனும் {நுழைவாயில்களுடனும்}, விசித்திரமான நுழைவுகளுடனும் {படிகளுடனும்}, அழகிய துவாரங்களுடனும் {வாயில்களுடனும்} இருந்தது.(4) கஜத்திலிருக்கும் சூரர்களான மஹாமாத்ரர்களாலும் {யானைப்பாகர்களாலும்}, களைப்பற்றவையும், தடுக்கப்படமுடியாதவையுமான குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களில் இருந்த சாரதிகளாலும் அடர்ந்திருந்தது.(5) சிங்கம், புலி ஆகியவற்றின் தோல்களாலான கவசங்களுடன் கூடியவையும், தந்தம், காஞ்சனம், வெள்ளி ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், பெருங்கோஷத்துடன் கூடியவையுமான விசித்திரமான ரதங்கள் சதா அங்கே திரிந்து கொண்டிருந்தன.(6) ஏராளமான ரத்தினங்களுடனும், விலைமதிப்புமிக்க ஆசனங்கள், பாஜனங்களுடனும் {கலன்களுடனும்}, மஹா ஆசனங்களுடன் கூடிய மஹாரதங்களுடனும், மஹாரதர்களின் {பெரும் வீரர்களின்} வசிப்பிடமாக அது திகழ்ந்தது.(7)
அந்தந்த விதவிதமான, காண்பதற்கு அழகிய, ஆயிரக்கணக்கான மிருகபக்ஷிகளால் பரிபூர்ணமாக அது {ராவணனின் அரண்மனை} நிறைந்திருந்தது.(8) நல்ல பயிற்சி கொண்ட ராக்ஷசர்களால் நன்கு ரக்ஷிக்கப்பட்ட முக்கியமான உள்ளரங்கம், சிறந்த ஸ்திரீகளால் எங்கும் நிறைந்திருந்தது.(9) மகிழ்ச்சிமிக்க பிரமதைகளை {பெண்களைக்} கொண்ட ராக்ஷசேந்திரனின் நிவேசனத்தில் {ராவணனின் வீட்டில்} ஒலித்த சிறந்த ஆபரணங்களின் கிங்கிணி மணி ஒலி, சமுத்திரத்தின் ஒலிக்கு ஒப்பாக இருந்தது.(10) முக்கிய ராஜகுணங்கள் நிறைந்ததும், அகில், சந்தனங்களுடன் கூடியதுமானது {ராவணனின் அரண்மனை}, சிம்ஹங்களுடன் கூடிய மஹத்தான வனத்தைப் போல மஹாஜனங்களால் நிறைந்திருந்தது.(11) பேரிகைகள், மிருதங்கங்கள், சங்குகளின் நாத எதிரொலியுடனும், விழாச்சடங்குகளுடனும், நித்திய அர்ச்சனைகளுடனும் ராக்ஷசர்கள் சதா பூஜித்துக் கொண்டிருந்தனர்.(12)
சமுத்திரம் போல் கம்பீரமானதும், சமுத்திரம் போல் ஓசையுள்ளதுமான அந்த மஹாத்மாவின் {ராவணனின்} மஹத்தான வேஷ்மம் {வசிப்பிடம்}, மஹாரத்தினங்கள் பதிக்கப்பட்டும், மஹாரத்தினங்களால் நிறைந்தும் இருப்பதை அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்} கண்டான்.(13,14அ) அது கஜங்கள் {யானைகள்}, அஷ்வங்கள் {குதிரைகள்}, ரதங்களால் {தேர்களால்} நிறைந்து, லங்கையின் ஆபரணம் போல் ஒளிர்வதாக அவன் நினைத்தான். அங்கே ராவணனின் சமீபத்திலேயே {ராவணனின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே} ஹனுமான் திரிந்து கொண்டிருந்தான்.(14ஆ,15) இராக்ஷசர்களின் கிருஹத்திலிருந்து கிருஹத்திற்குத் திரிந்தவன், பூந்தோட்டங்களையும், பிராசாதங்களையும் {முற்றங்களையும்} அச்சமின்றி ஆராய்ந்து பார்த்தான்.(16)
மஹாவேகம் கொண்ட அந்த மஹாவீரியன் {ஹனுமான்}, பிரஹஸ்தனின் நிவேசனத்திற்குத் தாவிச் சென்று, அங்கிருந்து மஹாபார்ஷ்வனுக்குரிய மற்றொரு வேஷ்மத்திற்குத் தாவிச் சென்றான்.(17) பிறகு அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, மேகத்திற்கு ஒப்பானவையும், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோருக்குரியவையுமான நிவேசனங்களுக்கும் தாவிச் சென்றான்[1].(18) அதே போல, அந்த மஹாகபி, மஹோதரன், விரூபாக்ஷன், வித்யுத்ஜிஹ்வன், வித்யுன்மாலி, வஜ்ரதம்ஷ்டிரன் ஆகியோரின் பவனங்களுக்கும் தாவிச் சென்றான்.(19,20அ) அதேபோல, மஹாதேஜஸ்வியான அந்த ஹரியூதபன் {குரங்குக் குழுத்தலைவனான ஹனுமான்}, மதிமிக்க சுகன், ஸாரணன், இந்திரஜித் ஆகியோரின் கிருஹங்களுக்கும் சென்றான்.(20ஆ,இ) அதே போல, அந்த ஹரியூதபன், ஜம்புமாலி, ஸுமாலி ஆகியோருக்குரியவற்றுக்கும் {அவரவரின் வீடுகளுக்கும்} சென்றான்.{21} அதேபோல, அந்த மஹாகபி, ரஷ்மிகேது, சூரியசத்ரு, வஜ்ரகாயன் ஆகியோரின் பவனங்களுக்கும் தாவிச் சென்றான்.(21,22) அந்த மாருதாத்மஜன் {ஹனுமான்}, தூம்ராக்ஷன், ஸம்பாதி, வித்யுத்ரூபன், பீமன், கனன், விகனன் ஆகியோரின் பவனங்களுக்கும்,{23} சுகநாபன், வக்ரன், ஷடன், விகடன், பிரம்ஹகர்ணன், தம்ஷ்டிரன், ராக்ஷசன் ரோமசன் ஆகியோருக்கு உரியனவற்றிற்கும்,{24} யுத்தோன்மத்தன், மத்தஸ்யன், துவஜகிரீவன், நாதி, வித்யுஜ்ஜிஹ்வன், இந்திரஜிஹ்வன் ஆகியோருக்கு உரியனவற்றிற்கும், அதே போல ஹஸ்திமுகன்,{25} கராளன், பிசாசன், சோணிதாக்ஷன் ஆகியோருக்கு உரியனவற்றிற்கும் {அவரவருக்குரிய வீடுகளுக்கும்},(23-26அ) மாருதாத்மஜனான அந்த ஹனுமான், அடுத்தடுத்து சென்றான்.{26ஆ}
[1] கம்பராமாயணத்தில் கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோரின் வசிப்பிடங்களைக் குறித்து விரிவாகச் சொல்லப்படுகிறது. அதில் ஹனுமான் கும்பகர்ணனைக் கண்டு, இவனே ராவணன் என்று ஐயுற்றதாக வருவது குறிப்பிடத்தகுந்தது.
பெரும் புகழ்பெற்றவனான அந்த மஹாகபி {ஹனுமான்}, அந்தந்த சிறந்த பவனங்களிலும், செல்வந்தர்களான அவரவரின் {அந்தந்த ராக்ஷசர்களின்} செல்வத்தைக் கண்டான்.(26ஆ,27) அந்த லக்ஷ்மீவான் {ஹனுமான்}, அவர்கள் அனைவரின் பவனங்களையும் கடந்து சென்றபிறகு, ராக்ஷசேந்திரனின் நிவேசனத்தை {வசிப்பிடத்தை} அடைந்தான்.(28) ஹரிசார்தூலனான {குரங்குகளில் புலியான} அந்த ஹரிசத்தமன் {குரங்குகளில் மேன்மையான ஹனுமான்}, இவ்வாறு சுற்றி வந்தபோது, விகாரமான கண்களைக் கொண்ட ராக்ஷசிகள், ராவணனின் சமீபத்தில் {ராவணனின் வீட்டருகே} உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்[2].{29} சூலங்கள், முத்கரங்கள் {சம்மட்டிகள்}, ஆகியவற்றைக் கையில் கொண்டவர்களும், சக்திகள் {ஈட்டிகள்}, தோமரங்கள் {வேல்கள்} ஆகியவற்றைத் தரித்தவர்களும்,(29,30அ) பேருடல் படைத்தவர்களும், நானாவித ஆயுதங்களை ஏந்தியவர்களும், விதவிதமான குல்மங்களை {படைப்பிரிவைச்}[3] சேர்ந்தவர்களுமான ராக்ஷசர்களையும், அந்த ராக்ஷசபதியின் கிருஹத்தில் {ராவணனின் வீட்டில்} கண்டான்.(30ஆ,இ)
[2] இத்திறத்து அரக்கிமார்கள் ஈரிருகோடி ஈட்டம்பத்தியர் உறையும் பத்திப் படர்நெடுந்தெருவும் பார்த்தான்சித்தியர் உறையும் மாடத்தெருவும் பின்னாகச் சென்றான்உத்திசை விஞ்சை மாதர் உறையுளைமுறையின் உற்றான்- கம்பராமாயணம், 5025ம் பாடல், ஊர் தேடு படலம்பொருள்: இப்படிப்பட்டவர்களும், எண்ணிக்கையில் நான்கு கோடிபேருமான அரக்கிமார்கள் காதலுடையவர்களாகத் தங்கியுள்ள விரிந்த, வரிசையான நெடுந்தெருவையும் பார்த்துவிட்டு, சித்தர் குலப் பெண்கள் தங்கியிருக்கும் மாடங்களைப் பெற்ற தெருவுக்கும் பின்னர் சென்றான். இடைப்பட்ட திசையில் வித்யாதரிகள் தங்கியுள்ள வீடுகளையும் முறைப்படி அடைந்தான்.
[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே குல்மம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படையின் அடிப்படை பிரிவு 250 மனிதர்களைக் கொண்ட பட்டியாகும். மூன்று பட்டிகளைக் கொண்ட பிரிவு குல்மம் ஆகும். பத்து குல்மங்கள் ஒரு கணமாகும்” என்றிருக்கிறது. மஹாபாரதம், ஆதிபர்வம், 2ம் அத்தியாயத்தில், 19 முதல் 26ம் சுலோகம் வரை படைப்பிரிவுகளின் வகையும் எண்ணிக்கையும் சொல்லப்பட்டுள்ளன. அதில் 19-21 சுலோகங்களில், “ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்படை வீரர்கள், மூன்று குதிரைகள் ஒரு பட்டியை அமைக்கின்றன. மூன்று பட்டிகள் ஒரு சேனாமுகத்தை அமைக்கின்றன. மூன்று சேனாமுகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படுகிறது. மூன்று குல்மங்கள் ஒரு கணமென அழைக்கப்படுகிறது. மூன்று கணங்கள் ஒரு வாஹினியாகும்” என்றிருக்கிறது. இந்த சர்க்கத்தின் 34ம் சுலோகத்தில் வாஹினியும் குறிப்பிடப்படுகிறது {1:2:19-26}. மஹாபாரதம், உத்யோக பர்வத்தில், 156ம் அத்தியாயத்தில், “இருநூற்றைம்பது மனிதர்களால் ஆனது ஒரு பட்டியாகும். மூன்று பட்டிகள் சேர்ந்தது ஒரு சேனாமுகம், அல்லது குல்மம் என்றழைக்கப்படுகிறது. மூன்று குல்மங்கள் சேர்ந்தது ஒரு கணமாகும் என்றிருக்கிறது {5:156}.
சிவப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்களைக் கொண்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான குதிரைகளையும்,{31} நற்குலத்தில் பிறந்தவையும், அழகிய ரூபம் கொண்டவையும், பகைவரின் கஜங்களை {யானைகளை} அடக்கவல்லவையும், கஜங்களைப் பயிற்றுவிப்பதில் திறம்பெற்றவையும், {இந்திரனின் யானையான} ஐராவதத்திற்கு இணையானவையும்,{32} யுத்தத்தில், பகைவரின் சைனியங்களை அழிக்கவல்லவையுமான கஜங்களை அந்தக் கிருஹத்தில் கண்டான். அவை, மழைமேகங்களைப் போல, எப்போதும் நீரைப் பொழியும் {அருவிகளுடன் கூடிய} கிரிகளைப் போல மதம் பெருக்கின.{33} இடி மேகம்போல கோஷிப்பவையும், சமரில் பகைவரால் வெல்லப்பட முடியாதவையும்,(31-34அ) ஜாம்பூநதத்தால் {பொன்னால்} அங்கே அலங்கரிக்கப்பட்டு இருந்தவையுமான ஆயிரக்கணக்கான வாஹினிகள் {படைப்பிரிவுகள்},{34ஆ} ஹேமஜாலங்களால் {பொன் வலைகளால்} மறைக்கப்பட்டு, இளம் ஆதித்யனுக்கு ஒப்பாக ராக்ஷசேந்திரன் ராவணனின் நிவேசனத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பதைக் கண்டான்.(35)
மாருதாத்மஜனான அந்தக் கபி {வாயுமைந்தனும், குரங்குமான ஹனுமான்}, விதவிதமான வடிவங்களிலான சிபிகைகளையும் {பல்லக்குகளையும்}, சித்திரமான லதாகிருஹங்களையும் {கொடிமாடங்களையும்}, சித்திரசாலை கிருஹங்களையும்,{36} வேறு கிரீடகிருஹங்களையும் {விளையாட்டு அரங்கங்களையும்}, மரத்தாலான பர்வதங்களையும் {செய்குன்றுகளையும்}, காமத்திற்கான கிருஹங்களையும், ரம்மியமான திவாகிருஹத்தையும் {மனமகிழ் மன்றங்களையும்},{37} ராக்ஷசேந்திரன் ராவணனின் நிவேசனத்தில் கண்டான்.(36-38அ) மந்தரகிரிக்கு ஒப்பானதும், மயூரங்களின் கூட்டங்களால் நிறைந்ததும்,{38ஆ} கொடிஸ்தம்பங்கள் மிகுந்ததுமாக அந்த உத்தம பவனத்தைக் கண்டான். அனேக ரத்தினங்களாலும், நிதிஜாலங்களாலும் {செல்வக் குவியல்களாலும்} நிறைந்ததும்,{39} தீரர்களால் நிர்வகிக்கப்பட்டதுமான அது, பூதபதியின் {சிவனின் / குபேரனின்} கிருஹத்தைப் போலிருந்தது.(38ஆ-40அ)
அந்த வேஷ்மம், ரத்தினக் கதிர்களாலும், சூரியக் கதிர்களைப் போன்ற ராவணனின் தேஜஸ்ஸாலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(40ஆ,41அ) அங்கே, ஜாம்பூநதத்தாலான {பொன்னாலான} சயனங்களையும் {மஞ்சங்களையும்}, ஆசனங்களையும், முக்கியமான பாத்திரங்களையும் அந்த ஹரியூதபன் {குரங்குக் குழுத் தலைவன் ஹனுமான்} கண்டான்.(41ஆ,42அ) மது அசவத்தில் {தேனில் செய்யப்பட்ட மதுவில்} நனைந்தவையும், மணியாலானவையுமான பாத்திரங்களால் நிறைந்ததாகவும்,{42ஆ} குபேரனின் பவனத்தைப் போல மனோஹரமானதாகவும், நெரிசலற்றதாகவும், நூபுரங்களின் {சிலம்புகளின்} கோஷங்களாலும், மேகலைகளின் ஒலியாலும்,{43} ஆழ்ந்த ஒலியெழுப்பும் மிருதங்கங்கள், கைத் தாளங்களின் கோஷத்தாலும் நிறைந்ததாகவும், நூற்றுக்கணக்கான ஸ்திரீ ரத்தினங்களால் {சிறந்த பெண்களால்} நிறைந்த பிராசாதங்களுடன் {முற்றங்களுடன்} கூடியதாகவும், அழகிய நீண்ட கட்டுகளைக் கொண்டதாகவும் இருந்த,{44} அந்த மஹாகிருஹத்திற்குள் ஹனுமான் பிரவேசித்தான்.(42ஆ-45)
சுந்தர காண்டம் சர்க்கம் – 06ல் உள்ள சுலோகங்கள்: 45
Previous | | Sanskrit | | English | | Next |