Preparing for Yajna | Bala-Kanda-Sarga-12 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: முனிவர்களை யாகம் செய்யத் தூண்டிய தசரதன்; ஸம்பாரங்களைத் திரட்ட அமைச்சர்களைத் தூண்டியது...
சில காலம் கழிந்த பிறகு, ஒரு வசந்த காலத் தொடக்கத்தில் ராஜன் {தசரதன்} யஜ்ஞம் செய்ய மனத்தில் விரும்பினான்.(1) அப்போது தேவனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த விப்ரரிடம் {ரிஷ்யசிருங்கரிடம்} சென்று தலைவணங்கி குலசந்தானத்திற்கான யஜ்ஞம் செய்ய அவரை வேண்டினான்.(2) ராஜனால் இவ்வாறு நன்கு கௌரவிக்கப்பட்ட அவரும் அவனிடம், "சம்பாரங்களைத் திரட்டி உமது வேள்விக் குதிரையை விடுவிப்பீராக. சரயுவின் வடதீரத்தில் யஜ்ஞ பூமி விதிக்கப்படட்டும்" என்றார்.(3,4அ)
அப்போது அந்த மன்னன், மந்திரிகளிற்சிறந்த சுமந்திரனிடம், இந்தச் சொற்களில், "ஸுயஜ்ஞர், வாமதேவர், ஜாபாலி, காசியபர் உள்ளிட்ட பிரம்மவாதிகள், ரித்விஜர்கள், புரோஹிதர் வசிஷ்டர் ஆகியோரையும், இன்னும் உள்ள துவிஜஸத்தர்களையும் {பிராமணர்களையும்} விரைந்து அழைப்பீராக" என்றான்.(4ஆ,5,6அ)
துரிதமாகச் செயல்படும் சுமந்திரனும், விரைந்து சென்று சமஸ்தானத்தின் வேதபாரகர்கள் அனைவரையும் அழைத்து வந்தான். தர்மாத்மாவான தசரத ராஜன் அவர்கள் அனைவரையும் பூஜித்து, {மனத்திற்பதியும் வண்ணம்} அறம், பொருளுடன் கூடிய {பின்வரும்} மென்மையான வசனத்தைச் சொன்னான்.(6ஆ,7,8அ) "புத்திரர்கள் இல்லாததால் என் மனம் அமைதியின்றிக் கலங்குகிறது. எனவே வேதவழிபாட்டுடன் கூடிய ஹயமேதத்தை {அஷ்வமேதத்தைச்} செய்ய நான் நினைக்கிறேன். சாஸ்திரங்கள் காட்டும் கர்மங்களுடன் அந்தச் சடங்கைச் செய்ய விரும்புகிறேன். ரிஷிபுத்திரரின் {ரிஷ்யசிருங்கரின்} பிரபாவத்தால் {மகிமையால்} என் விருப்பம் நிறைவேற இச்சிக்கிறேன்" {என்றான் தசரதன்}.(8ஆ,9,10அ)
அந்தப் பிராமணர்களும், "இந்த வாக்கியம் நன்று" என்று சொல்லி மன்னனுக்குப் பிரதிபூஜை செய்தனர். வசிஷ்டரும், பிரமுகர்கள் அனைவரும் பார்த்திபனின் {பார்/உலகின் அதிபன் தசரதனின்} முகத்தில் இருந்து வெளிவந்த சொற்களை மெச்சி, ரிஷ்யசிருங்கரை முன்னிட்டுக் கொண்டு நிருபதியிடம் {நரபதி/ நர அதிபதி/ மனிதர்களின் மன்னனுக்குப்} பதிலளிக்குவகையில்,(10ஆ,11) "தார்மீக புத்தியால் இவ்வகையில் புத்திரர்களைப் பெற விரும்பும் உனக்கு அனைத்து வகையிலும் அளவற்ற வீரம் கொண்ட நான்கு புத்திரர்கள் பிறப்பார்கள். ஸம்பாரங்கள் திரட்டப்படட்டும், உன் வேள்விக் குதிரை விடுவிக்கப்படட்டும். சரயுவின் வட தீரத்தில் யஜ்ஞபூமி விதிக்கப்படட்டும்" என்றனர்.(12,13)
அப்போது ராஜன் அந்தத் துவிஜர்கள் சொன்னதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தான். பிறகு அந்த ராஜன் அந்த நற்சொற்களால் மகிழ்ச்சியடைந்தவனாகத் தன் அமாத்யர்களிடம் {அமைச்சர்களிடம் பின்வருமாறு} பேசினான்.(14) "குருக்களின் வசனத்தால் சீக்கிரமாக சம்பாரங்கள் திரட்டப்படட்டும். ஸமர்தாதிஷ்டர்களுடனும் {பாதுகாப்பை வழங்கும் துணிச்சல்மிக்கவர்களுடனும்}, நல்ல உபாத்யாயர்களுடனும் அஷ்வம் {குதிரை} விடுவிக்கப்படட்டும்.{15} சரயுவின் வடதீரத்தில் யஜ்ஞபூமி விதிக்கப்படட்டும். மரபின்படியும், சாத்திரங்களில் விதிக்கப்பட்ட படியும் சாந்தி நிலவட்டும்.{16} இந்த யஜ்ஞத்தைச் செய்வது கஷ்டமானது. இந்தப் பெருஞ்சடங்கு அபராதமின்றிச் செய்யக்கூடியதெனில் பூமியின் மன்னர்கள் அனைவரும் செய்திருப்பார்கள்.{17} வித்வாம்சம் பொருந்திய பிரம்மராக்ஷசர்கள், இதில் குற்றங்குறைகளைத் தேடுவார்கள். யஜ்ஞவிதிகளின்படி இது செய்யப்படாவிட்டால் கர்த்தன் {வேள்வி செய்பவன்} அழிவடைவான்.{18} எனவே, விதிப்பூர்வமாக இந்தச் சடங்கு நிறைவடையும் வகையில் சமர்த்தர்கள் இக்காரியத்தைச் செய்ய வேண்டும்" என்றான்.{19}(15-19)
மந்திரிகள், "அவ்வாறே ஆகட்டும்" என்று பார்த்திபேந்திரனிடம் {தசரதனிடம்} சொல்லி அவனுக்குப் பிரதிபூஜை செய்துவிட்டு {மன்னனால்} ஆணையிடப்பட்டவாறே அனைத்தையும் செய்தனர்.(20)
அப்போது துவிஜர்கள் அனைவரும், தர்மம் அறிந்த அந்தப் பார்த்திபரிஷபத்தின் {தசரதனின்} அனுமதியின் பேரில், தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(21) முக்கியத் துவிஜர்கள் சென்ற பிறகு பேரொளி படைத்தவனான அந்த நராதிபன் {தசரதன்}, மந்திரிகளுக்கும் விடைகொடுத்து அனுப்பிவிட்டு, தன் வசிப்பிடத்திற்குள் பிரவேசித்தான்[1].(22)
[1] இந்த 12வது சர்க்கம் கிட்டத்தட்ட 8ம் சர்க்கத்தில் உள்ள அனைத்தையும் திரும்பச் சொல்வதாகவே அமைந்திருக்கிறது.
பாலகாண்டம் சர்க்கம் –12ல் உள்ள சுலோகங்கள்: 22
Previous | | Sanskrit | | English | | Next |