Riksha cavity | Kishkindha-Kanda-Sarga-50 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரர்கள் ரிக்ஷபிலத்திற்குள் புகுந்தது; ஸ்வயம்பிரபையைச் சந்தித்தது...
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படங்களின் தொகுப்பு |
கபியான {குரங்கான} ஹனுமான்... தாரன், அங்கதன் ஆகியோருடன் சேர்ந்து, விந்தியத்தின் குகைகளிலும், கஹனங்களிலும் {ஆழமான காடுகளிலும்} தேடினான்.(1) பிறகு, சுற்றிலும் சிம்ஹங்களும், சார்தூலங்களும் {புலிகளும்} நிறைந்த குகைகளிலும், அந்த நகேந்திரத்தின் {மலையரசான விந்தியத்தின்} பாறைக்கூர்முகடுகளிலும், மஹாபிரஸ்ரவணங்களிலும் {பேரருவிகளிலும்} தேடினான்.(2) அந்த சைலத்தின் தென்மேற்கு கோடியை {சிகரத்தை} அடைந்தவர்கள், அங்கேயே வசித்திருந்தபோது, அந்த {தவணைக்} காலமும் வேகமாகக் கடந்தது.(3) குகைகளுடனும், அடைதற்கரிய பெருங்காடுகளுடனும் கூடிய அந்த தேசம் {இடம்}, தேடுதற்கரியதாக இருப்பினும், வாயு சுதன் {ஹனுமான்}, அங்கேயுள்ள சர்வ பர்வதங்களிலும் தேடினான்.(4)
பரஸ்பரம் பிரிந்து தூரமாகச் சென்றுவிடாதபடி அன்யோன்யமாக கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதனன் ஆகியோரும்,{5} மைந்தனும், துவிவிதனும், ஹனுமானும், ஜாம்பவானும், யுவராஜனான அங்கதனும், வனகோசரனான {வனத்தில் திரிபவனான} தாரனும்,{6} கிரிஜாலங்களால் {மலைத்தொடர்களால்} சூழப்பட்ட தேசங்களைத் தொடர்ந்து, தக்ஷிண {தெற்குத்} திசையில் தேடினார்கள். அப்போது அங்கே மிகப் பெரிய பிலம் {மலைப்பிளவு / குகை} ஒன்றைக் கண்டனர்.{7} அடைவதற்கரியதும், ரிக்ஷ பிலம் {கரடிக் குகை} என்ற பெயரைக் கொண்டதுமான அஃது, {மயன் என்ற} ஒரு தானவனால் நன்றாக ரக்ஷிக்கப்பட்டு வந்தது.(5-8அ)
பசி, தாகத்தால் பீடிக்கப்பட்டுக் களைப்படைந்தவர்களும், பருகத் தண்ணீர் தேடியவர்களுமான அவர்கள், லதைகள், விருக்ஷங்களால் {கொடிகளாலும், மரங்களாலும்} சூழப்பட்ட அந்த மஹத்தான பிலத்தைக் கண்டனர்.(8ஆ,9அ) கிரௌஞ்சங்களும், ஹம்சங்களும், சாரஸங்களும், ஜலத்தில் நனைந்தவையும், பத்மரேணுக்களால் {தாமரைத் தாதுக்களால்} சிவந்த அங்கங்களுடன் கூடியவையுமான சக்கரவாகங்களும் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தன.(9ஆ,10அ) அப்போது அந்த வானரரிஷபர்கள் {வானரர்களில் சிறந்தவர்கள்}, சுகந்தமானதும், அடைதற்கரியதுமான அந்த பிலத்தை நெருங்கி, வியப்படைந்து, மனத்தில் பெரிதும் ஆச்சரியமடைந்தனர்.(10ஆ,11அ) தேஜோவான்களும், மஹாபலவான்களுமான அந்த பிலவக உத்தமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகளில் மேலானவர்கள்}, பொதுவாக சந்தேகத்தை அடைந்தாலும், பெரும் மகிழ்ச்சியுடன் அந்த பிலத்தை நோக்கிச் சென்றனர்.(11ஆ,12அ) நானாவித உயிரினங்கள் திரிவதும், தைத்தியேந்திரனின் நிலயத்திற்கு {அசுரமன்னனின் வசிப்பிடத்திற்கு} ஒப்பானதுமான அது, காணக்கூடாததைப் போல கோரமானதாகவும், எல்லாவகையிலும் புகுவதற்கரிதானதாகவும் இருந்தது.(12ஆ,13அ)
அப்போது, பர்வத உச்சிக்கு ஒப்பான பளபளப்புடன் கூடியவனும், காந்தார வன கோவிதனும் {ஆழமான காட்டுப் பகுதிகளை நன்கறிந்தவனும்}, மாருதாத்மஜனுமான {வாயுவின் மைந்தனுமான} ஹனுமான், கோரமடைந்த வானரர்களிடம் {பின்வருமாறு} சொன்னான்:(13ஆ,14அ) “நாம் அனைவரும், தக்ஷிண {தெற்குத்} திசையில் கிரிஜாலங்களால் {மலைத்தொடர்களால்} சூழப்பட்ட தேசங்களில் தேடிக் களைத்தும், மைதிலியை இன்னும் கண்டோமில்லை.(14ஆ,15அ) இந்த பிலத்தில் இருந்து ஹம்சங்களும், கிரௌஞ்சங்களும், சாரஸங்களும்,{15ஆ} ஜலத்தில் நனைந்த சக்கரவாகங்களும் எங்கும் திரிந்து கொண்டிருக்கின்றன. இங்கே நீருடன் கூடிய கூபமோ {கிணறோ}, ஹிரதமோ {மடுவோ} நிச்சயம் இருக்க வேண்டும்.{16} அதேபோல இந்த பிலத்தின் துவாரத்தில் {குகையின் வாயிலில்} மரங்கள் செழித்திருக்கின்றன” {என்றான் ஹனுமான்}.(15ஆ-17அ)
இவ்வாறு சொல்லப்பட்டதும், இருள் சூழ்ந்த அந்த பிலத்திற்குள் நுழைந்த ஹரயர்கள் அனைவரும், சந்திர, சூரியர்கள் இல்லாததைக் கண்டு ரோமஹர்ஷணமடைந்தனர் {மயிர்ச்சிலிர்ப்பை அடைந்தனர்}. (17ஆ,18அ) அங்கே அந்த ஹரிசார்தூலர்கள் {குரங்குகளில் புலிகள்}, சிம்ஹங்களையும், அதே போன்ற மிருக, பக்ஷிகளையும் {விலங்குகளையும், பறவைகளையும்} கண்டவாறே இருள் சூழ்ந்த பிலத்திற்குள் பிரவேசித்தனர்.(18ஆ,19அ) அவர்களுக்குப் பார்வையோ, தேஜஸ்ஸோ, பராக்கிரமமோ இல்லாமல் போகவில்லை. அவர்களின் கதியானது வாயுவைப் போல இருந்தது. இருளிலும் பார்வை பெற்றவர்களாக இருந்தனர்.(19ஆ,20அ) அந்த பிலத்திற்குள் வேகமாகப் பிரவேசித்த அந்த கபிகுஞ்சரர்கள் {குரங்குகளில் யானைகள்}, பிரகாசமானதும், அதியழகுடையதுமான உத்தம தேசம் {இடம்} ஒன்றைக் கண்டனர்.(20ஆ,21அ) அப்போது அந்த பயங்கரர்கள் அன்யோன்யம் {ஒருவரையொருவர்} இறுகத் தழுவிக்கொண்டு, நானாவித மரங்கள் அடர்ந்த அந்த பிலத்தில் ஒரு யோஜனை தூரம் நடந்தனர்.(21ஆ,22அ) நனவிழந்து, தாகமடைந்து, பெரிதும் குழப்பமடைந்த நிலையில் நீரைத் தேடிக் கொண்டிருந்தவர்கள், சோர்வில்லாமல் அந்த பிலத்தில் கொஞ்ச காலம் தாவித்திரிந்தனர்.(22ஆ,23அ) தளர்ச்சியடைந்த தீனவதனத்துடன் {மெலிந்த பரிதாபமான முகத்துடன்} கூடியவர்களும், களைப்படைந்தவர்களுமான அந்த வீர பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்}, ஜீவிதத்தில் நிராசை அடைந்தபோது {வாழ்வதில் ஆசையை இழந்தபோது}, ஓர் ஒளியைக் கண்டனர்.(23ஆ,24அ)
பின்னர், இருளற்ற வனத்துடன் கூடிய தேசத்தை {ஓரிடத்தை} அடைந்த அந்த சௌம்யர்கள் {வானரர்கள்},{24ஆ} ஒளிமிக்க வைஷ்வானரப் பிரபையுடன் {வேள்வி நெருப்பின் பிரகாசத்துடன்} கூடிய காஞ்சன விருக்ஷங்களையும் {பொன்மரங்களையும்}, சாலங்கள் {ஆச்சா மரங்கள்}, தாலங்கள் {பனை மரங்கள்}, தமாலங்கள் {மருத மரங்கள்} ஆகியவற்றையும், புன்னாகங்கள் {புன்னை மரங்கள்}, வஞ்சுளங்கள் {மகிழ மரங்கள்}, தவங்கள்,{25} சம்பகங்கள், நாக விருக்ஷங்கள், புஷ்பித்த கர்ணீகாரங்கள் {கோங்கு / சரக்கொன்றை மரங்கள்}, சித்திரமான காஞ்சன {பொன்} மலர்மாலைகளையும், சிவந்த தளிர்களையும்{26} மணிமுடியாகக் கொண்ட லதைகள் {கொடிகள்} ஆகியவற்றையும், ஹேம ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டவையும், இளம் ஆதித்யனின் ஒளியுடன் கூடியவையும், வைடூர்யமயமான வேதிகைகள்,{27} ஒளிரும் வடிவங்களுடனும், ஹிரண்யமயமான {பொன்மயமான} பெரும் மரங்களையும், நீல வைடூர்ய வர்ணத்துடனும் கூடிய பத்மினிகளையும், அவற்றைச் சுற்றித் திரியும் பறவைகளையும்,{28} பால அர்க்கனின் {சூரியனின்} ஒளிக்கு ஒப்பான மஹத்தான காஞ்சன விருக்ஷங்களையும் {பெரும் பொன்மரங்களையும்} கண்டனர்.(24ஆ-29அ) பிறகு, ஜாதரூபமயமான மத்ஸ்யங்களையும் {மீன்களையும்}, மஹத்தான பங்கஜங்களையும் {தாமரைகளையும்}, தெளிவான நீரையும் கொண்ட நளினிகளையும் அவர்கள் கண்டனர்.(29ஆ,30அ)
அங்கே காஞ்சனம் {தங்கம்}, அதே போல ராஜதம் {வெள்ளி} ஆகியவற்றாலான விமானங்களுடனும்,{30ஆ} பொன்மயமான கவாக்ஷங்களுடனும் {சாளரங்களுடனும்}, முத்துச்சரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஹைம, ராஜத பௌமங்களுடனும் {தங்கத்தாலும், வெள்ளியாலுமான பல்லடுக்குத் தளங்களுடனும்} கூடியவையும், வைடூரியங்களும், மணிகளும் பதிக்கப்பட்டவையுமான{31} முக்கியமான கிருஹங்களை {வீடுகளை} அந்த ஹரயர்கள் {குரங்குகள்} அங்கே எங்கும் கண்டனர்.(30ஆ-32அ) மணிப்ரவாளங்களின் {பவளமணிச்சரங்களின்} ஒளிக்கு ஒப்பான புஷ்பங்களுடனும், பழங்களுடனும் கூடிய விருக்ஷங்களையும், பொன் தேனீக்களையும், எங்குமுள்ள தேனையும்,{32ஆ,33அ) மணிகளாலும், காஞ்சனத்தாலும் ஆனவையும், சித்திரமானவையும், விசாலமானவையுமான பல்வேறு சயனங்களையும், ஆசனங்களையும் {படுக்கைகளையும், இருக்கைகளையும்}, பொன்னாலும், வெள்ளியாலும் ஆன பாத்திரங்களின் குவியல்களையும் எங்கும் கண்டனர்.(33ஆ,34) திவ்யமான அகருக்களையும் {அகில்கட்டைகள்}, சந்தனங்களின் {சந்தனக்கட்டைகளின்} குவியல்களையும், தூய்மையானவையும், உண்ணத்தக்கவையுமான கிழங்குகளையும், பழங்களையும்,(35) உயர் ரக பானங்களையும், ரசமிக்க மதுவையும் {சுவைமிக்க தேனையும்}, திவ்யமானவையும், உயர்ரகம் சார்ந்தவையுமான ஆடைகளின் குவில்களையும், சித்திரமான கம்பளங்கள், மான்தோல்கள் ஆகியவற்றின் குவியல்களையும்,{36,37அ} ஆங்காங்கே நிறுவப்பட்டவையும், வைஷ்வானரப்ரபையுடன் {வேள்வி நெருப்பின் பிரகாசத்துடன்} ஒளிர்பவையும், தூய்மையானவையுமான ஜாதரூபத்தின் {தங்கக்} குவியல்களையும் அந்த வானரர்கள் கண்டனர்[1].(37ஆ,38அ)
[1] அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்தமிழ் நிகர் நறவமும் தனித்தண் தேறலும்இமிழ் கனிப் பிறக்கமும் பிறவும் இன்னனகமழ்வுறத் துவன்றிய கணக்கு இல கொட்பதுகன்னி நெடு மாநகரம் அன்னது எதிர்கண்டார்இந்நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்றுஉன்னி உரையாடினர் உவந்தனர் வியந்தார்பொன்னின் நெடு வாயில் அதனூடு நனி புக்கார்.- கம்பராமாயணம் 4557,4558ம் பாடல்கள், பிலம் புக்கு நீங்கு படலம்பொருள்: அமுதத்தைப் போன்ற சோறு முதலிய உணவுப் பொருள்களும், தமிழ்மொழிக்கு நிகரான இனிய தேனும், ஒப்பற்ற குளிர்ந்த மதுவும், இனிய பழங்களின் திரட்சியும், இவைபோன்ற இன்னும் பிற உணவுப் பொருள்களும் மணம்வீசுமாறு நிறைந்துள்ள எல்லையற்றுப் பெருமைவாய்ந்த அழிவில்லாத மிகப் பெரிய நகரத்தைக் கண்ணெதிரே கண்டனர். “இந்நகரே பகைவன் ராவணனின் ஊர்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு மகிழ்ச்சியும், வியப்பும் அடைந்தவர்களாக, பொன்மயமாக நீண்டு அகன்றிருக்கும் நகரத்து வாயிலில் இனிதே நுழைந்தனர்.
மஹாபிரபையுடன் கூடியவர்களும், சூரர்களுமான வானரர்கள், அந்த பிலத்தில் ஆங்காங்கே தேடிக் கொண்டிருந்தபோது, அருகிலேயே யாரோவொரு ஸ்திரீயைக் கண்டனர்[2].(38ஆ,39அ) மரவுரியும், மான்தோலும் உடுத்தியவளும், நியதமான ஆஹாரம் கொண்டவளும், தேஜஸ்ஸில் ஜொலிப்பவளுமாக அங்கே அந்த தபஸ்வினியை அவர்கள் கண்டனர்.(39ஆ,40அ) ஹரயர்கள் {குரங்குகள்} அனைவரும் அங்கே வியப்படைந்து நின்றபோது, ஹனுமான், “நீ யார்? இந்த பிலம் யாருடையது?” என்று கேட்டான்.(40ஆ,இ)
[2] எக்குறியொடு எக்குணம் எடுத்து இவண் உரைக்கேன்இக்குறியுடைக் கொடி இராமன் மனையாளோஅக்கு வடம் முத்தமணி ஆரமதன் நேர் நின்றுஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான்- கம்பராமாயணம் 4571ம் பாடல், பிலம் புக்கு நீங்கு படலம்பொருள்: "{சீதைக்குறிய} அடையாளங்களில் எந்த குணம் இவளிடம் இருப்பதாகச் சொல்வேன்? கொடி போன்ற அடையாளத்தைக் கொண்ட இவளே ராமனின் மனைவியோ? இந்த மாலை முத்தினாலான மாலையோடு ஒப்பாகுமென்றால், இவளும் அவளுக்கு ஒப்பானவளாகவே இருப்பாள்" என ஹனுமான் உரைத்தான்.
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 50ல் உள்ள சுலோகங்கள்: 41
Previous | | Sanskrit | | English | | Next |