Entering the Hall | Yuddha-Kanda-Sarga-011 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விபீஷ்ணன், பிரஹஸ்தன் முதலியோர் பின்தொடர அரச சபைக்குள் நுழைந்த ராவணன்...
மைதிலியின் மீது காம மோஹிதம் அடைந்தவனும், பாபியுமான அந்த ராஜா {ராவணன்}, தன் பாபக் கர்மங்களாலும், நல்லிதயம் கொண்டோரால் இகழப்பட்டதாலும் {நாணிக்} குறுகினான்.(1) அதீத சமயம் ஆகிவிட்டதாலும், யுத்த காலம் வாய்த்திருக்கிறது என்பதாலும், அஃது அமைச்சர்களுடனும், நலம் விரும்பிகளுடனும் ஆலோசிப்பதற்கான காலமென ராவணன் நினைத்தான்[1].(2)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு "அதீதஸமயே காலே தஸ்மிந்வே யுதி⁴ ராவண꞉ | அமாத்யைஷ்²ச ஸுஹ்ருத்³பி⁴ஷ்²ச ப்ராப்தகாலமமந்யத" என்பது மூலம். (காலே அதீதஸமயே) ராவணனுடைய ஆயுஷ்காலம் விஞ்சிப்போகையில் (யுதி⁴) யுத்தத்தில், (அமாத்யைஷ்²ச ஸுஹ்ருத்³பி⁴ஷ்²ச ஆத்மாநம்) மந்திரிகளோடுங் கூடின தன்னை, (ப்ராப்தகாலம்) மரணகாலம் ஸமீக்கப்பெற்றவனாக (அமந்யத) நினைத்தனன். ராவணன் ஆயுள்முடிகையால் தனக்கும் தன் மந்த்ரிகளுக்கும் மிருத்யு ஸமீபத்ததென்று நினைத்ததாக வால்மீகியின் கருத்து. இங்ஙனம் கோவிந்தராஜர். "மந்த்ரகாலமமந்யத" {ஆலோசனைக்கான காலம் என நினைத்தான்} என்று மஹேஷ்வரதீர்த்தர் பாடம்" என்றிருக்கிறது.
அவன் {ராவணன்}, ஹேமஜாலங்களை {பொற்சாளரங்களைக்} கொண்டதும், மணிகளாலும், பவளங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், பயிற்றுவிக்கப்பட்ட அஷ்வங்களுடன் {குதிரைகளுடன்} கூடியதுமான மஹாரதத்தை அடைந்து, ஆரோஹணம் செய்தான் {அதில் ஏறினான்}.(3) இராக்ஷசசிரேஷ்டனான தசக்ரீவன் {ராட்சசர்களில் சிறந்தவனும், பத்துக் கழுத்துகளைக் கொண்டவனுமான ராவணன்}, மஹாமேகத்தின் ஸ்வனத்துடன் கூடிய அந்தச் சிறந்த ரதத்தில் ஏறி, சபையை நோக்கிச் சென்றான்.(4) கத்தி, கேடயங்களைத் தரித்தவர்களும், சர்வாயுதங்களையும் தரித்தவர்களும், போர்வீரர்களுமான ராக்ஷசசர்கள், ராக்ஷசேந்திரனுக்கு {ராட்சசர்களின் தலைவனான ராவணனுக்கு} முன்னே சென்றனர்.(5) மெருகற்ற நானாவித ஆடைகளை அணிந்து கொண்டு, நானாவித ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, பக்கங்களிலும், பின்புறத்திலும் அவனை {ராவணனைச்} சூழ்ந்தபடியே அவர்கள் சென்றனர்.(6) அதிரதர்கள், ரதங்களின் மீதும், மதங்கொண்ட சிறந்த வாரணங்களின் {யானைகளின்} மீதும், விளையாட்டாக நடைபழகும் வாஜிகள் {குதிரைகள்} மீதும் சீக்கிரமாக தசக்ரீவனை {ராவணனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(7) {அவர்களில் சிலர்}, கதைகள் {கதாயுதங்கள்}, பரிகங்களைக் கையில் கொண்டிருந்தனர். சக்திகள் {வேல்கள்}, தோமரங்களை {ஈட்டிகளைப்} பிடித்துக் கொண்டிருந்தனர். சிலர் பரசுகளை {கோடரிகளைத்} தரித்திருந்தனர். இன்னும் சிலர் சூலங்களைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.(8)
இராவணன், சபைக்குள் சென்றபோது, ஆயிரக்கணக்கான தூரியங்களின் மஹாஸ்வனத்துடன் கூடிய பெரும் முழக்கமும், சங்குகளின் முழக்கமும் உண்டானது.(9) அந்த மஹான் {ராவணன்}, மஹாரதத்தின் நேமிகோஷம் {சக்கர சடசடப்பொலி} எங்கும் எதிரொலிக்க, பிரகாசிப்பதும், காண்பதற்கு இனியதுமான ராஜமார்க்கத்தை வேகமாக அடைந்தான்.(10) இராக்ஷசேந்திரனுக்கு {ராட்சசர்களின் தலைவனான ராவணனுக்குப்} பிடிக்கப்பட்டதும், விமலமானதுமான {மாசற்றதுமான} வெண்குடை, பூர்ணக் கதிர்களை வெளியிடும் தாராதிபனை {நட்சத்திரங்களின் தலைவனான சந்திரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(11) அவனுக்கு இடப்புறத்திலும், வலப்புறத்திலும், இடையிடையே ஹேமமஞ்சரிகளால் {பொற்கொடிகளால்} கட்டப்பெற்றவையும், சுத்தமான ஸ்படிகத்தாலானவையுமான கைப்பிடிகளுடன் கூடிய சாமரங்கள் இரண்டு ஒளிர்ந்து கொண்டிருந்தன[2].(12)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு, "ஹேமஞ்ஜரிக³ர்பே⁴ ச ஷு²த்³த⁴ஸ்ப²டிகவிக்³ரஹே | சாமரவ்யஜநே" என்பது மூலம். (ஹேமஞ்ஜரிக³ர்பே⁴) - "பொன்மயமான பல்லவங்கள் அமைந்த கொடிகள் இடையில் இயற்றப்பெற்றவைகள்" என்று பொருள் என்பதாக மஹேஷ்வரதீர்த்தர்" என்றிருக்கிறது.
பிருத்வியில் நின்றிருந்த அந்த ராக்ஷசர்கள் அனைவரும், ரதத்தில் அமர்ந்திருந்த அந்த ராக்ஷசசிரேஷ்டனுக்கு {சிறந்த ராட்சசனான ராவணனுக்குத்} தங்கள் கைகளைக் கூப்பி, தலையால் {தலைவணங்கி} வந்தனம் செய்தனர்.(13) அரிந்தமனும் {பகைவரை அழிப்பவனும்}, மஹாதேஜஸ்வியுமான அவன் {ராவணன்}, அப்போது, "ஜயமும், ஸ்ரீயும் {வெற்றியும் செழிப்பும்} உமதாகுக" என்று ராக்ஷசர்களால் போற்றப்பட்டவனாக, நன்கு அமைக்கப்பட்டிருந்த அந்த சபையை அடைந்தான்.(14) ஸ்வர்ணத்தாலும், வெள்ளியாலுமான தூண்களைக் கொண்டதும், சுத்தமான ஸ்படிகத்தால் {பளிங்கால்} இழைக்கப்பெற்றதும், ருக்மம் {தங்கம்}, பட்டு ஆகியவற்றால் ஒளிரும் உள்ளமைப்பைக் கொண்டதும்,{15} எக்காலத்திலும் அறுநூறு பிசாசர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டதும், அழகானதும், எப்போதும் ஒளிர்வதும், விஷ்வகர்மனால் நன்கு அமைக்கப்பட்டதுமான அதற்குள் {அந்த சபைக்குள்} அந்த மஹாதேஜஸ்வி {ராவணன்} நுழைந்தான்.(15,16) அந்த ராவணன், வைடூரியமயமானதும், விருப்பத்திற்குரிய மான்தோல் விரிக்கப்பட்டதும், தலையணையுடன் கூடியதுமான மஹத்தான பரம ஆசனத்தை அடைந்தான்.(17)
பிறகு, லகு பராக்கிரமர்களான {வேகமாகச் செல்லக்கூடிய} தூதர்களிடம், ஈஷ்வரனைப் போல {பின்வருமாறு} ஆணையிட்டான், "சீக்கிரமே ராக்ஷசர்களை இங்கே அழைத்து வருவீராக.{18} நாம் சத்ருக்களுக்கு எதிராக மஹத்தான பணியைச் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்" {என்றான் ராவணன்}.(18,19அ)
அவன் சொன்னதைக் கேட்ட ராக்ஷசர்கள், லங்கை எங்கும் சுற்றித் திரிந்து,{19ஆ} விஹாரங்கள் {விளையாடுமிடங்கள்}, சயனேசங்கள் {படுக்கையறைகள்}, உத்யானங்கள் {உத்யானவனங்கள்} ஆகியவற்றில் இருந்த ராக்ஷசர்களைத் தயங்காமல் அழைத்து ஏவிக் கொண்டிருந்தனர்.(19ஆ,20) அவர்களில் சிலர் அழகான ரதங்களிலும், சிலர் செருக்குமிக்க திடமான ஹயங்களிலும் {குதிரைகளிலும்}, சிலர் நாகங்களில் {யானைகளிலும்} ஏறியும், சிலர் பாதநடையாகவும் சென்றனர்.(21) இரதகுஞ்சரவாஜிகளை {தேர்கள், யானைகள், குதிரைகளைக்} கூட்டங்கூட்டமாகக் கொண்ட செழிப்பான அந்தப் புரீ {லங்காநகரம்}, பறவைகள் நிறைந்த அம்பரத்தை {வானத்தைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(22) அவர்கள், {யானைகள், குதிரைகள், ரதங்கள் உள்ளிட்ட} விதவிதமானத் தங்கள் வாஹனங்களையும், யானங்களையும் {சிவிகைகளையும்} வெளியே நிறுத்திவிட்டு, கிரியின் குகைக்குள் சிங்கங்களைப் போலப் பாதநடையாக சபைக்குள் பிரவேசித்தனர்.(23) அவர்கள் ராஜனின் பாதங்களைப் பற்றினர். இராஜனாலும் பூஜிக்கப்பட்டனர். சிலர் பீடங்களிலும், சிலர் பாய்களிலும் {தர்ப்பாஸனங்களிலும்}, சிலர் பூமியிலும் அமர்ந்தனர்.(24)
அந்த ராக்ஷசர்கள், ராஜசாசனத்தின் {ராவணனின் கட்டளையின்} பேரில், சபையின் தகுந்த இடங்களில், ராக்ஷசாதிபனான ராவணனுக்கு நெருக்கமான இடங்களில் அமர்ந்தனர்.(25) அர்த்தங்களை நிச்சயிக்கும் பண்டிதர்களும், பேதமில்லா குணங்களைக் கொண்டவர்களும், சர்வஜ்ஞர்களும் {அனைத்தையும் அறிந்தவர்களும்}, புத்தி தர்சனர்களுமான {நல்ல புத்தியுடையவர்களுமான} மந்திரிகளில் {அமைச்சர்களில்} முக்கியமானவர்களும்,{26} அதேபோல, பல நூற்றுக்கணக்கான சூரர்களும், அங்கே ஹேமவர்ணங்கொண்ட சபையில், சர்வ அர்த்தங்களையும் சுகமாகத் தீர்மானிப்பதற்காகத் திரண்டிருந்தனர்.(26,27)
அப்போது, மஹாத்மாவும், புகழ்மிக்கவனுமான விபீஷணன், விபுலமானதும் {அகலமானதும்}, நன்குபூட்டப்பட்டதும் {நல்ல குதிரைகள் பூட்டப்பட்டதும்}, ஹேமமயமானதும், சித்திர அங்கங்களுடன் கூடியதும், சுபமானதும், சிறந்ததுமான ரதத்தைச் செலுத்திக் கொண்டு, ஆக்ரஜனின் சம்சதத்திற்கு {அண்ணனின் சபைக்குச்} சென்றான்.(28) பிறகு அந்த அவரஜன் {தம்பி விபீஷணன்}, பூர்வஜனின் நாமத்தை {அண்ணனின் பெயரை} மீண்டும் மீண்டும் சொல்லி, அவனது சரணங்களுக்கு வந்தனம் செய்தான் {ராவணனின் காலில் விழுந்து வணங்கினான்}. சுகன், பிரஹஸ்தன் ஆகியோர் இருவரும் அப்படியே செய்தனர். அவரவருக்குத் தக்க வெவ்வேறு ஆசனங்கள் கொடுக்கப்பட்டன.(29) நானாவித சுவர்ண, மணிகளால் {தங்கங்களாலும், ரத்னங்களாலும் பலவிதங்களில்} அலங்கரிக்கப்பட்டவர்களும், நல்ல வஸ்திரங்களுடன் கூடியவர்களுமான ராக்ஷசர்களின் சம்சதத்தில் {சபையில்}, அகுரு {அகில்}, சந்தனம் முதலியவற்றுடன் கூடிய மாலைகளின் கந்தம் எங்கும் கமழ்ந்தன.(30) சபையில் வந்திருந்தவர்கள் சத்தமிடவில்லை; கொஞ்சமேனும் பொய்யாகப் பேசவில்லை. எவனும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அனைவரும் மனோரதங்கள் கைக்கூடப்பெற்றவர்களாக, மஹத்தான வீரியம் படைத்தவர்களாகத் தலைவனின் முகத்தைப் பார்த்தவண்ணம் இருந்தனர்.(31) மனஸ்வினியான {பிடிவாதம் கொண்ட} அந்த ராவணன், மனஸ்வினீகளும் {பிடிவாதம் கொண்டவர்களும்}, மஹா பலவான்களும் இருந்த அந்த சபையில், வசுக்களின் மத்தியில் வஜ்ரஹஸ்தனை {கையில் வஜ்ரத்துடன் கூடிய இந்திரனைப்} போன்ற பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(32)
யுத்த காண்டம் சர்க்கம் – 011ல் உள்ள சுலோகங்கள்: 32
Previous | | Sanskrit | | English | | Next |