Monday 30 September 2024

வாயிற்காவல் | யுத்த காண்டம் சர்க்கம் - 036 (22)

Gates guard | Yuddha-Kanda-Sarga-036 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மால்யவானின் அறிவுரையைப் புறக்கணித்து, அவனை நிந்தித்த ராவணன், பிரஹஸ்தனையும், பிறரையும் வாயில்களைக் காக்கப் பணித்தது...

Ravana condemning his grandfather Malyavan


துஷ்டாத்மாவும், காலனின் வசத்தை அடைந்தவனுமான தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன், தன் தாய்வழி தாத்தனான} மால்யவதன் சொன்ன அந்த வாக்கியத்தைப் பொறுத்துக் கொண்டானில்லை.(1) குரோதவசமடைந்த அவன், பொறுமையின்றித் தன் புருவங்களை நெரித்து, கண்களை உருட்டியபடியே மால்யவானிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பகைவரின் தரப்பைச் சேர்ந்து, ஹிதபுத்தியுடன் சொல்வது போல, நீர் என்னிடம் சொன்ன ஹிதமற்ற கடுஞ்சொற்கள் அனைத்தும் என் செவிகளில் ஏறவில்லை.(3) கிருபைக்குரிய மானுஷனும், ஏகனும் {தனியொருவனும்}, சாகைமிருகங்களின் {கிளைகளில் வசிக்கும் விலங்குகளான குரங்குகளின்} உதவியைப் பெற்றவனும், பிதாவால் கைவிடப்பட்டவனும், வனத்தையே ஆலயமாக {வசிப்பிடமாகக்} கொண்டவனுமான ராமனை எவ்வாறு சமர்த்தனாக நினைக்கிறீர்?(4) தேவர்களுக்குப் பயங்கரனும், சர்வ விக்ரமங்களிலும் குறைவற்றவனும், ராக்ஷசர்களின் ஈஷ்வரனுமான என்னை எவ்வாறு ஹீனனாக {குறைந்தவனாக} நினைக்கிறீர்?(5)

வீர துவேஷத்தினாலோ {என் வீரத்தில் கொண்ட வெறுப்பினாலோ}, பகைவரிடம் கொண்ட பக்ஷபாதத்தினாலோ {பகைவரிடம் கொண்ட சார்புத் தன்மையினாலோ, அவர்கள் கொடுக்கும்} உற்சாகத்தினாலோ என்னிடம் கடுஞ்சொற்களைப் பேசுகிறீரென நான் சந்தேகிக்கிறேன்.(6) சாஸ்திர தத்வஜ்ஞனான {சாத்திரங்களில் உள்ளதை உள்ளபடியே அறிந்தவனான} எந்தப் பண்டிதன்தான், {பகைவர் தரும்} உற்சாகமில்லாமல் {பகைவரின் தூண்டுதலில்லாமல்}, பிரபவந்தனும் {ஆற்றல் மிக்கவனும்}, பதவியில் இருப்பவனுமான ஒருவனிடம் {இவ்வாறு} கடுமையாகப் பேசுவான்?(7) பத்மம் இல்லாத ஸ்ரீயை {தாமரை இல்லாத லக்ஷ்மியைப்} போன்ற சீதையை வனத்தில் இருந்து கொண்டு வந்த நான், ராகவனிடம் பயங்கொண்டு அவளைத் திருப்பிக் கொடுப்பதில் அர்த்தமென்ன உண்டாகும்?(8)

Ravana rebukes Malyavan

கோடி வானரர்களால் சூழப்பட்டவனும், சுக்ரீவன், லக்ஷ்மணன் ஆகியோருடன் கூடியவனுமான ராகவன், குறுகிய காலத்தில் என்னால் கொல்லப்படுவதை நீர் காண்பீர்.(9) எவனுடன் துவந்த யுத்தத்தில் தைவதங்களும் நிலைக்க மாட்டார்களோ, அந்த ராவணன் யுத்தத்தில் எவனது தாக்குதலுக்காக பயங்கொள்ளப் போகிறான்?(10) இரண்டாகப் பிளக்கப்பட்டாலும் எவனுக்கும் நான் தலைவணங்க மாட்டேன். அத்தகையவனான நான், என்னுடைய சகஜமான தோஷ சுபாவத்தை {இயல்பான பிறவிக் குறைபாட்டை} மீறுவது கடினம்.(11) இராமன் யதேச்சையாக சமுத்திரத்தில் சேது பந்தனம் செய்திருக்கிறான். இதிலென்ன ஆச்சரியம்? இதற்காக நான் பயப்பட வேண்டுமா?(12) வானர சேனையுடன் ஆர்ணவத்தை {கடலைக்} கடந்திருக்கும் அந்த ராகவன், ஜீவனுடன் திரும்பிச் செல்லமாட்டான். இது சத்தியம் என நான் பிரதிஜ்ஞை செய்கிறேன்" {என்றான் ராவணன்}.(13)

இவ்வாறு நாணும்படி பேசிய ராவணனின் கோபத்தை அறிந்த மால்யவான், வெட்கமடைந்து எந்த வாக்கியத்தையும் மறுமொழியாகப் பேசாதிருந்தான்.(14) மால்யவான், ராஜாவிடம், "ஜயமடைவாயாக" என்று வாழ்த்தி விடைபெற்றுக் கொண்டு, தன் நிவேசனத்திற்கு {மாளிகைக்குச்} சென்றான்.(15)

இராக்ஷசன் ராவணன், தன் ஆலோசகர்களுடனும், மந்திரிகளுடனும் ஆலோசனை செய்துவிட்டு, லங்கையின் ஒப்பற்ற பாதுகாப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான்.(16) அவன் பூர்வ துவாரத்தில் {கிழக்கு வாயிலில்} ராக்ஷசன் பிரஹஸ்தனையும், தக்ஷிணத்தில் {தெற்கு வாயிலில்} மஹாவீரியர்களான மகாபார்ஷ்வன், மகோதரனென்ற இருவரையும் நியமித்தான்.{17} அஃது எப்படியோ, அப்படியே பஷ்சிம துவாரத்தில் {மேற்கு வாயிலில்}, மஹாமாயனும், ராக்ஷசர்கள் பலரால் சூழப்பட்டவனுமான தன் புத்திரன் இந்திரஜித்தை நியமித்தான்.(17,18) உத்தர துவாரத்தில் {வடக்கு வாயிலில்} சுகசாரணர்கள் இருவரையும் நியமித்துவிட்டு, தானும் அங்கேயே {வடக்கு வாயிலில்} இருக்கப் போவதாகத் தன் மந்திரிகளிடம் சொன்னான்.(19) மஹாவீரியனும், பராக்கிரமனுமான ராக்ஷசன் விரூபாக்ஷனை, ஏராளமான ராக்ஷசர்களால் சூழப்பட்டவனாக கோட்டையின் மத்தியில் நிறுத்தினான்.(20)

இராக்ஷசபுங்கவன், லங்கையில் இவ்வாறான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, காலனுக்கு ஆட்பட்டவனாகி, தான் செய்ய வேண்டியனவற்றைச் செய்துவிட்டதாக நினைத்துக் கொண்டான்.(21) அவன், தன் புரத்திற்கு {நகரத்திற்குப்} போதுமான ஏற்பாடுகளை ஆணையிட்ட பிறகு, "ஜயமடைவீராக" என்று வாழ்த்தி பூஜித்த மந்திரிகளிடம் விடைபெற்றுக் கொண்டு, மஹத்தான செழிப்புமிக்க தன் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்.(22)

யுத்த காண்டம் சர்க்கம் – 036ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை