Swayamprabha | Kishkindha-Kanda-Sarga-51 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பொன்மாளிகையின் கதையை ஹனுமானுக்குச் சொன்னது; குகைக்குள் நுழைந்த வானரர்கள் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்த ஸ்வயம்பிரபை...
Bing - Artificial Intelligence Picture | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படம் |
இவ்வாறு கேட்ட ஹனுமான், அங்கே கிருஷ்ணார்ஜிதம் {கருப்பு மான்தோல்} அணிந்திருந்தவளும், தர்மசாரிணியும், மஹாபாக்கியவதியுமான அந்த தபஸ்வினியிடம் {ஸ்வயம்பிரபையிடம்} மீண்டும் {பின்வருமாறு} சொன்னான்:(1) ”பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்பட்டுக் களைப்புடன் எங்கும் திரிந்து, பிலத்தின் இருளில் மூழ்கியிருக்கும் இவ்விடத்தில் திடீரெனப் பிரவேசித்தோம்.(2) தரணியின் மஹத்தான பிளவுக்குள் பிரவேசித்த நாங்கள், இவற்றையும், இவ்வித பாவத்தையும் {உணர்வையும்} அடைந்து, ஒப்பிட அற்புதமான விதவிதமானவற்றையும் {உவமை சொல்வதற்கரிய பலவகையானவற்றையும்} கண்டு, {அசுர மாயையோ என்று} பெரிதும் கலக்கமுற்று, நனவிழந்தவர்களானோம்.
இளம் ஆதித்யனின் ஒளியுடன் கூடிய இந்த காஞ்சன விருக்ஷங்கள் {பொன் மரங்கள்} யாருடையவை?(3,4) தூய்மையானவையும், உண்ணத்தகுந்தவையுமான கிழங்குகளும், பழங்களும், காஞ்சன விமானங்களுடனும், புடம்போட்ட தங்கச் சாளரங்களுடனும் கூடியவையும், மணிஜாலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், வெள்ளியாலானவையுமான கிருஹங்களும்,(5,6அ) புஷ்பித்தவையும், பழங்கள் நிறைந்தவையும், புண்ணிய நறுமணம் கமழ்பவையும், ஜம்பூநதமயமானவையுமான இந்த மரங்களும் யாருடைய தேஜஸ்ஸால் விளைந்தன?(6ஆ,7அ) விமலமான ஜலத்தில் ஜனித்த பத்மங்கள் {தெளிந்த நீரில் பிறந்த தாமரைகள்} காஞ்சனமாகவும், மத்ஸ்யங்களும் {மீன்களும்}, ஆமைகளும் சுவர்ணமாகவும் காணப்படுவது எவ்வாறு?(7ஆ,8அ) உன் மஹிமையையும், இஃது எவருடைய தபோ பலம் என்பதையும் அறியாதவர்களான எங்கள் அனைவருக்கும், அனைத்தையும் விவரிப்பதே உனக்குத் தகும்” {என்றான் ஹனுமான்}.(8ஆ,9அ)
ஹனுமதன் இவ்வாறு சொன்னதும், தர்மசாரிணியான அந்த தபஸ்வினி, சர்வ பூதங்களின் நலத்திலும் {அனைத்து உயிரினங்களின் நலனிலும்} அர்ப்பணிப்புள்ள ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினாள்:(9ஆ,10அ) “மயன் என்ற பெயரைக் கொண்டவனும், மஹாதேஜஸ்வியும், மாயாவியுமான தானவரிஷபனே, தன் மாயையின் மூலம் இந்தக் காஞ்சன வனம் அனைத்தையும் நிர்மாணித்தான்.(10ஆ,11அ) எவன் காஞ்சனமயமானதும், திவ்யமானதுமான இந்த உத்தம பவனத்தை நிர்மாணித்தானோ, அவனே {மயனே} முன்பு தானவ முக்கியர்களின் விஷ்வகர்மனாக {அசுரத்தச்சனாக} இருந்தான்.(11ஆ,12அ)
அவன் {மயன்}, மஹத்தான இந்த வனத்தில், ஆயிரம் வருஷங்கள் தபம் பயின்று, சர்வ ஔஷஸன தனத்தையும் பிதாமஹரிடம் வரமாகப் பெற்றான்[1].(12ஆ,13அ) சர்வத்தையும் வகைப்படுத்தி, சர்வ காமேஷ்வரனாக {தான் விரும்பிய அனைத்தையும் ஆள்பவனாக} இருந்த அந்த பலவான், இந்த மஹாவனத்திலேயே கொஞ்ச காலம் சுகமாக வசித்திருந்தான்.(13ஆ,14அ) அவன் {மயன்}, அப்சரஸ் ஹேமையுடன் கூடியிருந்தபோது, ஈசனான புரந்தரன், அசனியை {வஜ்ராயுதத்தை / இடியை} ஏவி, அந்த தானவபுங்கவனை {மயனைக்} கொன்றான்.(14ஆ,15அ) சாஸ்வதமான காம போகங்களுடன் கூடிய {ஆசைப்படும் இன்பங்களைத் தரவல்ல} ஹிரண்யமயமான இந்தக் கிருஹமும், இந்த உத்தமவனமும் அந்த ஹேமைக்கு பிரம்மனால் தத்தம் செய்யப்பட்டவையாகும்.(15ஆ,16அ)
[1] “உசனஸ் என்றும் அழைக்கப்படும் சுக்ராசாரியரின், சிற்ப சாஸ்திரக் கல்வி எனும் செல்வத்தையும் பிரம்மதேவனிடம் வரமாகப் பெற்றான்” என்பது இங்கே பொருள். தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “சுக்கிராசாரியர், அசுரர்களின் குருவும், புரோஹிதருமாவார். அவர், வெறுங்காற்றில் பொருட்களை வருவித்து, திவ்யமான கட்டுமானங்களை உருவாக்கும் கட்டடக் கலை பொறியியலை முறைப்படுத்தியவராவார். அதுபோலவே, சில மனிதர்களும் தாங்கள் சிறிதும் கஷ்டப்படாமல் செல்வத்தைப் பெறத் தங்களுக்கு நெருக்கமான தேவர்களிடம் மன்றாடுகின்றனர். சுக்ராசாரியரால் வெற்றுவெளியில் இருந்து தேவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தர முடியுமென்றால், இந்தச் செயல்பாடுகளைத் தவிர வேறேதும் இல்லாத தேவர்களாலும் தங்களுக்கு வேண்டிய வளங்களை அளிக்க முடியும் என்பது அவர்களது நம்பிக்கை. எனவே, இந்த மயன் ஓர் அசுரனாக இருப்பதால், தங்கள் அசுரப் புரோஹிதரான சுக்ராசாரியரின் செல்வத்தை, அதாவது கட்டுமானப் பொறியியல் ஞானத்தைக் கொள்ளையிட விரும்பினான். பிரம்மனும் தேவர்களுக்கு நன்மைசெய்ய இந்தக் குறுக்குவழியில் அதை வழங்கினான்” என்றிருக்கிறது.
வானரோத்தமா {வானரர்களில் உயர்ந்தவனே}, மேருசாவர்ணியின் மகளும், ஸ்வயம்பிரபையுமான {ஸ்வயம்பிரபை என்ற பெயரைக் கொண்டவளுமான} நான், ஹேமையின் இந்த பவனத்தை ரக்ஷித்து வருகிறேன்.(16ஆ,17அ) என் பிரியசகியும் {விருப்பத்திற்குரிய தோழியும்}, நிருத்தகீதவிசாரதையுமான {ஆடல், பாடல்களில் வல்லவளுமான} ஹேமை, இந்த மஹாபவனத்தை ரக்ஷிக்கும் வரத்தை எனக்கு தத்தம் செய்தாள்.(17ஆ,18அ) என்ன காரியத்திற்காக, அல்லது எதற்கு ஹேதுவாக {என்ன காரணத்திற்காக} காந்தாரங்களில் திரிகிறீர்கள்? மேலும், கடப்பதற்கரிய இந்த வனத்தை நீங்கள் அனைவரும் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?(18ஆ,19அ) உண்ணத்தகுந்த, தூய்மையான கிழங்குகளையும், பழங்களையும் உண்டு, பானங்களையும் பருகிவிட்டு, சர்வத்தையும் என்னிடம் சொல்வதே உனக்குத் தகும்” {என்றாள் ஸ்வயம்பிரபை}.(19ஆ,இ)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 51ல் உள்ள சுலோகங்கள்: 19
Previous | | Sanskrit | | English | | Next |