Tuesday, 3 August 2021

வசிஷ்டரின் ஏற்பாடுகள் | பால காண்டம் சர்க்கம் - 13 (41)

Vashista's arrangements | Bala-Kanda-Sarga-13 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம் : யஜ்ஞ மண்டபத்திற்குண்டானவற்றைச் சேகரிப்பதில் கலைஞர்களை ஈடுபடுத்திய வசிஷ்டர்; வேற்று நாட்டு மன்னர்களை அழைக்குமாறு சுமந்திரனைக் கேட்டுக் கொண்ட வசிஷ்டர்...

Vashista and Dasharatha

முழுவதுமாக ஒரு வருடம் முடிந்து வசந்த காலம் மீண்டும் தோன்றியபோது[1], அந்த வீரியவான் {தசரதன்}, ஹயமேத வேள்வியைச் செய்யும் தீர்மானத்துடன் {சடங்கு நடைபெறும்} மண்டபத்திற்குச் சென்றான்.(1) துவிஜோத்தமரான {இருபிறப்பாளர்களில் சிறந்த} வசிஷ்டரை வணங்கி, நியாயப்படி பிரதி பூஜை செய்யப்பட்டுப் பிரசவார்த்தத்தை முன்னிட்டு மிகப் பணிவான சொற்களில்,(2) "முனிபுங்கவரே, பிராமணரே {வசிஷ்டரிடம்}, என்னுடைய யஜ்ஞம் சொல்லப்பட்டது போலவே துணைச் சடங்குகளுடனும், இடையில் விக்னம் {தடை} ஏற்படாதவாறும் விதிப்பூர்வமாகச் செய்யப்படட்டும்.(3) பரம மஹானும், குருவுமான நீர், என்னிடம் நட்பும், இதயத்தில் அன்பும் கொண்டவராக இருக்கிறீர். யஜ்ஞம் செய்யும் பாரத்தை உம்மால் மட்டுமே சுமக்க முடியும்" என்றான் {தசரதன்}.(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இத்தகைய வேதச் சடங்குகளைச் செய்யும்போது ஒருவருட காலம் ஆயத்த சடங்குகளைச் செய்ய வேண்டும். இங்கே தசரதன், முந்தைய சர்க்கத்தில் சொல்லப்பட்ட வசந்தகாலம் முடிந்து, அடுத்த வசந்தம் வரும் வரை அத்தகைய முன்னோட்டங்களைச் செய்து வேள்வி மண்டபத்திற்குள் நுழைவதாகச் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "யாதொரு வஸந்தருதுவில் ருச்யச்ருங்கர் முதலிய ருத்விக்குகளைத் தசரதமன்னவன் வரித்தான், அதுமுதலாக யாகஸம்பாரங்களைச் சேர்ப்பது யாகப் பூமி யேற்றப்படுவது, சாந்திகர்மத்தை முன்னிட்டுக் கொண்டு யாகக் குதிரையைப் பூமிவலஞ்செய்யவிட்டு அத்துடன் கூடவே ஸமார்த்தர்களாகிய ராஜபுத்ரர் முதலியவர்களால் சூழப்பட்டு, உத்காதா அத்வர்யு ஹோதா ப்ரஹ்மா ஆகிய இவர்கள் முதலிய வ்யாபாரங்களைச் செய்ய ஓராண்டு நிரம்பி மீளவும் வஸந்தருது வந்ததென்று கருத்து" என்றிருக்கிறது.

துவிஜஸத்தமரான அவர், அந்த ராஜனிடம் {தசரதனிடம்}, "நீ எவற்றை வேண்டினாயோ அவை அனைத்தையும் முறைப்படியே நான் செய்விப்பேன்" என்றார்.(5)

அதன்பிறகு அவர் {வசிஷ்டர்}, முதிர்ந்த துவிஜர்கள், யஜ்ஞ கர்மங்களைச் செய்வதில் வல்லவர்கள், பரம தார்மீகப் பெரியோர், ஸ்தாபிப்பதில் வல்லவர்கள்,{6} கர்மங்களைக் கண்காணிப்பவர்கள், சில்பக்காரர்கள் {கட்டுமானக் கலைஞர்கள்}, தச்சர்கள், கிணறு தோண்டுபவர்கள் {பணிக்கர்கள்}, கணக்கர்கள், சிற்பிகள், நட நர்த்தகர்கள் {நடிகர்கள், ஆடற்கலைஞர்கள்},{7} குற்றங்குறையில்லாமல் சாஸ்திரவிதிப்படி செயல்படும் அறிஞர்கள், நற்கேள்வி கொண்டவர்கள் ஆகியோரிடம், "ராஜ சாஸனத்தின்படி {அரசகட்டளையின்படி} யஜ்ஞகர்மங்களை நீங்கள் செய்வீராக.{8} பல்லாயிரம் செங்கற்களைச் சீக்கிரம் திரட்டி, ராஜர்களுக்கானவையும், பலவிதகுணங்களில் மேலானவையுமான ராஜகிருஹங்களைக் கட்டுவீராக.{9}(6-9) மிகச்சிறந்தவையும், பல வகைப் பக்ஷ்யங்கள், அன்னங்கள், பானங்கள் ஆகியவற்றுடன் நன்கு நிறுவப்பட்ட பிராமணவாசஸ்தலங்களை நூற்றுக்கணக்கில் கட்டுவீராக.(10) நகரவாசிகளுக்கும் மிக விஸ்தாரமான வசிப்பிடங்களையும், வெகு தொலைவில் இருந்து வரவிருக்கும் பார்த்திபர்களுக்கும் {மன்னர்களுக்கும்} தனித்தனி வசிப்பிடங்களையும் அமைப்பீராக.(11) குதிரைகளும், யானைகளும் இளைப்பாறுவதற்கான சாலைகளையும் {வாஜிவாரணசாலைகளையும்}, படைவீரர்களுக்கான மஹாவசிப்பிடங்களையும், விதேசிகளுக்கான வசிப்பிடங்களையும் அமைப்பீராக.(12) இந்த வாசஸ்தலங்கள் அனைத்திலும் பல பக்ஷ்யங்களும், அனைத்துப் பொருட்களும் இருக்க வேண்டும். நகரவாசிகளுக்கும், பிறமக்களுக்கும் மிக நல்ல உணவு படைக்கப்பட வேண்டும்.(13) விளையாட்டாக அல்லாமல் {பரிஹாசமின்றி} அனைவரையும் நன்றாக மதித்து விதிப்படி அன்னம் {கடமையுணர்வுடன் உணவு} கொடுக்கப்படவேண்டும். அனைத்து வர்ணத்தாரும் முறையாகப் பூஜிக்கப்பட்டு நன்கு மதிக்கப்பட வேண்டும். காமக்ரோதத்தின் வசப்பட்டு எவரையும் அவமதித்து விடக்கூடாது.(14,15அ) சிற்பிகளைப் போன்ற புருஷர்கள், யஜ்ஞ கர்மத்தில் ஈடுபடுபவர்கள் ஆகியோரை விசேஷமாகப் பூஜித்து, அவர்களுக்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொடுத்து, வேண்டிய பொருளும், போஜனமும் {உணவும்} கொடுத்து மதிப்புடன் நடத்துவீராக.(15ஆ,16) சிறு காரியத்தையும் புறக்கணித்துவிடாமல் நன்கு திட்டமிடப்பட்டு, விருப்பத்துடன் இவையாவும் உங்கள் அனைவராலும் செய்யப்பட வேண்டும்" என்றார் {வசிஷ்டர்}.(17)

அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து வசிஷ்டரிடம், "விரும்பியபடியே அனைத்தும் நன்கு திட்டமிடப்படும். சிறு காரியத்தையும் புறக்கணித்துவிடாமல், சிறு குறையும் நேர்ந்துவிடாமல் சொன்னதனைத்தையும் நாங்கள் செய்வோம்" என்றனர்.(18,19அ)

பிறகு சுமந்திரனை அழைத்த வசிஷ்டர் அவனிடம், "பிருத்வியில் தார்மீகர்களாக இருக்கும் நிருபதிகள் {மனிதர்களின் மன்னர்கள்} அழைக்கப்பட வேண்டும். அனைத்து தேசங்களிலும் உள்ள மானுடர்களும், ஆயிரக்கணக்கான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களும் முறையாகக் கௌரவிக்கப்பட்டு இங்கே அழைக்கப்பட வேண்டும்.(19ஆ,20,21அ) மிதிலாபதியும், சூரனும், சத்தியவாதியும், பெருமதிப்புக்குரியவனுமான ஜனகன், {தசரதனின்} நீண்ட கால நண்பன் என்பதை மனத்தில் கொண்டு நீயே {நேரில் சென்று} அவனை அழைக்க வேண்டுமென முதலிலேயே சொல்கிறேன்.(21ஆ,22) அதே போல, நண்பனும், எப்போதும் அன்புடன் கூடியவனும், விரும்பத்தக்கவனும், நன்னடத்தைக் கொண்டவனுமான காசீபதியையும் நீயே நேரடியாக அழைக்க வேண்டும்.(23) அதே போல, வயதில் மூத்தவனும், பரமதார்மீகனும், ராஜசிம்மத்தின் {சிங்கம் போன்ற தசரத ராஜனின்} மாமனாருமான கேகயராஜனையும், அவனது புதல்வர்களையும் இங்கே அழைப்பாயாக.(24) அங்கேஷ்வரனும், பெரும் வில்லைப் பயன்படுத்துபவனும், ராஜசிம்மத்தின் நண்பனும் சிறப்புமிக்கவனுமான ரோமபாதனை நன்கு கௌரவித்து அழைப்பாயாக.(25) கோசலராஜனான பானுமந்தனையும், சூரனும், சாத்திரங்கள் அனைத்திலும் நிபுணனுமான மகதாதிபதியும்,(26) இதயத்தில் அன்பு கொண்டவனும், புருஷரிஷபனுமான {மனிதர்களில் காளையுமான} பிராப்திஜ்ஞனையும் நன்கு கௌரவித்து அழைப்பாயாக. மேலும் ராஜசாஸனத்தினால் தூண்டப்பட்டுக் கிழக்குப் பகுதிகளின் மன்னர்களையும், மன்னர்களிற் சிறந்த சிந்து, சௌவீர, சௌராஷ்டிரம் ஆகியவற்றின் பார்த்திபர்களையும் அழைப்பாயாக[2].(27) தாக்ஷிண நாடுகளைச் சேர்ந்த நரேந்திரர்கள் {தென்னாடுகளைச் சேர்ந்த மன்னர்கள்} அனைவரும் அழைக்கப்பட வேண்டும். மேலும் {மன்னனின்} நண்பர்களும், பிருத்வியிலுள்ள மற்ற மன்னர்களும், அவர்களது தொண்டர்களும், உறவினர்களும் நமது மன்னனின் ஆணையின் பேரில் மிகச் சிறந்த தூதர்கள் மூலம் மிக விரைவாக அழைக்கப்பட வேண்டும்[3]" என்றார் {வசிஷ்டர்}.(28,29)

[2] நரசிம்மாசாரியர், தாதாசாரியர், அண்ணங்கராசாரியர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் 26, 27 ஸ்லோகங்களில் உள்ள செய்தி முற்றிலுமாக இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில், "மனிதர்களிற்சிறந்தவனும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் நன்கறிந்தவனுமான மகதத்தின் தலைவனையும் அழைப்பாயாக" என்றிருக்கிறது. கோசல மன்னன் பானுமந்தன் என்ற பெயர் வேறு பதிப்புகளில் இல்லை.

[3] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "அன்றியும் வங்கம், கலிங்கம் முதலிய கீழ்நாட்டரசர்களையும், ஸிந்து ஸௌவீரம் முதலிய மேனாட்டரசர்களையும், சோளம் பாண்டியம் முதலிய தென்னாட்டரசர்களையும், குரு பாஞ்சாலம் முதலிய வடநாட்டரசர்களையும் தக்க தூதர்களைக் கொண்டு அழைப்பிக்க வேண்டும்" என்றிருக்கிறது. தாதாசாரியர், அண்ணங்கராசாரியர் பதிப்புகளிலும் இவ்வாறே இருக்கிறது. பிபேக்திப்ராய், மன்மதநாததத்தர் பதிப்புகளில் மேற்கண்ட 28, 29 ஸ்லோகங்களில் தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் மூலப் பதப்பிரிப்பில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.

வசிஷ்டரின் சொற்களைக் கேட்ட சுமந்திரன், ராஜர்களை வரவழைக்கத் துரிதமான தூதர்களை அனுப்பி வைத்தான்.(30) தர்மாத்மாவான சுமந்திரன் முனிசாசனத்தின் பேரில் சுறுசுறுப்பாகி பூமியின் ஆட்சியாளர்களை {சிலரை} அழைத்து வர தானே பிரயாணம் செய்தான்.(31) யஜ்ஞத்தின் உபகல்பிதங்களையும் கர்மங்களையும் செய்வோர் அனைவரும் நடந்தவை அனைத்தையும் வசிஷ்ட மஹரிஷியிடம் சொன்னார்கள்.(32) இவற்றால் நிறைவடைந்தவரும், துவிஜசிரேஷ்டருமான அந்த முனிவர் {வசிஷ்டர்}, அவர்கள் அனைவரிடமும், "எதுவும் எவருக்கும் அவமதிப்பின்றிக் கொடுக்கப்பட வேண்டும், விளையாட்டுத்தனத்துடன் {பரிஹாசத்துடன்} செயல்படக்கூடாது. அவமதித்துச் செய்யப்படும் செயல்கள் அதைச் செய்பவனை நிச்சயம் கொல்லும். இதில் ஐயமேதுமில்லை" என்றார்.(33,34அ)

பிறகு பூமியின் தலைவர்கள் பலரும் தசரத ராஜனுக்காக விலைமதிப்புமிக்க ரத்தினங்கள் பலவற்றை எடுத்துக் கொண்டு சில பகலிரவுகளில் வந்து சேர்ந்தனர்.(34ஆ,35அ) அப்போது வசிஷ்டர் நிறைவடைந்தவராக ராஜனிடம், "நரவியாகரா {மனிதர்களில் புலியே}, உன் சாஸனத்தின்படி ராஜர்கள் வந்து சேர்ந்தனர். அந்தச் சிறந்த ராஜர்கள் அவரவர் நிலைக்குத் தகுந்தபடி என்னால் கௌரவிக்கப்பட்டனர்.(35ஆ,36) புருஷர்கள் ஒன்றுகூடி யஜ்ஞப் பணிகள் அனைத்தையும் நிறைவடையச் செய்துள்ளனர், இனி நீ சடங்குகளைச் செய்ய யஜ்ஞ மண்டபத்திற்குச் செல்வாயாக.(37) ராஜேந்திரா, விரும்பிய அனைத்தும் திரட்டப்பட்டு உன் மனத்தில் விரும்பியவாறு கட்டப்பட்ட வேள்வி மண்டபத்தில் எங்கும் நிறைந்திருக்கின்றன" என்றார்.(38)

வசிஷ்டர், ரிஷ்யசிருங்கர் ஆகியோரின் சொற்களின்படியே அந்த ஜகாதிபனும் {தசரதனும்} நல்ல நட்சத்திரம் அமைந்த நன்னாளில் முன்வந்தான்.(39) வசிஷ்டர், பிற பிரமுகர்கள், துவிஜோத்தமர்கள் ஆகியோர் அனைவரும் ரிஷ்யசிருங்கரை முன்னிட்டுக் கொண்டு யஜ்ஞ கர்மங்களை ஆரம்பித்தனர்.(40) அனைவரும் சாத்திர விதிகளின் படி யஜ்ஞ மண்டபத்திற்குச் சென்றபோது ஸ்ரீமானான ராஜா {தசரதன்} தன் பத்தினிகளுடன் தீக்ஷையை {தொடக்கச் சடங்கை} மேற்கொண்டான்.(41) 


பாலகாண்டம் சர்க்கம் –13ல் உள்ள சுலோகங்கள்: 41

Previous | Sanskrit | English | Next

Labels

அக்னி அம்சுமான் அம்பரீசன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இலக்ஷ்மணன் உமை கங்கை கசியபர் கபிலர் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதாமன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூளி தசரதன் தாடகை திதி திரிசங்கு திரிஜடர் திலீபன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஸு வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விஷ்ணு விஷ்வாமித்ரர் ஜனகன் ஜஹ்னு ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்