Tuesday 23 July 2024

இராவணன், இந்திரஜித் சாகசங்கள் | யுத்த காண்டம் சர்க்கம் - 007 (25)

Feats of Ravana and Indrajith | Yuddha-Kanda-Sarga-007 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்கள் அனைவரும், ராவணனின் வலிமையைப் புகழ்ந்து அவனுக்கு நம்பிக்கை ஊட்டி, வானரர்களின் படையை அழிப்பதற்கும், ராமனைக் கொல்வதற்கும் இந்திரஜித் ஒருவனே போதுமானவன் என்றது...

Rakshasas praising Ravana

இராக்ஷசேந்திரன் {ராவணன்} இவ்வாறு சொன்னதும், மஹாபலவான்களான ராக்ஷசர்கள் அனைவரும், ராக்ஷசேஷ்வரனான ராவணனிடம் கைக்கூப்பியபடியே பேசினார்கள்.{1} நீதிக்குப் புறம்பானவர்களும், புத்தியில்லாதவர்களும், பகைவரின் தரப்பை அறியாதவர்களுமான அவர்கள்,(1,2அ) "இராஜரே, பரிகங்கள் {இரும்பு முள் பதித்த கதாயுதங்கள்}, சக்திகள் {வேல்கள்}, ரிஷ்டிகள் {கத்திகள்}, சூலங்கள், பட்டசங்கள் {குறுக்குக் கத்திகள்} நிறைந்த நம் பலம் {படை} மகத்தானது. நீர் ஏன் வருந்துகிறீர்?(2ஆ,3அ) போகவதியை {பாதாளத்திலுள்ள போகவதி நகரை} அடைந்து பன்னகர்களுடனான யுத்தத்தில் நீர் வென்றீர்.{3ஆ} கைலாச சிகரவாசியும், யக்ஷர்கள் பலரால் சூழப்பட்டவனுமான தனதன் {குபேரன்}, மஹத்தான போரைச் செய்த உமக்கு வசப்பட்டான்.(3ஆ,4) விபுவே {தலைவரே}, மஹேஷ்வரனிடம் {சிவனிடம்} கொண்ட நட்பினால், லோகபாலன் என்றும், மஹாபலவான் என்றும் செருக்கிலிருந்த அவன் {குபேரன்}, உம்மால் போரில் வீழ்த்தபட்டான்.(5) யக்ஷர்களைக் கூட்டங்கூட்டமாகக் கொன்றும், நடுங்கச் செய்தும், சிறையில் வைத்தும், கைலாச சிகரத்தில் இருந்து இந்த {புஷ்பக} விமானத்தை நீர் அபகரித்தீர்.(6) 

Ravanas lineage

இராக்ஷசபுங்கவரே, தானவேந்திரனான மயன், உம் மீது கொண்ட பயத்தால் நட்பை விரும்பி உமக்குப் பாரியையாக {மனைவியாகத்} தன் மகளை {மண்டோதரியைக்} கொடுத்தான்.(7) வெல்வதற்கரியவனும், வீரியத்தில் செருக்குற்றவனும், கும்பீநசிக்கு[1] சுகத்தை விளைவிப்பவனும், மது என்று அழைக்கப்படுபவனுமான தானவேந்திரனுடன் போரிட்டு உமது வசப்படுத்தினீர்.(8) மஹாபாஹுவே, ரசாதலத்திற்குச் சென்று நாகர்களான வாசுகி, தக்ஷகன், சங்கன், ஜடீ ஆகியோரை வீழ்த்தி உமது வசப்படுத்தினீர்.(9) விபுவே {தலைவரே}, வரம்பெற்ற அக்ஷய பலவந்தர்களும் {அழிவற்ற வலிமைமிக்கவர்களும்},  சூரர்களுமான தானவர்கள், ஒரு வருடம் யுத்தம் செய்து, மீண்டும் உம்முடன் போரிட்டனர்.{10} இராக்ஷசாதிபரே, அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, உமது பலத்தைக் கொண்டு, அங்கே பலரை அடக்கி வசப்படுத்திப் பல்வேறு மாயைகளைக் கற்றுக் கொண்டீர்[2].(10,11) மஹாபாக்கியவானே, சூரர்களும், பலவந்தர்களும், சதுர்வித பலங்களால் {நால்வகைப் படைகளால்} பின்தொடரப்பட்டவர்களுமான வருணனின் மகன்களையும் போரில் நீர் வீழ்த்தினீர்.(12)

[1] கும்பீநஸ், கும்பீநஸி, கும்பீநஸை என்று வெவ்வேறு பதிப்புகளில் அழைக்கப்படுகிறாள். விஷ்ரவஸுக்கும், புஷ்போதகைக்கும் பிறந்த இவள் ராவணனின் தங்கையாவாள். மதுவனத்தின் தலைவன் மது அசுரன், இவளைக் கவர்ந்து சென்று திருமணம் செய்து கொண்டான். இந்த மதுவுக்கும், கும்பீநசிக்கும் பிறந்தவனே லவணாசுரனாவான். இந்த மதுவின் மதுவனமே பிற்காலத்தில் லக்ஷ்மணனால் அழிக்கப்பட்டு, மதுரா நகரம் ஆனது. கிஷ்கிந்தா காண்டம் 58ம் சர்க்கம் 25ம் சுலோகத்திற்கு அடியில் 4ம் அடிக்குறிப்பாக தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில் கண்ட அடிக்குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, "பிரம்மனின் மானஸபுத்திரர்களில் ஒருவர் புலஸ்தியராவார். அவர், தமது மனைவியான ஹவிர்புக்கிடம் அகஸ்தியர், விஷ்வஸ்ரஸ் {விஷ்ரவஸ்} என்ற மகன்களைப் பெறுகிறார். இந்த விஷ்வரஸுக்கு நான்கு மனைவியர் இருந்தனர். அவரது முதல் (1) மனைவி இளபிதை {இளவிதை / இடபிடை / ஸ்வேதாதேவி} ஆவாள். அவளிடமே விஷ்வஸ்ரஸ் குபேரனை மகனாகப் பெறுகிறான். இரண்டாம் (2) மனைவியானவள், (ராவணனின் தாய்வழிப் பாட்டன்; அரக்கர் குலத்தலைவன் சுமாலி) சுமாலியின் மகள் கைகசி {கைகேசி} ஆவாள். இந்தக் கைகசி;- ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற மூன்று மகன்களைப் பெற்றாள். விஷ்ரவஸின் மூன்றாம் (3) மனைவி, கைகசியின் தங்கையான இந்தப் புஷ்போதகையாவாள். இவளே இனி நாம் சந்திக்கப் போகும் மஹோதரன், பார்ஷ்வாதன் ஆகியோரையும் இந்த கும்பீநசியையும், இன்னும் பிறரையும் பெற்றாள். விஷ்ரவஸின் நான்காம் (4) மனைவி, கைகசியின் மற்றொரு தங்கையான ராகை ஆவாள். அவளே சூர்ப்பணகையைப் பெற்றவளாவாள். கரன், தூஷணன் ஆகியோரும் அவளுக்கு {ராகைக்குப்} பிறந்தவர்களே".

[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "ப்ரபூ, சத்ருக்களை அழிப்பவனே, காலகேயர்கள், சூர்ணஞ்செய்யினும் மீளவும் பிழைத்தெழுவார்களாகையால் நாசமடையாதவர்கள்; மிகுந்த பலமுடையவர்கள்; மஹாசூரர்கள்; ப்ரஹ்மாவினிடம் வரம் பெற்றவர்கள். அப்படிப்பட்ட அத்தானவர்கள் உன்னோடு ஒரு ஸம்வத்ஸரம் யுத்தஞ்செய்து கடைசியில் உனக்கு ஸ்வாதீனப்பட்டனர். ரக்ஷஸாதிபதீ, மேலும், அவரிடத்தில் நீ பலவகை மாயைகளையுங்கூடத் தெரிந்து கொண்டனை. (நீ ரோஷமுற்று யுத்தத்தில் மஹாபலிஷ்டர்களான திக்பாலர்களையும் ஜயித்தனை. இங்கிருந்து தேவலோகத்திற்குச் சென்று இந்த்ரனையுங்கூட ஜயித்தனை)" என்றிருக்கிறது.

மிருத்யுதண்டத்தையே {யமதண்டத்தையே} பெரிய முதலையாகவும், சால்மலியையே {முள்நிறைந்த மரம் போன்ற வடிவங்கொண்ட சால்மலி எனும் ஆயுதங்களையே} சூழ்ந்திருக்கும் மரங்களாகவும், காலபாசத்தையே {யமனின் பாசக்கயிற்றையே} பேரலையாகவும், யமகிங்கரர்களையே பன்னகங்களாகவும் {பாம்புகளாகவும்} கொண்டதும்,{13} மஹாஜ்வரத்தால் {பெரும்பிணியால்} வெல்வதற்கரியதுமான யமலோக மஹார்ணவத்தில் நீர் புகுந்தீர். இராஜரே,  யமனின் பலசாகரத்தை {படையெனும் கடலைக்} கடைந்து,{14} மிகப்பெரும் வெற்றியை அடைந்து, மிருத்யுவை {யமனை யமலோகத்தில் இருந்து} விரட்டிவிட்டீர். அங்கே நடந்த உமது நல்யுத்தத்தால் சர்வலோகங்களும் நிறைவடைந்தன.(13-15) சக்ரனுக்குத் துல்லியமான {இந்திரனுக்கு நிகரான} பராக்கிரமம் கொண்டவர்களும், வீரர்களுமான ஏராளமான க்ஷத்திரியர்கள் வசுமதியில் {பூமியில்} பெரும் மரங்களைப் போல் நிறைந்திருந்தனர்.(16) இராஜரே, போரில் வீரியத்திலும், குணத்திலும், உற்சாகத்திலும் ராகவன் {ராமன்} அவர்களுக்கு சமமாக மாட்டான். போரில் வெல்வதற்கரியவர்களான அவர்களையே நீர் வலிமையினால் கொன்றிருக்கிறீர்.(17)

மஹாராஜாவே, நீர் ஏன் சிரமப்படுகிறீர்? இங்கேயே இருப்பீராக. மஹாபாஹுவான இந்த இந்திரஜித் ஒருவனே வானரர்களை அழித்துவிடுவான்.(18) மஹாராஜாவே, உத்தம மஹேஷ்வர யஜ்ஞம் {சிவனுக்குரிய சிறந்த வேள்வியைச்} செய்ததால், உலகில் கிடைப்பதற்கரிய பரம வரத்தை இவன் {இந்திரஜித்} கிடைக்கப்பெற்றவனாக இருக்கிறான்.(19) சக்திகள், தோமரங்கள் எனும் மீனங்களையும் {மீன்களையும்}, சிதறிக் கிடக்கும் நரம்புகள் எனும் பாசிகளையும் கொண்டதும், கஜங்களெனும் {யானைகளெனும்} ஆமைகளாலும், அஷ்வங்களெனும் மண்டூகங்களாலும் {குதிரைகளெனும் தவளைகளாலும்} நிறைந்ததும்,{20} ருத்திரர்களையும், ஆதித்யர்களையும் பெரும்முதலைகளாகக் கொண்டதும், மருத்துக்கள், வசுக்கள் எனும் மஹா உரகங்களையும் {பெரும்பாம்புகளையும்}, ரதங்கள், அஷ்வங்கள், கஜங்கள் {தேர்கள், குதிரைகள், யானைகள்} எனும் நீர்ப்பெருக்குகளையும், காலாட்படை எனும் மணற்குன்றையும் கொண்டதுமான{21} தேவர்களின் பலசாகரத்தில் {படையெனும் கடலில்} புகுந்து இவனே {இந்திரஜித்தே} தைவதபதியை {தேவேந்திரனைக்} கைப்பற்றி லங்கைக்குள் பிரவேசித்தான்.(20-22) இராஜரே, சம்பரன், விருத்திரன் ஆகியோரைக் கொன்றவனும், சர்வ தேவர்களாலும் நமஸ்கரிக்கப்படுகிறவனுமான அவன் {இந்திரன்}, பிதாமஹனின் {பிரம்மனின்} ஆணையின்பேரில் விடுவிக்கப்பட்டவனாக, திரிவிஷ்டபத்திற்கு {சொர்க்கத்திற்குத்} திரும்பிச் சென்றான்.(23)

மஹாராஜாவே, ராமன் உள்ளிட்ட அந்த வானர சேனையை, அழிவை நோக்கி இட்டுச் செல்ல, உமது மகனான இந்த இந்திரஜித்தை மட்டும் நீர் அனுப்புவீராக.(24) இராஜரே, பிராகிருத ஜனத்தில் {சாதாரண மக்களில்} ஒருவனிடம்  இருந்து, தகாத இந்த ஆபத்து வந்திருக்கிறது. இது நீர் ஹிருதயத்தில் வைக்க வேண்டிய காரியமல்ல. நீர் ராகவனைக் கொல்வீர்" {என்றனர் ராக்ஷசர்கள்}.(25)

யுத்த காண்டம் சர்க்கம் – 007ல் உள்ள சுலோகங்கள்: 25

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை