Rishyasringa | Bala-Kanda-Sarga-09 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம் : ரிஷ்யசிருங்கரை வேள்விக்கு அழைக்க வேண்டுமென தசரதனிடம் சொன்ன சுமந்திரன்...
இவையனைத்தையும் கேள்விப்பட்ட சூதன் {எட்டாவது அமைச்சனான தேரோட்டி சுமந்திரன்}[1], ராஜனிடம் {தசரதனிடம்} ரகசியமாக வந்து, "நான் மொத்த புராணத்தையும் சொல்கிறேன் கேட்பீராக.(1) ராஜா, ரித்விக்குகள் உமக்கு உபதேசித்தார்கள். பகவான் ஸனத்குமாரர், உமக்குப் புத்திரர்கள் பிறப்பதைக் குறித்துப் பூர்வத்தில் சொன்னதை நான் கேட்டேன்.(2,3அ)
[1] இந்தச் சர்க்கத்தின் 20ம் ஸ்லோகத்தில், இவனது பெயர் சுமந்திரன் என்று சொல்லப்படுகிறது. 8ம் சர்க்கத்தின் 3வது சுலோகத்தில் அமைச்சர்களின் பட்டியிலில் எட்டாவதாக வருபவனும், இங்கே சொல்லப்படும் சூதனும் ஒருவர் என்றே மொழிபெயர்ப்பாளர்கள் பலராலும் ஏற்கப்படுகிறது.
அவர் {ஸனத்குமாரர்}, "காசியபருக்கு விபாண்டகன் என்று அறியப்படும் ஒரு புத்திரன் இருக்கிறான், அவனுக்கு ரிஷ்யசிருங்கன்[2] என்ற புகழ்வாய்ந்த மகன் பிறப்பான். அந்த முனிவன் {ரிஷ்யசிருங்கன்} எப்போதும் வனத்தில் வளர்ந்து வரும் வனவாசியாக இருப்பான்.(3ஆ,4) அந்த விப்ரேந்திரன் {பிராமணர்களி தலைவன்/இந்திரன், ரிஷ்யசிருங்கன்}, வேறு ஒருவரையும் அறியாதவனாக எப்போதும் தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்திருந்து இருவகையான பிரம்மசரியத்தைக் கடைப்பிடிப்பான்[3]" என்றார்.(5)
[2] மஹாபாரதம், வனபர்வம் அத்தியாயம் 110 முதல் 113 வரை இந்த ரிஷ்யசிருங்க முனிவரின் கதை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே குறிப்பிடப்படும் த்வைவித்யம் என்பது விரதித்வம், பிரஜாபத்யம் என்ற இருவகைப் பிரம்மசரியத்தைக் குறிப்பிடுகிறது. ஒன்று திருமணம் செய்வதற்கு முன்பு உள்ள நிலையாகும். அடுத்தது திருமணம் செய்த பின்பு முழுநிலவு, புதுநிலவு, கிரஹண காலங்கள் போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டும் மனைவி விட்டுப் பிரிந்திருக்கும் நிலையாகும். இங்கே இந்தச் சொல் தடையேற்படல் என்ற பொருளையும் கொள்கிறது. இருவகைப் பிரம்மச்சரியத்திற்கும் தடை ஏற்படும் நிலை என்று பொருள் தரும்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அம்முனி இவ்வண்ணஞ்செய்து கொண்டிருக்கையில், ப்ரஹ்மசர்யத்திற்குப் பங்கம் வந்து இல்லறத்திற்கு வருவார்" என்றிருக்கிறது. அதே போலவே, ஸ்ரீநிவாஸய்யங்கார் பதிப்பிலும், "அக்னி காரியங்களையே கவனித்துக் கொண்டிருக்கும் அந்த ரிஷிபுத்திரனுடைய பிரஹ்மசரிய விரதத்திற்குச் சிலகாலத்திற்குப் பின் கெடுதி நேரும்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "உலகத்தில் பிரசித்தமான பிரமசரியம் (அதாவது, முஞ்சி, மான்தோல் பலாசங்கொம்பு முதலானவைகளைத் தரித்துக் கொண்டு வேதமோதுதல்) பெண்களோடு சேராமலிருப்பதாகிய பரமசரியமாகி இவ்விரண்டும் அவரிடத்திலுண்டாயிருக்கும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கூட "ரிஷ்யசிருங்கர் இருவகைப் பிரம்மசரியத்தைப் பின்பற்றுவார்" என்றிருக்கிறது.
{தசரத} ராஜாவே, மேலும் அவர் {ஸனத்குமாரர்}, "அவன் {ரிஷ்யசிருங்கன்} விப்ரர்களால் புகழப்பட்டு, உலகப் புகழ் பெற்றிருப்பான், இவ்வாறான ஒழுக்கத்திலேயே காலம் கடக்கும்.(6) அவன் அக்னிக்கும், தன் தந்தைக்கும் தொண்டு செய்து செழிப்பான். அதேவேளையில், அங்க நாட்டின் பிரதாபவானான ராஜா ரோமபாதன் மஹாபலவானாக அங்கே புகழ்பெற்றிருப்பான்.(7,8அ) அந்த ராஜாவின் அறமீறலினால் அங்கே அதிர்ச்சியூட்டும் வகையில் அனைத்து உயிரினங்களுக்கும் அச்சத்தைத் தரும் பஞ்சம் ஏற்படும்.(8ஆ,9அ) {அவ்வாறு} பஞ்சமேற்படும்போது துக்கத்தால் பீடிக்கப்படும் ராஜா {ரோமபாதன்}, சாத்திரங்களை நன்கறிந்தவர்களான பிராமணர்களை அழைத்து அவர்களிடம்,(9ஆ,10அ) "நீங்கள் அனைவரும் சடங்குகளை நன்கறிந்தவர்களாகவும், உலகச் சரித்திரங்களை அறிந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். {இதற்கான} பிராயசித்தத்திற்கு என்ன செய்ய வேண்டும்?" {என்று கேட்பான்}.(10ஆ,11அ)
ராஜன் அவர்களிடம் இவ்வாறு சொன்னதும், பிராமண அறிஞர்களும், பிராமண வேதபாரகர்களும், அந்த மன்னனிடம், "ராஜாவே, விபாண்டகரின் மகனை சர்வ உபாயங்களினால் {அனைத்து வழிமுறைகளினாலும்} இங்கே அழைத்து வருவாயாக.(11ஆ,12) மஹீபாலா {பூமியைக் காப்பவனே / ரோமபாதா}, விபாண்டகரின் மகனான ரிஷ்யசிருங்கரை அழைத்துவந்து, கவனமாக அவரைக் கௌரவித்து, விதிப்படி சாந்தையென்ற {உன்} கன்னிகையை வேதபாரகரான அந்தப் பிராமணருக்கு {மணமுடித்துக்} கொடுப்பாயாக" என்பார்கள்.(13)
அவர்களின் மொழியைக் கேட்கும் ராஜா {ரோமபாதன்}, "அந்த வீரியவானை {புலன்களை வென்றவரான ரிஷ்யசிருங்கரை} இங்கே அழைத்து வருவதற்கான வழிமுறைகளென்ன?" எனச் சிந்திப்பான்.(14) ஆத்மவானான அந்த ராஜா, மந்திரிகளுடன் ஆலோசித்து, புரோஹிதர்களையும், அமைச்சர்களையும் அனுப்புவதாகச் சொல்வான்.(15)
ஆனால் ராஜனின் மொழியைக் கேட்டுப் பீதியடைந்து முகம் கவிழும் அவர்கள், "அந்த ரிஷியிடம் பீதியடைகிறோம், நாங்கள் அங்கே செல்லமாட்டோம்" என்று அவனிடம் கெஞ்சுவார்கள்.(16) பிறகு மீண்டும் சிந்தித்து, ஓர் உபாயத்தைக் கண்டறியும் அவர்கள், "நாங்கள் அந்த விப்ரரை அழைத்து வருகிறோம். எந்தத் தோஷமும் நேராது" என்பார்கள்.(17)
இவ்வாறு அந்த அங்காதிபனாலும் {அங்க நாட்டு மன்னன் ரோமபாதனாலும்}, கணிகையராலும் அந்த ரிஷிமகன் அழைத்துவரப்படுவான். தேவர்கள் மழையைப் பொழிவார்கள், சாந்தையும் அவனுக்கு {ரிஷ்யசிருங்கனுக்குக்} கொடுக்கப்படுவாள்" என்றார் {ஸனத்குமாரர்}.(18)
{ரோமபாதனின்} மருமகனான[4] அந்த ரிஷ்யசிருங்கரே, உமக்குப் புத்திரர்களை அருள்வார். என்னால் சொல்லப்படும் இவையாவும் ஸனத்குமாரர் சொன்னவையாகும்" என்றான் {சூதன் / சுமந்திரன்}.(19)
[4] தாதாசாரியர் பதிப்பில் உள்ள அடிக்குறிப்பில், "சாந்தை என்பவள் தசரதருக்கு மகள். அவளை ரோமபாதர் தத்துவாங்கிக் கொண்டார். அதனாலே தான் கலைக்கோட்டு முனியை {ரிஷ்யசிருங்கரை} உமக்கும் மருமகன் என்றது" என்றிருக்கிறது. முன் ஸ்லோகம் அங்காதிபனைக் குறிப்பதால். சாந்தை ரோமபாதனின் மகள் என்றே ஆங்கில மொழிபெயர்ப்புகள் கொள்கின்றன. இனி வரப்போகும் 11ம் சர்க்கம் 3ம் ஸ்லோகத்திலும் இத்தகைய குழப்பம் நேர்கிறது.
இதனால் மகிழ்ச்சியடைந்த தசரதன், மீண்டும் சுமந்திரனிடம், "ரிஷியசிருங்கர் எவ்வாறு {அந்த அங்கநாட்டுக்கு} அழைத்துவரப்பட்டார் என்பதை விரிவாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(20)
பாலகாண்டம் சர்க்கம் – 09ல் உள்ள சுலோகங்கள்: 20
Previous | | Sanskrit | | English | | Next |