I will wear in my heads | Aranya-Kanda-Sarga-55 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்ற ராவணன்; செல்வம், பணியாட்கள் முதலியவற்றைக் காட்டி அவளைக் கவர நினைப்பது; தன்னை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்துவது...
இராவணன், மஹாபலமிக்கவர்களும், கோரமானவர்களுமான எட்டு ராக்ஷசர்களுக்கு {இவ்வாறு} ஆணையிட்டுவிட்டுப் புத்திக் குழப்பத்துடன் தனக்கு வேண்டியதைச் செய்துவிட்டதாகக் கருதினான்.(1) அந்த வைதேகியைச் சிந்தித்து, காம பாணத்தால் அதிகமாகப் பீடிக்கப்பட்டு, சீதையைப் பார்க்க அதிவிரைவாகச் சென்று, ரம்மியமான கிருஹத்திற்குள் {வீட்டிற்குள்} பிரவேசித்தான்.(2) இராக்ஷசாதிபனான அந்த ராவணன், அந்த வேஷ்மத்தில் {மாளிகைக்குள்} பிரவேசித்ததும், ராக்ஷசிகளுக்கு மத்தியில், துக்கத்தில் மூழ்கியிருந்த சீதையைப் பார்த்தான்.(3) கண்ணீர் ததும்பும் முகத்துடன் கூடியவளும், தீனமானவளும், சோக பாரத்தால் பீடிக்கப்பட்டவளும், வாயு வேகத்தின் ஆரவாரத்தால் ஆர்ணவத்தில் {பெருங்கடலில்} மூழ்கும் நாவத்தை {படகைப்} போலவும்,({4} மிருக யூதம் {மான்கூட்டம்} மொத்தத்தில் இருந்தும் விலகி, காட்டு நாய்களுக்கு மத்தியில் நுழைந்த மிருகீயைப் {பெண்மானைப்} போலவும் தாழும் முகத்துடன் {தரையைப் பார்க்கும் முகத்துடன்} கூடிய அந்த சீதையின் அருகில் அந்த நிசாசரன் {இரவுலாவியான ராவணன்} நெருங்கினான்.{5} சோக வசப்பட்டு, தீனமடைந்து, வசமில்லாதவளான அவளிடம் {சீதையிடம்} அந்த ராக்ஷசாதிபன் {ராவணன்}, தேவ கிருஹத்திற்கு ஒப்பான தன் கிருஹத்தை பலவந்தமாக {வலுக்கட்டாயமாகக்} காட்டினான்.(4-6)
அது {அவனுடைய கிருஹம்} மாடமாளிகைகளாலும், அரண்மனைகளாலும் நிறைந்திருந்தது; ஆயிரக்கணக்கான ஸ்திரீகள் அங்கே வசித்திருந்தனர்; நானாவித பக்ஷிகணங்களால் {பறவைக் கூட்டங்களால்} அலங்கரிக்கப்பட்டிருந்தது; நானாவித ரத்தினங்களால் இழைக்கப் பெற்றிருந்தது; தந்தம், தங்கம், ஸ்படிகம், வெள்ளி, வஜ்ரம் {வைரம்}, வைடூரியம் {மரகதம்} ஆகியவற்றின் வேலைப்பாடுகளுடன் சித்திரமாக {அற்புதமாகத்} திகழ்ந்தது; பார்ப்பதற்கு மனத்தை மயக்கும் ஸ்தம்பங்களாலும் {தூண்களாலும்}, திவ்ய துந்துபி கோஷங்களாலும் நிறைந்திருந்தது; புடம்போட்ட காஞ்சனத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்ட கதவுகளை {தோரணங்களைக்} கொண்டிருந்தது.(7-9அ) அங்கே, காஞ்சனத்தாலான சித்திரமான {பொன்னாலான அழகிய} படிக்கட்டுகளில் அவளுடன் {சீதையுடன்} ஏறி, தந்தம், வெள்ளி ஆகியவற்றாலான காண்பதற்கினிய சாளரங்களுடனும், ஹேமஜாலத்தால் {தங்க வலைகளால்} மறைக்கப்பட்ட மேடைகளுடனும் கூடிய,(9ஆ,10) தன் பவனத்தில் எங்கும் வெண்மையான விசித்திரமணிகளால் அழகுற்றிருந்த பூமி பாகங்களை தசக்ரீவன் மைதிலிக்குக் காட்டினான்[1].(11) இராவணன், தீர்கிகைகள் {நடைவாபிகள் / நீரூற்றுகள் பொங்கும் கிணறுகள்}, நானாவித புஷ்பங்களால் நிறைந்திருந்த புஷ்கரிணிகள் ஆகியவற்றை சோகத்தில் மூழ்கியிருந்த சீதைக்குக் காட்டினான்.(12)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவள் தானே நடந்து சென்றாளா? அல்லது படிக்கட்டுகளில் இழுத்துச் செல்லப்பட்டாளா? அவள் ராவணனின் பின்னே நடக்க வேண்டியிருந்திருக்கலாம்" என்ற பொருளில் இருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "பொன்னாற் செய்ததுமான படியில் அவளைத் தூக்கிக் கொண்டு ஏறினான்" என்றும், "தசக்ரீவன் தன் அரண்மனையில் வெண்முத்துக்களால் அழகுற்ற தரைகளை எங்கும் சீதா தேவிக்குக் காட்டினான்" என்றும் இருக்கிறது. கிட்டத்தட்ட மற்ற பதிப்புகள் அனைத்திலும், "இராவணன் சீதையுடன் சேர்ந்து படிக்கட்டுகளில் ஏறினான்" என்று பொதுவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த பாபாத்மா {ராவணன்}, அந்த உத்தம பவனம் முழுவதையும் வைதேஹிக்குக் காட்டிய பிறகு, சீதையிடம் கொண்ட இச்சையால் லோபங்கொள்ளச் செய்யும் {ஆசை கொள்ளச் செய்யும் இந்த} வாக்கியங்களைச் சொன்னான்:(13) "சீதே, நோயாளிகள், விருத்தர்கள் {பெரியவர்கள்}, பாலர்கள் ஆகியோரைத் தவிர்த்து, பயங்கர கர்மங்களைச் செய்யக் கூடிய ரஜனீசரர்களில் {இரவுலாவிகளில்}, பத்தும், அதற்கு மேலும் இருபத்திரண்டுமான ராக்ஷச கோடிகள் அனைவருக்கும் நானே பிரபு[2].(14,15அ) என் ஒருவனுக்கு மட்டுமே ஓராயிரம் காரியபுரசரர்கள் {பணியாட்கள்} இருக்கின்றனர். இந்த ராஜ்ஜிய தந்திரத்தையும் {ஆட்சி அதிகாரத்தையும்}, சர்வ ஜீவிதத்தையும் உன்னிடம் பிரதிஷ்டை செய்கிறேன். விசாலாக்ஷியே, நீ எனக்கு பிராணனைவிட உயர்ந்தவள்.(15ஆ,16)
[2] மேற்கண்டவாறு தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "பாலர்களையும், விருத்தர்களையும் தவிர ராக்ஷசர்கள் பத்து கோடி பேர், பயங்கரச் செயல்களைச் செய்பவர்கள் இருபத்திரண்டு கோடி பேர் எனக் கோடிக்கணக்கான ரஜனீசரர்களின் பிரபு நானே" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "முதியவர்களையும், சிறுவர்களையும் தவிர்த்து, பயங்கரச் செயல்களைச் செய்யும் இரவுலாவிகள் முப்பத்திரண்டு கோடி பேருக்கு நானே தலைவன்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "முதியவர்களையும், பிள்ளைகளையும் தவிர பத்தாயிரம் ராக்ஷசர்களும், பயங்கரச் செயல்களுக்காகப் புகழ்பெற்றவர்களான இரவுலாவிகளும் என்னைத் தங்கள் தலைவனாக ஏற்றுக் கொள்கின்றனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "அங்கே பத்து கோடி ராக்ஷசர்களும் இன்னும் இருபத்திரண்டு {கோடி ராக்ஷசர்களும்} இருக்கிறார்கள். இதுவும் பிணியுற்றவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் நீங்கலாக உள்ளதாகும்" என்றிருக்கிறது. தமிழில் தர்மாலயப் பதிப்பில், "பத்து கோடி ராக்ஷஸர்களும், அதோடு கூட வேறு சில இருபத்திரண்டும் அரிய செயல்களைப் புரியும் அவர்கள் எல்லோருக்கும் நான் ஈசன். கிழத்தனத்தால் முடியாதவர்களும், சிறு குழந்தைகளுமான அரக்கர்கள் நீக்கி ஓர் ஆயிரம் என் ஒருவனுக்குப் பணிவிடைப் பரிவாரம்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "மிகவும் கொடியவர்களாகிய முப்பத்திரண்டு கோடி ராக்ஷஸர்கள் என் வசத்திலிருக்கின்றனர்கள்; அவர்களெல்லோர்க்கும் யானொருவனே இறைவன்; மூப்புடையோரும், வாலிபர்களுந்தவிர ஒவ்வொரு வேலைக்கும் ஆயிரம் ஆயிரம் பேர்களிருக்கின்றனர்கள்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பையும், தமிழில் தர்மாலயப் பதிப்பையும் தவிர வேறு பதிப்புகள் அனைத்திலும் "முப்பத்திரண்டு கோடி ராக்ஷசர்கள் இருக்கிறார்கள்" என்று ராவணன் சொல்வதாகவே வருகிறது. அஃது அன்றைய லங்காபுரி ராஜ்ஜியத்தின் ராக்ஷசத் தொகையா? உலகத்தில் இருந்த ஒட்டுமொத்த ராக்ஷசத் தொகையா? என்பது குறிப்பிடப்படவில்லை. ராஜ்ஜியத்தில் பத்து கோடி, உலகத்தில் இருபத்திரண்டு கோடி எனக் கொள்ள முடியமா? அல்லது பயங்கர கர்மங்களைச் செய்பவர்கள் பத்து கோடி என்றும், செய்யாதவர்கள் இருபத்திரண்டு கோடி என்றும் கொள்ள முடியுமா? இதில் ஏதேனும் ஒருவகையில் ராஜ்ஜியத்தைக் குறிப்பதாக இருந்தாலும், அந்த இலங்காபுரி ராஜ்ஜியம் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்.
சீதே, எண்ணற்ற உத்தம ஸ்திரீகளான எவர்கள், இந்த பரிகிரஹத்தில் {காவலுடன் கூடிய வசிப்பிடத்தில்} இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீயே ஈசுவரியாக இருப்பாய். பிரியமானவளே, நீ என் பாரியை ஆவாயாக[3].(17) இதற்கு வேறான புத்தியால் உனக்கு ஆகப்போவதென்ன? என்னுடைய நற்சொற்களை ஏற்றுக் கொண்டு, எரிந்து கொண்டிருப்பவனான என்னிடம் இரக்கம் காட்டுவதே உனக்குத் தகும்.(18) நூறு யோஜனை கொண்ட இந்த லங்கை[4] சமுத்திரத்தால் சூழப்பட்டிருக்கிறது. இந்திரனுடன் கூடிய ஸுராஸுரர்களும் {தேவர்களும், அசுரர்களும்} இதைத் தாக்கவல்லவர்களல்ல.(19) உலகங்களில் எவன் என் வீரியத்திற்கு சமமானவனாக இருக்கிறான்? நான் தேவர்களிலோ, யக்ஷர்களிலோ, கந்தர்வர்களிலோ ரிஷிகளிலோ எவரையும் காணவில்லை.(20) இராஜ்ஜியத்திலிருந்து விரட்டப்பட்டு, தீனமடைந்தவனும், மானுஷ்யர்களின் அல்ப தேஜஸ்ஸைக் கொண்ட தாபஸ்வியும், பதாதியும் {காலாட்படை வீரனுமான} ராமனுடன் சேர்ந்து என்ன செய்துவிடுவாய்?(21)
[3] தர்மாலயப் பதிப்பில், "அன்பார்ந்த சீதையே, எந்த இவன் பல ஆயிரம் ஸ்த்ரீகளுக்கு கணவனோ, அந்த எனக்கும் அவர்களுக்கும், நீ எனக்கு பார்யையாய், எஜமானியாய் ஆகு" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இந்த அந்தப்புரத்தில் எனக்கு அநேகமாயிரம் பெண்கள் மனைவியர்களாகயிருக்கின்றனர்; அவ்வெல்லோர்களுக்குங்கூட நீயே இறைவியாகக் கடவை. வேறெண்ணத்தைத் துறந்து என் மொழியை மகிழ்ந்து என்னை யங்கீகரித்தருள்க" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "நான் பல்லாயிரம் பெண்களை மணந்திருக்கிறேன். அன்புக்குரியவளே, என் மனைவியாகி நீ அவர்களின் தலைவியாக இருப்பாயாக" என்றிருக்கிறது.
[4] சந்தேகத்திற்கிடமான சுலோகங்கள் நீக்கப்பட்ட செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில், "நூறு யோஜனைகளுக்குப் பரந்திருக்கும் இந்த லங்கை பெருங்கடலால் பாதுகாக்கப்படுகிறது" என்றிருக்கிறது. இலங்கை நாறு யோஜனைகள் கொண்டது என்றும், சமுத்திரத்தால் {சாகரத்தால் அல்ல} சூழப்பட்டது என்றும் இங்கே சொல்லப்படுகிறது. நூறு யோஜனைகள் நீளம் கொண்டதென்றால், கௌடில்யரின் அர்த்தசாஸ்திர அளவு முறைப்படி ஒரு யோஜனை 9.09 மைல்கள் என்று கொண்டால், 100 யோஜனைகள் என்பது 909 மைல்கள், 1462 கி.மீ. நீளம் கொண்டதாக ராவணன் இங்கே சொல்கிறான். கார்கில் முதல் கன்னியாகுமரி வரை 3835 கி.மீ. ஆகும். அவ்வாறெனில் அன்றைய லங்கை இன்றைய இந்தியாவின் 38% அளவுக்கு இருக்க வேண்டும். ஒருவேளை ஜனஸ்தானத்தில் இருந்தே கூட அன்றைய இலங்கை தொடங்கியிருக்கலாம். அவ்வாறு கொண்டால், இன்றைய நாசிக்கில் {அன்றைய பஞ்சவடியில்} இருந்து இன்றைய லங்கையின் சிகிரியா நகரம் வரை ஆகாயமார்க்கமாக 1521 கி.மீ. கிட்டத்தட்ட 104 யோஜனைகள் தொலைவு வருகிறது. ஒருவேளை ஜனஸ்தானமே அன்றைய லங்கை ராஜ்ஜியத்தின் வட எல்லையாக இருந்திருக்கலாமோ? நாசிக்கில் இருந்து ஜனஸ்தானத்திற்கான தொலைவு எவ்வளவு? மிச்சம் வரும் அந்த 59 கி.மீ. யாக இருக்கலாமோ? அப்படிக் கொண்டால் பஞ்சவடிக்கும் ஜனஸ்தானத்திற்கும் இடையிலான தொலைவு 4 யோஜனைகள் {36.36 மைல்கள்} வருகிறது. ஆனால் இவை அனைத்தையும் இன்றைய நிலைகளைக் கொண்டே எட்டுகிறோம். இதில் யோஜனையின் அளவு, ராவணன் சென்ற திசை ஆகியவை குழப்பத்திற்கிடமானவையே. இராவணன் தென்திசையை நோக்கித்தான் சென்றான் என்ற குறிப்பு பாலகாண்டம் முதல் ஆரண்ய காண்டத்தின் இந்தப் பகுதி வரை நமக்குக் கிட்டவில்லை என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது. மேலும் லங்கையின் மொத்த நூறு யோஜனையும் கடலால் சூழப்பட்டிருந்தது என்று பொருள் கொண்டால் மேற்கண்ட விளக்கங்கள் பொருளற்றவை ஆகிவிடும். அவ்வாறு பொருள் கொள்ளப்படும் லங்கை கடலில் பெருந்தீவாக இருந்திருக்க வேண்டும்.
சீதே, என்னையே வணங்குவாயாக. நானே உனக்குத் தகுந்த பர்த்தா {கணவன்}. பீரு {பயந்தவளே}, யௌவனம் {இளமை} உண்மையில் நிரந்தரமற்றது. இங்கே என்னுடன் மகிழ்ந்திருப்பாயாக.(22) அழகிய முகம் கொண்டவளே, ராகவனைக் காண்பதில் புத்தியைச் செலுத்தாதே. சீதே, மனோரதத்தாலும் {எண்ணத்தேராலும்} இங்கே வருவதற்கு அவனிடம் சக்தியென்ன இருக்கிறது?(23) மஹா வேகம் கொண்ட வாயுவை ஆகாசத்தில் பாசத்தால் {கயிற்றால்} கட்டுவது சாத்தியமில்லை. அதே போல எரியும் அக்னியின் விமலமான சிகையை {களங்கமற்ற தழல்களை / புகையற்ற ஜுவாலையைப்} பற்றவும் முடியாது.(24) சோபனையே {பிரகாசமிக்கவளே}, மூவுலகங்களிலும் எவனால், என் பாஹு பரிபாலனத்திலுள்ள {கைகளின் ஆளுகையில் உள்ள} உன்னை தன் விக்கிரமத்தால் கொண்டு போக முடியும்? அவனை என்னால் பார்க்க முடியவில்லை.(25) நீ லங்கையெனும் இந்த மஹத்தான ராஜ்ஜியத்தை ஆள்வாயாக. என்னைப் போன்றவர்களும், தேவர்களும், சராசரங்களும் {அசைவனவும், அசையாதனவும்} உன் பணியாளர்கள் ஆவோம்.(26)
ஊக்கத்துடன் அபிஷேக நீரில் நனைந்து {பட்டத்து ராணி என்ற பட்டஞ்சூடி}, என்னிடம் மகிழ்ச்சியடைவாயாக. பூர்வத்தில் செய்த எந்த தீமையாலோ விளைந்த வனவாச கர்மம் நீங்கியது. நன்மையால் விளையும் தர்மம் எதுவோ, அதன் பலனை இங்கே அடைவாயாக.(27,28அ) மைதிலி, இங்கே திவ்ய கந்தங்களுடன் கூடிய சர்வ மாலைகளும், முக்கியமான பூஷணங்களும் {ஆபரணங்களும்} இருக்கின்றன. அவற்றை என்னுடன் சேர்ந்து பயன்படுத்துவாயாக.(28ஆ,29அ) மெல்லிடையாளே, என்னுடன் பிறந்த வைஷ்ரவணனுக்கு {குபேரனுக்கு} உரியதும், புஷ்பகம் என்ற பெயரையும், சூரியப்பிரகாசத்தையும் கொண்டதுமான விமானத்தை ரணத்தில் {போரில்} வலிமையால் வென்றேன்.(29ஆ,30அ) சீதே, மனோவேகம் கொண்டதும், ரமணீயமானதும் விசாலமானமான அந்த விமானத்தில் என்னுடன் சேர்ந்து சுகமாக விளையாடித் திரிவாயாக.(30ஆ,31அ) அழகிய இடையைக் கொண்டவளே, அழகிய முகம் படைத்தவளே, பத்மத்தின் {தாமரையின்} ஒளிக்கு ஒப்பானதும், களங்கமற்றதும், காண்பதற்கு அழகானதுமான வதனம் {உன் முகம்} சோகத்தால் பீடிக்கப்பட்டு பிரகாசமற்றிருக்கிறது" {என்றான் ராவணன்}.(31ஆ,32அ)
அவன் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது, வராங்கனையான {அழகிய அங்கங்களைக் கொண்டவளான} அந்த சீதை, இந்துவுக்கு ஒப்பானதை {சந்திரனுக்கு ஒப்பான முகத்தை} வஸ்திரத்தின் முனையால் {முந்தானையால்} மறைத்தபடியே மெதுவாக கண்ணீர் சிந்தினாள்.(32ஆ,33அ) வீரனும், ரஜனீசரனுமான {இரவுலாவியுமான} ராவணன், தியானிப்பதைப் போல கவலையுடன் சிந்தித்து, ஒளி குன்றியவளான அந்த சீதையிடம் {இந்தச்} சொற்களைச் சொன்னான்:(33ஆ,34அ) "வைதேஹி, தர்மத்திற்குக் குறைவுண்டாக்கும் என்பதால் நீ கொள்ளும் இந்த நாணம் போதும். தேவி, எது உன்னை அடையப்போகிறதோ, அது மரபுக்குத் தகுந்தது எனக் கொள்வாயாக.(34ஆ,35அ) இந்த மென்மையான பாதங்கள் இரண்டையும் என் சிரங்களில் தரிப்பேன். சீக்கிரம் எனக்கு அருள் செய்வாயாக {இரங்குவாயாக}. நான் உன் வசப்பட்டவன். நான் தாசன் {அடியவன்}.(35ஆ,36அ) வெறுமையடைந்த நான், இந்த சூனியமான சொற்களைச் சொல்கிறேன். இராவணன் எந்த ஸ்திரீக்கும் தலைவணங்கமாட்டான்" {என்றான் ராவணன்}.(36ஆ,இ)
தசக்ரீவன், ஜனகாத்மஜையான மைதிலியிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, கிருதாந்தனின் {யனின்} வசப்பட்டவனாக, "இவள் என்னுடையவளே" என்று நினைத்தான்.(37)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 55ல் உள்ள சுலோகங்கள்: 37
Previous | | Sanskrit | | English | | Next |