Wednesday 4 August 2021

அஷ்வமேதம் | பால காண்டம் சர்க்கம் - 14 (60)

Ashwamedha | Bala-Kanda-Sarga-14 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அஷ்வமேத யஜ்ஞம் தொடங்கியது; யஜ்ஞம் செய்யப்பட்ட முறை; கௌசல்யை வேள்விக் குதிரையை வெட்டியது; அஷ்வமேதம் நிறைவடைந்தது...

Ashvamedha Yajna

இன்னுமொரு வருடம் முடிந்து வேள்விக் குதிரையும் திரும்பியபிறகு,[1] சரயுவின் உத்தரதீரத்தில் {சரயு ஆற்றின் வடகரையில்} ராஜன் {தசரதன்} யஜ்ஞத்தைத் தொடங்கினான்.(1) நல்ல மஹாத்மாவான அந்த ராஜனின் அஷ்வமேத மஹாயஜ்ஞத்தில் ரிஷ்யசிருங்கரை முன்னிட்டுத் துவிஜரிஷபர்கள் {இருபிறப்பாளர்களில் சிறந்தவர்கள்} கர்மங்களைத் தொடங்கினர்.(2) யஜ்ஞங்கள் செய்வதை நன்கறிந்த வேதபாரகர்கள் சடங்குகளுக்குரிய விதிமுறைகளின்படியும், சாஸ்திரங்களின்படியும் பணிகளைச் செய்தனர்.(3) உபசத சடங்கைப் போன்று சாத்திரங்களில் விதிக்கப்பட்ட பிரவர்க்கியச்[2] சடங்கை விதிப்படி செய்த துவிஜர்கள், சாஸ்திரப்படியான மேலதிக கர்மங்கள் அனைத்தையும் செய்தனர்.(4) பிறகு தன்னடக்கத்துடன் கூடிய அந்த முனிபுங்கவர்கள் அனைவரும், அந்தந்த கர்மங்களுக்குரிய தேவர்களைப் பூஜித்து அதிகாலையில் சவனப்பூர்வமான கர்மங்களையும், தொடர்புடைய துணை சடங்குகளையும் செய்தனர்.(5) இந்திரனுக்குக் கொடுக்கப்பட வேண்டியது {அவிர்ப்பாகம்} முறையாகக் கொடுக்கப்பட்டு, குற்றமற்ற ராஜன் {தசரதன்} ஸோமலதையைப்[3] பிழிந்ததும் அதன் தொடர்ச்சியாக மத்தியான வேளையிலும் {இரண்டாம்} சவனச் சடங்கு நடைபெற்றது.(6) அதே போலவே பிராமணபுங்கவர்கள் சாஸ்திர நோக்கத்துடன் நல்லமஹாத்மாவான அந்த ராஜனுக்கு மூன்றாம் சவனச் சடங்கையும் செய்தனர்.(7)

[1] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அஷ்வமேத யாகத்தில், நெற்றியில் ஒரு சின்னத்துடன் நன்கலங்கரிக்கப்பட்ட வேள்விக் குதிரை விடுவிக்கப்படும். அந்தக் குதிரையைக் கைப்பற்றும் எந்த மன்னனும் அதை விடுவித்து அனுப்பும் மன்னனின் கோபத்துக்கு உள்ளாவான் என்ற அறைகூவலுடன் அந்தச் சின்னம் அதன் நெற்றியில் பொறிக்கப்பட்டிருக்கும். அதைக் கைப்பற்றும் மன்னன், அதை விடுவிக்கும் மன்னனுடன் போரிட வேண்டும். கைப்பற்றப்படாவிட்டால் விடுவிக்கும் மன்னனின் வெல்லப்பட முடியாத வீரம் நிறுவப்பட்டு அவன் முறையாக அந்தச் சடங்கைச் செய்வான். இங்கே மன்னன் தசரதனால் ஒருவருடத்திற்கு முன்பு விடுவிக்கப்பட்ட குதிரை எவராலும் கைப்பற்றப்படாமல் திரும்பி வந்து அவனது கொற்றத்தை நிறுவியிருப்பதால் அந்தச் சடங்கு முறையாகத் தொடங்குகிறது" என்றிருக்கிறது.

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ப்ரவர்க்யம் - ப்ரவர்க்ய ப்ராஹ்மணத்திற் சொல்லப்பட்ட கர்மவிசேஷம். உபஸதம் - அஃது ஓர் இஷ்டி விசேஷம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவை சோம வேள்விக்குத் தொடர்புடைய குறிப்பிட்ட சடங்குகள்" என்றிருக்கிறது.

[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸோமலதை-ஆட்லாங்கொடி" என்றிருக்கிறது.

ரிஷ்யசிருங்கரும், பிறரும் நன்கு பயிலப்பட்ட சொற்களால் அமைந்த மந்திரங்களைச் சொல்லி சக்ரனையும் {இந்திரனையும்}, சிறந்த தேவர்கள் பிறரையும் அவ்விடத்தில் இருப்புக்கு அழைத்தனர்.(8) ஹோதாக்கள் மதுரமான கீதங்களைப் பாடியும், தகுந்த மந்திரங்களைச் சொல்லியும் அவிர்ப்பாகங்களை ஏற்கும் தேவர்களை வரவேற்றனர்.(9) அங்கே ஆகுதி எரியாத நிலையோ, சிறு தவறு ஏற்படும் நிலையோ நேரிடவில்லை. அனைத்தும் மந்திரம் சார்ந்தவையாகவே தோன்றின, உண்மையில் அனைத்தும் போதுமான பாதுகாப்புடன் செய்யப்பட்டன.(10) {வேள்வி நடந்த} அந்த நாட்களில் களைத்தவரையோ, பசித்தவரையோ, கல்வி அறிவில்லாத பிராமணரையோ அங்கே காண முடியவில்லை, அதேபோலவே நூறு தொண்டர்கள் இல்லாத {பிராமணர்} எவரையும் அங்கே காண முடியவில்லை.(11)

பிராமணர்கள், நாதவந்தர்கள் {தலைவனைக் கொண்ட பணியாட்கள்}, தவசிகள் ஆகியோரும், {போக்குவரத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கொள்ளாத} சிரமணர்களும் {புனிதப் பயணிகளும்}[4] எப்போதும் அங்கே புசித்துக் கொண்டிருந்தனர்.(12) முதிர்ந்தவர்கள், வியாதியுற்றவர்கள், ஸ்திரீகள், பாலர்கள் ஆகியோரும் {சுவைமிக்க உணவை} உண்பதில் திருப்தி அடையாமல்[5] எப்போதும் புசித்துக் கொண்டிருந்தனர்.(13) "அன்னத்தைக் கொடுப்பீராக, விதவிதமான ஆடைகளைக் கொடுப்பீராக" என அங்கே அனேக வழிகளில் ஏவல்கள் கேட்கப்பட்டன.(14) இவ்வாறே அங்கே விதிப்படி அன்னக்கூடங்கள் குவிக்கப்பட்டன. அவை நாளுக்கு நாள் அதிகரித்து மலைகளைப் போலத் தோன்றின.(15) அந்த மஹாத்மாவின் {தசரதனின்} யஜ்ஞத்திற்கு நானாதேசங்களில் {பற்பல நாடுகளில்} இருந்து {கூட்டங்கூட்டமாக} வந்திருந்த புருஷர்களும், ஸ்திரீகளும் நன்கு நிறைவடையும் வகையில் அவர்களுக்கு அன்னபானங்கள் கொடுக்கப்பட்டன.(16) விதிப்படி முறையாகச் சமைக்கப்பட்ட சுவைமிக்க அன்னத்தை துவிஜரிஷபர்கள் பாராட்டி, "அஹோ ராகவா {ரகுவின் வழித்தோன்றலான தசரதா}, திருப்தியடைந்தோம் பத்ரமாக {அருளப்பட்டு} இருப்பாயாக" என்று சொன்னது அங்கே கேட்டுக் கொண்டே இருந்தது.(17) நன்கு அலங்கரிக்கப்பட்ட புருஷர்கள், பிராமணர்களுக்கு உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தனர், ஒளிபொருந்திய மணி குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பிறரும் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.(18)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பௌத்தத் துறவிகளில் திரிந்து கொண்டே இருப்போரைக் குறிக்கும் சிரமணர் முதலிய சொற்களைக் கண்டு அறிஞர்கள் சிலர் ராமாயாணம் பௌத்த காலத்திற்குப் பிறகே எழுதப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வருகின்றனர். சிரவணர் என்ற சொல்லுக்கு ஸம்ஸ்கிருதத்தில் புனிதப் பயணி என்ற பொருள் மட்டுமே உண்டு. இந்திரன் பயணிகளின் நண்பன் என்பதால் புனிதப் பயணம் என்பது முக்திக்கான ஒரு வழிமுறையாக விதிக்கப்பட்டிருக்கிறது. இதை ஐத்ரேய பிராஹ்மணத்தில் காணலாம். பௌத்த சிரமணர்கள் மதம் மாற்றுவதற்காகத் திரிந்து கொண்டிருந்தவர்கள், இந்து சிரமணர்களோ முக்தி நாடித் திரியும் தூய சந்நியாசிகள் மட்டுமே" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில் சிரமணர் என்பதற்குப் பதில் திகம்பரர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில் துறவிகள் என்ற சொல் இருக்கிறது.

[5] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவர்கள் எவ்வளவு உண்டாலும் அரசனுக்கும் திருப்தியுண்டாகவில்லை என்றும் இதில் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், "அவர்கள் இப்படி இடைவீடின்றிச் சாப்பிட்டபோதும் அந்நபாநத்தின் சுவையினால் திருப்தி உண்டாகவில்லை. அவர்கள் எவ்வளவு புசிக்கிலும் அரசனுக்குந் திருப்தி பிறக்கவில்லை" என்றிருக்கிறது.

வாதிடுவதில் சிறந்த தீர விப்ரர்கள், பணிகளுக்கிடையில் பரஸ்பரம் {ஒருவரையொருவர்} வெல்ல அறிவுசார்ந்த பல வாதங்களைச் செய்தனர்.(19) சடங்குகளைச் செய்வதில் நிபுணர்களான துவிஜர்கள் நாளுக்கு நாள் அங்கே {வசிஷ்டராலும், பிறராலும்} ஊக்கமளிக்கப்பட்டவர்களாக சாஸ்திரப்படி பணிகள் அனைத்தையும் செய்து வந்தனர்.(20) ஷட் அங்கங்களை {வேதங்களின் ஆறு கிளைகளை}[6] அறியாதவர்கள், விரதங்களை நோற்காதவர்கள், பல கேள்விகளை {சாத்திரங்களைக்} கேட்டறியாதவர்கள் என அங்கே ஒருவரும் இல்லை. உண்மையில் அந்த ராஜனின் சடங்கில் வாதம்புரிவதில் நிபுணமற்றவர்கள் எவரும் இல்லை.(21)

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வேதங்களின் ஆறு அங்கங்கள்: 1) சிக்ஷை - ஒலியியல் 3) வியாகரணம் - இலக்கணம், 3) சந்தஸ் - யாப்பு {பொருத்தமான உச்சரிப்பு} 4) நிருக்தம் - சொல்லியல் {சொற்பிறப்பியல்} 5) ஜ்யோதிஷம் - வானியல் 6) கல்பம் - சடங்குச் செயல்கள் ஆகியனவாகும்" என்றிருக்கிறது.

யூபங்கள் {மரத்தூண்/பலிபீடத்திற்கு அருகே நாட்டப்படும் கொடிக்கம்பம்} நாட்டப்படும் வேளை வந்த போது, வில்வ மரத்தில் செய்யப்பட்டவை ஆறும், காதிரை {கருங்காலி} மரத்தில் செய்யப்பட்டவை அதே எண்ணிக்கையிலும் {ஆறும்}, பர்ணின {பலாச} மரத்தில் செய்யப்பட்டவை அதே எண்ணிக்கையிலும் {ஆறும்}, சிலேஷ்மாதக {நறுவிலி} மரத்தில் செய்யப்பட்ட ஒன்றும், தேவதாரு மரத்தில் செய்யப்பட்டவை இரண்டுமென அவை {இருபத்தோரு யூபங்கள்} ஒவ்வொன்றும் அகலவிரித்த கைகளின் இடைவெளிகளில் அந்தந்த மரங்களிலேயே ஆன ஸ்தம்பங்களில் நாட்டப்பட்டன.(22,23) சாஸ்திர ஞானம் கொண்டவர்களாலும், யஜ்ஞம் செய்வதில் அறிஞர்களாலும் அவை {யூபங்கள்} அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. அந்த யஜ்ஞத்தின் நேர்த்தியை வெளிப்படுத்தும் வண்ணம் அவை தங்கப்பட்டங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(24) இருபத்தோரு முழம் உயரம் கொண்டவையான அந்த இருபத்தோரு யூபங்களும் இருபத்தோரு துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(25) உறுதிமிக்கவையாகவும், எட்டுப்பட்டைகளும், மழுமழுவென்ற மென்மையும் கொண்டவையாகவும் சிற்பிகளால் {தச்சர்களால்} நன்கு செதுக்கப்பட்டிருந்த அவை அனைத்தும் இவ்வாறே விதிப்படி ஊன்றப்பட்டன.(26) துணிகளால் சுற்றப்பட்டு, புஷ்பங்கள் {மலர்கள்}, கந்தங்கள் {நறுமணப் பொருட்கள்} ஆகியவற்றைக் கொண்டு பூஜிக்கப்பட்ட அவை வானில் சப்தரிஷிகள்[7] ஒளிர்வதைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.(27)

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சப்த ரிஷிகளின் பெயர்கள்: 1) அத்ரி, 2) அங்கீரஸ், 3) புலஸ்தியர், 4)புலஹர், 5) கிரது, 6) மரீசி, 7) வசிஷ்டர். வானமண்டலத்தின் நட்சத்திரக்கூட்டங்களில் இஃது உர்ஸா மேஜர் Ursa Major அல்லது பெருங்கரடி என்றழைக்கப்படுகிறது." என்றிருக்கிறது. 

அங்கே பிராமணர்களால் அடுக்கப்பட்ட அக்னிபீடத்திற்கான செங்கற்கள் {சுல்ப நூலைக் கொண்டு அளக்கப்படும்} நிலையான அளவுகளின் படியும் விதிகளின்படியும் சில்பக்காரர்களால் கட்டமைக்கப்பட்டன[8].(28) நிபுணத்துவம் வாய்ந்த துவிஜர்களால் பொன்சிறகுகளுடனும், {பிற சடங்குகளுக்கான பீடங்களைவிட} மூன்று மடங்கு அதிக அளவில் பதினெட்டு பிரிவுகளுடனும் {பிரஸ்தாரங்களுடன்}, கருடனின் வடிவில் செய்யப்பட்ட அந்த ராஜசிம்மத்தின் {தசரதனின்} அக்னி பீடத்தில் எப்போதும் எரியும் நெருப்பு மூட்டப்பட்டது[9].(29) பசவங்கள் {விலங்குகள்}, உரகங்கள் {பாம்புகள்}, பக்ஷிகள் {பறவைகள்} ஆகியன சாஸ்திரம் சொல்லும்படி அந்தந்த தேவர்களுக்கென உத்தேசித்து அங்கே {அந்தந்த யூபஸ்தம்பங்களில்} கட்டப்பட்டன.(30) விலங்கு வேள்விகளுக்குத் தேவையான குதிரை, நீர்வாழ் உயிரினங்கள் முதலிய அனைத்தும் சாத்திரவிதிப்படி ரிஷிகளால் கட்டப்பட்டன[10].(31) அங்கே அவ்வாறு முன்னூறு விலங்குகளும், உத்தம ரத்தினம் போன்ற ராஜனின் {தசரதனின்} ஒரு குதிரையும் யூபங்களில் கட்டப்பட்டன.(32)

[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அக்னிப்பீடக் கட்டுமானமே கூட இஷ்டிகசயனம் என்றழைக்கப்படும் ஒரு சடங்காகும். அதில் ஒவ்வொரு செங்கல்லும், மந்திரங்களால் புனிதமாக்கப்படும். தேவையான வடிவில் செங்கற்கள் அடுக்கப்பட்ட பிறகு அந்தப் பீடத்தின் செங்கற்கட்டுமானத்தில் பாலும், பிற தூய நீர் வகைகளும் ஊற்றப்பட்டு வேத மந்திரங்கள் ஓத அபிஷேகமெனும் புனித நீராடல் அதற்குச் செய்யப்படும்" என்றிருக்கிறது.

[9] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணுவின் வாகனமாகத் திகழும் கருடன், வேகமான சிறகுகளைப் படைத்த தெய்வீகக் கழுகாவான். அவனே ஒரு காலத்தில் அமுதத்தைக் கொண்டு வந்து தன் தாயை அடிமைத்தளையில் இருந்து விடுவித்தான். எனவே, அக்னிபீடம் தெய்வீகக் கழுகின் வடிவைப் பெறுகிறது. அதன் சிறகுகளும், வால் பகுதியும் நீண்டிருக்கும், தலை கீழ் நோக்கியிருக்கும், கண்கள் கிழக்கு நோக்கி இருக்கும். சுபர்ணன் அதாவது நல்ல சிறகுகளைப் படைத்தவன் தன் பொற்சிறகுகளுடன் சொர்க்கத்திற்கு ஆகுதிகளைச் சுமந்து செல்வதால் யஜ்ஞத்திற்கும் சுபர்ணம் என்ற பெயருண்டு. தசரதனின் அஷ்வமேதயஜ்ஞத்திற்கான இந்தப் பீடம் வழக்கமாகச் செய்யப்படும் பீடங்களைவிட மூன்று மடங்கு பெரிதாகச் செய்யப்படுகிறது" என்றிருக்கிறது.

[10] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அஷ்வமேத வேள்வியில் பல விலங்குகள் பலியிடப்படும். ஆனால் அதற்கு முன்பு அவை காட்டு விலங்குகள் என்றும், வீட்டு விலங்குகளென்றும் தனித்தனியாகப் பிரிக்கப்படும். அவற்றில் காட்டு விலங்குகள் பலவும் அக்னிபிரதக்ஷிண நமஸ்காரமெனும் முறைப்படி நெருப்பை வலம் வந்த பிறகு விடுவிக்கப்படும். வீட்டு விலங்குகள் வேள்வியில் பலியிடப்படும். எதை விடுவது, எதை வைத்துக் கொள்வது என்பதைப் புரோஹிதர்கள் தீர்மானிப்பார்கள்" என்றிருக்கிறது. கட்டமுடியாத உயிரினங்கள், கூண்டிலடைக்கப்பட்டு யூபங்களில் கட்டப்பட்டும்.

அப்போது, பெரும் மகிழ்ச்சியுடன் அந்தக் குதிரையிடம் வந்த கௌசல்யை மதிப்புடன் வலமும், இடமுமாகச் சென்று மூன்று கத்திகளைக் கொண்டு அதை வெட்டினாள்[11].(33) அமைதியான இதயத்துடன் கூடிய கௌசல்யை தர்மத்தை {வேள்வியின் நல்விளைவுகளை} விரும்பி மனவெறுப்பில்லாமல் {அங்கே சவமாகக் கிடந்த} அந்தக் குதிரையுடன் ஓரிரவு வசித்தாள்.(34) ஹோதா, அத்வர்யு, உத்காதா ஆகியோர் {தக்ஷிணையாகக் கொடுக்கப்பட்ட} மஹிஷி {பட்டத்துராணி}, பரிவ்ருத்தி {புறக்கணிக்கப்பட்ட மனைவி}, வாவாதை {ஆசை நாயகி} ஆகியோரின் கைகளைப் பற்றினர்[12].(35) பரமஞானம் கொண்டவரும், இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவருமான ரித்விக் குதிரையின் {வயிற்றுப் பகுதியில் உள்ள} கொழுப்பை எடுத்து சாத்திரப்படி சமைத்தார்.(36) காலநியாயப்படி அந்த நராதிபன் {தசரதன்}, தன் பாவத்தைக் கழுவிக் கொள்ள அந்தக் கொழுப்பில் புகையும் தூமகந்தத்தை {புகையின் மணத்தை} நுகர்ந்தான்.(37) {வேள்வியின்} பதினாறு ரித்விஜர்களும் சேர்ந்து, குதிரையின் எஞ்சிய உடற்பாகங்கள் அனைத்தையும் விதிப்படி அக்னியில் நைவேத்தியமாக இட்டனர்.(38)

[11] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வேள்விகளில் ராணிகள் விலங்குகளைக் கொல்வதில்லை. அந்த ராணிகள் ஏற்கனவே கொல்லப்பட்ட குதிரையிடம் வந்து மூன்று தங்க ஊசிகளால் அதைத் துளைப்பார்கள். வேள்வி செய்பவனின் மனைவியர் அனைவரும் இதைச் செய்ய வேண்டுமென சாத்திரம் சொல்கிறது. எனவே, தசரதனின் மூன்று ராணிகளும் குதிரையை மும்மூன்று ஊசிகளால் துளைத்திருப்பார்கள்" என்றிருக்கிறது.

[12] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பட்டாபிஷேகம் பெற்றவள் மஹிஷி என்றும், அரசன் ஸம்போகித்து உபேக்ஷிக்கப்பெற்றவள் பரிவ்ருத்தியென்றும், ராஜவேசயை வாவதையென்றும், ராஜாவுக்குப் பாத்ரங் கொடுப்பவள் பாலாகலியென்றும் அறிக. இந்நால்வரில் மஹிஷியை ப்ரஹ்மாவுக்கும், பரிவ்ருத்தியை உத்காதாவுக்கும், வாவாதையை ஹோதாவுக்கும், பாலாகலியை அத்வர்யுவுக்கும் அரசன் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும். பின்பு அந்த ருத்விக்குக்களும் அவர்களுக்குப் பதிலாக த்ரவ்யத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களைக் கொடுத்துவிடுவார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "மஹிஷி என்பவள் பட்டத்து ராணியாவாள், பரிவிருத்தி என்பவள் முன்பு பிடித்தமானவள், ஆனால் இப்போது புறக்கணிக்கப்பட்டவள். வாவதை என்பவள் பிடித்தமான மனைவி. பாலாகலி என்பவள் ஒரு மன்னனுக்கு உரிமையுள்ள நான்கு மனைவியரில் இறுதியானவள். சில வேளைகளில் மஹிஷி க்ஷத்திரிய மனைவி என்றும், வாவதை வைசிய மனைவி என்றும், பரிவிருத்தி சூத்திர மனைவி என்றும் சொல்லப்படுக்கிறார்கள். ஆனால் இங்கே முன் சொன்ன பொருளே பொருந்தும்" என்றிருக்கிறது.

மற்ற யஜ்ஞங்களில் ஹவிஸானது பிலாக்ஷ கிளைகளின் {இரலிக் கிளைகளின்} மூலம் காணிக்கையளிக்கப்படும். அஷ்வமேத யஜ்ஞத்தில் வைதசக் கொடியால் {நீர்வஞ்சிக் கொடியால்} காணிக்கையளிக்கப்படும்.(39) பிராஹ்மணங்களின் மூலமும், கல்பசூத்திர விதிகளின் படியும் அஷ்வமேதம் மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாளில் சதுஷ்டோமம் ஏற்பாடு செய்யப்படும்.(40) இரண்டாம் நாள் உக்தியமும், அதற்கு அடுத்த நாள் {மூன்றாம் நாள்} அதிராத்ரமும் இன்னும் சாத்திர நோக்கில் விதிக்கப்படும் காரியங்கள் பலவும் செய்யப்படும்[13].(41) அவ்வாறே ஜ்யோதிஷ்டோமம் {அக்னிச் சடங்கு}, ஆயுர்யாகம் {ஆயுள் சடங்கு}, அதிராத்ரம், அபிஜித், விச்வஜித், அப்தோர்யாம மஹாயஜ்ஞங்கள் ஆகியனவும் செய்யப்பட்டன.(42)

[13] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அஷ்வமேத யாகம் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறும். ஆனால் தசரதன் சந்ததி பெற தேவர்களைத் தணிவடையச் செய்யும் ஆவலில் அதனுடன் தொடர்புடைய பல்வேறு சடங்குகளையும் பல நாட்கள் செய்கிறான்" என்றிருக்கிறது.

தன் குலத்தைப் பெருகச் செய்பவனான ராஜா {தசரதன்}, கிழக்குத் திசையை ஹோதாவுக்கும், மேற்கை அத்வர்யுவுக்கும், தென் திசையைப் பிரம்மாவுக்கும், வட திசையை உத்காதாவுக்கும் கொடையளித்தான். பூர்வத்தில் ஸ்வயம்பூவால் {பிரம்மனால்} விதிக்கப்பட்ட படியே அந்த அஷ்வமேத மஹாயஜ்ஞத்தில் இவை யாவும் கொடையளிக்கப்பட்டன.(43,44) குலவர்தனனும், புருஷரிஷபனுமான ராஜா {தசதரன்}, சடங்குகளை முடித்துவிட்டு நியாயப்படி அந்த நிலங்களை ரித்விக்குகளுக்குத் தானமளித்தான்.(45) ஸ்ரீமானான இக்ஷ்வாகு குலநந்தனன் {தசரதன்} இவ்வாறு தத்தம் செய்து மகிழ்ந்தாலும், பாவங்களைக் கழுவிக் கொண்டவனான அந்த ராஜனிடம் ரித்விஜர்கள் அனைவரும்,(46) "மொத்த பூமியையும் ரக்ஷிக்கவல்லவன் {காக்கவல்லவன்} நீ மட்டுமே. பூமியால் எங்களுக்குக் காரியமேதும் இல்லை; நாங்கள் ஆளவல்லவர்களுமல்ல.(47) நாங்கள் எப்போதும் கல்வி கற்பதிலும், போதிப்பதிலும் ஈடுபடுகிறோம். பூமிபதியே, இந்நோக்கில் நீ எளியவையேதும் எங்களுக்குக் கொடுப்பாயாக.(48) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, மணி, ரத்னம், சுவர்ணம், பசுக்கள் ஆகியவற்றையோ, இருக்கும் வேறு எதையுமோ நீ எங்களுக்குக் கொடுக்கலாம். பூமியால் எங்களுக்குப் பிரயோஜனம் ஏதும் இல்லை" என்றனர்.(49)

நரபதியான அந்த மன்னன், வேதபாரகர்களான பிராமணர்களால் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டதும், பத்து, நூறு, ஆயிரமென {அல்லது பத்து லட்சம்} பசுக்களையும், தசகோடி {பத்து கோடி} சுவர்ணங்களையும், அதனிலும் நான்கு மடங்கு {நாற்பது கோடி} வெள்ளியையும் அவர்களுக்குக் கொடையளித்தான்[14].(50,51அ) அந்த ரித்விஜர்கள் அனைவரும் அந்தச் செல்வத்தை மொத்தமாகத் திரட்டி முனிவர்களான ரிஷ்யசிருங்கரிடமும், வசிஷ்டரிடமும் கொடுத்தனர்.(51ஆ,52அ) இதயத்தில் நிறைவடைந்த துவிஜர்கள் அனைவரும் {ரிஷ்யசிருங்கரிடமும், வசிஷ்டரிடமும் கொடுத்த} அவற்றைத் தங்களுக்குள் நியாயமாகப் பகிர்ந்து கொண்டு, "பெரும் மகிழ்சியடைந்திருக்கிறோம்" என்றனர்.(52ஆ,53அ) பிறகு அந்த வேள்வியைக் காண வந்த பிராமணர்களுக்கு ஒரு கோடி ஜம்பூநதப் பொன் {ஜம்பூ ஆற்றில் கிடைத்த தங்கம்} கொடையளிக்கப்பட்டது.(53ஆ,54அ) அப்போது அந்த ராகவனந்தனன் {ராகவனின் வழித்தோன்றலான தசரதன்}, வேண்டி வந்த ஏழை பிராமணன் ஒருவருக்குத் தன்னுடைய ஹஸ்தாபரணத்தை {கைவளையைக்} கொடையளித்தான்.(54ஆ,55அ)

[14] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இத்தகைய வேள்விகளில் வெள்ளியைக் கொடையளிப்பது தவிர்க்கப்படுகிறது. ஆனால் இங்கே நிலங்களுக்கு மாற்றாகக் கொடுக்கப்படுவதால் இந்தக் கொடை ஏற்கப்படுகிறது" என்றிருக்கிறது.

துவிஜ வத்சலனான {பிராமணர்களின் புரவலனான} அவன், துவிஜர்கள் மகிழ்ச்சியடைந்திருந்தபோது, மகிழ்ச்சிபொங்கும் புலன்களுடனும், கடமையுணர்வுடனும் அவர்களைக் கௌரவித்தான்.(55ஆ, 56அ) பிறகு அந்த வீர மன்னன், தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவர்களை வணங்கினான், அந்தப் பிராமணர்களும் அவனுக்குப் பல்வேறு ஆசிகளைக் கூறினர்[15].(56ஆ,57அ) பாவங்களை அகற்றுவதும், பார்த்திப ரிஷபர்களாலும் {மன்னர்களில் சிறந்தவர்களாலும்} செய்வதற்குக் கடினமானதும், உத்தமமானதுமான அந்த யஜ்ஞம் நிறைவடைந்ததில் ராஜனின் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்தது.(57ஆ,58அ) அப்போது ராஜா தசரதன் ரிஷ்யசிருங்கரிடம், "நல்ல விரதங்களை நோற்பவரே, என் குலவர்தனத்திற்குரிய {என் குலம் பெருகுவதற்குரிய} யஜ்ஞத்தைச் செய்ய நீரே தகுந்தவர்" என்றான்.(58ஆ,59அ)

[15] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த ஆசிகள் வேத மந்திரங்களாகவும், வேத மந்திரங்களின் குறிப்பிட்ட பகுதிகளாகவும் ஆசீர்வசன மந்திரங்கள் என்றழைக்கப்படும் குறிப்பிட்ட நிகழ்வில் உதிர்க்கப்படும். ஒரு பிராமணப் புரோஹிதரை அழைத்து வீட்டுச் சடங்குகளைச் செய்யவைத்து ஆசி பெறும் இந்த நடைமுறை இன்றளவும் தொடர்கிறது. உண்மையில் இஃது அந்தப் பிராமணப் புரோஹிதர்களின் ஆசிகளாக இல்லாமல், வேதங்களின் ஆசியாகவே அமையும்" என்றிருக்கிறது.

"அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன அந்தத் துவிஜ ஸத்தமர் {ரிஷ்யசிருங்கர்}, மீண்டும் அந்த ராஜனிடம், "ராஜா, உமது குலத்தைப் பெருமை கொள்ளச் செய்யும் நான்கு சுதன்கள் {மகன்கள்} உமக்குப் பிறப்பார்கள்" என்றார்.(59ஆ,இ) அவரது மதுரமான வாக்கியத்தைக் கேட்ட மஹாத்மாவான அந்த நிருபேந்திரன் {மன்னர்களின் மன்னனான தசரதன்}, பெருமகிழ்ச்சியடைந்தவனாகி அவரை வணங்கினான். ரிஷ்யசிருங்கர் மீண்டும் அவனிடம் பேசத் தொடங்கினார்.(60)

பாலகாண்டம் சர்க்கம் –14ல் உள்ள சுலோகங்கள்: 60

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை