Prahasta's enquiry | Sundara-Kanda-Sarga-50 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமானை விசாரித்த பிரஹஸ்தன்; இராமனின் தூதனாகத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஹனுமான்...
மஹாபாஹுவும், உலகத்தை ராவணஞ் செய்ய {கதறி அழ} வைப்பவனுமான அந்த ராவணன், தன் எதிரில் நிற்கும் அந்த பிங்காக்ஷனை {மஞ்சள் நிறக் கண்களைக் கொண்ட ஹனுமானைப்} பார்த்து, மஹத்தான கோபத்தை அடைந்தான். தேஜஸ்ஸால் நிறைந்த கபீந்திரனைக் குறித்த சந்தேகத்தால் மனம் பீடிக்கப்பட்டவனாக {பின்வருமாறு} ஆலோசித்தான்:(1,2அ) "சாக்ஷாத் நந்தி பகவானே இங்கே வந்திருக்கிறானா என்ன? பூர்வத்தில் கைலாசத்தை நான் அசைத்தபோது, எவன் என்னை சபித்தானோ அவனா {அதே நந்தியா} இவன்? அல்லது மஹாசுரன் பாணன் {பாணாசுரன்} வானர மூர்த்தியாக வந்திருக்கிறானா என்ன?" {என்று நினைத்தான் ராவணன்}.(2ஆ,3)
கோபத்தால் கண்கள் சிவந்த அந்த ராஜா, மந்திரிசத்தமனான {மந்திரிகளில் சிறந்தவனான} பிரஹஸனிடம் காலத்திற்குப் பொருத்தமானவையும், சுருக்கமானவையும், அர்த்தம் பொதிந்தவையுமான {பின்வரும்} இந்தச் சொற்களைச் சொன்னான்:(4) "எங்கிருந்து இங்கே வந்தான்? என்ன காரணத்திற்காக வனபங்கம் செய்தான்? என்ன அர்த்தத்திற்காக ராக்ஷசிகளை அச்சுறுத்தினான்? என்பதை இந்த துராத்மாவிடம் கேட்பாயாக.(5) என்ன பிரயோஜனத்திற்காக வெல்லப்படமுடியாத என் புரீக்கு {நகரத்திற்கு} வந்தான்? என்ன காரியத்திற்காகப் போரிடுகிறான்? என்பதை இந்த துர்மதியனிடம் கேட்பாயாக" {என்றான் ராவணன்}[1].(6)
[1] கம்பராமாயணத்தில் இந்தக் கேள்வியை நேரடியாக ராவணனே ஹனுமானிடம் கேட்கிறான். அது பின்வருமாறு:யாரை நீ என்னை இங்கு எய்து காரணம்ஆர் உனைவிடுத்தவர் அறிய ஆணையால்சோர்விலை சொல்லுதி என்னச் சொல்லினான்வேரொடும் அமரர்தம் புகழ் விழுங்கினான்- கம்பராமாயணம் 5877ம் பாடல், சுந்தரகாண்டம், பிணிவீட்டு படலம்பொருள்: "யார் நீ? இங்கு வந்த காரணம் என்ன? உன்னை அனுப்பியவர் யார்? {என்பனவற்றை நான்} அறிய {என்} ஆணையால் தவறில்லாமல் உள்ளபடியே சொல்வாயாக" என்று சொன்னான் அமரர்களின் புகழை வேரோடு விழுங்கியவன் {ராவணன்}.
இராவணனின் சொற்களைக் கேட்ட பிரஹஸ்தன், {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான், "கபியே {குரங்கே}, ஆசுவாசமடைவாயாக. உனக்கு பத்ரம் {மங்கலம்}. நீ பீதியடைவதற்குக் காரியமேதுமில்லை.(7) வானரா, இந்திரன் உன்னை ராவணாலயத்திற்கு அனுப்பியிருந்தால், உண்மையைச் சொல்வாயாக. பயம் வேண்டாம். நீ விடுவிக்கப்படுவாய்.(8) நீ வைஷ்ரவணனுக்காகவோ {குபேரனுக்காகவோ}, யமனுக்காகவோ, வருணனுக்காகவோ இந்த சார ரூபத்தை {ஒற்றன் வடிவை} ஏற்று எங்களுடைய இந்தப் புரீக்குள் நுழைந்திருக்கிறாயா? அல்லது வெற்றியை வேண்டி விரும்பும் விஷ்ணுவால் அனுப்பப்பட்ட தூதனா?(9,10அ) வானரா, உன்னுடைய ரூபம் மாத்திரமே வானரம் போலிருக்கிறது. தேஜஸ் வானரத்தினுடையதல்ல. இப்போதே உண்மையைச் சொல்வாயாக. பிறகு, விடுவிக்கப்படுவாய்.(10ஆ,11அ) நீ பொய் சொன்னால் ஜீவிதம் துர்லபமாகும் {உன் வாழ்வு அரிதாகும்}. அல்லது, {யாரும் அனுப்பாமல் நீ வந்திருக்கிறாய் என்றால்}, எதன் நிமித்தம் நீ ராவணாலயத்தில் பிரவேசித்தாய்?" {என்று கேட்டான் பிரஹஸ்தன்}.(11ஆ,12அ)
இவ்வாறு சொல்லப்பட்டபோது, ஹரிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்தவனான ஹனுமான்}, ரக்ஷோகணேஷ்வரனிடம் {ராக்ஷசக் கூட்டத்தின் தலைவனான ராவணனிடம்,{12ஆ} பின்வருமாறு} கூறினான், "நான் சக்ரனுடையவனோ {இந்திரனுடையவனோ}, யமனுடையவனோ, வருணனுடையவனோ அல்ல. எனக்கு தனதனிடம் {குபேரனிடம்} நட்பு இல்லை. அல்லது விஷ்ணுவால் அனுப்பப்பட்டவனுமல்ல.{13} இதுவே என்னுடைய ஜாதி {பிறவி}. இங்கே வந்திருக்கும் நான் வானரனே.(12ஆ-14அ) இராக்ஷசேந்திரனின் தரிசனம் துர்லபமானது {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனைப் பார்ப்பது அரிது}. இராக்ஷசராஜனின் தரிசன அர்த்தத்தை நோக்கமாகக் கொண்டே வனத்தை நான் நாசம் செய்தேன்.(14ஆ,15அ) பிறகு, யுத்தம் செய்யும் விருப்பத்துடன் கூடிய அந்த பலமிக்க ராக்ஷசர்கள் வந்தனர். தேஹத்தை ரக்ஷித்துக் கொள்ளும் அர்த்தத்திற்காகவே ரணத்தில் நான் பிரதியுத்தம் செய்தேன் {போரில் நான் எதிர் தாக்குதல் தொடுத்தேன்}.(15ஆ,16அ) தேவர்களாலும், அசுரர்களாலும் கூட அஸ்திரபாசங்களைக் கொண்டு என்னைக் கட்ட இயலாது. இந்த வரத்தையும் பிதாமஹனிடம் {பிரம்மனிடம்} இருந்தே நான் பெற்றேன்.(16ஆ,17அ) இராஜனைக் காணும் விருப்பத்தால் நான் அஸ்திரத்தை ஏற்றுக் கொண்டேன். இராக்ஷசர்களால் பீடிக்கப்படும்போதே, நான் அஸ்திரத்தில் இருந்து விடுபட்டேன். ஏதோ ராஜகாரியத்தினால் நான் உன்னருகில் வந்திருக்கிறேன்.(17ஆ,18) அளவற்ற ஆற்றல் வாய்ந்த ராகவரின் தூதன் என்று என்னை அறிவாயாக. {இதுவரை பிரஹஸ்தனிடம் பேசிக்கொண்டிருந்தவன், இப்போது ராவணனிடம் பின்வருமாறு பேசினான்} பிரபோ, என்னுடைய இந்த பத்தியமான வசனம் கேட்கப்படட்டும் {நான் சொல்லும் நன்மை பயக்கும் சொற்களை நீ கேட்பாயாக}", {என்றான் ஹனுமான்}.(19)
சுந்தர காண்டம் சர்க்கம் – 50ல் உள்ள சுலோகங்கள்: 19
Previous | | Sanskrit | | English | | Next |