Hayamedha yajna | Bala-Kanda-Sarga-08 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம் : அஷ்வமேதயாகம் செய்ய முனைந்த தசரதன்; யாகம் செய்வது குறித்து அமைச்சர்களுடன் ஆலோசித்தது...
இத்தகைய திறன்வாய்ந்தவனும், தர்மத்தை அறிந்தவனுமான அந்த மஹாத்மா {தசரதன்}, வம்சத்தை விளங்கச் செய்வதற்கு ஒரு மகனில்லையே என இதயம் எரிந்து கொண்டிருந்தான்.(1) இவ்வாறு சிந்தித்த அந்த மஹாத்மாவின் புத்தியில், "பிள்ளை பெறுவதற்கு நான் ஏன் அஷ்வமேத யாகம் செய்யக்கூடாது" என்று தோன்றியது.(2) புத்திமானும், தர்மாத்மாவுமான அந்த ராஜா {தசரதன்}, நல்லாத்மாக்களான தன் மந்திரிகள் அனைவருடன் ஆலோசித்து, அதைச் செய்வதற்கான தீர்மனத்தை மனத்தில் கொண்டு,(3) "சீக்கிரமாக என் குருக்களையும், புரோஹிதர்கள் அனைவரையும் அழைப்பீராக" எனத் தன் மந்திரிகளில் சிறந்த சுமந்திரனிடம் சொன்னான்[1].(4)
[1] பிபேக்திப்ராயின் பதிப்பில் இதற்குப் பிறகு அடுத்த அத்தியாயத்தில் உள்ள ரிஷ்யசிருங்கர் குறித்த பகுதி தொடர்கிறது.
குற்றமற்ற வேகம் கொண்ட சுமந்திரனும் விரைவாகச் சென்று சமஸ்தானத்தின் வேதபாரகர்கள் அனைவரையும்,(5) ஸுயஜ்ஞர், வாமதேவர், ஜாபாலி, காசியபர் ஆகியோரையும், புரோஹிதர்களையும், வசிஷ்டரையும், உத்தமத்விஜர்கள் அனைவரையும் அழைத்து வந்தான்.(6) தர்மாத்மாவான ராஜா தசரதன் அப்போது அவர்களைப் பூஜித்துத் தர்மத்துடனும், அர்த்தத்துடனும் {மனத்தில் பதிய வைக்கும் வகையில்} இனிமையான சொற்களைப் பேசினான்.(7) {தசரதன்}, "மகன்கள் இல்லாததால் என் மனம் அமைதியின்றிக் கலங்குகிறது. எனவே வேதவழிபாட்டுடன் கூடிய ஹயமேதத்தை {அஷ்வமேதத்தைச்} செய்ய நான் நினைக்கிறேன்.(8) சாஸ்திரங்கள் காட்டும் கர்மங்களுடன் அந்தச் சடங்கைச் செய்ய நினைக்கிறேன். எனவே, என் புத்தியில் தோன்றிய சிந்தனையையும், விருப்பத்தையும் உங்கள் கருத்தில் கொள்வீராக" என்றான்.(9)
அப்போது வசிஷ்டருடன் கூடிய பிராமணர்களும், பிரமுகர்கள் அனைவரும், பார்த்திபன் {தசரதன்} சொன்னதைக் கேட்டு "இந்த வாக்கியம் நல்லது" என்று சொல்லி அவனைப் பூஜித்தனர்.(10) பெரும் மகிழ்ச்சியடைந்த அவர்கள் அனைவரும் தசரதனிடம், "ஸம்பாரங்கள் {வேள்விக்கு வேண்டிய பொருட்கள்} அனுப்பப்படட்டும், உன் குதிரை விடுவிக்கப்படட்டும்.(11) பார்த்திபா {தசரதா}, புத்திரர்களைப் பெறும் இவ்வெண்ணம் தர்மபுத்தியின் மூலம் தோன்றியதால், அனைத்து வகையிலும் நீ விரும்பியபடியே புத்திரர்களைப் பெறுவாய். சரயுவின் வட தீரத்தில் யஜ்ஞ பூமி {வேள்விக்களம்} விதிக்கப்படட்டும்" என்றனர்.(12,13அ)
அந்தத்விஜர்கள் சொன்னதைக் கேட்ட ராஜா மகிழ்ச்சியடைந்தான். கண்களில் மகிழ்ச்சி பொங்க தன் அமைச்சர்களுடன் பேசிய ராஜா, "என் குருக்களுடைய சொற்களின்படி, ஸம்பாரங்களைக் கொண்டு வருவீராக.(13ஆ,14) சரயுவின் வடதீரத்தில் யஜ்ஞபூமியை விதிப்பீராக. இயன்றோரின் {காவலர்களின்} கண்காணிப்பில், நல்ல உபாத்யாயர்கள் {நல்லாசான்கள்} பின்தொடர அஷ்வத்தை {குதிரையை} விடுவிப்பீராக.(15) சாத்திரங்களில் விதிக்கப்பட்டபடியே அமைதி நிலவட்டும். இந்த யஜ்ஞத்தைச் செய்வது கஷ்டமானது. அவ்வாறில்லையெனில் பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரும் இந்தப் பெருஞ்சடங்கைச் செய்திருப்பார்கள்.(16) வித்வாம்சம் பொருந்திய பிரம்மராக்ஷசர்கள், இதில் குற்றங்குறைகளைத் தேடுவார்கள். யஜ்ஞவிதிகளின்படி இது செய்யப்படாவிட்டால் கர்த்தன் {வேள்வி செய்பவன்} அழிவடைவான்.(17) எனவே, நான் செய்யும் இந்தச் சடங்கு விதிப்பூர்வமாகச் சரியான விதத்தில் எவ்வாறு செய்யப்பட வேண்டும், எவ்வாறு நிறைவடைய வேண்டும் என்பதில் சமர்த்தசாதுக்களான நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்றான்.(18)
மந்திரிகள் அனைவரும் பார்த்திபேந்திரனின் {பூமியின் மன்னனான தசரதனின்} வாக்கியத்தைக் கேட்டு, அவனைப் பூஜித்து, "பூர்வத்தில் எவ்வாறு நடந்ததோ அவ்வாறே இது நடக்கும்" என்றனர் {என்று உறுதியளித்தனர்}.(19)
தர்மமறிந்த துவிஜர்கள் அனைவரும் அந்த உத்தமனின் சொற்களைக் கேட்டு அவனுக்கு ஆசி வழங்கி, வந்த வழியே திரும்பிச் சென்றனர்.(20) விப்ரர்களை அனுப்பிய பிறகு, அவன் தன் அமைச்சர்களிடம், "ரித்விக்குகள் அறிவுறுத்தியபடியே இந்தச் சடங்கு முறையாகச் செய்யப்படட்டும்" என்றான்.(21)
மஹாமதியாளனும், மன்னர்களில் புலியுமான அவன் {தசரதன்}, இவ்வாறு கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர்களிடம் பேசிவிட்டு அவர்களுக்கும் விடைகொடுத்தனுப்பிவிட்டு தன் அரண்மனைக்குள் நுழைந்தான்.(22) அப்போது அந்த நரேந்திரன் {மனிதர்களின் மன்னனான தசரதன்}, தன் இதய அன்புக்குரிய பத்தினிகளிடம், "பிள்ளைகள் பெறுவதற்காக நான் இதைச் செய்யப்போகிறேன், நீங்கள் தீக்ஷை கொள்வீராக {நோன்பைத் தொடங்குவீராக}" என்றான்.(23)
{மன்னனிடமிருந்து} மகிழ்ச்சி நிறைந்த சொற்களைக் கேட்டதும், ஏற்கனவே ஒளிபொருந்திய அவர்களின் {தசரதனுடைய மனைவியரின்} தாமரை முகங்கள், பனி விலகிய பிறகு மலரும் தாமரைகளைப் போலப் பேரொளியுடன் விளங்கின.(24)
பாலகாண்டம் சர்க்கம் – 08ல் உள்ள சுலோகங்கள்: 24
Previous | | Sanskrit | | English | | Next |